கீற்றில் தேட...

குட்டு வாங்கிய வலியில் இதை நான் பதிகிறேன். யாரிடம் இந்தக் குட்டு எதற்காக இந்த குட்டு என்பது போகப் போக புரியும்.

'கற்க கசடற கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக..' என்பதை எப்போதோ மறந்துவிட்டோம். அதற்குப் பதில்
‘கற்க கசடற கற்றவை கற்றபின்
விற்க அதற்குத் தக ...’.என்று எதிர்க் குரலாக ஒரு வியாபார சாத்தான் ஊடுருவிக் கிடக்கிறது. ஆம் இன்று விரிந்திருக்கும் பள்ளிகள் கல்வியை போதிப்பதில்லை. மாறாக ஒரு மாணவனுக்கு மரணத்தைப் பற்றி சிந்திக்கத் தூண்டுகிறது.

school students 334ஆறாம் வகுப்பில் படிக்கும் மாணவனுக்கு கல்லூரியில் முதல் ஆண்டு கற்றுக் கொடுக்கப்படும் 'செல்' பற்றிய விளக்க உரை கற்றுக் கொடுக்கப்படுகிறது. கேட்டால் , அது நீட் அடித்தளக் கல்வி என்கிறார்கள். ஒரு மாணவன் பனிரெண்டாம் வகுப்பு முடிந்து, எழுதப் போகும் நீட் தேர்வுக்கு ஏன் அவன் ஆறாம் வகுப்பிலிருந்து பயற்சி எடுக்க வேண்டும் என்று நம்மில் யாரும் கேள்வி வைப்பது கிடையாது. ஒரு மாணவனுக்கு என்ன பிடிக்கும் என்பதே நமக்குத் தெரியாது…. பிறகு எங்கே போய் மற்றவற்றை கேட்பது?

நீட் தேர்வு வேண்டும்.. வேண்டாம்… என்ற விவாதத்திற்குள் நான் இல்லை. என்னுடைய கேள்வி, மாணவர்களிடம் ஏன் கல்வி திணிக்கப்படுகிறது என்பதுதான். மருத்துவனும் , பொறியாளனும் மட்டும் போதுமா? முதலில் மனிதர்களை நற்பண்புகளுடன் விதைப்போம்.

பள்ளிகளில் ஒரு பாடத்தை எடுப்பதற்கு முன் மாணவர்களின் ஒத்துழைப்பு அவசியம். அதுவும் மனரீதியான ஒத்துழைப்பு. இப்போது அது கிடைப்பதில்லை. அவனுக்கு ஒரே பாடம்
வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு ஆசிரியர்களால் திரும்பத் திரும்ப திணிக்கப்படுகிறது. அவன் ஒரு மனிதனாக அல்லாமல் ஒரு இயந்திரமாக்கப்படுகிறான்.

பத்தாவது படிக்கும் ஒரு மாணவன் ஒரு தேர்வுக்காக படித்துக் கொண்டிருக்கிறான் . அப்போது அவன் நாசியில் வழியும் சளியைக் கூட கவனிக்காமல் படித்துக் கொண்டிருக்கிறேன். இதற்கு செறிவு என்பதல்ல, உடலுணர்வு அற்று போகுதல் என்பதே பொருள்.

காலை ஐந்து மணிக்கு எழுகிறான் . வீட்டுப் பாடங்களை முடிக்கிறான். ஆறுமணிக்கு பயற்சிக் கூடத்திற்குப் போகிறான். ஏழரை மணிக்கு அவனது பள்ளி வாகனம் பலத்த சத்தத்துடன் ஒலி எழுப்பானோடு வருகிறது. 80% சதவிகித குழந்தைகளுக்கு பயத்தின் வடுவை விட்டுச் செல்கிறது ஒரு பள்ளிவாகனத்தின் ஒலி எழுப்பான். சிற்றுண்டியை பாதியும், மீதியுமாய் தின்று செல்லும் குழந்தைகள் பல….

“நீராரும் கடலுடுத்த ...” எனத் தொடங்கும் தனியார் பள்ளிகள், தமிழை கடவுள் வாழ்த்தோடு மறந்து போவதுண்டு . காரணம் அதற்கு மேல் அங்கு ஆங்கிலேயர் ஆட்சிதான்.

ஒரு மாணவனுக்கு ஆங்கிலத்தில் புரியாத ஒன்றை தமிழில் விளக்கினால் அதை இ.பி.கோ குற்றமாகப் பார்க்கிறது பள்ளி. இங்கு அவனுள் எல்லாம் திணிக்கப்படுகிறது. தேர்வில் மாணவன் தோல்வியைத் தழுவினால், ஆசிரியன் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை…. பள்ளி மேலாண்மை ஒரு மாணவனை ஆராய்வதில்லை மாறாக வியாபாரத்தை ஆழ்நிலை வரை ஆராய்கிறது.

' தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்ற வரி பெற்றோர்களைச் சேரும். அவர்கள் சிலவற்றில் ……. மன்னிக்கவும் ... பலவற்றில் தோற்றுவிட்டு இப்போது அவர்களின் கனவுகளை தங்கள் பிள்ளைகள் மீது சுமத்துகிறார்கள். 'எப்படியாவது நீ டாக்டர் ஆயிரு..'.என்பது அவர்கள் வைக்கும் கோரிக்கையல்ல... கட்டளை .

அது ஒரு மாணவனின் நிஜபிம்பத்தை உடைக்கிறது . அவன் கனவுகள், இலக்குகள் மறைந்தே போகிறது. இதனால் மனஉளைச்சல்…. பரிசு மரணம்.

இந்த ஆண்டு இதுவரை பத்தொன்பது பேர் 'கோட்டா' என்ற பயற்சிக்கூடத்தில் மனஉளைச்சலால் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளன‌ர். இனியும் தொடரும் … இதற்கெல்லாம் யார் பதில் சொல்லப் போகிறார்கள்?

இந்த அழுத்தத்திற்கு காரணம் வடக்கிலிருந்து புறப்பட்டுக் கொண்டிருக்கும் பயற்சி மையங்கள். இதற்கு அரசுப் பள்ளிகள் விதிவிலக்கல்ல.

'எப்படியாவது… .. அவனை....’ பெற்றோர் விண்ணப்பம்

'யோவ் ...எப்படியாவது எப்படியாவதுனா ... முதல்ல அவன் படிக்கணும் இல்ல...'

அவனை நீ படிக்கணும் …. என்பது ஆசிரியனின் கதறல்.

இப்போது ஆசிரியனுக்கும் மாணவனுக்கும் இருக்கும் தூரம் அதிகமாகிவிட்டது. காரணம் சுய மரியாதை .. ஆசிரியர் மாணவர்களிடம் எதிர்பார்ப்பதும்... மாணவர்கள் ஆசிரியரிடம் எதிர்பார்ப்பதும்

ஒரு புரிதலுக்கு பிரம்பு தேவையில்லை, தண்டனை கட்டாயமில்லை. அன்பான அதட்டல் மொழி போதும்.. பேயும் இறங்கிப் படிக்கும்.

மாணவன் ஆசிரியரைப் பார்த்து பயந்தது போய் ஆசிரியன் மாணவனைப் பார்த்து பயப்படும் சூழல். ஆசிரியனைக் கொல்லக் கூட துணிகிறது அறம் செய்யும் கரம். குருகுல வழிக் கல்வி இன்று குருவை மதிக்கத் தவறுகிறது. எப்படி விவசாயிற்கு ஒரு மண்புழுவின் பலம் தெரியுமோ அதுபோல ஆசிரியனுக்கு ஒரு மாணவனின் பலம் தெரியும் ...

இங்கு கல்வித் திட்டமே தவறாகத் தான் இருக்கிறது. "இனப்பெருக்கம் " ... பாடத்தை ஒரு புரிதலுடன் நடத்த முடிவதில்லை… ஆசிரியைகள் மேலங்கி மாற்றுவதில் முடிந்திருக்கிறது பாலியல் கல்வி. இங்கு நல்ல கல்வி தவறாகப் போதிக்கப்படுகிறது. நம் நாட்டில் நல்ல அரசியல்வாதி தேவைப்படுகிறான், விஞ்ஞானி தேவைப்படுகிறான், விவசாயி தேவைப்படுகிறான், காவலர் தேவைப்படுகிறான். மேலாக ஒரு நல்ல மனிதன் தேவைப்படுகிறான்... இதையெல்லாம் விட்டு விட்டு இனியும் மாணவர்களை கல்வி என்ற பெயரில் அச்சுறுத்துவதையும், பெற்றோர்களின் நீர்த்துப்போன ஆசைகளைத் திணிப்பதையும், வறுமையைக் காட்டி வெறுமையை வளர்ப்பதையும் அடியோடு ஒழிப்போம் ... அவர்கள் சுயமாக சுவாசிக்க…...காற்றுக்கு வழிவிடுவோம்

என் ஆசிரியரிடம் நான் வாங்கிய குட்டுக்கு ஒரு ஆசிரியனாய் என்னால் முடிந்ததைப் பதிகிறேன்... இனி குட்டு வாங்குவதும் வாங்காததும் உங்கள் முடிவும். முடிவே நல்லதோர் ஆரம்பமாகட்டும்.

- சன்மது