ஒவ்வொரு ஆண்டும் போதுமான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் இந்தியாவில் சராசரியாக 10 லட்சம் பேர் மரணமடைகிறார்கள், 70 லட்சம் பேருக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சையே கிடைப்பதில்லை. 80 சதவீத சிறப்பு மருத்துவர்கள் நகர்ப்புறங்களில்தான் என்கிறது 12வது ஐந்தாண்டுத் திட்டத்தின் எக்ஸ்ரே, ஸ்கேன் அறிக்கைகள். இந்த அவலத்திற்கு எந்த ஆப்ரேசனோ, வெண்டிலேட்டர் சிகிச்சையோ, ஏன் சொட்டு மருந்தோ சத்து மருந்தோ தடுப்பூசியோ கூடக் கொடுக்காமல் டெதஸ்கோப்பிற்குப் பதிலாக கழுத்தில் தாம்புக்கயிறை மாட்டிக்கொண்டு நீட் தேர்வு நடத்தக் கிளம்பிவிட்டது மருத்துவக்கவுன்சில். நீட் தேர்வுகளால் இந்த எண்ணிக்கையும் அவலமும் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. நீட் தேர்வினால் கிராமப்புற, ஏழை மாணவர்கள் மருத்துவம் படித்து டாக்டர் ஆவது இனி அரிது. நீட் பயிற்சிக்கே பல லட்சம் செலவழித்து மருத்துவக்கல்லூரியிலும் பல லட்சங்கள் செலவழித்து டாக்டராகிற நகர்ப்புற மாணவர்களுக்கு கிராமம் என்றால் என்ன என்றே தெரியாது. பிறகெப்படி அவர்களின் சேவை கிராமத்தை நோக்கித் திரும்பும்.

medical council of india

நீட் தேர்வுகளை யார் கொண்டு வந்தார்கள் ;

நீட் தேர்வுகளை அறிமுகப்படுத்தியது மத்திய அரசா, மருத்துவக் கவுன்சிலா, சட்டம் இயற்றப்பட்டதா இல்லையா அதற்கு யார் ஆதரித்து எதிர்த்து வாக்களித்தார்கள் என பலரும் ரூம் போட்டு யோசித்து வருகிறார்கள். இந்திய மருத்துவக் கவுன்சில் ஏற்கனவே இருந்த மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் உயர்படிப்பு ஒழுங்குமுறைகளை திருத்தம் செய்து 21.12.2010 அன்று இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டது. Notification No. MCI-31(1)/2010-MED/49068 " மற்றும் Notification No.MCI.18(1)/2010-MED/49070. அவை மருத்துவ பட்டப்படிப்பு ஒழுங்குமுறைகள் திருத்தம் 2010 மருத்துவ உயர்படிப்பு ஒழுங்குமுறைகள் திருத்தம் 2010 ஆகும். அதே போல் பல் மருத்துவ கவுன்சிலும் 31.5.2012 அன்று பல்மருத்துவப் பட்டப்படிப்பு மற்றும் உயர்படிப்பு சேர்க்கை தொடர்பான இரண்டு அறிவுப்புகளை வெளியிட்டது. இந்த அறிவிப்புகள் மூலமே நீட் தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

2012 க்கு முன்னர் மத்திய பாடத்திட்ட வாரியம் அகில இந்திய முன் மருத்துவத் தேர்வுகளை All India Pre-Medical Test (AIPMT). நடத்திவந்தது. இது மத்திய அரசுக் கல்லூரிகளுக்கு மட்டும் பொருந்தும். ஒரே நாடு ஒரே தேர்வு என்ற கொள்கையில் இந்தியா முழுவதும் மத்திய அரசு, அனைத்து மாநில அரசு, தனியார், சிறுபாண்மையினர் கல்லூரி மாணவர் சேர்க்கைகளுக்காக நடத்துவதாக அறிவித்தது. அப்போது பல மாநில அரசுகள், தனியார் கல்லூரிகளிலிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் அந்த வருடம் நடத்தவில்லை. பதுங்கிப் பிறகு 2013-14 கல்வியாண்டில் நடத்தப்படுமென 2012ல் மீண்டும் அறிவிப்பு வெளியிட்டது.

மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரம் உள்ளதா? 

இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1933 ன் படி 1934ல் அமைக்கப்பட்ட தன்னாட்சி அமைப்புதான் இந்திய மருத்துவ கவுன்சில். இந்தியவிலுள்ள மருத்துவ கல்லூரிகளுக்கும் அவற்றின் மாணவர்கள் எண்ணிக்கை, புதிய பிரிவுகள், துறைகளுக்கு ஒப்புதல் அளிப்பது , பாடத்திட்டம், தேர்வுகள், கட்டமைப்புகள் போன்றவைகளுக்கு நெறிமுறைகள் வகுப்பது மேற்பார்வை செய்வது, மருத்துவர்களுக்கு உரிமை அளிப்பது, மருத்துவ சேவையை கண்காணிப்பது புகார்களை விசாரிப்பது, நடவடிக்கைகள் எடுப்பது போன்றவை இதன் பணிகளாகும். ஆனால் மருத்துக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் இதற்கு எந்த அதிகாரமும் இல்லை. நீட் போன்ற சேர்க்கை தொடர்பான தேர்வுகள் நடத்துவதற்கும் அதிகாரம் இல்லை. இதனை உறுதி செய்து நீட் தேர்வு தொடர்பான வேலூர் கிருத்துவ மருத்துவக்கல்லூரி வழக்கில் அல்டாமஸ் கபீர் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு 18.07.2013 அன்று தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை அனில் தவே தலைமையிலான அமர்வு 11.04.2016 அன்று திரும்பப் பெற்றுக்கொண்டு வழக்கை புதிய அமர்வு மீண்டும் விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. எனவே மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரம் உள்ளதா இல்லையா என இறுதித் தீர்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை. இதற்கிடையே மத்திய பிஜேபி அரசு நீட் தேர்வு நடத்துவதற்கு மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் 24.5.2016 அன்று அவசரச் சட்டமும் 08.08.2016 அன்று பாராளுமன்ற சட்டமும் இயற்றியது. இது உச்சநீதிமன்றம் மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்துவிடக்கூடாது என முன் எச்சரிக்கையுடன் இயற்றப்பட்டது என்பதை சொல்லவா வேண்டும். நீட் தேர்வை நாங்கள் கொண்டுவரவில்லை. காங்கிரஸ் அரசுதான் கொண்டுவந்தது என்று கூறுகிற பிஜேபி அதனை ரத்து செய்வதற்கு பதிலாக சட்ட அந்தஸ்து அளிக்கிற சட்டத்தை ஏன் இயற்ற வேண்டும். நீட் தேர்வில் பிஜேபியின் இந்துத்துவா உயர்சாதிக்கூறுகள் அதிகம் இருப்பதால் அதனை வாரியணைத்து நெய்யும், வெண்ணையும், ஊட்டச்சத்தும் கொடுத்து அமுல்பேபி போல் கொழு கொழுவென வளர்த்து வருகிறது. அதிகாரம் உள்ளதா இல்லையா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யப்பட்டும். அதற்கு தகுதி உள்ளதா இல்லையா என்பதை மக்கள் மன்றத்தில் நாம் எடுத்துரைப்போம். 

