‘சன்’ குழுமமும் துரோகத்துக்கு உடந்தை
பார்ப்பன - பனியாக்களின் கட்டுப்பாட்டில் இந்தியாவின் ஊடகங்கள் இருக்கும் நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்துத்துவா’ கொள்கைகளைப் பரப்பு வதற்காக அவை விலை போகத் தயாராக இருக் கின்றன. ‘கோப்ரா போஸ்ட்’ என்ற ‘புலனாய்வு இணையதளம்’ இந்த அதிர்ச்சித் தகவல்களை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருக்கிறது. ‘‘கோப்ரா போஸ்ட்’ புலனாய்வு இணையதளம் 2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல ஊழல்களை வெளிப்படுத்தி வந்த ‘டெகல்கா’ ஆங்கில பத்திரிகையை நிறுவியவர்களில் ஒருவரான அனிருதாபகல் என்ற துணிச்சலான பெண் பத்திரிகையாளர் இந்த புலனாய்வு இணையத்தை உருவாக்கி பல மேல்மட்ட ஊழல்களை அம்பலப்படுத்தி வருகிறார்.
2019 தேர்தலில் ‘பகவான் கிருஷ்ணன்’, ‘பகவத் கீதை’யை முன்னிறுத்தி அதன் வழியாக இந்துத்துவ வெறியூட்டி வாக்காளர்களை இந்துத்துவாவுக்கு ஆதரவாளர்களாக்கிட தங்கள் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களைப் பயன்படுத்த பல நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. அதற்கு கையூட்டாக பா.ஜ.க. விளம்பரங்கள் வழியாக அள்ளித் தரும் பல கோடி ரூபாயைப் பெற்றுக் கொள்ளக் காத்திருக்கிறார்கள். இந்த உண்மையை அந்த ஊடக முதலாளிகள் மற்றும் தலைமை அதிகாரிகளுடன் நேரடியாக நடத்திய உரையாடல்கள் வழியாக ‘கோப்ரா போஸ்ட்’ அம்பலப்படுத்தி இருக்கிறது. இந்த உரையாடல் பதிவுகளைக் கடந்த வெள்ளிக் கிழமை (மே 25, 2018) ‘கோப்ரா போஸ்ட்’ வெளியிட்டிருக்கிறது.
‘குடி மக்களிடையே வகுப்புவாத மோதல்களை உருவாக்கும் செய்திகளை வெளியிட்டு, அதன் பயன் பா.ஜ.க.வுக்கு கிடைக்கும் வகையில் செயல்படத் தயார்’ என்று இந்த ஊடக உயர்மட்ட அதிகாரிகள் கூறியது வீடியோ காட்சிகள் வழியாக அம்பலமாகி யிருக்கிறது. ‘கோப்ரா போஸ்ட்’ பத்திரிகையாளரான புஷ்பா சர்மா, ‘ஆச்சார்யா அதால்’ என்ற பெயரில் நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துடன் நெருக்கமானவர் என்று கூறி இந்த ஊடக தலைமை அதிகாரிகளிடம் உரையாடி அந்த உரையாடலை இரகசியமாகப் பதிவு செய்துள்ளார். பணத்துக்காக விலைபோக 27 ஊடக நிறுவனங்கள் தயாராக இருப்பதை முதல்கட்டமாக ‘கோப்ரா போஸ்ட்’ அம்பலப்படுத்தியிருக்கிறது. பணத்துக்காக விலை போக மாட்டோம் என்று உறுதியாக இரண்டு நிறுவனங்கள் மட்டுமே மறுத்துள்ளன. வங்காளி செய்தி ஏடான பர்த்தமான் (Bartaman) மற்றும் டெய்னிக் சம்பாத் (Dainik Sambad) என்ற இரண்டு செய்தி ஏடுகள் மட்டுமே துணிவோடு இதற்கு உடன்பட மறுத்துள்ளன. ‘டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தியா டுடே, இந்துஸ்தான் டைம்ஸ், டைனிக் பாஸ்கர், சீ நியூஸ், ஸ்டார் இந்தியா, ஏபிபி, டைய்னிக் ஜெக்கான், ரேடியோ ஒன், அவர்னா நியூஸ், ரெட்எஃஎம், லோக்மத், ஏபிஎன், ஆந்திரா ஜோதி, டிவி5, தினமலர், பிக் எஃப்எம், பிரபாத் காஃபர், கே மற்றும் ஓப்பன் ஊடக நிறுவனங்கள் பணம் வாங்கிக் கொண்டு ‘இந்துத்துவா’ செயல் திட்டத்தைப் பரப்புவதற்கும், ஒரு சார்பாக செய்திகளை உருவாக்கியும், பிரச்சாரம் செய்யவும் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளன.
