உளவியல் என்பது உள்ளத்தைப் பற்றி விஞ்ஞான ரீதியான அறிதலாகும். உளவியல் பற்றிய சிந்தனைகள், கோட்பாடுகள் காலத்திற்குக் காலம் தோற்றம் பெற்று வளர்ச்சியடைந்து வந்துள்ளன. அவற்றினை வளர்த்தெடுப்பதில் உளவியல் அறிஞர்களுக்கு முக்கிய பங்குண்டு. அவ்வறிஞர்கள் காலத்தின் போக்கை பிரதிபலித்ததுடன் காலத்தினை உருவாக்குகின்ற பணியினையும் மேற்கொண்டுள்ளனர். அத்தகைய சிந்தனையாளர்கள் வரிசையில் ரசிய நாட்டு உயிரியல் விஞ்ஞானி ஐ.பி பவ்லோவ் (I.B.Pavlov) அவர்களுக்குத் தனியிடம் உண்டு. இவரது மேதா விலாசத்தின் அடிப்படைகளையும், பலவிதமான வரம்புகளைக் கடந்து சென்ற அவரது அணுகுமுறைகளையும் தர நிர்ணயம் செய்வதற்குப் பொருள் - மனம் - உணர்வு என்பவற்றின் தோற்றம் குறித்தும் அவற்றுக்கிடையிலான உறவு குறித்த தெளிவும் அவசியமானதொன்றாகும்.

ஆத்மா - சிந்தனை - உணர்வு என்பன குறித்து பலரால் பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. மனதை விட பொருளின் முதன்மையை ஏற்றுக் கொள்பவனே பொருள்முதல்வாதி. சிந்தனை என்பது பொருளை அடிப்படையாக கொண்டு உருவானதாகும். உதாரணத்திற்கு மாம்பழம் குறித்த சிந்தனை எண்ணம் தோன்றுகின்றது. இங்கு பொருளே சிந்தனைக்கு அடிப்படையாக உள்ளது. எனவே சிந்தனை இன்றி பொருள் இருக்க முடியும் பொருளின்றி சிந்தனை இருக்க முடியாது. இதனடிப்படையில் பொருளை புற நிலையாகக் கொண்டு தோற்றம் பெற்ற சிந்தனையானது பொருள் முதல்வாத சிந்தனை என அழைக்கப்படுகின்றது. இவ்விடயம் குறித்து லெனின் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

“புறநிலை யதார்த்தத்தைக் குறிப்பிடுகின்ற தத்துவார்த்த வகையே பொருளாகும். மனிதனுக்கு உணர்வுகளால் தரப்படுகின்றது. பொருளை நம் உணர்வுகளால் நகல் எடுக்கலாம், புகைப்படம் எடுக்கலாம், பிரதிபலிக்கலாம். எனினும் இவற்றிற்கு அப்பால் பொருள் சுயேச்சையாக இருக்கிறது.”1

பொருள் என்பது இடையறாது மாறிக் கொண்டே இருக்கும். மாற்றங்கள் யாவும் இயக்கத்தையும் இயங்கள் அனைத்தும் மாற்றத்தையும் உள்ளடக்கி நிற்கும். அவ்வகையில் இயக்கம் என்பது ஒரு வகையில் முரண்பாடாகும். பொருள்களிலே காணப்படும் இயல்பான முரண்பாடுகளின் வெளிப்பாடாக இயக்கமும் மாற்றமும் நிற்கின்றது என்பது யதார்த்த நியதி. பொருள்களில் இயல்பாகவே காணப்படும் எதிர் மறைக்கு இடையிலான முரண்பாடு பற்றி தேடலானது இயக்கவியல் என அழைக்கப்படும்.

