தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகமும், சாதி ஒழிப்பு முன்னணியும் திருச்சியில் 09.07.2017 ல் நடத்திய காட்டாறு ‘குலதெய்வ - நாட்டார் தெய்வ எதிர்ப்பிதழ்’ திறனாய்வு அரங்கில், தோழர் பிரபாகரன் ஆற்றிய உரை
இந்தியச்சமூகம் அடிப்படையிலே ஒரு ஜாதியச் சமூகம் தான். நாம் எல்லோரும் அறிந்ததுதான். அதுவும் அதுஒரு உயர்ஜாதி ஆனாதிக்கச் சமூகம். இன்னுமும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால் உயர்ஜாதி பார்ப்பனியச் சமூகம். பார்ப்பனியச் சமூகம் என்று சொல்லும்போதே அது அடிப்படையில் இந்து மதத்தோடு பிணைக்கப்பட்டுள்ளது. பார்ப்பனியம்தான் இந்து மதம், இந்து மதம் தான் பார்ப்பனியம் என்று வேறுபடுத்தி பார்க்க முடியாத அளவுக்கு பிணைக்கப்பட்டுள்ளது.
ஆகவே இந்து மதத்தின் ஒரு பிரிவாகத்தான் நாட்டார் மதத்தையும், நாட்டார் சமயங்களையும், நாட்டார் தெய்வத்தையும் பார்க்க வேண்டி இருக்கிறது. அதற்கான எல்லாக் கூறும் அதற்குள் இருக்கிறது என்பதுதான் இந்த அரங்கத்தின் விவாதப் பொருளாக இருக்கிறது. இந்த இதழின் உட்கூறும் அதுவாகத்தான் இருக்கிறது. இந்த இதழை நான் வாங்கியவுடன் இது ஒரு சிறப்பிதழ் என்று நினைத்தேன். அதன்பிறகு வீட்டில் போய் பார்த்த பிறகுதான் இது ஒரு எதிர்ப்பிதழ் என தெரிந்தது.
இயல்பாகவே நாம் என்ன நினைக்கிறோம் என்றால் நாட்டார் மதம் என்றாலே அதில் ஜாதியை எதிர்க்கக்கூடிய ஒரு கூறு அதில் இருக்கிறது என்ற எண்ணம் உள்ளது. கடந்த வாரம் நான் பணி நிமித்தமாக மூன்று வெவ்வேறு மதங்களைச் சார்ந்த நண்பர்களைச் சந்திக்க நேர்ந்தது. அதில் ஒரு நண்பர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்.
என்னை சந்தித்த இரண்டு மூன்று நிமிட சந்திப்புகளிலே அவர் என்னைக் கேட்ட கேள்வி. நான் மிகவும் அறுவெறுப்பாக உணர்ந்த கேள்வி, உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்விதான். என்னை அவருக்கு அதற்கு முன்பு தெரியாது, அவரையும் எனக்கு அதற்கு முன்பு தெரியாது. அடுத்த எங்கள் உரையாடலே கடவுள் நம்பிக்கை உள்ளதா? இல்லையா? என்பதை நோக்கி செல்லக்கூடிய ஒரு புள்ளியை அவர் ஏற்படுத்துகிறார்.
அடுத்த நன்பர் பெளத்தத்தின் மீது நம்பிக்கை உள்ளவர். பெளத்தத்திற்கு மதம் மாறியவர். அவர் என்னிடம் கேட்ட கேள்வி, நீங்கள் எப்போது பெளத்தத்திற்கு மாறப் போகிறீர்கள்? ஏன் இன்னும் மாறவில்லை? ஒரு நீண்ட விவாதமே நடந்தது. எங்களுக்குள் ஒரு குடுமிபிடிச் சண்டையே வந்துவிடும் போல் இருந்தது.
