தமிழக அரசியலில் தாம் நுழையப் போவதாக ரஜினி அறிவித்ததில் இருந்து பல்வேறு மட்டங்களில் இருந்தும் அவருக்குக் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெரியாரிய அமைப்புகளும், மார்க்ஸிய அமைப்புகளும் அவரை கொள்கை சார்ந்து தீவிரமாக எதிர்க்கின்றன. ரஜினியின் அரசியல் வருகையை அவரின் கொள்கையில்லா நிலைப்பாட்டிற்காகவும், அவரின் தீவிரமான இந்துத்துவ சார்புக்காகவும், இத்தனை நாள் தமிழ் மக்களின் உழைப்பை தன்னுடைய திரைப்படங்கள் மூலம் ஒட்ட சுரண்டியவர் என்பதற்காகவும், தமிழர் நலன் சார்ந்த எந்தப் பிரச்சினைகளிலும் குரல் கொடுக்க வக்கற்ற பேர்வழி என்பதற்காகவுமே அவரை எதிர்க்க வேண்டி இருக்கின்றது. மற்றபடி அவர் கன்னடர் என்றோ, இல்லை மராட்டியர் என்றோ காரணம் காட்டி பெரியாரிய, மார்க்சிய அமைப்புகள் எதிர்க்கவில்லை. சாதிக்கு எதிராகவும், மதத்திற்கு எதிராகவும், முதலாளித்துவத்திற்கு எதிராகவும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் யாரும் இப்படியான வழிவகைகளை மேற்கொண்டே தங்கள் அரசியல் களத்தை அமைத்துக் கொள்கின்றார்கள்.
ஆனால் யாருக்கு சாதியைப் பற்றியும், மதத்தைப் பற்றியும், முதலாளித்துவ பயங்கரவாதத்தைப் பற்றியும் எந்தக் கருத்தும் இல்லையோ, அவர்கள் மொழியையையும், இனத்தையும் வைத்து அந்த இடத்தை நிரப்புகின்றார்கள். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இந்தப் போக்கு மிக அதிகமாகக் காணப்படுகின்றது. அனைத்து வகையிலும் தமிழர் நிலத்தை தமிழன்தான் ஆளவேண்டும் என்ற ஒற்றை முழக்கத்தையும், அதன் பின்னணியில் இருந்தே அனைத்து வகையிலும் தமிழகத்தை முன்னேற்ற முடியும் என்ற கருத்தையும் முன்வைக்கின்றார். அவர் அந்த அடிப்படையில் இருந்தே ரஜினியின் அரசியல் வருகையை மிகக் கடுமையாக எதிர்க்கின்றார். ரஜினியை மட்டுமல்லாமல், அவர் யார், யாரை எல்லாம் தமிழன் இல்லை என்று முத்திரை குத்துகின்றாரோ அவர்கள் எல்லாம் தமிழ்நாட்டின் அரசியலில் எந்த ஒரு பங்களிப்பையும் செய்யக்கூடாது என்று மிகக் கடுமையாக கண்டிக்கின்றார். வேண்டும் என்றால், எங்களை வழி நடத்துபவர்களாக இருங்கள் ஆலோசனை சொல்லுங்கள் ஆனால் எங்கள் நிலத்தை நாங்கள்தான் ஆளுவோம் என்கின்றார்.
சமீபத்தில் பல்வேறு தொலைக்காட்சி ஊடகங்களில் அவர் கொடுத்த அனைத்துப் பேட்டிகளும் இதைச் சுற்றியே அமைந்திருந்தது. ஒரு இனம் முழுமையாக அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆளாகும் போது, அதில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவும் மீட்சி அடையவும் தன்னை அடக்கி ஒடுக்கும் சக்திகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து, தன்னை அந்த ஆதிக்க சக்திகளின் பிடியில் இருந்து விடுவித்துக் கொள்ளப் போராடும் என்பதை உலக வரலாற்றில் பல நாடுகளில் நிகழ்ந்த தேசிய இனப் போராட்டங்கள் நமக்கு உணர்த்துகின்றன. ஆனால் சீமானின் அரசியலை நாம் அந்த வகையில் அணுகுவது என்பது அடிப்படையிலேயே பிழையான அணுகுமுறை ஆகும். காரணம் சீமான் முன்னெடுப்பது ஒடுக்கப்பட்ட தேசிய இனத்திற்கான அரசியல் அல்ல, அது ஒடுக்கப்பட்ட இனங்களை அச்சுறுத்தி மேலும் மேலும் அவர்களை நாடாற்றவர்கள் என்ற உணர்வை உருவாக்கி, அவர்களின் மேல் இனவாத வெறுப்பை விதைக்கும் இனவெறி அரசியல். அதைத்தான் ஹிட்லர் முன்னெடுத்தான், ராஜபக்சேவும் முன்னெடுத்தான்.
