தமிழ்த் தேசிய அரசியலில் பல அரசியல் கட்சிகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவப் பாதையில் பயணிக்கின்றன, ஒவ்வொன்றும் அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் செயல்படுகின்றன. இங்கே எழும் ஒரு முக்கியமான கேள்வி என்னவெனில், தமிழ்த் தேசியம் வெற்றி பெறுவதற்கான பாதை என்று ஒன்று உள்ளதா இல்லையா? அப்படி ஒரு பாதை இருக்கிறதென்றால், தங்கள் முயற்சியை வீணடிக்காமல் அனைவரும் அப்பாதையில் சேர்ந்து வெற்றி பெறலாம். அப்படி ஒரு பாதை இல்லையென்றால் வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும் இருக்க வேண்டும். அதைப் பற்றி ஆராய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

lenin 266உலகின் தலைசிறந்த புரட்சியாளர்களில் ஒருவரான லெனின் அவர்கள், ஒரு புரட்சி வெல்வதற்கு வரலாற்றிலிருந்து அடிப்படையாகக் கூறுவது என்னவென்றால், ஒரு புரட்சி இயக்கமானது எதையும் விட்டுவிடாமல் சமூகத்தின் அனைத்து செயல்பாடுகளையும் ஆழ்ந்து கற்றிருக்க வேண்டும். ஒரே ஒரு செயல்முறை என்று பின்பற்றாமல், அனைத்து செயல்முறைகளையும் அறிந்து அதைப் பயன்படுத்தி தான் விரும்பும் சமூக, அரசியல் மாற்றத்தைக் கொண்டு வர முயல வேண்டும். . ஒரு முறையிலிருந்து இன்னொரு முறைக்கு காலத்திற்கேற்ப உடனடியாக மாறும் தன்மையைப் பெற்றிருக்க வேண்டும். மனித சமூக அமைப்பு சிக்கலானது, எதிர்கொள்ளும் சிக்கல்களும் குழப்பமானவை. அவ்வாறு இருக்கும்பொழுது ஒரே ஒரு எளிமையான முறையைப் பின்பற்றி வெற்றியடைய நினைப்பது வெகுளித்தனமானது. யார் சரியான சந்தர்ப்பவாதிகளாக இருக்கிறார்களோ, யார் எந்த ஒரு தத்துவமும் அவர்களின் செயல்பாடுகளைக் கட்டிப்போடாமால் நடந்து கொள்கிறார்களோ, அவர்களுக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்கிறார். [1]

லெனின் அவர்கள் கூறுவது பொருத்தமாக இருந்தாலும், அவர் கூறுவது போல எந்த ஒரு முறையையும் பின்பற்றாமல் சந்தர்பத்திற்கேற்ப மாறிக் கொண்டே இருப்பது குருட்டுத் தனமாக செல்வது போலத் தோன்றுகிறது. எவ்வாறு திட்டமிட்ட ஒரு செயல்பாடில்லாமல் நாம் வெற்றி பெற முடியும் என்ற கேள்வி எங்கு எழுகிறது. நாம் முழுத்திட்டமிடாமல் சந்தர்ப்பவாதியாக இருந்து வெற்றி பெற முடியுமா?

இவ்வுலகில் அனைத்து உயிர்களும் யாரின் திட்டமிடலும் இல்லாமல் பரிணாம வளர்ச்சியில் (evolution) தோன்றின என்பது அறிவியல் உண்மை. இது எப்படி சாத்தியமானது? அடிப்படையில் பரிணாமம் என்பது மூன்று படிகளைக் கொண்டது: 1) வேறுபாடுகளுடைய உயிர்கள் 2) தகுதியற்றவை இயற்கையால் அழிக்கப்படுகின்றன 3) தகுதியானவை குட்டிகளை ஈனுகிறது. இது இயற்கையில் குருட்டுத்தனமாக சுழற்சியில் நடக்கிறது. இந்த குருட்டுத்தனத்தின் விளைவாகவே நாம் உருவானோம், முழுத் திட்டமிடலால் அல்ல. குருட்டுத்தனத்தால் புத்திசாலியான ஒன்றை உருவாக்க முடியும் என்பதைக் கண்டுபிடித்ததுதான் டார்வினின் சாதனை [3]. பரிணாம வளர்ச்சி என்பதே சந்தர்ப்பவாதம்தான். உயிர் முதலில் நீரில் தோன்றினாலும், அது எங்கெங்கெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ, அங்கெங்கெல்லாம் தாவியது. இன்று பூமியில் எல்லா இடங்களிலும் விரவிக் கிடக்கிறது. இவ்வகையில் டார்வினின் பரிணாமக் கொள்கை லெனின் கூற்றுடன் ஒத்துப் போகிறது.

