நாத்திக அரசியல்

தமிழ்நாடு இந்தியாவில் உள்ள மற்ற மாநிங்களை காட்டிலும் சமூகம், பொருளாதாரம், கல்வி, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி போன்றவற்றில் மேலோங்கி உள்ளது. அதற்கு காரணம் தமிழ்நாட்டில் இருந்து வரும் அரசியல் கொள்கைதான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பார்ப்பனர்களால் அடிமைப்படுத்தப்பட்ட ஒரு இனத்தை சுயமரியாதை உணர்வடையச் செய்த சித்தாந்தம்தான் திராவிடர் இயக்க சித்தாந்தம். நீதிக்கட்சி தொடங்கி வைத்த பார்ப்பனர் அல்லா தார் உரிமை போராட்டத்திற்கு முழு வடிவம் கொடுத்து அதனை தீவிரப்படுத்தி இயக்கம் கண்டவர் தந்தை பெரியார். திராவிடம் என்ற கோட்பாட்டைப் பலரும் பேசியிருந்தாலும் அதனை இன்றும் பார்ப்பனர்களால் நெருங்க முடியாத கொள்கையாக மாற்றியவர் பெரியார். அதற்கு அவர் முன்வைத்த கடவுள் மறுப்பு என்பது சாதி மற்றும் மத ஒழிப்பு, பெண் விடுதலை, தமிழ்நாட்டு உரிமை இவற்றை அடிப்படையாகக் கொண்ட கடவுள் மறுப்பு ஆகும்.

rajini fan

தமிழ்நாட்டில் பெரியாரின் நாத்திக, பகுத்தறிவு பிரச்சாரம் செல்லாத இடங்களே இல்லை என்றே கூறலாம். பெரியாரைப் பின்பற்றி வந்த அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களும் பெரியாரின் கருத்துக்களை முழுமையாக ஏற்று அரசியல் செய்யவில்லை என்றாலும் பெரியாரின் சில கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே அரசியல் செய்து வந்தனர். சமூகநீதி மற்றும் நாத்திகத்தை அடிப்படையாகவேக் கொண்டு அரசியல் கண்டனர். நீதிக்கட்சி தொடங்கி வைத்த இந்தப் பார்ப்பனர் அல்லாதோரின் உரிமைப் போராட்டம்தான் பிற்காலத்தில் நாத்திகத்தை அடிப் படையாக கொண்ட உரிமைப் போராட்டமாக உருவெடுத்தது. எனவே, பார்ப்பனர் அல்லாதோரின் விடுதலை அரசியல் நாத்திகத்தையே மையமாகக் கொண்டது. உலக நாடுகளை எடுத்துக் கொண்டாலும்  நாத்திகத்தையே அடிப்படையாக கொண்டு அரசியல் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இப்படி நாத்திக வழி வந்த திராவிடர் அரசியல் கட்சிகளால்தான் தமிழர்களுக்கு அடிப்படை உரிமைகளான சில உரிமைகளைப் பெற்றுத் தந்தன.

பல நூற்றாண்டுகளாக நடந்தது ஆன்மிக அரசியல் தானே?

தமிழ்நாடு மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மேம்பாடு அடையச் செய்த நாத்திக அரசியலுக்கு மாற்றாக ஆன்மிக அரசியலை மேற்கொள்ளப் போவதாக ரஜினி அறிவித்திருக்கிறார். ஆன்மிக அரசியல் என்ன புதிதா? காலம் காலமாக பார்ப்பனர் கள் இந்தியா முழுவதும் செய்து வரும் அரசியல் ஆன்மிக அரசியல் தானே? ஆன்மிக அரசியல் யாருடைய நலனுக்கான அரசியல்? ரஜினி தனது ஆன்மிக அரசியலை பற்றி இவ்வாறு கூறுகிறார். “உண்மையான, நேர்மையான, நாணயமான அரசியல் என்றும் சாதி, மத சார்பற்ற அறவழி அரசியல் ஆகும் என்றும் ஆன்மீக அரசியல் என்பது ஆத்மாவுடன் தொடர்புடையது” என்று கூறுகிறார். இப்படி திராவிட இயக்கக் கொள்கைக்கு நேர் எதிராக அரசியல் செய்ய தனது 67 வது வயதில் கிளம் பியுள்ளார் ரஜினி. சாதி, மதம், கடவுள் இவை ஒவ்வொன்றையும் தனித்துப் பிரித்துப் பார்க்க முடியாது. இதை அறியாத அடிப்படை அரசியல் அறிவற்றவரா ரஜினி?

