சமூகத்தை மாற்றி அமைக்கும் ஒரு போர்க்கருவி போராட்டம். அதனால்தான் மார்க்ஸ் 'போராட்டமே மகிழ்ச்சி' என்றார். ஓவ்வொரு நொடியும் உலகில் ஏதாவது ஒரு பகுதியில் மக்கள் தங்கள் உரிமைக்காக போராடிக் கொண்டேதான் இருக்கின்றார்கள். தன் மீது பிற்போக்கு ஆளும் வர்க்கம் செலுத்தும் அடக்கு முறைக்கு எதிராகப் போராடாத சமூகம், நிச்சயம் அழிந்து காணாமல் போகும். போராட்ட முறைகளில் பல வேறுபாடுகள் இருக்கலாம். பிரச்சினையின் தீவிரத்தன்மையைப் பொருத்து மக்களும், அரசியல் இயக்கங்களும் அதைக் கைக்கொள்வார்கள். போராட்டத்தில் அரசியல் கட்சிகளின் பங்களிப்பு என்பது தலைமையை வழங்குவதும், போராட்டத்தில் எதிர்நிலை சக்திகள் ஊடுருவி போராட்டத்தை சீர்குலைக்காமல் பாதுகாத்து, போராட்டத்தின் நியாயத்தை வலுவாக எடுத்துச் சொல்லி, கோரிக்கையை, உரிமையை வென்றெடுப்பதுதான்.

vijay 2230போராடும் மக்களுக்கு அரசியல் கற்றுக்கொடுத்து ஆளும்வர்க்கத்துக்கு எதிராகவும் அடக்குமுறைக்கு எதிராகவும் போராடும் மனவலிமையையும், தன்னலமற்ற சிந்தனையையும் நிச்சயமாக ஒரு அரசியல் கட்சியால்தான் வழங்க முடியும். தலைமை இன்றி, சித்தாந்தம் இன்றி நடந்த பல பெரும் மக்கள் போரட்டங்கள் இறுதியில் ஆளும்வர்க்கத்தின் அடக்குமுறைக்கு அஞ்சி, பின்வாங்கியதையும், இல்லை என்றால் கடும் அடக்குமுறையால் சிதறடிக்கப்பட்டதையும் நாம் வரலாறு முழுவதும் பார்த்து வந்திருக்கின்றோம்.

ஒரு அரசியல் கட்சி எந்த எந்தப் பிரச்சினைகளில் வேண்டுமென்றாலும் களத்தில் இறங்கி போராடிவிட முடியாது. முக்கியமாக பிரச்சினை என்பது ஒட்டுமொத்த சமூகப் பிரச்சினையாக இருக்க வேண்டும் உதாரணமாக சாதி, மதம், இனவாதம், பொருளாதாரப் பிரச்சினைகள் போன்றவை இல்லை என்றால், அது பகுதி பிரச்சினையாக இருக்கலாம் - தண்ணீர்ப் பிரச்சினை, பள்ளிக்கூடம் இல்லை, சாலைவசதி இல்லை போன்றவை. இவை மட்டும் அல்லாமல் தனிமனித பிரச்சினையாகக் கூட இருக்கலாம் - கந்துவட்டி, நிலப்பறிப்பு, பாலியல் வன்முறை போன்றவை. போராட்டத்தின் ஊடே பிரச்சினைக்கு எதிராக கருத்துருவாக்கம் நடத்துவதும், அதன் போக்கில் மக்களை போராட்டத்திற்கு அணியமாக்குவதும், அந்த உணர்வு நீர்த்துப் போகாமல் அவர்களை அரசியல்மயப்படுத்தி அமைப்போடு இணைப்பதும் மிக முக்கியமானது. போராட்டத்தால் கட்சியும் பயனடைய வேண்டும், பயனாளிக்கும் பயன்போய் சேர வேண்டும். ஒரு பக்கம் மட்டும் பயன் என்றால், காலப்போக்கில் கட்சிக்குள் பெரும் சோர்வு ஏற்படும். இல்லை என்றால் மக்கள் கட்சியின் மீது வைத்துள்ள நம்பிக்கையில் சிதைவு ஏற்படும்.

