'தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும், அப்போதுதான் தமிழ்நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும்' என்றும், 'அதுவரை வந்தேறி திராவிட ஆட்சியாளர்களால் தமிழகம் கொள்ளையடிக்கப்படுவதை தவிர்க்க முடியாது' என்றும் மேடைதோறும் முழங்கி வந்தார் சீமான். யார் தமிழர், யார் தமிழர் இல்லை என்ற பிரச்சினையை தமிழ்த் தேசியவாதிகள் மொழி சார்ந்து வரையறை செய்தனர். திராவிடர் இயக்கத்தினரோ இனம் சார்ந்து வரையறை செய்தனர். இனம் சார்ந்த வரையறை மூலம் ஆரியர்களை திராவிடர்களிடம் இருந்து வேறுபடுத்தி, பெரியார் அவர்கள் பார்ப்பனிய எதிர்ப்பு மரபை வலுப்படுத்தினார். ஒட்டுமொத்த இந்திய சமூகத்தையும் தனது பார்ப்பன வர்ணாசரம தர்மத்தால் சீரழித்த பார்ப்பனியத்தை, இந்திய அளவில் திராவிட இன அரசியலால் தனிமைப்படுத்தி ஒட்டுமொத்த இந்திய மக்களுக்குமே பார்ப்பனிய கொடுங்கோன்மையில் இருந்து ஒரு விடிவு காலத்தை ஏற்படுத்த வழி காட்டினார்.
பார்ப்பனர்களை இன ரீதியாக அடையாளப்படுத்தும்போது, பார்ப்பனக் கும்பலால் ஒவ்வொரு மொழியிலும் தனது சித்தாந்த மேலாண்மையை உறுதிப்படுத்த ஏற்படுத்தப்பட்ட இலக்கிய புராண குப்பைகளை எளிதில் அடையாளம் கண்டு, அந்த மொழிசார்ந்த மக்கள் தங்களது பார்ப்பனியம் கலக்காத பண்பாடுகளை மீட்டுருவாக்கம் செய்ய, திராவிடர் என்ற இன அடையாளப்படுத்தும் அரசியல் உதவியது. இன்று இந்திய அளவில் பார்ப்பனியத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது திராவிடர் அரசியல் தான். இப்படி ஆண்டாண்டு காலமாக பொதுச்சமூகத்தின் மீது தனது சாதிய மேலாண்மையை தக்க வைத்துக் கொண்டு வந்த பார்ப்பனியம், தான் இன ரீதியாக அப்புறப்படுத்தப்படுவதை தடுப்பதற்காக உருவாக்கிக் கொண்டதுதான் மொழிசார்ந்த அரசியல். அந்த மொழி சார்ந்த அரசியலை முன் எடுத்துச் செல்வதன் வாயிலாக பார்ப்பனியம் தன்னை பாதுகாத்துக் கொண்டது.
இன்று தமிழ்நாட்டில் பார்ப்பனியம் நிலைத்து நிற்பதற்கும், அது கொட்டமடித்துக்கொண்டு இருப்பதற்கும், திராவிடத்தை நிராகரித்த தமிழ்த்தேசிய அரசியல் வழி ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றது. அந்தப் பணியை மிகச் சிறப்பாக சீமான் செய்து கொண்டு இருக்கின்றார். அவரின் நோக்கம் நிச்சயமாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது இல்லை என்பதையும், அவரின் நோக்கம் தமிழகத்தில் மிக மோசமான முறையில் அம்பலப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு நிற்கும் பார்ப்பனியத்துக்கு மொழிவாயிலாக ஒரு பாதுகாப்பு கவசத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே ஆகும். அதைத் தாண்டி அவரிடம் உண்மையில் தமிழ் மக்கள் தன்மானத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்றோ, அப்படி அவர்களின் தன்மானத்தையும், சுயமரியாதையையும் காயப்படுத்தும் கொள்கைகளை முழு மூச்சில் எதிர்த்து நிற்க வேண்டும் என்றோ கொள்கை இருப்பதாகத் தெரியவில்லை.
