முன்னுரை
சந்தை இலக்கியம், சினிமா ஆகியவற்றுக்கு மாற்றான உன்னதமான இலக்கிய சொர்க்கம் ஒன்று நிலவுவதாகவும், அந்த சொர்க்கத்தின் திறவுகோலைக் கையில் வைத்திருக்கும் தேவர்கள் தாங்கள்தான் என்றும் ஒரு கூட்டம் பீற்றித் திரிகிறது. இலக்கிய தரிசனத்தின் ஞானக்கண் தங்கள் முன் மண்டையிலிருந்து பின் மண்டை வரை பரவியிருப்பதாகவும், அதன் மூலம் 360 டிகிரியிலும் ஒரே சமயத்தில் தங்களால் வாழ்க்கையைப் பார்க்க முடியுமென்றும் சாதாரண வாசகர்களை இவர்கள் அச்சுறுத்துகிறார்கள். எவ்வித சித்தாந்தக் கறையும் படியாத காலி மூளைதான் இந்த அழகியல் ஞானக்கண்ணைப் பெறுவதற்கும் அவர்களுடைய இலக்கியத்தை ரசிப்பதற்கும் முன் நிபந்தனை என்றும் கூறுகிறார்கள்.
ஒரு மனிதனின் அழகியல் பார்வையையும் இலக்கிய ரசனையையும் அவனுடைய வாழ்க்கைச் சூழலும் சமூகப் பின்புலமும் கல்வியும் அனைத்துக்கும் மேலாக அவனுடைய கருத்துச் சார்புகளும்தான் உருவாக்குகின்றன. அரசியல், இலக்கிய, பண்பாட்டு விசயங்களில், தான் கொண்டிருக்கும் பார்வையின் வர்க்கத் தன்மையை அறியாத மனிதர்கள் உண்டு; பிறரது பார்வையின் வர்க்கத் தன்மையையும் அதன் பின்புலத்தில் இயங்கும் சமூக உளவியலையும் அடையாளம் காணத்தெரியாத ரசிகர்களும் உண்டு. ஆனால் அத்தகையதொரு பார்வையே இல்லாத மனிதன் இருக்கவே முடியாது. எனவே எவ்வித சித்தாந்த ‘கலர் கண்ணாடி’யும் இன்றி அழகியல் பார்வை மற்றும் படைப்பு அனுபவத்தின் வழியாக உண்மையை தரிசனம் செய்ய இயலும் என்ற இவர்களது கூற்று ஒரு முழு மோசடி.
தங்கள் ஞானநிலைக்கு இவர்கள் அளிக்கும் விளக்கமோ நகைக்கத்தக்கது. ‘நான் வேறு படைப்பின் பரவச நிலையிலிருக்கும் நான் வேறு; ஆகவே என் வாழ்க்கை வேறு படைப்பு வேறு’ என்பதே படைப்பாளிக்கும் படைப்புக்கும் இடையிலான உறவு குறித்து இவர்கள் தரும் விளக்கம். இந்த விளக்கம் இலக்கியத்தின் மீதும் உண்மையின் மீதும் அவர்கள் கொண்ட காதலிலிருந்து பிறக்கவில்லை. சுயநலமும் கோழைத்தனமும் காரியவாதமும் தளும்பி வழியும் தங்கள் இனிய வாழ்க்கையின் மீது இவர்கள் கொண்டிருக்கும் காதல்தான் இந்த தத்துவத்தைப் பிரசவித்திருக்கிறது.
தம் சொந்த வாழ்க்கை மீது மட்டுமே நாட்டம் கொண்ட மனிதர்கள் சமூகத்தில் ஏராளம். அவர்கள் பொதுநலனுக்காகத் தம் வாழ்வை அர்ப்பணித்த மனிதர்களை எதிர்கொள்ள நேரும்போது கடுகளவேனும் குற்ற உணர்வு கொள்கிறார்கள். ஆனால் இந்த இலக்கிய அற்பர்களோ தங்களுடைய சுயநலத்தை இயல்பானதென்றும் பொது நலநாட்டம் என்பதே பொய் வேடமென்றும் பிரகடனம் செய்கிறார்கள். இது கடைந்தெடுத்த முதலாளித்துவ சித்தாந்தம். இதனை அம்பலப்படுத்த கம்யூனிசத்தால் மட்டுமே இயலும் என்பதாலும், மார்க்சியம் மட்டுமே இதன் மனித விரோதத் தன்மையை அம்மணமாக்குவதாலும், இந்த இலக்கியவாதிகள் தம் இயல்பிலேயே கம்யூனிச எதிர்ப்பாளர்களாக இருக்கிறார்கள். தமது கருத்தை அரசியல் பொருளாதாரத் துறைகளில் நியாயப்படுத்த முடியாதென்பதால் அழகியலுக்குள் ஒளிந்து கொள்கிறார்கள். “இலக்கியம் வேறெந்த (அரசியல்) நோக்கத்திற்குமானதல்ல, இலக்கியத்தின் நோக்கம் இலக்கியமே” என்று கொள்கை வகுக்கிறார்கள்.