“கடவுள் பற்றுள்ளவனால் உண்மையான, நேர்மையான, யோக்கியமான அரசியல் செய்ய முடியுமா? கடவுள் பற்றுள்ளவன் கடவுள் அமைப்பை கடவுள் செயலை எப்படி மாற்ற முற்படுவான்? அவனால் எப்படி கடவுள் பற்றோடு அதனை மாற்ற முடியும் அப்படி மாற்றுகிறேன் என்று சொன்னாலும் அவன் கடவுள் அமைப்பிற்கும், செயலுக்கும் விரோதமாகச் செய்ததாகத்தானே ஆகும்? எனவே கடவுள் பற்றிருந்தால் சமுதாய அமைப்பை மாற்ற முடியாது. அது போல தான் மதத்திலும் கடவுள் அப்படி சொன்னார். மகான் அப்படி சொன்னார். அந்த அமைப்பு படி தான் நடக்க வேண்டும். அதை மாற்றக் கூடாது என்று சொல்லிக் கொண்டு இந்த இழிவு ஒழிய வேண்டும் என்றால் எப்படி ஒழியும்?”. -

தோழர் பெரியார் (விடுதலை- 20.03.1969)

தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்று கூறி சிஸ்டத்தை சரிசெய்யக் கிளம்பியுள்ள ரஜினி ரசிகர்கள் சந்திப்பில், சங்கராச்சாரியார் சொன்னார் அந்த சாமியார் சொன்னார் இந்த சாமியார் சொன்னார் என்று சொல்லும் ரஜினி இந்த சிஸ்டத்தை யாருக்கு ஏற்றார்போல் சரிசெய்யப் போகிறார் என்று தெளிவாக புரிகிறது. பகவத் கீதையுடன் தனது உரையை தொடங்கினார் ரஜினி. பகவத் கீதையைப் பற்றி தோழர் அம்பேத்கர், பெரியார் மற்றும் கலைஞர் ஆகியோரின் கருத்து:

“கீதை ஒரு முட்டாளின் உளறல்”  - தோழர் அம்பேத்கர்

‘விடுதலை’ தலையங்கம் 17.03.2010

“நமது நாட்டில் நடைபெறுகிற முட்டாள் தனங்களிலும், பச்சை அயோக்கியத் தனங் களிலும் தலை சிறந்த, முதல் தரமான காரியங்களில் முதலாவது காரியம் என்ன வென்றால், பகவத் கீதை எனும் ஒரு காட்டு மிராண்டி, அயோக்கியத்தனம் கொண்ட நூலை விஷயத்தை, பிரச்சாரம் செய்வதும், பரப்புவதும்” - தோழர் பெரியார் ‘விடுதலை’  16. 11. 1973

“ வருண பேதத்தை பரப்புவதே பகவத் கீதை” -கலைஞர் கருணாநிதி http://tamil.oneindia.com./news/2004/09/14/karunanidhi.html

பிராமணன், சத்திரியன், வைஷியன், சூத்திரன் என்ற நான்கு வர்ணங்களை வலியுறுத்தும் பகவத் கீதையை ஏற்றுக்கொள்ளும் ஒருவனால் எப்படி சாதி சார்பற்ற, மதச் சார்பற்ற அரசியல் செய்ய முடியும். இவர் நடித்த படமும், இனி நடிக்கவிருக்கும் படங்களும் எப்படி சாதி ஒழிப்புத் திரைப்படங் களாக இருக்க முடியும்? அவற்றில் சாதி ஒழிப்பு என்பது எப்படி இருக்கும்? கால் மேல் கால் போடுவதும், ஷூ  போடுவதும், கோட்சூட் போடுவதும் தான் சாதி ஒழிப்பாகக் காட்டப்படும். பார்ப்பனப் பண்பாட்டைப் பின்பற்றுவதும் இந்து மதத்தைப் பாதுகாப்பதுமே சாதி ஒழிப்பு. அட நம்பித்தாங்க ஆகணும்...

மதச் சார்பற்ற அரசியல் எப்படி இருக்கும்? 2004 ம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணிக்குத் தான் வாக்களிக்கப் போவதாக அறிவித்து, வெளிப்படையாகத் தனது மதச்சார்பற்ற தன்மையைக் காட்டினார். அதை விட முக்கியம், ரஜினி அரசியலுக்கு வரப்போவதை பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பார்ப்பனர்களும், சாமியார்களும், இந்து மதவாதிகள், சங்கரச் சாரிகளும் ஆதரித்தனர். இதிலிருந்தே தெரிய வில்லையா  ரஜினி எவ்வளவு பெரிய மதசார்பற்றவர் என்று?

அட ஆமாங்க கபாலி படத்த எப்புடி சாதி ஒழிப்புப் படம், அதுல நடிச்ச ரஜினிய சாதி ஒழிப்புப் போராளினு நம்பினோமோ அதே மாதிரி இதையும் அதாவது மதச்சார்பற்றவர் (மத ஒழிப்பு போராளி) என்று நம்பித்தான் ஆகணும்”.  