நீங்கள் நினைக்கலாம், குருட்டுத்தனமான சந்தர்ப்பவாதம் பரிணாமத்திற்குப் பொருந்தலாம், ஆனால் மனிதன் பகுத்தறிவானவன், அவனால் பகுத்தறிந்து எது சிறந்தது என்று கண்டறிந்து செய்லபட முடியும். இன்றைய நவீன அறிவியல் முன்னேற்றம் என்பது மனிதனின் பகுத்தறிவின் (reason, rationality) அதியுச்ச சாதனை. அவ்வாறு இருக்கும்பொழுது பகுத்தறிவற்ற செயல்பாடுகள் என்பது ஒவ்வாதது. நாம் பகுத்தறிந்து எது சிறப்பானதோ அதைக் கொண்டு செயல்படலாம் என்று நினைக்கலாம். இந்த சிந்தனை எவ்வளவு தூரம் உண்மை என்பது அறிவது முக்கியம். உதாரணமாக அறிவியலையே எடுத்துக் கொள்வோம். அறிவியல் எவ்வாறு முன்னேறுகிறது என்ற ஆய்வில் பாப்பர் [2], கூன், பெயிராபெண்டு [1] ஆகியோரின் தத்துவங்கள் புகழ்பெற்றவை. பாப்பர் அவர்கள் அறிவியில் என்பது முற்றும் முழுதும் பகுத்தறிவான செயல்பாடு என்கிறார். ஆனால் பின்வந்த கூனும், பெயிராபெண்டும் இதை நிராகரித்தனர். குறிப்பாக பெயிராபெண்டு பகுத்தறிவிற்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை வைத்தார்.

அறிவியல் என்பது பல வழிகளில் முன்னேறும் ஒரு சிக்கலான செயல்பாடு. அறிவியலுக்கு என்று பொதுவான எந்த ஒரு முறையும் இல்லை; பகுத்தறிவு (reason) என்பது அதில் ஒரு முக்கிய அங்கமே ஒழிய, அதுமட்டும்தான் அறிவியல் என்பது பிழையான பார்வை என்கிறார். அறிவியல் இவ்வாறுதான் செயல்படுகிறது என்று முறை வகுப்பது, அதை ஒரு குறுகிய பெட்டிக்குள் அடைக்க நினைப்பது போன்றது. அவ்வாறு நாம் வகுக்கும் முறைகளைக்கு எதிராக ஏராளமான உதாரணங்களை வரலாற்றில் காணலாம். இந்த காலத்து உதாரணமாக இயற்பியலின் string theory-ஐ எடுத்துக் கொள்ளலாம் [9]. பாப்பரின் தத்துவப்படி சோதனைக்கு உட்படுத்த முடிவதுதான் அறிவியல், ஆனால் இந்த தத்துவம் சோதனைக்கு உட்படுத்த முடியாது, ஆனாலும் இயற்பியலாளர்கள் அதில் ஆராய்ச்சி செய்கின்றனர், அதை அறிவியல் அல்ல என்று நிராகரிக்க முடியாது என்று வாதிடுகின்றனர். மாறாக நிராகரித்தால், அறிவியல் முன்னேற்றம் தடைபடலாம். இன்று அது சோதனைக்கு உட்படுத்த முடியாததாக இருக்கலாம், ஆனால் எதிர்காலத்திலும் அப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒரு தத்துவத்தை நிறுவ போதிய சான்றுகள் இல்லாதபொழுது, அதை நம்பிக்கைகள் மூலம் (பகுத்தறிவால் மட்டுமல்ல) தூக்கிப் பிடிக்கவேண்டி இருக்கிறது. அவ்வாறு அறிவியலாளர்கள் செய்யாதிருந்தால், இன்று நாம் காணும் நவீன அறிவியலே தோன்றாமலே போயிருக்கலாம் என்கிறார் பெயிராபெண்டு. உண்மை என்ன என்பது யாருக்கும் தெரியாது, அனைத்து வழிகளிலும் தேடுவதுதான் சிறந்தது.

