கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி அவர்கள் பள்ளர் சாதி மக்களை பட்டியல் இனப் பிரிவில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறி வருகின்றார். அதற்காக தன் சாதி மக்களுக்குத் 'தலித்' என்ற அடையாளத்துடன் தரப்படும் இட ஒதுக்கீடு கூட தேவையில்லை என்றும், வேண்டுமென்றால் தங்களைப் பிற்பட்ட சாதி பிரிவில் வைத்தோ, இல்லை தனியாகவோ இடஒதுக்கீடு தரலாம் என்றும் சொல்கின்றார். மேலும் பள்ளர் சாதி மக்களை பட்டியல் இனப் பிரிவில் வைத்தது வரலாற்றுப் பிழை என்றும், காரணம் தாங்கள் ஆண்ட பரம்பரை என்றும் கூறி வருகின்றார். இந்த ஆண்ட பரம்பரை கதை என்பது தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் இந்தியாவில் உள்ள பெரும்பாலான சாதிகளும் தங்களை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்து உடையவர்களாக காட்டிக் கொள்ள செய்யும் பிரச்சாரங்களில் ஒன்று. இதில் சில உண்மையும் இருக்கலாம், பல பொய்களும் இருக்கலாம். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சாதியின் ஆண்டபரம்பரைக் கதைகள் பற்றிய வரலாற்று ஆராய்ச்சிக்குள் நாம் போனோம் என்றால் நாம் ஆய்வை முடிக்கும் முன்பே ரத்தவாந்தி எடுத்து சாவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே எந்தச் சாதி ஆண்ட சாதியாக இருந்தது, எந்த சாதி ஆண்ட சாதிக்கு அடிமை சாதியாக இருந்தது என்பதை பொதுவான கண்ணோட்டத்தில் இருந்து அறிய முற்படுவோம்.

krishnasamyவரலாற்றில் இந்தியாவில் பார்ப்பனர்கள் வருகைக்கு முன்புவரை அதாவது வர்ண-சாதிய அமைப்பு என்ற ஒன்று இந்தியாவில் தோன்றும் வரை அனைத்து இனக் குழு மக்களும் தங்களுக்கான ஆட்சிப் பரப்புகளையும் அதை ஆட்சி செய்ய இனக்குழு தலைவர்களையும் கொண்டிருந்தனர். ஆனால் இதை இன்று நாம் சொல்லும் அரசு என்ற பொருளில் முழுவதுமாக பொருள் கொள்ள முடியாது. பின்னால் இனக்குழு சமூகங்கள் அழிந்து அரசு என்ற ஒடுக்குமுறை அமைப்பு தோன்றியபோது கூட இன்ன மக்கள் தான் அரசாட்சி செய்ய வேண்டும், இன்ன மக்கள் அரசாட்சி செய்வதற்குத் தகுதியானவர்கள் கிடையாது என்ற பாகுபாடு தோன்றவில்லை. எப்போது பார்ப்பனியம் ஒரு சித்தாந்த வடிவில் இந்திய சமூகத்தைப் பீடிக்க ஆரம்பித்ததோ, ஆட்சி செய்ய வர்ணம் என்பது முதன்மையானது என்ற நிலை தோன்றியதோ, அப்போதுதான் சமூகத்தில் சில குலங்களும் சில வம்சங்கள் மட்டுமே ஆட்சி செய்ய உரிமை உண்டு என்ற நிலை ஏற்பட்டது. பார்ப்பனர் மற்றும் சத்திரியர் என்ற இரண்டு வர்ணங்கள் மட்டுமே ஆட்சி செய்யும் உரிமை உடையவை என்று பார்ப்பனர்களால் எழுதப்பட்ட தர்ம சாத்திரங்கள் அறிவித்தன.

