தமிழ்நாடு மாணவர் கழக கலந்துரையாடல் 22.4.18 அன்று சேலம் குரங்குசாவடியில் காலை 11 மணிக்கு துவங்கியது . மாணவர் கழக அமைப் பாளர் பாரி சிவக்குமார் தலைமை தாங்கினார்.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு மாணவர்களின் பல்வேறு சிக்கல்கள் குறித்து விளக்கி யும், மாணவர் கழகம் வரும் நாட்களில் எடுக்க வேண்டிய செயல் திட்டம் குறித்தும் பேசினார். மேலும் தோழர்களின் பல்வேறு கேள்வி களுக்கு கழகத் தலைவர் பதில் கூறினார். நிகழ்வில் சென்னை இளவரசன், சேலம் நாகராஜ், விக்னேஷ் அறிவுமதி, இலக்கியன், திருப்பூர் கனல்மதி, தேன்மொழி, பொள்ளாச்சி சபரி, ஈரோடு பிரதாப், கோவை வைத்தீஸ்வரி, பிரசாந்த், நாமக்கல் மனோஜ், சேலம் விக்னேஷ் கவுதம் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
இந்தியாவுக்கே முன்மாதிரியாக சமூகநீதிக் கொள்கையை கடைப் பிடித்து வரும் தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கு ப்ளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. இதனால் கிராமப்புற உழைக்கும் மக்களின் பிள்ளைகள், மருத்துவம் படித்து வந்தனர். இப்போது ‘நீட்’ எனும் தேர்வினால் அவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. ஆகவே ‘நீட்’ தேர்வை நிரந்தரமாக இரத்து செய்ய தமிழ்நாடு மாணவர் கழகம் வலியுறுத்துகிறது.
தமிழ்நாடு முழுவதும் மே மாதம் 2ஆம் தேதி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு, தமிழக அரசு இயற்றிய ‘நீட்’ விலக்குத் தொடர்பான சட்ட மசோதாவுக்கு இசைவு கோரியும்; மாணவர்களின் பொறியியல் படிப்பைத் தடுக்கும் அரசாணை 51, 52ஐ இரத்து செய்து அவர்களுக்கு முன்புபோல அரசாணை 92ஐ நடைமுறைப்படுத்தக் கோரியும்; கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்தக் கோரியும்; போதிய மாணவர் இல்லை என காரணம் காட்டி அரசு பள்ளிகள் மூடுவதைக் கண்டித்தும்; மண்ணின் மைந்தர்களுக்கே வேலை கொடு - போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி யும் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டுமென தமிழ்நாடு மாணவர் கழகம் கேட்டுக் கொள்கிறது.
வெளி மாநிலங்களில் உயர் கல்விப் படிக்கும் தமிழக மாணவர்கள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் இறப்பதைத் தடுக்காத மத்திய, மாநில அரசுகளை வன்மையாகக் கண்டிப்பதோடு வெளி மாநிலங் களில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு மாணவர் கழகம் கேட்டுக் கொள்கிறது.
தமிழகக் கல்லூரிகளில் மாணவர்கள் ஜாதிய துன்புறுத்தலுக் குள்ளாவது தொடர்ந்து வருவதால் இதனைத் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துவதோடு, அதைக் கண்காணிக்க பேராசிரியர் தகுதி உள்ள தனி அலுவலரை நியமிக்கும் படி தமிழ்நாடு மாணவர் கழகம் வலியுறுத்துகிறது.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத மாணவர் இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்தக் கோரியும், பட்டியலின பழங்குடி மாணவர்களின் பொறியியல் படிப்பைத் தடுக்கும் அரசாணை 51,52ஐ இரத்து செய்யக் கோரியும், மாவட்ட ஆட்சியாளர்களிடம் மனு அளிப்பதென தீர்மானிக்கப்பட்டது.
மே மாதம் 22, 23 தேதிகளில் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் சென்னையில் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர் கழகத் தோழர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி வகுப்பு நடத்துவது எனவும் தீர்மானிக்கப் பட்டது.