தமிழ் படித்த தமிழரெல்லாரும்,  தலைமுறை தலைமுறையாகப் பாடிக்காட்டிப் பெருமைப்படுவது, பின்வரும் சங்க காலப் பாடல்,

“யாயும் ஞாயும் யாராகியரோ

எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே!”

என்பது, அப்பாடல்.

எங்கோ ஒரு காட்டில், ஒரு பூஞ்சோலையில், வேலைத் துறையில், கடற்கரையில், மலைச்சாரலில் கட்டிளங்காளை ஒருவனும், திரண்ட உடல்வளமுள்ள குமரி ஒருத்தியும் மேலே கண்டவாறு பேசிக் கொண்டனர்.

இதன் பொருள் என்ன?

என் தாய் யாரோ, உன் தாய் யாரோ; என் தந்தை யும், உன் தந்தையும் எந்தவகை உறவினரோ, என் குடும்ப வழி எதுவோ, உன் குடும்ப வழி எதுவோ - ஆனால், நாம் இருவரும் சந்தித்த மாத்திரத்தில் நம் நெஞ்சங்கள் ஒன்று கலந்தன. பெய்யும் மழைநீர் எந்த மண்ணில் விழுகிறதோ அந்த மண்ணின் வண்ணத் தையும் சாரத்தையும் கொண்டுவிடுவதுபோல, நம் இருவருடைய நெஞ்சங்களும் ஒன்றேயாகிவிட்டன.

“நாம் வாழ்விணையாராவோம் - வா!”

இதுதான் பழந்தமிழர் வாழ்க்கை நெறி. இது, ஒத்த அன்பைத் தவிர, எந்த அடிப்படையையும் கொள்ளாத பழங்காலம்.

“கற்பெனப் படுவது கரணமொடு புணரக்

கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியை கொடைக்குரிமரபினோர் கொடுப்பக் கொள்வதுவே!”

“கொடுப் போர் இன்றியும் கரணம் உண்டே

புணர்ந்து உடன்போகிய காலை யான!”

இவை இரண்டும் தொல்காப்பியர் காலத்தமிழர் வாழ்க்கைத் துணைஏற்பு நெறிகள் பற்றிய நூற்பாக்கள்.

இவற்றின் பொருள் என்னென்ன?

எந்த மரபைச் சார்ந்த ஆடவன், பெண் கொள்ளக் கூடிய மரபறிந்து பெண் கேட்கிறானோ, அப்பெண் வீட்டார் கொடுக்க, ஒரு மணவினையோடு ஆடவனும் மகளும் இணைவது என்கிற கற்பு மணம் ஆகும், இது.

இது, மணமகன், மணமகள் வீட்டார் ஒப்புத லோடு நடந்த கற்பு மணம்.

பெண் வீட்டார் விருப்பம், ஆண் வீட்டார் விருப்பம் அறியாமலே, நெஞ்சங்கள் கலந்த குமரனும் குமரியும் தாங்களே விரும்பி, எந்த மணவினையும் இன்றி, அவர்கள் விருப்பப்படி வாழ்விணையராக ஆகும் களவு மணம், அடுத்தது.

நீண்டகாலம் தமிழரிடையே இருந்த மண முறை மரபு பார்ப்பது - ஏற்ற மரபை அதாவது வழிவழியாக வந்த பழக்க வழக்கங்களை அறிந்து கொண்டு, அதன் அடிப்படையில் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் இணைவது என்கிற வடிவில் மட்டுமே திருமண முறை இருந்தது.

தொல்காப்பியத்திலேயே - 2700 ஆண்டுகளுக்கு முன்னரே, மணவினை (அ) சடங்கு என ஒன்று தோன்றிவிட்டது.

அந்தச் சடங்கைச் செய்தவர் குடும்ப மூத்தோரா, (ஐயர்), தமிழ்ப் பார்ப்பாரா, ஆரியப் பார்ப்பாரா என்பது ஆய்வுக்கு உரியது.

இப்படிப்பட்ட தமிழரிடையே, கோவலன்-கண்ணகி திருமண வினைதான், தீ வளர்த்து, தீக்குழியைச் சுற்றி மணமக்கள் ஏழு தப்படி நடந்து, ஆரியப் பார்ப் பார் மந்திரம் ஓத நடந்தது என்பது உறுதி.