அடுத்தவர் கிறிஸ்த்துவ மதத்தைச் சார்ந்தவர் ஓய்வு பெறும் வயதைச் சார்ந்தவர். அவர் ஏன் நீங்கள் கிறிஸ்த்துவ மதத்தை விட்டு விலகிச் செல்கிறிர்கள் என்று கேட்டார். மதத்திற்கு எதிரான பாதையில் செல்கிறிர்கள்? என்று கேட்டார். எதற்காக இந்த மூன்று சமய நம்பிக்கையாளர்களுடனான உரையாடலை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் என்றால் அடிப்படையிலே ஒரு தனிநபருக்கும் இன்னொரு தனி நபருக்குமான உரையாடலே மதம் சார்ந்ததாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
நான் மத நம்பிக்கை உள்ளவனா? இல்லாதவனா என்பதே அடுத்த உரையாடலுக்கான துவக்கமாக இருக்கிறது. இல்லையென்றால் அவர்கள் அடுத்த உரையாடலுக்கு தயாராகவே இல்லை. அந்த மூன்று நபர்களிடமும் என்னுடைய நிலையை எந்த சூழலிலும் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை, அதன்பறிகு அவர்கள் என்னோடு உரையாட விரும்பவில்லை. இது தான் எதார்த்தம். அன்மைக் காலத்தில் ஒரு ஏழு நாட்களுக்கு முன்பு நடந்தது.
காரல் மார்க்ஸ் அவர்கள் சொல்லுவார் “மதத்தை நாம் தீவிரமாக விமர்சிக்காமல் சமூகக் கட்டமைப்பில் எந்தவிதமான மாற்றத்தையும் செய்ய முடியாது” என்று சொல்லுவார். ஆக இந்த காட்டாறுவின் அடிப்படை அம்சமே மதத்தை - அதைத் தாங்கிபிடிக்கும் ஜாதியை விமர்சனம் செய்யக் கூடியதாக இருக்கிறது.
அந்த அடிப்படையில் காட்டாறு மாத இதழின் ஆசிரியர் குழுவைச் சார்ந்த தோழர்களையும், கள ஆய்வு செய்த தோழர்களையும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். காட்டாறு இதழைப் பொருத்தவரையில் தாழ்த்தப்பட்ட ஜாதிகளாக இருக்கக்கூடிய பள்ளர், பறையர், சக்கிலியர்கள் மற்றும் இடைச் சாதிகளாக இருக்கக்கூடிய கள்ளர், வன்னியர், செட்டியார் என இந்த குழுக்கள் வழிபடக்கூடிய நாட்டர் தெய்வங்களைப் பற்றிய கள ஆய்வு செய்து ஒரு அறிக்கையாக, ஒரு நூலாக வெளியிட்டிருக் கிறார்கள்.
ஒட்டு மொத்தமாக இந்த இதழில் வரக்கூடிய ஆய்வுகளைப் பார்த்தால் இந்த நாட்டார் தெய்வங்கள் ஏதோ ஒரு வகையில் ஜாதியை தூக்கிப் பிடிக்கிறது. அந்தந்த ஜாதிக்குள்ளாக திருமணம் செய்வதாக இருக்கட்டும், அந்தந்த ஜாதிக்குள்ளாக வரி வசூல் செய்வது கொள்வதாக இருக்கட்டும், அந்தந்த ஜாதிகள் இருக்கக்கூடிய நிலப்பரப்பிலே, வாழ்விடங்களிலே தங்களுக்கான தெய்வங்களை உருவாக்கி மற்ற சமூகத்தினரை ஏற்றுக் கொள்ளாதவராக, அவர்களின் உரிமையை ஒத்துத் கொள்ளாதவராக நாம் பார்க்கிறோம்.
மற்றுமொரு முக்கியமான செய்தி அவர்கள் எல்லோரும் பார்ப்பனத் தலைமையை ஒத்துக் கொள்கிறார்கள். அந்தப் பூசாரிகள் அனைவருமே தாங்கள் பார்ப்பனரிடம் ஆலோசனை பெற்றுத்தான் செய்வோம் என்று கூறுகிறார்கள். அவர்களைக் கேட்காமல் எப்படி செய்வது என்கிறார்கள். ஒரு சமூகம் பொய் பார்ப்பனரிடம் ஆலோசனை கேட்கிறார்.. உங்கள் தெய்வமான சாம்பானைக் குழிதோண்டிப் புதைத்து விடுங்கள். அதற்கு பதிலாக நாங்கள் தரக்கூடிய லிங்கத்தை வைத்து வழிபடுங்கள் என்கிறார்கள்.
