இலக்கிய விமர்சகர்கள், புதுக்கவிதையின் இன்றைய காலக்கட்டத்தை சுணக்கம் கொண்டதாக பார்க்கிறார்கள். அவர்களின் பார்வையெல்லாம் நேற்றைய கவிதைகளின் சாகித்தியத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பதாகவே இருக்கிறது. இன்றைய கவிதைகளின் பரிமாணப் பெருக்கத்தை அவர்கள் கூர்ந்துக் காணுவதில்லை. பெண் கவிஞர்களின் எழுச்சி என்பது இன்றைக்கு மகத்தான ஒன்று. அவர்களின் முயற்சிகளினால்தான் புதுக்கவிதை இன்றைக்கு புதியபல தடங்களில், செழிக்க காட்சித் தருகிறது. அவர்களின் ஜெயம், முரணாளர்களின் மூளைமடிப்புகளில் உறுத்தலாக படிந்து விட்டது. தங்களது எதிர்ப்பை, கலாச்சாரத்தை முன்வைத்து குரல் எழுப்பினார்கள். பயனில்லாமல் போனது. என்றாலும் அதையே தொடந்தார்கள். அப்பவும் அவர்களுக்கு சாதமாக எதுவும் நடந்த பாடில்லை. இப்பொழுது கேலி என்கிற ஆயுதத்தை தூக்கியிருக்கிறார்கள்.

Kanimozhiஎன்பதுகளில், நம் புதுக்கவிதை நன்கு வளர்ந்த நிலையில், அது ஆண்கவிஞர்களின் வித்தைப் பொருளாகவே இருந்தது. அந்த காலக்கட்டத்தில் பெண்களை குறித்து நம் கவிதைகள் பேசிய செய்திகளெல்லாம் மேலோட்டமானவை! அவர்களை குறித்த அகவாய்வோ, பெண்ணியத்தின் விசாலப் பார்வையோ நம் கவிதைக்குள் இல்லை. பெண்களை, நட்சத்திரங்கள், நிலவு, தாமரை, வாசனைத் தரும் மலர்களாகவுமே பார்த்தார்கள். ஆனால், இன்றைக்கு அப்படி அல்ல. பெண்கள் தங்களது அத்தனை மனத்தாக்கங்களையும் கவிதைக்குள் விதைத்து, வாசிப்போரின் மூளையில் நியாயத்தை முளைக்க வைத்திருக்கிறார்கள். பெண்ணியத்தை மதிக்க முரண்டு செய்யும் சமூகத்தை கேள்விகளால் விலாசும் அந்தஸ்த்து கொண்டு விளங்குகிறார்கள். இன்றைக்கு கவிதைக்குள் அவர்கள் நிலவோ, மலரோவல்ல. சகஉயிர்! ஆண் ஆளுமைகளுக்கு நிகரான இடம்!

எழுதப்படாத ஆவணமாய், ஆண்படைப்பாளிகளுக்கு உரைநடை என்கிற அளவில் விட்டுவிட்டு, புதுக்கவிதைப் பரப்பு மொத்தத்தையுமே இன்றைக்கு பெண் கவிஞர்கள், தங்களின் ஆளுமைக்கும் கீழ் சுவிகரித்து விட்டதை இங்கே குறிப்பிடுவது தகும். இது ஏதோ அடாவடியில் அவர்கள் அபகரித்ததல்ல. அவர்கள் தங்களது தீவிரமானகவிதை ஆளுமைக்குப் பிறகே இந்த வெற்றியினை எய்திருக்கிறார்கள்!

இன்றைய பெண் கவிஞர்கள், கவிதைப் படைப்பில் காட்டும் ஆத்மார்த்தமான, தீர்க்கமான, ஈடுப்பாட்டால் புதுக் கவிதைகளின் வளர்ச்சி நேற்றையக் காட்டிலும், அதன் இன்றைய பரிணமிப்பு வியக்கத் தகுந்ததாக இருக்கிறது. இத்தனைக் காலமும் கவிதைக் கட்டுக்குள் ஏற்றப்படாத பெண்சார்ந்த நிஜங்கள், காலதிக்காலமான அவர்களின் ரணங்கள் அதன் வலிகள் என்று அத்தனையும் இன்றைக்கு வரிசைக்கட்டி கவிதையாகிக் கொண்டிருக்கிறது. தடைகள் பலவற்றை தகர்த்து, 'விடுதலையானப் போக்கில்' கவிதைக்குள் அவர்கள் பேசத்தொடங்கியிருப்பது ஓர் சரித்திர நிகழ்வு! அவர்களின் உள்ளும் புறமும் இன்றைய கவிதைகளில் 'உயிரோடு' பதிவு கொள்கிறது. இவர்களின் இந்த எழுச்சியால், நவீன கவிதைக்களம் உயிரோட்டமான செறிவு கொள்வதாக இருக்கிறது.