இந்தக் கொள்கையாளர்களிடையே நடைபெற்று வருகின்ற கருத்துப் போராட்டங்களின் தன்மையைப் பார்த்தாலே இவர்களுடைய அற்பத்தனத்தைப் புரிந்துகொள்ள முடியும். பிரமிள் - சு.ரா., ஞானக்கூத்தன் - சு.ரா., ஜெயமோகன் - சு.ரா என்ற இந்த குழாயடிச் சண்டை, நாச்சார்மட விவகாரத்தில் அதன் உச்சத்தை எட்டியது. திருவாவடுதுறை சின்ன ஆதினத்தின் கொலை முயற்சிக்கு இணையான இந்த அற்பத்தனம் சுந்தர ராமசாமி செத்த உடனே சென்டிமென்ட்டுக்கு மாறிக் கொண்டது. “நினைவின் நதியில்” என்ற சின்ன ஆதினத்தின் இந்த ‘சுய விமர்சனத்திற்கு’ வாசகர்கள் செலுத்திய காணிக்கை தலா ரூபாய் 100. இந்த அற்பவாதக் குட்டையில் குளிப்பதற்கு காசும் கொடுத்து கண்ணீரையும் கொடுத்த வாசகர்களின் ரசனைத் தரத்தை என்னவென்று சொல்ல? தமிழகமே வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருந்தபோது மியூசிக் அகாடமி பிடில் வாசித்துக் கொண்டிருந்தது; சு.ரா. அபிமானிகளோ அவருடைய சாவுக்கு அழுது கொண்டிருந்தார்கள். விசிலடிச்சான் குஞ்சுகள் என்று இவர்களால் இகழப்படும் ரசிகர் மன்ற இளைஞர்கள் கூட தங்களால் இயன்ற மட்டில் மக்களுக்கு உதவிக் கொண்டிருந்தார்கள்.
பொதுவாக இளைஞர்களின் இலக்கிய நாட்டம் என்பது அவர்களுடைய சமூக அக்கறையின் ஒரு வெளிப்பாடாகவே முகிழ்க்கிறது. அவர்களை இலக்கியத்தில் ஆழ அமிழ்த்தி முத்தெடுக்கக் கற்றுக் கொடுப்பதாகக் கூறும் சு.ரா.க்கள் தங்களது கழிவுகளால் நிரம்பியிருக்கும் அற்பவாதக் குட்டையில் இளைஞர்களை ஊறப்போடுகிறார்கள். சமூக உணர்வு மரத்த, தடித்த தோல்கொண்ட வாரிசுகளை உருவாக்குகிறார்கள். இலக்கியத்தின் உன்னதத்தையோ ரசனையின் நுண்திறனையோ இந்தக் குட்டையில் கிடப்பவர்கள் ஒருக்காலும் எட்ட முடியாது. சமூக அக்கறையும், மக்கள் நலன்மீது மாளாக் காதலும், இதயத்திலிருந்து பெருக்கெடுக்காத வரை தாங்கள் கிடக்கும் இடம் அற்பவாதக் குட்டை என்பதை யாரும் உணரக்கூட முடியாது. கம்யூனிசம் என்பது மனித குலத்தின் ஆகச் சிறந்த கனவு. அது சூக்குமமான அற உணர்வோ, சொல்லில் பிடிபடாத அழகோ அல்ல. திண்ணையும் உறக்கமும் இந்தக் கனவைத் தோற்றுவிப்பதில்லை. விழிப்பில், செயலில், வீதியில், இழப்பில், போராட்டம் எனும் உலைக்களத்தில் மட்டுமே உருகிப் பெருகும் கனவிது.
