சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கை இன்னும் இந்த நாடு மறந்திருக்க வாய்ப்பில்லை. முஸ்லிம்களை இந்த மண்ணில் இருந்து அழித்தொழித்து, அகன்ற பார்ப்பன இந்து சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க இந்துக் கடவுள்களால் இந்த பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஏழைத்தாயின் மகனாகப் பிறந்த மோடியை அவர் தன் பிறப்பின் லட்சியத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன்பாகவே கொல்லத் துணிந்த மிலேச்சர்களை மோடி தன் பரிவாரங்களின் துணையுடன் வேட்டையாடிய நிகழ்வு அது. இத்தனை நாளாக இந்து தர்மத்தை நிலைநாட்ட செய்யப்பட்ட புனிதக் கொலையாக கருதப்பட்டு வந்த சோராபுதீன் போலிமோதல் கொலை வழக்கு தற்போது அதன் ஆடைகளை கலைந்திருக்கின்றது. அது காசுக்காக அமித்ஷா, காவல்துறையினரை வைத்து செய்த அப்பட்டமான பச்சைப் படுகொலை என்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றது.

modi and amit shah 6392005 ஆம் ஆண்டு சோராபுதீன் குஜராத்துக்கு கடத்தி வரப்பட்டு, குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநில போலிசாரால் கூட்டாக இணைந்து போலி மோதலில் கொலை செய்யப்பட்டார். அவரது மனைவியான கவுசர் பீ விஷ ஊசி போட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கு அரசுத் தரப்பில் சொல்லப்பட்ட விளக்கம், இவர்கள் லஸ்கர் இ தொய்பா அமைப்பின் தூண்டுதலின் பேரில் மோடியைக் கொல்ல திட்டமிட்டார்கள் என்பது. இந்தக் கொலைகளை நேரில் பார்த்த சாட்சியான துளசிராம் பிரஜாபதி 2006 ஆம் ஆண்டு குஜராத் மாநில எல்லையருகே போலி மோதலில் கொல்லப்பட்டான். இந்த வழக்கு தொடர்பாக 2010 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அமித்ஷா, மூன்று மாதங்கள் கழித்து ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். சோராபுதீனும் அவரது மனைவியும் முஸ்லீம்கள், அதனால் அவர்கள் லஸ்கர் இ தொய்பா அமைப்பின் தூண்டுதலில் பேரில் மோடியைக் கொல்ல சதி செய்தார்கள், அதனால் கொல்லப்பட்டார்கள் என்று கதை எழுதிய மோடி - அமித்ஷா கும்பல் எதற்காக துளசிராம் பிரஜாபதி என்ற இந்துவைக் கொலை செய்தார்கள்?

மோடி - அமித்ஷா கும்பலால் குஜராத்தில் அரங்கேற்றப்பட்ட அனைத்து போலி மோதல் கொலைகளுக்கும் சங்கிலித் தொடர் போன்று ஒரு நெருங்கிய தொடர்பிருக்கின்றது. போலி மோதலில் கொல்லப்பட்ட சோராபுதீன் மோடியின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தவன். ராஜஸ்தானிலுள்ள கிரிமினல் கும்பலுடன் ரவுடி சோராபுதீனுக்கு நெருங்கிய தொடர்பிருந்தது. அதன் மூலம் மோடி அமித்ஷா கும்பல் தனது திரைமறைவுக் குற்றங்களை சோராபுதீன் மூலம் அரங்கேற்றிக் கொண்டு இருந்தது. இவன் மூலமாகத்தான் ஹரேன் பாண்டியா கொல்லப்பட்டார். யார் இந்த ஹரேன் பாண்டியா?. இவர் மோடியின் அமைச்சரவையில் வருவாய்த் துறை இணை அமைச்சராக இருந்தவர். மோடியின் நெருங்கிய நண்பர். ஆனால் குஜராத் இனப்படுகொலை தொடர்பாக மக்கள் நீதிமன்றம் என்ற அமைப்பு நடத்திய விசாரணையில் இனப்படுகொலையில் மோடிக்கு உள்ள பங்கு குறித்து சாட்சியம் அளித்து அப்ரூவராக மாறியதால் மோடியின் கொலைப் பட்டியலில் இடம் பிடித்தவர். இந்த ஹரேன் பாண்டியாவைக் கொலை செய்ய மோடி - அமித்ஷா கும்பல் சோராபுதீனை கூலிக்கு அமர்த்தியது. மார்ச் 26, 2003 ஆம் ஆண்டு மோடி - அமித்ஷா கும்பல் நினைத்தது போலவே நடுவீதியில் காருக்குள் மர்மமான முறையில் ஹரேன் பாண்டியா இறந்து கிடந்தார். ஆனால் மோடி கும்பல் அவரை முஸ்லீம் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுவிட்டதாக நாடகமாடி, வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது. சிபிஐ தனது பங்கிற்கு 12 முஸ்லிம்களைக் கைது செய்து சிறையில் அடைத்து, மோடியின் இமாலயப் புளுகை உண்மையாக்கப் பார்த்தது. ஆனால் குஜராத் உயர்நீதி மன்றம் அந்த 12 பேரும் குற்றமற்றவர்கள் என்று கூறி அவர்களை விடுதலை செய்தது.