மாலதி, மாலதி மைத்ரி, கனிமொழி, சல்மா, குட்டி ரேவதி, உமா மகேஸ்வரி என்று தொடங்குகிற பெண் கவிஞர்களின் வரிசை இன்றைக்கு நீளமானது. இவர்கள் அத்தனை பேர்களும் கவிதை நுட்பத்தில் அலாதியான திறமை கொண்டவர்களாகவும், அதில் அவர்கள் சாதிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். கவிதைப் படைப்பில், முன்பு ஆண் படைப்பாளிகளுக்கே கூடிவந்த 'படைப்பு சார்ந்த ஜாலங்கள்' இன்றைக்கு இவர்களிடம் சாதாரணமாகியிருக்கிறது! இவர்களின் அறிவார்ந்த தளம், கவிதைக்குள் மெச்சும்படி வெளிப்படுவதை இன்னொரு அவதானிப்பில் உணரமுடிகிறது.

மறைந்த கவிஞர் மாலதி, தனது கவிதை ஆளுமையில் காட்டிய மேதமை விசாலமானதும் வியக்கத் தகுந்ததும் என்றால், மாலதி மைத்ரியின் கவிதைப் பின்னல் நுட்பத்திலும் நுட்பம் கொண்டது. அவரது கவிதை மொழிகள் காட்டும் சித்திரம் அகல கண் கொண்டுப் பார்க்க தகுந்தது. காலத்தால் நின்று போசும் கவிதைகளின் சொந்தக்காரர். இன்னும்கூட கூடுதலாக அவரது கவிதைகளின் உயரத்தைக் கணிக்கலாம்! தகும். அந்த அளவுக்கு, தனது கவிதைக்குள் அவர் உழைக்கச் செய்திருக்கிறார். சென்ற ஆண்டு காலச்சுவடு வெளியீடாக வந்த இவரது கவிதைத் தொகுப்பான 'நீலி'யைப் படித்தபோது அவரது கவிதை குறித்த என் அபிப்ராயம் முன்னிலும் வலுப்பட்டது.

கயிறுகளின் முனை /எங்கிருந்து இறங்குகின்றன /எனத் தெரியவில்லை /நீல ஆழத்துக்குள் பார்வை /அடைய முடியாத் தூரம் /பலகையில் அமர்ந்து ஆடுகிறேன் /முன்னும் பின்னும் மேலும் கீழும் /ஊஞ்சலின் வேகம் ஓய்ந்தபோது /என் தலைமேல் கொஞ்சம் மேகம் /தொத்திக் கொண்டிருப்பது தெரிந்தது /மீண்டும் உந்திய வேகத்தில் /மேற்கில் இறங்கிக் கொண்டிருக்கும் / பரிதியைக் கால்விரல் முனைகள் /தொட்டு மீண்டன /கொஞ்சம்போல இருட்டத் தொடங்க /கயிறுகளின் வழியே இறங்கிய நிலா / என் உடம்பெல்லாம் வழிந்தது /குளிரில் வெடவெடக்கும் உடம்பில் /முத்து முத்தாக நட்சத்திரங்கள் பூத்துக்குலுங்க / ஊஞ்சலின் வேகம் /முன்னும் பின்னும் மேலும் கீழும் /வெளியெல்லாம் எனது விசை. ( கவிதை: ஊஞ்சல் - மாலதி மைத்ரி )

