ஒரு பெரும் மனிதப் படுகொலை நடந்து முடிந்திருக்கின்றது. உழைத்தால் மட்டுமே சோறு என்ற நிலையில் வாழும் அந்த எளிய மக்களை கொழுத்துப் போன பணவெறியும், சாதிவெறியும் துடிதுடிக்க கொலை செய்திருக்கின்றது. ஒருவன் ஒதுக்கப்படுவதற்கும், துன்புறுத்தப்படுவதற்கும், கொலை செய்யப்படுவதற்கும் சாதி மட்டுமே போதுமானதாக இருக்கின்றது. வலிகளுக்கும், கண்ணீருக்கும், அனுதாபத்திற்கும், நீதிக்கும் கூட இங்கே சாதி இருக்கின்றது. உலகில் பெரும் மனநோயாளிகள் வாழும் நாடாக இந்திய எப்போதுமே இருந்து வருகின்றது. இனியும் இருந்து வரும். சாதியை வைத்து செய்தியை வடிவமைக்கும் இழி பிறவிகள் இந்த மண்ணில் வாழும்வரை இந்த நிலை என்றுமே மாறப் போவதில்லை.
வீடு இடிந்ததால் ஏற்பட்ட மரணமா? சுவர் இடிந்து வீட்டில் மேல் விழுந்ததால் ஏற்பட்ட மரணமா? தீண்டாமை சுவர் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட மரணமா? இல்லை திட்டமிட்டே தெரிந்தே செய்யப்பட்ட சாதியப் படுகொலைகளா? ஒவ்வொரு மூளையிலும் உறைந்து கிடக்கும் சாதியப் படி நிலைக்கு ஏற்றவாறு உண்மைகள் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தீண்டாமை ஒரு செய்தியாக மாறவே 17 உயிர்கள் ஜனநாயகத்தின் பலிபீடத்தில் பலிகொடுக்க வேண்டி இருக்கின்றது.
படுகொலை செய்யப்பட்ட பிணங்கள் அடக்கம் செய்யப்படுவதற்குள் அந்தப் பிணங்கள் தெலுங்கு வந்தேறிகளின் பிணங்கள் என்றும், அந்தப் பிணங்களை வைத்து தமிழ்ச் சமூக சூத்திர சாதியின் (பார்ப்பானின் வைப்பாட்டி மகன்களின்) நற்பெயரைக் கெடுக்க திராவிட வந்தேறிகள் அரசியல் சதி செய்கின்றார்கள் என்றும் தமிழ்த் தேசியம் என்ற முகமூடி தரித்த சாதி வெறி ஈனப்பிறவிகள் சண்டமாருதம் செய்தார்கள்.
‘சுவர் எப்போது வேண்டுமனாலும் எங்கள் குடியிருப்புகள் மேல் விழும் அபாயம் இருப்பதாக’ அந்தக் கஞ்சிக்கு வழியற்ற அத்துக்கூலிகள் பலமுறை மனு கொடுத்தும், முறையிட்டும் கண்டுகொள்ளாமல் அவர்கள் சாவதற்காகவே இந்த உலகில் பிறக்க சபிக்கப்பட்டவர்கள் என்ற மமதையில் அவர்கள் கொலை செய்யப்பட வேண்டும் என்று காத்துக் கிடந்த சாதிவெறி பிடித்த அதிகார வர்க்கம் சொல்லிவைத்தார் போலவே செயல்பட்டது. 17 பிணங்களுக்கு நீதி வேண்டி போராடிய தோழர்களை எல்லாம் தன்னுடைய டிராகுலா பற்களால் கடித்துக் குதறி ராஜ விசுவாசத்தையும், சாதிய விசுவாசத்தையும் வெளிக்காட்டி இருக்கின்றது.
கருவறைக்குள் மட்டுமல்ல பிணவறையில் கூட இடம் மறுக்கப்பட்டு, ‘தெலுங்கு வந்தேறிகளின்’ நாதியற்ற பிணங்கள் வெளியே வீசி எறியப்பட்டு சாதி வெறி அம்மணமாய் ஆடி இருக்கின்றது. உயிரோடு இருக்கும் போதே தள்ளிவைத்து அவர்களை தவிக்கவிட்ட சமூகம், செத்த பிணங்களின் மேல் கருணை மழை பொழியும் என எப்படி எதிர்பார்க்க முடியும்?
ஆனாலும் எந்த மக்களை கண்ணால் கண்டால் தீட்டு என்று தீண்டாமை சுவர் எழுப்பி அவர்களைக் கொன்று போட்டார்களோ, அதே மக்களின் நான்கு கண்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. அந்த நான்கு கண்களுக்கு சொந்தமான உடன்பிறப்புகள் ராமநாதன் (15) மற்றும் நிவேதா (18) ஆவார்கள். பிறந்தது முதலே இந்த உலகின் பார்வையில் பார்க்கத் தகாதவர்களாக இருந்த அவர்களின் கண்கள் இனியாவது பார்க்கத் தகுதியான நபர்களிடம் மறுபிறப்பு அடையுமா என்று தெரியவில்லை. ஒருவேளை இதுவும் கூட ஒருவகை மோட்சம்தான். தன்னுடைய சாதியக் கடமைகளை ஒழுங்காக கடைபிடித்து வாழும் ஒருவர் மறுபிறப்பில் தன் சாதி இழிவு நீங்கி உயர்ந்த சாதியாக பிறப்பான் என்று தர்ம சாஸ்திரங்கள் சொன்ன நீதி நிச்சயம் இதுவாகத்தான் இருக்கும். சண்டாளர்களாகப் பிறந்து தனக்கு மேலே இருக்கும் எல்லா சாதிக்கும் இழிவான வேலைகளை செய்து தன் வாழ்கையை நடத்திய உயிர்கள், தாங்கள் இறந்த பின்னாலும் தங்களின் கண்களைக் கூட தங்களை உயிரோடு இந்த உலகில் வாழ இத்தனை நாட்கள் அனுமதித்த ‘மதிப்பிற்குரியவர்களுக்கு’ தானமாக வழங்கிவிட்டு பிறவிப் பெரும்பயனை அடைந்திருக்கின்றனர்.
