சிராஜ் மசூர் இலங்கை கிழக்கு மாகாணத்தின் அக்கரைப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர். மாணவ பருவத்திலேயே பல்வேறு இயக்கங்களில் பங்கேற்றவர். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றியவர். அகதிகளாக்கப்பட்ட முஸ்லிம்களின் நலன்களை முன்னிறுத்தி செயல்படும் இவர் " மீள்பார்வை '' இதழின் ஆசிரியர். சமரசமறியா மனித உரிமைச் செயற்பாட்டாளர். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை நிறுத்தவும் அங்கு ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்குமான பிரச்சாரக்குழு சார்பில் 2009 ஜூலை 4 சென்னையில் நடைபெற்றக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்தார். இலங்கை முஸ்லிம்களின் பிரச்னைகள் குறித்த பல்வேறு கலந்துரையாடல்களில் பங்கேற்றார். பேராசிரியர் சிராஜ் மசூர் அவர்களுடன் நண்பர்கள் மு.சிவகுருநாதன், சிராஜூதீன் ஆகியோர் நிகழ்த்திய உரையாடல்...
தமிழ் தேசியம் கட்டமைக்கப்பட்ட விதம், அது தலித் மற்றும் இஸ்லாமியர்களை எங்ஙனம் வெளியேற்றியது?
தமிழ் தேசியம் ஒற்றைத்தன்மை உடையது அல்ல. அது பல்வகைத்தன்மை உடையது. சைவ-வேளாள ஆதிக்க மனோபாவத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட வைதீக தமிழ் தேசியவாதம், சுத்தத் தமிழ் மொழி அடையாளத்தை மட்டுமே முன்னிறுத்திய மொழித் தூய்மைத் தமிழ் தேசியவாதம், இடதுசாரி சமூக மாற்றத்தை மையமாகக் கொண்ட தமிழ் தேசியம் என்று இதனை பெருவாரியாகப் பிரிக்கலாம். இன்னும் பல போக்குகளும் காணப்படுகின்றன.
சில தமிழ் தேசியப் போக்குகளில் முற்போக்கான கூறுகள் இருந்தன. ஆயினும், தூக்கலாக வெளிப்பட்டது ஆதிக்க மனோபாவம் கொண்ட முதல் இரு போக்கும்தான். தமிழ் தேசியவாதத்தின் அடியாழத்தில் வேரூன்றியிருந்த இந்த வைதீக கருத்தியல் ஆதிக்கம், இனத் தூய்மைவாதத்தின் கூறுகளை அதன் தொடக்க காலத்திலிருந்தே வெளிப்படுத்தி வந்திருக்கிறது.
கால ஓட்டத்தில் இந்த இனத் தூய்மைவாதத்தின் வெளிப்பாடே ஏறத்தாழ 75,000 முஸ்லிம் மக்களை வடபுலத்தின் ஐந்து மாவட்டங்களிலிருந்து வெளியேற்றியது. யாழ் மாவட்டத்திலிருந்து பலவந்தமாக துரத்தப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு இரண்டே இரண்டு மணித்தியாலங்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது. நூற்றாண்டுகளாக தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த பூர்வீக பூமியிலிருந்து திடீரென பிடுங்கி எறியப்பட்ட இந்த வரலாற்றுத் துரோகம் முஸ்லிம் மக்களை அதிர்ச்சிக்குள் உறைய வைத்தது.
இது சற்றும் எதிர்பாராமல் நிகழ்ந்தது. ஆனால் இந்த வெளியேற்றத்திற்கு கற்பிக்கப்பட்ட நியாயம் மிகவும் அபத்தமானது. முஸ்லிம்கள் அரேபிய வழித்தோன்றல்கள் அல்ல. அவர்கள் தமிழ் பெண்களுக்குப் பிறந்த தமிழர்களே. அவர்கள் தமிழர்களாகவே இங்கு வாழ வேண்டும் என்று முஸ்லிம்களை வெளியேற்றிய கையோடு யாழ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய புலிகளின் அரசியல் பொறுப்பாளர் யோகரத்தினம் யோகி குறிப்பிட்டார்.
இது தமிழ் தேசியத்தில் ஆதிக்கக் கூறுகளை படிந்துள்ள பாசிச மனோபாவத்தை துலாம்பரமாக எடுத்துக் காட்டுகிறது. தமிழ் தேசியவாதம் உள்வாங்கும் தேசியவாதமாக அதன் ஆரம்பத்திலிருந்தே கட்டமைக்கப்பட்டிருந்தது. அது புறந்தள்ளும் தேசியவாதமாகவே தன்னைக் கட்டமைத்துக் கொண்டது.
அதனால்தான் அதனால் தமிழ் பேசுகின்ற தலித்களைக் கூட நேர்மையாக உள்வாங்க முடியவில்லை. தலித்களை நபர்களாக உள்வாங்குவது என்பது வேறு. தலித்தியத்தின் ஆழ்ந்த நியாயங்களை பிரக்ஞைபூர்வமாக உள்வாங்குவது என்பது வேறு. எல்லாவற்றையும் ஒரு மேலெழுந்த புரிதலிலிருந்தே வைதீக தமிழ் தேசியவாதம் நோக்கியது. தலித்கள் போராட்ட இயக்கங்களுக்கு போராளிகளை வழங்குபவர்களாக மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட நிலமை பரவலாகக் காணப்பட்டது. அதற்கப்பாலான விரிந்த செயற்பாடுகளில் அவர்கள் எவ்வளவு தூரம் செயற்பட அனுமதிக்கப்பட்டார்கள் என்பது ஒரு கேள்வியாக எஞ்சியிருக்கிறது. இவ்வாறான கேள்விகளும் பேரிழப்புகளும் தான் தலித்களை தமிழ் தேசியவாத்திலிருந்து வெளியேற்ற வழியமைத்தன.
துப்பாக்கிகளின் பேரோசைக்குள் விளிம்பு நிலை மக்களது மெல்லிய குரல்கள் அமுக்கப்பட்டு விட்டன. இவ்வாறான பல காரணங்களால் இலங்கைச் சூழலின் எல்லைக்கு வெளியே அவை கேட்காமல் செய்யப்பட்டன. ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களும் தலித்களும் “மற்றவர்களாக” பார்க்கப்பட்டனர். இந்த புறந்தள்ளும் கருத்தியல், அதனடியான செயற்பாடுகளே முஸ்லிம்களையும் தலித்களையும் தமிழ் தேசியம் வெளித்தள்ள வழியமைத்தது.
நீண்ட பாரம்பரியம் கொண்ட இரு முஸ்லிம், தமிழ் இனங்கள் போராட்டத்தில் பங்காளிகளாக இருக்க வேண்டிய நிலை மாறி முற்றிலும் எதிரிடையாக நிற்க வேண்டிய வரலாற்று நிர்ப்பந்தம்?