இது நடந்த காலம் கி.பி.200.

தமிழரின் வீட்டு வாழ்க்கையில் கடந்த 1800 ஆண்டுகளுக்கு மேலாக, எல்லா வீட்டு நிகழ்ச்சிகளும், சமூக நிகழ்ச்சிகளும், குறிப்பாக மணவினை-பிண வினை எல்லாமும் பார்ப்பனரைக் கொண்டே, பார்ப்ப னரின் ஸ்மிருதி, சுருதி, ஆகம, இதிகாச நெறிகளை அப்படியே பின்பற்றித்தான் நடத்தப்பட்டு வருகின்றன.

பெண் கற்பு நெறி உள்ளவளாக - தன்னைத் தற் காப்புச் செய்து கொள்ளத்தக்கவளாக ஒழுக வேண்டும் என்று,

“தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர் விலாள் பெண்”

எனக் கட்டளை வகுத்த திருவள்ளுவர், அதே மூச்சில்,

“ஒருமை மகளிரே போலப் பெருமையும்

தன்னைத்தான் கொண்டாழுகின் உண்டு”

என்று, ஆணும் தன்னைத்தான் காத்துக்கொண்டு ஒழுகவேண்டும் என விதித்துள்ளார்.

இதையெல்லாம் அட்டத்தில் தூக்கியெறிந்துவிட்டு,

“பெண் எனும் பேய் பிடியாதிருக்க வேண்டும்”

“பெண் புத்தி பின் புத்தி”

“உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு”

“படி தாண்டாப் பத்தினியாயிரு”

“புகையிலை விரிச்சா போச்சு, பெண் சிரிச்சாப் போச்சு”

“சாண் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை”

“பாத்திரம் அறிந்து பிச்சை இடு;

கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு!”

என்கிற சொலவடைகள் தமிழ் சமயக் குரவர்களாலும், கவிஞர்களாலும் எழுதி வைக்கப்பட்டன. இவை ஏன்? அய்யகோ! மேலும் படியுங்கள்.

“ஆலகால விடத்தையும் நம்பலாம்;

ஆற்றையும் பெருங்காற்றையும் நம்பலாம்;

கோல மாமத யானையை நம்பலாம்;

கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்;

காலனார் விடு தூதரை நம்பலாம்;

கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்;

சே(i)ல கட்டிய மாதரை நம்பினால்

தெருவினில் நின்று தியங்கித் தவிப்பரே!”

இப்பாடலை எழுதியவன் ஒரு மனிதன்; ஆடவன். அவனைப் பெற்றவள், ஒரு பெண் தானே! பெண்ணை எத்தனைக் கொடியவளாகச் சித்திரிதிருக்கிறான்!

தமிழ் மூவேந்தர்களாலும், பல்லவர்களாலும் பார்ப்பனர் எழுதிய மனுஸ்மிருதி, பராசர ஸ்மிருதி; இராமா யணம், மகாபாரதம், பாகவதம், விஷ்ணு புராணம், கருட புராணம், நாரத புராணம் மற்றும் உள்சாதி தோற்றம் பற்றிய புராணங்கள் இவை அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவையே அரச நெறி - தமிழர் சமூகநெறி - குடும்ப வினைகள் நெறி - வழிபாட்டு நெறி - பிணவினை நெறி எனப் பின்பற்றப் பட்டுப் படிந்து விட்டன.

பிறப்புக் காரணமாக, பார்ப்பனர்  அல்லாத தமிழர் கள் எல்லோரும் அன்றும் இன்றும் நாலாஞ்சாதியாக - சூத்திரராக ஆக்கப்பட்டனர்.

தம்மிடையே இவர்கள் ஒரே தகுதி - சமத்துவ நெறி-ஒப்புரவு நெறி உள்ளவர்களாக இருத்தல் கூடாது என்று கருதிய பார்ப்பனர்கள், எல்லாப் பார்ப்பனரல் லாதவர்களையும் 6,000, 7,000 உள்சாதிகளாகப் பிரித்து ஒவ்வொரு உள்சாதியின் தோற்றத்துக்கும் ஒரு புராணம் எழுதி - ஒரு சாதியார் இன்னொரு சாதியாரை விட உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர் என்று கற்பனையான கதைகளை வரைந்து, ஒவ்வொரு உள் சாதியாரும் அதை நம்பவும் - குரங்குப் பிடியாகப் பிடித்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்தார்கள்.