மோடி - அமித்ஷா கும்பல் குஜராத் இனப் படுகொலை வழக்கில் இருந்து தப்பிக்க என்னென்ன‌ அயோக்கியத்தனங்களையும், படுகொலைகளையும் செய்ய முடியுமோ, அதை எல்லாம் கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் செய்தது; இன்றும் செய்து கொண்டிருக்கின்றது. மோடி - அமித்ஷா கும்பலுக்காக ஹரேன் பாண்டியாவைக் கொன்ற சோரபுதீனை அமித்ஷா கும்பல் அகமதாபாத்தின் பிரபல கட்டுமான நிறுவன அதிபர்களான பட்டேல் சகோதரர்களிடம் இருந்து 70 லட்ச ரூபாயை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு காவல்துறையினரை கூலிப்படையாக பயன்படுத்தி, போலி மோதலில் கொன்றிருக்கின்றது. அவர் மட்டும் அல்லாமல் தீவிரவாத தடுப்புப்படை முன்னாள் டிஐஜி வன்சாராவும் இந்தக் கொலையை நிகழ்த்துவதற்காக ரூ 60 லட்சத்தை மூன்று தவணைகளில் பெற்றிருக்கின்றார் என்ற உண்மையை இந்தப் போலி மோதல் கொலை குறித்து விசாரணை செய்த அமிதாப் தாக்கூர் தற்போது தனது அறிக்கையில் வெளிப்படுத்தி இருக்கின்றார். மேலும் இந்தக் கொலையில் அமித்ஷா, தீவிரவாத தடுப்புப் பிரிவு டிஐஜி டி.ஜி.வன்ஜாரா தவிர்த்து, உதய்பூர் முன்னாள் எஸ்.பி. தினேஷ் எம்.என்., அகமதாபாத் முன்னாள் போலீஸ் எஸ்.பி. ராஜ்குமார் பாண்டியன், அகமதாபாத் முன்னாள் போலீஸ் துணை ஆணையர் அபய் சுதாஸமா ஆகியோரும் அரசியல் ரீதியாக ஆதாயம் அடைந்தனர் என்றும், சோராபுதீன் ஷேக் என்கவுண்டரில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் அரசியல்ரீதியாக அல்லது பண ரீதியாக ஆதாயம் அடைந்தது தொடர்பான எந்தவிதமான விசாரணையையும் எதிர்கொள்ளவில்லை என்றும், வன்சாரா, பாண்டியன், தினேஷ், சுதாஸ்மா ஆகியோர் உத்தரவுப்படிதான் குற்றம் சாட்டப்பட்ட 20 அதிகாரிகளும் செயல்பட்டனர் என்றும் அமிதாப் தாக்கூர் குற்றம்சாட்டி இருக்கின்றார்.