கொள்கை என்ன என்று கேட்டால் “தலை சுத்துது” என்று கூறும் ரஜினியின் அரசியல் கொள்கை என்னவாய் இருக்கும். தனது கட்சியின் சின்னத்தில் வேண்டுமானாலும் தாமரையை நீக்கலாம். ஆனால் கொள்கையில்? இப்படித் தமிழர்கள் நலனுக்கு எதிராக அரசியல் செய்ய வரும் ரஜினியின் ஆன்மீக அரசியலை எதிர்க்காமல் சில ஆய்வாளர்கள் (நம் தமிழ்தேசியவாதிகள்) ரஜினி கன்னடர் ஆகவே அரசியலுக்கு வரக்கூடாது என்று கூறகின்றனர்.

ரஜினி தமிழர் தான்

ரஜினி கன்னடர் என்றால் தமிழர் யார் என்று பார்க்க வேண்டும் அல்லவா! தமிழர் யார்? அவனுக்கு அடையாளம் என்ன? சட்டப்படி நாம் யார்? தமிழர்களின் பழக்க வழக்கம்,பண்பாடுகள் எல்லாம் தமிழர் களுடையதா? பார்ப்பன ஆரியர்களுடையதா? தமிழனுக்கு என்று தனி அடையாளம் இல்லாமல் சூத்திரர்களாக, கீழ் மக்களாக ஆக்கப்பட காரணம் என்ன என்று உணராமல் எப்படித் தமிழன் விடுதலை அடைய முடியும்?  

ஒரு அடிமை தான் ஏன் அடிமைபட்டு கிடக்கின்றான் என்று  உணராமல் அதை எதிர்த்து விடுதலை பெற முடியாது. இது எல்லா இனத்திற்கும் பொருந்தும். பார்ப்பனர்கள் என்ற இனம் தமிழர் களை மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் உள்ள பார்ப்பனர் அல்லாத மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றனர். இப்படி அடிமைபட்டுக் கிடந்தாலும் பார்ப்பனர்களால் உண்டாக்கப்பட்ட இந்து மதத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் உண்டாக்கிய புராணம், இதிகாசம், வேதங்கள், கடவுள் போன்றவற்றை ஏற்றுக் கொண்டு அதனையே பின்பற்றுகின்றனர். பின் எப்படி தமிழர்கள் விடுதலை அடைய முடியும். உண்மை யான தமிழர்களுக்காக போராடுகிறவன் என்றால் உண்மையில் இவற்றை அல்லவா எதிர்த்து போராடி இருக்க வேண்டும்.

உண்மையாக தமிழர்களுக்காக போராடு கின்றவர்கள் என்றால் சீமான், மணியரசன் போன்ற தமிழ்தேசியவாதிகளும் தமிழர்களின் நலனை விரும்புகின்றவர்கள் செய்ய வேண்டியவை என்ன? அவர்கள் யோக்கியமானவர்கள் என்றால் தமிழர் களை அடிமைபடுத்திய பார்ப்பனர்களையும், அவர்கள் உண்டாக்கிய பார்ப்பன மதமான இந்து மதம், கடவுள், புராணம், கோவில்கள், பண்டிகை, பார்ப்பனக் கலாச்சாரம், பார்ப்பனப் பண்பாடு, மேலும் தமிழர்களைப் பிளவு படுத்திய சாதி அமைப்பு போன்றவற்றை தானே எதிர்க்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு முப்பாட்டன் முருகன், பாட்டன் சிவன், என்று கூறுவது மட்டுமில்லாமல் கிருஷ்ணனுக்கு மாயோன் விழா எடுக்கின்றனர். தமிழன் விடுதலைக்காகச் சிந்திப்பவன் இரண்டா யிரம் வருடங்களாக நம்மை அடிமைப் படுத்திய ஆரியர்கள் (பார்ப்பனர்கள்) ஆளக்கூடாது என்று தான் கூறவேண்டும். தமிழர்களை ஏமாற்றி பார்ப்பனர்களின் நலனுக்காகவும், தங்கள் பச்சை சுயநலத்திற்காகவும் அரசியல் செய்கின்றனரே தவிர இவர்கள் தமிழர்களின் நலனுக்காக பாடுபடு கின்றவர்கள் அல்ல. நாம் இப்படி பார்ப்பனர்களால் உண்டாக்கப்பட்டவை அனைத்தையும் புறக்கணிக்க வேண்டும். சாஸ்திரப்படி மட்டுமல்ல அரசிய லமைப்புச்  சட்டப்படியே நாம் சூத்திரர்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது.