நிச்சயம் படுகொலை செய்யப்பட்ட 17 பேரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள், தங்கள் பிணங்களின் மதிப்பு 4 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயரும் என்பதையும், தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கும் என்பதையும். தலித்துகள் உயிரோடு இருப்பதைவிட சாவதே அவர்கள் இந்த மண்ணில் ‘உயர்வடைய’ ஒரே வழியாக இருக்கும்போல!. அடிமைகளின் உயிருக்கு விலை கிடைக்கும் ஜனநாயக காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்!. இது ஒன்றும் பண்ணை அடிமை முறை காலமல்ல. ஒவ்வொருவருக்கும் ஒரு ஓட்டு, ஒவ்வொரு ஓட்டுக்கும் ஒரே மதிப்பு என்ற உயர்ந்த விழுமியங்களை பறைசாற்றும் ஜனநாயகத்தின் பெருமதிகள் நிறைந்த காலம். சட்டத்தில் மட்டுமே சமத்துவத்தையும், சமூகத்தில் அசமத்துவத்தையும் கொண்ட காலம் கொஞ்சம் கொஞ்சமாக மலையேறி வருகின்றது. தலித்தை கட்டிப் போட்டு உதைத்தவர்கள் இன்று தேர்தலுக்காக அதே தலித்தை தொட்டு ஆறுதல் சொல்கின்றார்கள் என்றால், அசமத்துவம் சமத்துவமாகப் பரிணமிக்கின்றது என்றுதானே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்!
தன்னுடைய கழிவுகளை சுத்தம் செய்வதற்காகவே கடவுளால் படைக்கப்பட்ட ஒரு சாதி இந்த உலகில் இருக்கின்றது என்று உளப்பூர்வமாக நம்பும் வீரமிக்க இந்துக்கள் வாழும் இந்த நாட்டில், இந்த 17 பிணங்கள் நிச்சயம் எந்தவிதமான சலனத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. தினம் தினம் மலக்குழி மரணங்களை மிக எளிதாக கடந்துபோகும் இந்த சமூகத்தை ஒரு நாளும் இது போன்ற படுகொலைகள் உலுக்கப் போவதில்லை. நீதியின் ஆன்மா சாதியில் உறைந்து கிடக்கின்றது. அதை வெளிப்படுத்தும் மந்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் நாம் அடுத்தடுத்து படுகொலைகள் நடக்கும் என்று உறுதியாக நம்புவோம். அரசும் கூட கொலை செய்யப்படும் தலித்துகளுக்கென்றே சிறப்பு நிதி ஒதுக்க ஆலோசிக்கலாம்.
தீண்டாமை சுவரைக் கட்டி 17 பேரைக் கொன்றுபோட்ட சூத்திர சாதிவெறி நாயிடம் எலும்புத் துண்டுகளை கவ்விய ஒரு ஏவல் நாய், “சக்கிலிய நாய்களுகிட்ட கெஞ்சிட்டு இருக்கனுமா?” என்று போராடிய தோழர்களைப் பார்த்து குரைத்திருக்கின்றது. பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்களின் போராட்டம் தீவிரமாகவே, அந்தச் சாதிவெறி நாயை வேறு வழியின்றி சும்மானாச்சுக்கும் கைது செய்து, விசுவாசத்தோடு பிணையில் வரக்கூடிய செல்லமான பிரிவுகளிலேயே வழக்குப் பதிவும் செய்திருக்கின்றது. இன்னும் சில நாட்களிலேயே அரசு மட்டத்தில் சாதிய மலத்தை தின்று கொழுத்துத் திரியும் பன்றிகள் மூலம் பிணை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று நாம் உறுதியாக நம்பலாம்.
சாதி ஒழிப்பு சிந்தனை கொண்ட இயக்கங்களைத் தவிர்த்து ஒட்டுமொத்த சமூகமே பெரும் நிசப்தத்தில் உறைந்து கிடக்கின்றது. 17 உயிர்களுக்கு நீதி வேண்டி எந்த ஒரு கேஷ்டாக்கும் டிரண்டிங் ஆகவில்லை. இந்தச் செய்தியை கடந்து போகும் ஒவ்வொருவரும் ஒரு பிணமாகவே நம் கண்களுக்குத் தெரிகின்றார்கள். சமூகமே ஒரு பெரும் சுடுகாடாய் காட்சியளிக்கின்றது. தமிழகம் ‘அமைதிப் பூங்காவாக” தன் இயல்பான பணிகளில் முழ்கிக் கிடக்கின்றது.
- செ.கார்கி