தமிழ் தேசியவாதம் தொடக்கத்திலிருந்தே முஸ்லிம் மக்களது பிரச்சினைகளை கூர்மையாக அவதானிக்கத் தவறிவிட்டது. தமிழ் மக்களது பிரச்சினைகளை மட்டுமே அது முன்னிறுத்தியது. ஆரம்ப காலத்தில் சில பொது நிலைப்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போது முஸ்லிம் இளைஞர்களும் அதில் பங்காளிகளாக இருந்தனர்.
காலப்போக்கில் தமிழர் பிரச்சினைகளை மட்டுமே கூர்மைப்படுத்தி சிந்திக்கின்ற நிலை உருவாகி, முஸ்லிம் மக்களது பிரச்சினைகள், அபிலாசைகள் அலட்சியப்படுத்தப்பட்டன. தமிழ் தேசியத்தினுள் இருக்கின்ற சைவ-வேளாள ஆதிக்கத்தின் கூறுகள் தலித்களையும் முஸ்லிம்களையும் தொடர்ந்தும் ஒடுக்கிக் கொண்டே வந்தது.
காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை, ஏறாவூர் படுகொலை, பொலன்னறுவை மாவட்ட முஸ்லிம் கிராமங்களில் நிகழ்ந்த படுகொலைகள் என்பன முஸ்லிம்களது சமூக இருப்புக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியது. கடத்தல்கள், கொலைகள், கப்பம் என்பன சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. முஸ்லிம் மக்களது பாதுகாப்பு மிக முக்கியமான உடனடிப் பிரச்சினையாக மாறியது. வாழ்வாதார, பொருளாதார ஈட்டங்களுக்கான வழிகள் தடைப்படுத்தப்பட்டன. ஒட்டுமொத்தமான ஒரு சமூகத்தின் இருப்புக்கே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டபோது, துப்பாக்கிகள் அம்மக்களது குரல்வளைகளை நோக்கி நீட்டப்பட்டபோது தனித்த ஒரு நிலையைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர முஸ்லிம் மக்களுக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை.
LTTE மட்டுமல்லாது EPRLF போன்ற இயக்கங்களும் இசுலாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த நிலைமை?
முஸ்லிம் விரோதப் போக்குகளில் LTTE யிற்கு ஒரு நீண்ட வரலாறே உண்டு. அநேகமாக கிழக்கில் புலிகளால் பாதிக்கப்படாத முஸ்லிம் கிராமங்களே இல்லை என்று சொல்லலாம். EPRLF போன்ற அமைப்புகள் கிழக்கில் ஆரம்பத்தில் மக்கள் ஆதரவோடு இயங்கின. எனினும், பின்னர் அவர்கள் கூட முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினர். இவர்கள் மட்டுமல்ல, முன்னணி ஆயுத அமைப்புகள் எல்லாமே முஸ்லிம்களுக்கு எதிராக இயங்கியதற்கான பல ஆதாரங்கள் உள்ளன. இதற்குப் பிரதான காரணம் இவை முஸ்லிம் விவகாரத்தை தனித்து நோக்கி, ஆழமாக ஆராய்வதற்கான அரசியல் விருப்பைக் கொண்டிருக்கவில்லை என்பதுதான்.
போராட்ட இயக்கங்களில் ஆரம்ப காலங்களில் இருந்தவர்கள் ஓரளவிற்கு விரிந்த இலக்குகளை கொண்டிருந்தனர். பின்னர் படிப்படியாக இவ்வியக்கங்கள் வளர்ச்சியடைந்தபோது அவற்றினது அரசியல் பார்வை குறுகிப் போனது. காலப்போக்கில் கொள்கைப் பிடிப்பை விடவும் ஆயுதக் கவர்ச்சி முக்கியமானதாக மாறியது. இராணுவப் பிரிவின் ஆதிக்கம், நம்ப முடியாத உள் முரண்பாடுகள், குறுகிய அரசியல் பார்வை கொண்ட புதிய போராளிகளின் இணைவு என்பன போன்ற பல காரணிகள் முஸ்லிம் விரோதப் போக்குகளுக்கு வழியமைத்தன.
ஆயுத அமைப்புகள் குறிப்பிட்ட பிரதேசங்களில் செல்வாக்குப் பெற்றபோது அவற்றில் ஆதிக்க மனோபாவமும், எதிர்நிலைப்பாட்டை எடுக்கும் எல்லோரையும் ஒடுக்கும் போக்கும், அரசியல் முரண்பாடுகளை இராணுவ ரீதியாக எதிர்கொள்ளும் போக்கும் தூக்கலாக மாறியது. இதன் இன்னொரு பரிமாணமாகவே முஸ்லிம் விரோதப் போக்குகள் மேலெழுந்தன.
இடதுசாரிகள் இஸ்லாமியர்களுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார்களா?
தமிழ் தேசியத்தை ஆதரித்த இடதுசாரிகளுள் சிலர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்தனர். அவர்களுள் சிலர் முஸ்லிம்களைத் தனியான தேசமாக ஏற்றிருந்ததையும் இங்கு குறிப்பிட்டுச் சொல்லலாம். எனினும் பெரும்பாலான இடதுசாரிகள் முஸ்லிம்களது அரசியல் நிலைப்பாட்டை கூர்மையாகப் புரிந்து கொள்ளவில்லை. அப்படி ஆதரித்தோர் கூட பொதுவான மேல்நிலைப்பட்ட புரிதலின் அடிப்படையிலேயே ஆதரித்தனர். தென்னிலங்கையிலுள்ள இடதுசாரிகள் கூட ஏறத்தாழ இதே போக்கையே பிரதிபலித்தனர்.
இலங்கைப் பிரச்சினையை சிங்கள-தமிழ் பிரச்சினையாக மட்டும் நோக்கிய பார்வையின் போதாமைகள் சில இடதுசாரிகளிலும் வெளிப்பட்டன. அதனை சிங்கள-தமிழ்-முஸ்லிம் பிரச்சினையாக நோக்கும் பண்பு மிக பிந்திய காலங்களில் ஏற்பட்டது. அப்போது ஓரளவிற்கு இடதுசாரிகள் முஸ்லிம் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததை மறுப்பதற்கில்லை.
முஸ்லிம்கள் தமிழ்ப் போராளிகளை சிங்கள ராணுவத்திடம் காட்டிக் கொடுத்துள்ளார்கள் என்று முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை தமிழ் தேசியங்கள் கூறிவருவதற்கு இஸ்லாமிய அமைப்புகளிடமிருந்தோ, புத்திஜீவிகளிடமிருந்தோ காத்திரமான பதில் வந்திருக்கிறதா?
காட்டிக் கொடுப்புகளை முஸ்லிம் சமூகத்திலிருந்த ஒரு சிலர் மட்டும்தான் மேற்கொண்டனர் என்பது நகைப்புக்கிடமானது. தமிழ், சிங்கள சமூகத்திலிருந்து கூட ஒரு சிலர் இவ்வாறான காட்டிக் கொடுப்புகளில் ஈடுபட்L;ள்ளனர்.
