நேற்று அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததில் இருந்து மனம் நிலைகொள்ளாமல் தவிக்கின்றது. மனித உணர்ச்சி கொஞ்சமாவது உள்ள யாரையுமே நடுங்கச் செய்துவிடும் காட்சிகள் அவை. இரவு முழுவதும் தூக்கம் பிடிக்கவில்லை. அந்தக் குழந்தைகளின் அலறல் சத்தம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. நெருப்பு பிடித்து உடல் முழுவதும் எரியும் போது அந்தக் குழந்தைகள் எப்படி துடித்திருப்பார்கள்! நம்வீட்டில் குழந்தைகளுக்கு ஏதாவது லேசான அடிபட்டு அழ ஆரம்பித்தாலே மனமெல்லாம் பிசைய ஆரம்பித்து விடுகின்றது. எந்த அளவிற்கு மனம் வெறுத்திருந்தால் பெற்ற குழந்தைகளையே நெருப்பு வைத்துச் சாகடிக்க அந்த பெற்றோர்கள் துணிந்திருப்பார்கள். வேறு வாய்ப்புகளே கிடையாது, சாவதைத் தவிர என்ற முடிவிற்கு அவர்களை இழுத்துச் சென்ற பாவிகள் எவ்வளவு குரூர மனம் படைத்த மிருகங்களாக இருப்பார்கள்.

நெருப்பு வைத்துக்கொண்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கும் இசக்கிமுத்துவுக்கு வயது வெறும் 28 தான் ஆகின்றது. இறந்துபோன அவரது மனைவி சுப்புலட்சுமிக்கு 25 வயதுதான் ஆகின்றது. அதற்குள்ளாகவே அவர்களது வாழ்க்கையை கந்துவட்டி கும்பலும், காவல்துறையும், மாவட்ட ஆட்சியரும் சேர்ந்து முடித்து வைத்திருக்கின்றார்கள்.

இசக்கிமுத்துவின் மனைவி சுப்புலட்சுமி, முத்துலட்சுமி என்ற பெண்ணிடம் 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை கந்துவட்டிக்குக் கடன் வாங்கி இருக்கின்றார். வாங்கிய கடனுக்கு மேல் 2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். ஆனால் கொடுத்த முதலுக்கு மேல் 89 ஆயிரம் ரூபாயை வட்டியாக வாங்கியும் போதாமல் கொடுத்த பணம் 1 லட்சத்து 45 ஆயிரத்தையும் திருப்பி கொடுக்க வேண்டும் என்று மிரட்டி இருக்கின்றார் கந்துவட்டி முத்துலட்சுமி. இது தொடர்பாக இசக்கிமுத்து, அச்சன்புதூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக இசக்கிமுத்துவையும், அவரது மனைவியையும் காவல்துறை மிரட்டியுள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் 6 முறை புகார் கொடுத்தும் அந்தப் புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கலெக்டர் வேறு எதையோ கழற்றிக் கொண்டிருந்திருக்கின்றார்.

இதனால் மனம் வெறுத்துப்போன நிலையில் தான் இசக்கிமுத்து தன்னுடைய மனைவி மற்றும் 5 வயது, ஒன்றரை வயது குழந்தைகளுடன் நெருப்பு வைத்துக் கொண்டு சாக முடிவெடித்திருக்கின்றார். இசக்கிமுத்து கொடுத்த புகார் மனுவை மயிரளவுக்குக் கூட மதிக்காமல் அலட்சியமாக இருந்துவிட்டு, இப்போது மூன்று பேரை துடிதுடிக்க கொன்று போட்டுவிட்டு, வெட்கமே இல்லாமல் நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றார். இதே போல திருநெல்வேலி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அருண் சக்தியும் அச்சன்புதூர் காவல் நிலைய காவலர்கள் மீது குற்றம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெட்கமே இல்லாமல் சொல்கின்றார்.