ஒரு அறிவியலாளர் எதிர் நோக்கும் சிக்கல்கள் என்பது முன்பின் தெரியாதது, அதுபோன்ற வேளைகளில் இதுபோலத்தான் சிந்திக்க வேண்டும், செயல்பட வேண்டும் என்றால் அந்த வழிமுறைகள் அவரைக் செயல்படவிடாமல் கட்டிபோட்டு விடும். எந்த வழிமுறையையும் பின்பற்றும் சிறந்த சந்தர்ப்பவாதிகளாகவே அறிவியலாளர்கள் இருக்கிறார்கள் என்கிறார் ஐன்ஸ்டீன் அவர்கள்:

“External conditions which are set for the scientists by the facts of experience do not permit him to let himself too much restricted, in the construction of the conceptual world, by the adherence to an epistemological system. He, therefore, must appear to the systemic epistemologist as a type of unscrupulous opportunist…”

பகுத்தறிவு என்பது எல்லையில்லா சக்திகொண்டது என்ற நிலைப்பாட்டை தவிர்த்து, அதன் எல்லைகளை உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும். அறிவியல் முன்னேற்றம் என்பது அவ்வப்போது பகுத்தறிவை நிராகரிப்பதன் மூலமே நடைபெறுகிறது. பகுத்தறிவாளர்கள் எதைப் பகுத்தறிவு என்று கூறுகிறார்களோ, அதே பகுத்தறிவு அவர்கள் விரும்பும் முன்னேற்றத்திற்குத் தடையாக நிற்கும். அதனால் நமது உள்ளுணர்வு பகுத்தறிவிற்கு எதிராக போகச் சொல்கிறதென்றால், அவ்வாறு போவது சிறந்ததே என்கிறார் பெயிராபெண்டு. இதன் பொருள் எந்த தத்துவமும்/ முறையும் வேண்டாம் என்பதல்ல. தத்துவங்கள் என்பது ஒரு வரைபடம் (map) போன்றது. அது நமக்கு நல்ல வழிகாட்டியாக அமையும், ஆனால் அதை அச்சுப் பிசகாமல் அப்படியே பின்பற்றினால், நாம் போய் சேர வேண்டிய இடத்திற்கு போய் சேர முடியாது. இடத்திற்கு காலத்திற்கு ஏற்ப வரைபடத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு வேறு பாதையை எடுக்க வேண்டிய தேவை ஏற்படும். வரைபடமே இல்லாமல் போவதும் வெற்றியைத் தராது. வரைபடத்தை அச்சுபிசகாமல் பின்பற்றுவதும் வெற்றியைத் தராது. நமக்குத் தத்துவங்கள்/முறைகள் தேவையானது, ஆனால் தேவைப்பட்டால் அதிலிருந்து விலகுவதற்குத் தயங்கக்கூடாது[1]. நமது முன்னேற்றத்தைத் தடுக்காத ஒரு தத்துவம் உண்டென்றால் அது "அனைத்தும் ஏற்பானதே" என்பதுதான். எந்த முறையையும் நிராகரிப்பதோ அல்லது இதுதான் முறை என்பதோ அல்ல என்கிறார் பெயிராபெண்டு.