என்னிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு தெரிந்த நண்பர் ஒருவர் உதவி கேட்டார். “தோழர் எனக்கும் வேறு ஒரு நபருக்கும் பிரச்சினை. என்னை அவர் அடித்துவிட்டார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. உங்கள் அமைப்பில் சொல்லி ஆள்வைத்து அடிக்க முடியுமா?” என்று. நமக்கு சிரிப்புதான் வந்தது. ஒரு அரசியல் இயக்கத்தைப் பற்றிய மக்களின் புரிதல் என்பது எப்படி இருக்கின்றது என்று. பொதுவாக மக்கள் அரசியல் இயக்கங்களை சித்தாந்தம் சார்ந்து ஆதரிப்பதைவிட ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என்ற அடிப்படையில் இருந்துதான் ஆதரிக்கின்றார்கள். அது இல்லை என்று உறுதியாக தெரிந்தால் அது எவ்வளவு நல்ல சித்தாந்தம் கொண்ட கட்சியாக இருந்தாலும் ஆதரிக்க மாட்டார்கள்.

அப்படி உதவிகேட்ட நண்பரிடம் "உங்கள் பிரச்சினை உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினை, தவறு யார்மீது என்று கட்சிக்குத் தெரியாமல் நீங்கள் சொன்னீர்கள் என்ற ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு அப்படி எல்லாம் செய்துவிட முடியாது. வேண்டும் என்றால் முதலில் பேசிப் பார்க்கலாம், தவறு அவர்மீது இருந்தால் இந்தப் பிரச்சினையை ஒட்டிய அவரின் அடுத்த கட்ட நிலைப்பாடு என்ன என்று தெரிந்து கொண்டு காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம். இல்லை மன்னிப்புக் கேட்டுக்கொண்டால் விட்டுவிடலாம்" என்றால், “என்னங்க இப்படி சொல்லுறீங்க... இந்தச் சின்னப் பிரச்சினையைத் தீர்க்க முடியாத நீங்க எல்லாம் நாளைக்கு எப்படி பெரிய பெரிய பிரச்சினையை எல்லாம் தீர்த்துவைப்பீங்க? நான் உங்கள என்னமோனு நினைச்சேன் இப்படி ஏமாத்தீட்டிங்களே” என்றார் நண்பர். "சரிங்க இதுவரை நீங்கள் எத்தனை பிரச்சினைக்கு வந்து குரல்கொடுத்து இருக்கிறீங்கனு சொல்லுங்க, இப்ப கட்சி உங்களோட தனிப்பட்ட பிரச்சினையில் அதைத் தீர்க்க உதவி பண்ணுனா நாளை நீங்கள் கட்சியில் இணைந்து கடைசிவரைக்கும் மக்கள் பிரச்சினைகளுக்குக் கட்சி முன்னெடுக்கும் போராட்டங்களில் பங்கெடுக்கின்றேன் என்று உத்திரவாதம் கொடுக்க முடியுமா"னு கேட்டேன். நண்பர் “என்னங்க ஒரு பிரச்சினையில் உதவி கேட்டா அப்படியே கட்சியில வளைச்சிப் போட பாக்குறீங்களே, நமக்கு இந்தப் போராட்டம் ஆர்ப்பாட்டம் எல்லாம் சுத்தப்பட்டு வராதுங்க... என்னோட பிரச்சினையை நானே பார்த்துக்கிறேன், உங்ககிட்ட உதவி கேட்டதே தப்பா போச்சு” என்று சொல்லிவிட்டு ஜகா வாங்கிவிட்டார். இது போன்று நிறைய பேர் உதவி கேட்டிருக்கின்றார்கள், பொதுவாக அவர்களில் பெரும்பான்மையோரின் எண்ணம் ஒரு அரசியல் இயக்கத்தை கூலிப்படையாக பயன்படுத்திக் கொள்வதுதான்.