இந்நூலின் முதற்கட்டுரை அற்பவாதத்தின் நினைவுக்குட்டையை, அதன் முடைநாற்றத்தை உணரச் செய்கிறது. இது சு.ரா.வைப் பற்றியது மட்டுமல்ல, இந்தக் குட்டையில் தோன்றியிருக்கும் மற்றும் தோன்றவிருக்கும் சு.ரா.க்களுக்குமானது என்பதை வாசகர் புரிந்து கொள்ள முடியும். மற்ற கட்டுரைகள் புதிய கலாச்சாரம் இதழில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெளியானவை. கம்யூனிச எதிர்ப்பு அவதூறுகளால் நிரம்பியிருக்கும் இலக்கிய மனங்களைத் தூர்வாற இவை உதவும்; உயிர்த் துடிப்புள்ள மனிதவாழ்வின் மணத்தையும் உங்களுக்கு அறிமுகம் செய்யும். அற்பவாதக் குட்டையில் கிடப்பவர்கள் கரையேறுங்கள். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைத்திருப்பவர்கள் சேற்றிலிருந்து காலை எடுங்கள்.
ஆசிரியர் குழு,
புதிய கலாச்சாரம்.
சுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம்
இளநம்பி
சுந்தரராமசாமி அவரது அபிமானிகளின் கூற்றுப்படி, நவீனத்துவத்தின் இலட்சிய உருவமாய், பாதைகள் மயங்கும் அந்தியில், நினைவின் நதியில், பின்னும் உயிர்வாழும் கானலாய், இறுதியில், காற்றில் கலந்த பேரோசையாய் மறைந்து விட்டார். அவரைப்பற்றி நாங்கள் என்ன எழுத முடியும், ஏன் எழுதவேண்டும் என்பது ஒருபுறமிருக்க, அவர் உயிரோடு படைப்பின் முக்கி முனகும் அவஸ்தையோடு வார்த்தைகளை அச்சிட்டு சந்தைப்படுத்தி ‘சிற்றிலக்கிய உலகில் இங்கொருவன் இருக்கின்றேன்’ என்று ஜாக்கி வைத்த பல்லக்கில் பிதாமகராய் உலா வந்த நேரத்தில் கூட அவரை நாங்கள் கண்டு கொண்டதில்லை. அதேசமயம் அப்படி முழுவதுமாய் அவரை ஒதுக்கி வைத்ததாகவும் சொல்லிவிட முடியாது.
லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்பட்ட தமிழகத்தில் அதற்கு அடுத்தபடியாக சு.ராவுக்கு அவரது ரசிகர்கள் ஒரு இலக்கிய ரசிகர் மன்றம் ஆரம்பித்து, அவரது இருப்பை அதாவது லவுகீகத்தில் திளைத்து உள்ளொளியில் தத்தளித்து சிந்தனையில் தோய்ந்து வார்த்தைகளைப் பிரசவிக்கும் மின்னொளித் தருணங்களை பல்வேறு கால, இட, வெளிகளில் உறைய வைத்து ஒரு புகைப்படக் கண்காட்சி நடத்தினார்கள். என்னடா இது, ஏற்கெனவே சினிமாவின் அட்டைக் கத்தி வீரர்கள் தமிழ் அரசியல் வெளியில் தாள்வாள்களைக் கழற்றிக் கொண்டிருக்கும்போது தாள்களையே உச்சிமோந்து புளகாங்கிதம் அடையும் இலக்கியவாதிகளும் அதுவும் ஓரிரு கதைகளும் கவிதைகளும் நாவல்களும் எழுதியவுடன் இப்படிக் கிளம்பி விட்டால் தமிழ்மக்களின் கதியும் அரசியலின் தரமும் என்னவாகுமோ என்று தலையிலடித்துக் கொண்டு சு.ராவின் அந்தப் புகைப்படக் கண்காட்சியை இடக்கு பண்ணி புதிய கலாச்சாரத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். மற்றபடி சு.ரா இருந்தபோதும் இறந்த போதும் எங்களைப் பொறுத்தவரை முக்கியமானவர் இல்லை; என்றாலும், எந்தவொரு முக்கியமின்மையிலும் ஒரு சில முக்கியத்துவங்கள் இருக்கத்தானே செய்கின்றன!