இன்று தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. காவிரி, முல்லைப் பெரியாறு, இயற்கை வளங்கள் சூறையாடப்படுதல், பார்ப்பன பயங்கரவாதம், வேலையில்லாத் திண்டாட்டம் , விவசாயிகள் தற்கொலை என சொல்லிக் கொண்டே போகலாம். இந்தப் பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தேர்தல் அரசியலில் பங்கெடுக்காத பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய அமைப்புகள் அனைத்தும் இதற்காகத்தான் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் இவர்கள் யாரும் இந்தப் பிரச்சினைகள் எல்லாம் ஒரு தமிழன் தமிழ்நாட்டை ஆளும்போதுதான் தீர்க்க முடியும் என்று சொல்வதில்லை. அப்படி சொல்வது அடிப்படையில் பிரச்சினையின் மீதான அக்கறை காட்டுவதைவிட, அந்தப் பிரச்சினையைச் சொல்லி இன வெறுப்பையும், மொழி வெறுப்பையுமே வளர்க்க உதவும். காரணம் திருடித் தின்பதும், பொறுக்கித் தின்பதும், ஊர்குடி கெடுப்பதும் இனம் சார்ந்து தோன்றும் சிந்தனைகள் கிடையாது.
இவன் தமிழன், இவன் தமிழனில்லை என்பதை நாம் தமிழர் கட்சியினர் சாதியின் அடிப்படையிலேயே வகைபடுத்துகின்றார்கள். அதனால் தான் சீமானால் அன்புமணியையும், முத்துராமலிங்கத் தேவரையும் எந்தவித விமர்சனமும் இன்றி இயல்பாய் ஏற்றுக் கொள்ள முடிகின்றது. சீமான் யாரை எல்லாம் தனக்கு வழிகாட்டி, முன்னோடி என்று சொல்கின்றாரோ, அவர்கள் அனைவரையுமே அவர் சாதியின் அடிப்படையில் இருந்தே ஏற்றுக் கொள்கின்றார். நாம் தமிழர் கட்சியின் அரசியல் என்பதே அப்பட்டமான சாதிய அரசியல்தான். சாதி என்ற ஒன்று இருக்கும் வரைக்கும் தான் சீமானால் இங்கே தமிழன், தமிழன் அல்லாதவன் என்ற இனவாத அரசியலை முன்னெடுக்க முடியும். அதற்காகவாவது சாதியைக் காப்பாற்ற வேண்டிய நெருக்கடி சீமானுக்கு உள்ளது. அதனால்தான் முற்போக்குவாதிகள் சீமானை ஆர்.எஸ்.எஸ் இன் தமிழ்ப்பதிப்பு என்று விமர்சனம் செய்கின்றார்கள்.
அன்புமணியை ஏற்றுக்கொள்ளும் சீமான் திருமாவளவனை அண்ணன் என்கின்றார். அவரை தமிழ்த்தேசிய இனத்தின் பெருமைமிகு ஆளுமைகளில் ஒருவர் என்கின்றார். ஒரே நேரத்தில் சாதிவெறியர்களையும், அவர்களால் ஒடுக்கப்படும் சாதிகளையும் நட்புசக்திகளாக பாராட்டும் குணம் தமிழ்த் தேசியம் பேசுவோரின் பிறவிக்குணம். இதுபோன்ற நபர்களால் ஒருநாளும் தமிழ்ச் சமூகத்தில் இருந்து சாதியை அழிக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால் இவர்கள் உள்ளவரை சாதியும் ஒழியாது, அதை ஒழியவும் விடமாட்டார்கள்.