ஒரு சிலரின் நடவடிக்கைகளுக்காக ஒட்டுமொத்த சமூகத்தையே தண்டிக்க முடியுமா? இஸ்ரேலிய ஆதிக்க அரசு பலஸ்தீன மக்களுக்கு வழங்கும் கூட்டுத்தண்டனை போன்ற ஒன்றாகவே இதையும் கருதலாம். முஸ்லிம்கள் காட்டிக் கொடுத்தார்கள். ஆகவே முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக களையெடுக்க வேண்டும் என்பதுதான் தர்க்க நியாயம் என்றால், தமிழர்களும் காட்டிக் கொடுத்திருக்கிறார்கள்தானே. ஆகவே தமிழர்களையும் ஒட்டுமொத்தமாக களையெடுக்க வேண்டும் என்பதுதான் தர்க்க நியாயமாக மாறிவிடும். இது எப்படிப் பொருந்தி வரும்?
இவையெல்லாம் வாதங்களுக்கு மட்டும் வலுச்சேர்க்க முனையும் வார்த்தை விளையாட்டுகள்தான். இதற்கு முஸ்லிம் அமைப்புகளிடமிருந்தும் அறிவுஜீவிகளிடமிருந்தும் போதியளவு காத்திரமான பதில்கள் வந்திருக்கின்றன. அவற்றை வசதியாக மறந்துவிட்டு போலி நியாயங்கள் பேசும் கபட அரசியலின் உள்நோக்கங்களை தோலுரிப்பதுதான் இதற்குரிய சரியான பதிலாக இருக்கும்.
முஸ்லிம்கள் காட்டிக் கொடுத்ததால்தான் வடக்கிலிருந்து அவர்களை புலிகள் வெளியேற்றினார்கள் என்று சொல்லப்படும் வாதம் எவ்வளவு நகைப்புக்கிடமானது என்பதை விரிவாக விளக்கித்தான் புரிய வேண்டும் என்பதில்லை.
தமிழ் சைவ தேசியம், பெளத்த சிங்கள இனவாதம் இரண்டின் மூலமும் அந்நியப்பட்டு நிற்கும் இலங்கை இஸ்லாமியர்களின் உளவியல் சிக்கல் பற்றி?
முஸ்லிம் மக்கள் ஆரம்பத்திலிருந்தே தமிழ் அடையாளத்தை மறுத்து வந்திருக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில் அடையாளக் குறிகாட்டியாக சமயமே இருந்து வந்துள்ளது. ஒரு மக்கள் திரளினது ஒட்டுமொத்த தெரிவையும் அபிலாசைகளையும் இன்னொரு மக்கள் திரள் ஏற்றுக் கொள்ள மறுப்பது ஆதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடே. இந்தவகையில் தமிழ் தேசியம் மேலாதிக்க வடிவத்தை எடுத்தபோது முஸ்லிம் மக்களால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தீர்க்கமாக அதனை நிராகரித்து தனித்துவமான புதிய வழியை நோக்கி அவர்கள் செல்ல வேண்டி ஏற்பட்டது. தமிழ் தேசியம் விரிந்த மனோபாவத்துடன், உள்வாங்கும் புரிதலுடன் இயங்கியிருந்தால் இந்த நிலையைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் அந்தளவு தூரநோக்கோடு செயற்படுவதற்கான வல்லமையை அது இழந்து வெகு நாளாயிற்று.
பெளத்த சிங்களப் பேரினவாதம் முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை எப்போதுமே ஒரு பெரும் அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. முஸ்லிம் மக்களது சமூக இருப்புக்கு நீண்டகாலமாக நேரடி அச்சுறுத்தல் விடுத்துவரும் பாசிஸக் கூறுகள் இதற்குள் புரையோடிப் போயிருக்கின்றன. இலங்கையின் தெரிந்த வரலாற்றில் பெரும்பான்மையினருக்கும் சிறுபான்மையினருக்குமிடையில் இடம்பெற்ற முதல் கலவரம் 1915ல் இடம்பெற்ற சிங்கள-முஸ்லிம் கலவரம்தான்.
அண்மைக்காலமாக தீவிர சிங்களத் தேசியவாதம் வெளிப்படுத்திவரும் பேரின முகம் முஸ்லிம்களைப் பொறுத்தவரை மிகவும் அபாயகரமானதாக மாறியுள்ளது. 1990களில் இயங்கிய வீரவிதான அமைப்பு, அதனடியாக இன்று அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சி போன்றவை மிக வெளிப்படையாக முஸ்லிம் விரோதக் கருத்தியலை தனது அடிப்படைக் கொள்கையாக வரித்து செயற்பட்டு வருகிறது. பகிரங்கமாகவே முஸ்லிம் விரோத நச்சுக் கருத்துக்களை பிரச்சாரம் செய்கிறது.
இலங்கை சிங்கள பெளத்தர்களது மரபுரிமையைப் பேணும் நாடு என்பதையே இவர்கள் முன்னிறுத்தி வாதிக்கின்றனர். அவர்கள் அல்லாத ஏனையோரை மற்றவர்களாகவும் வந்தேறு குடிகளாகவும் பார்க்கின்றனர். இந்த பார்வையே அடிப்படையில் தவறானது. ஏனெனில் இலங்கையில் எல்லா பிரதான இனக்குழுமங்களும் வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்தில் இந்நாட்டுக்கு வருகை தந்தவர்களே. இலங்கையின் பூர்வீக குடிகளான ஆதிவாசிகளது பரம்பரையினர் மிகச் சொற்பமாகவே இங்கு எஞ்சியிருக்கின்றனர்.
இந்தியாவில் இந்துத்துவ சக்திகள் ஆரியர் குறித்து கொண்டிருக்கும் அதே மனப்பதிவின், புனைவின் ஒரு நீட்சியே இது. ஒருவகையில் இந்துத்துவ சக்திகளின் புவியியல், கருத்தியல் நீட்சியாக சிங்கள பெளத்த பெருந்தேசியத்தை அடையாளம் காணலாம்.
சிங்கள பெளத்த பேரினவாதத்தையும் சைவ-வேளாள தமிழ் தேசியத்தையும் ஏககாலத்தில் எதிர்கொள்ள வேண்டிய வரலாற்று நிர்ப்பந்தத்திற்கு இலங்கை முஸ்லிம்கள் ஆளாகியுள்ளனர். சமகாலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆதிக்க நெருக்கடிகளை எதிர்கொள்வது, மிகவும் சிறுபான்மையாக உள்ள முஸ்லிம்களைப் பொறுத்தவரை மிகக் கடினமான விடயமாகவே உள்ளது.
குறிப்பாக, தென்னிலங்கையில் பலநூறு சின்னஞ் சிறு கிராமங்களாக சிதறி அமைந்திருக்கும் இலங்கை முஸ்லிம்களது சமூக இருப்பு இதனை மேலும் கடினமாக்கியுள்ளது. இருப்பைத் தக்கவைப்பதற்கான பல்வேறு மூலோபாயங்களை அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டி வந்துள்ளது. இந்த மூலோபாயத் தேர்வுகள் இடத்துக்கிடம், காலத்திற்குக்காலம் மாறுபட்டு வந்திருக்கின்றன.