இது நடந்து சுமார் பத்தாண்டுகள் இருக்கும். அப்போது புதிய கலாச்சாரம் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தலைமை அலுவலகம் சென்னை வில்லிவாக்கத்தில் இருந்தது. அங்கே ஒருநாள் அதிகாலையில் தற்செயலாக ஆந்திராவைச் சேர்ந்த தோழர் நிர்மால்யானந்தாவைச் சந்தித்தோம். அவர் ஜனசக்தி என்ற மார்க்சிய லெனினியக் கட்சியினைச் சேர்ந்தவர் என்பதோடு அக்கட்சியின் பிரஜாசாஹிதி என்ற பத்திரிக்கையின் ஆசிரியரும் கூட. அவரது தமிழக வருகையின் நோக்கம் குறித்துக் கேட்டபோது, ‘தமிழகத்தின் இடதுசாரி எழுத்தாளர்களைச் சந்திப்பது’ என்றார். அப்படி ஒரு பட்டியலையும் வைத்திருந்தார். அதில் கோமல் சுவாமிநாதன், கோவை ஞானி, எஸ்.வி. ராஜதுரை, எஸ்.என். நாகராசன் முதலானோர் இருந்ததாக நினைவு. ‘நினைவின் நதி’யில் சில விடுபடுதல்கள் இருக்கலாம். போகட்டும், இந்தப் பட்டியலிலுள்ளோர் அனைவரும் மார்க்சியத்தை பல்வேறு வகைகளில் கடுமையாக எதிர்ப்பவர்களாயிற்றே என்று அவர்களது எழுத்தையும், நூல்களையும், நிலைப்பாட்டினையும் விளக்கிவிட்டு ‘இந்தப் பட்டியலை யார் கொடுத்தது?’ என்று அந்தத் தோழரிடம் கேட்டோம். அவர் சுந்தர ராமசாமி தந்ததாகச் சொன்னார். அடேங்கப்பா, தமிழகத்து இடதுசாரி எழுத்தாளர்களின் அத்தாரிட்டி சு.ரா.தான் என்று ஆந்திர மா.லெ. குழு ஒன்றுக்கு ஒரு பொய்யான தகவல் உறுதியாகப் போய்ச் சேர்ந்திருக்கிறதே என்று உண்மையில் விக்கித்து நின்றோம். அப்போதுதான் சு.ரா.வின் ‘பவர்’ என்னவென்று புரிந்தது.
நடந்தது என்னவென்றால், அந்தத் தோழர் கேரளம் சென்றபோது அங்கிருந்த அவரது கட்சித் தோழர்களிடம் தமிழகத்தின் இடதுசாரிக் கலை இலக்கியப் போக்கு குறித்து விசாரித்திருக்கிறார். கேரளத்துத் தோழர்களும் சு.ரா.தான் முக்கியமான இடதுசாரி எழுத்தாளர், அவரைச் சந்தித்து ஆலோசனை பெறலாம் என்று தோழர் நிர்மால்யானந்தாவை நாகர்கோவிலுக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். நாஞ்சில் மண்ணில் கால் பதித்த அவரும் தமிழகத்தின் இடதுசாரி இலக்கிய வரலாற்றை வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு இடதுசாரி எழுத்தாளரின் மூலமாக அறியப் போகும் உற்சாகத்துடன் சு.ரா.வைச் சந்தித்திருக்கிறார். சு.ரா.வோ தமிழகத்தில் முக்கியமான இடதுசாரி போக்கு இலக்கியம் பத்திரிக்கை என்று பெரிதாக எதுவும் இல்லையென்றும், தனித்தனி எழுத்தாளர்கள்தான் உண்டெனவும் அலட்சியமாகக் கூறிவிட்டு, வேண்டுமானால் அவர்களைப் பார்க்கலாமென மேற்படிப் பட்டியலை முகவரிகளுடன் கொடுத்து அனுப்பிவிட்டார். இதில் எமது முகவரியையும் சு.ரா. கொடுத்திருப்பாரென வாசகர்கள் தவறாக நினைத்து விடக்கூடாது. அந்தத் தோழர் ஆந்திராவிலிருந்து கிளம்பும் போதே எமது முகவரியும் அவரது முகவரிப் பட்டியலில் இருந்திருக்கிறது.
