திரு.எம்.எஸ். உதயமூர்த்தி அய்யா நடத்தும் மக்கள் சக்தி இயக்கத்தின் மாத இதழான 'நம்பு தம்பி நம்மால் முடியும்' என்ற இதழில் கடந்த மாதம் வெளியான தமிழ் தேசிய இயக்கத் தலைவர் திரு.பழ.நெடுமாறன் அவர்களுடனான நேர்காணல், இணையத்தில் வாசிப்பவர்களுக்கு

திரு.பழ.நெடுமாறன்! 50 வருடங்களாக பொதுவாழ்வில் உள்ள பழுத்த அரசியல்வாதி. பெரியார், இராஜாஜி, அண்ணா போன்ற அன்றைய தலைவர்கள் முதல் இன்றைய அரசியல் பெருமக்கள் வரை யாவராலும் மதிக்கப்படும் ஒரு அரசியல் போராளி.இலங்கைத் தமிழ்மக்களின் கூக்குரலுக்கு குரல் கொடுத்துவரும் தைரிய மனிதர்! காமராஜரின் நம்பிக்கைக்குரிய சீடர்.இந்திரா காந்தியின் மதிப்பையும், மரியாதையும் பெற்ற மாபெரும் தமிழகத் தலைவர். 1980 ல் காங்கிரசின் பொதுச்செயலாளராக இருந்தவர். அங்கேயே தொடர்ந்திருந்தால், இன்று தமிழக காங்கிரசின் தனிப்பெரும் தலைவராக இருந்திருப்பார். ஆனால், பதவிகளை துறந்துவிட்டு, கொண்ட கொள்கையை தாங்கிப் பிடித்து வரும் தன்மானத் தமிழர். தடா, பொடா அச்சுறுத்தலுக்குப் பயப்படாத இவரின் நெஞ்சுரம் உலகத் தமிழர்களை புருவம் உயர்த்தச் செய்யும். தமிழ் தேசியத்தை வன்முறையில் இல்லாமல் ஜனநாயக வழியில் வலியுறுத்தி வரும் காந்தியவாதி.

ஏன் இந்த அரசியில் சீர்கெட்டுக் கிடக்கிறது? அதை சீர்படுத்த என்னதான் வழி? இப்படி நாடும், மக்களும் சுபிட்சம் பெற எதுதான் வழி என்கிற நம் தேடலுக்கு தெளிவு கிடைக்க 70வயது இளைஞரை சந்தித்தோம். சந்திப்பு சூடு, சுவை, குணம், தரம் மிக்கதாகவே அமைந்தது. அதை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

•பொதுவாழ்வில் ஈடுபட உங்களுக்கு தூண்டுகோளாக அமைந்தது எது?

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது நடந்த மாணவர் விடுதி போராட்டத்தில் ஈடுபட்டேன். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பல அரசியல் கட்சிகளை சார்ந்த மாணவர்கள் இருந்தாலும் இப்போராட்டத்தின் போது நாங்கள் அரசியல் பாகுபாடின்றி ஒன்றிணைந்து போராடினோம். அதற்காக கைது செய்யப்பட்டோம். எங்களது உணர்வுகளை நன்கு உணர்ந்த அன்றைய முதல்வர் காமராஜர் அவர்கள் எங்களது வேண்டுகோளை ஏற்று, எங்கள் மீதான வழக்கை வாபஸ் பெற உத்தரவு விட்டார்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்த சூழல்தான் எனது பொதுவாழ்க்கைக்கு நல்ல அடித்தளமாக அமைந்தது என்று சொல்ல வேண்டும். மேலும் அங்கிருந்த ஆசிரியர்கள் கொடுத்த தமிழுணர்வு எங்களை இன்றும் இயக்கி வருகிறது.

•கடந்த ஐம்பது ஆண்டிகால அரசியலை பார்த்தவர் நீங்கள். அன்றைய அரசியலுக்கும் இன்றைய அரசியல் கலாச்சாரத்திற்கும் பெருத்த வேறுபாடு உள்ளதாக கருதப்படுகிறதே?அப்படி என்னதான் வேறுபாடு வந்துவிட்டது இன்று?