“இந்து மதம்” என்கிற “பிராமண மதம்” அல்லது “வேத மதம்” - ஒட்டுமொத்தப் பெண்களையும் ஆண் களைவிடத் தாழ்ந்தவர்கள் - பிள்ளை பெறும் கருவிகள் - ஆணுக்கு உள்ள சொத்துரிமை பெண்களுக்கு இல்லை - ஆடவன் மறுமணமும்  பல மணங்களும் செய்து கொள்கிற உரிமை உள்ளது போல் - பெண்கள் கணவனை இழந்தால் மறுமணம் பெற உரிமை கிடையாது - தத்துப் போக ஆண்களுக்கு உள்ள உரிமை பெண்களுக்கு இல்லை எனக் கூறி - எல்லா உரிமை மறுப்புகளையும் பெண்கள் பேரில் சுமத்தினர்.

இது, தங்கள் பேரில் சுமத்தப்பட்டதை - மொத்த மக்கள் தொகையில் சரிபாதிப் பேராக உள்ள பெண் மக்களாலேயே புரிந்து கொள்ளப் படவில்லை!

இவை எந்த ஆதாரங்களின்படி தமிழர்களால் பின்பற்றப்பட்டன - பின்பற்றப்படுகின்றன?

பின்கண்டவையே ஆதாரங்கள் :

1. ஒரு கணவன், தன் மனைவியைத் தனக்குத் தொண்டு செய்யவும், பிள்ளைகளைப் பெற்றுத் தரவும் கடவுளால் தரப்பட்டவன். - அதர்வண வேதம்

2. பெண்கள் பிள்ளை பெறும் தோல் பைகளுக்குச் சமம். - அர்த்த சாஸ்திரம்

3. பெண்ணாய்ப் பிறப்பதைவிடக் கெட்ட பிறப்பு வேறு எதுவும் இல்லை. - பாரதம்

4. பெண்கள் உறுதியான மன பலம் இல்லாதவர்கள். அதனால் அவர்கள் உறுதியான நிலை உள்ள வர்கள் அல்ல. - மனுஸ்மிருதி

5. பெண்கள் ஆண்களைக் கற்பழிக்கும் இயல்பு உள்ளவர்கள். ஆதலால் புத்திசாலிகள், பெண் களுக்கு இடையே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். - மனுஸ்மிருதி

6. பெண்கள் இளமைப் பருவத்தில் தகப்பன் பரா மரிப்பிலும், வாலிபப் பருவத்தில் கணவன் பரா மரிப்பிலும், முதுமைப் பருவத்தில் மகன் பராமரிப் பிலும் இருக்கக் கடவர். - மனுஸ்மிருதி

7.  பெண்களுக்குச் சுவதந்தரம் இல்லை. சொத்துரி மை இல்லை. - மனுஸ்மிருதி

மேலே கண்டபடி, இந்துமதப் பெண்களுக்கு இவை மறுக்கப்பட்டதற்கு எதிராக, 1926இல் போர் தொடுத்த வர், தந்தை பெரியார்.

மேலே கண்டவாறு பெண் குலத்துக்கு உள்ள எல்லாத் தடைகளையும் இந்துச் சட்டம் என்கிற உரிமை இயல் சட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்று கோரி, 17, 18-2-1929இல் செங்கற்பட்டில் நடந்த முதலாவது மாகாண சுயமரியாதை மாநாட்டில் தீர்மானங்களை நிறைவேற்றியவர், பெரியார்.

இவை அத்தனை உரிமை மறுப்புகளையும் ஒரே மூச்சில் நீக்க வேண்டும் என்று, சட்ட வரைவுகளை உருவாக்கி, இந்துச் சட்டத் திருத்த வரைவுகளை (The

Hindu Code Bill) தாமே வடித்து, இந்திய அரசமைப்புச் சட்ட  அவையில், 1947 ஏப்பிரலில் முன்மொழிந்தவர், சட்ட அமைச்சர் மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்.