கேத்தன் தேசாயும் தேசத்தின் கேடுகளும்

 2001 ல் வாஜ்பாய் தலைமையிலான பிஜேபி ஆட்சியின் போது மருத்துவக்கவுன்சிலின் தலைவராக கேத்தன் தேசாய் என்ற குஜராத் மருத்துவர் தேர்வு செய்யப்பட்டார். 1983ல் மருத்துவப்பட்டம். அதே ஆண்டு அகமதாபாத் மருத்துவக்கல்லூரி சிறுநீரகத்துறைத் தலைவர். விரைவில் குஜராத் பலகலை செணட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர். 1990ல் குஜராத் மருத்துவக் கவுன்சில் தலைவர். 2001ல் இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர். இந்திய பல்மருத்துவ கவுன்சில் தலைவர். இவ்வளவு உயர்ந்த பதவிகளை அடுக்கடுக்காக அதிவிரைவில் ஆட்கொண்ட இவர் பெரிய ஆராய்ச்சியாளரா, சாதனையாளரா, மருத்துவத்தில் புரட்சி ஏதும் செய்தாரா, ஏதாவது ஒரு புதிய மருந்தை, சிகிச்சை முறையை கண்டுபிடித்தாரா என்றால் ஏதும் இல்லை. சரி விடுங்கள் பதவிக்காலத்திலாவது மருத்துவக் கல்வி, மருத்துவ சேவை இவற்றில் ஏதாவது சாதனைகள் செய்தாரா ?, மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகளின் முறைகேடுகள், கட்டணக்கொள்ளை, கிட்னி திருட்டு என்று எதையாவது ஒழித்தாரா என்றால் அதுவும் இல்லை. ஆனால் 2009 -2010 ஆண்டுகளில் இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தது. பல குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஒரு தனியார் கல்லூரிக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக முன்பனமாக 2 கூடி லஞ்சம் பெற்றதாக சிபிஐ இவரை 22.4.2010 அன்று கைது செய்து சிறையில் அடைத்தது. இவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில் 1.5 கிலோ தங்கக் கட்டிகள், 80 கிலோ வெள்ளிக்கட்டிகள், கட்டுக்கட்டாக பலகோடி ரூபாய் நோட்டுகள் வங்கி லாக்கரில் 35 லட்சம் மதிப்புடைய தங்கமும் கைப்பற்றப்பட்டது. அவர் மருத்துவ கவுன்சிலிலிருந்து நீக்கப்பட்டதுடன் அவருடைய மருத்துவ பதிவும் ரத்து செய்யப்பட்டது. ஜாமீனில் வெளிவந்த கேத்தன் தேசாய் பிஜேபி செல்வாக்குடன் குஜராத் மருத்துவ கவுன்சில் உறுப்பினராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். புறவாசல் வழியாக 2016ல் உலக மருத்துவ சங்கத்தின் தலைவராகவும் உயர்ந்துவிட்டார். இவர் மீதான ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் அவர் மீண்டும் மாநில, தேச, சர்வதேச அமைப்புகளின் அதிகார பீடத்தை கைப்பற்றுகிறார் என்றால் இந்த அமைப்புகளின் நம்பகத்தன்மையை நாம் உரசிப்பார்க்க வேண்டியுள்ளது. இன்றும் 10 ருபாய்க்கும் 20 ருபாய்க்கும் ஏழை மக்களுக்கு சிகிச்சையளிக்கிற டாக்டர்களுக்கு எந்தப் பதவியும் கிடைப்பதில்லை. ஆனால் கேத்தன் தேசாய்களுக்கு மட்டும் எல்லா பதவிகளும் கிடைக்கிறது. 

வல்லுநர் குழுவும் வல்லரசுகள் சதியும் :

கேத்தன் தேசாயின் கைதைத் தொடர்ந்து 15.05.2010 அன்று மருத்துவக் கவுன்சில் கலைக்கப்பட்டு வல்லுநர் குழு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. இது தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு அல்ல. மத்திய அரசு நேரடியாக நியமித்தக் குழு. உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் போன்ற நாசகர பொருளாதாரக் கொள்கைகளை இந்தியாவில் தீவிரமாக அமுல்படுத்துகிற கட்சிகள் தான் காங்கிரசும் பிஜேபியும். பொருளாதாரக் கொள்கைகளில் அவைகளுக்குள் வேறுபாடில்லை. இந்தியாவின் பொது மருத்துவக் கட்டமைப்பைச் சிதைத்து தனியார் மருத்துவத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற முதலாளித்துவ வல்லரசுகளின் திட்டத்தை செயல்படுத்த மருத்துவ சேர்க்கையில் நாடுமுழுவதும் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று பாராளுமன்றத்தில் அறிவித்தது காங்கிரஸ் அரசு. உடனே அதன் நேரடி ஏஜெண்டுகளான இந்த வல்லுநர் குழு நாங்கள் நடத்துகிறோம் என்று முந்திக்கொண்டு உருவாக்கியதுதான் நீட் தேர்வு. அதுமட்டுமல்ல இழந்த பெருமையையும் முக்கியத்துவத்தையும் மருத்துவ கவுன்சில் மீட்டெடுக்க வேண்டும் என்றால் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிற முக்கியப் பிரட்சனையை கையிலெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அதற்காக அதன் மண்டையில் பளிச்சென எரிந்த பல்புதான் நீட் தேர்வு. வல்லுநர் குழு மருத்துவக் கவுன்சிலுக்கு ஆக்சிஜன் செலுத்தி அதனுடைய கட்டமைப்பை, செயல்பாடுகளை, வெளிப்படைத் தன்மையை, தரத்தை சீரமைக்க உருப்படியாய் எதையும் யோசிக்கக்கூட இல்லை.

மருத்துவர்களின் கிளப்

2013ல் மீண்டும் மருத்துவ கவுன்சில் தேர்தல்கள் நடத்தப்பட்டது. டாக்டர் ஜெயஸ்ரீபென் மேத்தா என்ற பெண் மருத்துவர் தலைவரானார். அதன் பிறகும் தீவிர சிகிச்சைப்பிரிவில் கிடைந்த அதன் செயல்பாடுகளை, நற்பெயரை குணப்படுத்த இயலவில்லை.