இவனுங்கதான் எப்ப பார்த்தாலும் போராட்டம் ஆர்ப்பாட்டம் என்று சுத்துறாங்களே... காசுகுடுத்தா இல்லை ஓசிலகூட வந்து போராடுவானுங்க. இவனுங்களுக்கு வேலையே இதுதான். நாம் ஏன் தேவையில்லாமல் களத்தில் இறங்கி போராடி வம்பை விலைகொடுத்து வாங்க வேண்டும். சும்மா சுத்தர இவனுங்க கிட்ட பிரச்சினையை விட்டா எப்படியாவது மூச்சை போட்டுக் காரியத்தை முடித்துக் கொடுத்து விடுவார்கள். வேண்டும் என்றால் ஒரு ஐநூறோ ஆயிரமோ கொடுத்தால் பேசாமல் வாங்கிக் கொள்வார்கள். நாமா நம்ம வேலை கெடாமல் பார்த்துக் கொள்ளலாம் என்று பிழைப்புவாத கண்ணோட்டத்தில் இருந்துதான் சிலர் அரசியல் இயக்கங்களை அணுகுகின்றார்கள். சிலர் இது போன்றவர்களின் சுயநலப் போக்கு புரியாமல் அவர்கள் விரித்த வலையில் தானாக போய் சிக்கிக் கொள்வார்கள். பிறகு இயக்கத்தின் பேர் கெட்டு, காசுக்கு மாரடிக்கும் கூலிப் போராளிகள் என்ற அவப்பெயரை சுமந்து கொள்வர்கள். இந்த நிலை ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் கட்சியின் தலைமைக்கு அரசியலில் தேர்ந்த முதிர்தன்மை இருக்க வேண்டும். எந்தப் பிரச்சினையைக் கையில் எடுக்க வேண்டும், எந்தப் பிரச்சினைகளை எந்தச் சூழ்நிலையிலும் கையில் எடுக்கக்க் கூடாது என்று.

கட்சியில் பலகாலம் உழைத்த தோழர்களின் தனிபட்ட பிரச்சினை என்றால் கூட நின்று நிதனாமாக யோசித்து, பிரச்சினையின் தீவிரத்தன்மையைச் சரியாக எடைபோட்டு அணுக வேண்டும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று களத்தில் இறங்கினால் கட்சியின் பெயர் கெட்டு, மானம் மரியாதை போய் கூலிப்படை இயக்கம் என்ற நீங்காத இழிபெயரை சம்பாதித்துக் கொள்ள வேண்டியிருக்கும். அரசியல் இயக்கங்களை, பிரச்சினைகளை தீர்த்து வைக்கச் சொல்லி அணுகும் நபர்களின் கடந்தகால செயல்பாடுகள் எப்படி இருந்தன, அவருக்கு உதவி செய்வதால் இயக்கத்துக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று கணக்குப் பார்த்துதான் உதவி செய்ய வேண்டும். கணக்கு என்றால் பொருளாதார பலனை நான் சொல்லவில்லை. உண்மையில் தனிநபர் சம்மந்தப்பட்ட பிரச்சினையில் கொஞ்சம் சமூகப் பிரச்சினை இருந்தால் நிச்சயம் உதவி செய்யலாம். ஆனால் சம்மந்தப்பட்ட நபர் நாளை நம்முடன் கைகோர்த்துச் சமூகப் பிரச்சினைகளுக்காக தியாக உணர்வுடன் போராட்ட களத்திற்கு வரவேண்டும் என்ற உத்திராவாதத்தைப் பெற்றுக்கொண்டு முடிந்த உதவி செய்யலாம். அப்படி இல்லாமல் ஒரு அப்பட்டமான பிழைப்புவாதிக்கு உதவி செய்ய வலியப் போவது போராட்ட சக்திகளின் பலத்தை வீணடிப்பதில் போய் முடியும்.

