தமிழர் சமூகநீதி பேரவையின் மூன்றாவது சிறப்புக் கருத்தரங்கமாகிய "மறுக்கப்படும் தமிழர் உரிமை" புகைக்கல் குடிநீர் திட்டத்திறக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கன்னட வெறியர்களை கண்டித்து 24-04-2008 அன்று "பாவேந்தர்" அரங்கத்தில் நடைபெற்றது.

கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கியது கூட்டத்திற்கு வந்திருந்தோரை த.ச.பேரவையின் அமைப்புக்குழு உறுப்பினர் தோழர். அமானுல்லா வரவேற்க, விடுதலை சிறுத்தைகள் பொருலாளர் தோழர்.அறிவழகன் முன்னிலையில், த.ச.பேரவையின் பொதுச்செயலாளர் தோழர்.இரா.க.சரவணன் தலைமையேற்று நடத்தினார்கள்.

இச்சிறப்புக் கருத்தரங்கத்திற்கு முன்னிலை வகித்த தோழர்.அறிவழகன், காவிரிப் பிரச்சனையில் நாம் எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டோம் என்பதை விரிவாக எடுத்துரைத்தார்கள்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக த.ச.பேரவையின் து.தலைவர் தோழர்.வயி.பி.மதியழகன் அவர்கள் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களின் சிறப்புக்களை கூறி, அண்ணலின் வாழ்க்கைக்குறிப்புகள் அடங்கிய சிறு கையேட்டை வெளியிட த.ச.பேரவையின் து.செயலாளர் தோழர்.நிலவன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

இதைத் தொடர்ந்து தோழர்.செந்தில் அவர்கள் உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தனின் "தமிழா நீ பேசுவது தமிழா" என்ற பாடலை உணர்ச்சி பொங்க பாடினார்கள்.

த.ச.பேரவையின் து.தலைவர் தோழர்.மரு.நலிமுதின் அவர்கள் பாவேந்தர் பாடல்கள் அடங்கிய குறுந்தகடை வெளியிட தோழர் செந்தில் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். மரு.நலிமுதின் தனது உரையினிடையே பாவேந்தரின் சிறப்புக்களைக் கூறினார்கள்.

அடுத்து, தோழர்.பட்டுக்கோட்டை சத்யா அவர்கள் பாவேந்தரின் பெருமைகளை எடுத்துக்கூறி பாவேந்தரின் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய கையேட்டினை வெளியிட தோழர்.இரகுமான் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

த.ச.பேரவையின் செயலர் தோழர்.க.இரகமத்துல்லா அவர்கள் தோழர்.லெனின் வாழ்க்கைக்குறிப்புகள் அடங்கிய கையேட்டினை வெளியிட விடுதலை சிறுத்தைகளின் செயலாளர் தோழர்.அன்பரசன் அவர்கள் பெற்றுக்கொண்டு கன்னடர்களாலும் அரசியல்வாதிகளாலும் எவ்வாறெல்லாம் தமிழர்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை விளக்கினார்கள்.

இதை அடுத்து "மறுக்கப்படும் தமிழர் உரிமைகள்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றிய தோழர்.க.இரகமத்துல்லா அவர்கள் காவிரிப் பிரச்சனையிலும் அதைத் தொடர்ந்து தற்போது புகைக்கல் குடிநீர் திட்டத்திலும், கருநாடக வெறியர்களாலும் கருநாடக அரசினாலும், மைய அரசினாலும் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதையும் கருநாகவாழ் தமிழர்கள் உடமைக்கும், உயிருக்கும் ஏற்படும் பாதிப்புகளையும் கண்டித்தார்கள். இப்பிரச்சனையில் மைய மாநில அரசுகளின் நியாயமற்ற போக்கினை விளக்கி, இப்பிரச்சனைக்கு விரைவாகவும், நியாயமான முறையிலும் தீர்வு காணவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி எழுச்சிமிகு உரையாற்றினார்கள்.

த.ச.பேரவையின் து.பொருளாளர் தோழர்.சிவசங்கரன் அவர்கள் பாபாசாகிப் அவர்களை நினைவுகூறும் வகையில் உணர்ச்சிகரமான கவிதை பாடினார்கள். காவிரிப் பிரச்சனையில் தமிழர்கள் வஞ்சிக்கப்படுவதையும் அதன் வரலாற்றையும் விளக்கும் கவிதையை தோழர்.நிலவன் அவர்கள் எழுச்சியுற பாடினார்கள்.

