தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன், பிரபாகரன் அவர்கள் தொடர்பாக வெளியிட்ட செய்தி அனைத்து காட்சி மற்றும் அச்சு ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாகி இருக்கின்றது.

பிரபாகரன் தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய நெடுமாறன், "பிரபாகரன் குடும்பத்தினருடன் எனக்குத் தொடர்பிருக்கிறது. அந்தத் தொடர்பின் மூலம் அறிந்த செய்திகளை, அவர்களுடைய அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறேன். அவர் எங்கே இருக்கிறார், எப்போது வருவார் என்பது குறித்து எல்லோரும் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், அவர் விரைவில் வெளிப்படுவார். மனைவி, மகள் நலமுடன் இருக்கிறார்கள்," என்று தெரிவித்தார்.

இதற்கு முன்பே பழ. நெடுமாறன், வைகோ, சீமான் போன்றவர்கள் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக சொல்லி இருந்தாலும், இந்த முறை அந்த செய்திக்கு ஊடகங்களில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் அந்த செய்தி திட்டமிட்டு மிகப் பெரிய அளவில் மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் சதித்திட்டத்தோடு வெளியிடப்பட்டதாகவே தெரிகின்றது.pazha nedumaran and kasi aanandhanசொல்லிவைத்தாற்போல அனைத்துப் பத்திரிகைகளும் நெடுமாறன் அவர்களின் பேச்சை தலைப்புச் செய்தியாகவே வெளியிட்டு இருந்தன.

ஆனால் நெடுமாறன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை நெடுமாறன் அவர்களின் உண்மை நோக்கத்தை அம்பலப்படுத்துவதாக உள்ளது.

அந்த அறிக்கையில் "தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றிய ஓர் அறிவிப்பை ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் முன்னிலையில், பல்வேறு தலைவர்கள் முன்னிலையில் அறிவிப்பதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன்.

சர்வேதச சூழலும் இலங்கையில் ராஜபக்ச ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்துக் கிளம்பியுள்ள சிங்கள மக்களின் போராட்டங்களும் தமிழீழ தேசியத் தலைவர் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இந்தச் சூழலில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மிக்க நலமுடன் இருக்கிறார் என்ற நற்செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதுவரை அவரைப் பற்றித் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும் ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம்.

தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை அவர் விரைவில் அறிவிக்கவுள்ளார். தமிழீழ மக்களும் உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம்.

விடுதலைப் புலிகள் வலிமையாக இருந்த காலம்வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும் எந்தக் காலகட்டத்திலும் எத்தகைய உதவியையும் பெறுவதில்லை என்பதிலும் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார். தற்போது இலங்கையில் ஆழமாகக் காலூன்றி, இந்திய எதிர்ப்புத் தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும் இந்துமாக்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப் பார்த்து, அதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இந்திய அரசை வேண்டுகிறோம்.

இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழக அரசும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தமிழக மக்களும் ஒன்றுபட்டு நின்று தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குத் துணை நிற்குமாறு வேண்டிக் கொள்கிறோம்," என கூறப்பட்டிருந்தது.

உலகின் பல நாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்புக்குத் தடை இருக்கின்றது என்பது எல்லோருக்குமே தெரியும். நிலைமை அவ்வாறு இருக்க, பிரபாகரன் உயிரோடு இருந்தால், அவரால் மீண்டும் இலங்கைக்குத் திரும்பி வர முடியுமா? அதற்கு இலங்கையில் இன்னும் மக்கள் எதிர்ப்புக்கு மத்தியிலும் ஏகாதிபத்திய நாடுகளின் துணையோடு ஆட்சியில் இருக்கும் இலங்கை அரசு அனுமதிக்குமா? இலங்கையின் பொருளாதார நலன்களை கொள்ளையடிக்க இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் கொடுத்து இலட்சக்கணக்கான ஈழத்தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதற்கு காரணமான இந்தியா அதை அனுமதிக்குமா?

இதில் எதுவுமே நடக்கப் போவதில்லை. அப்படி இருக்கையில் “இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும் எந்தக் காலகட்டத்திலும் எத்தகைய உதவியையும் பெறுவதில்லை என்பதிலும் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார்” என்று நெடுமாறன் சம்மந்தமே இல்லாமல் கூறுவது எதற்காக?

ஈழத்தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதில் இந்திய அரசுக்கு உள்ள நேரடி தொடர்பை மறைக்க, இந்திய அரசின் கைக்கூலியாக நெடுமாறன், காசி ஆனந்தன் போன்றோர் செயல்படுகின்றார்களா?

அல்லது இன்று இலங்கையில் தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும் ஏற்பட்டுள்ள இணக்கத்தை சீர்குலைக்க “தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை அவர் விரைவில் அறிவிக்கவுள்ளார்” என்று சொல்வதன் மூலம் இலங்கை அரசின் கைக்கூலியாக செயல்படுகின்றாரா?

பல நாடுகளின் துணையுடன் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலையில் பிரபாகரனும் கொல்லப்பட்டு தியாகியாக மாறிவிட்ட சூழ்நிலையில், இன்று இலங்கையின் அரசியல் களம் மாறிவிட்ட சூழ்நிலையில், இவ்வாறு கூறுவது சதியா?

பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று சொல்வது, தெரிந்தே அவரைக் கொச்சைப்படுத்தும் முயற்சியாகும். இலட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது பிரபாகரன் மட்டும் தப்பித்து ஓடி விட்டார் என்பது அவர் ஒரு கோழை, பிழைப்புவாதி என்றல்லவா வரலாற்றில் பதியும்?

மேலும் ஒரு பெரும் விடுதலைப் போராட்டத்தை பிரபாகரன் மட்டுமே நடத்தி விடவில்லை. அதன் பின்னால் லட்சக்கணக்கான மக்களின் உயிர்த் தியாகம் அடங்கி இருக்கும்போது, பிரபாகரன் மட்டுமே ஈழ விடுதலைப் போரின் ஒப்பற்ற தலைவர், அவர் மீண்டும் வந்து விடியலுக்கான திட்டத்தை அறிவிப்பார் என்பது அரசியல் கத்துக்குட்டித்தனமான வாதமாகும்.

2009 ஆம் ஆண்டு மே 17 அன்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் நந்திக்கடல் முள்ளிவாய்க்காலில் சிங்கள இராணுவத்தால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. சில இணையதளங்கள் அதற்கான வீடியோ ஆதாரத்தையும் வெளியிட்டு இருந்தன. பிரபாகரன் கொல்லப்பட்டது உண்மைதான் என சிங்கள அரசும் ஒத்துக்கொண்டது.

போரை வழிநடத்திய இந்திய அரசும் ஒத்துக் கொண்டது. ஆனால் பிரபாகரனை தம்பி என்றும், அண்ணன் என்றும் சொல்லி தமிழகத்தில் அரசியல் நடத்திக் கொண்டிருந்த சீமான், வைகோ போன்றவர்கள் 'அவர் உயிரோடுதான் இருக்கின்றார். விரைவில் திரும்பி வந்து போரைத் தொடங்குவார்' என்று அப்போது சோதிடம் சொன்னார்கள்.

அதிலும் வைகோ அவர்கள் போன இடமெல்லாம் தம்பி வருவார், தம்பி வருவார் என்று நம்பிக்கையோடு சொல்லிக் கொண்டே இருந்தார்.

ஆனால் இன்று “ஈழ விடுதலைப் போர்க்களத்தில் பிரபாகரனோடு களத்தில் நின்ற போராளிகள் சிலர் இன்னமும் உலகின் பல நாடுகளில் இருக்கின்றனர். என்னிடம் தொடர்பில் இருக்கும் அத்தகைய போராளிகள் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள செய்தியை உறுதிப்படுத்தவில்லை” என்றும், "ஆனாலும் அவர் கூறியபடி தலைவர் பிரபாகரன் அவர்கள் நலமுடன் இருந்தால் அதைவிட உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறு ஒன்றும் இருக்க முடியாது" எனவும் மாற்றிக் கூறியுள்ளார்.

சீமானும் “என்னிடம் பதில் இல்லை. சில கேள்விகள் மட்டுமே இருக்கின்றன. என் தம்பி பாலச்சந்திரனை சாகவிட்டு, பிரபாகரன் தப்பிச் சென்றிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா... `எந்தச் சூழ்நிலையிலும் இந்த நாட்டைவிட்டு போகமாட்டேன்' என வீரமாக சண்டையிட்டவர் பிரபாகரன். தன் உயிரை மட்டும் தற்காத்துக் கொண்டு தப்பிப் போகும் கோழை என பிரபாகரனை நினைக்கிறீர்களா... போர் முடிந்து, ஒரு பேரழிவைச் சந்தித்தப் பிறகு 15 ஆண்டுகளாக ஓரிடத்தில் பத்திரமாக தங்கியிருப்பார் என்று கருதுகிறீர்களா... அல்லது இதுவரை எதுவும் பேசாமல் இருந்திருப்பாரா... பிரபாகரன் சொல்லிவிட்டு வருபவர் அல்ல. வந்துவிட்டுச் சொல்வார். அதுதான் அவர் பழக்கம்” என தன்னுடைய பழைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கின்றார்.

இன்று தமிழ்நாட்டில் நெடுமாறனின் உருட்டுக்கு அவரது சில அடிப்பொடிகள் தவிர யாருமே அசரவில்லை.

நெடுமாறனோ அல்லது அவரை இயக்கும் ஒன்றிய அரசோ தமிழ்நாட்டின் கள எதார்த்தம் ஈழப்போர் நடைபெற்று முடிந்த இந்த பதிமூன்று ஆண்டுகளில் மாறி இருப்பதை இன்னும் உணரவில்லை. அதனால்தான் சங்கிகள் இங்கே மண்ணைக் கவ்வுகின்றார்கள் என்பதையும் புரிந்து கொள்ளவில்லை.

ஒருவேளை புரிந்து கொண்டிருந்தால் நெடுமாறன் போன்றவர்கள் சொல்வதை எல்லாம் தமிழ் மக்கள் இன்றும் நம்புவார்கள் என்று சங்கிகளும் ஒன்றிய அரசும் தப்புக் கணக்கு போட்டிருக்க மாட்டார்கள்.

- செ.கார்கி

Pin It