கீற்றில் தேட...

பா.ச.க. மோடி அரசு உழவர் நலன்களுக்கு எதிராக 2020 செப்டம்பரில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றிடக் கோரி, 2020­21இல் ஓராண்டு நான்கு மாதங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட போராட்டங்களை நியூஸ் கிளிக் வலைதள ஊடகம் விரிவாக ஒளிபரப்பியது. இதுபோல் மோடி அரசக்கு எதிராக நிகழும் பல செய்திகளையும் அச்சமின்றி ஒளிபரப்பி வந்தது.

இதனால் எரிச்சலடைந்த மோடி அரசு, பழிதீர்க்கும் நடவடிக்கையாக அவ்வூடகத்தின் நிறுவனரும் முதன்மை யாசிரியருமான பிரபீர் புர்காயஸ்தாவை ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழுள்ள தில்லி காவல்துறை யினரை ஏவி 03.10.2023 அன்று சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்து சிறையிலடைத்தது. பிரபீர் புர்காயஸ்தா இந்த வழக்கில் நீதி வேண்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி சந்தீப் மேத்தா ஆகிய இருவர் அடங்கிய அமர்வு 15.05.2024 அன்று தீர்ப்பு அளித்துள்ளது. அத்தீர்ப்பில், கைது செய்த போது அதற் கான காரணத்தை பிரபீர் புர்காயஸ்தாவுக்கு முறைப்படி எழுத்து மூலம் தெரிவிக்காமல், கள்ளத்தனமான முறையில் கைது செய்தது சட்ட விரோதமானது எனவும் உபா (UAPA)வின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது செல்லாது எனவும் அறிவித்தனர்.

prabir purkayasthaஇத்தீர்ப்பு வரவேற்புக்குரிய சிறப்புமிக்க முன்மாதிரித் தீர்ப்பு ஆகும்.

வழக்கு, தீர்ப்பு - ஒரு சுருக்கப் பார்வை

தில்லி காவல்துறை நியூஸ் கிளிக் பிரபீர் புர் காயஸ் தாவை 03.10.2023 அன்று கைது செய்து, அவருடைய வழக்குரைஞர் மூலம் வழக்காடும் வாய்ப்பைத் தடுக்கும் நோக்கத்தில்-அவருடைய வழக்குரைஞருக்குத் தெரிந்து விடக் கூடாது என்பதற்காகவே 04.10.2023 புலர்காலை 6 மணிக்கு பாட்டியாலா நீதிமன்ற அமர்வு நீதிபதி 2இன் இல்லத்திற்கு அழைத்துச் சென்று, சிறையில் அடைக்க உத்தரவுப் பெற்று, சிறையில் அடைத்தது, தில்லி காவல்துறை.

கைது செய்ததற்கான காரணத்தை பிரபீர் புர்காயஸ் தாவுக்கும் தெரிவிக்கவில்லை; அவருடைய வழக்குரைஞர் ஆர்ஷ்தீர் குரானாவுக்கும் தெரிவிக்கவில்லை. தில்லி காவல்துறையினர் ஆர அமர இட்டுக்கட்டிய குற்றச் சாட்டுகள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை (FIR) இன் நகலை 05.10.2023 அன்று, அதாவது சிறையி லடைக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குப்பிறகுஅவருக்கு அளித்தனர்.

அவர் பிணை பெற்று விடக்கூடாது என்பதற்காக “இந்தியஜனநாயகமுறைக்கு மாற்றாக சீனாவில் உள்ளது போல் ஒரு கட்சி அரசு பிரபீர் புர்காயஸ்தா முறையை ஏற்படுத்துவதற்காக சீன அரசாங்கத்திட மிருந்து புர்காயஸ்தா நிதி பெற்றார், சதி செய்தார்” என அருவருக்கத்தக்கக் கற்பனையான குற்றச்சாட்டு புனையப்பட்டது.

