ஒரு வழியாக... கட்டக் கடைசியாக... முடிவாக... தான் நடத்தி வந்த 25 ஆண்டுக் காலப் பூவா – தலையா விளையாட்டை முடித்து “இனி என் வழி அரசியல் வழி” எனப் பிடரி சிலிர்த்து நிற்கிறார் சூப்பர் ஸ்டார்!
ஆனால், இனி அரங்கேற இருப்பவை அவரே வடிவமைத்த காட்சிகளா?...
அல்லது, திரைப்படத்தைப் போல வேறொருவரின் இயக்கத்துக்கே இங்கும் வாயசைக்கப் போகிறாரா?...
ரஜினி அரசியல் உண்மையிலேயே நலந்தருமா?...
அல்லது, வெறும் விளம்பரமா?...
அவர் சொற்களிலிருந்தே அலசிப் பார்க்கலாம்!
இதற்குப் பெயர் அரசியலா?
“போர் என்றால் தேர்தல்தான். இப்பொழுது என்ன தேர்தலா வந்து விட்டது?” – விசிறிகள் தொடர் சந்திப்பின் முதல் நாள் ரஜினி கூறிய கருத்து இது. இதே போல் நிறைவு நாள் உரையில்,
“நான் அரசியலுக்கு வருவது உறுதி” என்று முழங்கிய கையோடு, அடுத்து வரும் தேர்தலில் எல்லாத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவது, தங்களால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பது பற்றி உண்மையான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்குவது, ஆட்சியைப் பிடிப்பது, வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாவிட்டால் மூன்றே ஆண்டுகளில் பதவி விலகுவது என்று அடுக்கடுக்காகத் தன் திட்டங்களை விவரித்தார் ரஜினிகாந்த்.
“தேர்தல் பாதை திருடர் பாதை” என்று சொல்லித் தேர்தல் அரசியலே வேண்டா என்று ஒதுங்கியிருந்த பெரியார் முதல் “நான் முதலமைச்சராகத்தான் கட்சி தொடங்கினேன். பின்னே, அடுத்தவனை முதல்வராக்கவா நான் கட்சி தொடங்குவேன்?” என்று வெளிப்படையாகவே கேட்ட சீமான் வரை அரசியலுக்கு வரும் அத்தனை பேருமே மக்களுக்காக எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள், தொண்டுகள், சட்டப் போராட்டங்கள் போன்றவற்றை நடத்தி, அதற்காகச் சிறை சென்று, ஆட்சியிலிருப்பவர்களின் பகையை அறுவடை செய்து, படாத பாடெல்லாம் பட்டுத்தான் அரசியலுக்கு வருகிறார்கள்.
ஆனால், கட்சிக்குப் பெயர் சூட்டு விழாக் கூட நடத்தும் முன்பே தேர்தல்... வாக்குறுதி... ஆட்சி... அரியணை... என ரஜினி முழுக்க முழுக்க முதல்வர் நாற்காலியைக் குறி வைத்தே இறங்குவது என்ன வகையான அரசியல்? முதலில், இதற்குப் பெயர் அரசியலா? அரசியல் என்பது மக்களுக்குத் தொண்டு செய்வது இல்லை; சமூகத்துக்காக உழைப்பது இல்லை; வெறுமே தேர்தலில் நிற்பதும், ஆட்சிக்கு வருவதும்தாம் என்று ரஜினிக்குச் சொல்லித் தந்த அந்த அறிவுக் கொழுந்து யார்?
நிற்க! சீமானைப் போல் நான் “ரஜினி தேர்தல் அரசியலுக்கே வரக்கூடாது. வேண்டுமானால் சேவை அரசியல் செய்யட்டும்” எனச் சொல்லவில்லை. குடியரசு நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்; ஆட்சிக்கு வரலாம். அஃது அவரவர் உரிமை. யாரும் யாரையும் வரக்கூடாது எனச் சொல்ல இங்கு அதிகாரம் கிடையாது.
ஆனால், ஆட்சிக்கு வருவதும் அரசியல் செய்வதும் இரு வேறு பிரிவுகள். ஆட்சிக் கட்டிலில் அமர்பவர்கள் எல்லாரும் அரசியல்வாதிகளும் இல்லை; அரசியல்வாதிகள் எல்லாரும் ஆட்சிக்கு வந்து விடுவதும் இல்லை. ஆட்சிக்கே வராமல் கடைசி வரை மக்களுக்காக உழைத்து மொத்த சமூகத்திலும் மாற்றத்தைக் கொண்டு வந்த காந்தி, பெரியார், மார்ட்டின் லூதர் கிங் போன்ற அரசியல்வாதிகளும் இங்கு உண்டு; மக்களுக்காக ஒரு துரும்பையும் கிள்ளிப் போடாமல் வெறுமே அவர்களின் உணர்ச்சியைத் தூண்டி ஆட்சியைப் பிடித்த ஹிட்லர், இராசபக்ச போன்ற கொடுங்கோலர்களும் இங்கு உண்டு. எனவே, அரசியலுக்கு வருவது என்பதே ஆட்சிக்கு வருவதுதான் என நினைப்பது அடிப்படை அரசியல் புரிதலற்ற சிறுபிள்ளைத்தனம்.