சீமானின் வரையறைப்படி தமிழ்நாட்டில் (தமிழ்நாடு என்ற ஒரு மாநிலம் உருவாவதற்கு முன்பே) குடியேறிய, ஆனால் எப்பொழுது வந்தோம் என்பதே தெரியாமல் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்த மண்ணோடு இரண்டறக் கலந்து தங்களை தமிழர்கள் என்று உணருகின்ற, இங்கேயே வாழ்ந்து இங்கேயே மண்ணோடு மடிந்து போன மக்கள் தான் எதிரிகள். ஆனால் இந்த மண்ணின் தனித்த கூறாக விளங்கிய சாதியற்ற, மதமற்ற மக்களை ஆயிரக்கணக்கான சாதிகளாகப் பிரித்து, அவர்களை பார்ப்பனின் வைப்பாட்டி மகன் என்று கொச்சைப்படுத்திய, இன்று வரையிலும் அவர்கள் கோயில் கருவறைக்குள் நுழைந்தால் சாமி தீட்டுபட்டுவிடும் என்றும், தமிழ் மொழியில் மந்திரம் சொன்னால் சாமிக்குப் புரியாது என்று அகம்பாவமாகப் பேசியும், எழுதியும் வரும் பார்ப்பனக் கும்பல் அக்மார்க் தமிழர்கள். அவர்கள் தமிழர்களை சூத்திரர்கள் என்றும், குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும், அசுரர்கள் என்றும் கொச்சைப்படுத்தி தமிழினம் என்றுமே மீண்டுவர முடியாத சாதியப் படுகுழியில் தள்ளினாலும் 'பார்ப்பனர்கள் தமிழர்கள்' என்று சொல்லும் சீமான் எப்படி தமிழர்களுக்கான அரசியலை முன் எடுக்க முடியும்?
நிச்சயமாக சீமானின் நோக்கம் தமிழர்களை மொழியின் அடிப்படையில் சாதியற்ற இனமாக மாற்றுவது கிடையாது. தமிழ்ச்சமூகத்தை சீரழித்த பார்ப்பனர்களை இந்த மண்ணின் மைந்தர்கள் என்று சொல்வதன் வாயிலாக தமிழகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளாக கட்டியமைக்கப்பட்ட பார்ப்பன எதிர்ப்பு மரபை நீர்த்துப் போகச் செய்து அதை ஒழித்துக் கட்டுவதே ஆகும். அந்த வேலையை சிரமேற்கொண்டு செய்து முடிக்கவே சீமான் கட்சி நடத்திக் கொண்டு இருக்கின்றார். இப்போது அதன் அடிப்படையில் தான் பார்ப்பன கமலை அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்து வாழ்த்து சொல்லியிருக்கின்றார். கமல் தான் நேசித்து வளர்ந்த ஒரு கலைஞன் என்பதால், அவர் வந்து என்னைப் பார்ப்பது சரியாக இருக்காது என்பதால் தானே தேடிப் போய் வாழ்த்துச் சொன்னதாக சீமான் சொல்கின்றார். ஒரு பார்ப்பான் வந்து தன்னை சந்திப்பது பார்ப்பனியத்துக்கு இழுக்கு என்பதால் தான் சீமானே நேரடியாக சென்று கமலை சந்தித்து இருக்கின்றார். அதை அப்படித்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ரஜினியை கன்னடர், மராட்டியர் என்று முத்திரை குத்தி அவரது அரசியல் வருகையை கடுமையாக எதிர்த்த சீமான், கமலை தமிழர் என்று முத்திரை குத்துவதன் மூலம் ஒரு பக்கம் இனவாத அரசியலையும், மற்றொரு பக்கம் தனது பார்ப்பன அடிவருடி அரசியலையும் ஒரே சமயத்தில் வெளிக்காட்ட முயலுகின்றார். கமலுக்கு சுத்தத் தமிழர் என்ற பட்டத்தை சீமானின் வாயில் இருந்தே கொடுக்க வைத்ததுதான் தமிழகத்தில் பார்ப்பனியத்தின் வெற்றி. தமிழ் மக்கள் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் பார்ப்பனிய பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து விடுபாடமல் சூத்திர பட்டத்தோடு தன்மானத்தையும், சுயமரியாதையும் இழந்து வாழவேண்டும் என்பதுதான் பார்ப்பனக் கைக்கூலியான சீமானின் பெருவிருப்பம். அதற்கு ஏற்றபடிதான் சீமான் தன் விருப்பம் போல வரலாற்றை பார்ப்பனர்களுக்கு சார்பாக வளைத்துக் கொண்டு இருக்கின்றார். அகத்தியர், ஆண்டாள் , பாரதி என்று சீமான் கொண்டாடும் அனைவருமே தமிழ்ச் சமூகத்தை சீரழித்த பார்ப்பன கழிசடைகள் என்பதை பலபேர் அம்பலப்படுத்தியும், அதைப் பற்றி எல்லாம் எந்தப் புரிதலும் இல்லாமல் அவர்களைத் தூக்கிப்பிடிக்கும் சீமான் நிச்சயமாக பார்ப்பனியத்தால் களம் இறக்கி விடப்பட்டவர் என்று சொன்னால் அதில் எந்தத் தவறும் இருக்காது என்றே நினைக்கின்றேன்.