எண்ணற்ற சிங்களக் கிராமங்களுக்கிடையில் சிறு தீவுகள் போன்றுதான் முஸ்லிம் கிராமங்கள் அமைந்துள்ளன. எந்தவொரு சமூகத்தினதும் சமூக அரசியல் தெரிவுகளில் அதன் புவியியல் இருப்பும் முக்கிய பங்காற்றுகிறது. இலங்கை முஸ்லிம்களது புவியரசியல் வரலாற்றை இவ்வாறான பல பின்புலங்களிலிருந்தே ஆராய வேண்டியுள்ளது. இப்போதுகூட இலங்கை முஸ்லிம்களது சமூக அரசியலை ஒற்றைத்தன்மையாக நோக்க முடியாது. வடக்கு முஸ்லிம்கள், கிழக்கு முஸ்லிம்கள், தென்னிலங்கை முஸ்லிம்கள் என பிரதான மூன்று போக்குகள் முஸ்லிம் அரசியலின் உபகூறுகளாக உள்ளன.
இவ்வாறான பல காரணிகளின் அடிப்படையில் இரு பெரும்பான்மைவாதத்தின் பிடிகளுக்குள் அகப்பட்டுள்ளனர். அதிலிருந்து வெளியேறுவதற்கான பல உபாயங்களைத் தேட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இலங்கை முஸ்லிம்கள் ஆளாகி உள்ளனர்.
மொத்தத்தில் சிங்களப் பேரினவாதத்திற்கோ அல்லது தமிழ் பேரினவாதத்திற்கோ சார்பு நிலை எடுக்காது தனித்த ஒரு பாதையை வகுக்கும் கடினமான வரலாற்று நிர்ப்பந்தத்திற்கு இலங்கை முஸ்லிம்கள் ஆளாகியுள்ளனர்.
வரலாறு நெடுகிலும் இலங்கை முஸ்லிம்கள் சகவாழ்வு வாழ்ந்து கொண்டே தமது தனித்துவத்தைப் பேணியும் வந்துள்ளனர். இது சிலபோது சிலரால் சந்தர்ப்பவாதமாக நோக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் தவறுகள் நிகழ்ந்துதான் இருக்கின்றன. ஆனால் மிகச் சிக்கலான சமூக அரசியல் சூழலில் எவ்வாறான தெரிவை நோக்கி நகர்வது என்பது எப்போதுமே இலங்கை முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் சவாலாகவே இருந்து வந்துள்ளது.
இலங்கை சிங்களப் பெருந்தேசிய இனவெறி அடுத்து முஸ்லிம்கள் மீது பாயாதா? அத்தகைய சுவடுகள் ஏதும் இப்போது தென்படுகிறதா?
அவ்வாறானதொரு அச்சம் முஸ்லிம்கள் மத்தியில் உள்ளது. அதன் அறிகுறிகள் எப்போதோ தெரியத் தொடங்கிவிட்டன. இலங்கையின் பெரும்பான்மை மக்கள் சமூகம் படிப்படியாக தீவிர சிங்களத் தேசியவாத சக்திகளது செயற்பாடுகளாலும் இனவாதக் கருத்தியலாலும் நச்சூட்டப்படுகிறது. அதேபோன்று இலங்கையின் அதிகார வர்க்கத்தை இந்த சக்திகள் இனவாத சிந்தனையால் மாசடையச் செய்துள்ளனர். சிவில் சமூகம் படிப்படியாக இனவெறியின் கைதியாக மாற்றப்படுகின்றது. இதன் வெளிப்பாடுகள் பல தளங்களில் தென்படுகின்றன.
இம்மாதிரியான அக மற்றும் புற நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களில் முஸ்லிம் சமூகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையின் பன்மைத்தன்மையை வலியுறுத்தும் பதிலீட்டு நடவடிக்கைகளுக்கான முனைப்பை இந்த சூழல் அதிகம் வேண்டி நிற்கின்றது.
இஸ்லாமியர்கள் சமூக உணர்வு, மத அடிப்படைவாதத்தின் பக்கமே நிற்பார்கள் என்ற குற்றச்சாட்டு குறித்து?
இது விடயங்களை மேலெழுந்தவாரியாக நோக்குபவர்கள் முன்வைக்கும் ஒரு குற்றச்சாட்டு. குற்றச்சாட்டுகள் என்பதற்காக அவை நியாயமாக மாறிவிடாது.
எல்லாக் கொள்கைகளுக்கும் எண்ணற்ற வியாக்கியானங்களும் அதனைப் பின்பற்றும் எண்ணற்ற குழுக்களும் உள்ளன. அதேபோல இஸ்லாத்தைப் புரிந்து கொள்வதில் கூட மாறுபட்ட பல நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. குறுகிய உணர்வுகள் கொண்டவர்கள் முஸ்லிம் சமூகத்தில் மட்டுமல்ல, எல்லா சமூகங்களிலும் காணப்படவே செய்கின்றனர்.
இஸ்லாத்தைப் பின்பற்றுவதில் பன்மைத்தன்மை காணப்படுகின்றது. இவற்றுள் புறந்தள்ளும் போக்கு இருப்பதுபோலவே உள்வாங்கும் போக்கும் காணப்படவே செய்கிறது. லத்தீன் அமெரிக்காவில் கிறிஸ்தவ விடுதலை இறையியல் முற்போக்கான பாத்திரத்தை முன்னெடுத்தது போல முஸ்லிம்களுக்குள்ளும் முற்போக்கான போக்குகள் காணப்படுகின்றன.
பன்னாட்டு அளவில் நிகழ்ந்த போர் எதிர்ப்பு செயற்பாடுகளில் இடதுசாரிகளும் இஸ்லாமியவாதிகளும் ஒன்றிணைந்து செயற்பட்டதற்கு சான்றுகள் உள்ளன. இஸ்லாத்தைப் பற்றிய விரிந்த புரிதல் உள்ளவர்கள் இஸ்லாமும் நபியவர்களும் எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பரிந்து பேசியிருப்பதை ஏற்கவே செய்வர். பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள் இந்திய சூழலில் இதனைப் புரிந்து கொண்டவர்களுள் முக்கியமானவர்கள்.
ஓட்டுமொத்த சமூகமொன்றை ஒற்றைத்தன்மையான ஒருசில குற்றச்சாட்டுகளுக்குள் முன்னிறுத்தும் போக்கை ஏற்க முடியாது. வெகுஜன மனப்பதிவுகளை ஆய்வறிவு மனோபாவம் இன்றி வெறுமனே பிரதி செய்யும் பொதுப் புத்தியின் பிரதிபலிப்பாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது.
முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதோரோடு இணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியம், மத நல்லிணக்கம், சகவாழ்வு என்பன முஸ்லிம் சமூகத்தினுள் தற்போது முக்கிய பேசு பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக போருக்குப் பிந்திய இலங்கை சூழலில் இவை குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
LTTE யின் தோல்விக்குப் பிறகு இன்றைய நிலையில் என்ன மாதிரியான தீர்வு உகந்ததாக இருக்கும்?
இலங்கை அதிகாரங்களை பகிரும் ஒரு அரசியல் தீர்வை நோக்கி நகர்வதே பொருத்தமானது. இதில் தமிழ், முஸ்லிம், தலித், மலையகத்தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மை மக்களதும் அரசியல் அபிலாசைகள் உள்வாங்கப்பட வேண்டும்.
உண்மையில் எல்லோரது அரசியல் அபிலாசைகளையும் பூரணமாக உள்ளடக்கும் ஒரு தீர்வுத்திட்டம் இலட்சியவாத மாதிரியையே கொண்டிருக்கும். யதார்த்தத்தில் சிங்கள பெரும்பான்மை மக்கள் உட்பட, எல்லா சிறுபான்மை மக்களது அரசியல் பிரதிநிதிகளும் ஒரு மேசையில் அமர்ந்து பேசும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
இது பேசித் தீர்க்க வேண்டிய ஒரு பிரச்சினை. பேச்சுவார்த்தை மேசைகளில் விட்டுக் கொடுப்புகள், இணக்கப்பாடுகள் எட்டப்பட வேண்டும். இது சாத்தியம்தானா என்ற கேள்வி எழலாம். ஆனால் தென்னாபிரிக்கா நிறவெறியிலிருந்து விடுதலை செய்யப்பட்டபோது, அனைத்து மக்களதும் அபிலாசைகளை உள்வாங்கும் ஒரு புதிய அரசியல் அமைப்பை வரையும் முயற்சி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. அதையொத்த முயற்சியே இலங்கைக்கும் அவசியப்படுகிறது.
இது அவ்வளவு விரைவில் சாத்தியமான ஒன்றல்லதான். ஆயினும், இதைவிடவும் சிறந்ததொரு வழி இருப்பதாகத் தெரியவில்லை. சிறுபான்மை மக்களது அரசியல் கோரிக்கைகளை பெரும்பான்மை மக்களது அரசியல் விருப்போடு அடைவதுதான் ஆகச் சிறந்த தேர்வாகும். இதற்கு ஒரு நீண்ட பகைமறப்பு காலம் தேவைப்படுகிறது.
இதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை மக்கள் நேச சக்திகள் முன்னெடுக்க வேண்டும். பிரச்சினைகளை கட்சி அரசியல்வாதிகளின் கைகளில் ஒப்படைத்துவிட்டு, மக்களின்மீது உண்மையான அக்கறை கொண்ட நேச சக்திகள் மெளனமாக இருந்தவிட முடியாது. ஆதலால் இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ச்சியான சிவில் சமூக முன்னெடுப்புகள் இதற்கு அவசியப்படுகின்றன. இந்த முயற்சி பல தளங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த கூட்டு முயற்சிகளின் பெறுதியாகவே இலங்கையின் எல்லா மக்களும் விரும்பும் தீர்வு உருவாக முடியும்.
எனினும், இந்த நீண்ட இலக்கை நோக்கிச் செல்ல அதிக காலம் எடுக்கும். ஆதலால் இடைக்கால தீர்வு ஏற்பாடுகள் பற்றிப் பேசுவது தவிர்க்க முடியாதது. ஒற்றை ஆட்சித் தன்மையிலிருந்து இலங்கையை கூட்டாட்சிப் பண்பிற்கு இட்டுச் செல்லும் எந்தவொரு படிமுறையும் வரவேற்கப்பட வேண்டியதே. அதற்காக நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும். அந்தவகையில், 13வது அரசியல் சீர்திருத்தத்தை அமுல்படுத்தும் முயற்சியை நாம் வரவேற்க வேண்டும்.
இதன் அர்த்தம் அதனை அமுல்படுத்துவதோடு நின்று விடுவது என்பதல்ல. ஒரு நீண்ட அரசியல் போராட்டத்தின் ஒரு முக்கிய படியாக அதனைக் கருத வேண்டும். குறிப்பாக மாகாணங்களுக்கு காணி அதிகாரங்களை பெற்றெடுப்பது என்பது அவ்வளவு இலகுவான விடயமாக இருக்காது. அதனை சாதித்தாலே ஒருபடி முன்னேற்றம்தான்.
சிறுபான்மை மக்களது அரசியல் பிரதிநிதிகள் குறைந்தபட்ச பொது வேலைத்திட்டத்தின் கீழ் இணைய வேண்டியது இப்போதைய உடனடித் தேவையாகும். இது வெவ்வேறு சிறுபான்மையினரது அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான பாதையில் ஒரு முக்கிய திருப்பமாக அமையும்.
ஏகாதிபத்தியம் தற்போது விழுங்கிக் கொண்டிருக்கும் இலங்கையின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? சிறப்புப் பொருளாதார மையங்கள் பற்றி என்ன கருதுகிறீர்கள்?
இலங்கையில் நடைபெற்ற போர் பன்னாட்டு சக்திகளின் விளையாட்டு பூமியாக அதனை மாற்றிவிட்டது. அதிவேக உலகமயமாதலின் பிடிக்குள் அகப்பட்டுள்ள வளர்முக நாடுகளுள் இலங்கையும் ஒன்று. இலங்கை பன்னாட்டு நாணய நிதியத்தின் பெரும் கடன் சுமைக்குள் அகப்பட்டுள்ளது. போருக்குப் பிந்திய இலங்கையின் பொருளாதார நிலமை மிகவும் நெருக்கடி நிறைந்ததாக உள்ளது. இது ஏகாதிபத்திய சக்திகளின் நலன்களுக்கு வாய்ப்பான சூழலை மேலும் மெருகேற்றியுள்ளது.
போரைக் காரணமாக வைத்து பல பன்னாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளன. இவை பன்னாட்டு ஆதிக்க நலன்களை நிகழ்ச்சி நிரலாகக் கொண்டு செயற்படுகின்றன. போருக்குப் பிந்திய இலங்கையைக் கட்டியெழுப்புவதில் பன்னாட்டு சக்திகளது மூலதனம் மிக இன்றியமையாததாக மாறியுள்ளது. இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி வெவ்வேறு போக்குடைய பல சக்திகள் இலங்கைக்குள் ஊடுருவி வருகின்றன. சிறப்புப் பொருளாதார மையங்கள் இதற்கு ஏற்ற அரசியல் - பொருளாதார காலநிலையை உருவாக்கியுள்ளது.
மொத்தத்தில் இலங்கை சமூகம் முன்னரைவிடவும் பன்னாட்டு ஆதிக்க சக்திகளின் நுகர்வுச் சந்தையாக வளரும் அபாயம் மேலும் அதிகரித்துள்ளது. இது இருவழி பொருளாதார செயற்பாடாக இருப்பதை விடவும், பெரும்பாலும் ஒருவழித் திணிப்பாகவே நடைபெறுகிறது.