நேர்மையான அரசியல்வாதி என்பவர் ஒருபொழுதும் ஆட்சிக் கட்டிலை மையப்படுத்தித் தன் அரசியலை அமைத்துக் கொள்ள மாட்டார். மக்கள் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுப்பார், அவர்களுக்காக உழைப்பார், சமூக நலனுக்குப் பாடுபடுவார், இவற்றுக்கெல்லாம் கைம்மாறாக மக்கள் பதவியை அளித்தால் ஏற்றுக் கொள்வார்; இல்லாவிட்டால், மீண்டும் தன் தொண்டுகளைத் தொடர்வார்.
மாறாக, ஆட்சியைப் பிடிப்பதற்காக மட்டுமே அரசியலுக்கு வருவது, அதற்காக வாக்குறுதிகள் வழங்குவது, முடிந்தால் அவற்றை நிறைவேற்றுவது, இல்லாவிட்டால் பெட்டியைக் கட்டிக் கொண்டு கிளம்புவது என்பது நேர்மையான அரசியலா இல்லையா என்பதை விட, முதலில் அது அரசியலே இல்லை என்பதை ரஜினி புரிந்து கொள்ள வேண்டும்.
சாதி, சமய வேறுபாடில்லாத அரசியலுக்கு வழிகாட்டி பகவத் கீதையா?
அரசியலுக்குத் தான் வருவதற்கான காரணத்தை விளக்கவே பகவத் கீதையை நாடும் ரஜினி, சாதி - சமயப் பாகுபாடற்ற அரசியலைக் கொண்டு வருவதாகச் சொல்வது தொடக்கத்திலேயே இடிக்கிறது.
சாதியத்தை வலியுறுத்துவதாகத் தொடர்ந்து கண்டனத்துக்குள்ளாகும் நூல்களுள் பகவத் கீதையும் ஒன்று. கண்டனம் தெரிவிப்பவர்கள் வெறும் தமிழ்நாட்டு அரசியலாளர்களாகவும், தமிழ் அறிஞர்களாகவும் மட்டுமே இருந்தால் கூட இது வெறுமே இங்கு நிலவும் பார்ப்பனிய எதிர்ப்புணர்வின் பகுதி எனச் சொல்லலாம். ஆனால், இவற்றுக்கெல்லாம் சிறிதும் தொடர்பில்லாத வேற்று நாடான இரசியாவில், ‘மக்களிடையே பிரிவினையை உண்டாக்கும் நூல்’ என பகவத் கீதை தடை செய்யப்பட்டுள்ளது! அதுவும் அந்நாட்டுப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் கருத்தைக் கேட்டு!
இப்படிப்பட்ட நூலைப் பின்பற்றுவதா வேண்டாவா என்கிற ரஜினி எனும் தனிப்பட்ட மனிதரின் விருப்பத்துக்குள் நாம் நுழைய முடியாது. ஆனால், இப்படிப்பட்ட நூலைப் பின்பற்றுபவரின் அரசியல் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.
ஏற்கெனவே தமிழர்களுக்கென இங்கே ‘திருக்குறள்’ எனும் வழிகாட்டி நூல் இருக்கிறது. தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் எதற்கெடுத்தாலும் திருக்குறளைத்தான் மேற்கோள் காட்டுவார்கள். தான் சொல்ல வரும் கருத்துக்கு வலுச் சேர்க்க, கொண்ட கொள்கையை விளக்க, எடுத்த முடிவை நியாயப்படுத்த என எல்லாவற்றுக்கும் திருக்குறள்தான் இங்கே. ஆனால், ரஜினியோ எப்பொழுதும் பகவத் கீதை, மகாபாரதம், இராமாயணம் எனப் பேசுபவர். அரசியலுக்கு வரும் முடிவு பற்றிய அவரது உரையும் அப்படியே அமைந்திருக்கிறது. எனில், ரஜினி கையிலெடுப்பது திருக்குறளை மையப்படுத்திய அரசியல் இல்லை; பகவத் கீதையை மையப்படுத்திய அரசியல் எனத் தெரிகிறது!