இந்திய வரலாற்றில் வர்ண மேலாக்கமும் வர்ண கீழாக்கமும் தொடர்ந்து நடந்து வந்துள்ளன. நிச்சயமாக அவை எப்போதுமோ ஒரு கெட்டிபட்ட தன்மையில் இருந்தது இல்லை. பார்ப்பனியத்துடன் கைகோர்த்துக்கொண்டு அவர்களின் துணையுடன் சூத்திர அரசர்கள் தங்களை தர்ம சாஸ்திரங்கள் படி ஆட்சி செய்ய பார்ப்பனர்களுக்கு பெரிய அளவு நில மானியங்களையும், வரிச்சலுகைகளையும் கொடுத்து தங்களை சத்திரிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று வர்ண மேல்நிலையாக்கம் செய்து கொண்டிருக்கின்றார்கள். அதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன. எல்லோருக்கும் தெரிந்த ஒன்று சத்திரபதி சிவாஜி. அவர் தன்னை அரசராக மகுடம் சூட்டிக் கொண்டதைப் பார்ப்பனர்கள் ஏற்க மறுத்தனர். சிவாஜி ஒரு சத்திரியர் வகுப்பைச் சார்ந்தவர் கிடையாது என்றும், அவர் ஒரு சூத்திரர் அல்லாத தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர் என்றும் பார்ப்பனர்கள் உட்பட 96 மராத்தி உயர்குடியினர் போர்க்கொடி தூக்கினர். மகாராஷ்டிராவில் உள்ள எந்தப் பார்ப்பனனும் சிவாஜி பதவியேற்கும் போது மதச் சடங்குகள் செய்யத் தயாராக இல்லை. எனவே சிவாஜி காசியில் இருந்து காகபட்டர் என்பவரை வரவழைத்து அவருக்குப் பெரும் பொருள் கொடுத்து வேதமுறைப்படி சடங்குகள் செய்ய வைத்து மகுடம் சூட்டிக்கொண்டார்.

அதே போல அபு மலைக்கு அருகில் இருந்த பின்மால் என்ற இடத்தை ஆட்சி செய்துவந்த பிரகதிகாரகள் சூத்திர மூலத்தில் இருந்து வந்தவர்கள் என்று கருதப்படுகின்றனர். அவர்களை இராட்டிர கூடர்கள் வாயில் காப்போன் என்று இழிவுபடுத்தச் செய்தனர். இதனால் பிரதிகார அரசவை இராசசேகரன் என்ற புலவருக்கு ஆதரவளித்தது. அவர் அதற்கு நன்றிக்கடனாக பிரதிகாரர்களை சூரிய வம்ச வழியில் வந்தவர்கள், அதாவது இராமனின் வழி வந்தவர்கள் என்று கால்வழி மரவை உருவாக்கிக் கொடுத்தார். இந்தச் சம்பவம் சிவாஜிக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பே நடந்தது. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கும் ஒவ்வொரு வம்சமும் தன்னை சத்திரிய அந்தஸ்த்துக்கு உயர்த்திக் கொள்ள வரலாறு நெடுகிலும் பார்ப்பனர்களுக்கு பொன்னும், பொருளும் கொட்டிக்கொடுத்து அழுததை நம்மால் பார்க்க முடிகின்றது. பார்ப்பனர்கள் இதைத் தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள கிடைத்த பெரும் பேறாகக் கருதி மேலும் மேலும் வளர்தெடுத்தனர். சந்திர குலத்தில் இருந்து பிறந்தவர்கள், சூரிய குலத்தில் இருந்து பிறந்தவர்கள், புராண கதாபாத்திரங்களின் வம்சாவழியில் பிறந்தவர்கள் என்று கால்வழி மரபுகள் உருவாக்கிக் கொடுத்து அதன் மூலம் சாதியப் படிநிலையில் தன்னை நிரந்தரமாக உயர்நிலையில் தக்க வைத்துக் கொண்டதோடு அதிகார பீடங்களை ஆட்டி வைப்பவர்களாகவும் உயர்த்திக் கொண்டனர். வர்ண அமைப்புக்கு வெளியே வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மற்றும் வெளி நாடுகளில் இருந்து இங்கு வந்து குடியேறியதாகக் கருதப்பட்ட மிலேச்சர்கள் மட்டுமே என்றும் தங்களை வர்ண அமைப்பில் இணைந்துக் கொள்ளவோ, இல்லை மேல்நிலையாக்கம் பெறவோ முடியாமல் தடுக்கப்பட்டனர்.

