'இருபது வயதுக்கு மேலே கம்யூனிஸ்டு ஆகாதவனும், நாற்பது வயதுக்கு மேல் கம்யூனிஸ்டாக இருப்பவனும் மனுஷனில்லை' என்ற சொல்வழக்கு ஒன்று உண்டு. இது அடிப்படையற்ற நகைப்புக்கு இடமளிக்கின்ற ஒன்றுதான் என்றாலும் நடைமுறையில் இளம் வயதில் தீவிரமான செயல்பாட்டாளராக இருந்துவிட்டு அதிலிருந்து விலகிப்போய் 'முன்னாள் தோழர்கள்' ஆன பலர் இங்கே இருக்கிறார்கள்.

lenin 2661990ம் ஆண்டுகளில் கல்பனா சுமதி, பத்மினி என்ற இரண்டு காவல் நிலைய கற்பழிப்பு வழக்குகள் பிரசித்தி பெற்றவை. இது தொடர்பாக கம்யூனிஸ கட்சிகளின் வெகுசன இயக்கங்கள் குறிப்பிடத்தகுந்த பெரும் போராட்டங்களை முன்னெடுத்தன. இதன் விளைவாக சம்மந்தப்பட்ட காவலர்களுக்கு இரண்டு வழக்குகளிலும் உரிய தண்டனைகள் கிடைத்தன.

தளி ஆசிரியை கல்பனா சுமதி கற்பழிப்புக்கு எதிரான போராட்டத்தில் ஒரு நக்சல்பாரி வழி புரட்சிகரக் கட்சியின் மகளிர் இயக்கத்துக்கு பிரதான பங்கிருந்தது. அந்த இயக்கத்தில் மாநில பொறுப்பில் இருந்த ஒரு பெண்தோழரின் தீரமிகு போராட்டம் மெச்சத் தகுந்தது. தளி காவல் ஆய்வாளரை அம்பலப்படுத்தும் அவரின் போராட்டத்தில் அவர்மீது ஏவப்பட்ட அடக்கு முறைகள் கொஞ்ச நஞ்சமல்ல. விவரிக்க முடியாத அடக்கு முறைகளை எதிர்கொண்ட அந்தத் தோழர், எஃகு போன்ற நடைமுறை உறுதி கொண்ட அந்தத் தோழர், உறவினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி சாதி மறுப்பு திருமணத்தைச் செய்துகொண்ட அந்தத் தோழர் ஒருகட்டத்தில் விரக்தியடைந்து கட்சியில் இருந்து விலக ஆரம்பித்தார். இறுதியில் ஒரு சாதிய வாதக்கட்சியில் பதவி வாங்கிக் கொண்டு ஒதுங்கிக் கொண்டார்.

தேவாரத்திடமோ சிவகுருவிடமோ நெஞ்சு நிமிர்த்தி நியாயம் கேட்ட பல இளந்தோழர்கள் பிற்பாடு சாதிய வாதிகளாகவும், பூர்ஷ்வா கட்சிகளின் தீவிரமான உறுப்பினர்களாகவும் இழிந்து போன சம்பவங்கள் இங்கே அனேகம் உண்டு. அவ்வளவு ஏன்? தலைக்கு விலைவைத்து தேடப்பட்ட ஒரு அகில இந்திய நக்சல்பாரி இயக்கத்தின் முன்னாள் மத்தியக்குழு உறுப்பினரும் கூட கடைசியில் திராவிட இயக்கம் ஒன்றில் அடைக்கலம் ஆனதும், ஆயுள் தண்டனை அனுபவித்துவிட்டு வந்தவர்கள் கூட பிற்பாடு மனந்திருந்திய நக்சலைட்டுகளாகி வீடுகட்டவும், தொழிற் தொடங்கவும் அரசு வங்கிகளின் வாசலில் தவமிருந்ததும் இங்கே நாம் கண்ட ஒன்று.

புரட்சிகர இயக்கங்களின் எழுச்சி காலகட்டங்களில் 'பலரும்' இயக்கத்தின் பின்னால் அணி திரள்வதும், தொய்வான 'அலை இறக்க' காலகட்டங்களில் சோர்ந்து ஒதுங்கிக் கொள்வதும் இயல்புதான் என்றாலும் இத்தகு போக்கு தொடர் நிகழ்வாவது என்பது யோசிக்கத் தக்க ஒன்று. அதிலும் புறச் சூழல் புரட்சிகர இயக்கங்களுக்குச் சாதகமாக இருக்கும்போது கூட இத்தகு விலகல் போக்கு தொடர்வது வேதனை மிக்கது.

