டெல்லியை முற்றுகையிட்டு பஞ்சாப் மற்றும் அரியானா விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை பாசிச மோடி அரசும், டெல்லியின் கெஜ்ரிவால் அரசும் கடுமையாக ஒடுக்கி வருகின்றன.

முள்வேலிகளையும், தடுப்பரண்களையும், குழிகளையும், கண்ணீர் புகைக்குண்டுகளையும் தாண்டி நாட்டையே அடிமைப்படுத்தும் முதலாளிகளின் அடியாள்கள் வசிக்கும் டெல்லி கோட்டையை முற்றுகையிட ‘டெல்லி சலோ’ என மூர்க்கமாக முன்னேறிக் கொண்டு இருக்கின்றார்கள்.

டெல்லியை நோக்கி முன்னேறும் ஒவ்வொரு விவசாயியையும் அடித்து விரட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் மீது மிருகத்தனமான தாக்குதலை நடத்திக் கொண்டே, விவசாயிகளின் போராட்ட உணர்வை மழுங்கடிக்க முடியாது என்பதை உணர்ந்து பாசிச பிஜேபி அரசு பேச்சுவார்த்தை நாடகத்தையும் நடத்திக் கொண்டிருக்கின்றது.tear gas explodes at farmers protestவிளைபொருள் வியாபார மற்றும் வர்த்தக மசோதா 2020, விவசாயிகள் விலை உறுதி மற்றும் வேளாண் சேவைகள் தொடர்பான ஒப்பந்த மசோதா 2020, அத்தியாவசியப் பொருட்கள் மசோதா 2020 போன்ற மக்கள் விரோத மசோதாக்களை பாராளுமன்ற நிலைக்குழுவுக்கே அனுப்பாமல் மக்களவையில் தனக்கிருக்கும் பெரும்பான்மையைப் பயன்படுத்தி விவசாய விரோத மசோதாக்களை நிறைவேற்றியதோடு மாநிலங்களவையில் தனக்குப் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் குரல் வாக்கெடுப்பு என்ற மோசடி மூலம் இந்த மசோதாக்களை மோடி அரசு நிறைவேற்றியது

அதற்கு எதிராக விவசாயிகள் நடத்திய மாபெரும் போராட்டத்தின் விளைவாக அந்த மூன்று மசோதாக்களையும் அரசு திரும்பப் பெற்றது.

ஆனால் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளான குறைந்தபட்ச ஆதார விலைக்கான தனிச்சட்டம், எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், 2020-2021-ஆம் ஆண்டுகளில் போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் ரத்து செய்யப்பட வேண்டும், லக்கிம்பூர் கேரி வழக்கின் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், மாசுக்கட்டுப்பாட்டு சட்டத்தில் விவசாயிகளை சேர்க்கக் கூடாது, விவசாயிகளுக்கு உடனடி கடன் தள்ளுபடி வழங்க வேண்டும், 58 வயதுக்கு அதிகமான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் போன்றவற்றை கண்டுகொள்ளவே இல்லை.

குறிப்பாக MSP (Minimum Support Price) குறைந்த பட்ச ஆதார விலைக்கான தனிச்சட்டத்தை நிறைவேற்றாமல் விவசாயிகள் விவசாயத்தை விட்டு ஓடவும், அவர்கள் கடனாளியாக மாறவும், தற்கொலை செய்துகொண்டு சாகவும் விட்டிருக்கின்றது.

விவசாயப் பொருட்களை, விவசாயிகளிடம் இருந்து அரசாங்கம் என்ன விலைக்கு வாங்க வேண்டும் என்று ஒரு விலை நிர்ணயம் செய்யப்படும். அது தான் குறைந்த பட்ச ஆதார விலை என்று அழைக்கப்படுகிறது.

விவசாயப் பொருட்களின் விலை சரியும் போது அந்த சரிவில் இருந்து விவசாயிகள் பொருளாதாரரீதியான இழப்பை சந்திப்பதைத் தடுக்கவும், விவசாயப் பொருட்களை வாங்குபவர்கள், மிகக் குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் இருந்து பேரம்பேசி வாங்காமல் இருக்கவும் இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

உணவு தானியங்கள் அதிகமாக உற்பத்தி ஆகும் ஆண்டுகளில் விவசாய விளைபொருட்களின் விலை குறையும். இந்த விலை திடீரென மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடையாமல் இருக்கவும், விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கவும் மத்திய அரசு விலை நிர்ணயம் செய்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை நெல், கோதுமை, சோளம், பார்லி, ராகி, கடலை, உளுந்து, நிலக்கடலை, சோயாபீன், எள்ளு, சூரியகாந்தி, குங்குமப்பூ, கரும்பு, பருத்தி உள்ளிட்ட 23 வகையான வேளாண் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை பயிர்களின் விதைப்புக் காலம் தொடங்கும் முன்பே இந்திய அரசு அறிவிக்கிறது.

ஆனால் கோதுமை, நெல் போன்றவற்றைத் தவிர அரசுகள் மற்றவற்றை கொள்முதல் செய்வது கிடையாது. இதனால் குறைந்த பட்ச ஆதார விலை இருந்தும் பெரும் கார்ப்ரேட் வணிகர்களிடம் மிகக் குறைந்த விலைக்கு தங்களது விவசாயப் பொருட்களை விற்க வேண்டிய நெருக்கடிக்கு விவசாயிகள் உள்ளாகின்றனர்.