கனிமொழியின் கவிதைகள், ஒவ்வொரு கட்டத்திலும் உள்ளடக்கத்தில் மெச்சும்படியானப் புதிய பரிமாணத்தை உறுதி செய்வதாகவே இருக்கும். பெண்ணினத்தின் சிக்குண்ட சுயத்தை, அதன் உண்மையை நம் பார்வையில் தைப்பதில் இவரது கவிதைகள் காட்டும் முனைப்பு அலாதியானது. இவரது பின்புலம் யாரையும் நிமிர்ந்து பார்க்கவைக்கக் கூடியது என்றாலும், இவர் இறங்கிவந்து சமூகப் பார்வையோடு, வீழ்ந்து கிடக்கும் பெண்ணியத்தின் தாழாமைக்காக கவிதை வழியேயும், நேரடி களம் கண்டும் போராடுகிறார் என்பது பெரிய விசயம்! தொடர்ந்து, பெண்களின் அடுத்தக் கட்ட போராட்டத்திற்கு வழிவகுப்பவராக இருக்கிறார் என்பதும் வரவேற்கத் தகுந்தது. இதையொட்டிய செயல்பாடுகளை முன்னொடுத்துச் செல்ல அரசு பதவி கூட அவரது சம்மதம் வேண்டி காத்திருப்பதாக அறிவதில் மகிழ்ச்சியுண்டு!

வழக்கமான ஆழ் உறக்கம் / வெடித்து அதிர்ந்தது மௌனம் / மெல்ல அசைந்தது பூமி / கடல்கோளா நிலக்கோளா / ஜன்னலின் வெளியே / தீப்பூக்களாய் தகதகத்தது வானம் / சில்லிட்ட தரையில் / கூசிய பாதம் பதித்து / நடந்தேன்.
*
திருவிழா அணிந்திருந்தது நகரம் / வீதியில் கசகசத்தது / பாலும் தேனும் / புத்தாடை உடுத்திய மனிதர்கள் / பட்சணங்கள் /வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
*
எமது தளபதிகள் பவ்யமாய் / பூத்துப் பஞ்சடைந்த பாட்டியின் / காரைபெயர்ந்த வீட்டுக் கதவைத் / தட்டினார்கள்.
*
கருகித் தேய்ந்த / அவளது காலடியில் / பட்டயங்களை அர்ப்பணித்தார்கள் / சில்லிட்ட தகட்டின் குறுகுறுப்பு / கூச நகர்ந்து கொண்டாள். / மருண்டு சிறுத்த விழிகள் / மிரண்டு விழித்தன / நீண்டு கனத்த தாரைகள் முழங்கின. / முரசுகள் ஆர்ப்பரித்தன/ பற்றப்படாத அப்பேரிளம் பெண்ணின் / மெலிந்து கருத்த விரல்கள் நடுங்கின.
*
தனையர்கள் திரும்பினர் / கொடிகளும் உதிர்ந்த / இதழ்களும் எச்சமிருந்தன / கிழவியின் மந்த செவிகளில் / தூரத்து கோஷங்கள் கரைந்தன.
*
அவளது குறுகிய தாழ்வாரத்தில் / இருந்த பெரும் இருளை / விடியலின் மஞ்சள் கதிர்கள் / தாண்டவில்லை.
*
( 'மடந்தை' - கனிமொழி - காலச்சுவடு - ஜனவரி 2006 )

சல்மாவின் கவிதைகள் காட்டும் துணிவு பெண்கவிஞர்களிடம் முன் எப்பவும் காணக்கிடைக்காத ஒன்று. பெண்ணினத்தின் மீது நிகழும் பாலியல் வஞ்சிப்புகளை பிற பெண்கவிஞர்கள் தங்களது கவிதைகளில் ஏகத்திற்கும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்றாலும், சல்மாவின் கவிதைகளில் அது குறித்த வெளிப்பாடு அபாரமான நேர்த்திக் கொண்டது. அவரது கவிதைகளில் சம்மந்தப்பட்ட பிரச்சனை வெளிப்படும்போதுதான் அந்த செய்தி முழுமையாக முரணாளர்களின் பார்வைக்குபோய் சேர்கிறது. அவர்களது தூக்கத்தையும் கலைத்து, இத்தனை காலமும் அனுபவித்த அவர்களின் நிம்மதியையும் பிடுங்கிக்கொள்கிறது. அத்தனைக்கு சிறப்புக் கொண்டதோர் மொழி அவருக்கு சகஜமாகியும் இருக்கிறது. தமிழ்ப் பிரதேச எல்லை தாண்டி அவர் கவிதைகள் பேசப்படுவது அதன் முழுமைக்கான அங்கீகாரமாகவே கருதுகிறேன். இவரது நாவல், ஐரோப்பிய மொழிகளில் மாற்றம் கொள்வது சந்தோஷம் தருகிறது.