கட்சியில் இருக்கும் சில சாகச நபர்கள் சொல்வார்கள், வெட்டிவிடலாம் குத்திவிடலாம் என்று. கட்சியின் தலைமை அதை எல்லாம் நம்பி உணர்ச்சிவசப்பட்டுப் போராட அனுமதி கொடுத்துவிடக் கூடாது. கட்சியின் சித்தாந்தம் என்ன இலக்கு என்ன என்பதை தெளிவாக உணராத தோழர்களின் கோரிக்கைக்கு அவ்வளவு எளிதில் செவிசாய்த்துவிடக் கூடாது. மெர்சல் திரைப்படத்திற்கு எதிராக பிஜேபி கருத்து தெரிவித்தவுடன், முந்திக்கொண்டு போய் பிஜேபிக்கு எதிராகப் போராட சிலர் களம் இறங்கினார்கள். இன்னும் சமூக வலைதளங்களில் சில தோழர்கள் விஜய்யின் முகத்தில் கார்ல் மார்க்ஸை எல்லாம் தரிசனம் செய்துகொண்டு இருந்தார்கள். பார்ப்பதற்கே மிக அருவருப்பாக இருந்தது. இலை முழுவதும் மலத்தை வைத்து ஓரமாக கொஞ்சம் சோறை வைத்தால் எந்த மானமுள்ள மனிதனாவது அதைச் சாப்பிட முன்வருவானா? என்று நாம் கேட்கின்றோம். அப்படித்தான் மெர்சல் படமும்.

dyfi mersal

படம் முழுவதும் விஜய் என்ற நான்காம்தர நடிகனின் வழக்கமான, இழிவான செயல்களுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு அவர்பேசிய சில அரசியல் வசனங்களுக்காக அவரைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவது என்பது இலை முழுவதும் இருக்கும் மலத்தைப் பற்றி கவலைப்படாதவர்களின் செயலாகும். தமிழில் ஜோக்கர் என்ற படத்தை ராஜூ முருகன் அவர்கள் எடுத்தார். படம் ஒவ்வொரு பிரேமிலும் அரசியல் பேசியது. அதுவும் மிகக் காட்டமான அரசியல் வசனங்கள். மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை முச்சந்தியில் வைத்து அவமானப்படுத்தியது. உண்மையில் சமூக அக்கறையின் பாற்பட்டு படம் எடுப்பவர்கள் அரச பயங்கரவாதத்தை அப்படித்தான் காட்சிப்படுத்துவார்கள். ஆனால் மெர்சல் படம் இந்தச் சமூகத்தை மிக மிக மோசமான பண்பாட்டு சீரழிவுக்கு உட்படுத்திய விஜய் என்ற கழிசடையின் வழக்கமான சினிமா பாணிக்கு எந்த வகையிலும் குறைவு நேராமல் எடுக்கப்பட்டுள்ளது. ஊர் முழுவதும் எய்ஸ்ட்ஸை பரப்பும் ஒரு விபச்சாரியை வைத்து ஒரு முழுநீள போர்னோ படத்தை எடுத்துவிட்டு, படத்தில் இறுதியில் அதே விபச்சாரியை வைத்து அனைவரும் எய்ட்ஸ்சில் இருந்து பாதுகாப்பாக இருக்க காண்டம் பயன்படுத்துங்கள் என்று சொல்ல வைப்பது போல உள்ளது மெர்சல் திரைப்படம்.

இது போன்ற படங்களை எந்தவித அரசியல் அறிவும் இல்லாமல் தலையில் மெர்சல் என்று மயிரை பிறாண்டிக் கொள்ளும் குப்பைத்தொட்டி ரசிகர்களும், கட்அவுட்டு வைக்க பொண்டாட்டி தாலியை அடகுவைக்கும் சாக்கடை ரசிகர்களும் கொண்டாடலாம், அதை ரசிக்கலாம். ஆனால் மார்க்சியம் பேசும் தோழர்களும், பெரியாரியம் பேசும் தோழர்களும் கொண்டாடுவது மிக அபாயகரமானது. எச்சிகலை ராஜாவோ, இல்லை தமிழிசையோ மெர்சல் படத்தில் சில வசனங்களை எதிர்ப்பது என்பது நன்றாகவே தெரிகின்றது, விஜயை வைத்து அரசியல் செய்வதற்குத்தான் என்று. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தப் பிரச்சினையை எப்படி கையாள வேண்டும் என்று மெர்சலுக்காக போராடுகின்றவர்கள் மிகக் கவனமாக யோசித்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் தன்னிச்சையாக விஜய் ரசிகர்கள் என்ற கூமுட்டை கூட்டத்துடன் சேர்ந்து போராடுவது எந்த அளவிற்கு கட்சியின் தோழர்களை கட்சியின் தலைமை கீழ்த்தரமாக வளர்த்தெடுத்துள்ளது என்பதைத்தான் காட்டுகின்றது.