இங்கு இயக்கம் என்பது ஒருவகையில் முரண்பாடாகும். பொருள்களிலே காணப்படும் இயல்பான முரண்பாடுகளின் வெளிப்பாடாகவே இயக்கமும் மாற்றமும் திகழ்கின்றது. புறநிலையுலகின் அனைத்து இயங்கியல் போக்குகளும், உடனேயோ அல்லது சற்று தாமதமாகவோ மனித அறிவில் எதிரொளியாகக் காணப்படும். சமுதாய நடைமுறையில் ஒரு நிகழ்வு தோன்றி, வளர்ந்து, மறைதல் என்பது இடையறாது தொடர்ந்து நடந்து கொண்டேயிருப்பதைப் போலவே, மனித அறிவின் வளர்ச்சியிலும் நிகழ்வுகள் தோன்றி வளர்ந்து மறைந்து கொண்டே இருப்பதைக் காண்கின்றோம். மனிதன் தன் நடைமுறைகளினால் சில குறிப்பிட்ட கருத்துக்கள், கோட்பாடுகள், திட்டங்கள் ஆகியவற்றிற்கு இணங்க புறநிலை யதார்த்தத்தை மாற்றி, அதை மேலும் மேலும் வளர்த்தெடுத்திருக்கின்றான். இவ்வாறு செய்வதன் வாயிலாக புறநிலை யதார்த்தத்தைப் பற்றிய அவனது அறிவு ஆழமாகிக் கொண்டே செல்லும், புறநிலை யதார்த்த உலகை மாற்றுவதற்கான நிகழ்வுகள் தொடர்ந்து இடையிறாது நடந்து கொண்டே இருக்கும், அதைப் போன்றே நடைமுறையின் மூலமாக உண்மையை அறியும் மனிதனின் முயற்சிக்கும் எப்போதும் முடியவில்லை. (மாசேதுங் - தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் 1.306, லெனின் தொகுப்பு நூல்கள் 38.195) 2

விஞ்ஞானி பவ்லோவின் சமூக நோக்கும் பங்களிப்பும் பொருள்களில் இயல்பாகவே காணப்படும் எதிர்மறைகளுக்கு இடையிலான முரண்பாடு பற்றிய தேடலானது இயக்கவியலென அழைக்கப்படும். இந்த நியதியானது பௌதிக பொருள்களில் மட்டுமன்றி மனித சமுதாயத்திற்கும் பொருந்தக்கூடிய ஒன்றாகும். சமூக அசைவியக்கமும் அதனடியாக எழுகின்ற சிந்தனைகளும் கருத்தோட்டங்களும் இத்தகைய இயக்கம் - மாறுதல் என்ற அடிப்படையான விதிகளுக்கு உட்பட்டே இயங்குகின்றன. இந்த மாற்றத்தின் இயக்கவியலைப் புரிந்து கொள்வதன் மூலமே சமூதாய மாற்றத்திற்கு முழுமையான பங்களிப்பினை வழங்க முடியும். மாறாக இதனைப் புரிந்து கொள்ள பின் நிற்கின்ற அல்லது புரிந்து கொள்ளாதவர்களின் கையிலிருந்து வரலாறு நழுவிவிடும் என்பதனை கடந்த கால நிகழ்வுகள் எமக்கு எடுத்து காட்டியுள்ளன.

இதற்கு மாறாக பொருள்களின் இயக்கம், மாறுதல்கள் அவற்றுக்கிடையிலான முரண்பாடுகள் யாவும் புல காட்சியால் பெறப்படும் மாயை. இவர்கள் பொருளை விட சிந்தனைக்கும், உடலை விட ஆன்மாவிற்கும், அறிவை விட நம்பிக்கைக்கும் முதலிடம் கொடுக்கின்றார்கள். இவர்கள் கருத்து முதல்வாதிகள் என அழைக்கப்பட்டனர். இத்தகைய தத்துவம் குறித்து காரல்மார்க்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

“தத்துவவாதிகள் இந்தப் பிரச்சனைக்கு குறித்த விளக்கங்கள் அவர்களை இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கின்றன. அவற்றிலே இயற்கையை விட ஆத்மாவிற்கு முதலிடம் கொடுப்பவர் உளர். இதன் மூலமாக உலகமானது ஒரு வடிவத்தில் அல்லது இன்னொரு வடிவத்தில் படைக்கப்பட்டது என்ற கருத்தை இறுதியாக ஏற்றவர்களும் உள்ளனர். கிறிஸ்தவ சமயத்தில் சொல்வதைக் காட்டிலும் கூட உலக படைப்பானது சிக்கலானது, சாத்தியமில்லாதது என்று சொல்லும் தத்துவவாதிகளும் உள்ளனர். உதாரணமாக ஹெகலைச் சொல்லலாம். இவர்கள் எல்லாம் கருத்து முதல்வாத பிரிவைச் சேர்ந்தவர்களாவார்கள். இயற்கையை முதன்மைபடுத்துபவர்கள் எல்லாம் பல்வேறு கருத்து குழாமைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.”3