இவ்விடம் /அதிகம் பரிச்சயமில்லையெனினும் /இங்கிருந்து கிளம்புவதென்பது /வீண் துக்கத்தினை உண்டாக்குகிறது.
*
நீ என்னைத் /தீவினையின் எல்லையில்விட்டு /முன்னகர்ந்து செல்வதை அனுசரித்து /தடைசெய்ய மனமின்றி விலகிச்செல்கிறேன்.
*
இடங்களும் மனிதர்களும் உருவாக்கும் /இந்த உறவும்பிரிவும் /படர்வதற்குள் கிளம்புகிறேன் /என் ஆதிகாலக் குகைவாழ்விற்கு.
*
எல்லோருக்கும் போலவே /இங்கிருந்து எடுத்துச் செல்ல /ஞாபகங்கள் உண்டு /விட்டுச்செல்லத்தான் எதுவுமில்லை /விட்டுச் செல்கிறேன் /புறக்கணிப்பின் வெறுமையை /நிராகரிக்கும் வலிமை என்னிடம் எப்போதுமிருந்ததில்லை /என்கிற சிறு குறிப்பை.
*
('இவ்விடம்' - சல்மா - 'ஒரு மாலையும் இன்னொரு மாலையும்' கவிதை தொகுப்பு)

குட்டி ரேவதியின் கவிதைகள், ஆணின் மூர்க்கம் கொண்டவை. ஆண்வர்கத்தோடு சமர் புரிபவை. சிறந்த தமிழ்க் கவிஞர்களின் கவிதைச் சாயலைகளை தனதாக்கிக் கொண்டவை. போராட்டங்கள் நிறைந்த வாழ்வின் கூறுகளை அதே உக்ரத்தோடு சொல்லக் கூடியவை. பெண் கவிஞர்கள் பாலியல் சார்ந்து கவிதைகள் எழுதி, தங்களது சுதந்திர எழுச்சியை பிரகடனம் செய்த பாங்கினை நாம் அறிவோம். அந்த படியான கவிதைகளுக்கு ஆரம்பச் சுழி போட்டவர் இவர். அவரது 'முலைகள்'தான் முதல்வித்து.

முலைகள் / சதுப்பு நிலக்குமிழிகள் / பருவத்தின் வரப்புகளில் / மெல்ல அவை பொங்கி மலர்வதை / அதிசயத்துக் காத்தேன் /எவரேடும் ஏதும் பேசாமல் / என்னோடே எப்போதும் / பாடுகின்றன / விம்மலை / காதலை / போதையை... / மாறிடும் பருவங்களில் / நாற்றங்கால்களில் / கிளர்ச்சியூட்ட அவை மறந்ததில்லை / தவத்தில் / திமிறிய பாவனையையும் / காமச்சுண்டுதலில் /இசையின் ஓர்மையையும் கொண்டெழுகின்றன / ஆலிங்கனப் பிழிதலில் அன்பையும் / சிசு கண்ட அதிர்வில் / குருதியின் பாலையும் / சாறெடுக்கின்றன / ஒரு நிறைவேறாத காதலில் / துடைத்தகற்ற முடியாத / இரு கண்ணீர்த் துளிகளாய்த் தேங்கித் /தளும்புகின்றன. ( 'முலைகள்' - குட்டி ரேவதி - வயம் - கவிதைக்கான காலாண்டிதழ் - ஜனவரி 2001 )

உமா மகேஸ்வரியின் கவிதை ஆளுமைக் குறித்து தனி அத்தியாயமே எழுதலாம். பெண் கவிஞர்களில் உமா மகேஸ்வரிக்கு ஓர் தனி இடம் உண்டு. பிற பெண்கவிஞர்களிடம் கவிதை நுட்பம் என்பது, ஆண் கவிஞர்களின் கவிதை நுட்பத்தை ஒட்டியும், அதை விஞ்சியும், ஓர்வித கம்பீரத்தன்மையுடன் இருப்பதை காண்பது மாதிரி, இவர் கவிதைகளில் காண முடியாது. கவிதையில் அவர் உமா மகேஸ்வரியின் கவிதைமொழி என்பது அவருக்கே சொந்தமானது. கவிதையில் அவர் ஆளும் வார்த்தைகள் மட்டுமல்ல அதன் கடைசி முற்றுப் புள்ளியும்கூட கவியாற்றில் நனைத்து உலர்த்தியப் பாங்காய் இருக்கும். அது எளிமையும், இலேசுமான சாதுமுகம் கொண்டது. நிழலுக்கு ஒதுங்கிய மரம் மாதிரி நமக்கு ஓர்வித நிம்மதியையும், அகக்குளிர்ச்சியையும் தருபவை.