“ மருத்துவ கவுன்சிலின் ஊழல்களும் பொறுப்பேற்றல் அற்ற தன்மையும் நாட்டின் மருத்துவ கல்விக்கு அச்சுருத்தலாக உள்ளது, அதனை ஆய்வுக்கு உட்படுத்தவில்லையெனில் அது நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் இழப்புகள் ஏற்படும். அதன் தன்னாட்சிக்கும் பொறுப்பேற்றலுக்கும் சமநிலை ஏற்படுத்தப்படவேண்டும். மருத்துவ கவுன்சிலை முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும்”. என்று சமஜ்வாடி கட்சி எம்.பி. யான ராம்கோபால் யாதவ் தலைமையிலான 31 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற நிலைக்குழு 08.03.2016 அன்று அறிக்கையளித்துள்ளது. மருத்துவ கவுன்சில் கடந்த பல பத்தாண்டுகளாக தனது முக்கிய பணிகளையும் கடைமைகளையும் நிறைவேற்றத் தவறிவிட்டது என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் மருத்துவ சேவையை இந்த அமைப்பு கண்காணிப்பதால் மருத்துவ கல்வியை கண்காணிக்க வேறு புதிய அமைப்பு ஏற்படுத்த வேண்டுமெனவும் பரிந்துரைத்துள்ளது. மருத்துவக் கவுன்சில் செல்வாக்கு மிக்க மருத்துவர்களின் கிளப் ஆகத்தான் உள்ளது என கடுமையாக சாடியுள்ளது. இந்த கிளப்பை சுத்தம் செய்ய ஏதாவது நீட் தேர்வு நடத்தப்படுமா ?

புற்றுநோயின் பிடியில் மருத்துவக் கவுன்சில்

வெளிநாட்டில் மருத்துவப் பட்டம் பெற்று இந்தியாவில் உரிய தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாமல் மோசடியாக நிரந்தர மருத்துவர் பதிவு பெற்றதாக கடந்த 20.03.2014 அன்று 8 டாக்டர்கள் மீதும் மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு தாக்கல் செய்தது.

சமீபத்தில் கூட கேரள பிஜேபி தலைவர்களில் ஒருவரான ஆர்.எஸ். வினோத் என்பவர் தன்னிடம் புதிய மருத்துவ கல்லூரி அனுமதி பெற்றுத்தர மருத்துவக் கவுன்சிலுக்கு 17 கோடி லஞ்சம் தரவேண்டும் என்று முன்பனமாக 5.60 கோடி பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக கேரளா, வர்கலாவில் இயங்கிவரும் எஸ்.ஆர். கல்வி நிறுவனங்களின் உரிமையாளர் ஆர்.ஷாஜி என்பவர் குற்றம் சுமத்தியுள்ளார். இவருடைய பாரத் தர்மஜன சேனா என்ற கட்சி கடந்த 2016 கேரள சட்டமன்ற தேர்தலில் பிஜேபியுடன் கூட்டணியாக போட்டியிட்டது. எனவே இவரது புகாரை விசாரித்த பிஜேபியின் இரு நபர் குழு குற்றச்சாட்டு உண்மையென அறிக்கையளித்தது. இந்த அறிக்கை கசிந்து நாளிதழ்களில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 07.09.2017 அன்று உத்திரப்பிரதேசத்தில் ஒரு மருத்துவக் கல்லூரியை அங்கீகரிப்பதற்காக சுகாதார அமைச்சக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற கல்லூரி நிர்வாகிகள் உட்பட 4 நபர்களை சிபிஐ கைது செய்துள்ளது. நாடு முழுவதும் மிதந்தலைந்து திரிகிற ஊழல் புகார்களில் வயிறு வளர்க்கிற மருத்துவக் கவுன்சிலுக்கு நீட் தேர்வு நடத்த எந்தத் தகுதியும் இல்லை.