முஸ்லிம் தேசம் என்ற கருத்தாக்கம் பேசப்படுகிறதே. இது சாத்தியமா?
உண்மையில் முஸ்லிம் தேசம் என்ற கருத்தாக்கம் முஸ்லிம்களால் தன்னெழுச்சியாக முன்வைக்கப்பட்டது என்பதை விடவும், அது தமிழ் தேசியத்தின் அரசியல் தவறுகள், முஸ்லிம் விரோத செயற்பாடுகள் என்பவற்றின் எதிர்வினையாக உருவாக்கப்பட்டது என்பதே கூடுதல் பொருத்தமுடையது.
முஸ்லிம்களின் தனித்துவமான சமூக அரசியல் இருப்பைத் தக்கவைப்பதற்கான ஒரு அரசியல் ஆயுதமாகவே முஸ்லிம் தேசியம் என்ற கருத்தாக்கம் தூக்கிப் பிடிக்கப்பட்டது. மற்றப்படி முஸ்லிம்கள் தேசியவாதத்தின் தீராத காதலர்களாக நின்று அக்கருத்தாக்கத்தை முன்வைக்கவில்லை.
இன்று தேசியம் என்ற கருத்தாக்கம் குறித்தே மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது. ஆயினும், முஸ்லிம்கள் தனியான அரசியல் சமூகம் (Polity) என்பதை யாரும் மறுதலிக்க முடியாது. தமது அரசியல் அபிலாசைகளை அடைவதற்கு தேசியம் ஒரு வாய்ப்பான ஆயுதமாக இனினும் நீடிக்கும் என்று முஸ்லிம்கள் பெருமளவில் நம்புவதாகத் தெரியவில்லை. எனினும், முஸ்லிம்கள் தமது தனித்துவமான அரசியல் குறித்து கூடுதல் பிரக்ஞையோடுதான் தொடர்ந்தும் செயற்படுகின்றனர்.
இலங்கையில் தமிழ், முஸ்லிம் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றம் குறித்து?
சிங்களக் குடியேற்றமென்பது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இன விகிதாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக பேரினவாத அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சதியென்றே சிறுபான்மை மக்கள் நோக்குகின்றனர். எனினும், சிங்கள மேலாதிக்க சக்திகள் காணியற்ற ஏழை சிங்கள மக்களுக்கு நிலச்சீர்திருத்தத்தின் கீழ் காணி வழங்கிய ஒரு ஏற்பாடாக இதனை முன்வைக்கின்றனர்.
எனினும், மேலைத்தேய காலனித்துவ ஆதிக்கத்தின் உள்ளுர் மாதிரியாகவே சிங்களக் குடியேற்றத்தை நோக்க வேண்டியுள்ளது. இலங்கையில் நடைபெற்ற போர் சிங்களக் குடியேற்ற நிகழ்ச்சி நிரலை ஓரளவுக்கு ஒத்தி வைத்தது என்று சொல்லலாம். இப்போது போர் முடிந்த சூழலில் சிங்களக் குடியேற்றத் திட்டத்தின் புதிய நிகழ்ச்சி நிரல்் இரகசியமாக முன்னெடுக்கப்படுகின்றது.
வடக்கில் இராணுவ குடியேற்றங்கள் நிகழ்த்தப்படலாம் என்று பரவலாகப் பேசப்படுகிறது. கிழக்கில் மிகக் கவனமாக இது முன்னெடுக்கப்படுகிறது. அம்பாறை மாவட்டத்தின் சில சிங்களக் கிராமங்கள் சமீபத்தில் மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதை இந்த இரகசிய நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவே நோக்க வேண்டியுள்ளது.
இலங்கையின் ஒரேயொரு முஸ்லிம் பெரும்பான்மை மாவட்டமான அம்பாறையில், ஏற்கனவே இவ்வாறான சிங்களப் பிரதேச இணைப்புகள் காரணமாகவும் குடியேற்றத்திட்டம் காரணமாகவும் சிங்கள சனச்செறிவு அதிகரிக்கப்பட்டு, முஸ்லிம்களின் விகிதாசாரம் மாற்றியமைக்கப்பட்டது. கல்லோயா அபிவிருத்தித் திட்டமும் அம்பாறை மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றத்திற்கு துணை நின்றது.
இதேபோல திருகோணமலை மாவட்டமும் கந்தளாய் - அல்ல அபிவிருத்தித் திட்டம் மூலம் சிங்களக் குடியேற்றத்திற்கு உட்பட்டது. இப்போது திருகோணமலை மாவட்டத்தின் இன விகிதாசாரம் தலைகீழாக மாறியுள்ளது. பொத்துவில் மற்றும் தீகவாபி பிரதேசத்தில் அண்மைக்காலமாக அரங்கேற்றப்படும் நிகழ்ச்சிகள் சிங்கள விரிவாதிக்கத்தின் பண்புகளையே வெளிக்காட்டுகின்றன.
13வது சீர்திருத்தம் முஸ்லிம்களது பிரச்சினைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கிறதா?
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் நேரடி விளைவாகவே 13வது சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்திய-இலங்கை ஒப்பந்தம் முஸ்லிம்களது பிரச்சினையை சற்றும் கவனத்திற்கு எடுக்கவில்லை என்ற பிரச்சாரத்தை முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஷ்ரப் முஸ்லிம் கிராமங்கள் தோறும் எடுத்துச் சென்றார். முஸ்லிம்கள் மத்தியில் அது ஒரு பெரும் மனக்குறையாக் உள்ளது.
அதேபோன்றுதான் 13வது சீர்திருத்தமும் முஸ்லிம்களது பிரச்சினைக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கவில்லை. வடக்குக் கிழக்கு இணைப்பு குறித்துக் கூட, முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளின் கருத்துக்களைப் பெறுவதில் 13வது சீர்திருத்தத்தை வரைந்தவர்களுக்கு எதுவித ஈடுபாடும் இருக்கவில்லை.
இவ்வாறு ஒட்டுமொத்தமாகவே முஸ்லிம் மக்களது அரசியல் அபிலாசைகளைப் புறக்கணித்த 13வது சீாதிருத்தம், முஸ்லிம்களுக்கு உரிய முக்கியத்துவத்தை அளிக்கவில்லை. இப்போது 13வது சீர்திருத்தத்திற்கு அதிகமாக (13++) ஜனாதிபதி பேசுகிறார். அவ்வாறான புதிய திருத்தங்களில் முஸ்லிம்களது அபிலாசைகள் உள்ளடக்கப்பட வேண்டுமென்பது ஒரு முக்கியமான முன் நிபந்தனையாகும்.
இலங்கை வாழ் தலித்கள், மலையகத் தமிழர்களின் அரசியல் தீர்வு குறித்து என்ன கருதுகிறீர்கள்?