“The only principle that does not inhibit progress is anything goes.” [1]

அரசியல், பரிணாமம், அறிவியல் என அனைத்தும் இவ்வாறு சந்தர்ப்பவாத முறையில் இயங்குகின்றன. இது ஏன் என்பது நல்ல கேள்வி. இதை ஒரு நல்ல உதாரணம் கொண்டு விளக்கலாம். உலகில் உள்ள ஆறுகளை அனைத்தும் எடுத்துக் கொள்ளவும். எந்த ஒரு ஆற்றின் பாதையும் இன்னொரு ஆற்றின் பாதையைப் போல இருக்காது, ஆனால் அவை அனைத்து தனது குறிக்கோளாக கடலில் சென்று வெற்றிகரமாக கலக்கிறது. அதற்கு ஒரு ஆறு செய்வதெல்லாம் எளிய தடங்கலற்ற ஒரு சந்தர்ப்பவாத பாதையின் வழியாக செல்வதுதான். ஒரு ஆற்றுக்கு எந்த திட்டமிடலும் இல்லை, ஆரம்பத்தில் சிறிதாக உருவாக்கி போகப்போக பல கிளைகளை இணைத்து பெரு ஆறாக மாறி கடலில் கலக்கிறது. எளிய பாதையைத் தேடுவதென்பது இயற்பியலின் ஒரு அடிப்படை விதி. இயற்பியல் விதிகள் இவ்வுலகின் அனைத்து இயக்கங்களுக்கும் ஆதாரம் என்பதனாலேயே , நாம் காணும் அனைத்தும் சந்தர்ப்பவாதமாகத் தோன்றுகிறது என நான் நினைக்கிறேன்.

ஒரு அரசியல் என்பது ஒரு பலமான தலைமையின் கீழ் கட்டியமைக்கப்படுவது என்ற கருத்து பரவலாக இருக்கிறது. இது ஒரு தவறான பார்வை [8]. இப்பார்வை ஒரு தேசிய இயக்கத்தின் ஆரம்ப கட்ட செயல்பாடுகளை முற்றிலும் கண்டுகொள்ளத் தவறுகிறது. ஒரு ஆற்றை எவ்வாறு பல சிறுசிறு ஓடைகள் மழைநீரைக் கொண்டுவைத்து உருவாக்குகிறதோ, அதுபோல பல சமூக இயக்கங்கள் தோன்றி, வெவ்வேறு திசைகளில் உள்ள மக்களை தேசிய நீரோட்டத்தில் கொண்டு வருகிறது. இந்த சமூக இயக்கங்கள் ஒரு சமூகத்தில் எங்கெங்கெல்லாம் தேசியத்திற்கு ஆதரவாக மாற்றங்களை கொண்டு வர முடியுமோ அங்கெல்லாம் கொண்டு வருகிறது. இங்கே அனைத்து வழிமுறைகளும் கையாளப்படுகின்றன. இதுதான் முதல்படி. இதில் வெற்றிகண்ட பின்னர்தான், அரசியல் இயக்கம் ஆரம்பிக்கிறது. இதன் வழியேதான் பல தேசிய இயக்கங்கள் வெற்றி பெற்றன. இந்திய விடுதலை இயக்கமும், திராவிட இயக்கங்களும் இவ்வழியிலேயே பயணித்து வெற்றிகொண்டது [6, 7]. இதனைப் பற்றி நான் எழுதிய கட்டுரைக்காண சுட்டியை கீழே பார்க்கவும் [4].

ஆரம்பத்தில் பல இயக்கங்கள் தோன்றி போட்டிபோட்டு, சில அழிந்து, பல பிரிவுகளை இணைத்து ஒரு புதிய தேசிய கருத்தாக்கத்தை உருவாக்குகிறது. அது சென்று வெற்றியடையும் பாதை என்பது எதிரியின் செயல்பாட்டையும், காலமும் சூழலையும் பொறுத்தே அமைகிறது. சில சமயம் தேசிய இயக்கம் சில கிளைகளாகப் பிரிந்தும் செயல்படும். உதாரணமாக இந்திய விடுதலை இயக்கம் காங்கிரசின் வழியாக அரசியலாகவும், சுபாசு போசின் இந்திய சுதந்திர படையின் மூலமாகவும் செயல்பட்டது. எந்தப் பாதை வெற்றியடையும் என்பது முன் கூட்டியே உணர முடியாது, அது காலத்தால் தீர்மானிக்கப்படுகிறது அரசியல் இயக்கம் பல்வேறு பாதைகளின் வழியாக வெற்றியை முயற்சிக்கிறது. அதை முன்கூட்டியே யாராலும் அறிய முடியாதது. அந்தப் பாதை எப்படி ஒரு ஆற்றின் பாதை பரிணமிக்கிறதோ, அதுபோல பரிணமிக்கிறது.