அதன்பிறகு அந்தத் தோழரிடம் சு.ரா.வைப் பற்றியும் அவரது இரண்டாவது நாவலைப்பற்றியும் காலச்சுவடு குறித்தும் அவரிடம் நிலவும் கடைந்தெடுத்த மார்க்சிய வெறுப்பையும் விளக்கினோம். அப்போது கருவறை நுழைவுப் போராட்டம், இறால் பண்ணை அழிப்புப் போராட்டம் ஆகியவை நடந்து முடிந்த நேரம். அந்தப் போராட்டங்களின் வரலாற்றையும், அவை தமிழகத்தில் ஏற்படுத்தியிருந்த பாதிப்பையும், தமிழ் மக்கள் இசைவிழா கலை நிகழ்ச்சிகள் பாடல் ஒலிப்பேழைகள் பத்திரிக்கைகள் அவற்றின் விநியோகம் இவற்றையெல்லாம் விளக்க விளக்க அந்தத் தோழர் விக்கித்து நின்றார். “உங்களைப் பற்றி சு.ரா. ஒன்றும் சொல்லவில்லையே” என்றார். சு.ரா ஏன் சொல்லியிருக்க முடியாது என்ற விளக்கத்துடன் அந்த உரையாடல் முடிந்தது. நாங்களும் சு.ரா.வும் ஒருவரையொருவர் முக்கியத்துவமுடையவர்களாகக் கருதவில்லை. இவ்விசயத்தில் மட்டும் எங்களிடையே ஒத்த கருத்து இருந்தது உண்மை. ஆயினும் தமிழகத்தின் யதார்த்தம் குறித்த தவறான புரிதலை ஆந்திரத்துக்கு அளிவித்த கேரளத்தின் மீது சற்று வருத்தம் ஏற்பட்டது. இது கேரளத்தின் பலவீனமா, சு.ராவின் பலமா என்பது ஒரு சுவாரசியமான கேள்வி.
“சு.ரா.வின் மறைவு மலையாளிகளைப் பொருத்தவரை பக்கத்து வீட்டில் நிகழ்ந்த சோகமல்ல, தங்கள் வீட்டில் நிகழ்ந்த சோகம்” என்று மாத்ருபூமி நாளிதழ் தலையங்கமே எழுதியிருக்கிறது! இதற்கு முன் சு.ரா. கோட்டயத்தில் தான் பிறந்து வாழ்ந்த வீட்டைக் கண்டுபிடித்ததைக் கூட புகைப்படத்துடன் செய்தியாக வெளியிட்டிருந்தது அந்த நாளிதழ். படிப்பறிவிலும் பத்திரிக்கைகள் விநியோகம் படிக்கும் பழக்கத்திலும், பொதுவில் முற்போக்கு சாயலிலும் முன்னணி வகிக்கும் அந்த மாநிலம் சு.ரா.வின் மீது கொண்டுள்ள காதலின் காரணமென்ன? அவரது நாவல்களில் இடம் பெற்றுள்ள மலையாள சூழலும், மாந்தர்களும், அவரது படைப்புகள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டதும், அவரே சில மலையாள நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்ததும் அந்த நேச உறவைத் தோற்றுவித்திருக்கலாம். ஆனாலும் போலி கம்யூனிசத்தில் முங்கி உருவான முற்போக்கு மாயையும், தமிழகத்தை விட ஆர்.எஸ்.எஸ்.ஐ அபாரமாக வளர வைத்த சனாதனப் பிடிப்பும் கொண்ட கேரளத்திற்கு சு.ரா. போன்ற ஆளுமைகள் பொருந்தி வந்திருக்கலாம். போலி கம்யூனிசத்தை மொண்ணையாக எதிர்க்கும் ஒரு போலியான எழுத்துக் கூட அங்கே சாகா வரம் பெற்றுவிடும்.
நகரமயமாக்கமும், பெருகிவரும் நடுத்தரவர்க்கமும் கொண்ட கேரளத்தில் சன் டிவியின் சீரியல்கள் சூர்யா டிவியின் வழியாக வெற்றி பெறுவதும், இங்கு வரும் மலையாளப்படங்களை விட அங்கு போகும் தமிழ்ச் சினிமாக்கள் அதிகநாட்கள் ஓடுவதும் சாத்தியமான கேரளத்தில், சு.ரா. மட்டும் செல்லுபடியாகாமல் போய்விடுவாரா என்ன?