அந்த வகையில் பொருள்- சிந்தனை- ஆத்மாவுக்கு இடையிலான உறவு குறித்து கருத்துமுதல்வாதிகள் பொருள்முதல்வாதிகளுடன் முரண்பட்ட கருத்தினைக் கொண்டுள்ள அதே சமயம் இரு எதிர் முகாம்களாக பிரிந்து இதுவரை தத்துவப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இச்சூழலில் பவ்லோவ் அவர்களின் ஆராய்ச்சியானது வயிற்று சுரப்பிகளைப் பற்றியும் உமிழ் நீருக்கும் மூளையின் இயக்கத்திற்கும் உள்ள தொடர்பு பற்றியதாகவுமே அமைந்திருந்தது.

மிருகங்களுக்கு (நாய்) உணவு வழங்குவதை அவர் பரிசோதனைக்குட்படுத்தி அதிலிருந்து ஆன்மா பற்றி உடல்களது நியதிகளை விளக்கியுள்ளார். இதற்காக அவர் நாயின் ஆசைகளையும் அதன் எதிர்பார்ப்புகளையும் பற்றி தெரிவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இந்த விஞ்ஞான ஆய்வில் தம் வாழ்நாள் முழுவதும் செலவிட்டார். அவரது ஆய்வு கட்டங்கள் பின்வருமாறு அமைந்திருக்கின்றன.

ஆய்வின் முதல் கட்டம்

ஒரு நாயின் கன்னத்தினூடாக குழாய் ஒன்றினைப் பொருத்தி அதனூடாக உமிழ்நீரின் அளவைக் கணிப்பீடுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்;;டார். நாயின் கவனம் சிதறாத வகையில் அதனை இருட்டறை ஒன்றில் வைத்து தன்னியக்க கருவியினூடாக உணவு (இறைச்சி) வழங்க ஏற்பாடு செய்தார். இந்த செயற்பாடுகளின் போது கிடைக்கும் தகவல்களை மிகவும் கவனமான முறையில் பதிவு செய்து கொண்டார். ஆரம்பத்தில் இறைச்சியைக் கண்டதும் நாயில்
உமிழ் சுரக்கப்பட்டதை அவதானித்தார். இச்செயற்பாட்டை பின்வரும் முறையினூடாக விளக்கலாம்.

இறைச்சித் துண்டு (S) -> உமிழ்நீர் (R)

இங்கு இறைச்சித் துண்டை கண்டதும் பசியுள்ள நாயின் வாயில் உமிழ்நீர் சுரந்தது. இங்கு இறைச்சித் துண்டு தூண்டியாகும் (Stimulus). உமிழ் நீர் சுரத்தல் துலங்களாகும் (Response). இச் செயற்பாடானது நிபந்தனைக் குட்படுத்தபடாத ஒன்றாகும்.

பரிசோதனையின் இரண்டாவது கட்டம்.

இங்கு நாய்க்கு இறைச்சித் துண்டை வழங்கும்போது மணி ஒலிக்கப்பட்டது. இவ்வாறு மீண்டும் மீண்டும் இறைச்சித் துண்டை வழங்கும் போது மணி ஒலிக்கப்பட்டது. பின்னர் இறைச்சித் துண்டை வழங்காமலே மணி ஒலிக்கப்பட்டபோது நாயின் வாயில் உமிழ்நீர் சுரந்தது.

பரிசோதனையின் மூன்றாவது கட்டம்

இங்கு இறைச்சித் துண்டை வழங்காமலே மணி ஒலிக்கப்பட்டபோது நாயின் வாயில் உமிழ் நீர் சுரந்தது. இங்கு இயற்கையான தூண்டிக்குப் (இறைச்சித் துண்டு) பதிலாக வேறொரு தூண்டி (மணி ஒலி) நிபந்தனைப்படுத்தப்பட்டது. இங்கு மணி ஒலியைக் கேட்டவுடன் நாயின் வாயில் உமிழ்நீர் சுரத்தல் இயற்கையான தொன்றல்ல, அது நிபந்தனைப்படுத்தப்பட்ட தூண்டினால் (Conditional Stimulus - CS) ஏற்படும் நிபந்தனைப்படுத்தப்பட்ட துலங்கலாகும் (Conditional Response - CR). மணி ஒலிக்கு உமிழ்நீர் சுரக்கும் துலங்கல்களைப் போல வேறு தூண்டல்களினாலும் பெற்றுக் கொள்ள முடியும் என்பதனை பவ்லோவ் பல்வேறு பரிசோதனைகளின் மூலமாகக் கண்டறிந்தார்.

