பேராசிரியர் ஜெயராமன், சென்னையில் பேசியதற்கு மயிலாடுதுறை நாம் தமிழர் கட்சியினர் அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் ஒருங் கிணைப்பில் தோழமை அமைப்புகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறையில் நடந்திருக்கிறது. விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் எஸ்.டி.பி.அய். அமைப்பினர் பங்கேற் றனர். இத்தனைக்கும் பேராசிரியர் ஜெயராமன் தனது சென்னை உரையில்: “எனக்கு திராவிட தேர்தல் அரசியல் கட்சிகள் மீது கடும் விமர்சனம் இருக்கிறது. பெரியாருடைய மொழிக் கொள்கையை நான் ஏற்கவில்லை; ஆனால் பெரியாருடைய வரலாற்றுப் பங்களிப்பு மகத்தானது; அதை எவரும் புறக்கணித்து விட முடியாது” என்று தனது நிலையில் உறுதியாக இருந்து தான் பேசினார்.

தமிழ்த் தேசியம் என்பது தேர்தல் அரசியலுக்கான பதவியைப் பிடிப்பதற்கான ஆயுதமாகப் பயன்படுத்து வதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். தமிழ்த் தேச அரசியல் என்பது, “தமிழருடைய முழுமையான இறையாண்மை” என்றும் அவர் விளக்கமளித்தார்.

தமிழ் அறிஞர்களே ‘திராவிடர்’ என்ற சொல்லை ஏற்றுக் கொண்டிருந்ததையும் பேராசிரியர் விளக்கினார். 1800களிலேயே பெரியார், திராவிடர் கழகம் தொடங்குவதற்கு முன்பு பட்டியல் இனப் பிரிவுத் தலைவரான ரெட்டைமலை சீனிவாசன், ‘பறையர் மகாஜன சபை’ தொடங்கி, பிறகு ‘ஆதி திராவிடர் மகாஜன சபை’ என்று பெயர் மாற்றி யதையும் மற்றொரு ஒடுக்கப்பட்ட ‘ஆதிதிராவிட’ சமூகத் தலைவரான எம்.சி. ராஜா, 1922 ஜனவரி 20இல் அன்றைய சென்னை மாகாண சட்டமன்றத்தில் பறையர், பள்ளர் என்று அழைப்பதை விடுத்து, அவர்களை ‘ஆதி திராவிடர்’ என்று அழைக்க வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றச் செய்ததையும் மிகச் சிறந்த தமிழ் அறிஞரும் சைவ நெறியாளரும் துறவு வாழ்க்கை வாழ்ந்தவருமான திரு.வி.க. (திரு.வி.கல்யாண சுந்தரனார்), ரெட்டைமலை சீனிவாசனுக்கு ‘திராவிட மணி’ என்று பட்டம் வழங்கி பெருமைப் படுத்தியதையும் பேராசிரியர் சுட்டிக்காட்டினார். திரு.வி.க., இதன் வழியாக தமிழர் அடையாளத்தை மறைக்கக முயன்றார் என்று அவரைக் குற்றம்சாட்ட முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

1899இல் யாழ்ப்பாணத்து தமிழ் அறிஞர் ‘தமிழ் வரலாறு’ எழுதி அந்த நூலுக்கு ‘திராவிடப் பிரகாசிகை’ என்று பெயர் சூட்டினார். என்ன காரணம்? ‘தமிழ் - திராவிடர்’ இரண்டுமே ஒரே அர்த்தத்தில் இருந்திருக்கிறது என்பது தானே. தமிழுக்கு இரண்டு பெயர்கள் இருந்திருக்கின்றன. ஒன்று - தமிழ்; மற்றொன்று திராவிடம். இந்த நூல் கால்டுவெல் காலத்துக்குப் பிறகு வந்ததாகும்.

கால்டுவெல் தனது நூலில் இரண்டு முக்கிய ஆய்வுகளை முன் வைத்தார். ஒன்று - தென்னாட்டில் பேசக் கூடிய மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தவையல்ல; (அதற்கு முன் சமஸ்கிருதமே அத்தனை இந்திய மொழிகளுக்குத் தாய் என்று பார்ப்பனர்கள் கூறி வந்தார்கள்). திராவிடர் என்ற சொல், தென்னாட்டைக் குறிக்கும் சொல். தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் சமஸ்கிருதம் பெருமளவில் ஊடுறுவி இருக்கிறது. தமிழ் மொழி மட்டும் சமஸ்கிருதம் இல்லாமலேயே இயங்க முடியும். திராவிட மொழிகளில் முதன்மையானது தமிழ் என்பது அவரது ஆய்வு முடிவு. மற்றொன்று மிகவும் முக்கியமானது. தென்னாட்டுக்கு குடியேறிய வந்தேறிகளான ஆரிய பார்ப்பனர்கள், இங்கே வாழ்ந்த பூர்விகக் குடிகளுக்கு ‘சூத்திரர்’ என்ற பட்டத்தைக் கொடுத்தார்கள் என்றார் கால்டுவெல். இந்த கருத்து தான் வெடிகுண்டாக மாறியது. சமூக விடுதலைக்கு உண்மையான எதிரிகள், ஆரியப் பார்ப்பனர்கள். இவர்களை வீழ்த்த ‘திராவிடர்’ என்பதே சரியான அடையாளம் என்ற முடிவுக்கு ஜாதிய - சமூக ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடிய தலைவர்கள், பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்த தலைவர்கள் உணர்ந்தார்கள். இந்தி பேசுகிறவர்களை ‘இந்தி’யர்கள் என்கிறீர்கள். நாங்கள் - திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த ‘திராவிடர்கள்’ என்று தங்களை அடையாளப்படுத்தத் தொடங்கினர்.