தமிழ்த் தேசியப் பாதையின் வழியாக தோன்றிய திராவிட இயக்கங்கள், இன்று அப்பாதையை விட்டு விலகிச் சென்றுவிட்டன என்ற அடிப்படையில் இன்று புதிய தமிழ்த் தேசிய இயக்கங்கள் உருவாகியுள்ளன. இந்தப் புதிய தமிழ்த் தேசியம் என்பது ஆரம்பகட்ட நிலையில் உள்ளது. இதன் வெற்றி என்பது எவ்வாறு அனைத்து மக்களையும் தமிழ்த் தேசிய நீரோட்டத்தில் இணைப்பது என்பதிலேயே இருக்கிறது. தற்போதைய சிந்தனைகள் எவ்வாறு இருக்கிறதென்றால், ஒரு தத்துவத்தின் அடிப்படையில், ஒரு கட்சியின் அடிப்படையில் மக்களை ஒன்று திரட்ட வேண்டும் என்று. ஆனால் ஆரம்பகட்ட அரசியலில் இது சாத்தியமில்லை. மக்கள் அனைவரும் ஒரே மாதிரியான சிந்தனை கொண்டவர்கள் அல்ல, அதனால் அவர்களை ஒரே கருத்தியலைக் கொண்டு இணைக்க முடியாது. அதற்கு நாம் செய்ய வேண்டியது வெவ்வேறு சமூக இயக்கங்களை வெவ்வேறு கருத்தியலின் அடிப்படையில் எங்கெங்கெல்லாம் வாய்ப்புகள் உள்ளதோ அங்கெங்கெல்லாம் உருவாக்க வேண்டும். பெயிராபெண்டின் வழியாகக் கூறினால், இதில் அனைத்து தத்துவங்களும் முறைகளும் அடங்கும். இவ்வாறு வெவ்வாறான இயக்கங்களின் பொதுவான புள்ளி தமிழ்த் தேசியமாக இருக்கும், ஆனால் அது எதுமாதிரியான தமிழ்த் தேசியம் என்பது ஒவ்வொரு இயக்கத்தின் கருத்தியலுக்கு உட்பட்டதாக இருக்கும். உதாரணமாக இன்று கமல் ரசினி ஆகியோரின் மூலம் புதிய கட்சிகள் இந்துத்வா ஆணிகளால் உருவாக்கப் பட்டுள்ளன என்ற கருத்து நிலவுகிறது. இது உண்மையென்றால் அது இந்துத்வா அணிக்கு பலமாகவே அமையும். எங்கெங்கெல்லாம் வாய்ப்புகள் உள்ளதோ, அங்கே வேறுபாடுகளுடனும் முரண்களுடனும் பல கிளைகளை உருவாக்குதல் என்பது ஆரம்பத்தில் வலு சேர்க்கும் செயலே.

இயக்கங்களுக்குள் கருத்து வேறுபாடுகள், போட்டிகள் ஒத்துழைப்புகள் என அனைத்தும் இருக்கும். அவற்றில் பெரும்பாலானவை அழியும், மறையும். அவற்றின் தோல்வி என்பது பயனற்றது அல்ல, அவை பலரை தமிழ்த் தேசிய கருத்தியலுக்குள் கொண்டு வந்திருக்கும். மேலும் அவற்றின் தோல்வியிலிருந்து மற்றவர்கள் பாடம் கற்று முன்னேறுவர். இவ்வாறுதான் முன்னேற்றம் ஏற்படுகிறது. ஒரே ஒரு கருத்தியல் மூலம் முதலிலிருந்து கடைசிவரை செயல்பட வேண்டும் என்று நினைத்தால் முன்னேற்றம் ஏற்படாது. தமிழ்த் தேசிய வெற்றிக்கான கருத்தியல் என்பது பரிணமிப்பது, அது ஆரம்பத்திலேயே திட்டமிடப்படுவதல்ல.