கருத்தரங்க தீர்மானமாக த.ச.பேரவையின் தலைவர் தோழர். தமிழ்நாடன் அவர்கள் கீழ்கண்ட தீர்மானங்களை முன்மொழிய, அரங்கத்தின் பலத்த கரவொலி மூலம் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேறியது.

தீர்மானம் 1 : புகைக்கல் என்ற பொருள் பொதிந்த தமிழ் பெயரை ஒகேனக்கல் என்று கன்னட பெயரில் அழைக்காமல், புகைக்கல் தமிழ் பெயரை அரசு ஆணைமூலம் மாற்றக் கோருகிறோம்.

தீர்மானம் 2 : ஃபுளூரைடு என்ற வேதிப்பொருள் நிறைந்த குடிநீரை ஆண்டாண்டு காலமாக குடித்து பல்வேறு நோய்களுக்குள்ளான இருபெரும் மாவட்டங்களாகிய "தருமபுரி", "கிருட்டணகிரி" மாவட்ட மக்களின் தேவையை நிறைவேற்றும் விதமாக இந்திய அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டும், வெளிநாட்டு உதவியோடும் செயல்படுத்த திட்டமிட்ட இந்தியாவின் மிகப்பெரிய கூட்டுக்குடிநீர் திட்டத்தை, எவ்வித அடிப்படை நியாயமுமின்றி எதிர்த்தும், தமிழர்களுக்கெதிரான வன்முறைகளிலும் ஈடுபட்டு வரும் கன்னட வெறியர்களை வன்மையாக கண்டிக்கிறோம்.

தீர்மானம் 3 : கன்னட வெறியர்களின் வன்முறையை கண்டிக்காமலும், தடுக்காமலும் கண்மூடி மௌனமாக இருக்கும் மைய அரசு, கர்நாடக மாநில அரசு, கர்நாடக காவல்துறையையும் வன்மையாக கண்டிப்பதோடல்லாமல், தொடர்புடைய அமைச்சர்களும், அதிகாரிகளும் பதவி விலக வலியுறுத்துகிறோம்.

தீர்மானம் 4 : தமிழர்களின் உரிமையையும் உணர்வையும் கொச்சைப்படுத்தும் விதமாக, எவ்வித கூடாலோசனையும், நியாயமுமின்றி தன்னிச்சையாக கூட்டுக்குடிநீர் திட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்த தமிழக முதல்வரை கண்டித்தும், இத்திட்டத்தினை எவ்வித அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் உடனடியாக தொடங்க கேட்டுக் கொள்கிறோம்.

தீர்மானம் 5 : இப்பிரச்சனையில் தொடக்கம் முதல் போராடிவரும் தமிழ் அமைப்புக்களையும் கட்சிகளையும் பாராட்டுவதோடு தொடர்ந்து இத்திட்டம் நிறைவேறும்வரை போராடவும் வலியுறுத்துகிறோம்.

தீர்மானம் 6 : கர்நாடகத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் நீண்டகாலமாக பெருமளவு உழைத்துவரும் தமிழர்களை தொடர்ந்து தாக்கியும், அச்சுறுத்தியும் அவர்களின் உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்துவதை தடுத்து நிறுத்தவும், அவர்களின் பாதுகாப்பிற்கும் அமைதியான வாழ்விற்கும் உறுதியளிக்க வேண்டுமாய் மைய மாநில அரசுகளை வலியுறுத்துவதோடு, அவர்களுக்கு ஏற்படும் நட்டத்தை ஈடு செய்யவும் வலியுறுத்துகிறோம்.

அடுத்ததாக, கருத்தரங்க தலைவர்.தோழர். இரா.க.சரவணன் அவர்களின் எழுச்சிமிகு உரைக்குப்பின் த.ச.பேரவையின் பொருளாளர் தோழர். நாஞ்சில் சுரேசு அவர்கள் நன்றியுரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியாக தோழர்.செந்தில் அவர்களின் எழுச்சிமிகு பாடல் ஒலிக்க, கருத்தரங்கில் கலந்துகொண்ட அனைவருக்கும் தமிழ்தேசப் பொதுவுடைமை கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசனின் "காவிரித்தீர்ப்பும் களவுபோன உரிமையும்" என்ற கட்டுரையும், புகைக்கல் குடிநீர் திட்ட விளக்கக் கட்டுரையும், பாபாசாகேப்பின் இரு உரைகள், சித்திரை-04 திகதி "தென் செய்தி" இதழும், கருத்தரங்க வெளியீடுகள் அனைத்தும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

Pin It