சாதி என்பது மாறாமல் இருந்தாலும் அது வர்ண அமைப்பில் இருந்த இடம் பார்ப்பனர்களின் துணையுடன் மாறியிருக்கின்றது என்பதையும் அதன் மூலம் சில வம்சங்கள் தங்களை சத்திரிய அந்தஸ்துக்கு உயர்த்தி தர்ம சாஸ்திரங்கள் படி ஆட்சி செய்யும் உரிமையைப் பெற்றனர் என்பதையும் பார்த்தோம். இந்த அடிப்படையில் இருந்துதான் இன்று இந்தியா முழுவதும் பல ஆண்ட பரம்பரைக் கதைகள் உலா வருகின்றன. எப்படி வர்ண அடுக்கில் தன்னை சத்திரியனாக மாற்றிக் கொண்ட சாதிகள் தங்களை மேல்சாதிகள் என்று சொல்லிக் கொண்டனவோ, அதற்கு வழியற்ற சாதிகள் கீழ்சாதிகளாக வர்ண அமைப்புக்கு வெளியே வாழ்க்கை முழுவதும் வர்ண சமூகத்தில் உள்ள அனைத்து சாதிகளுக்கும் அடிமைத்தொழில் செய்து உழைத்தே சாக நிர்பந்திக்கப்பட்டனர்.

தமிழக வரலாற்றில் இப்படி வர்ண அமைப்புக்கு தங்களை மேல்நிலையாக்கம் செய்துகொண்டதற்கான சான்றுகள் வேறு வகையில் கிடைக்கின்றன. சோழர்கள் ஆட்சிக்காலத்தில் ஏறக்குறைய பன்னிரண்டாம் நூற்றாண்டு வாக்கில் தமிழ்நாட்டில் நிலவிய வலங்கை இடங்கைப் போராட்டம் ஒரு மாற்று வழியில் தங்களை மேல்நிலையாக்கம் செய்து கொள்ள முயன்றதைக் காட்டுகின்றது. இது பார்ப்பனரல்லாத, வெள்ளாளர்கள் அல்லாத சமூக பிரிவுகள் ஆகும். இதில் வலங்கைப் பிரிவினர் இடங்கைப் பிரிவினரைவிட மேலானவர்களாக கருதப்பட்டனர். எனவே இடங்கைப் பிரிவினர் வலங்கைப் பிரிவுக்கு மாறும் நிகழ்வுகளும் நடந்தன. இதில் வலங்கைப் பிரிவில் பறையர் உட்பட்ட 96 குலங்களும், இடங்கைப் பிரிவில் பள்ளர் உட்பட 96 குலங்களும் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வலங்கைப் பிரிவில் இருந்த சாதிகள் ஆளும் சாதிகளாகவும், இடங்கைப் பிரிவில் இருந்த சாதிகள் ஆளப்படும் சாதிகளாகவும் இருந்துள்ளன. வலங்கை இடங்கைப் போராட்டம் ஏறக்குறைய 19 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் நடந்துள்ளதற்கான சான்றுகள் கிடைக்கின்றன. இதில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயம் பள்ளர் சாதி இடங்கைப் பிரிவில் இருந்ததுதான். இன்று கிருஷ்ணசாமி வகையறாக்கள் சொல்வதுபோல அவர்கள் எப்போது ஆண்ட பரம்பரையாக இருந்தனர் என்பதை வரலாற்று ஆய்வுகளைக் கொண்டு நிரூபிக்க முடியாது என்பதுதான் உண்மை. வேண்டுமென்றால் ஏதாவது புராணக் கதைகளை புனைந்து அதில் வேண்டும் என்றால் ஆண்ட பரம்பரையாக வாழ்ந்துகொள்ளலாம்.

அப்படியே ஒரு காலத்தில் இவர்கள் ஆண்ட பரம்பரையாக இருந்தனர் என்பதை ஒப்புக்கொண்டாலும் ஏன் இன்று ஆண்ட பரம்பரையைப் பட்டியல் இனத்தில் வைத்தார்கள் என்பதையும், அதற்கு முன்பே அதாவது சோழர்காலத்தில் ஏன் இடங்கைப் பிரிவில் வைத்தார்கள் என்பதையும் கிருஷ்ணசாமி அவர்கள் விளக்க வேண்டும். ஆண்ட பரம்பரை இன்று பட்டியல் சாதிகள் பிரிவில் சேர்க்கும் சூழ்நிலையைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய மேலாதிக்க சக்தி எது என்பதையும் கிருஷ்ணசாமி ஒரு நேர்மையான மனிதராக இருந்தால் வெளிப்படையாக சொல்ல வேண்டும். பள்ளர் சாதி மக்கள் மட்டும் அல்லாமல் பட்டியல் சாதி பிரிவில் ஏறக்குறைய 76 சாதிகளும் பட்டியல் பழங்குடியினப் பிரிவில் ஏறக்குறைய 36 சாதிகளும் உள்ளன. இவர்களை எல்லாம் தாழ்த்தப்பட்ட மக்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும் முத்திரை குத்தி, வர்ண அமைப்புக்கு வெளியே விரட்டியடித்த அந்த அயோக்கியர்கள் யார் என்பதை பள்ளர் சாதி மக்களின் இழிவைப் போக்க அவதாரம் எடுத்த கிருஷ்ணசாமி வெளிப்படையாக சொல்லவேண்டும்.