ஆக எதோ ஒரு வகையில் பூசாரிகள் மற்றும் அந்தக் குடும்பங்கள் பார்ப்பனத் தலைமையை ஏற்றுக் கொள்கிறார்கள். எல்லாக் குல தெய்வங்களிலும், எல்லாச் ஜாதிகளிலும் நாம் பார்க்க்க்கூடிய ஒரு அம்சமாக இருப்பது ஆண்,பெண் வேறுபாட்டைத் தக்கவைத்துக் கொள்வது. கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்க மறுப்பது, பூஜை செய்ய அனுமதிக்க மறுப்பது என தொடர்ச்சியாக பார்க்கிறோம்.
தாழ்த்தப்பட்ட ஜாதிகளில் ஒன்றாக இருக்கக்கூடிய சக்கிலியர் சமூகத்தின்ர் தங்களை உயர் குடியாக்கம் செய்து கொண்டு சமஸ்கிருத மயமாக்கலை செய்து கொண்டு மற்றுமொரு தெலுங்கு பேசக் கூடிய ஆதிக்க சமூகமான நாயுடு, நாயக்கர் ஆகியோரிடம் நாங்களும் உங்களைப் போல் தெலுங்கு பேசக்கூடியவர்கள், உங்கள் வழி மரபைச் சாந்தவர்கள் எனக்கூறி அவர்களுடன் ஒத்துப் போகிறார்கள்.
ஜாதியை தக்கவைத்துக் கொள்கிற, பார்ப்பனத் தலைமையை ஒத்துக் கொள்கிற, ஆண் பெண் வேறுபாட்டை ஏற்றுக் கொள்கிறவர்களாக இருப்பதை தொடர்ச்சியாக இந்தக் கள ஆய்வில் பார்க்கிறோம். குலதெய்வ, நாட்டார் தெய்வங்களுக்கு எதிரான பெரியார், அம்பேத்கர் அகியோரின் எழுத்துக்களிலிருந்தும் எடுத்துக்காட்டியுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக இந்த கள ஆய்வின் மூலம் பார்த்தோமென்றால் ஜாதிதான் மனிதர்களையும், ஜாதிதான் ஒவ்வொருவரின் மதத்தையும் அடையாளப்படுத்துவதாக இருக்கிறது. ஜாதிதான் ஒவ்வொருவரையும் இயங்கச்செய்கிறது. இந்த இதழை முழுமையாக படித்து முடித்தபின்பு எனக்கு வரும் செய்தி என்னவென்றால், இந்தக் கள ஆய்வுதான் உண்மையா? நாட்டார் தெய்வங்கள் ஜாதிக்கு எதிரானவர்களாக இல்லையா? ஜாதியைத் தூக்கிப் பிடிப்பவர்களாக இருந்திருக்கிறார்களா? என்பதைத்தான் இங்கே விவாதிக்க வேண்டிய செய்தியாக இருக்கிறது.
இந்தியச் சமூகங்களிலே மதம் பற்றி நமக்கு ஒரு புரிதல் இருந்ததில்லை. ஒரு மாத காலம் விரதம் இருப்பது, சாமிக்காக செலவு செய்வது, அதற்காக நேரம் ஒதுக்குவது, சாமிக்கு பிடித்த உணவு, ஆடை உடுத்துவது என சாமிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாக தெரியவில்லை. சாமியைப் பெரிதாக பொருட்படுத்தாத சமூகமாகத்தான் நம்முடைய சமூகம் இருந்திருக்கிறது.