இவை விரைந்து நிறைவேற்றப்படாததால்தான், தம் சட்ட அமைச்சர் பொறுப்பை 1951இல், உதறி எறிந்தார், அம்பேத்கர்.

இவற்றில் - பிறவி வருண வேறுபாடுகள் ஒழிப்பு; பழக்க-வழக்கச் சட்ட ஒழிப்பு என்கிற ஒரு திருத்தத்தைத் தவிர, மற்றபடி பெண்களுக்கு மறுக்கப்பட்ட எல்லா உரிமைகளையும் வழங் கும் அம்பேத்கரின் உரிமை இயல் சட்ட வரைவு கள், 1955-56இல் பண்டித நேரு அரசினால் சட்ட மாக நிறைவேற்றப்பட்டன.

ஆயினும் அத்தகைய சட்டங்கள் வந்த பிறகும், இந்துப் பெண்களின் மற்றும் மற்ற மதங்களைச் சார்ந்த பெண்களின் நிலைமை என்ன?

1947இல் 100க்கு 20 விழுக்காட்டுப் பேரே படித்திருந்த இந்தியாவில், இன்று இந்தியரில் 75 விழுக்காட்டு பேர் படித்திருந்தும், இந்தியாவில் பெண்கள் படும் அல்லல்களும் துன்பங்களும் உரிமை மறுப்புகளும் தீர்ந்த பாடில்லை. ஏன்?

எவ்வளவு பெரிய படிப்புப் படித்தவனும் - உலகம் அறிந்தவனும் - பெண்ணை ஒரு போகப் பொருளாகத் தான் கருதுகிறான்.

தனக்கு உரிமை இல்லாத பெண்ணைத் தமக்கையாக - தங்கையாக - மகளாக - தன்னைப் போன்ற உரிமை பெற்றவளாகக் கருதுவதும் நடத்துவதும் இல்லை.

இந்து, இஸ்லாம், கிறித்துவக் குடும்பங்கள் எல்லா வற்றிலும் - மனைவி, உடன்பிறந்தவள், மகள், மருமகள் ஆகியவர்களுக்கு-அண்ணன், தம்பி, மகன், மருமகன் ஆகியோரிடத்தில் காட்டும் அன்புக்குச் சமமான அன்பு காட்டப்படுவது அறவே இல்லை.

ஏன்? ஏன்?

“வீடுவரை உறவு

வீதிவரை மனைவி

காடுவரை பிள்ளை

கடைசி வரை யாரோ!”

என்று கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடலின் பொருளை ஒவ்வொருவரும் எண்ணிப் பாருங்கள்!

அப்போது உண்மை விளங்கும்.

அந்த உண்மை என்ன?

கணவனை இழந்த மனைவி 30, 40, 50 ஆண்டுகள் வாழ்விலும் தாழ்விலும் கணவனுக்கு எல்லாமாக இருந்தவள். ஆனால் அவள் பெண்தானே! கணவன் உடலுடன் அவள், இடுகாட்டுக்கோ, சுடு காட்டுக்கோ போக, உரிமை இல்லை. இந்து சாத்திர விதி அது. அதில் ஒட்டுமொத்த சமூகமும் ஊறிக் கிடக்கிறது.

தான் பெற்ற மகன் மட்டும் தகப்பன் பிணத்தோடு சுடுகாட்டுக்குப் போகலாம். அவனே “பிள்ளை” - ஆண்பிள்ளை. அதே தகப்பனுக்குப் பிறந்த மகள் அப்படிப் போகமுடியாது; போகக்கூடாது.

அது ஏன் அப்படி? தகப்பன் உடலுக்குக் கொள்ளி வைக்கிற உரிமை, மகனுக்கு மட்டுமே உண்டு - மகளுக்கு இல்லை; இல்லை.

அது எதனால்?

“புத்” என்கிற நரகத்துக்குத் தகப்பனின் ஆன்மா போகாமல் இருக்க - “புத்திரன்”தான் கொள்ளி வைக்க வேண்டும். இது சாத்திரக் கட்டளை.

“புத்திரி” கொள்ளி வைக்க முடியாது; கூடாது.