வர்ணங்களும் சாதிகளும் பார்ப்பனர்கள் தங்களின் மேலாண்மையை நிலைநாட்ட ஏற்படுத்திய ஒன்று என்பதை பார்ப்பன வரலாற்று ஆசிரியர்கள் உட்பட அனைவருமே ஏற்றுக்கொள்கின்றனர். வர்ண அடுக்கில் மேல்நிலைக்கு செல்வதும், கீழ் நிலைக்குச் செல்வதும் வரலாற்றில் தொடர்ந்து நடந்துதான் வந்திருக்கின்றது. ஆனால் அது எப்போதுமே பார்ப்பனியத்தின் துணையில்லாமல் நடந்ததில்லை. எந்தச் சாதிகள் எல்லாம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்ததோ, இல்லை எந்தச் சாதி எல்லாம் ஏற்கெனவே ஆட்சி அதிகாரத்தில் இருந்ததோ அந்தச் சாதிகள் எல்லாம் தர்ம சாஸ்திரங்களுக்குக் கட்டுப்பட்டுப் பார்ப்பன மேலாண்மைக்குக் கட்டுப்பட்டு, தங்களை சத்திரியர்களாக மாற்றிக்கொண்டனர். ஆனால் மிக எளிய மக்களாக, விவசாயக் கூலிகளாக, காடுகளில் வாழ்ந்த மக்கள் அனைவரும் நிரந்தரமாக வர்ண அமைப்புக்கு வெளியே பஞ்சமர்கள் என்றும், தாழ்த்தப்பட்ட மக்கள் என்றும் தள்ளிவைக்கப்பட்டனர். இன்னும் பலர் பார்ப்பானின் வைப்பாட்டி மகன் (சூத்திரன்) என்ற இழிபட்டத்துடன் வர்ண அமைப்புக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

இதில் சமீப காலத்தில் சாதிய அமைப்பில் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்த நாடார்கள் இன்று தங்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலிலும் இணைத்துக் கொண்டுள்ளார்கள். ஆனால் இதனால் அவர்கள் அடைந்த பலன் என்ன? பொருளாதார நிலையில் ஏற்பட்ட உயர்வை மட்டுமே வைத்துக்கொண்டு நாடார்கள் சமூக அங்கீகாரம் பெற்றுவிட்டார்கள் என்று சொல்ல முடியுமா? வர்ண அமைப்புக்கு வெளியே இருந்தவரையில் இல்லாத இழிவான பட்டமான பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்ற பட்டத்தைச் சுமந்துகொண்டல்லவா இன்று அவர்கள் உட்பட எல்லா பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட சூத்திர சாதி மக்களும் இருக்கின்றார்கள். இன இழிவு நீங்க வேண்டும் என்று நினைப்பதுதான் மானமுள்ள மனிதர்களின் செயல்பாடாக இருக்க முடியும். எனக்குப் பதவியும், பொருளாதார நிலையும் வந்தால் போதும், அதற்காக பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்று அழைப்பதை நாங்கள் முழுமனதுடன் அங்கீகரிக்கின்றோம் என்று சொல்வது வெட்கக்கேடு அல்லவா?.