அவரது உரைநடை கூட அப்படிதான். கவிதையாகவே எழுதி உரை நடையாய் நீட்டியது மாதிரி இருக்கும். சாதாரண கட்டுரை என்றால்கூட நாலுவரி எழுதினார் என்றால் அதில் மூணே முக்கால் வரி கவிதையாகவே இருக்கும்! கவிதை புனையும்போது மட்டும் அவர் கவிதை மனம் கொள்வதில்லை வாழ்வின் எல்லா பரிமாணங்களையும் கவிதையாகவே காணக்கூடியவர். 'யாரும் யாருடனும் இல்லை' என்கிற அவரது நாவல் அதற்கோர் நல்ல உதாரணம். தனது படைப்புகளுக்காக தொடர்ந்து இவர் இலக்கிய அங்கீகாரம்கூடிய பல பராட்டுதல்களையும், பரிசுகளையும் பெற்றுள்ளார். வரும் ஆண்டுகளில், சாகித்திய அக்கடமியின் பரிசு இவரை தேடி வருமென்றாலும்.... ஆச்சரியப்படுவதற்கில்லை.

குழந்தைக்கால் நுனிகள் என / ஆரம்ப மழைத்தடங்கள் என் / கார்த்திகைக் கோலத்தில் / நேர்த்திதான் பார்ப்பதற்கு / தீபங்க ளுக்குப் பதிலாக நீர்ச்சுடர்கள் / வலுத்துப் பெருத்ததில் / வர்ணப்பொடிக் கரைசல் / திரவ வானவில்லாக / நின்றதும் மறுபடி வரைதல் / முடித்து திரும்பும் முன் / வெடித்துச் சாடும் மழையின் ஆக்ரோஷம் / கனவின் சிதைவை / கண்ணுற்றேன் இம்முறை. (கவிதை - உமா மகேஸ்வரி - 'வெறும் பொழுது' கவிதை தொகுப்பு)

பெண்கவிஞர்கள், கவிதைப் படைப்புகளின் வழியே பெண்ணியத்தை நிலைநிறுத்த முனைவதில் எனக்கு மாறுப்பட்ட கருத்துண்டு. புதுக்கவிதை என்கிற உபயோகமற்ற தடங்கள் வழியே பெண்ணியத்தை எத்தனை பேர்களிடம் இவர்கள் கொண்டுபோய் சேர்த்திட முடியும்? அதிகப்பட்சம் போனால் ஊருக்கு ஒருவரிடம் கொண்டு சேர்க்கலாம்! அதுகூட உறுதியாக சொல்ல முடியாது. அறிவு நிலைப் பெண்களின் இந்தவகை தேர்வும் / முயற்சியும் எத்தனைக்கு சரியானது?

இவர்கள், ஊர் ஊராகபோய் கூடி நின்று ஆணாதிக்க சமூகத்தின் முதுகுத் தண்டில் குண்டாம்தடிக் கொண்டு தாக்கும் பட்சம் கூட அது நெளிந்துக் கொடுக்குமே தவிர சுரணை கொள்ளாது. இது ஏன் நம் பெண்கவிஞர்களுக்குப் புரிவதே இல்லை? கவிதைப் படைப்புகளுக்குள் பற்றவைக்கும் அக்னிக்குஞ்சு நாளை ஜுவாலையாக கொழுந்து விட்டு மேல் எழலாம் என்று அவர்கள் நினைப்பதற்கு வலுவான முன் உதாரணம் கிடையாது. அறிவு நிலையிலான போர் இது என்றாலும், அதற்கும் இந்த புதுக் கவிதைத் தடம் உதவாது. புதுக்கவிதையின் பிடிப்படாத / புரியாத அந்த விசேச இறுக்கம் எதிராளிகளுக்கு இரட்டைச் சந்தோஷத்தையே தரும்.