அன்றைய தலைவர்கள் மக்கள் பிரச்சனையில் ஒன்றுபட்டு நின்றனர்.இராஜாஜி,பெரியார்,ஜீவா,அண்ணா போன்ற தலைவர்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்ட கருத்துக்களை கொண்டிருந்தாலும் ஒருவர் மற்றவர் கருத்தை மதித்தனர்,மறுத்தாலும் மற்றவர் கருத்தை மதிப்போடு மறுத்தனர்.

ஆனால், இன்றைக்கு அரசியல் கட்சிகள் மதம் போல் மாறிவிட்டன. இன்றைக்கு மக்கள்பிரச்சனை முன் நிறுத்தப்படுவதில்லை. கட்சிதான் முன் நிறுத்தப்படுவதில்லை. கட்சிதான் முன் நிறுத்தப்படுகிறது. அன்றைக்கு தமிழக நலன் காக்கும் விஷயங்களில் பல கட்சி தலைவர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டனர். ஆனால், இன்றைய தலைவர்களின் போக்கினால் முல்லை பெரியார், காவிரி, பாலாறு போன்ற பல பிரச்சனைகளில் தமிழகத்தின் நலன் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அன்று தமிழகத்தின் சட்டமன்றம் நடைபெற்ற விதம், இந்தியாவிற்கே ,முன்னுதாரணமாக இருந்தது. இன்று நமது சட்டமன்ற நடவடிக்கைகள் கேலிக்கூத்தாக்கப்பட்டு விட்டன.

•எந்த காலகட்டத்தில் இந்த அரசியில் கலாச்சார மாற்றம் ஏற்பட்டது. இது படிப்படியாக வந்த மாற்றமா?

இல்லை. இது படிப்படியாக வந்த மாற்றம் இல்லை. அண்ணாவின் மறைவிற்கு பிறகு, கலைஞருக்கும், எம்.ஜி.ஆருக்கும் இருந்த தனிப்பட்ட விரோதம், இரு கட்சிகளின் விரோதமாகி விட்டது. 2001-06ம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் சட்டமன்றத்திற்கே செல்லவில்லை.தற்போது அதையே ஜெயலலிதா செய்து வருகிறார்.

இதுமாதிரியான போக்கு நம் ஜனநாயகத்திற்கே கேவலமானது. இதனால் உலகம் நம்மை.ஜனநாயகத்திற்கே தகுதியில்லாதவர்கள், பக்குவப்படாதவர்கள் என்று எண்ணுகிறது.

•தி.மு.க மற்றும் அ.தி.மு.க விற்கு மாற்றாக மூன்றாவது அணி அமையவேண்டியது காலத்தின் கட்டாயம் என்று சமீபத்தில் ஒரு பத்திரிகை பேட்டியில் குறிப்பிட்டிருந்தீர்கள். தற்போது யாருக்கு மூன்றாவது அணி அமைக்க வாய்ப்புள்ளது என கருதுகிறீர்கள்?

மூன்றாவது அணி அமையவேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளேன். இந்த யோசனையை எந்தெந்தக் கட்சிகள் ஏற்கும், ஏற்காது என்று தெரியவில்லை. மூன்றாவது அணி அமைந்தால்தான் அதனை அமைக்கும் கட்சிகளுக்கும் நல்லது, தமிழ் நாட்டின் எதிர்காலத்திற்கும் நல்லது.

•அப்படி அமையும் மூன்றாவது அணியின் கொள்கைகள் என்னவாக இருக்க வேண்டும்?

முதலில் பிள்ளை பிறக்கட்டும் பின்பு பெயர் வைப்பதைப் பற்றி பார்ப்போம்.

•பொதுவாகவே சமுதாயத்தில் பொதுநலசிந்தனை, செயல்பாடு குறைந்து வருவதாக கருதுகிறீர்களா?