கந்துவட்டிக் கும்பல் இன்று தமிழகம் முழுவதும் பெரும் ரவுடி சாம்ராஜ்யம் நடத்திக்கொண்டு இருக்கின்றது என்றால், அதற்கு முக்கிய காரணம் அரசியல் கட்சிகளும், காவல்துறையும்தான். கந்துவட்டிக்கு விடும் நபர்கள் பொதுவாக ஏதாவது ஒரு அரசியல் கட்சியை அது திமுகவோ, இல்லை அதிமுகவையோ சார்ந்த நபர்களாகத்தான் இருக்கின்றார்கள். அந்த அரசியல் செல்வாக்கில் உள்ளுர் காவல்நிலைய அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு அவர்களுக்குத் தேவையானதை செய்து கொடுத்துவிட்டு தங்கள் வட்டித் தொழிலை சீரும் சிறப்புமாக நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களை மீறி நீங்கள் யாரிடமும் புகார் கொடுக்க முடியாது. அப்படியே கொடுத்தாலும் அந்தப் புகார் திரும்ப சம்மந்தப்பட்ட காவல்நிலையத்திற்கே திருப்பி அனுப்பி வைக்கப்படும். இப்போது புகார் கொடுத்த நபர்கள் முன்பை விட அதிகமாக மிரட்டப்படுவார்கள். அவர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் தான் வழங்கப்படும். ஒன்று கந்துவட்டிக் கும்பல் எவ்வளவு பணம் தரவேண்டும் என்று சொல்கின்றதோ, அதைக் கொடுத்துவிடுவது; இல்லை என்றால் தற்கொலை செய்து கொண்டு செத்துவிடுவது. வேறு மாற்றே கிடையாது. அப்படி காவல்நிலையத்தில் காவல்துறையின் உதவியுடன் கட்டப்பஞ்சாயத்து செய்து மிரட்டி பிடுங்கப்படும் பணத்தில் குறிப்பட்ட சதவீதம் கமிசனாக கடமையைச் செய்த காவலர்களுக்கு வழங்கப்படும். தமிழகம் முழுவதும் இது தான் காவல்நிலையங்களின் இன்றைய நிலை.

இது மிகைப்பட்ட கூற்றல்ல. நீங்கள் தினம் தமிழ்நாட்டில் உள்ள எந்தக் காய்கறி மார்க்கெட் பக்கம் சென்று பார்த்தீர்கள் என்றாலும், இந்தக் கந்துவட்டிக் கும்பலைப் பார்க்க முடியும். கொடுக்கும் போதே 1000 ரூபாய்க்கு 100 முதல் 200 ரூபாய் வரை பிடித்துக்கொண்டு கொடுத்து விடுவார்கள். மாலைக்குள் நீங்கள் விற்றாலும் சரி, விற்காவிட்டாலும் சரி 1000 ரூபாயைக் கொடுத்துவிட வேண்டும். இப்படித்தான் சாமானிய மக்கள் தங்கள் தொழிலை செய்துகொண்டு இருக்கின்றார்கள். வங்கிகள் எல்லாம் அம்பானிக்கும், அதானிக்கும், டாட்டாவுக்கும் , மல்லையாவுக்குமானதாக மாறிவிட்ட சூழ்நிலையில் அவர்கள் முழுக்க முழுக்க இந்தக் கந்துவட்டி கும்பலையே நம்பி தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். காலையில் இருந்து வேகாத வெய்யிலில் உட்கார்ந்து வியாபாரம் செய்து ஒரு 100 ரூபாயோ, இல்லை 200 ரூபாயோ முதலுக்கு மேல் லாபம் ஈட்டினால் அதில் பாதிக்கு மேல் கந்துவட்டி கும்பலின் கைகளுக்குச் சென்றுவிடும். உழைக்காமல் தங்கள் மூலதனத்தை கந்துவட்டி கும்பல் இப்படித்தான் பெருக்கிக் கொள்கின்றது. அதே சமயம் மாடுபோல உழைத்த சாமானிய மக்கள் தொடர்ந்து கந்துவட்டிக்குக் கடன்வாங்கியே ஆகவேண்டும் என்ற சூழ்நிலையும் உருவாகி விடுகின்றது.

கடந்த 7 ஆண்டுகளில் 823 பேர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளதாக அன்புமணி ராமதாசு அவர்கள் சொல்கின்றார். 7 ஆண்டுகள் என்றால் அதிமுக ஆட்சியிலேயேதான் இவ்வளவு தற்கொலைகளும் நடந்துள்ளன. இத்தனைக்கும் தமிழ்நாட்டில் கந்துவட்டி தடை சட்டம் அமலில் இருக்கின்றது. இதன்படி வருடத்திற்கு 18 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிப்பவர்கள் மீது மூன்று ஆண்டு சிறை தண்டனை முதல் 30000 ஆயிரம் ரூபாய் அபராதம்வரை பரிந்துரைக்கலாம். கந்துவட்டி, மீட்டர்வட்டி, மணிநேரவட்டி, தண்டால்வட்டி போன்ற பெயர்களில் வட்டி வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்தச் சட்டம் காவல்துறைக்கு முழு அதிகாரம் அளிக்கின்றது. ஆனால் பெரும்பாலான கந்துவட்டி தற்கொலைகள், கொலைகள் எல்லாம் காவல்துறையினரிடம் புகார் வந்த பின்பு அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நடந்தவைதான்.