மேலே நான் கண்டிருக்கிற பெண்கவிஞர்களைப் பற்றிய மதிப்பீடுகளுடன், அவர்களது கவிதைவரிகளை நீங்கள் அசை போட பிணைத்திருந்தேன். அசை போட்டவர்கள், அந்த சுவையை மீண்டும் நினைவில் கொண்டு வர முடியுமென்றால், அவர்கள் ஏதோ நேரப்போக்கிற்காக எழுதவில்லை என்கிற யதார்த்தம் உங்களுக்குப் பிடிபடும். அந்த கவிதைகள் கொண்டிருந்த ரசனைகளின் படிமம், மொழியின் சூட்சமம் என நீங்கள் கண்டடைந்து மலைத்திருக்கும் பட்சம் உங்களுக்கோர் நிஜம் சட்டென பிடிபடும். அது, பெண்கவிஞர்களை குறித்த உயர்ந்த மதிப்பீடாகவே இருக்கும். அதையொட்டிய உங்களது துணைக்கணிப்பில், அவர்கள் கேலிக்குறியவர்கள் அல்ல என்பதை திரும்பத் திரும்ப ஒப்புக்கொள்வீர்கள்.

நம்முடைய நவீன இலக்கிய உலகம், கலை இலக்கியவாதிகளாலும், அவர்களது நுட்பம் சார்ந்த படைப்பு மனதினாலும், தனிப்பட்ட மேதன்மையாலும் சிறந்து விளங்குகிறது என்றாலும் இன்னும் இங்கே, மோசமான ஆணாக்கத்தின் எச்சங்கள் இல்லாமலில்லை. முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு மட்டுமல்ல பூஸ்வாக்களுக்கும் இந்த இலக்கிய வட்டம் சொந்தமானதாகத்தான் இருக்கிறது. அவர்களில் சிலர் இங்கே மைனர் வேஷமும் கட்டக்கூடியவர்கள். கேலியும் கிண்டலும் அவர்களது தற்காப்பு ஆயுதம். அடுத்தவர்களின் உயரம் அவர்களுக்கு ஆகாது. அடிமைகளின் சுதந்திரத் தாகம் ரணமாக ஒலிக்கும் அவர்களுக்கு. இவர்களால் பெண்கவிஞர்கள், திரும்பத் திரும்ப பிறாண்டல்களுக்கு உள்ளாகியபடியே இருக்கிறார்கள்.

நம் பெண்கவிஞர்கள் கலாச்சார கட்டுக்களை மீறுபவர்களாக இருக்கிறார்கள் என்றும், பாலியல் கவிதைகளை தாராளாக எழுதுகிறார்கள் என்றும் சென்ற ஆண்டுகளில் அந்த மேதாவிகள் 'குய்யோ... முய்யோ'வென கத்தினார்கள். கத்தியவர்கள் இலக்கியத்தின் பக்கம் பாதியென்றால், மீதி தமிழ் சினிமாவின் எடுப்பிடிகள். சினிமா ஒரு வெளிப்படையான பாலியல் பூமி. அங்கிருந்து பாலியலையும், கலாச்சாரத்தையும் காக்க சிலர் குரல் கொடுத்தார்கள் என்பதுதான் காலக்கொடுமை. இதன் தொடர்ச்சியாக, அவர்களது சினிமாவுக்குள் ஒரு பெண்கவிஞரை நாகரீகமற்ற முறையில் தூஷனையும் செய்தார்கள். இதற்கான எதிர்வினை, இன்னும் கணக்கு தீராமல்தான் இருக்கிறது.

இன்றைக்கு, நம் பெண்கவிஞர்கள் எல்லோரும் மீண்டும் ஒருமுறை கேலிக்கு இலக்காகியிருக்கிறார்கள். இந்த முறை கேலி, நம் இலக்கிய வட்டத்தை சேர்ந்த, மைனர் வேஷம் கட்டுகிற ஒரு கனவானின் உபயம். குதர்க்கமான தமிழ்ச் சினிமா படப் பெயர்களை பெண் கவிஞர்களுக்குச் சூட்டி, பட்டம் வழங்கியிருப்பதாக மகிழ்கிறார்கள். கவிதைகளின் வழியே பெண்ணியம் பேச முற்படுகிற பெண்கவிஞர்கள் இப்படி தொடர்ந்து இம்ஸிக்கப்படுவது எந்த வகையில் நியாயம்? அவர்களது கவிதைகளை விமர்சிக்க மட்டும்தான் சக இலக்கியவாதிகளுக்கு உரிமை இருக்கிறதே தவிர, இப்படி இம்ஸிக்க அல்ல. நம் முதுகை நாம் பார்க்க முடியாததிலான செளகரியம் இங்கே எல்லோருக்கும் வசதியாகிப் போகிறது.

***
- தாஜ்