இன்று சூத்திரன் என்ற பட்டத்துடன் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்குத் தங்களின் இன இழிவு பற்றிய எந்தவித உணர்வும் அற்று மானங்கெட்ட நிலையில், ஈனங்கெட்ட நிலையில் பார்ப்பானுக்கும் பார்ப்பனியத்துக்கும் அடிமையாகி வாழ்கின்றனர் என்பதற்காக அதை எந்த ஒரு சுயமரியாதையும், தன்மானமும் உள்ள மனிதனும் ஒப்புக்கொள்ள முடியுமா? 'பள்ளர் என்ற பட்டம் தேவையில்லை, எங்களை தேவேந்திரகுல வேளாளர்கள் என்று அழைக்கவேண்டும்' என்று கிருஷ்ணசாமி சொல்வது எவ்வளவு இழிவான நிலைப்பாடு? பள்ளர் என்ற சாதியப் பட்டத்தைவிட தேவேந்திர குலம் என்று அழைப்பது பார்ப்பனியத்தை நக்கிப்பிழைக்கும் செயலா இல்லையா?. தேவேந்திரன் என்றால் தேவர்களுக்கு எல்லாம் வேந்தன் இந்திரன் என்று பொருள். இவன் திருமணமாகாமலேயே இந்திராணி என்ற இந்திர லோக விபச்சாரியை வைத்திருந்தவன். அது மட்டும் அல்லாமல் கவுதம முனிவரின் பொண்டாட்டி அகலிகையை ஏமாற்றி பாலியல்வன்முறை செய்ய இந்திரனும் அவன் நண்பன் சந்திரனும் திட்டம் தீட்டி, கோழியாக மாறிய இந்திரன் கூரைமேல் ஏறி, கோழி போல கூவ, விடிந்துவிட்டது என்று எண்ணி கவுதம முனிவன் வெளியே சென்ற சமயத்தில், அகலிகையை ஏமாற்றி, பாலியல் வன்முறை செய்த பொம்பளப் பொறுக்கி. இவன் வம்சா வழியில் வந்தவர்கள் என்றுதான் இன்று கிருஷ்ணசாமி போன்றவர்கள் சொல்லி பெருமைப்பட நினைக்கின்றார்கள். இது அவமானமாக இவருக்குத் தெரியவில்லை. ஆனால் பள்ளர் சாதியைச் சேர்ந்த மக்கள் சிலர் மலம் அள்ளுகின்றார்கள் என்று உண்மையைச் சொன்னால் மட்டும் அவருக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருகின்றது.

உண்மையில் கிருஷ்ணசாமி நேர்மையான மனிதராக இருந்தால் எந்தப் பார்ப்பனியம் தங்களை தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்லி முத்திரை குத்தி அசிங்கப்படுத்தியதோ அந்தப் பார்ப்பனியத்தை எதிர்த்துப் போராட கிளம்பியிருக்க வேண்டும். தங்கள் மீது திணிக்கப்பட்ட பஞ்சமன் என்ற பட்டத்தை உடைத்தெறிய இந்து மதத்தில் இருந்து வெளியேற முயற்சி செய்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு யாரால் தங்கள் சமூகம் இந்த நிலைக்கு தள்ளப்பட்டதோ அவர்களின் காலடியில் போய் விழுவது மானமுள்ள மனிதர்களின் செயலாகுமா? இங்கே திராவிட இயக்கங்கள் இல்லை என்றால் கிருஷ்ணசாமி போன்றவர்கள் படித்து மருத்துவர் ஆகி இருக்க முடியுமா? அப்படிப்பட்ட சூழ்நிலையைத் தமிழ்நாட்டில் போராடி பெற்றுக் கொடுத்த திராவிட இயக்கங்களையும் அதன் கொள்கைகளையும் அழிக்கும் நன்றிகெட்ட தனத்தை செய்வது இழிவான செயலாகாதா?.

