ஐயா நெடுமாறன் அவர்கள் இந்தியா கூட்டணியை ஆதரித்து அறிக்கைவிட்டவுடன் அவரைக் கண்டித்தும் ஏளனம் செய்தும் கருத்து கூறும் ஈழத் தமிழர்கள் சிலர், அவர் பாஜக தலைவர்களை அழைத்து உறவு கொண்டாடிய போது அதைப் பற்றி ஒன்றும் கருத்தறிவிக்காமல் உள்ளத்தால் மகிழ்ந்து கொண்டிருந்தனர்..

பொதுவாகவே ஈழத் தமிழ் இயக்கங்களுக்குத் தமிழ்நாட்டு அரசியல் பற்றி.. தமிழ்நாட்டின் மக்கள் விடுதலையைப் பற்றிய அக்கறையைவிட இந்தியநாட்டைப் பற்றிய அக்கறை மிகுதி..

தமிழ்நாட்டு மக்களின் நட்பை விட இந்திய அரசின் நட்பை அவர்கள் பெரிதும் மதிக்கிறவர்களாகவும் பாராட்டுபவர்களாகவுமே இருந்து வந்திருக்கின்றனர்..

தோழர் தமிழரசன் தமிழ்நாட்டு விடுதலை தொடர்பான இயக்கச் செயற்பாடுகளில் இருந்த காலத்தில்.. அவருடன் தொடர்பு கொள்ளவும் அவரைப் போன்றதான அசாம் விடுதலை இயக்கங்களோடோ, பஞ்சாப் விடுதலை இயக்கங்களோடோ, காஷ்மீர விடுதலை இயக்கங்களோடோ தொடர்பு கொள்ள தோழர் பாலன் தலைமையிலான தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை போன்ற ஓரிரண்டு இயக்கங்கள் மட்டுமே விரும்பினவே அல்லாமல், ஈழத் தமிழ் இயக்கங்கள் பிற எவையும் விரும்பவும் இல்லை, உடன்படவும் இல்லை..

பாவலர் காசி ஆனந்தன் அவர்கள் 'ஈழ இந்திய நட்புறவுக் கழகம்' என்று ஓர் அமைப்பை உருவாக்கி இருந்தார்.. நாம் அவரிடம், “தமிழ்நாட்டு இயக்கங்கள் சார்ந்த நாங்கள் 'தமிழ்நாடு ஸ்ரீலங்கா நட்புறவுக் கழகம்’ -என்று ஓர் அமைப்பை ஏற்படுத்தினால் அதை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுவீர்கள்.. அப்படித்தானே நீங்கள் உருவாக்கி இருக்கிற ஈழ இந்திய நட்புறவுக் கழகம் -எங்களுக்கு உடன்படாத நிலையில் அல்லவா இருக்க முடியும்” என்று கூறினோம்.. அவர் சரியான விடையை இதுவரை அளிக்கவில்லை..

ஈழத் தமிழர்கள் இந்தியாவை நட்பாக எண்ணுவது தமிழ் ஈழத்துக்கு மட்டுமன்றி தமிழ்நாட்டிற்கும் கேடானது என்பதை உணர்ந்தாக வேண்டும்..

இந்தியா என்பது பாஜக அல்லது காங்கிரஸ் என்கிற அளவில் அரசியல் கட்சியாக மட்டுமே மதிப்பிடக்கூடியதில்லை..

இந்தியாவிற்காக.. பாரதத்திற்காக இருக்கக்கூடிய.. தேசிய இன உரிமைகளை மறுக்கக்கூடிய எந்தக் கட்சியும் அது மார்க்சியத்தின் பெயரால் இருக்கக்கூடிய கட்சியாக இருந்தாலும் கூட அந்தக் கட்சிகள் அனைத்தும் இந்தியப் பாசிச பார்ப்பனியக் கருத்துடையவையே..

அவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு வகையில் மிகுதி குறைவு இருக்கலாம்.. ஆனால் அவை யாவும் பாசிச பார்ப்பனிய உணர்வுடையவையே..

திமுகவைப் பொறுத்த அளவு 1963-லேயே அது தமிழ்நாட்டு உரிமைகளுக்கான கோரிக்கையைப் படிப்படியாகக் கை நெகிழ்த்து விட்டக் கட்சியாகிப்போனது..

வடவர் நம்மவரும் அல்லர் நல்லவரும் அல்லர்..

அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு..

என்றெல்லாமும் கூறியவர்கள் தாம்.. பின்னாளில் நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக.. -என்றும்,

மொழியால் தமிழன், இனத்தால் திராவிடன், நாட்டால் இந்தியன் ­என்றெல்லாம் மழுப்பிப் பேசத் தொடங்கினர்.. எண்ணற்ற ஊழல்கள் செய்தனர்..