பெறக்கூடிய பல நூறு கோடி ரூபாய் இலஞ்சம் - நிதியமைச்சகம், வருமான வரித் துறைக்கு தெரியாதிருக்க வேண்டும் என்பது குறித்து பல ஊடக அதிகாரிகள் எச்சரிக்கையோடு பேசியுள்ளனர். கருப்புப் பணத்தை எந்த வழிகளில் கையாளலாம் என்பது குறித்தும், ஊடக அதிகாரிகள் விரிவாக விவாதிப்பது வீடியோ காட்சிகளில் இடம் பெற்றுள்ளது. டைம்ஸ் பத்திரிகைக் குழுமத்தின் உரிமையாளர் வினீத் ஜெயின் நிர்வாகத்தின் தலைமை அதிகாரி சஞ்சீவ் ஷா ஆகியோர், இதற்காக ரூ.500 கோடி பேரம் பேசும் காட்சிகள், வீடியோவில் பதிவாகியுள்ளன. “சில கார்ப்பரேட் நிறுவனங்களின் பெயர்களைக் கூறுகிறேன். அவர்களிடம் நீங்கள் ரொக்கமாகத் தந்துவிட்டால், அவர்கள் எங்களுக்குப் பணத்தை வெள்ளையாக்கித் தந்து விடுவார்கள்” என்று வினீத் ஜெயின் கூறுகிறார். “2017ஆம் ஆண்டில் எங்களுக்குக் கிடைத்த வருவாய் ரூ.9,976 கோடி. இதில் 5 சதவீதத்தை அதாவது ரூ.500 கோடியைத்தான் நான் கேட்கிறேன்” என்று அவர் பேரம் பேசுகிறார்.
‘இந்தியா டுடே’ குழுமத்தின் துணைத் தலைவர் கல்லி பியுர்ரி (Kalli Purie) என்ற பெண்ணுடன் நடத்திய உரையாடலும், ‘டி.வி.டுடே’ தலைமை வருவாய் அதிகாரி ராகுல் குமார் ஷா என்பவருடன் நடத்திய உரையாடலும் வெளி வந்திருக்கிறது. “நாங்கள் பா.ஜ.க. ஆட்சியின் தீவிர தீவிர தீவிர ஆதரவாளர்கள்” என்று கூறிய பியுர்ரி, உரையாடலைத் தொடர்ந்து, ரூ.275 கோடி பணம் கேட்டு ‘கோப்ரா போஸ்ட்’ செய்தி யாளருக்கு ‘மின்னஞ்சல்’ அனுப்பியுள்ளார்.
‘இந்துத்துவாவுக்கு’ ஆதரவாக தலையங்கங்கள் எழுதுகிறோம்; செய்திகளில் வெளிப்படையாக இந்துத்துவா ஆதரவை வெளிப்படுத்த முடியாது” என்று ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ குமும துணைத் தலைவர் அவினீஷ் பன்சால் (Avnesh Bansal ) கூறுகிறார். முதல் மூன்று மாதங்கள் மத உணர்வுகளை வாக்காளர் களிடம் உருவாக்குவது; பிறகு இந்த உணர்வு களை அரசியலாக்குவது; பிறகு வாக்குகளாக மாற்றுவது என்று மூன்று கட்டங்களில் கருத்து உருவாக்கம் செய்வது என்ற வகையில் விவாதங்கள் நடக்கின்றன. வகுப்புவாதத்தைக் கூர்மைப்படுத்துவதற்கு வினய் கட்டியார், உமாபாரதி, மோகன் பகவத் பேச்சுகளை பரப்புவது என்றும் அதற்கேற்ற பிரச்சாரத் திட்டங்கள் வகுக்கப்படும் என்று உரையாடும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. கடைசி கட்டமாக ராகுல் காந்தி, மாயாவதி, அகிலேஷ் யாதவ் போன்ற தலைவர்களை கேலிக்குரியவர் களாக சித்தரிப்பது என்றும் அவர்களுக்கு முறையே பாப்பு, புயா, பாபியா என்று கேலிப் பெயர்களைச் சூட்டுவது என்றும் விவாதிக் கிறார்கள்.