அவர்களுக்கான தீர்வின் வடிவம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை அம்மக்களே தீர்மானிக்க வேண்டும். அவர்களது அரசியல் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் மூலமே தீர்வின் வடிவம் பற்றித் தீர்மானிக்க முடியும்.
எனினும், இவர்கள் பிரதான தமிழ் தேசிய சக்திகளிலிருந்து வேறுபடுத்தி தம்மை தனித்துவமான இன்னொரு மக்களாக அடையாளப்படுத்தியுள்ளனர். ஆகவே, பொதுவாக தமிழ் அரசியல் சக்திகள் முன்வைக்கும் தீர்வுகள் இவர்களைத் திருப்திப்படுத்தும் என்று நம்ப முடியாது. பெருங் கதையாடல்களுக்குள் இவர்களது சமூக அரசியல் பிரச்சினைகள் மறைக்கப்படும் அபாயம் நிலவுகிறது.
முஸ்லிம் மக்களது பிரச்சினைகளை அரசியல் ரீதியாக தீர்க்காமல் புறந்தள்ளிய அபாயத்தின் பாதிப்புகள் போன்ற அபாயமே இவர்களுக்கும் உள்ளது. இம்மக்களது பிரச்சினைகளையும் சேர்த்தே இடைக்கால மற்றும் இறுதி அரசியல் தீர்வுகள் வரையப்பட வேண்டும்.
கிழக்கின் உதயத்திற்குப் பின் அங்கு தமிழ்-முஸ்லிம் உறவு குறித்து?
தமிழ்-முஸ்லிம் உறவுகளில் புதிய நம்பிக்கைகள் துளிர்விடுகின்றன. எனினும், இதற்கு ஒரு பகைமறுப்புக் காலமும் முன்னெடுப்பும் அவசியமாக இருக்கிறது. கிழக்கின் உதயத்திற்குப் பின்னர்தான் இந்நிலைமை என்பதைவிடவும், போருக்குப் பிந்திய சூழல் இந்த உறவுகளில் புதிய நம்பிக்கைகளை சாத்தியப்படுத்தியுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் சமூக புவியியல் இருப்பு முஸ்லிம், தமிழ் மக்களை வாழ்வாதார ரீதியாக பரஸ்பரம் ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. இது தமிழ்-முஸ்லிம் உறவை பிரக்ஞைபூர்வமான ஒன்றாக மாற்றுவதில் முக்கிய பங்கெடுக்கிறது.
புலப்பெயர்வு, தமிழர்களுக்கு சாத்தியமான அளவிற்கு முஸ்லிம்களுக்கு சாத்தியமாகி இருக்கிறதா?
தமிழர்களது அளவிற்கு முஸ்லிம்களுக்கு அது சாத்தியமாகவில்லை. என்றாலும், மேற்கு நாடுகளில் சிறுதொகை புகலிட முஸ்லிம்களையும் ஓரளவு கூட்டுச் செயற்பாடுகளையும் அவதானிக்க முடிகிறது. மத்திய கிழக்கில் போரை விடவும் பொருளாதாரப் புலப்பெயர்வு முஸ்லிம்களுக்கு பெருமளவு சாத்தியப்பட்டிருக்கிறது எனலாம்.
“இஸ்லாமிய ஜிஹாத்” ஆபத்து குறித்து இப்போது பேசப்படுகிறதே. இலங்கையில் இருந்து எழுதும் பாலச்சந்திரன் போன்றோர் இது குறித்து எழுதுகிறார்களே?
புலிகளுக்குப் பிந்திய சூழலை இஸ்லாமிய ஜிஹாத் என்ற போலிக் கண்டுபிடிப்பின்மூலம் மாற்றீடு செய்யலாம் என சில சக்திகள் திட்டமிட்டு செயற்படுகின்றன. உதிரியாக எதிர்வினையாற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் எல்லா சமூகங்களிலுமே அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணப்படுவது இயல்பே. அவற்றை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாக ஒரு பெரும் அபாயம் இருப்பதாக கதை பின்னப்படுவதை ஓரிருவரின் தனிப்பட்ட முயற்சி என்று நம்ப முடியாதுள்ளது. அதற்குப் பின்னே பல்வேறு நலன்கள் கொண்ட சக்திகள் நின்று இயக்குகின்றன என்பதை நுணுகி ஆராய்ந்தால் புரிந்து கொள்ளலாம்.
போர் உக்கிரமாக நடைபெற்ற சூழல் ஆயுத சூனிய சூழலாக இருக்குமென்று யாரும் கனவு காணத் தேவையில்லை. அதற்காக பொய்யான கண்டுபிடிப்புகளை உண்மையாக மாற்ற முடியாது.
முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் இருப்பதாக அவ்வப்போது எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு முஸ்லிம் சமூகம் போதியளவு பதிலளித்திருக்கிறது. இவ்வாறான ஒழுங்குபடுத்தப்பட்ட எந்த ஆயுதக் குழுக்களுமே முஸ்லிம்கள் மத்தியில் இல்லையென்பதை இலங்கையில் ஆய்வில் ஈடுபட்ட பல உள்ளுர் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆதாரபூர்வமாக அறிக்கைப்படுத்தியுள்ளன.
செய்திகளை எவ்வாறு உருவாக்குவது என்பதில் சில ஊடகங்களுக்கு உள் அரசியல் நோக்கங்கள் இருக்கின்றன. தமது மன அரிப்புகளைத் தீர்த்துக் கொள்வதற்காக இவ்வாறான புதிய அபாயங்களை இவர்கள் கட்டமைக்கின்றனர். எதிரிகள் இல்லாதபோது எதிரிகளைக் கட்டமைக்கும் ஏகாதிபத்திய மற்றும் பிராந்திய வல்லரசுகளின் விரிவாதிக்க நலன்களுக்கே இவர்கள் துணை போகின்றனர்.
இலங்கை முஸ்லிம்கள் தமது அரசியல் அபிலாசைகளை அடைந்து கொள்வதற்காக எப்போதுமே வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுத்ததில்லை என்பதுதான் இத்தகைய புனைவுகளுக்கு உயிர் சாட்சியமாக இருக்கிறது. இதைவிடவும் இதற்கு வேறு பதில் தேவையில்லை.
செப்டம்பர் 11 யிற்குப் பிறகு உலகளவில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியில் இலங்கை முஸ்லிம்களின் நிலைமை என்ன?
குறிப்பான நெருக்கடிகள் என்றில்லாவிடினும் பல மறைமுக நெருக்கடிகள் உள்ளன. இஸ்லாமிய ஜிஹாத் பற்றிய போலிப் பிரச்சாரம் இதன் ஒரு பகுதியே. உஸாமா பின் லேடனுடனும் இலங்கை முஸ்லிம்களுக்கும் தொடர்பிருக்கிறது என்பது போன்ற புனைவுகள் அவ்வப்போது தோன்றி மறைகின்றன. பாகிஸ்தானிலிருந்து 2000 கிழக்கு முஸ்லிம் இளைஞர்கள் பயிற்றுவிக்கப்பட்டு வந்துள்ளதாக பா.ம.க. ராமதாஸ் கிளப்பிய புரளிக்கு எந்த அடிப்படையும் இல்லை. எனினும், இந்தியாவை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்புவதற்கு எடுக்கப்பட்ட ஒரு உள்நோக்கம் கொண்ட செயலாகவே இதனை நோக்கலாம்.