பரிசோதனையின் நான்காவது கட்டம்

மணி ஒலித்த பின்னர் இறைச்சித் துண்டை காட்டாது விட்டால் காலப்போக்கில் நாயின் வாயில் உமிழ்நீர் சுரக்கின்ற தன்மை இல்லாது போய்விடும். இவ்வாறு துலங்கல் காட்டாதிருத்தல் துலங்கல் அழிதல் அல்லது தடைப்படல் என்றழைக்கப்படும், இவ்வாறு அழிந்த துலங்கல் சில சந்தர்ப்பங்களில் மீண்டும் தானாகவே ஏற்படும் சந்தர்ப்பங்களும் உண்டு. எடுத்துக்காட்டாக மணி ஒலிக்கு மட்டும் நாயின் உமிழ்நீர் சுரத்தல் தடைப்பட்டு பிறிதொரு சந்தர்ப்பத்தில் மணி ஒலிக்கு உமிழ்நீர் சுரக்கும். இதனை பவ்லோவ் சுயமாக தோன்றும் துலங்கல் என்பார். அவ்வாறே சமமான தூண்டிகளைத் தெரிவு செய்து ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்றை நிபந்தனைப்படுத்துவதன் மூலமும் துலங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக மணி ஒலிக்குச் சமமான ஒலியை ஏற்படுத்துவதன் மூலம் நாயின் உமிழ் நீர் சுரந்தது. இவ்வாறு ஒரு தூண்டியிலிருந்து மற்றொரு தூண்டிக்கு துலங்களை மாற்றுதல் தூண்டியின் பரவல் என அழைக்கப்படும்.

உணவுப் பொருட்கள் உண்மையிலே வாய்க்குள் போடுவதற்கு முன்னோ அல்லது போடாமல் இருக்கும் போதோ. உமிழ் நீர் சுரக்கப்படலாம். நாம் ஏற்கனவே அறிந்ததைப் போல, உணவைக் கண்ணால் காண்பதாலோ அதன் வாசனையை முகர்வதாலோ கூட, சில நேரங்களில் உமிழ்நீர் சுரந்து விடுவதையும்பார்க்கிறோம், சில காட்சிகளை அல்லது சில வாசனைகளை நாம் சில உணவுப்பொருட்களோடு இணைத்து எண்ணுவதற்குக் சுற்றுக்கொண்டுள்ளோம்.

‘கற்றுக்கொள்ளுதல்’ என்றால் என்ன பொருள்? பால்லோவ் ஆராய்ச்சிக்குட்படுத்திய ஒரு நாய், குறிப்பிட்ட நேரத்திற்கொருமுறை உணவருந்தியது, உணவு அருந்துவதற்கு முன்னால் மணியடிக்கப்பட்டது. எனவே மணியடித்தவுடனே வரும் உணவை உட்கொள்ளும் பழக்கத்திற்கு நாய் ஆட்படுத்தப்பட்டது. அதன்பின், மணியோசை கேட்ட அளவிலேயே நாயின் உமிழ்நீர் சுரக்க ஆரம்பித்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. சோதனையால் உண்டு பண்ணப்பட்ட நிலைமைகளுக்கு இணங்க, நாயின் உணர்வு, மணி ஓசைக்கேற்ப மாறிக் கொண்டுள்ளது. அடுத்த கட்ட ஆய்வில், மணியடிக்கப்பட்டது ஆனால் நாய்க்கு உணவு ஏதும் தரப்படவில்லை. இச் சோதனையைத் தொடர்ந்து செய்தபோது - மணியடிக்கப்பட்ட பின்னும் உணவு ஏதும் தராதபோது - நாயின் உமிழ் நீர்சுரத்தல், நின்றுபோனது. அது தடுக்கப்பட்டு விட்டது. அதாவது, மாறிய புதிய நிலைமைகளுக்கு ஏற்ப, தூண்டுதலும் மாறிவிட்டது. இதற்கு முந்தைய நிலைமையில் ஏற்பட்ட செயல்கள் தடை செய்யப்பட்டன. மேலும் பால்லோவ், மூளையின் புறப்பகுதி சரியாக வேலை செய்யாதபோது, இத்தகைய இச்சைச் செயல்கள், நடைபெறாது எனவும் கண்டுபிடித்தார்.