சு.ரா.வை விடுங்கள், தான் முப்பது இட்டலிகள் சாப்பிட்டதையும், மனைவி தோசை சுட்டதையும் கோணல் பக்கங்களாக எழுதித் தள்ளும் சாரு நிவேதிதா எனும் காரியக் கிறுக்கு மூன்று மலையாளப் பத்திரிக்கைகளில் தொடர் எழுதுகிறது என்றால் இந்தக் கொடுமையை எவரிடம் சொல்லி அழ? சா.நி. கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் அவருடைய நாவல் தொடர்பான வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சு கேரளத்தில் ஹிந்து உட்பட ஆறு தினசரிகளில் வெளிவந்ததாம். புட்டு பயிறு பப்படம் ஆப்பம் கடலைக்கறி வாழைக்கப்பம் முதலான அன்றாட உணவு வகைகளில் சலித்திருந்த கேரளத்தில் ஃபாஸ்ட் புட் அயிட்டங்கள் வயிற்றுக்குக் கேடுதான் என்றாலும் வரவேற்பைப் பெறலாம் இல்லையா?
தமிழ் வாழ்க்கையிலிருந்து துண்டித்துக் கொண்டு தம்மைத்தாமே சிற்றரசர்களாகப் பாவித்துக் கொள்ளும் சிறு பத்திரிக்கை இலக்கியவாதிகளின் மனோநிலையும், போலி முற்போக்குச்சாயம் வெளுத்து காலியாக இருக்கும் அரியணைகளில் கோமாளிகளை அமரவைத்து அழகு பார்க்கும் கேரளத்தின் மனோநிலையும் ஒன்றையொன்று கவர்ந்திழுக்கின்றன. இந்த இழுப்பில் அடிபணிந்த கேரளம் அந்த ஆந்திரத் தோழருக்கு தவறான வழியைக் காட்டியிருப்பதில் யார் என்ன செய்ய முடியும்? இதில் கூடுதலான செய்தி என்னவென்றால் கேரளப் பல்கலைக்கழகத்தின் கல்விக்குழு உறுப்பினராகுமாறு சு.ரா.வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாம். அதற்குள் அவர் போய்ச் சேர்ந்து விட்டார். ஒருவேளை அவர் இருந்து உறுப்பினராகியிருந்தால் என்ன நடந்திருக்கும்? கல்வி தனியார்மயமாகும் கேரளத்தில் மாணவர்கள் அதிக இலக்கியம் அதிலும் காலச்சுவடு வழியான இலக்கியங்கள் படிக்க வேண்டும் என்பதை விதியாக்கியிருப்பார். ஊர் பற்றி எரிந்து கொண்டிருந்தாலும் ஒரு கலை இலக்கியவாதியின் மனம் ஊற்றுவதற்குத் தண்ணீரையா தேடும்? மீட்டுவதற்கு ஃபிடிலைத்தானே தேட முடியும்!
சு.ரா.வின் இறுதிப்பயணம் அவர் மிகவும் நேசித்த அமெரிக்காவில் முடிந்தது என்பது தற்செயலான ஒன்றல்ல. அவர் கிரீன் கார்டு வாங்கி அமெரிக்க குடியுரிமை பெற்று, அதன்படி, வருடத்தில் ஆறு மாதம் அமெரிக்காவில் தங்க வேண்டிய கடமையைச் செவ்வனே செயல்படுத்த ஆரம்பித்திருந்தார். அங்கே அவரது இரண்டு மகள்கள் சான்டாக்ரூசிலும், கனெக்டிகட்டிலும் செட்டிலாகியிருந்தார்கள். சான்டாக்ரூசில் அவரது மகளின் மிகப்பெரிய வீடு, நீச்சல்குளம், கண்ணாடி அறை, வெளியே நிற்கும் பசிய மரங்கள், சுத்தமான நெடிய சாலைகள், அழகான பேரங்காடிகள், கம்பீரமான கட்டிடங்கள், தாள் மணம் வீசும் புத்தகக் கடைகள், தொண்ணூறு வயதிலும் காரோட்டிக் கொண்டு வரும் சீமாட்டிகள், எண்பது வயதிலும் கட்டிளங்காளை போலத் திருமணம் செய்யும் சீமான்கள்... என்று அவர் அமெரிக்காவை அணு அணுவாக ரசித்ததை அவரது அமெரிக்க வாழ் நண்பர்கள் எழுத்தாளர்கள் கோகுலக் கண்ணனும், பி.ஏ. கிருஷ்ணனும் பதிவு செய்திருக்கின்றனர். இதுபோக ஒரு கட்டுரையில் அமெரிக்க ஜனநாயகம் தனக்குப் பிடித்திருப்பதாக சு.ரா.வும் ஒப்புதல் தெரிவித்திருக்கிறார். (ஃபுளோரிடாவில் கறுப்பின மக்களைத் துப்பாக்கி முனையில் விரட்டி விட்டு புஷ்ஷை அதிபராக்கிய அதே ஜனநாயகம் தான்.)