உண்மையில் இந்தப் பிரச்சினையில் நேரடியாக சம்மந்தப்பட்டது விஜய், அட்லி மற்றும் தயாரிப்பாளர் போன்றவர்கள் தான். மெர்சல் படத்துக்காக போராடுபவர்கள் ஏன் விஜயை அழைத்துவந்து போராட்டத்துக்குத் தலைமை ஏற்கச் சொல்லி, போராடி இருக்கக் கூடாது. விஜயின் அப்பா சந்திரசேகர் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், விஜய்யின் சமூக அக்கறையை பக்கம் பக்கமாக விளக்கினார். அப்படிப்பட்ட சமூக அக்கறை உள்ள விஜயை வைத்து போராட்டம் நடத்தினால் விஜய் வரமாட்டேன் என்றா சொல்லப் போகின்றார். அழைத்திருந்தால் தெரிந்திருக்கும் விஜய்யின் யோக்கியதை என்ன, அவரின் அப்பாவின் யோக்கியதை என்ன என்று. அரசியல் அரிப்புக்காக இவர்கள் செய்யும் கூத்து என்பதும் அம்பலமாகி இருக்கும். ஆனால் மிக சாமார்த்தியமாக விஜய் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார். மெர்சல் படத்திற்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று. அதில் எங்கேயும் மெர்சல் படத்திற்காக போராடியவர்களுக்கு நன்றி என்று ஒரு வார்த்தை கூட கிடையாது. எவ்வளவு கீழ்த்தரமான பிழைப்புவாதியாய் இருந்தால் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருப்பார் விஜய்! பல கோடிகளை சம்பளமாக பெற்றுக்கொண்டு மிக பெரிய கோடீஸ்வரனாக இருக்கும் அவர், போராடியவர்களை பார்க்கும் பார்வை என்பது நாம் மேலே குறிப்பிட்ட சமூக அரசியல் இயக்கங்களை ஒரு கூலிப்படையாக பார்க்கும், பயன்படுத்திக்கொள்ளும் நபர்களின் பார்வையாகும்.

நமக்கு உண்மையில் தெரியாது, அப்படி எதாவது கூலி வாங்கிக் கொண்டு போராடுகின்றார்களா என்று. இருக்காது என்றே நம்புவோம். உண்மையில் நேர்மையாக போராட்டம் நடத்த விரும்புவர்கள் விஜயையோ, இல்லை அட்லியையோ அழைத்துவந்து மோடி எதிர்ப்புக் கூட்டம் நடத்தட்டும். மேடையில் வந்து விஜயை முழங்கச் சொல்லுங்கள், டிமானிடைசேஷன் பற்றியும், ஜி.எஸ்.டி பற்றியும் இலவச மருத்துவம் பற்றியும், மருத்துவ உலகில் நடக்கும் மோசடிகள் பற்றியும். விஜய்க்கோ, அட்லிக்கோ வாய் ஊமை இல்லை என்று நம்புகின்றோம். அப்படி செய்யாமல் தன்னிச்சையாக கருத்து சுதந்திரத்தைக் காப்பற்ற களம் இறங்கின்றேன் என்று சொல்பவர்களிடம் அன்பாக நாம் கேட்டுக்கொள்வது எல்லாம் இலை முழுவதும் இருக்கும் மலத்தை நீங்கள் மலம் என்று ஒத்துக் கொள்கின்றீர்களா இல்லையா என்பதுதான்.

- செ.கார்கி

Pin It