"இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அதில் எல்லாக் கட்சிகளையும்போல பிஜேபியும் போட்டியிடுகிறது என்று நினைத்தால் அது பெரும் தவறு. இந்திய மக்கள் பிஜேபியை ஒரு கட்சியாக நினைக்க வேண்டாம், அதுவொரு பாசிச அமைப்பு." -- பொருளாதார அறிஞர்.அமர்த்தியா சென்.

"மோடி பிரதமராவதற்கு ஆதரவு அளித்ததற்காக இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். சுதந்திர இந்தியாவில் இப்படியொரு ஏமாற்றுக்காரர் இதுவரை பிரதமர் ஆனதே கிடையாது. என் இறுதிநாளில் நிற்கிறேன். அவர் மீண்டும் வராமல் இருக்க என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து போராடுவேன்." -- மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, பிஜேபி முன்னாள் சட்டத் துறை அமைச்சர்.

surfexcel adஇந்தியப் பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றில் பல ஆண்டுகாலம் முரணாக இருந்த பல கட்சிகள் இன்று பாசிச எதிர்ப்பு என்ற ஒரு குடையின் கீழ் அணிவகுத்து உள்ளனர். குறிப்பாக உத்திரப் பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜும், முலாயம் சிங்கின் சமாஜ்வாதியும் பல ஆண்டுகாலமாக எதிரெதிர் அரசியல் செய்தவர்கள். இந்த 16வது பாராளுமன்றத் தேர்தலில் பிஜேபியை வீழ்த்த வேண்டும் என்ற பொது நோக்கத்தில் பழையது அனைத்தையும் மறந்து தேசப் பாதுகாப்புக்காக கூட்டணியாக களம் காண்கின்றனர். இப்படி பல இடங்களில் இந்த அணிசேர்க்கை நடைபெற்று உள்ளது. இடதுசாரிகள் அவர்களின் பலம் தவிர்த்த பிற இடங்களில் அரசியலில் மாற்றுக் கருத்துடைய ஜனநாயக அமைப்புகளோடு இணைந்து தேர்தலை சந்திக்கிறார்கள்.

இந்தியாவில் இருக்கும் ஒரு சில கட்சிகளைத் தவிர அனைவரும் பாசிச பிஜேபியை வீழ்த்த வேண்டும் என்று ஒரு புள்ளியில் இணைவதற்கு முக்கிய காரணம், அவர்கள் பண்பாட்டு தளத்தில் செய்து வருகின்ற மோசமான செயல்பாடே. இதுவரை இந்திய தேசத்தில் இருந்த அற்புதமான அம்சங்களை சிதறடித்துவிடும் என்ற அச்சமும் முக்கிய காரணம்.

சமீபத்தில் வந்த ஒரு சோப்புப் பவுடர் விளம்பரத்தில் வடமாநிலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்டும் ரக்ஷா பந்தன் திருவிழாவில் குழந்தைகள் எல்லோரும் கலர் பவுடர் தூவிக் கொண்டாடும்போது, இஸ்லாமிய சிறுவன் தொழுகைக்குச் செல்ல வேண்டுமென்று இந்து மதத்தைச் சேர்ந்த பெண் தோழி அந்தத் தெரு முழுக்க சென்று அனைத்து வண்ணங்களையும் தான் பெற்று யார் கையிலும் வர்ணம் இல்லை என்று தெரிந்த பின்பு தனது தோழனை சைக்கிளில் உட்கார வைத்து தொழுகைக்கு பள்ளிக்கு அழைத்துச் செல்வாள். அப்போது ஒருவன் கையில் மட்டும் ஒரு வர்ணம் இருக்கும். அதனை அவன் அடிக்க கை ஓங்கும் போது அவன்கூட இருக்கும் நண்பன் அதனைத் தட்டி விடுவான், அந்த விளம்பரம் எல்லோராலும் கொண்டாடப்பட்டது. அந்த இஸ்லாமியத் தோழனை இறக்கிவிடும் போது தோழி சொல்லுவாள் “தொழுகை முடிந்து வந்தபின்பு நான் கண்டிப்பாக வர்ணம் அடிப்பேன்” என்று. அந்தச் சிறுவன் சிரித்துக் கொண்டே சரியென தலையாட்டிச் செல்வான். அந்த தலையாட்டுதலுக்குப் பின்பு நானும் உங்கள் நிகழ்வில் கலந்திடுவேனென்று அந்த விளம்பரம் உணர்த்தும்.