கர்நாடகாவில் ஆதிக்க சாதியாக இருக்கும் லிங்காயத்துக்கள் தங்களை இந்துமதத்தில் இருந்து விடுவிக்கச் சொல்லி கடுமையான போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். இத்தனைக்கும் அங்கே லிங்காயத்துக்கள் கர்நாடகாவில் ஆதிக்க சாதி. பெருபான்மை இடங்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படி இருக்கும் போதும் தங்களை தனி ஒரு பிரிவாக அங்கீகரிக்க வேண்டும் என்று போராடுகின்றனர். சூத்திரப் பட்டத்தை ஏற்க மறுத்து இந்து மதத்தில் இருந்து லிங்காயத்துக்கள் வெளியேற முற்படும் போது பஞ்சமன் என்ற பட்டத்தை சுமந்துகொண்டு இருக்கும் பள்ளர் சாதி மக்கள் இயற்கையாகவே அதில் இருந்து வெளியேறும் போராட்டத்தை முன் எடுப்பதுதானே நியாயமானதாக இருக்க முடியும். அப்படி செய்யாமல் தங்களுக்குப் பார்ப்பானின் வைப்பாட்டி மகன் பட்டம் தான் (சூத்திரன்) வேண்டும் என்று அடம் பிடிப்பது எப்படி சரியானதாக இருக்க முடியும். சூடு சுரணை இல்லாத பிழைப்புவாதிகளின், பார்ப்பன அடிவருடிகளின் கோரிக்கையை அல்லவா கிருஷ்ணசாமி முன் எடுக்கின்றார்.

நமக்கு ஏற்படும் சந்தேகமெல்லாம் தங்களை ஆண்ட பரம்பரை என்று சொல்லும் கிருஷ்ணசாமி எதற்காக ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை எதிர்த்தார் என்பதுதான். எல்லா ஆண்ட பரம்பரைகளும் அதை ஆதரித்த போது எதற்காக கிருஷ்ணசாமிக்கு மட்டும் கோபம் வரவேண்டும்? .ஜல்லிக்கட்டை ஆதரிக்கும் நபர்களின் வீட்டு பிள்ளைகள் எல்லாம் படித்து வெளிநாடுகளுக்குப் போகட்டும். நாங்கள் மட்டும் இங்கேயே மாடு மேய்த்துக் கொண்டிருக்கின்றோம்' என்று ஏன் மனம் புழுங்க வேண்டும்? இப்போது கூட சேரி பிகேவியர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக கமல் மற்றும் காயத்ரி ரகுராமுக்கு 100 கோடி கேட்டு ஏன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்? சேரி மக்களைப் பற்றி ஆண்ட பரம்பரைக்கு என்ன கவலை வந்தது? ஒரு பக்கம் தன்னை தலித்துக்களின் தோழனாக காட்டிக்கொள்ள முற்படும் கிருஷ்ணசாமி மற்றொரு பக்கம் அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கின்றார். மாட்டுக்கறி தடையை ஆதரிக்கின்றார், நீட் நுழைவுத்தேர்வை ஆதரிக்கின்றார். இதை எப்படி எடுத்துக்கொள்வது? பிழைப்புவாதத்தால் உந்தப்பட்டு சுய புத்தியை இழந்து, தான் மட்டும் கீழ்நிலைக்குச் செல்லாமல் தன் சாதி மக்கள் அனைவரையும் பார்ப்பனியம் என்ற படுகுழியில் தள்ளப் பார்க்கின்றார்.

கொடியன்குளம் கலவரம், பரமக்குடி துப்பாக்கிச்சூடு, உடுமலைபேட்டை சங்கர் படுகொலை என தொடர்ச்சியாக பள்ளர் சாதி மக்கள் மீது ஆதிக்க சாதிகள் அடக்கு முறையைக் கையாண்ட போது தமிழகத்தில் இருந்த பெரியாரிய அமைப்புகளும், மார்க்சிய, அம்பேத்காரிய அமைப்புகளும்தான் குரல் கொடுத்தன. தவிர இங்கிருக்கும் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி போன்றவை குரல் கொடுக்கவில்லை. இது எல்லாம் கிருஷ்ணசாமிக்குத் தெரியாத ஒன்றல்ல. ஆனால் இன்று கொஞ்சம் கூட சுயமரியாதை உணர்வும், தன்மான உணர்வும் இல்லாமல் பல நூற்றாண்டுகாலமாக தமிழகத்தில் உருவாக்கி வளர்க்கப்பட்ட பார்ப்பன எதிர்ப்பு மரபை ஒழித்துக்கட்ட, யாரால் தான் தாழ்த்தப்பட்டவன் என்று சமுகத்தில் ஒதுக்கப்பட்டோமோ அந்தப் பார்ப்பனிய சக்திகளிடமே கிருஷ்ணசாமி சரணடைந்திருப்பது உள்ளபடியே கிருஷ்ணசாமி ஒரு அப்பட்டமான தமிழினத் துரோகி என்பதைத்தான் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

- செ.கார்கி