2010 ஆண்டு நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதில் ஒரு அப்பாவி பெண் கந்துவட்டி கும்பலால் பாலியல் வன்முறை செய்ப்பட்டார். பாலியல் வன்முறை செய்ததோடு அதை வீடியோ எடுத்து ஒரு இணையதளத்திற்கும் அந்தக் கந்துவட்டி கும்பல் விற்றது. இதை எதிர்த்துப் போராடிய CPM கிளைச் செயலாளராக இருந்த சி.வேலுச்சாமி என்பவர் மிகக் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். காவல்நிலையத்தில் தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று புகார் கொடுத்துவிட்டு, அங்கிருந்து கிளம்பியவரை சிறிது தூரத்திலேயே கந்துவட்டி கும்பல் வெட்டிச் சாய்த்தது. இது எல்லாம் காவல்துறையின் துணையுடன் நடத்தப்பட்ட படுகொலைகள். இது போன்று கந்துவட்டிக்கு எதிராகப் போராடிய பல பேரை கந்துவட்டி ரவுடிக் கும்பல் படுகொலை செய்திருக்கின்றது. கந்துவட்டிக் கும்பல் இவ்வளவு தைரியமாக கொலைகள் செய்வதற்கும், அதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கும் அரசியல்வாதிகளும், காவல்துறையும்தான் பெரிதும் துணை நின்றிருக்கின்றார்கள். எப்படி ஆற்றுமணல் கொள்ளையை தடுக்கச் செல்லும் தாசில்தார் மீது வண்டியை ஏற்றிக் கொல்ல அரசியல்வாதிகளும், காவல்துறையும் கற்றுக் கொடுத்திருக்கின்றார்களோ, அதே போலத்தான் கந்துவட்டியை எதிர்த்துப் போராடும் யாரும் தமிழ்நாட்டில் உயிரோடு இருக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தி வைத்திருக்கின்றார்கள்.

கந்துவட்டி கும்பலை ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கூடாது என 2014 ஆண்டு சென்னை உயர்நீதி மன்றம் கந்துவட்டிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து தமிழக அரசுக்கு கேள்வி கேட்டது. ஆனால் நீதிமன்ற ஆணைகளை மயிரளவுக்குக் கூட மதிக்காத அரசுதான் நம்மை ஆண்டு கொண்டு இருக்கின்றது. மாநில மற்றும் மத்திய நெடுஞ்சாலைகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உத்திரவிட்டால், மாநிலத்தை ஆளும் சாராய வியாபாரிகளின் அரசு மாநில நெடுஞ்சாலைகளை எல்லாம் மாவட்டச் சாலைகள் என்ற பட்டியலில் சேர்த்து, பழைய படிக்கும் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளைத் திறந்து தமிழகத்துப் பெண்களை முண்டச்சிகள் ஆக்கும் தங்கள் புனிதப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. அப்படிப்பட்ட அரசு கந்துவட்டிக் கும்பல்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. அது எல்லாம் மாநில அரசின் அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்தும் போராளிகள் மீது போடுவதற்கு என்றே அரசு வைத்திருக்கும் சட்டங்களாகத்தான் நடப்பில் இருந்து வருகின்றது.

ஒரு பக்கம் விவசாயிகள் தற்கொலை, அரசே முன்னின்று நடத்தும் டெங்கு கொலைகள், மற்றொரு பக்கம் ஆளும்கட்சியின் துணையுடனும் கட்டப்பஞ்சாயத்து நிலையங்களின் துணையுடனும் நடக்கும் கந்துவட்டிக் கொலைகள் என ஒட்டுமொத்த தமிழ்நாடே சுடுகாடாய் மாறிக்கொண்டு இருக்கின்றது. இன்னும் என்ன என்ன எல்லாம் தமிழக மக்களை இந்த மானங்கெட்ட கோமாளிகளின் அரசு செய்யப் போகின்றதோ என நினைத்தாலே அடிவயிறு கலங்குகின்றது.

- செ.கார்கி

Pin It