இந்தியாவில் மதவேற்றுமை இன்றி பரஸ்பரம் உறவு கொள்ளும் இந்த அமைப்பு முறை உன்னதமானது. எல்லோரையும் ரசிக்க வைக்கும் அந்தக் குழந்தைகள் கொண்டாட்டத்தைத் தான் பாசிஸ்டுகள் சிதைக்கப் பார்கிறார்கள். அந்த பிஞ்சு மனங்களில் தான் நஞ்சு விதைக்கிறார்கள்.

இந்தியாவில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட திரை இயக்குனர்கள் பிஜேபிக்கு வாக்களிக்காதீர்கள் என்று கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதே போல கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது எழுத்தாளர்கள் இதே கோரிக்கையை முன்வைத்து கூட்டு அறிக்கை வெளிட்டுள்ளனர். இந்தியாவில் பலநூறு கட்சிகள் இருக்கும்போது ஏன் பிஜேபியை மட்டும் பெரும்பான்மை எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், திரைக் கலைஞர்கள், அறிவுஜீவிகள் என்று எல்லோரும் எதிர்க்க வேண்டும்? காரணம் இங்குள்ள பன்முகத் தன்மையை முற்றிலும் அழித்துவிடும் ஆற்றல் அவர்களிடம் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்கள் இந்தியா முழுக்க செய்த வன்முறைகளும் கலவரங்களும் சாட்சியமாக உள்ளது.

மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் அல்லது வைத்திருப்பவர்கள் என்ற காரணத்தைச் சொல்லி மட்டும் இந்தியா முழுக்க நூறுக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளது. இப்படியான வன்முறை நடக்கும் அதே வேலையில் மக்கள் மனங்களில் பண்பாட்டு ரீதியான மாற்றங்களையும் விதைத்து வருகிறார்கள். குறிப்பாக பல வகையில் குழந்தைகள் மனதில் நஞ்சை விதைப்பதைத்தான் பெரும் கவலையாகப் பார்க்க வேண்டியுள்ளது. பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வழியாகவும், வாய்ப்பிருக்கும் இதர முறைகளிலும் அவர்கள் மிக நுட்பமாக தங்களது கருத்தைத் திணித்து வருகிறார்கள். இது ஆட்சியிலிருந்து அகற்றுவதைவிட சவாலானது.

சில மாதத்திற்கு முன்பு ஒரு பூங்காவில் ஒரு சிறுவனோடு சேர்ந்து எனது மகன் வெகு நேரம் விளையாடிக் கொண்டு இருந்தான். இருவரும் பரஸ்பரம் தங்களது பள்ளி வகுப்பு போன்றவற்றை பகிர்ந்தபடியே விளையாடிக் கொண்டு இருந்தனர். இருவரும் நான்காம் வகுப்பு மாணவர்கள். கிளம்பும் போது மகனை “போகலாமென்று” உருதுவில் எனது மனைவி அழைத்தார். அந்த பையன் நீங்கள் என்ன மொழி பேசுகிறீர்கள் என்று கேட்டான். இவன் உருது என்று சொல்கிறான். அப்படியென்றால் என்ன என்று அவன் கேட்கிறான். இவன் நாங்கள் முஸ்லீம் என்பதால் உருதுவில் பேசுவதாக சொன்னான். முஸ்லீம் என்ற வார்த்தை அவனை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. “இவ்வளவு நேரம் முஸ்லீம் பையன் கூடவா விளையான்டேன். ஐயோ! எங்கம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரிந்தால் என்னை அடிச்சே போடுவாங்களே” என்று அலறியபடி ஓடுகிறான். ஏன் அவன் பயந்து ஓடுகிறான் என்று ஒன்றும் புரியாமல் இவன் நிற்கிறான். அய்ந்து ஆண்டுகளில் மோடி செய்த சாதனை இதுதான். ஒரு குழந்தை இன்னொரு குழந்தையைப் பார்த்து பயந்து ஓடும் அபாய சூழலை இந்துத்துவ சித்தாந்தம் வளர்க்கும் மோடி உருவாக்கி வைத்துள்ளார்.