பா.ச.க. நரேந்திர மோடி அரசு சுதந்திரமாகச் செயல்படும் செய்தி ஊடகங்களையும் ஊடகவியலாளர் களையும் ஒடுக்குவது, ஜனநாயக விழுமியங்களை அரித்தழிக்கும் செயலே ஆகும்.

பிரபீர் புர்காயஸ்தாவை கைது செய்ததற்கான காரணத்தை அவருக்குத் தெரிவிக்காததனால் அவருடைய வழக்குரைஞர் மூலமாக சிறையில் அடைப்பதை  எதிர்க்கும் வாய்ப்பும், பிணை கோரும் வாய்ப்பும், காவல்துறையினர் பொறுப்பில் வைத்து விசாரிப்பதை எதிர்க்கும் வாய்ப்பும் மறுக்கப்பட்டுள்ளது. இது சட்டத்தையும் நீதித் துறையையும் ஏமாற்றும் செயல் ஆகும் எனத் தீர்ப்புரையில் நீதிபதிகள் கூறி யுள்ளனர்.

‘காவல் துறையினரின் மேற்கூறியச் செயலைக் கள்ளத்தனமானது; சட்டத்தை ஏமாற்றும் தந்திரச் செயல்’ என உச்சநீதிமன்றம் தில்லி காவல் துறையி னரைக் குற்றஞ்சாட்டியுள்ளது.

‘உபா’ (UAPA)இன் பிரிவு 43பி(1)இன்படி கைதுக்கான காரணத்தைக் கைதாளருக்குத் தெரிவித்தல் வேண்டும் என்பது இவ்வழக்கில் மீறப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தில் குடிமக்களுக்குப் பிரிவு 22(1)லும் 22(5)லும் வழங்கப்பட்டுள்ள மீறக்கூடாத உரிமைகளும் மீறப் பட்டுள்ளது. இதனால்தான் உச்சநீதிமன்றம் பிரபீர் புர்காயஸ்தாவை கைது செய்தது செல்லாது எனத் தீர்ப்புரைத்துள்ளது.

பிரபீர் புர்காயஸ்தாவைக் கைது செய்ததை எதிர்த்தும் சிறையிலடைத்திட அமர்வு நீதிபதி அளித்த உத்தரவை எதிர்த்தும் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக் கப்பட்டது. இவ்வழக்கினை (வழக்கு எண்.7278/ 2023) விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி துஷாத் ராவ் கெடலா, குற்றச்சாட்டுகளின் தன்மை கடுமையானவை என்பதால் கைது செய்ததும் சிறையிலடைக்க அமர்வு நீதிமன்றம் உத்தரவளித்ததும் சரியானவை எனக் கூறி, வழக்கை 23.10.2023 அன்று தள்ளுபடி செய்து விட்டார்.

உயர்நீதிமன்றம் அளித்த இத்தீர்ப்பின் மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் 15.05.2024 அன்றையத் தீர்ப்பில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தீர ஆராயாமல் அளிக்கப்பட்டுள்ளது என ஒதுக்கித் தள்ளியது.

மேலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் பண மோசடித் தடுப்புச் சட்டத்தின் (PMLA) பிரிவு 19(1)ம் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) பிரிவு 43மி(1)ம் ஒரே கருத்துடையவை ஆகும். எனவே பணமோசடித் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவரான பங்கஜ் பன்சால் எதிர் இந்திய ஒன்றியம் வழக்கில் 03.10.2023 அன்று உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு ‘உபா’ (UAPA) கைதிற்கும் பொருந்தும் என பிரபீர் புர்காயஸ்தா வழக்கில் உச்சநீதிமன்றம் 15.05.2024 அளித்தத் தீர்ப்பு இனி வருங்காலத்தில் உபா (UAPA) வின்கீழ் கைது செய்தலுக்கும் பொருந்தும் என்பதா லேயே இது சிறப்பு மிக்க முன்னோடி -முன்மாதிரித் தீர்ப்பு என வரவேற்கிறோம்.

- கவின்