இது சரியா? “எல்லா உயிர்களும் சமம்” என்றுரைக்கிற, உலகே வியந்து போற்றுகிற திருக்குறளை மையப்படுத்திய அரசியலை விட்டுவிட்டு, “நான்கு வருணங்களையும் நான்தான் படைத்தேன்” என்று கடவுளே கூறுவதாகச் சொல்கிற, உலகெங்கும் சர்ச்சைக்குள்ளாகிற கீதையை மையப்படுத்திய அரசியல் தேவையா? தமிழர் வழிகாட்டி நூலை மையமாகக் கொண்ட அரசியலை அப்புறப்படுத்தி விட்டு வடமொழி நூலை மையமாய்க் கொண்ட அரசியல் இங்கு எதற்காக? இக்கேள்விகள் அவ்வளவு எளிதில் புறக்கணித்து விடக்கூடியவை அல்ல.
தமிழ் மண்ணில் ஆன்மிக அரசியல்
திராவிட அரசியல், தமிழ்த்தேசிய அரசியல் எனச் செறிவான கோட்பாடுகளைக் கண்ட தமிழ்நாட்டுக்கு ‘ஆன்மிக அரசியல்’ எனும் புதிய கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்துகிறார் ரஜினிகாந்த் அவர்கள்.
‘ஆன்மிகம்’ (spirituality) எனும் சொல் வேண்டுமானால் வடமொழியிலிருந்து தமிழுக்கு இறக்குமதியானதாக இருக்கலாம். ஆனால், ‘இறையியல்’ (spirituality) எனும் துறை தமிழுக்குப் புதிதில்லை.
உலகின் மற்ற பகுதிகளில் மனிதர்கள் இயற்கைச் சீற்றங்களைக் கண்டு அஞ்சி நடுங்கி, அவற்றையே கடவுளாக எண்ணி மண்டியிட்டுத் தொழுத காலத்திலேயே, “கடவுள் என்பது எங்கோ வேற்றுலகில் அமர்ந்து கொண்டு நம்மை ஆட்டிப் படைக்கும் ஆற்றல் இல்லை. மனிதனின் அடுத்த நிலைதான் கடவுள்” எனப் பகுத்தறிவுக்கு உவப்பான கடவுள் கொள்கையைப் படைத்து இறையியலில் புது இயல் கண்டவர்கள் தமிழர்கள்.
இந்தியாவின் இறையியல் என ரஜினி நம்பும் இந்து சமயப் பண்பாட்டுக்கு இங்கே அடிக்கல் கூட நாட்டப்படாத காலத்திலேயே தங்கள் பண்பாட்டின்படி கோயில் கட்டிக் கோபுரம் எழுப்பியவர்கள் தமிழர்கள்.
ஆனால், ரஜினி பின்பற்றும் இறையியல் (ஆன்மிகம்) இத்தகையதா? “எல்லாமே கடவுள் செயல். கடவுள் அருள் இருந்தால்தான் எல்லாம் நடக்கும். உலகின் ஒவ்வோர் அசைவையும் அவர்தாம் தீர்மானிக்கிறார்” என முழுக்க முழுக்க இந்து சமய அடிப்படையிலான கடவுள் கொள்கையை ஏற்று நடப்பவர் ரஜினி. “நல்லதொரு கொள்கைக்காக அல்லது காரணத்துக்காக வாழ்ந்த/உயிர் விட்ட மனிதர்தாம் கடவுள்” எனும் தமிழரின் கடவுள் கோட்பாட்டுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இப்படித் தமிழர்களின் இறையியல் கோட்பாட்டுக்கு முற்றிலும் மாறான இறையியலைக் கடைப்பிடிக்கும் ஒருவர் இங்கே ‘ஆன்மிக அரசியல்’ செய்கிறேன் எனப் புறப்பட்டால் அவர் வழங்கும் அரசியல்தான் தமிழர்களுக்கானதாக இருக்குமா? அல்லது, அதிலுள்ள ஆன்மிகம்தான் தமிழ் மண்ணுக்குரிய ஆன்மிகமாக இருக்குமா?
தவிர, இறையியல் என்பது எல்லாச் சமயங்களுக்கும் பொது என்பதாகவே வைத்துக் கொண்டாலும் அதை அணுகும் விதம் ஒவ்வொரு சமயத்துக்கும் வேறுபடும். அப்படியிருக்க, குறிப்பிட்ட சமயத்தைச் சேர்ந்த ஒருவர் செய்யும் ‘ஆன்மிக அரசியல்’ எல்லாச் சமயத்தைச் சேர்ந்த மக்களுக்கும் பொதுவான அரசியலாக எப்படி இருக்க முடியும் என்பது தவிர்க்க இயலாத கேள்வி.