சு.ரா.வின் அமெரிக்க மோகம் என்.ஆர்.ஐ. இந்தியர்களின் அமெரிக்கக் காதலிலிருந்து கடுகளவும் வேறுபட்டதல்ல. சு.ரா.வின் மகள்கள் படித்து ஆளாகி அமெரிக்க வாழ் மாப்பிள்ளைகளைக் கல்யாணம் செய்து கொண்டு அங்கேயே ஒன்றிப்போனது தந்தையின் வர்க்க வாழ்நிலைக்குப் பொருத்தமானது என்றாலும் சு.ரா. அதை தன் இலட்சிய விருப்பமாகக் கொண்டிருந்தார் என்பதுதான் முக்கியமானது. அமெரிக்காதான் பூவுலக சொர்க்கம் எனக் கருதும் மேட்டுக்குடி நடுத்தர வர்க்கத்தின் உளப்பாங்கைத்தான், மனிதனின் அக உலகைக் கலைத்துப் பார்த்து நிம்மதியைத் தேடிய இலக்கியவாதியான சு.ரா.வும் பெற்றிருந்தார். அவர் அமெரிக்காவுடன் போக்குவரத்து துவங்கிய இந்த ஐந்து ஆண்டுகளில்தான், அமெரிக்க இராணுவம் ஈராக்கிலும், ஆப்கானிலும் அப்பாவி மக்களின் பச்சை இரத்தம் குடித்து வந்தது. இந்த இரத்தத்தைக் குடித்துத்தான் அமெரிக்கக் கார்கள் ஓடின. இந்த இரத்தத்தைக் கழுவித்தான் அமெரிக்கச் சாலைகள் பளிச்சென்று மின்னின. இந்த இரத்தத்திலான கலவையைக் கொண்டுதான் அமெரிக்கக் கட்டிடங்கள் நெடிதுயர்ந்து நின்றன.
இவையெல்லாம் சு.ரா.வின் மெல்லிய இலக்கிய அக உலகில் மென்மையாகக் கூட உரசவில்லை. அப்படி உரசியிருந்தால் இரத்தப் பணத்தால் வாழும் அந்த நாட்டில் வாழாமல் நாகர்கோயில் சுந்தரவிலாசத்திலேயே அந்திமக் காலத்தை முடித்திருப்பார். அப்படி உரசல் ஏதும் நடக்கவில்லை என்பதுடன் அமெரிக்க வாழ்க்கை அவரை மென்மையாக வருடிக் கொடுத்தது. ஒருவேளை தான் இதுகாறும் செய்து வந்த இலக்கியத்தவத்தினால் அகத்தில் கண்டு உவகையடைந்த அழகுணர்ச்சியின் பௌதீக வெளிப்பாட்டை அவர் அமெரிக்காவில் கண்டிருப்பாரோ!
“நான் வாழ ஆசைப்படும் வாழ்க்கையை நீங்கள் என் கண் எதிரே வாழ்ந்தீர்கள். ஒவ்வொரு முறையும் உங்களைப் பார்க்கும் பொழுது எனக்கும் என் ஆதர்சத்திற்குமுள்ள இடைவெளி குறுகிக் கொண்டே வந்தது. இன்னும் கடக்க வேண்டிய தூரம் சிறிதே என்றபொழுதில் விடை பெற்றுக் கொண்டீர்கள்” என்று கோகுலக்கண்ணன் சு.ரா.வின் இறுதி நாட்களை தரிசிக்க வாய்ப்பு பெற்றவர் அவரது அஞ்சலிக் குறிப்பில் எழுதுகிறார். இவரும் என்.ஆர்.ஐ. தான். சு.ரா.வுடனும் இலக்கியத்துடனும் சில ஆண்டு பரிச்சயம் போலும். கூடவே காலச்சுவடின் ஆலோசனைக் குழுவில் அமெரிக்கப் பிரதிநிதியாகவும் இருக்கிறார். உறவு, நட்பு, தகுதி, பதவி, ரசனை எல்லாம் ஒன்றுக்கொன்று கச்சிதமாகப் பொருந்தியிருப்பதுதான் இலக்கியவாதிகளின் இயற்கையோ? இருக்கட்டும், கோகுல் வாழ விரும்பிய சு.ரா.வின் வாழ்க்கைதான் என்ன, விடை அதே அஞ்சலிக் குறிப்பிலேயே பொதிந்திருக்கிறது.