அனைத்து ஊடகங்களிலும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் ஊடுருவி இருப்பதையும் இந்த புலனாய்வு அம்பலப்படுத்தியிருக்கிறது.
மகாராஷ்டிராவில், ‘எம்விடிவி’ என்ற உள்ளூர் தொலைக்காட்சியை நடத்தி வரும் பா.ஜ.க. பெண் சட்டமன்ற உறுப்பினர் மந்தாதேய் என்பவர் கூறும்போது “மசூதிகளையும் மஸ்ஜீத்களையும் இடித்துத் தள்ளுமாறு ஆர்.எஸ்.எஸ். என்னை வற்புறுத்தி வருகிறது. என்னால் அது முடியாது என்று கூறி விட்டேன்” என்று கூறுகிறார். “எனக்கு பா.ஜ.க. போட்டியிட ‘டிக்கட்’ தர மறுத்தது. ஆர்.எஸ்.எஸ். தலையீட்டில்தான் டிக்கட் கிடைத்தது” என்றும் அவர் கூறுகிறார்.
தமிழ்நாட்டில் ‘சன்’ தொலைக்காட்சிக் குழுமத்தின் சார்பில் அதன் விற்பனை அதிகாரி அலெக்ஸ் ஜார்ஜ், மார்க்கெட்டிங் மேலாளர் பி. கண்ணன் ஆகியோரையும் ‘கோப்ரா போஸ்ட்’ சார்பாக செயல்பட்ட புஷ்பா சர்மா சந்தித்துப் பேசியுள்ளார். அவர்களும் இந்த இரகசிய பேரத்துக்கு சம்மதம் தெரிவித்ததாக கூறுகிறார். ‘எங்களுக்கு வியாபாரம்தான் முக்கியம்’ என்று சன் குழும அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். ஜார்ஜ் என்பவர் கூறுகையில், “பகவத் கீதை வழியாக இந்துத்துவாவை மக்கள் உணர வேண்டும் என்பது சரியான கருத்து. இந்த பிரச்சாரத்தின் வழியாக, எங்கள் கட்சியையும் ‘இந்துத்துவா’வுக்கு ஆதரவான கட்சி என்ற அடையாளத்தை உருவாக்கவே நாங்கள் விரும்புகிறோம். கடந்த 25 ஆண்டுகளாக, இராமன், அயோத்தி பிரச்னைகளின் ஒவ்வொரு நகர்வையும் நாங்கள் அரசியல்படுததி வருகிறோம்” என்றும் ஜார்ஜ் கூறுகிறார்.
மேலும் சன் குழும அதிகாரி பேசும்போது, “எங்கள் முதலீட்டாளர்களுக்கு நல்ல இலாபத்தை ஈட்டித் தரவேண்டும் என்பதே எங்களது முதன்மையான நோக்கம். வணிகம் தான் எங்களுக்கு முக்கியம். உங்களின் திட்டத்துக்கான தொகையை நாங்கள் நேரடியாகப் பெற முடியாது. மூன்றாம் தரப்பு வழியாக எங்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். இந்துத்துவாவைப் பரப்பும் வழி முறைகள் குறித்து நாங்கள் ஒரு திட்டம் உருவாக்கி அனுப்புகிறோம். எங்களுடைய நகைச்சுவை அலைவரிசை, பாடல்கள் அலைவரிசைளில் இடையிடையே வரும் ‘பிரேக்’குகளில் பகவத் கீதை பற்றிய அறிவிப்புகளை வெளியிட முடியும். இதற்காக 20 கோடி செலவாகும். 50 சதவீத பிரச்சாரத்தை தமிழ் அலைவரிசைகளிலேயே செய்யலாம்” என்று பேசுகிறார், சன் குழும அதிகாரி ஜியார்ஜ்.
தமிழ்நாட்டு மக்களை அதிர வைக்கிறது இந்த செய்திகள்.