ஆக, கூட்டிக் கழித்துப் பார்த்தால், தமிழ்ப் பண்பாட்டுக்கு முற்றிலும் எதிரான இந்து சமய இறையியல், பகவத் கீதை போன்றவற்றைக் கையில் ஏந்திய ரஜினி அவர்கள் “மாற்றத்தைக் கொண்டு வருவேன்” என மீண்டும் மீண்டும் பேசுவது இந்த மாற்றத்தைத்தான் அவர் கொண்டு வர விரும்புகிறாரா என்கிற கேள்வியை எழுப்புகிறது. தவிர, அரசியல் என்றால் என்ன என்பது பற்றியே இன்னும் போதுமான புரிதலை எட்டாதவர், எடுத்த எடுப்பிலேயே ஆட்சிக்கு வந்து விடக் கணக்குப் போடுவது அவரது புரிதலின்மையை இன்னும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவே அமைகிறது.
மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், அவர்கள் எதிர்பார்க்கும் மாற்றம் அரசியலில், ஆட்சி முறையில். தமிழர்களின் சமூக – அரசியல் – பண்பாட்டு அடையாளங்களையே உருமாற்றும் மாற்றத்தை இல்லை.
ஏற்கெனவே இப்படி பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம் எனவெல்லாம் பேசி, ‘தமிழர்களும் இந்துக்கள்தாம் என எப்படியாவது நம்ப வைத்து விட்டால் வாக்குகளைக் கறந்து விடலாம்’ எனச் சப்புக் கொட்டிக் காத்திருக்கும் பா.ஜ.க, ‘யாருக்கும் வாக்கில்லை’ (NOTA) எனும் போட்டியாளரையே விஞ்ச முடியாமல் விக்கித்து நிற்கிறது. அதைப் பார்த்த பின்னும், அதே வழியில் ரஜினியும் நடை போட நினைப்பது நன்றாக இல்லை. ரஜினி கொண்டு வர விரும்பும் அரசியல் இதுதான் என்றால், ‘இதற்கு மக்கள் நேராக பா.ஜ.க-வுக்கே வாக்களித்து விட மாட்டார்களா’ என்கிற எளிய ஏரணத்தை (logic) அவர் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!
நேர்மையான அரசியல் என்பது வெறுமே மக்களைக் கொள்ளையடிக்காமல் இருப்பது மட்டும் இல்லை; அந்த மண்ணுக்கான, மக்களுக்கான, அவர்களின் அடையாளம் – தனித்தன்மை போன்றவற்றுக்கு உவப்பான அரசியலைக் கையிலெடுப்பதுதான் நேர்மையான அரசியல் என்பதை ரஜினி அவர்கள் உணர வேண்டும்!
அதே நேரம், இப்படிப்பட்ட காரணங்களையெல்லாம் ஆங்காங்கே ஒன்று கோத்து ஒட்டி, “ரஜினி பா.ஜ.க தூண்டுதலால்தான் அரசியலுக்கு வருகிறார்” என்று சிலர் பேசுவது வெற்றுவாதம். அரசியல் அறிவுள்ளவர்கள் இப்படிப் பேச மாட்டார்கள்.
பா.ஜ.க-வோ அல்லது வேறு யாராவதோ தூண்டி விட்டு ரஜினி அரசியலுக்கு வருவதாக இருந்தால், தனிக்கட்சி தொடங்கி அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலிலேயே 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவிக்க அவரை விட்டிருக்க மாட்டார்கள். அப்படிச் செய்து விட்டால், ரஜினியின் திரைச் செல்வாக்கு அரசியலில் கை கொடுக்குமா இல்லையா என்பது வெட்டு ஒன்று துண்டு இரண்டாகத் தெரிந்து விடும். ரஜினியைப் பயன்படுத்தி அரசியலைக் கைப்பற்ற விரும்பும் யாரும் அப்படி ஒரு தெள்ளத் தெளிவான விடை கிடைத்து விடுவதை விரும்ப மாட்டார்கள். அவரைக் களத்திலேயே இறக்காமல், அவருடைய திரையுலகப் புகழை மட்டுமே மென்மேலும் ஊதிப் பெருக்கிக் காட்டி அதன் மூலம் தாங்கள் ஆதாயம் அடையத்தான் பார்ப்பார்கள்.
அப்படி யாருக்கும் எதற்கும் இடம் கொடுக்காமல், எப்பேர்ப்பட்டவர்களின் நெருக்கடிக்கும் அடி பணியாமல் நேரடியாகக் களத்தில் இறங்கியிருக்கும் விதத்தில், சூப்பர் ஸ்டாரின் இந்த அரசியல் நுழைவு வரவேற்புக்குரியதே!
ஆனால், சமயச் சார்புள்ளவர்களோடு கைகோத்திருக்கிறாரா இல்லையா என்பதைத் தாண்டி, ரஜினி எனும் தனிமனிதரே சமயச் சார்புள்ளவராகத்தான் இருக்கிறார் என்பதுதான் இங்கே கவலைக்குரியது!
- இ.பு.ஞானப்பிரகாசன்