மவுனத்தின் மீது சொல்லெறியுங்கள்; அது உண்மை களைப் பேசும் என்பது ரகசியனின் கனவு. தலித் மக்களின் விடுதலை என்பதை எப்போதும் கனவாக்கித் திரியும் அவருடைய மனநிலை ஒரு எழுத்தாளருக்கு உரியது மட்டுமல்ல; களப்பணியாளன் ஒருவனின் சிந்தனையும்கூட. சாதி இந்துக்களுடன் நாள்தோறும் போரிடும் அவரின் நனவிலி மனநிலை, தன்னை தலித் எழுத்தாளராக உந்துகிறது என்பது அவரின் வெளிப்படையான கூற்று. ரகசியன் என்ற அழகியல் பெயரை அவர் புனைந்து கொண்டாலும் அவருடைய கவிதைகள் வெளிப்படையானவை.

Ragasiyanவேலூர் மாவட்டம் காட்பாடி வட்டத்திலிருக்கும் கெம்மன்குப்பத்தில் பிறந்த இவர், தற்பொழுது சேத்துவாண்டையில் வசிக்கிறார். தன்னுடைய அண்ணன் சுரேஷ்குமாரிடமிருந்துதான் கவிதை எழுதும் உணர்வைப் பெற்றிருக்கிறார். குழந்தையாக இருக்கும்போது அம்மா அவரை"எங் கவிஞரே' என்றுதான் கொஞ்சுவார்களாம். அந்த தற்செயல் இப்போது தன்னை எழுத வைக்கிறது என்று தன் தாயின் நினைவினை வாஞ்சையோடு சொல்கிறார் ரகசியன். ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஏதோ ஒரு வகையில் அவருடைய குடும்பம் ஆக்கங்களுக்கான ஒரு காரணமாகத்தான் இருந்திருக்கிறது.

ரகசியனின் தந்தை இளமைக் காலங்களில் குடியரசுக் கட்சியில் பணியாற்றியவர். அழகிய பெரியவனுடன் ஏற்பட்ட தொடர்பால் அவருடைய எழுத்து அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. ரகசியனின் முதல் தொகுப்பான "நெருப்பல்ல சூரியன்' பொதுவான தன்மையிலான கவிதைகளைக் கொண்டவை. தனக்குள் இருந்த தலித் என்னும் உணர்வும் அழகிய பெரியவனின் நெறி காட்டுதலும் அவரை தலித் உலகத்திற்கு கொண்டு வந்திருக்கின்றன.

தலித் எழுத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தக் கூடியது. அவர்களை விடுதலையை நோக்கி செலுத்தும் திறனுடையது. தலித் ஆக்கங்கள் என்பவை இந்து, இந்திய பொதுப் பண்பாட்டிற்கு எதிரானதாக இருக்கின்றன. அவற்றின் மூலமாகவே இந்து மதத்திற்கு எதிராக, தலித் சமூகத்தில் பெரும்பான்மையினராக மாறிக் கொண்டிருக்கும் படித்தவர்களின் மவுனத்தை உடைக்க முடியும். ஆகவேதான் தலித் எழுத்தின் கூர்மை ஆயுதமாக்கப்பட வேண்டும் என்கிறார் ரகசியன்.

தலித் எழுத்துகளின் தேவை தீர்ந்து போய்விட்டது என்பதெல்லாம் உதவாத வாதங்கள். இந்து மதமும் சாதிய அமைப்பும் இருக்கும் வரையில் இங்கு தலித் எழுத்து ஊற்று போல் பொங்கிக் கொண்டே இருக்கும் என்பது ரகசியனின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஒருவேளை சாதியற்ற சமூகம் உருவாக்கப்பட்டாலும் அங்கேயும் தலித் வாழ்க்கையைப் பதிவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. சமூக மாற்றம் ஏற்பட்டதைப் போன்ற போலியான தோற்றம் இப்போது இருக்கிறது. சாதி தனது வடிவத்தை காலத்தின் தன்மைக்கேற்றவாறு மாற்றிக் கொண்டே இருக்கிறது. இடஒதுக்கீட்டின் மூலம் சிலர் பயனடைந்து இருக்கிறார்கள். அவர்களும் "கவர்மெண்ட் பிராமணர்'களாகத்தான் இருக்கிறார்கள் என்னும் ரகசியனின் இரண்டாவது புத்தகம் "எனது மாமிசத்தை பிடுங்கிப் பசியாறும் சைவம்'. அத்தொகுப்பிலிருந்து ஒரு கவிதை.

என் மீது பெய்கிறது மழை/காய்கிறது வெயில்/கீறுகிறார்கள் கிள்ளுகிறார்கள்/செதில்செதிலாய் வெட்டுகிறார்கள்/நாய்களும் நரிகளும்/கழுகுகளும் காக்கைகளும்/என் மாமிசத்தைப் பிடுங்கிப் பசியாறுகின்றன/நீயாக நான் மாறிவிட்டதனால்/உன்னோடு சேர்ந்து/பார்த்துக் கொண்டிருக்கின் றேன்-என தனது அழிவை தானே பார்த்துக் கொண்டிருக்கும் மனநிலையில் வைக்கப்பட்டிருக்கும் தலித் சமூகக் கேட்டினை அழுத்தமாகப் பேசுகிறார் ரகசியன்.