ஆண்டுக்கொருமுறை ஒரு நாளோ அல்லது இரண்டு நாளோ ஒரு வாரமோ நடக்கக்கூடிய திருவிழாவாகத்தான் இந்த குல தெய்வ வழிபாடு இருந்திருக்கிறது. சாமி இருக்கும் இடம்கூட குப்பை மேடாக, நாம் வசிக்கும் வீட்டில் கலைந்து கிடக்கும் பொருள்களைப் போல ஒழுங்கு படுத்தபடாமல் இருப்பது போல் தான் குல தெய்வக் கோவில்களும் இருந்துருக்கிறது. அந்த திருவிழாக் காலங்களில் ம்ட்டுமே சுத்தம் செய்து ஆண்டுக்கொரு முறை விழா முடிந்த பின்பு அதை ஒதுக்கி வைத்துவிட்டு மற்ற வேலைகளை பாக்கும் சமூகமாகத்தான் நமது சமூகம் இருந்துள்ளது. அதற்காக பணம் செலவு செய்வது, வரிவசூல் செய்வது என்ற போக்கு நம்மிடத்தில் இல்லை என்பது தான் என்னுடைய கருத்து.
பார்ப்பன ஆதிக்கம் எப்படி வந்தது, பார்ப்பனத் தலையீடு குலதெய்வ வழிபாட்டில் எப்படி வந்தது? ஏனெனில் பார்ப்பன ஆதிக்கம், அதிகாரம் குலதெய்வ வழிபாட்டில் தொடர்ச்சியாக இருப்பதைப் பார்க்கிறோம். தொடக்க காலத்திலே பொதுவாக பார்ப்பனர்கள் தங்களுடைய மத வாழ்க்கையாக இருக்கட்டும், சமூக வாழ்க்கையாக இருக்கட்டும், மற்ற சமூகங்களோடு இனைந்து உறவாடியவர்கள் இல்லை. அவர்கள் தனித்துதான் இருந்தார்கள். அவர்கள் சாமி தனியாக இருக்கும். அவர்களின் வேத நூல்கள் தனியாக இருக்கும். அவர்கள் மற்றவர்களோடு கலக்கவே இல்லை.
அம்பேத்கர் ஜாதியைப் பற்றி சொல்லும் போது “பார்ப்பனர்கள் கதவடைத்துக் கொண்டார்கள், மற்றவர்கள் அவர்களைப் பார்த்து கற்றுக் கொண்டார்கள்” தங்களை, தங்களின் இருப்பிடங்களை கதவடைந்துக் கொண்டார்கள். மற்றவர்களை வெளியில் நிறுத்தி விட்டார்கள். எனவே பார்ப்பனர்களைப் பார்த்து மற்றவர்கள் கற்றுக் கொண்டார்கள்.
மற்றவர்களோடு கலக்காத ஒரு சமூகம், பிற மக்களின் கலாச்சாரத்தை, வழிபாட்டை எற்றுக் கொள்ளாத ஒரு சமூகம் எப்படி ஒரு பெரிய சமூகத்தோடு கலக்கிறது, எதற்காக அவர்கள் கலந்து விடுகிறார்கள். எதற்காக உறவாடுகிறார்கள்? வேறொன்றும் இல்லை அவர்களின் அதிகாரத்தை தக்க வைத்தக் கொள்வதற்குத்தான்.
அவர்களுக்கென்று தனியாக ஒரு வழிபாட்டு முறை கூட இல்லை. அவர்களுக்கென்று கோவில் இல்லை, உருவவழிபாடு இல்லை, சடங்கு முறை இல்லை. ஆனால் இவை எல்லாம் பெளவுத்தத்தில் இருந்தது. பெளத்தத்திற்குத்தான் மடங்கள் இருந்தது, உருவ வழிபாடு இருந்தது, சடங்குகள் இருந்தது. பெளவுத்தர்களை விரட்டிவிட்டு அவர்களிடமிருந்த நல்ல செய்திகளை பார்ப்பனர்கள் எடுத்துக் கொண்டனர்.
பார்ப்பன இந்துமதத்தில் கொல்லாமை எப்போதும் கிடையாது, பிற உயிர்களை நேசிக்கக்கூட சொல்வதில்லை. அது பெளவுத்தத்தில் உள்ளது. கொல்லாமை, களவு செய்யாதே, பிறன்மனை நோக்காதே, பிறருடைய சொத்துக்களை பறிக்காதே என பெளவுத்தம் சொன்னது தனி மனிதர்களைப் பற்றி அல்ல, அது பார்ப்பனர்களைப் பற்றி சொன்னதாகும்.