“கொள்ளி வைக்கிற உரிமை ஆணுக்கு மட்டுமே; சொத்துரிமை கொள்ளி வைத்த ஆணுக்கு மட்டுமே என்று இந்து மதம் - இந்துச் சட்டம் கூறிவிட்டது.”

இன்று மகளுக்கும் சொத்து உரிமை உண்டு. ஆனால் குடும்ப வழக்கம் - சாதிப் பழக்க வழக் கம் அப்படியே 2015லும் நீடிக்கிறது. அதனால் மகள் கொள்ளி வைக்க முடியாது. இது சட்டப்படி இன்றும் நாளையும் மறுநாளும் நீடிக்கும்.

இது பெண்ணுரிமைக்கு வெற்றியா? இல்லை.

இவை மட்டுமா?

126 கோடிப் பேர் உள்ள இன்றைய இந்தியாவில், 63 கோடிப் பேர் பெண்கள்.

1.            இன்று, 126 கோடிப் பேரில் 32 கோடிப் பேர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். இதில் 20 கோடிப் பேர் பெண்கள். இது சரியா?

2.            இந்திய நாடாளுமன்ற மக்கள் அவையில் 543 பேர் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள்.

மொத்தத்தில் பாதிப் பேர் - 271 பேர் பெண்களாக இருக்க வேண்டும்.

மூன்றில் ஒரு பங்குப் பேர் என்றாலும்கூட, 181 பெண்கள் மக்களவை உறுப்பினர்களாக இருக்க வேண்டும். அப்படி ஏன் இல்லை?

3.            மாநிலச் சட்ட மன்றங்களில் 4,300 பேர் உறுப்பி னர்கள். இதில் மூன்றில் ஒரு பங்கு என்றாலே, 1400 பெண்கள் இருக்க வேண்டும். ஆனால் இல்லை.

4.            மத்திய, மாநில அரசுப் பணிகளில் 50 விழுக் காட்டு இடம் மகளிருக்கு இருக்க வேண்டும். ஏன் இல்லை?

5.            வழிபாட்டு இடங்களில் பெண்களுக்கு எல்லா உரி மையும் இருக்க வேண்டும். அப்படி இல்லையே, ஏன்?

6.            அரசு அலுவலகங்களிலோ, தனியார் நிறுவனங் களிலோ, வணிக இடங்களிலோ பணியாற்றும் பெண்கள் ஆண்களின் அத்துமீறலுக்கு ஆளா காமல் இருக்க உரிய பாதுகாப்பு இல்லை. முதலாளித் துவத்தின் பண்ணையாள்கள், இவர்கள்.

7.            படித்த - படிக்காத வெவ்வேறு உள்சாதி களைச் சேர்ந்த ஆணும், பெண்ணும் - வயதுக்கு வந்தவர்கள், விரும்பித் திருமணம் செய்து கொள்ள, இன்று சட்டப்படித் தடை யில்லை.

ஆனால் ஓர் உயர் உள்சாதிப் பெண்ணை அதை விடத் தாழ்ந்த சாதியாகக் கருதப்படுகிறவன் மணந் தால், மணமகன் சாதிக்காரரை, மணமகள் சாதிக்காரர் கள் வெளிப்படையாகத் தாக்குகிறார்கள். ஆணையோ, பெண்ணையோ அல்லது இருவரையுமோ கொன் றொழிக்கிறார்கள். அப்படிக் கொல்லுவதற்கு “கௌரவக் கொலை” - “சாதி மானம் காக்கும் கொலை” என்று பெயரிட்டுக் கொண்டாடுகிறார்கள். பிய்ந்த செருப்புக்குப் பட்டுக் குஞ்சம் கட்டும் மூடர்கள், இவர்கள்.

வயது வந்த இருவரின் திருமணத்தைத் தடுக்க வேண்டி, கலைக்க வேண்டிக் குற்றம் செய்கிறவர் களை - அதற்குத் தூண்டுகிறவர்களைக் கடுந்தண்ட னைக்கு உள்ளாக்க வேண்டுமா, இல்லையா?