உதாரணமாக ஈழப் போராட்டத்தை எடுத்துக் கொள்ளலாம். முதலில் அரசியல் பாதையில் சென்று கொண்டிருந்த போராட்டம், வெற்றிபெற முடியாததனால் ஆயுதப் போராட்டக் கருத்தியல் உருவானது. முதலில் பல்வேறு இயக்கங்கள் பல்வேறு கருத்தியல் வேறுபாடுகளுடன் தோன்றின. அவற்றிற்கான இடையேயான போட்டியில், பல தோற்றன, அவற்றின் தோல்வியிலிருந்து பாடம் கற்று பரிணாம வளர்ச்சி அடைந்ததுதான் பலம்வாய்ந்த புலிகள் இயக்கம். அது பரிணமித்த இயக்கம், முதலிலியே அனைத்தும் திட்டமிட்டு கட்டியமைக்கப் பட்ட இயக்கம் அல்ல. இயக்கங்களுக்கு இடையேயான ஆரம்பகால போட்டிகளை சகோதர யுத்தம் என்று கூறுவது அறியாமை. அவை இல்லாமல் இயக்கங்கள் கற்றுக் கொள்ளவும் முடியாது, முன்னேறவும் முடியாது. ஆரம்பத்தில் யார் வெற்றி பெறுவார், எந்த கருத்தியல் வெற்றி பெறும் என்று யாராலும் தீர்மானிக்க முடியாது. அதற்கான அறிவு யாரிடமும் இல்லை. அவ்வாறு இருக்கும் பொழுது, நமது வெற்றி என்பது ஆரம்பத்தில் பல வேறுபாடுகளுடன் கொண்ட இயக்கங்களை உருவாக்குவதை நம்பியே இருக்கின்றன. அவற்றில் தக்கது நிலைபெற்று வெற்றிக் கருத்தியல் தானாக பரிணமிக்கும். ஆரம்ப காலத்தில் ஒரே இயக்கம் ஒரே கருத்தியல் என்று எண்ணுவது தவறானது.

அடிப்படையில் ஒரு சமூகத்தின் வெற்றியோ அல்லது ஒரு இயக்கத்த்தின் வெற்றியோ அது தனது சூழலுக்கேற்ற அறிவைப் பெற்றுள்ளதா என்பதை நம்பியே அமைந்துள்ளது. இதைப்பற்றிய எனது விளக்கமான கட்டுரையைப் படிக்கவும் [5]. சமூகம் என்பது சிக்கலான அமைப்பு, அதைப் பற்றிய முழு அறிவு என்பது யாருக்கும் இல்லை. ஒவ்வொரு இயக்கத்தின் சமூகத்தைப் பற்றிய அறிவு என்பது அரைகுறைவான அறிவே. அதனால் அவற்றின் கருத்தியல் என்பது அரைகுறையே. ஆனால் பல்வேறு இயக்கங்கள் வெவ்வேறு கருத்தியலின் அடிப்படையில் இயங்கும்போது, அவற்றின் கூட்டு அறிவு என்பது எந்த தனி ஒரு இயக்கத்தையும் விட சிறப்பானதாக இருக்கும். மேலும் எந்த இயங்கங்களின் கருத்தியல் சூழலுக்கேற்றவாறு இல்லையோ, அவை அழிகின்றன. எஞ்சி இருப்பவை மற்றவர்களின் தோல்விகளிலிருந்து கற்று தம்மை மேலும் சிறப்பாக்கிக் கொள்கின்றன. பெயிராபெண்டு கூறுவதுபோல, அறிவியல் எவ்வாறு வேறுபட்ட தத்துவங்களையும் இணைத்து வளர்கிறதோ, அதே போல பலவேறு இயக்கங்களின் வேறுபட்ட கருத்தியல்களின் மூலம் வெற்றிக்கான அறிவை நாம் அடைகிறோம். அறிவியல் முறையும் இவ்வாறான அரசியல் முறையும் வெவ்வேறானவை அல்ல. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிகூட இந்த வழியில்தான் நடைபெறுகிறது. உதாரணமாக சிலிகான் பள்ளத்தாக்கில் 75% சதவிகித தொழில் முனைவோர் தோல்வி அடைகின்றனர். வெற்றிபெறும் சில நிறுவனங்கள் மாபெரும் வளர்ச்சியடைந்து பொருளாதாரத்தையே மாற்றி அமைக்கின்றன. வெற்றியடைந்தோரின் வெற்றி என்பது தோற்றவர்கள் இல்லாமல் நடப்பது இல்லை [10]. அதிலும் ஒரு சிலதே மாபெரும் வெற்றியடைகின்றன. எது மாபெரும் வெற்றியடையும் என்று முன்கூட்டியே அறியமுடியாது. அது தானாக பரிணமிப்பது.

