இந்திய நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள், வரலாற்றுப் பேராசிரியர்கள், ஆய்வியல் அறிஞர்கள், சமூக நீதி – மனித உரிமைப் போராளிகள், விஞ்ஞானிகள் 2015 நவம்பர் 1ம் நாள் டெல்லியில் 'எதிர்ப்பு' (RESISTANSE) என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டிலே திரண்டார்கள்.

modi ramdevடெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜிந்தர் சச்சார், உலகப் புகழ் பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் ரொமிலா தாப்பர், தலைசிறந்த ஆய்வாளர் பேராசிரியர் இர்பான் ஹபீப், இந்திமொழி நாவலாசிரியை கிருஷ்ணா ஷோப்தி, எழுத்தாளர் மிருதுளா கார்க், திரைப்படக் கலைஞர் ஷப்னா ஆஸ்மி என்று கருத்தரங்கில் உரையாற்றியவர்கள் தங்களது துறையில் சாதனை படைத்தவர்கள்.

2013ல் புனாவில் படுகொலை செய்யப்பட்ட பகுத்தறிவாளர் டாக்டர் நரேந்திர தபோல்கர், அண்மையில் படுகொலை செய்யப்பட்ட மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் கோவிந்த பன்சாரே, கல்வியாளர் எம்.எம்.கல்பர்கி குடும்பத்தினரும் கருத்தரங்கில் கலந்து கொண்டு “குற்றவாளிகளை கண்டுபிடிப்பது எப்போது? கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக கத்தியெடுத்தவர்கள் தண்டிக்கப்படுவது எப்போது?” என்று கேள்வி எழுப்பினார்கள்.

கொள்கைகளிலும், நடைமுறையிலும் “இஸ்லாமிக் ஸ்டேட்” என்ற மதபயங்கரவாத இயக்கத்துக்கும், ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்துக்கும், எந்த வேறுபாடும் இல்லை என்றார் சிறப்பு கருத்தரங்கத்தில் பேசிய பேராசிரியர் இர்பான் ஹபீப்.

“மதச்சார்பின்மை பற்றி போலீஸ் பாதுகாப்பில்லாமல் மும்பையில் சொற்பொழிவாற்ற முடியாத துர்பாக்கியநிலை எனக்கேற்பட்டது” என்றார் ரொமீலா தாப்பர்.

“இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் ஆகிய சிறுபான்மை இனமக்கள் அவர்களது மத நம்பிக்கை காரணமாகக் சட்டவிரோதமான வன்முறையில் கொல்லப்படுவதற்காகவா நாங்கள் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு தடியடி பட்டோம், சிறை சென்றோம்?” என்று கேள்வியெழுப்பினார் 92 வயது இந்தி நாவலாசிரியை கிருஷ்ணா ஷோப்தி. இவர்தான் முதன்முதலாக சாகித்ய அகாடமி விருதை தூக்கியெறிந்தவர்.

“உ.பி. மாநிலம் தாத்திரி கிராமத்தில் வீட்டில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக வதந்தியை பரப்பி முகமது இக்லாக்கை கொன்ற இந்துத்துவா வெறியர்களின் வன்முறையை பிரதமர் கண்டிக்காதது ஏன்?” என்று கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அனைவரும் கேள்வியெழுப்பினார்கள்.

“எழுத்துரிமை, கருத்துரிமை, உயிர்வாழ்வதற்கான உரிமைக்கு மோடியின் ஆட்சியில் ஏற்பட்டிருக்கும் ஆபத்துக்களை சுட்டிக் காட்டி செயலற்றிருக்கும் பிரதமருக்கு குடியரசுத் தலைவர் தகுந்த அறிவுரை வழங்கவேண்டும்” என்று இந்த அறிஞர்கள் மாநாடு வற்புறுத்தியிருக்கிறது.

டெல்லி சிறப்பு மாநாட்டுக்கு இரண்டு நாட்கள் முன்பே (29.10.2015) உலகப்புகழ் பெற்ற நுண்ணுயிரியல் விஞ்ஞானி பி.எம்.பார்க்கவா பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த சிறப்புப் பேட்டி, நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சி மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் சிந்திக்கத்தக்கதாகும். உயிரியல் விஞ்ஞானத்தில் அவரது அரிய கண்டுபிடிப்புக்காக 1986ல் வழங்கப்பட்ட 'பத்மபுஷன்' விருதை தூக்கியெறிந்ததற்கான கீழ்க்கண்ட மூன்று காரணங்களை அவர் தெரிவித்திருக்கிறார் (THE CITIZEN DT 29.10.2015 )

1. நரேந்திர மோடியின் ஆட்சி ஜனநாயகப் பாதையிலிருந்து வெகுதூரம் விலகிச் செல்கிறது. குறிப்பாக பாகிஸ்தானில் இஸ்லாம் மத ஆட்சி நடைபெறுவதைப் போல இந்தியாவிலும் இந்துமத ஆட்சி நடைபெற வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

2. ஆர்.எஸ்.எஸ். மதவெறி இயக்கத்தின் அரசியல் முகம் - பி.ஜே.பி. கட்சி. ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எதை விரும்புகிறதோ அதையே பிரதமர் மோடி அமுல்படுத்துகிறார். வேற்றுமையில் ஒற்றுமை, பன்முக கலாச்சாரமே நமது பாரம்பரியக் கொள்கைகள். இவற்றில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு நம்பிக்கை கிடையாது. நாம் எதை உண்ண வேண்டும், எந்தமாதிரி உடை அணிய வேண்டும், எதைப் படிக்க வேண்டும், எதை நம்ப வேண்டும் என்று உத்தரவுபோட ஆர்.எஸ்.எஸ்க்கு அதிகாரம் கொடுத்தது யார்?

3. இந்த நாட்டு குடிமக்கள் பகுத்தறிவையும், அறிவியல் பார்வையையும் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவர்களுடைய அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும் என்று அரசியல் சட்டம் பிரிவு 51 A (H) வரையறுத்துச் சொல்கிறது. இந்த அடிப்படை கடமையை அப்பட்டமாக மீறுகிறது மோடியின் அரசு.

“விருதுகளை திருப்பிக் கொடுக்கும் அரசியலை காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தூண்டி விடுகின்றன” – என்று அருண் ஜெட்லியும், ராஜ்நாத் சிங்கும், சுப்ரமணியன் சுவாமியும் கருத்து சொல்லியிருக்கிறார்கள். மேற்சொன்ன கலைஞர்களும், எழுத்தாளர்களும், விஞ்ஞானிகளும் காங்கிரஸ்காரர்களுமல்ல; கம்யூனிஸ்டுகளுமல்ல. அவர்கள் யாருடைய ஏஜெண்டுகளுமல்ல. பகுத்தறிவோடு சுயமாக சிந்திக்கும் அறிஞர்களைக் கண்டாலே சங் பரிவார் ஆட்களுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது.

- கே.சுப்ரமணியன், மாநில சட்ட ஆலோசகர், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்

 

Pin It