எனவே, மானம், வீரம் என்று பேசும் தமிழர் களும், தமிழர்கள் நலனுக்காக போராடுகின்றோம் என்று கூறகின்றவர்களும் நம்மை ‘தேவடியாள் மக்கள்’ ‘பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்கள்’ என்று கூறும் பார்ப்பனர்களையும், இந்து மதத்தையும் ஒழிக்க வேண்டாமா? இந்து மதத்தை பின்பற்றினால் தமிழர்களாகிய நாம் சூத்திரர்கள் என்று தானே அர்த்தம்.

தமிழன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும்  என்று பெரியார் கூறகிறார்.

“மதத்தினாலும், இனத்தினாலும், நாட்டினாலும் ஆரியரில் இருந்து பிரிந்து இருக்கிற தமிழர்கள் தங்கள் நாட்டில் 100க்கு 90 பேர்களாக அவ்வளவு கூடுதல் எண்ணிக்கை உள்ளவர்களாக இருந்து கொண்டு சகல துறைகளிலும் ஆரியர்கள் மேலாகவும், தமிழர்கள் தாழ்வாகவும், இழி மக்களாகவும் இருப்பது உலகத்தில் 8 வது அதிசயமல்லவா என்று கேட்கிறேன். இதற்கு தமிழ் பெரியவர்கள், பண்டிதர்கள், கலைவாணர்கள் என்ன சொல்ல போகிறார்கள் என்பது தெரியவில்லை. முடிவாக நான் ஒன்று சொல்கிறேன். தமிழன் எவ்வளவு தூரம் இந்து மதத்தையும் இந்து மத கலை, ஆச்சாரம், கடவுள், கோவில், பண்டிகை, சடங்கு, வேஷம், குறி, உடை, நடை முதலியவைகளை வெறுத்து தள்ளுகின்றானோ எவ்வளவு தூரம்தான் மனிதத்தன்மையும் வரப்போகிறது என்றும் அவ்வளவு தூரம்தான் அவன் உண்மையான தமிழனாய் இருக்க முடியும் என்று வலிமையாகக் கூறகிறேன்”. - தோழர் பெரியார் ‘குடி அரசு’ 30.10.1943  

எனவே, இவ்வாறு இந்து மதத்தைப் புறக்கணிப்பதே தமிழர்களாகிய நம் விடுதலை மட்டு மில்லாமல் ஒட்டு மொத்தப் பார்ப்பனர்கள் அல்லாத மக்களின் விடுதலையாக இருக்க முடியும் என்பதே உண்மை. ஆன்மீக அரசியல், தமிழ்தேசிய அரசியல், தலித் விடுதலை அரசியல், பொருளாதார விடுதலை அரசியல் போன்ற பல அரசியல்களும் சூத்திர, பஞ்சமர் தன்மையை ஒழிக்காமல் எந்த விடுதலையும் பெற முடியாது என்பதை உணரவேண்டும். எனவே பார்ப்பனீய எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு, மத ஒழிப்பு, பெண் விடுதலை இல்லாத எந்த ஒரு அரசியலும் பார்ப்பனர்களின் நலனுக்கான அரசாகத்தான் அமையும் அது மக்களுக்கு எந்த விடுதலையையும் ஏற்படுத்தாது.

இந்து மதக் கலாச்சாரம், சடங்குகள், கடவுள் (சிறுதெய்வம் மற்றும் குலதெய்வம் உட்பட), பழக்க வழக்கம், பெண் அடிமைத்தனம் இவற்றைப் பின் பற்றுபவர்களாக இருப்பவர்கள் எல்லாம் தமிழர்கள் என்றால் -தமிழர்களை அடிமைப்படுத்திய பார்ப்பனர்களும் தமிழர் என்றால் ரஜினியும் பச்சை தமிழன்தான். பார்ப்பான் தமிழன் என்றால் மராட்டியனும், கன்னடனும் தமிழன்தான்.

ரஜினியைக் கன்னடர் என்று எதிர்க்கும் தமிழ் தேசியவாதிகள் கமலஹாசன் அரசியலுக்கு வரப் போவதாக கூறியபோது ஏன் ‘கமலஹாசன் தமிழர் அல்ல’ என்று கூறவில்லை. காரணம் அவர்கள் பார்ப்பனர்களை எதிர்க்கத் தைரியமில்லாத பார்ப்பன அடிமைகள்.  

நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான் ஆன்மீக அரசியல் பேசும் ரஜினி (பார்ப்பன அடிமையும்) முற்போக்கு வேடமிட்டு நாத்திகம் பேசும் கமலஹாசன் (பார்ப்பனர்) ஆகிய இரண்டு பேருமே நமக்கு எதிரிகள் தான்.

எதிர்க்க வேண்டியது பார்ப்பனர்களையும், பார்ப்பன நலனுக்காக ரஜினிகள் நடத்தும் ஆன்மீக அரசியலையும் தான். ரஜினியின் தேசிய இன அடையாளத்தை அல்ல.