அணிகளின் சோர்வுக்கு எதிர் புரட்சிகர கருத்துக்களின் ஊடுருவல்கள், புரட்சிகர இயக்கங்களுக்குள் தொடர்ச்சியான பிளவுகள், இயக்கங்களில் நிலவும் புரட்சிக்கான பாதை குறித்த குழப்பங்கள், பலகீனமான வர்க்க ஆய்வுகள், சர்வதேச அளவில் சோஷலிச முகாம் தகர்ந்து போதல் என பற்பல காரணங்கள் இருப்பினும் மார்க்ஸிய கல்வி தொடர்பான அவர்களின் போதாமை என்பது இத்தகு விலகல்களுக்கு முக்கியமானதோர் அம்சமாக இருக்கிறது. கட்சிகளின் வெளியீடுகளை மட்டுமே படிப்பது, அதன் கோஷங்களை மட்டுமே முதலும் முடிவுமாக பாவிப்பது, இயங்கியல் அணுகுமுறையை கற்க முயலாமல் கண்மூடித்தனமாக கட்சியின் கட்டுப்பாடு எனும் பெயரில் குறுங்குழுவாத சிந்தனைகளுக்கு ஆட்படுவது என பிரச்சனைகள் இங்கே முறையான கல்வியில் ஏற்பட்டிருக்கும் போதாமையில் இருந்தே எழுகிறது.

இயக்கவியல் பொருள்முதல்வாதம் குறித்து எந்தப் புரிதலும் இல்லாத ஒருவர் கட்சி கூறியது என்பதற்காக தலைமைக்கு வேண்டப்படாதவரை கலைப்புவாதி என்றும், புதிய இடது என்றும் தனக்கு முற்றிலும் புரியாத சொற்களைக் கொண்டு விமர்சிக்கத் தொடங்குவதும், புதிய ஜனநாயகப் புரட்சிக்கும் சோசலிசப் புரட்சிக்குமான வேறுபாடுகளைக்கூட புரிந்து கொள்ள இயலாதவர்கள் தமது குழுவின் நிலைபாடே சரியானதென வாய் பந்தலிடுவதும், கம்யூனிஸ்ட்டு கட்சி அறிக்கையைக் கூட புரிந்து கொள்ளாத அல்லது புரிந்துகொள்ள முயலாத இவர்களின் புரட்சிகர செயல்பாடு எதைத்தான் செய்து கிழிக்கப் போகிறது? கம்யூனிஸ்டுகள் பூர்ஷ்வா கட்சித் தலைவர்களின் கட்டளைக்கு கட்டுப்படும் ஆட்டு மந்தைகளைப் போன்றவர்கள் அல்லர்.

ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை 'தளபதிகளின் குழாம்' என்பார்கள். பத்து, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கட்சியின் உறுப்பினராக இருக்கும் மூத்த தோழர் அவர். ஒருமுறை இரஷ்ய கம்யூனிஸ்டு கட்சியால் வெளியிடப்பட்ட மிஹயீல் நெஸ்தூர்ஹ் எழுதிய மனித இனங்கள் எனும் நூலை ஆபாச நூல் என்றும் (அதில் சில பெண் அரை நிர்வாணப் படங்கள் இருக்கும்) அதை புத்தகக் கடையில் வைத்து விற்பனை செய்வது மார்க்ஸிய விரோதம் என்றும் தனது கட்சித் தலைமையிடம் வலியுறுத்தினார். வாழும் மார்க்ஸ் என தனது சகாக்களால் அன்போடு அழைக்கப்படும் அக்கட்சியின் தலைவர் தனது பத்தாண்டுகால கட்சி உறுப்பினர்களுக்கு பயிற்றுவித்த லட்சணம் இது.

இயக்கவியல் பொருள்முதல் வாதத்தை கற்பது என்பதும், அதை சமகால புரட்சிகர நடைமுறைகளுக்குப் பொருத்துவது என்பதும் ஒரு கம்யூனிஸ்டுக்கு அடிப்படையானதாகும். "இளைஞர் கழகமும் பொதுவில் கம்யூனிஸத்துக்கு முன்னேறிச் செல்ல விரும்பும் இளைஞர்கள் அனைவரும் கம்யூனிஸத்தைக் கற்றறிந்தாக வேண்டும் என்பதே முதலாவதும் மிகவும் இயற்கையானதுமான பதிலாய்த் தோன்றுகிறது.." என்பார் லெனின். "அறிவின் கூட்டுத் தொகையிலிருந்து விளைந்த விளைபயனே கம்யூனிஸம்" என்றும் " மனிதகுலம் படைத்தளித்திருக்கும் கருவூலங்கள் யாவற்றையும் பற்றிய அறிவைப் பெற்று உங்கள் சிந்தனையை நீங்கள் வளப்படுத்திக் கொள்ளும்போது மட்டுமே உங்களால் கம்யூனிஸ்டு ஆக முடியும்" என்றும் கற்றலின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து லெனின் வரையறுக்கிறார். மாவோ குறிப்பிடும்போது "நமது இலக்கு பற்றிய அறிவும், நமது நாட்டின் வரலாறு குறித்த அறிவும், தற்காலச் சூழல் பற்றிய அறிவும் நம்மிடம் போதுமானதாக இல்லை எனில் இலக்கை எட்டுவதற்கான முயற்சி தோல்வியில் முடிந்து விடும்" என்பார்.