mothering a muslimகுழந்தைகள் மனம்வரை இந்துத்துவக் கருத்தோட்டத்தை திணிப்பதன் மூலம் தங்களது இருப்பை எப்போதும் பாதுகாத்திட முடியும் என்பதுதான் அவர்களின் திட்டம். அதற்காக அவர்கள் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருவதை சமீபத்தில் ஒரு பத்திரிக்கை பல்வேறு தரவுகளோடு வெளியிட்டதைப் பார்த்தோம். குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைப்பது குறித்து அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. ஒரு பாசிச சிந்தனையுடைய தத்துவம் அதைத் தான் செய்யும் அதற்காக வருத்தப்படாது. பாசிச சிந்தனை விதைக்கப்பட்டவர்களிடம் எந்தக் கருணையும் எதிர்பார்க்க முடியாது என்பதை ஈழத்திலும் மியான்மரிலும் ஹிட்லரின் ஜெர்மனியிலும் குழந்தைகளைக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதின் வழியே அறிவோம். இந்த வன்ம மனநிலையை மிகத் தீவிரமாக இந்துத்துவ சக்திகள் செய்து வருகிறது.

கடந்த அய்ந்து ஆண்டுகளில் இந்தியா முழுக்க பல பள்ளி, கல்லூரிகளில் உள்ள மாணவர்களிடத்து மதப் பாகுபாடு மனநிலை உருவாகியுள்ளது என்று ஆய்வுகள் சொல்கிறது. “நசிய இரோம்” எழுதிய “mothering a muslim” என்ற புத்தகத்தில் அவற்றை விரிவாகப் பதிவு செய்கிறார். இஸ்லாமியக் குழந்தைகளுக்கு பள்ளியில் ஏற்பட்ட மோசமான அனுபவங்களைக் குறிப்பிடுகின்றார். குழந்தைகள் முதன்முதலாக தாங்கள் ஒரு முஸ்லீம் என்பதையும் மற்றவர்களை விடவும் மாறுபட்டவர்கள் என்பதையும் பள்ளியில் தான் தெரிந்து கொள்கிறார்கள். அதுவும் மோசமான சம்பவங்களோடு. “அம்மா நாம பாகிஸ்தான் போகனுமாமா? அது எங்கமா இருக்கு?” என்று நான்கு வயது குழந்தை அம்மாவிடம் கேட்டதை அவளது தாய் பதறிச் சொல்கிறாள். அந்தக் குழந்தையிடம் அந்தக் கேள்வியைக் கேட்ட அதே நான்காம் வகுப்பு குழந்தைக்கு யார் சொல்லிக் கொடுத்தது? கோவையில் கலவரம் நடந்தபின்பு இதே போலத் தான் மதங்கள் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாத இஸ்லாமியக் குழந்தைகளிடம் பள்ளியில் பிரிவினை செய்து பிற குழந்தைகளிடமிருந்து ஆசிரியர்களே இஸ்லாமியக் குழந்தைகளைப் பிரித்து வைத்தார்கள்.