இன்றைய இந்தியத் தேர்தல் அரசு அமைப்புக்கு அடிமைப்பட்டு போகிற அனைவரும் செய்யக்கூடிய அயோக்கியத்தனங்கள் அவை. அதற்குக் கட்சிப் பெயர், கோட்பாடு என்றெல்லாம் கிடையாது..

அது இந்தியத்தின் பெயரிலும் நடக்கும்.. திராவிடத்தின் பெயரிலும் நடக்கும்.. அதே இந்தியத் தேர்தல் அரசியல் புதைச்சேற்றில் மூழ்கினால் தமிழ்த்தேசத்தின் பெயரிலும் நடக்கும்..

1949 இல் தொடங்கினாலும் இந்தியத் தேர்தலில் மூழ்கி போன பிறகே ஊழலும் ஏமாற்றுதலும் செய்யத் தொடங்கியது திமுக..

ஆனால், 2009 இற்குப் பின் 2010 இல் தோற்றம் கொண்ட நாம் தமிழர் கட்சி தமிழ்த் தேசம் பேசிக் கொண்டே இந்தியத் தேர்தல் புதைச்சேற்றில் மூழ்கிய நிலையில், இன்னும் ஒரு சட்டப்பேரவைத் தொகுதி கூட வெற்றி பெறுவதற்கு முன்பே இந்தியப் பார்ப்பனியத்தை எதிர்க்காமல், 'கார்ப்பரேட்' முதலாளிய நிறுவனங்களுடன் உறவாடிக் கொண்டு ஊழலும் ஏமாற்றுதலும் செய்யத் தொடங்கி விட்டதை உணர வேண்டும்..

ஆக.. தமிழ்த்தேசம் பேசுவது.. தமிழ்த் தேச விடுதலை உரிமையைப் போராடி பெறுவதற்காகவே அல்லாமல் இந்தியத் தேர்தலில் ஈடுபட்டுப் பொறுக்கித் தின்பதற்காக அல்ல..

இந்தியாவை அம்பலப்படுத்தாமல்.. இந்தியப் பாசிசப் பார்ப்பனியத்தை எதிர்த்து நின்று போராடாமல்.. அம்பானி அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளை வெளியேற்றிடாமல்.. தேசிய இனங்கள் விடுதலை பெற முடியாது.. தமிழ்த்தேசம் தன் முற்றதிகாரத்தை நிலைநாட்டிட முடியாது..

அந்த வகையில்.. இன்றைக்கு.. இந்தியப் பாசிச பார்ப்பனியத்தின் அதிகார முகடாகத் தலைவிரித்தாடுகிற ஆர்.எஸ்.எஸ்.ஐ, பா.ஜ.க.வை முற்றும் முழுமையாகத் துடைத்தெரிந்தாக வேண்டும்..

அதற்குத் தேசிய இனங்களின் உரிமை உணர்வு கொண்ட இயக்கங்கள் பொறுப்பெடுத்து அனைவரையும் இணைக்கிற ஒரு பெரும் முயற்சியை முன்னெடுத்தாக வேண்டும்..

இணைக்கப்படுகிற கட்சிகளிடையே கொள்கைகளில் செயல்பாடுகளில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம்.. ஆனால், தேசிய இனங்களின் (மாநிலங்களின்) உரிமைகளுக்காகப் போராடுவதிலும், பாசிச பார்ப்பனிய இந்திய அதிகாரத்தை எதிர்க்கிற அடிப்படையிலும், அம்பானி அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளை விரட்டி அடிக்கிற நோக்கத்திலும் ஒப்புதலும் உறவும் இருந்தால் போதுமானது.. என்பதில் தெளிவு கொள்வோம்..

பாவலர் காசி அனந்தன், சச்சிதானந்தன் போன்ற ஈழத் தமிழ்த் தலைவர்கள் பலர் பாஜகவின் பாதம் தாங்கிகளாகச் செயற்பட்டுக் கொண்டு தமிழ் ஈழத்தையும் கெடுத்து, தமிழ்நாட்டு அரசியலையும் சீர் குலைத்து வருகிற அண்மைச் சில ஆண்டுக் காலச் சூழலில், பாஜகவின் உறவை ஐயா நெடுமாறன் அவர்கள் உதறித் தள்ளியதை வரவேற்போம்.. (மற்றபடி அவரின் கருத்துகளில் நடைமுறைகளில் பல மறுப்புக் கருத்துகள் நமக்கு இருப்பது என்பது வேறு)

- பொழிலன், தமிழக மக்கள் முன்னணி