ரஞ்சித்தின் அண்மைப் பேட்டி, ராசராசனை மீண்டும் ஒரு விவாதத்திற்குரிய மனிதராக ஆக்கியிருக்கிறது. ராசராசன் மீதான விமர்சனங்கள் புதிதல்ல. இதைவிடக் கடுமையாக, பெரியாராலும், திராவிட இயக்கத்தாராலும் முன்பே வைக்கப்பட்டவையே.

ஆனாலும் ராசராசனை இக்காலச் சூழலில் எப்படிப் பார்ப்பது என்பதைப் பற்றிய ஒரு எண்ணமே இப்பதிவாகும்.

ராசராசனைப் பொருத்தவரை ரஞ்சித்துகள் (பல பெரியாரிஸ்டுகள் கூட) ஒரு பக்க தீவிர நிலையையும், சீமான்கள் (பல தமிழ்த் தேசியர்கள் கூட) மறுபக்க நேர் எதிர் தீவிர நிலையையும் எடுக்கின்றனர்.

raja raja cholanராசராசன் மட்டுமல்ல, எந்த மன்னர்களும் அவர்களுடைய காலச் சூழலிலேயே பார்க்கப்பட வேண்டும்.

மானுட, சமூக விடுதலை, நவீன அரசியல், சமூக, பொருளாதார உருவாக்கம் என்பன போன்றவற்றில் இருபதாம் நூற்றாண்டு சிந்தனை விளைவுகளை, புரிதல்களை ஐநூறு/ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்த சிந்தனைச் சூழல்களுடனும், புரிதல்களுடனும் ஒப்பிடுவது ஆய்வுமுறையும் அல்ல, அறமுறையும் அல்ல.

அதே நேரத்தில் வெறும் முன்னோன் என்பதாலும், மிகப் பெரிய பேரரசை உருவாக்கியவன் என்பதாலும், தமிழர் வரலாற்றில் மிக முக்கியமான, தவிர்க்க முடியாத தடத்தைப் பதித்தவன் என்பதாலுமே, ராசராசன் எக் காலத்திற்குமான வழிகாட்டியாக, முன்னிருத்த வேண்டிய அடையாளமாகி விடமாட்டான்.

அவன் காலத்திலிருந்த, இந்திய சமூகம் நோக்கி, பிற நில உடைமை சமூகம் நோக்கிப் பார்க்கும்பொழுது, இந்தியாவில் பிற நில உடைமை சமூக மாற்றம் போன்றே (ஒவ்வொரு நில உடைமை சமூகமும் அதற்கு முந்தைய சமூக நிலைமைகளைக் கொண்டு உள்வாங்கிய நிலையில் வேறுபாடுகள் கொண்டிருந்தாலும்) சாதிய இயங்கியல், சாதியத்தின் (ஆரியத்தின்) தாக்கத்தால் சாதிய சமூக தொடர்ச்சி நிலையை வெளிப்படுத்தியே அமைகிறது.

நில உடைமை சமூகம் , தமிழர் என்கிற இன அடிப்படையில் ஒரு இனக்குழு இருப்பு/தொடர்ச்சிக்கான பெருமித கருதுகோள்களை வழங்கினாலும், அத்தமிழரின் எல்லா மக்களிடையேயும் சமூக சமநிலையை வழங்கவில்லை. அவர்களில் பல குழுக்களின், சாதிகளின் நிலை துயரம் மிகுந்ததாகவே இருந்திருக்கிறது.

எனவே ராசராசன், வருங்கால தமிழ்த் தேசியத்தின் பொற்காலத்திற்கு, குறைந்தபட்சம் நல்ல காலத்திற்கு குறியீடோ, அடையாளமோ அல்ல.

அதே சமயம், இன்றைய இந்திய சமூகச் சூழலில், தமிழ், தமிழர் என ஒன்றுபடுதலும், தமிழ்த் தேசிய உணர்வும் அவசியமாகும், தேவையானதாகும். தமிழர்களின் அரசியல், சமூக, பொருளாதார உரிமைகள் பறிக்கப்படுகின்ற சூழல்களில், தமிழர்களின் நில, நீர் வளங்கள் சுரண்டப்படுகின்ற சூழல்களில், தமிழ்த் தேசிய உணர்வும், எழுச்சியும் தேவையாகும்.