1910இல் ‘திராவிடம்’ என்ற சொல்லை ஆய்வுலகம் ஏற்றுக் கொண்டது மாந்தவியலாளர்கள், வரலாற்று அறிஞர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள், மொழியியலாளர்கள் அனைவரும் கால்டுவெல் கூறிய ‘திராவிடம்’ கருத்தி யலை ஏற்றுக் கொண் டார்கள் என்று விளக் கினார் பேராசிரியர்.

‘தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூர் போய் திரும்பியவர்களை ‘சிங்கப்பூரான்’ என்று அழைப் பது போல் தென்னகத்தில் குடிபுகுந்த பார்ப்பனர்கள், திராவிட பார்ப்பனர்கள் என்று அடையாளப்படுத் தப்பட்டார்கள். திராவிடர்கள் என்றாலே பார்ப்பனர்கள் தான் என்று பேசுவது திரிபுவாதம்’ என்றார் பேராசிரியர்.

தமிழைத் தமிழ் என்று அழைக்கலாம்; தென்னக மொழிக் குடும்பத்தைத் ‘திராவிடம்’ என்று அழைக்கலாம் என்று கூறிய கால்டுவெல் மிகவும் நேர்மையுடன் நான் பரிந்துரைப்பது சரியா, தவறா என்றும் தெரியவில்லை என்று அடக்கத்துடன் கூறுகிறார். ஆரியத்திலிருந்து வேறுபட்டது; சமஸ்கிருதத்தோடு தொடர்பற்றது என்பதே திராவிடத்தின் அடிப்படை. ‘தென்னிந்தியாவை திராவிடர் நாகரிகம் கொண்டவர்கள்’ என்று வரலாற்று ஆசிரியர்களும் தென்னிந்திய மொழிகள் தனித்தனியாக இருந்தாலும் திராவிடர்களுக்கான தொடர்புகளைக் கொண்டவை (னுசயஎனையைn ஐவேநசடiமேநன) என்று மொழியிலாளர்களும் ‘திராவிடர் கட்டிடக் கலை’ என்று கட்டிடக் கலை நிபுணர்களும் அடையாளப்படுத்தினார்கள். 1865இல் மாந்தவியல் ஆய்வாளரான ஹக்ஸ்லி, இந்தியாவில் வாழும் ஒரு தனி இனம் தான் திராவிடர்கள் என்று அழைக்கப்படும் மக்கள் என்று தனது நூலில் எழுதி, இந்தக் கருத்துகளைத் தொடங்கி வைத்தார். இதில் பார்ப்பன எதிர்ப்புக் கூறு இருப்பதால், டி.எம். நாயர், தியாகராயர் போன்ற ஆளுமைகள் பெரியாருக்கு முன்பே ‘திராவிடராக’ அடையாளமாக்கிக் கொண்டார்கள்.

‘திராவிடன்’ என்ற சொல்லை கன்னடன், மலையாளி, தெலுங்கர்கள் பயன்படுத்தாதபோது தமிழன் மட்டும் தூக்கி சுமக்க வேண்டுமா என்ற கேள்விக்கும் பதிலளித்த பேராசிரியர் ஜெயராமன், “திராவிடன் என்பது மானத்தைக் காப்பாற்ற கோவணம் கட்டுவதுபோல; அவர்களுக்கு எல்லாம் நிர்வாணமாக இருப்பதில் வெட்கமில்லை; பார்ப்பனியத்தை நாங்கள் எதிர்க்க மாட்டோம்; அது தெய்வக் குற்றமாகிவிடும். நாங்கள் நிர்வாணமாகத் திரிவதில் நோக்கு என்ன ஆட்சேபணை? நாங்கள் எல்லாம் பிராமணர்களை எதிர்க்க மாட்டோம்; அவாள் தான் எங்களுக்கு கடவுள்; எங்கள் வீட்டு மூத்த மகன் நம்பூதிரிக்குப் பிறந்தவன்; எங்கள் சமூகத்தில் ஏராளமானவர்கள் நம்பூதிரிக்குப் பிறந்தவர்களாக்கும். நாங்கள் ஏன் திராவிடத்தைப் பேசணும்?” என்பதே அவர்களின் சிந்தனை. அதனால் அவர்கள் திராவிடத்தை ஏற்க மறுக்கிறார்கள். மற்றொன்று தமிழ் மட்டும் தான் தனித்து இயங்கும். அது தான் வளமான மொழி என்று கால்டுவெல் கூறி எங்களை இழிவுபடுத்திய பிறகு நாங்கள் எப்படி அதை ஏற்போம்? எனவே எங்களுக்கு திராவிடம் வேண்டாம் என்கிறார்கள். பார்ப்பனிய அடிமைச் சிந்தனையில் மூழ்கிக் கிடப்பவர்கள். எனவே திராவிடத்தை ஏற்க மறுக்கிறவர்கள். ‘திராவிட’ என்ற வார்த்தையை வரலாறு தெரிந்தால் தான் புரிந்து கொள்ளவே முடியும் என்றார் பேராசிரியர்.