அத்துடன்கூட, வருணம் மாறித் திருமணம் செய்துகொள்ளச் சட்டத்தில் தடை இல்லை; உள்சாதி மாறித் திருமணம் செய்து கொள்ளச் சட்டத்தில் தடை இல்லை என்கிற கொள்கை விளக்கங்களைக் கற்பிக்கும் பாடங்களை 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புக்குள் கட்டாயத் துணைப்பாடமாக வைத்துக் கற்றுத்தரத் தமிழக அரசினரும், இந்திய அரசினரும் - 2015-2016 கல்வி ஆண்டுக்குள் உரிய ஏற்பாடுகளைச் செய்தி ருக்க வேண்டும்h, இல்லையா?

8. தனிமையில் எந்தப் பெண்ணும் பயணிக்கும் போதோ, பணிபுரிய நேரும் இடத்திலோ, வீட்டில் தனியாக இருக்கும் போதோ ஒருவனால் வன் புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுவதை-கொலை செய்ய முயற்சித்த குற்றமாகக் கருதி (Attempt to Murder) கடுமையான தண்டனை வழங்க வழி செய்ய வேண்டும். ஏன்?

தமிழகத்தில் 2011 இல் நடந்த வன் புணர்ச்சிகள் 677. அதுவே 2014இல் 1565.

இரண்டாண்டுகளுக்கு முன், புதுதில்லியில், பேருந் தில், பெயர் மறைக்கப்பட்ட ‘நிர்பயா’ என்கிற பெண் கொடுமையாகக் கற்பழிக்கப்பட்டுப் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டாள். பின்னர், அப்பெண் சாக நேரிட்டது.

9.            அதைவிடக் கொடுமையாகத் தீண்டப்படாத வகுப் புப் பெண்களும், தனியாக உள்ள பெண்களும், 2 வயது முதல் 5 வயது; 10 முதல் 15 வயது சிறுமிகளும் விடு புகுந்தும், கடத்தப்பட்டும் கற் பழித்துக் கொல்லப்படுகிறார்கள்.

10.          முதுமை அடைந்த - தனிமையில் வாழும் தாய் மார்கள் உறவினரால் - தெரிந்தவர்களால் -திருடர் களால் நகைக்காகக் கொல்லப்படுவது அன்றாடம் - அரியானா, தில்லி, உ.பி., கர்நாடகம், இராசஸ்தான், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் அடிக்கடி நேர்கின்றது.

இக்குற்றங்கள் நேராமல் தடுத்திட அரசு, காவல் துறை கண்காணிப்பு மிக மிகத் தேவை.

இப்படிப்பட்ட குற்றம் இழைத்தவர்கள் கொடிய தண்டனைக்கு ஆளாக்கப்பட வேண்டும்.

அந்தந்தக் குடியிருப்பில் இருக்கும் இளை ஞர்கள் முறை போட்டுக் கொண்டு, இரவு 12 மணி நேரமும் தெருக்களைச் சுற்றிவர உடனே ஆவன செய்ய வேண்டும்.

“மதங்கள் கற்பித்ததுதான், பெண் பிறப்பு இழிவானது” என்கிற ஆன்மிகப் பாடம்.

அதிலிருந்து பெண் குலத்தை விடுவிக்க -

1. கடுங்குற்றத் தண்டனைச் சட்டம்

2. கல்வியில் - ஊடகங்களில் - நூல்களில் - திரைப்படங்களில் - தொலைக்காட்சிகளில் ஆண் - பெண் சமத்துவத்துக்கு எதிரான கருத்துக்கள் தூக்கிப் பிடிப்பதைத் தடுத்தல்; இவற்றைக் கண்காணிக்க, அரசினர் எல்லாம் செய்ய வேண்டும்.

மனிதன், ஒரு காட்டு விலங்காக மாறக்கூடாது; நடக்கக் கூடாது; வாழக் கூடாது.

பெண்கள் உரிமை உணர்வு பெறவேண்டும்; தன்காலில் நிற்கத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தற்காப்புப் பயிற்சிகளைக் கற்றுக்கொண்டு, வீர மறத்திகளாக மாறி - தன்னை அணுக எத்தனிக்கும் தீய ஆடவனை எதிர்த்துப் போராடி, அவனுக்கு மறக்க முடியாத பாடம் கற்பிக்க வேண்டும்.

Pin It