கற்றலின் அவசியம் குறித்து நாம் பேசும் அதே நேரம் அண்மைக்காலத்தில் நடைமுறை தொடர்பான போராட்டங்களில் பல புதிய இளைஞர்கள் களத்துக்கு வருவதையும் போராட்டங்களில் தீவிரமான முன்னோடிகளாக வளர்வதையும் பார்க்கிறோம். மேற்கண்ட இளைஞர்களில் பலர் ஊடக போதைகளுக்கு ஆட்பட்டு வெற்று சாகச வாதிகளாகவும் விளம்பர அடிமைகளாகவும் பிற்பாடு மாறிவிடுவதை நாம் காண்கிறோம். இத்தகு இடறுதல் என்பது அவர்களின் பூரணமான இலக்கு குறித்த கற்றலின் போதாமையிலிருந்தே எழுகிறது. வருங்காலத் தலைவர்களை உருவாக வழிநடத்திட வேண்டிய புரட்சிகர இயக்கங்களும் கூட தமக்கான பிரதான பணிகளில் இருந்து தவறிவிடுகின்றன. நாம் சூடும் புகழ் மாலையின் கனத்தில் அவர்களுக்கு தங்களின் இலக்குகள் மறந்து போய் வடுகின்றன. வரக்கூடிய இளந்தலைமுறைக்கு கல்வி தொடர்பான ஆவலை ஊட்டுவதற்கு பதிலாக உணர்ச்சிகரமாக அவர்களை பூஜிப்பது என்பது வளர்ச்சிக்கு மட்டுமல்ல அவர்களின் தொடர்ச்சியான இருப்புக்கும் பெரும் தடையாகும். ஒருவரின் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக்கு இலக்கு குறித்த முழுமையான அறிவு என்பது அவசியமாகும். முழுமையான அறிவு குறித்து மாவோ குறிப்பிடும்போது ' ஒன்று புத்தகங்களில் காணப்படும் முன்தயாரிக்கப்பட்ட அறிவு. மற்றது பெருப்பாலும் புலனுணர்வான பகுதி அறிவு.இரண்டுமே ஒருதலைப் பட்சமானது. இந்த இரண்டின் இணைவில்தான் பலமான ஒப்பீட்டளவில் முழுமையான அறிவைப் பெற முடியும்' என்பார்.

புத்தகம் படிப்பவர்கள் எல்லாம் குட்டி பூர்ஷ்வாக்கள் என்றும், அவர்கள் புரட்சிக்கு நம்பகமான சக்திகள் இல்லை என்றும், ஓடுகாலிகள் என்றும் சில கம்யூனிஸ குழுக்கள் தங்களின் அணிகளுக்கு போதனை செய்து வைத்திருக்கின்றன. இதன்மூலமாக தங்களின் போதமையின் பலகீனங்களிலிருந்து தப்பித்துக் கொள்கின்றன. சாருமஜும்தார் தொடங்கி நக்சல் பாரி இயக்கத்தின் பல்வேறு தலைமைகளும் கற்றல் தொடர்பான அடிப்படை அம்சங்களுக்கு போதுமான முக்கியத்துவம் தரத் தவறியது என்பது அந்த இயக்கத்தின் தற்கால பின்னடைவுகளுக்கு ஒரு காரணமே.

பொதுவாக புரட்சிகரக் குழுக்களின் தலைமைகள் யந்திரகதியில் தொடர்ந்து கூறிவருவதைப்போல நடைமுறையில்லாத தத்துவம் என்பது வறட்டுத்தனமானதுதான், பயனற்றதுதான். புரட்சிகரமான ஒரு கட்சியில்லாமல் புரட்சி சாத்தியமில்லைதான். ஆனால் ' புரட்சிகரமான அறிவுஜீவிகள் இல்லை எனில் நம்மால் புரட்சி நடத்த முடியாது' என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

- பாவெல் இன்பன்

Pin It