இச்சூழலில் ராசராசனின் பங்கு என்ன, ஆற்றக்கூடிய, வகிக்கக்கூடிய பாத்திரம் என்ன என்பதில் தெளிவு வேண்டும்.

அதே சமயம், தமிழ்த் தேசியம் எனும் வரலாற்று இன உருவாக்கத்திற்கு, முக்கியமாக அதன் நிகழ்கால, வருங்கால இருப்பிற்கு, தொடர்ச்சிக்கு, தமிழரின் மரபு வழித் தொடர்ச்சி பற்றிய பெருமைமிகு கருதுகோள்களில் ராசராசன் முக்கியமானவன் என்பதைத் தவிர்க்க முடியாது.

ராசராசன், ராசேந்திரன், கரிகாலன் என்கிற மன்னர்கள் பற்றிய பிம்பங்கள்/படிமங்கள், சோழர், சேரர், பாண்டியர் பற்றிய பெருமிதங்கள், சங்க இலக்கியம் முதலான இலக்கியங்கள் போன்றவைகள், அவைகளைப் பற்றிய பெருமிதங்கள், நிகழ்கால, எதிர்கால தமிழ்த் தேசியத்தின் இருப்பிற்கு, தொடர்ச்சிக்கு, இந்திய, பார்ப்பனிய ஒடுக்குமுறைக்கு எதிரான, காலத்திற்குத் தேவையான இன ஒருமைக்கான கருதுகோள்கை, நம்பிக்கைகளை வழங்குகின்றது.

தலித்திய சிந்தனையாளர்கள் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய நவீன சிந்தனை கொண்டு , ராசராசனை மதிப்பிடுவது அல்லது அவனது எந்த பங்களிப்பையும் நிராகரிப்பது தவறானது.

தமிழின ஒற்றுமை அல்லது தமிழ்த் தேசியம் என்பது அனைத்து தமிழர்களின் விடுதலைக்குமானதாக இருக்க வேண்டுமே தவிர வெறும் பழமையைப் பேணுவதாகவோ, போற்றுவதாகவோ இருக்கக் கூடாது என்பது அவசியம் என்கிற தலித்திய செயல்பாட்டாளர்களின் எண்ணம் நியாயமானதே.

சுருங்கச் சொன்னால், ராசராசன் வருங்கால தமிழ்த் தேசியத்திற்கான போராட்டத்திற்கு, மக்களின் ஒன்றுபடுதலுக்கு, அதற்கான ஒரு பெருமைமிகு குறியீடாக இருக்க வேண்டுமே/இருக்கலாமே தவிர, வருங்கால தமிழ்த்தேசிய அரசியல், சமூக, பொருளாதார உருவாக்கத்திற்கு, உதாரணமானவனாகவோ, குறியீடாகவோ இருக்க முடியாது/இருக்கக் கூடாது என்பதே உண்மையாகும்.

போர்ச்சூழலில் இங்கிலாந்து மக்களுக்குத் தேவையாக இருந்த, ஆங்கிலேயேயரின் பெருமைகளுக்கு அடையாளமாகத் தெரிந்த சர்ச்சில், போர் முடிந்த சூழ்நிலையில் அதே இங்கிலாந்து மக்களால் நிராகரிக்கப்பட்டதை நோக்க வேண்டும்.

அத்தகைய தன்மையிலேயே , நாம் ராசராசனையோ ஏனைய தமிழ் மன்னர்களையோ, அவர்களின் ஆட்சிகளையோ அல்லது பழமைகள், மரபுகள் பற்றிய நமது பெருமிதங்களையோ எடுத்துக் கொள்ள வேண்டும். முன்மாதிரியாகக் கருத வேண்டும்.

- ப.பூங்குமரன்