'கமல் தமிழர் அல்ல, அவர் குடும்பம் கர்நாடகாவில் இருந்து வந்து குடியேறியது' என அவரது கட்சியைச் சேர்ந்த வியனரசு என்பவர் புதிய தலைமுறை நிகழ்ச்சியில் பேசினார். சுடுகாட்டில் இருக்கும் பிணத்தைத் தோண்டி எடுத்து அவர்களது பூர்வீகத்தைக் கண்டுபிடிக்கும் வித்தகரான சீமானுக்கு, கமலின் பூர்வீகம் மட்டும் எப்படி தெரியாமல் போனது என்பது ஆச்சரியமான ஒன்றல்ல. கமலைப் போன்ற பார்ப்பனர்கள் காஷ்மீரில் இருந்து வந்து குடியேறி இருந்தால் கூட சீமானுக்கு அவர்கள் தமிழர்கள்தான். அப்படிச் சொல்லி அவர்களுக்கான இடத்தை தமிழகத்தில் நிரந்தரமாக ஏற்படுத்திக் கொடுப்பதன் வாயிலாக இந்த மண்ணில் இருந்து பார்ப்பனியத்தை நீங்காமல் நிலைத்து நிற்கச் செய்வதுதான் சீமானின் கொள்கை. இதை நன்றாகப் புரிந்துகொண்டதால்தான் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தமிழ்த் தேசிய அமைப்புகள் சீமானை ஒதுக்கி வைத்துள்ளன.
தமிழ்ச் சமூகம் சாதியற்று ,மதமற்று, மூட நம்பிக்கைகள் ஒழிந்து ஒரு அறிவு பெற்ற சமூகமாக உலகில் உயர்ந்து நிற்க வேண்டும் என தன் வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியாரை 'கன்னடர்' என்று சொல்லி இழிவுபடுத்தும் சீமான், தமிழ்ச் சமூகத்தை சாதியாலும், மதத்தாலும், மூட நம்பிக்கைளாலும் சீரழித்த பார்ப்பனியத்தையும் அதைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பார்ப்பனர்களையும், சாதி வெறியர்களையும் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் 'தமிழர்கள்' என்ற பட்டியலில் அடைப்பது உள்ளபடியே சீமான் எந்த நோக்கத்திற்காக அரசியலில் இருக்கின்றார் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது. முப்பாட்டான் முருகனைக் கொண்டாடும் சீமான் தன்னை வீர சைவன் என்கின்றார். ஆனால் முருகனோ ஆட்டு ரத்தத்தில் தினை மாவைப் பிசைந்து உண்டதாக அகநானூறு கூறுகின்றது. பார்ப்பன மயமாக்கப்பட்ட முருகனை காட்சிப்படுத்தும் பரிபாடலையும், திருமுருகாற்றுப்படையையும் படித்துப் பார்க்காமலேயே அதில் வரும் முருகன் தமிழ் முருகன் என்று பிதற்றித் திரிகின்றார். அவரின் நோக்கம் மிகத் தெளிவானது, தமிழ்நாட்டில் இனவாத அரசியலை தீவிரப்படுத்த வேண்டும், அதே சமயம் பார்ப்பனியத்தை எந்தச் சூழ்நிலையிலும் தமிழ்ச் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்திவிடக் கூடாது. இரண்டையும் இரண்டு கண்கள் போல எடுத்துச் செல்ல வேண்டும். சீமானுக்கு பாரதியும் ஒன்றுதான், பாரதிதாசனும் ஒன்றுதான். கொள்கைத் தெளிவு இருப்பவர்கள் புரிந்து கொள்வார்கள் சீமான் ஒரு பார்ப்பனிய பச்சோந்தி என்பதை.
- செ.கார்கி