அந்த புத்தகத்தில் மற்றொரு சம்பவம், டெல்லியில் படிக்கும் ஒரு குழந்தை எவ்வளவு குளிர் எடுத்தாலும் மப்ளர் போட்டுக் கொண்டு போகாதாம். அவளது அம்மா மிரட்டிக் கேட்டதால் “மப்ளர் போட்டால் நீ ஹமாசுல சேர்ந்திட்டையா” என்று சக மாணவிகள் கிண்டல் செய்வதாக சொல்லி அழுதிருக்கிறாள். இதில் மிக முக்கியமாக கிண்டல் செய்யும் மற்ற மாணவிகள் மப்ளரோடுதான் பள்ளிக்கு வருகிறார்கள். ஆனால் இஸ்லாமியக் குழந்தைகள் தலைக்கு மப்ளர் போட்டால் அவர்களை தீவிரவாதக் குழுக்களோடு இணைத்துப் பேசுவதை கவலையோடு ஆசிரியர் பதிவு செய்கிறார். இஸ்லாமியக் குழந்தை மப்ளரோடு வந்தால் அவள் இஸ்லாமிய தீவிரவாத குழுக்களோடு சேர்ந்தவள் என்ற மனநிலையை சக மாணவிகளுக்கு உருவாக்கியது யார்???

அந்தப் புத்தகத்தில் வரும் இன்னொரு சம்பவம். ஒரு கல்லூரி மாணவி குறிப்பிடுகிறாள். “தான் பன்னிரண்டாம் வகுப்பில் படிக்கும்போது கூட படித்த மாணவன் அவளை விரும்பியதாகவும் தானும் விரும்பியதாகவும், ஆனால் இருவரும் காதலைச் சொல்லாமல் கண்களில் மட்டுமே பேசிவந்து, கடைசித் தேர்வில் அந்த மாணவன் “உன்னை எனக்குப் பிடிக்கும். நீ முஸ்லிமாக இல்லாமல் இருந்திருந்தால் உன்னைக் காதலித்து இருப்பேன். முஸ்லீம்கள் நல்லவர்கள் இல்லை என்று சொல்கிறார்கள்” என்று அவன் காதலை முறித்ததை சொல்கிறாள் அவள். இஸ்லாமிய வெறுப்பு மனநிலை உருவாக்கத்தால் கிடைக்க வேண்டிய சின்ன சந்தோசங்கள் கூட கிடைப்பதில்லை என்று பதிவு செய்கிறார். இப்படி ஏராளமான அனுபவங்களை அந்தப் புத்தகத்தில் நூல் ஆசிரியர் பதிவு செய்துள்ளார். சோப்பு பவுடர் விளம்பரங்களில் குழந்தைகளால் நிகழ்த்தப்படும் மதச் சார்பற்றத் தன்மையை ரசிக்கும், கொண்டாடும் நாம் அதன் விழுமியங்கள் சமூகத்தில் தொடர்ந்து நிலவ வேண்டுமென்பதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டாமா?

இந்தியாவில் இருக்கும் எல்லாக் கட்சிகளைப் போல பிஜேபியும் ஒரு கட்சியாக இருந்தால் இங்கே எந்தப் பிரச்னையும் இல்லை. மக்கள் அவர்களின் வாக்குச் சீட்டை வைத்து தங்களுக்கான கட்சியைத் தேர்வு செய்து கொள்வார்கள். ஆனால் பிஜேபி என்பது ஹிட்லர், முசோலினி தத்துவங்களை தாங்கிச் செயல்படும் அமைப்பு முறை. இந்த அமைப்பு முறைதான் தேசத்தை நேசிக்கும் எல்லோருக்கும் அச்சமாக உள்ளது. அந்த அச்சத்தின் வெளிப்பாடே ஜனநாயக அமைப்புகளின் கூட்டுச் சேர்க்கை. நமக்குத் தெரியாமல் நம் வீட்டுக் குழந்தைகளை அவர்கள் தத்துவம் நோக்கி இழுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இழுத்த குழந்தைகளின் மனதில் வெறுப்பையும் வன்மத்தையும் வளர்க்கிறார்கள். மதவேற்றுமை இல்லாமல் சகோதரத்துவ எண்ணங்களோடு பழகும் மதச்சார்பற்ற மாண்பை சிதைக்க நினைக்கும் அவர்களின் கனவை எதைக் கொண்டு முறியடிக்கப் போகிறோம்?

- அ.கரீம்

Pin It