2018-19-ல் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட விவசாயிகளின் நிலை மதிப்பீடு (Situation Assessment Survey) ஆய்வின் தரவுகளின் படி வெறும் 17% விவசாயக் குடும்பங்கள் மட்டுமே, அரசு கொள்முதல் நிறுவனங்களுக்கு நெல்லை விற்றிருப்பதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

அதுமட்டுமல்ல இந்திய உணவுக் கழகத்தின் பங்கை மறுசீரமைப்பதற்காக சாந்தகுமார் தலைமையில் (2015) அமைக்கப்பட்ட குழு நெல், கோதுமை கொள்முதலுக்குக் கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவத்தை மற்ற பயிர்களுக்கும் விரிவுபடுத்த பரிந்துரைத்தது.

இதிலே மிக முக்கியமாக பார்க்கப்பட வேண்டியது விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதிச்சட்டம் இயற்றப்பட்டால் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கீழ் உள்ள 23 பயிர்களை கட்டாயக் கொள்முதல் செய்ய ஏறக்குறைய ரூ.17 லட்சம் கோடி தேவைப்படும் என மதிப்பிடப்படுகின்றது.

இத்தனை லட்சம் கோடிகள் போட்டு அரசு அதைக் கொள்முதல் செய்தால் உணவு தானிய கொள்முதல் செய்யும் கார்ப்ரேட் நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்திப்பார்கள். அத்தோடு இந்திய உணவுச்சந்தையை குறிவைத்து இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களும் பாதிக்கப்படுவார்கள். இது கார்ப்ரேட்டுகளின் கைக்கூலியாக செயல்படும் பிஜேபியின் தேர்தல் நிதியைப் பாதிக்கலாம்.

ஏற்கெனவே உலக வர்த்தக அமைப்பில் (WTO) உள்ள அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட பெரிய உணவு தானிய ஏற்றுமதி நாடுகள் இந்தியாவின் பொது பங்குகள் (PSH) திட்டத்திற்கு, குறிப்பாக அரிசிக்கு அதிக மானியம் வழங்கப்படுவதாகவும், இது மற்ற நாடுகளின் உணவுப் பாதுகாப்பை பாதிக்கிறது என்றும் ஏற்கெனவே குற்றச்சாட்டை வைத்திருக்கின்றன. நிர்ணயிக்கப்பட்ட 10% மானிய உச்சவரம்பை இந்தியா மீறக்கூடாது என அவர்கள் நிபந்தனை விதித்திருக்கின்றார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் உலக வர்த்தகக் கழகத்தில் இருந்து இந்தியா வெளியேறவோ, மோடி அரசு குறைந்த பட்ச ஆதாரவிலை உறுதிச்சட்டத்தை கொண்டு வருவதற்கோ அப்படியே ஒரு கண்துடைப்புக்காக கொண்டு வந்தாலும் அனைத்துப் பொருட்களையும் கொள்முதல் செய்யுமா என்பதும் மிகப் பெரிய கேள்விக்குறியாகும்.

தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி 1995இல் இருந்து, இதுவரை இந்தியாவில் 3 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் சராசரியாக இந்தியாவில் 62 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இப்படிப்பட்ட கொடிய நச்சு சூழலில்தான் பாசிச மோடி அரசு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிகொடுக்காமல் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டிருக்கின்றது.

உண்மையில் உழைக்கும் விவசாய வர்க்கத்தின் மீது இவ்வளவு வக்கிரத்தையும் குரூரத்தையும் உழைத்துச் சோறு திங்கும் வர்க்கத்தால் காட்ட முடியுமா? நிச்சயம் முடியாது. உடல் உழைப்பை வெறுத்து, அதை அவமானமாகவும், அருவருப்பாகவும் பார்த்துப் பார்த்துப் பழக்கப்பட்ட இழிந்த பிறவிகளால்தான் முடியும்.

மோடி ஆட்சியில் இந்த 10 ஆண்டுகளில் தனியார் முதலாளிகளுக்கு கடன் கொடுத்து, வாராக்கடன் எனும் கணக்கில் தள்ளுபடி செய்த தொகை மட்டுமே ரூ. 25 லட்சம் கோடிகளுக்கு மேலாகும். கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் கார்ப்பரேட் முதலாளிகளின் ரூ.10 லட்சம் கோடி கடன் வாராக்கடன் என்ற அடிப்படையில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இன்னும் ரூ. 6 லட்சம் கோடி நிலுவையில் உள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்கள் முறையாக வந்து சேரும்போது மோடியின் நண்பர்களான கார்ப்பரேட்கள் வாங்கிய கடன்கள் மட்டும்தான் வந்து சேருவதில்லை.

ஆனால் தினம் தினம் உழைத்து சாகும் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடியைச் செய்யவோ, அவர்களின் விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்படி நிர்ணயித்து அதைக் கொள்முதல் செய்யவோ மோடி அரசால் முடியவில்லை.

தற்போது போராட்டத்தை விவசாய சங்கங்கள் வரும் பிப்ரவரி 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருகின்றன.அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் குறைவான நாட்களே இருக்கும் சூழ்நிலையில் வழக்கம் போல மோடி அரசு ஏதாவது ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றலாம். எனவே விவசாயிகள் உறுதியோடு போராட வேண்டும்.

- செ.கார்கி

Pin It