ரஜினியின் ஆன்மீக அரசியலை எள்ளி நகையாடும் சீமான், அந்த இடத்தில் பார்ப்பன முருகனையும், சிவனையும் வைத்து அரசியல் செய்வதைப் பற்றி கொஞ்சம் கூட வெட்கப்பட்டவராகத் தெரியவில்லை. அவரைப் பொருத்தவரை பார்ப்பனியத்தை தமிழ்மயப்படுத்துவதுதான் முதன்மையான குறிக்கோளாக உள்ளது. அடிப்படையில் பிற்போக்குவாதியாக உள்ள யாரும் நிச்சயம் சாமானிய மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க முடியாது. சீமானிடம் முற்போக்குச் சிந்தனை இல்லை என்பது மட்டுமல்லாமல், அவரிடம் எந்தவித வர்க்க உணர்வும் கூட கிடையாது. சீமான் முன்னெடுக்கும் அரசியல் முழுக்க முழுக்க பணக்கார ஆதிக்க சாதிகளுக்கான அரசியல். அவர்களின் பிரதிநிதியாகவே அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார். அதனால்தான் சினிமா துறையில் பலரின் வாழ்க்கை சீரழியக் காரணமான அன்புச்செழியனை அவரால் ஆதரிக்க முடிந்தது. அன்புச்செழியனை சீமான் ஆதரித்ததற்கு ஒரே காரணம் அன்புச்செழியனின் சாதிமட்டுமே. சீமான் அமைக்க நினைக்கும் தமிழ்த் தேசியத்தில் அன்புமணியும், அன்புச்செழியனும்தான் ஆதிக்கம் செலுத்த முடியுமே தவிர, திருமாவளவன் போன்றவர்களால் ஒருபோதும் ஆதிக்கம் செலுத்த முடியாது. பார்ப்பனியமும், சீமானின் தமிழ்த் தேசியமும் இரு வேறு பெயர்களில் அழைக்கப்படும் ஒரே சாதியக் குப்பைகள்தான்.
அதனால் சீமானால் ஒரு போதும் அமைப்பு மாற்றம், அரசியல் மாற்றம் என்பதெல்லாம் சாத்தியமே இல்லாத ஒன்று. தமிழ் மக்களை யார் சுரண்டுவது என்பதுதான் சீமான் போன்ற தமிழ்த் தேசியவாதிகளுக்கு உள்ள ஒரே பிரச்சினை. அது எங்கே நடக்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம்தான் இப்போதே அனைவரையும் மிரட்டும் நிலைக்கு அவரை இட்டுச் சென்றுள்ளது. மூவாயிரத்து சொச்சம் ஓட்டுக்கள் வாங்கும் இந்த நிலையிலேயே சீமான் வெளிப்படையாக இனவாத வெறியைக் கக்குகின்றார் என்றால், இன்னும் கொஞ்சம் கட்சி வளர்ச்சி அடைந்தது என்றால் நிச்சயம் ஆர்.எஸ்.எஸ் போன்று கையில் கத்தியுடனும், கம்புடனும் அனைவரையும் மிரட்ட ஆரம்பித்துவிடுவார்.
உண்மையில் சீமானுக்கு தமிழ்மக்களின் நலனில் அக்கறை இருக்குமானால், அவர் அனைவரையுமே தமிழர்கள் என்றே கருதுவாரேயானால், வீதிக்கு வந்து சாதிவெறியர்களுக்கு எதிராக களமாடட்டும். ஒரு வன்னிய தமிழனும், தேவர் தமிழனும், கவுண்டர் தமிழனும் பறையர் வீட்டிலும், பள்ளர் வீட்டிலும் பெண் கொடுத்து பெண் எடுக்க வேண்டும் என்று குறைந்த பட்சம் நாம் தமிழர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அவர் கட்சிக்குள்ளேயாவது உத்திரவு போடட்டும், அதைக் கட்டாயமாக்கட்டும். இதை ஒன்றுமட்டும் செய்தார் என்றால் கூட அவரது நேர்மையை, தமிழர்கள் மீதான அவரது உண்மையான அன்பை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். அதைச் செய்யாமல் தமிழன், தமிழ் இனம், தமிழ்மொழி என்று பேசுவதும், சாதியை அடிப்படையாக வைத்து அனைவரையும் தமிழன் - தமிழன் அல்லாதவன் என மிரட்டுவதும் கீழ்த்தரமான பாசிச நடவடிக்கையாகும்.
ரஜினியை தமிழக அரசியல் களத்தில் இருந்து விரட்டியடிக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியமானது சீமானை விரட்டி அடிப்பது. சாதியத்தை தாங்கி நிற்கும் பார்ப்பன இந்து மதத்தையும், அதனுடன் கள்ள உறவு வைத்திருக்கும் முதலாளித்துவத்தையும் வீழ்த்த வேண்டும் என்றால், அதனோடு தொடர்பு வைத்திருக்கும் அனைவரையும் நாம் சமரசமற்று எதிர்த்தாக வேண்டும் - அது ரஜினியாக இருந்தாலும் சரி, இல்லை சீமானாக இருந்தாலும் சரி.
- செ.கார்கி