ஒரு குறிப்பிட்ட விலங்கின் இச்சைச் செயல்கள், அனிச்சைச் செயல்கள் ஆகிய இரண்டும் அகவயக் குறியீடுகளாக உள்ளன. இந்தக் குறியீடுகளின் மூலமாகவே இவை புறவுலகின் மீது செயல்படுகின்றன. இதைத்தான் பாவ்லோவ் முதல் அடையாளக் குறியீட்டு அமைப்பு (First signaling system) என்கிறார். விலங்குகளைப் பொறுத்த மட்டில் உள்ள இந்த அடையாளக் குறியீட்டு அமைப்புமுறையின் வளர்ச்சி, அந்த விலங்குகளின் பரிணாம வளர்ச்சி அளவிற்கு ஏற்றாற்போன்று கூடியும் குறைத்தும் காணப்படும். மனிதனிடத்தில், இந்த அகவயக் குறியீடுகள் முழுமையும் புதிய செயல்களுக்கான அடிப்படையை உண்டுபண்ணும் அளவிற்கு விரிவடைந்து கூட்டுக் கலப்பாகி விடுகின்றன. இதை இரண்டாம் குறியீட்டு அமைப்பு முறை (second signaling system) என்பர்.4

பவ்லோவின் மாணவர்கள் இது குறித்து பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்கள். அவற்றுள் முக்கியமானதொன்று ஒரு குழந்தையின் விரல் மீது மின்சாரம் பாய்ச்சப்பட்டு செய்யப்பட்ட பரிசோதனையாகும். முதலில் மின்சாரம் பாய்ச்சப்பட்ட போது குழந்தை விரலை இழுத்துக் கொண்டது. பின் மின்சாரம் பாய்ச்சப்பட்ட போது மணி ஒலிக்கப்பட்டது. இச் சந்தர்ப்பத்தில் மணி ஒலிக்கப்பட்டதும் குழந்தை விரலை இழுத்துக் கொள்கின்றது. மணி என்ற சொல்லை உச்சரித்து மின்சாரம் பாய்ச்சப்பட்டு பின் மணி என்ற சொல்லைக் கேட்டதுமே விரலை இழுத்துக் கொண்டது. இறுதியாக அட்டை ஒன்றில் மணி என எழுதி அதனைக் காட்டிய போது மின்சாரம் பாய்ச்சப்பட்டது. பின் மணி என்ற சொல்லைக் கண்டவுடனே கையை இழுத்துக் கொண்டது.

இவ்வகையான பரிசோதனைகளின் மூலமாக தூண்டுதலானது புலன் உறுப்புகளின் மீது செயற்படும் புறவுலக இயல்பான தூண்டுதல்கள் மட்டுமல்ல, புலன் உறுப்புக்களின் மீது செயற்படும் அக உணர்வு கொண்ட செயற்கையான ஓசை தரும் தூண்டுதல்களாகவும் அமைகின்றது.

இவ்வகையான ஆராய்ச்சியினூடாகவும் பரிசோதனைகளின் மூலமாகவும் பவ்லோவ் வயிற்று சுரப்பிகளுக்கும் மூளைக்கும் இடையிலான தொடர்பு குறித்து ஆராய தலைப்பட்டார். அவரது ஆராய்ச்சிகள் வாழ்விலிருந்து அந்நியப்பட்டு தொலைதூர தீவுகளுக்குள் ஒதுங்கிவிடாமல் விஞ்ஞானத்தின் துணை கொண்டு புறவுலக யதார்த்த்தை உயிரியல் துறையில் விளங்கியமையே பவ்லோவின் முக்கிய பங்களிப்புகளில் ஒன்றாகும். பிரதிப்பலிப்புக் கோட்பாடு குறித்து லெனின் பின்வருமாறு குறிப்படுகின்றார்.