  இப்படியாப்பட்ட ஊழல்களால் சீர்கேடுகளால் புற்று நோயின் பிடியில் சிக்கி மருத்துவக் கவுன்சில் உருக்குலைந்து, உயிருக்கு போராடி வருகிறது. அது தன்னைத் தானே உடனடியாக ஐ.சி.யு. வில் சேர்த்துச் குணப்படுத்திக் கொள்வதுதான் உடனடித் தேவை. அது தனக்கு எந்த சிகிச்சையும் எடுக்காமல் கல்வியின் தரத்தை உயர்த்துகிறேன் பேர்வழி என்று நீட் தேர்வு நடத்த ஆப்ரேசன் தியேட்டருக்கு கிளம்பியதால் ஒவ்வாமை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது நமது சமூகம். இதனுடைய தவறான சிகிச்சையால் சமூகஆரோக்கியமும் சமூக நீதியும் பலியாகத் துவங்கியுள்ளது. நமது தங்கை அனிதாவை பலிகொண்ட இந்த அநீதி ஆப்ரேசன் இன்னும் எத்தனை மாணவர்களை காவு வாங்கப் போகிறது.

புதிய மருத்துவ ஆணையமும் பழைய நீட் தேர்வும் ;

நிதி ஆயுக்கின் கீழ் அதன் உதவித் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில் அமைக்கப்பட்ட குழு 07.08.2016 அன்று சமர்பித்த அறிக்கையில் மருத்துவக் கவுன்சிலுக்குப் பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க வேண்டுமென கருத்து தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்ல அந்த ஆணையம் நீட் தேர்வு நடத்த வேண்டும் என்றும் சொல்லியுள்ளது. அதன்படி தேசிய மருத்துவ ஆணைய மசோதா 2017 பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது இயற்றப்பட்டவுடன் மருத்துவக் கவுன்சிலுக்குப் பதில் புதிய ஆணையம் வந்துவிடும். ஆனால் நீட் தேர்வு தொடரும். ஊசி புதுசு. மருந்து பழசு. அவ்வளவுதான் வித்தியாசம். அதுமட்டுமல்ல புதிய ஆணையத்தில் மருத்துவர்கள் அல்லாதவர்களும் மத்திய அரசால் நேரடியாக நியமிக்கப்படுவார்கள். அதுவும் மத்திய அரசின் நேரடி ஏஜெண்டாகவே செயல்படும்.

சமூக ஆரோக்கியத்திற்கும் எதிரானது;

நாட்டிற்கும் மருத்துவத்துறைக்கும் சவாலாக இருந்துவருகிற போலி மருத்துவர்கள், மருத்துவமனைகளின் தரம், முறைகேடுகள், கட்டணக்கொள்ளை போன்றவற்றை கண்டறிய கட்டுப்படுத்த இயலாமல் மத்திய அரசும் மருத்துவக்கவுன்சிலும் தோல்வியடைந்துள்ளது. இதற்கு அவர்கள் என்ன பதில் சொல்வார்கள் . எத்துனை மருத்துவக் கல்லூரிகளில் அடிப்படை கட்டமைப்புகள், தேவையான பேராசிரியர்கள், ஊழியர்கள், ஆய்வுக்கூடங்கள் இல்லாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு என்ன நடவடிக்கைகள் எடுப்பார்கள். மருத்துவச் சிகிச்சை கிடைக்காமல் ஒவ்வொரு வருடம் மரணமடைகிற 10 லட்சம் இந்தியர்களை எப்படி காப்பாற்றுவார்கள். சிறப்பு மருத்துவச் சிகிச்சை கிடைக்காத 70 லட்சம் இந்தியர்களுக்கு ஏதாவது திட்டம் இருக்கிறதா. நகர்ப்புறங்களில் உள்ள 80 சதவீத சிறப்பு மருத்துவர்களில் சிறு பகுதியை கிராமப்புறத்திற்கு திருப்ப ஏதாவது வழிவகையுள்ளதா. இதையெல்லாம்விட நீட் தேர்வு முக்கியமா. அல்லது நீட் தேர்வு நடத்தினால் இவையெல்லாம் சரியாகிவிடுமா. புதிய மருத்துவ ஆணையம் இதனை சரிபடுத்திவிடுமா. நமது நாட்டிற்குத் தேவை நீட் தேர்வல்ல. மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைகள் முறைகேடுகளைத் தடுப்பது, பொது சுகாதாரத்தை, பொது மருத்துவத்தை பலப்படுத்துவது. அடித்தட்டு மக்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் மருத்துவ வசதியை உறுதிப்படுத்துவது. கிராமப்புறங்களில் மருத்துவ சேவையை அதிகரிப்பது. இதற்கு எதிர்திசையில் பயனிக்கிற நீட் தேர்வு சமூக நீதிக்கு மட்டுமல்ல சமூக ஆரோக்கியத்திற்கும் எதிரானது.

- மு.ஆனந்தன்

Pin It