இறுதியில் அவர் தனது உரையை இவ்வாறு முடித்தார்.

“தற்போது, மிகவும் ஆபத்தான ஒரு கால கட்டத்தில் இருக்கிறோம். எதிரி முன்பை விட தற்போது வலுவாக இருக்கிறான். ஆமையின் ஓட்டை எடுத்துவிட்டால் அது எண்ணெய் சட்டியில் தான், அதே போல தான் நத்தையின் ஓடும். அதுபோல தான் திராவிடம் என்பது நமது பாதுகாப்பு. திராவிடம் என்ற சொல்லை இழிவுபடுத்துவது, இந்த மக்களின் சமூக மேம்பாட்டுக்காக இருக்கும் பாதுகாப்புகளை தமிழ்த் தேசியம் என்ற பெயரில் அழித்துவிடக் கூடாது. தமிழ்த் தேசியம் பேசும் அனைவருக்கும் ஒன்று கூறுகிறேன். விடுதலைக் கருத்தியலாக இருக்கும் வரை தான் அது தமிழ்த் தேசியம். இந்தியத்திற்கு இணங்கி, மாநில அளவில் அரசியல் செய்ய வந்து விட்டால் அது தமிழ்த் தேச அரசியல் அல்ல. தமிழ்த் தேசியத்திற்கு ஒரே இலக்கு தான் உண்டு; இறையாண்மை உள்ள தேசியத்தை படைத்துக் கொள்வது. இந்த இலக்கு இருந்தால் தான் அது தமிழ்த் தேசியம். இந்தியா என்பது பெரிய இயந்திரம் போல, மாநிலங்கள் என்பது அதில் சுழலும் பல் சக்கரங்களைப் போன்றவை. இந்தியா என்ற இயந்திரம் எந்தத் திசையில் சுழலுமோ அந்த திசையில் தான் சுழல முடியும், இல்லை இல்லை நான் தேர்தலில் வெற்றி பெற்று எதிர்த்திசையில் சுழலுவேன் என்றால் கழட்டி காய்லாங்கடையில் போட்டு விடுவார்கள். இதை கூறும்போது மற்றொன்றையும் கூறிவிட வேண்டும். இந்திய குடிமகனாக இருக்கும் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சராக வரலாம். இவர்கள் தான் வர வேண்டும். என்ற எந்த வரையறை யும் கிடையாது. ஆனால் அது தமிழ்த் தேசியம் என்ற பெயரில் அதைச் செய்யக் கூடாது” என்றார்.                                                   

(நிறைவு)

‘நாம் தமிழர் கட்சி’ கொலை மிரட்டலைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமனை முகநூலில் மிக இழிவாக எழுதியும், அவரது அமைப்பு தோழரின் கடைக்கு நேரடியாக சென்று அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தும், பேராசிரியர் ஜெயராமனுக்கும் கொலை மிரட்டல் விடுத்த நாம் தமிழர் கட்சியினரின் அராஜக போக்கினைக் கண்டித்தும், நாம் தமிழர் கட்சியினர் கொடுத்த பொய் புகாரில் கொலை மிரட்டலுக்கு ஆளான பேராசிரியர் ஜெயராமன் மீதே பொய் வழக்கு போட்ட மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையைக் கண்டித்தும், கொலை மிரட்டல் விடுத்த நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்களை உடனடியாக கைது செய்யக் கோரியும் மயிலாடுதுறையில் 30.9.2021 அன்று மாலை 4.00 மணியளவில் கிட்டப்பா அங்காடி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழர் உரிமை இயக்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை,மக்கள் அதிகாரம், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், மே-17, உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சியின் அராஜக போக்கைக் கண்டித்தும், மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையை கண்டித்தும் கண்டன உரை நிகழ்த்தினர். அனைத்துக் கட்சிகள், அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

Pin It