தவறான தத்துவத்தால் வழி நடத்தப்படாத அறிவியல் அறிஞர்களையும் பொருள் முதல்வாதிகளையும் பொறுத்தமட்டில் உணர்வு என்பது நம் தன்னறிவிற்கும் புறநிலை உலகிற்கும் இடையிலான நேரடி உறவாகும், உணர்வு என்பது புறநிலை தூண்டுதல் சக்தி மனிதனின் தன்னறிவிற்கு மாறிச் செல்வதாகும். (லெனின் தொகுப்பு நூல்கள் (14 : 51)

இதற்கு பவ்லோவின் ஆய்வு முடிவுகள் தர்க்க ரீதியான ஆதாரங்கள் எடுத்துக் காட்டியுள்ளன. இத்தகைய மகத்தான பங்களிப்பினை மனித குலத்திற்கு வழங்கியமையால் உழைக்கும் மக்களும் அதன் நேச சக்திகளும் அவரை வரவேற்றனர். அவரது ஆராய்ச்சிகள் உழைக்கும் மக்கள் திரளினரின் விடுதலைப் போராட்டத்திற்கான வழிகாட்டல் தத்துவமாக விளங்கின. இது இவ்வாறிருக்க பவ்லோவின் கோட்பாடுகளாலும் தத்துவங்களாலும் பல முகாமைகளிலிருந்து பல விதங்களில் தாக்குதல் தரப்பட்டன. குறிப்பாக பவ்லோவை மார்க்சியத்தின் விரோதியாகக் காட்ட முனைய வறட்டு மார்க்சியர் சிலர் பின்வரும் விடயத்தை தமக்குச் சாதகமாக தூக்கிப் பிடிப்பர்.

பாட்டாளி வர்க்கம் பாராள முடியும் என்பதில் பாவ்லோவுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. சிறப்பான எதிர்காலத்தை, அது மனித குலத்திற்கு அளிக்கமுடியும் என்பதில், அவர் நம்பிக்கை கொள்ளவில்லை. ஆராய்ச்சி சாலைக்குள்ளேயே அவர் இருந்தார். தொழிலாளி வர்க்கத்தின் வீரப்போராட்டத்தையோ, அதன் வெற்றியையோ, அதன் நிர்மாண வேலையையோ அவர் பார்க்கவில்லை, பார்க்கவேண்டும் என்ற விருப்பமும் அவருக்கில்லை. சோவியத் சர்க்காரை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இக் கருத்தை அவர் மூடி மறைக்கவும் இல்லை. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் மீது தனக்குள்ள வெறுப்பைக் காட்டுவதற்கான எல்லாவற்றையும் அவர் செய்தார்.

கடவுள் என்ற கருத்தை எதிர்க்கும் மனோபாவமுள்ள பொருள்முதல்வாதியான அவர், மாதா கோவிலுக்குப் போகத் தொடங்கினார். மாதா கோவிலைக் கண்ட மாத்திரத்தில் தன்மீது சிலுவை அடையாளம் செய்து வணங்கினார். வழிபாடு நடக்கும் மாதா கோவிலாக இருந்தாலும் சரி, அல்லது மாதா கோவிலாக இருந்து, பின்னால் தொழிலாளிகளின் ‘கிளப்’ அல்லது காட்சி சாலையாக மாற்றப்பட்டிருப்பினும் சரி , அவர் அஞ்சலி செய்தார். தனது இலக்கிய சிருஷ்டியை அவர் கடவுளுக்குச் சமர்ப்பித்தார். சோவியத் பல்கலைக்கழகங்களில் சொற்பொழிவாற்ற அவர் மறுத்தார். எவையெல்லாம் தொழிலாளிகள் விவசாயிகள் சர்காருக்கு அவமரியாதை என்று கருதினாரோ, அவற்றைச் செய்வதில் முனைந்தார். எனினும் அவர் விஞ்ஞான ஆராய்ச்சியை நிறுத்தவே இல்லை.5

காலப்போக்கில் அவரது விஞ்ஞான ஆய்வுகளின் ஊடாக ஏற்பட்ட அனுபவத்தின் ஊடாக விஞ்ஞானம் குறித்து மட்டுமல்ல, சமூகம் பொறுத்தும் அவரது பார்வை தெளிவாகியது. இத்தகைய விஞ்ஞான ஆய்வுகள் - ஜெர்மனிய பாசிஸ்ட்டுகளை ஆத்திரம் கொள்ளச் செய்ததுடன் அதற்கு எதிரான மனிதப் படுகொலைகளையும் செய்தனர். இத்தகைய செயல்கள் குறித்து அவர் “மனித நாகரீகத்தின்’’6 மீது மனிதக் குரங்குகள் நடாத்தும் படையெடுப்பே பாசிசம் என சரியாகவே வரையறை செய்தார்.