நீ தான் பொய் சொல்கிறாய், நீ தான் அடுத்தவன் சொத்தை திருடுகிறாய், நீதான் பிறர் மனைவியை அபகரிக்கிறாய் என்றது பெளத்தம். அப்போது தான் அவர்களின் பார்வை பெளத்தத்தை நோக்கித் திரும்புகிறது. முதன் முறையாக அன்பை பேசியது, சமத்துவத்தை பேசியது பெளத்த மதம். கல்வியை அனைவருக்கும் பொதுவாக்கியது பொளத்த மதம். பெண்களை பிக்குகளாக மாற்றினார்கள் பெளத்தர்கள்.
இந்து மதத்தில் பெண்களுக்கு அப்படி ஒரு இடமே கிடையாது. மருத்துவத்தை பொதுமை ஆக்கியது பெளத்தம். இந்து மதத்திற்கு எதிராக தலைகீழாகச் சமத்துவத்தைப் பேசியது பெளத்த மதம். அதனால் பார்ப்பனர்கள் பெளத்த மடங்களைக் கொளுத்தினார்கள், பிக்குகளைக் கொலை செய்தார்கள், பெளத்தத்தின் உள்ளீடுகளை எடுத்துக் கொண்டு பெளத்தத்தையே அழித்தார்கள். அயோத்தி மிகப் பெரிய பெளத்தத் தளம்.
அயோத்தியில் பார்ப்பனர்களுக்கும் பெளத்தர்களுக்கும் நிறைய விவாதம் நடந்துள்ளது. அதனால்தான் அதைக் கைப்பற்றினார்கள். காவி பெளத்தர்களின் நிறம், பூணுால் பெளத்த அடையாளம், பெளத்தர்கள் தங்கள் ஆடை நழுவாமல் இருக்க்க் கட்டிய ஒரு நூல். தாமரை பெளத்தர்களின் அடையாளம்.
பெளத்தத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய அம்பேத்கரை அவர்கள் தனதாக்கிக் கொண்டனர். ‘இந்துத்துவ அம்பேத்கர்’ எனப் புத்தகம் வெளியிடுகின்றனர். எனவே அவர்கள் அதிகாரத்தை தக்க வைக்க அனைத்தும் செய்கிறார்கள். பார்ப்பன அதிகாரத்தைத் தக்கவைக்க அவர்கள் அனைத்து வேலைகளையும் செய்கிறார்கள். இந்து மத்த்தைத் தூக்கி நிறுத்துவதற்காக அவர்கள் அனைத்து வேலைகளையும் செய்கிறார்கள்.
நாட்டார் தெய்வங்களுக்கும் பார்ப்பன வழிபாடுகளுக்கும் வேறபாடே இல்லையா? என நாம் கேட்க முடியும்? நிறைய வேறுபாடு இருக்கிறது. உணவில் வேறுபாடு இருக்கிறது. கோவில் கட்டமைப்பில் வேறுபாடு இருக்கிறது, பூசாரிகளின் தலைமைப் பண்புகளில் வேறுபாடு இருக்கிறது. பெண்கள் கூட நிறைய கோவில்களில் பூசாரியாக இருப்பார்கள்.
பார்ப்பனர்கள் கடுமையாக உடலை வருத்திக் கொண்டு செய்யக் கூடிய வழிபாடு எதுவும் செய்வதில்லை. பார்ப்பனர்கள் யாரும் தீ மிதிப்பதில்லை, அழகு குத்துவதில்லை, பாதயாத்திரை செல்லுவதில்லை. ஏன் செல்வதில்லை? இது இந்து மதத்தில் இல்லையா? அவர்கள் கடவுளை வணங்குவது கூட சொகுசாக வணங்கினார்கள். தீயை வணங்குவது அவர்கள் வழிபாடு, தீயை மிதிப்பது நம்முடைய வழிபாடு. இதெல்லாம் அடிப்படைப் பண்பாடாக இருந்த்து உண்மைதான். அனால் இப்போது அதற்கான கூறுகள் இப்போது இல்லை அதுவும் பார்ப்பனியத் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளது என்பது தான் காட்டாறு வைக்கும் விமர்சனம் ஆகும்.