இன்று நாம் காணும் வெவ்வேறான கருத்தியல் கொண்ட தமிழ்த் தேசிய இயக்கங்கள் என்பது தமிழ்த் தேசியத்தின் பலவீனம் அல்ல, அது பலத்தின் அறிகுறி. இது ஆரம்ப கட்டமென்பதால், இன்னும் பல தமிழ்த் தேசிய அரசியல் மட்டும் சமூக இயக்கங்கள் தோன்ற வேண்டும். எங்கெங்கெல்லாம் சந்தர்ப்பம் இருக்கிறதோ, அங்கெல்லாம் தமிழ்த் தேசியம் புகுத்தப்பட்ட வேண்டும். இயக்கங்களின் கருத்தியல் வேறுபாடுகள் என்பது போற்றப்பட வேண்டிய காலமிது. அந்த வேறுபாடுகள் மூலமே, வேறுபட்ட அனைத்து மக்களையும் தமிழ்த் தேசிய நீரோட்டத்தில் இணைத்து, வெற்றிக்கான கருத்தியலை அடைய முடியும்.

ஒரே கருத்தியல், ஒரே கட்சி, ஒரே முறை என்று ஆரம்ப காலத்தில் கூறுவது, சரியான உத்தி இல்லை. அனைத்து தமிழ்த் தேசிய கருத்தியலும், இயக்கங்களும், முறைகளும் ஏற்புடையதே. அதற்காக அவர்களுக்குள் போட்டிகள், கருத்தியல் மோதல்கள் கூடாதென்பதல்ல, மாறாக அவற்றின் மூலமாகவே அவை கற்கின்றன, வளர்ச்சியடைகின்றன. பகுத்தறிவு என்பது ஒரு பலமான ஆயுதம். இயக்கங்கள் ஆழ்ந்து கற்று தங்கள் கருத்தியல்களை, செயல்முறைகளை செம்மைப் படுத்திக்கொண்டே செல்ல வேண்டும். ஆனால் அதே நேரம் பகுத்தறிவு முறைகளை மட்டுமே பயன்படுத்துவேன் என்றால், பெயிராபெண்டு கூறுவது போல நமது முன்னேற்றம் தடைபடும். அனைத்து முறைகளும் ஏற்புடையதே, அதுதான் வெற்றிக்கான பாதை.

உசாத்துணை:

  1. Feyerabend, Paul. Against method. Verso, 1993.
  2. Popper, Karl. All life is problem solving. Routledge, 2013.
  3. Maynard Smith, John, and Eors Szathmary. "The origins of life: From the birth of life to the origin of language." (1999).
  4. சு. சேது, பண்பாட்டுத் தளத்தில் தமிழ்த் தேசிய வேர்கள்
  5. சு. சேது, யார் ஆட்சி செய்வது?
  6. Chatterjee, Partha. The nation and its fragments: Colonial and postcolonial histories. Vol. 11. Princeton, NJ: Princeton University Press, 1993.
  7. Vaithees, V. Ravi. Religion and Nation in South India. Maraimalai Adigal, the Neo-Saivite Movement, and Tamil Nationalism, 1876-1950. Oxford University Press India, 2015.
  8. சு. சேது, சமூகத்தைப் பற்றி நமது சிந்தனைகளில் உள்ள தவறான கருதுகோள்கள்
  9. Is String Theory science? https://www.scientificamerican.com/article/is-string-theory-science/

10. Taleb, Nassim Nicholas. Antifragile: Things that gain from disorder. Vol. 3. Random House Incorporated, 2012.

- சு.சேது

Pin It