மேலும் விஞ்ஞானம் சமூக வாழ்வுகளில் எத்தகைய முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்றது என்பது குறித்து, அவரது சொந்த ஊரான நியாசனிலிருந்து வந்திருந்த காட்டுப் பண்ணை விவசாயிகளிடம் அவர் கூறிய கருத்து முக்கியமானதாகும். “விஞ்ஞானம், வாழ்க்கையிலிருந்து விலகி நின்றதுண்டு, மக்களிடமிருந்து தனித்திருந்ததுண்டு. நான் இப்பொழுது காண்பது வேறு. நாட்டு மக்கள் அனைவரும் விஞ்ஞானத்தை மதிக்கிறார்கள் பாராட்டுகிறார்கள். உலகில் இக்காரியத்தைச் செய்துள்ள ஒரே சர்க்காரை - எனது சர்க்காரை நான் வாழ்த்துகிறேன்.’’ 7

உலகின் படைப்புகள் யாவும் மனித அறிவுக்கு அப்பாற்பட்டது என்ற தத்துவத்தினால் கருத்துமுதல்வாதிகள் மனிதனின் சிந்தனையை ஊனப்படுத்தியுள்ளனர். மூளைக்கான வேலையின் அளவைக் குறைத்ததுடன் சிக்கலான பிரச்சனைக்கான தீர்வை மிகத் தெளிவாக முன் வைத்தனர். ஒரு வகையில் கருத்து முதல்வாதமானது மனித குலத்தின் வரலாற்றினை பின்நோக்கித் தள்ளியதுடன் அதிகார சார்பானதாக மாற்றி கோடா கோடி உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கு பயன்பட்டு வந்துள்ளது. இந்தச் சூழலில் மனிதன் தன்னை தானே தெரிந்துக் கொள்வதற்கான விஞ்ஞான ஆய்வொன்றினை முன்வைத்ததன் மூலமாக மனித குலத்தின் மகத்தான மருந்தாக திகழக் கூடிய பெருமை பவ்லோவுக்குக் கிடைத்தது.

விலங்குகளில் செய்யப்பட்ட இந்த ஆராய்ச்சி நியதிகளை அவர் மனித இனத்திற்குப் பொருத்திப் பார்த்து கருத்து தெரிவிக்க முற்படுகின்ற சந்தர்ப்பத்தில் மரணம் அடைந்தமை உயிரியல் ஆய்வுலகில் ஏற்பட்ட பேரிழப்பாகும். இந்த பின்னணியில் இவரது கோட்பாடுகள், ஆய்வுகள் கடும் தாக்குதல்களுக்கு உட்பட்டன. மாறாக அறிவியல் உலகம் அவரது ஆய்வுகளை வரவேற்றன.

அடிக்குறிப்புகள்

1. தாம்ஸன் ஜார்ஜ் (1990) மனித சமூகசாரம், சென்னை புக் ஹவுஸ் (பி) லிட். சென்னை, பக். 1, 2
2. அதே நூல் பக். 83,84
3. மார்க்ஸ், ஏங்கல்ஸ் தேர்தெடுக்கப்பட்ட நூல்கள் 3.346, லெனின் தொகுப்பு நூல்கள்
4. தாம்ஸன் ஜார்ஜ் (1990) மனித சமூகசாரம், சென்னை புக் ஹவுஸ் (பி) லிட். சென்னை, பக். 27.
5. ஜூலியஸ் பூசிக்(1997), வீரநினைவுகள், நியூ செஞ்சரி புக் ஹவுஸ் பிரைவேட் லிட். சென்னை பக். 36.
6. அதே நூல் பக். 38.
7. அதே நூல் பக். 38.
பயன்பட்ட ஆங்கில நூல்
IVAN P. PAVLOV,( 1994), PSYCHOPATHOLOGY AND PSYCHIATRY TRANSACTION
PUBLISHERS NEW BRUNSWICK (U.SA) AND LONDON (UK)

- லெனின் மதிவானம்