உண்மைதான் மறுக்கவில்லை. ஆனால், ஏன் இந்த நிலை வந்தது என்று யோசித்துப் பாருங்கள்? பொதுவாழ்வில் முன்மாதிரியாக இருக்கவேண்டியவர்கள் ஒழுக்கத்துடன் வாழ்ந்து நேர்வழியில் பொருள் சேர்பதில்லை. எம்.எல்.ஏ,விலிருந்து முதலமைச்சர் வரை எப்படி சம்பாதிக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிகிறது. நேற்று வரை சாதாரணமாக இருந்த ஒருவர் சட்டசபை உறுப்பினர் ஆன உடன் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துவிடுகிறார். இப்படி இருக்கும் சூழலில் எப்படி பொதுநல சிந்தனை, செயல்பாடு சமுதாயத்தில் வளரும்?

இலஞ்ச ஊழலற்ற ஆட்சி வேண்டும்.

•தமிழகம் முழுவதும் பயணித்து பலதரப்பட்ட மக்களைச் சந்தித்து வருவதால் மக்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்தவர் நீங்கள்... அந்த அடிப்படையில் இன்றைக்கு தமிழக மக்கள் எந்த வகையான சமூகமாற்றத்தை எதிர்ப்பார்க்கிறார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்கள்.

இலஞ்ச ஊழலற்ற ஆட்சி வேண்டும்.இதுதான் மக்களின் எதிர்பார்ப்பு, பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதில் துவங்கி தொழிற்சாலை துவங்குவது வரை அனைத்திலும் இலஞ்சமும், ஊழலும், தலைவிரித்தாடுகிறது. இலட்சங்களோ, கோடிகளோ இலஞ்சம் கொடுத்து கல்லூரி துவங்குபவர்களால் எப்படி குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்க முடியும்.? லஞ்ச ஊழலை ஒழிக்காமல் நீங்கள் எந்த வளர்ச்சித் திட்டத்தையும் கொண்டு வந்து பயனில்லை.

•இலஞ்சம் ஊழலை ஒழிக்க நீங்கள் முன்வைக்கும் தீர்வு என்ன?

இலஞ்ச ஊழல் ஒழிப்பு கீழிருந்துதான் துவங்க வேண்டும்,கட்சி வேறுபாடின்றி அந்தந்த கிராமங்களில் உள்ள இளைஞர்கள் உள்ளூர் வி.ஏ.ஒ அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகம் போன்ற இடங்களில் நடக்கும் ஊழலை எதிர்த்துப் போராட வேண்டும். இதனால் வரும் பிரச்சனைகளையும், அடக்குமுறைகளையும் சந்திக்கத் தயாராக வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு ஊரிலும் உள்ள இளைஞர்கள்,போராட ஆரம்பித்தால் இலஞ்சம், ஊழல் ஒழிய வழிபிறக்கும். மக்கள் மீது நம்பிக்கை வைத்து போராட்டத்தை துவக்குங்கள்.

தமிழ் தேசியம் ஏன்?

•தேசிய கட்சியான காங்கிரசில் தீவிரமாக செயல்பட்டு வந்த நீங்கள் அதிலிருந்து விலகி தமிழ் தேசியம் பேசுவதும் அதற்காக தமிழர் தேசிய இயக்கம் நடத்துவதும் ஏன்?

பல மொழிகள் ,பல மதத்தினர் இருக்கும் நம் நாட்டில் இந்திராகாந்தி ,காமராஜருக்குப்பின்னால் தேசிய தலைமை என்பது அறவே இல்லை. எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் தலைவர் யாரும் இப்போது இல்லை. காவிரி, முல்லைபெரியாறு பிரச்சினைகளில் கர்நாடகமும்,கேரளமும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைக்கூட செயல்படுத்த மறுத்து வருகின்றன. இதை எந்தவொரு தேசிய தலைவரோ கட்சியோ கண்டிக்கவில்லை.ஆக, இந்திய தேசியத்தை யாரும் மதிக்கவில்லை என்பது தெளிவாகிறது, இந்திய தேசியம் பேசுவது ஒரு ஏமாற்று வேலை! இந்த சூழலில் என்னைப்போன்று தமிழக மக்களுக்கு ஏதாவது தொண்டு செய்ய வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு தமிழ்தேசியம் பேசுவதைத்தவிர வேறு வழியில்லை.

கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் காரணம் ஏதுமின்றி எங்கள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையானது இந்த ஆட்சியிலும் தொடருகிறது. ஆனாலும், தமிழர்களின் பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.

•இலங்கைத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன?

தமிழ் ஈழம் அமைவதைத் தவிர வேறு தீர்வு இல்லை .1949 ல் விடுதலை பெற்ற இலங்கையில் 1977 வரை தமிழ் ஈழம் என்ற கோரிக்கையே எழவில்லை .சிங்களரையும், தமிழரையும் சமமாக மதியுங்கள் என்றூதான் கேட்கப்பட்டது. அப்படியும் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே கருதப்பட்டனர். வேறூ வழியின்றி தனித்தமிழ் ஈழம் கேட்கும் நிலைக்கு நாம் ஆளாக்கப்பட்டோம்.

•இதற்காக வன்முறை வழியில் தான் போராட வேண்டுமா?

வன்முறையை வன்முறையால்தானே எதிர்கொள்ள முடியும். சிங்கள ராணுவம் அப்பாவி மக்களை சுட்டுக்கொல்லும் போது ,திட்டமிட்டு இனப்படுகொலை செய்யும்போது இலங்கைத் தமிழர்களுக்கு வேறு வழியில்லை. ஒருமுறை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சென்னை வந்திருந்தபோது, ஆயுதம் வைத்திருந்ததாகச்சொல்லி கைது செய்தனர். அதை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பதைப் பார்த்து வியந்த பர்த்திரிகையாளர்கள் கேட்டபோது, இது இந்தியா,. அகிம்சையை மதிக்கக்கூடிய நாடு, ,இங்கு இப்படித்தான் போராட வேண்டும். ஆனால், இலங்கை அப்படியில்லை என்றார். அதுதான் இதற்கும் பதில்.

•இலங்கை தமிழர் போராட்டத்தில் உங்கள் இயக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

யாழ்ப்பாணத்தில் 5 லட்சம் மக்களை பட்டினிபோட்டு பணிய வைக்க முயற்சிக்கிறார்கள். இதனால் ஈழத்தில் பட்டினிச்சாவு அதிகரித்துள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் சென்று இரண்டே மாதத்தில் ஒருகோடி பெறுமானமுள்ள அரிசி,மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களைத் திரட்டினோம். 7மாதங்களாக இந்த பொருட்கள் கிடப்பில் உள்ளன. இந்திய சர்வதேச செஞ்சிலுவைச் சங்கங்கள் மூலம் இந்தப் பொருட்களை ஈழத்திற்கு அனுப்ப திட்டமிட்டிருந்தோம். அரசின் அனுமதி கிடைக்கவில்லை. இன்னும் தாமதித்தால் உணவுப்பொருட்கள் கெட்டுப் போய்விடும் மருந்துகள் காலாவதியாகிவிடும் ஆதலால் வருகிற செப்-12 ம் தேதி அன்று நாகப்பட்டினம், ராமேஸ்வரம் ஆகிய துறைமுகங்களிலிருந்து இப்பொருட்களை ஈழத்தமிழர்களுக்கு எடுத்துச் செல்லும் படகு பயணப் போராட்டத்தை நடத்தவுள்ளோம்.

பொதுவாழ்வில் நேர்மை, எளிமை, துணிவு, இவைகளை வரலாற்றில் படித்திருப்போம்.கதைகளாக கேட்டிருப்போம். படித்ததையும், கேட்டதையும் கண்முன்னர் கண்டோம் இன்று என்ற உணர்வோடு அந்த மக்கள் தலைவரிடலிருந்து விடைபெற்று வெளியே வரும்போது, நம் காதுகளில் ஒலித்தக் கொண்டிருந்த வாசகம்

மக்களுக்காகப் போராடுங்கள்
மக்களை நம்பிப் போராடுங்கள்
மக்களோடு இருந்து போராடுங்கள்

மக்கள் சக்தி இயக்கம்
நம்பு தம்பி நம்மால் முடியும்
17-A, தெற்கு அவின்யூ,
திருவான்மியூர் , சென்னை - 600041
தொலைபேசி - 24421810 , 9443562030
மின்னஞ்சல் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It