தலித் ஆக்கங்கள் மக்களை இந்து மதத்திலிருந்து பிரித்து வெளியேற்றும் செயல்பாடு மிக்கதாக இருக்க வேண்டும் என்பது ரகசியனின் ஆக்கங்களில் மய்ய மாகச் சுழல்கிறது. இந்து மதமே அவர்களின் மீது அடிமைத்தனத்தைத் திணித்தது என்னும் உண்மை, அம்பேத்கரின் காலத்திலிருந்து தொடர்ந்து பேசப்பட்டாலும் தலித் மக்கள், தலைவர்கள் அதை உள்வாங்கிக் கொள்கின்றனரா என்றால் இல்லை. அந்த விழிப்புணர்வை தலித் எழுத்து செய்ய வேண்டும்.

தலித் வாழ்வை, வலியினை, கொண் டாட்டத்தை மட்டும் பதிவு செய்வதாக இல்லாமல், தலித் இலக்கியம் சமூக மாற்றத்தின் தேவையை உணர்த்த வல்லதாக இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். அது மட்டுமல்ல, காலத்தின் நீட்சியில் தலித் மக்களை இந்து மதத்தின் வேரிலிருந்து பிடுங்கி விடலாம். ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களை இந்து மதத்திலிருந்து பிரிக்க முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்று ரகசியன் கூறுகிறார்.

ரகசியன் தன் எழுத்துகளில் பதிவு செய்யும் தலித் வாழ்வு மிகவும் நுணுக்கமானது. தன் வாழ்விலிருந்துப் பெறப்படும் அனுபவக் கூறுகளின் சொற்கண்ணிகளை வைத்து நிகழ்த்தும் அவருடைய அரசியல், அதனால் அடையப்படும் உணர்வு வெளிப்பாடு, தலித் ஆக்கத்திற்கான அடையாளங்களாகவே திகழ்கின்றன.

"தலையணை', "அம்மாவின் பயணம்' என்னும் கவிதைகள் அத்தகையதாகவே இருக்கின்றன. தலித் வாழ்வில் தலையணை எத்தகைய குறியீடாக அமைகிறது? பழைய துணியில் தைக்கப் பட்ட உறைக்குள் இருக்கும் சிறுவயது உடை, அம்மாவின் பழைய புடவைகள் மற்றும் பழைய துணிகளால் ஆனது. ஆனால் காற்றும் பஞ்சும் நிறைக்கப்பட்ட அவாள்களின் தலையணைகள் எத்தகைய தன்மையுடையன? சுத்தம், ஆச்சாரம், தீட்டு என்னும் காரணிகளைக் கொண்டவை அவை. ஆனால் இங்கே துர்நாற்றம் வீசும் தலையணை, உழைப்பின் வியர்வையை; அதனால் வரும் அழுக்கை கொண்டிருக்கிறது. அதனால் இந்தத் தலையணைகளைப் பார்க்கும்போது முகம் சுழிக்கலாம். ஆனால் இதற்குள்தான் மறக்க முடியாத குழந்தைமை இருக்கின்றது என்று ரகசியன் நிகழ்த்தும் தலித் சார்ந்த அரசியல் நீண்டு விரிகிறது.

ரகசியனின் ஆழ்மன எண்ணங்களை அவருடைய ஆக்கங்களின் மூலம் உணர்வதே சாத்தியம் என்று கூறலாம். சாதியத்தின் ஆணிவேராய் இருக்கும் இந்து பார்ப்பனியத்தின் வினைக்கு எதிர்வினையாற்றும் எத்தனிப்பே அவருடைய ஆக்கங்களின் சாத்தியம். கடலினைவிட மிகப் பொறுமையாய் ஆகப் பெரும் கொடுமைகளையெல்லாம் சந்திக்கின்ற விளிம்பு நிலை மக்கள், தங்கள் எதிர்வினையாய் சுமைகளை இறக்கி வைக்கும் நாளொன் றையே அவருடைய ஆழ்மனத் தேடல் அவதானித்துக் கொண்டிருக்கிறது.

பட்டப் படிப்பினை முடித்துவிட்டு சென்னையில் தனியார் நிறுவனமொன்றில் பணி புரியும் ரகசியன், தற்போது சிறுகதைகளையும் எழுதிக் கொண்டிருக்கும் நம்பிக்கை அளிக்கும் இளம் கவிதைக்காரன்.

Ragasiyanசுமை இறக்கும் நாள்

கடலினும் பெரிது
பொறுமை
பெரிதினும் பெரிது
எங்களின் பொறுமை
வன்முறைகள், கற்பழிப்புகள்
கீழினும் கீழ்செயல்கள்
கடும் சொற்கள்
பொறுமையாகி
ஒன்றின்மேல் ஒன்றாய்
உயர்ந்து கொண்டே
இருக்கிறது
யாவற்றுக்கும் எல்லைகள்
உள்ளதுபோல்
உங்களின் இதுகளுக்கும்
எல்லைகளுண்டு
ஒடுக்குமுறைகள்
பொறுமையானதுபோல்
பொறுமை வலி ஆகி
சுமை இறக்கும் நாள் வரும்
அப்போது தெரியும்
தலை துண்டாக்குவது
கழுத்தறுப்பது
தோலுரிப்பது
எல்லாம் எங்களுக்கும்
தெரியுமென்பது!

Pin It