செப்டம்பர் 11 யிற்குப் பிந்திய சர்வதேச நெருக்கடியை இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பும் வகையில் செயற்பட்டதில் புலிகளின் இணையத்தளங்களுக்கும் ஊடகங்களுக்கும் முக்கிய பங்குகள் உள்ளன. ஆயினும், களத்தில் இவை வெறும் ஆதாரமற்ற உளறல்கள் என்பதால் பெரிதாக முக்கியத்துவப்படுத்தப்படவில்லை.
நேரடி அழுத்தம் என்பதைவிடவும் உளவியல் நெருக்கடிக்குள் முஸ்லிம்களை சிக்க வைக்கும் பலமுனை செயற்பாடுகளை அவதானிக்க முடிகிறது.
உலக மயமாக்கல் சகாப்தத்தில் ஒரு பண்பாட்டு நெருக்கடியை எல்லா தேசிய இனங்களும், மதங்களும் சந்தித்துக்கொண்டிருக்கிறதுதானே. இந்த நெருக்கடியை இலங்கை வாழ் முஸ்லிம்கள் எவ்விதம் எதிர்கொள்கிறார்கள்?
எப்போது ஒரு சமூகத்தினது அடையாளத்திற்கும் பண்பாட்டிற்கும் நெருக்கடி ஏற்படுகிறதோ அப்போது அந்த சமூகம் அவற்றைப் பாதுகாப்பதன் மீது அதிகம் முனைப்புக் கொள்கிறது.
இந்தப் பண்பாட்டு நெருக்கடியை, இஸ்லாமிய மீட்பை நோக்கிய ஈடுபாட்டை அதிகரிப்பதன் மூலம் எதிர்கொள்வதுதான் பெருவாரியான போக்காக உள்ளது. பூர்வீகம், சொந்தப் பண்பாடு என்பவற்றை மீள்கண்டுபிடிப்பு செய்வதற்கான முயற்சியும் முன்னெடுக்கப்படுகிறது.
இதுகுறித்து, அதிகம் பேசவும் எழுதவும் படுகிறது. முன்னரை விடவும் முஸ்லிம் சமூகத்திற்கு பத்திரிகைகள், சஞ்சிகைகள், இறுவட்டுகள் என்பவற்றின் வெளியீடு கணிசமாக அதிகரித்துள்ளது. எல்லாத் தளங்களிலும் ஒப்பீட்டளவில் இயங்குதன்மையில் ஒரு முன்னேற்றம் காணப்படுகிறது. ஒரு தேசிய இனம் என்றவகையில் முஸ்லிம் மக்களது தனித்துவத்தையும் பண்பாட்டுக் கூறுகளையும் பாதுகாப்பதற்கான நிறுவனம் சார்ந்த முயற்சிகளும் அதிகரித்து வருகின்றன.
போருக்குப் பிந்தைய நிலையில் தமிழர்கள் சிங்கள மொழி, பண்பாடு மற்றும் பவுத்தத்தை தழுவுதல் போன்றவை இணக்கம் கொண்டு வரக்கூடியதா? இதுவும் சாத்தியமாகும் என்றால் இஸ்லாமியர்களின் நிலைமை?
மக்கள் தங்களது அடையாளத்தை அவ்வளவு இலகுவாக விட்டுக்கொடுப்பார்கள் என்று நம்ப முடியாது. இவை சாத்தியமாவதற்கான சூழ்நிலை இலங்கையில் காணப்படவில்லை. தனித்துவங்களைப் பேணிய இணக்கத்தையே அங்குள்ள எல்லா சமூகங்களும் விரும்புகின்றன.
தமிழர்கள், தலித்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள், சிங்களவர்கள் இணக்கமான சகவாழ்வு வாழ்வது சாத்தியம்தானா?
சாத்தியம் என்றே நாம் நம்புகின்றோம். ஏனெனில் இலங்கையில் எதிர்மறையாகப் பேசுவதற்கு எவ்வளவோ விடயங்கள் உள்ளன. நம்பிக்கையோடு எதிர்காலத்தை நோக்கும் நேர்மறை அணுகுமுறையே இன்றைக்கு மிகவும் இன்றியமையாததாக உள்ளது.
இவ்வளவு இழந்த பின்பும் நம்பிக்கையை இழந்த ஒரு பலஸ்தீனரைக் கூட தான் சந்திக்கவில்லையென எட்வர்ட் செய்ட் ஒரு முறை குறிப்பிட்டார். அதுபோல நம்பிக்கையோடு வரும் காலத்தை எதிர்நோக்குவோம்.
உண்மையிலேயே நாம் போரினால் அதிகம் களைப்புற்றிருக்கிறோம். இனமுரண்பாட்டினாலும் போரினாலும் இலங்கை சமூகங்கள் ஆழமாகப் பிளவுபட்டு துருவமயமாகியுள்ளன என்பது யதார்த்தம்தான். அதனை மீறிச் செல்வதற்கான வழிமுறைகள்தான் இன்று தேவைப்படுகின்றன. அதற்குத்தான் பகைமறப்பு செயற்பாடுகள் அவசியப்படுகின்றன. இது ஒரு நீண்ட செயன்முறை.
இலங்கையின் எல்லா சமூகங்களையும் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசுகின்ற பொதுத்தளங்களும் பொதுப் புள்ளிகளும் கண்டடையப்பட வேண்டும். அவ்வாறான நம்பிக்கை தரும் முயற்சிகள் அங்கொன்று இங்கொன்றாக நடைபெற்ற வண்ணமே இருக்கின்றன. இவை ஒருமுகப்படுத்தப்பட வேண்டும்.
மக்கள் நீண்டகாலப் போர் ஏற்படுத்திய கண்ணீர், துயரங்கள், மன உடைவுகள், காயங்கள், உயிரிழப்புகள், உறவுகளின் சிதைவுகள், சொத்திழப்புகள்… என்று எவ்வளவோ நெருக்கடிக்குள் தமது நாட்களை நகர்த்துகின்றனர். அவர்களை மெதுமெதுவாக அவற்றிலிருந்து விடுவிக்க வேண்டியுள்ளது. இன்னொரு போரை இலங்கை மக்கள் விரும்புவார்கள் என்பதற்கான உடனடி நியாயங்கள் இன்றைய சூழலில் இல்லை. ஆதலால், மக்களளவிலான சகவாழ்வை நோக்கி நகர்வதே இப்போதுள்ள ஒரே சிறந்த தெரிவாகும்.