கோகுல் சு.ரா.வை எப்படி அழைப்பது என்று கேட்க தன்னை சு.ரா. என்று அழைக்கலாமென சு.ரா. பதில் சொல்ல இறுதியில் சு.ரா.வை ‘சார்’ என்று அழைக்கிறாராம் கோகுல். கோகுலின் மகள் “சு.ரா. தாத்தா உனக்கு எப்படி நண்பராக முடியும்” என்று கேட்கிறாளாம். இது அவளுக்கு கடைசி வரை விளங்காத ஒன்றாய் இருந்ததாம். கோகுல் ஒவ்வொரு முறையும் சு.ரா.வைப் பார்த்து நலம் விசாரிப்பாராம். “ரொம்ப நல்லாயிருக்கேன் கோகுல்” என்று சு.ரா. பதிலளிப்பாராம். இருவரும் அமெரிக்காவில் இரு வாரத்திற்கொருமுறை சந்திப்பார்களாம். அதற்கு இரண்டு நாள் முன்பாகவே கோகுலின் மனம் பரபரக்கத் தொடங்கிவிடுமாம். இருவரும் சு.ரா.வின் மகள் வீட்டின் அற்புதமான கண்ணாடி அறையில் அமர்ந்திருப்பார்களாம். கோகுல் கொண்டு வந்த புதிய புத்தகங்கள் மேசையில் இருக்குமாம். அதன் அட்டையை சு.ரா.வின் விரல்கள் சொல்லமுடியாத பிரியத்துடன் நீவிக் கொண்டிருக்குமாம். அதன் பிறகு ஒரு கோப்பை மதுவுடன் கவிதை பற்றிப் பேசுவார்களாம். இதுதான் சு.ரா.வைப் பார்த்து கோகுல் வாழ விரும்பிய வாழ்க்கை!
இந்த அக்கப்போர் அரட்டை வாழ்வை விட ரஜினி ரசிகனாக இருப்பது எவ்வளவோ மேல். அரசியல் சமூகப் பார்வையை விடுங்கள். அமெரிக்கா போன்ற பல்தேசிய இனங்கள் குவிந்து வாழும் நாட்டில் பார்ப்பதற்கும், பேசுவதற்கும், விவாதிப்பதற்கும் எவ்வளவோ விசயங்கள் இருக்கும்போது இருவரின் ரசனை மட்டம் எப்படி குண்டு சட்டியில் குடுகுடுக்கிறது பாருங்கள். இது கோகுல் வாழ விரும்பிய வாழ்க்கை என்பதை விட அவரால் வாழ முடிந்த வாழ்க்கை என்பதே சரியாக இருக்கும். அவரைப் போன்ற முதலாம் தலைமுறை என்.ஆர்.ஐ.கள் சொத்து சேர்த்துவிட்டாலும், அமெரிக்க வாழ்க்கையுடன் ஒன்ற முடியாமல் பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம், பாரதப் பண்பாடு அல்லது இலக்கியம் என்று கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம், அவ்வளவுதான். இதனால்தான் புதிய புத்தகத்தை மோந்து பார்க்கும் சுந்தரராமசாமி ஒரு சூப்பர் ஸ்டாராக கோகுலின் கண்களுக்குத் தெரிகிறார். சரக்கடித்துவிட்டு இலக்கியம் பேசுவதுதான் கவர்ச்சிகரமான வாழ்க்கையென்றால் தமிழ்நாட்டிலேயே லட்சம்பேர் தேறுவார்களே. அதிலும் கூடுதலாக சாருநிவேதிதா போன்றவர்கள் சந்து பொந்துகளிலெல்லாம் நுழைந்து வாழ்க்கையின் ‘இனிமை’யைக் காட்டுவார்கள். ஒருவேளை சாருநிவேதிதா அமெரிக்கக் குடியுரிமை பெற்று அங்கே தங்கியிருந்தால், கிழவர் ராமசாமியைக் கடாசிவிட்டு சாரு பக்கம் தாவியிருப்பார் கோகுல்.
நன்றி: புதிய கலாச்சாரம்
இப்புத்தகம் வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
16, முல்லை நகர் வணிக வளாகம் 2வது நிழற்சாலை,
அசோக் நகர்,
சென்னை - 83,
விலை: ரூ.60