மேலும் துளசிராம் பிரஜாபதி போலி என்கவுன்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், பாஜக தலைவர் அமித் ஷா, ஐபிஎஸ் அதிகாரிகள் தினேஷ், ராஜ்குமார் பாண்டியன் மற்றும் டி.ஜி.வன்சரா ஆகியோர் முதன்மை சதிகாரர்கள் என்றும் இவ்வழக்கின் தலைமை விசாரணை அதிகாரி சந்தீப் தம்காட்ஜ் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்தான் இவ்வழக்கை 2012ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் கண்காணித்து வந்தவர் ஆவார்.

'கால் டேட்டா ரெக்கார்டுகள்' அடிப்படையிலும் குற்றவாளிகள் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சந்தீப் தெரிவித்துள்ளார். அமித் ஷா, வன்சாரா, பாண்டியன், தினேஷ் ஆகியோரிடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில், என்கவுன்டர் சதித்திட்டம் தீட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் சந்தீப் தனது சாட்சியத்தில் கூறியுள்ளார் (நன்றி:ஒன் இண்டியா)

காவி பயங்கரவாதிகள் எப்படி அரசு அமைப்புகளை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி காசுக்கு கொலை செய்யும் கூலிப்படைகளாக மாற்றி வைத்திருக்கின்றார்கள் என்பது மீண்டுமொரு முறை அம்பலப்பட்டு இருக்கின்றது. தற்போது சோராபுதீன் போலி மோதல் கொலை காசுக்காகவும், ஹரேன் பாண்டியாவின் கொலையை மறைப்பதற்காகவும் நடத்தப்பட்டது என்பது அப்பட்டமாக வெளியாகி இருக்கின்றது. ஆனால் என்ன நடந்துவிடப் போகின்றது? சோராபுதீன் போலி மோதல் கொலையில் ஒரே சாட்சியாக இருந்த துளசிராம் பிரஜாபதி போலி மோதல் கொலை வழக்கில் இருந்து அமித்ஷாவை விடுவித்த உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி சதாசிவம் கேரள கவர்னராக அலங்கரித்துக் கொண்டு இருக்கின்றார். ஆனால் சோராபுதீன் என்கவுன்டர் வழக்கில் அமித்ஷாவுக்கு சாதகமாக செயல்பட மறுத்த சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா பரலோகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அமித்ஷா போன்ற நபர்கள் காசுக்காகவும், தன்னுடைய பதவியை காப்பாற்றிக் கொள்ளவும் எந்த எல்லைக்கும் போவார்கள். பணிந்து போனால் இகலோகத்திலேயே பதவி, பணிய மறுத்தால் பரலோகப் பதவி - இதுதான் மோடி & அமித்ஷா கும்பலின் தத்துவம். அமித்ஷா கூலிப்படையை வைத்து கொலை செய்வதில் மட்டும் வல்லவர் இல்லை; ஒட்டுக்காக சாதிக் கலவரங்களை தூண்டிவிடுவது, மதக் கலவரங்களை தூண்டி விடுவது, பெண்களை வேவு பார்ப்பது என அனைத்திலுமே கைதேர்ந்த கிரிமினல் ஆவார். இது போன்ற பாசிஸ்ட்களைத்தான் மக்கள் தங்களை மீட்க வந்த மீட்பராகக் கருதுகின்றார்கள் என்பது இந்த நாட்டைப் பிடித்த சாபக்கேடு ஆகும். கொலைகாரர்களும், ஊழல்வாதிகளும், சாதியவாதிகளும், மதவாதிகளும் மிக எளிமையாக மக்கள் முன் தங்களை புனிதர்களாக கட்டமைத்துக் கொள்கின்றார்கள். இந்தச் சூழ்நிலையை மாற்றாத வரையில் இது போன்ற குற்றக் கும்பல்களிடம் மக்கள் ஏமாறுவதை நம்மால் தடுக்க முடியாது.

- செ.கார்கி

Pin It