பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஐக அரசு பதவி ஏற்றதிலிருந்தே கார்ப்பரேட்டுகளின் அந்நிய நேரடி மூலதனத்திற்காக பல நாடுகளுக்கு தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பதவி ஏற்றவுடன் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு எந்த தடையும் இருக்காது என்றும் குறிப்பாக சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது எளிமையாக்கப்படும் என்றும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அப்போது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி ஏற்ற பிரகாஷ் ஜாவேத் தனது அமைச்சகம் என்றுமே சுற்றுச்சூழல் அனுமதியை முன்வைத்து தொழில் வளர்ச்சிக்கு தடை விதிக்காது என்று பத்திரிகையாளர்களிடம் பகிரங்கமாக பிரகடனப்படுத்தினார். இதன் மூலம் சுற்றுச்சூழல் அமைச்சகமே சுற்றுச்சூழலுக்கு எதிராக செயல்படும் என்பதை பூடகமாக பாஜக அரசு அறிவித்தது. இவ்வாறு தொடங்கிய மோடி அரசின் பயணம் 30 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குள் வாழும் நாட்டில் அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது குறித்து எந்த அக்கறையுமின்றி அந்நிய நேரடி மூலதனம் ஒன்றை மட்டுமே ஈர்ப்பதை குறி வைத்து மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, துhய்மை இந்தியா, ஸ்கில் இந்தியா உள்ளிட்டு பல திட்டங்களை முன் வைத்து வருகிறது. இந்த வரிசையில் தற்போது கொண்டு வரப்பட உள்ள தேசிய அளவிலான திட்டம் தான் சாகர் மாலா திட்டம். சாகர் மாலா திட்டம் இது வரை இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவிலான மிகப்பிரம்மாண்டமான திட்டமாகும்.
சாகர் மாலா திட்டம் - நோக்கமும் பின்னணியும்
• சாகர் மாலா திட்டம் கடந்த பிரதமர் வாஜ்பாயின் ஆட்சி காலத்தில் (2003ல்) முன்மொழியப்பட்ட திட்டமாகும். இத்திட்டத்தை அமல்படுத்த சாகர் மாலா வளர்ச்சிக் கம்பெனியாக உருவாக்கப்பட்டு அதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கப்பட்டு பின்னர்,அது இந்தியக் கம்பெனிச் சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ளது.
• நாட்டின் 7500 கிமீ நீளமுள்ள கடற்கரையையும் 14,500 கிமீ நீளமுள்ள உள்நாட்டு நீர் வழிகளையும் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப சரக்கு போக்குவரத்திற்கானதாக மட்டும் முழுமையாக மாற்றுவதே திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும்.
சரக்கு போக்குவரத்திற்காக மட்டுமே சாகர் மாலா
• இதற்காக முதல் கட்டமாக 1000 கோடி முதலீட்டில் நாட்டிலுள்ள 12 துறைமுகங்களையும் 1208 தீவுகளையும் சரக்கு போக்குவரத்திற்கு ஏற்ப அதி நவீனப்படுத்துவது, அத்துடன் 189 கலங்கரை விளக்கங்களையும் நவீனப்படுத்துவது. குறிப்பாக அரசு கூறும் காரணத்தின் படி, சீனாவின் துறைமுகங்களின் பங்களிப்பு 24 விழுக்காடும் அமெரிக்காவின் பங்களிப்பு 7 விழுக்காடும் நெதர்லேந்து 42 விழுக்காடும் அந்த நாடுகளின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கப்படுகிறது. எனவே அந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவாக (0, 3 விழுக்காடு) இந்தியத் துறைமுகங்களினால் சரக்கு போக்குவரத்து கையாளப்படுகிறது. எனவே அதை அதிகரிப்பதையே முதன்மையான நோக்கமாக கொண்டு இத்திட்டம் அமல் படுத்தப்படுகிறது, கூடுதலாக 8 துறைமுகங்கள் அமைக்கப்பட உள்ளன.
• மேலும் சாலை சரக்கு போக்குவரத்தின் மூலமாக 6 விழுக்காடும் ரயில் சரக்கு போக்குவரத்தில் 9 விழுக்காடும் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கப்படுகிறது, இவற்றை ஒப்பிடும் போது கடல் மற்றும் நீர் வழி சரக்கு போக்குவரத்து என்பது மிகக்குறைவாகவே நடைபெறுகிறது. எனவே இந்தியாவின் கடல் மற்றும் உள்நாட்டு நீர்வழிகளை சரக்கு போக்குவரத்திற்கானதாக முழுமையானதாக மாற்றும் நோக்கத்தை மட்டுமே கொண்டுள்ளது இத்திட்டம் என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது. சாகர்மாலா திட்டமே துறைமுகங்களையும் தீவுகளையும் சரக்கு போக்குவரத்திற்காக நவீனப்படுத்துவது, துறைமுகம் சார்ந்த தொழில் வளர்ச்சி மற்றும் (சாலை மற்றும்) ரயில் போக்குவரத்து இணைப்பு என சரக்கு போக்குவரத்திற்கானதாக மையப்படுத்தப்பட்டுள்ளது.
• சரக்கு போக்குவரத்திற்காக நாடு முழுவதும் உள்ள துறைமுகங்கள் ஆழப்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் பெரிய கப்பல்கள் வந்து செல்ல வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதே போல உள்நாட்டு நதிகளிலும் அகழ்வுப் பணிகள் பிரம்மாண்டமான அளவில் மேற்கொள்ளப்பட உள்ளன.
• உள்நாட்டு நீர் வழி சரக்கு போக்குவரத்திற்கானதாக 101 நதிகள் அரசினால் பிரகடனப்படுத்தப்பட உள்ளன. இதில் 55 நதிகளுக்கு கப்பல் போக்குவரத்து துறை சிறப்பு ஆலோசகர்களை நியமித்துள்ளது. விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டவுடன் அவசியமான அனுமதிகள் உடனடியாக வழங்கப்பட உள்ளன.
• நாடு முழுவதும் இத்திட்டத்தின்படி துறைமுகங்களின் மூலம் இணைக்கப்படவுள்ள 13 கடற்கரை மாநிலங்களில் ஒடிசா மாநிலம் முதலில் இத்திட்டத்தை அமல்படுத்த முன்வந்துள்ளது. அம்மாநில அரசு திட்டத்தை விரைவில் அமல்படுத்திட சிறப்பு நோக்கு அமைப்பை உருவாக்கியுள்ளது.
• குறிப்பாக கடற்கரையையொட்டி 12 ஸ்மார்ட் நகரங்கள் புதிததாக அமைக்கப்பட உள்ளன, அதற்காக 50,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, அவை இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு சரக்கு போக்குவரத்து மேலும் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.
• இத்திட்டத்திற்கு ஆண்டிற்கு 35000 கோடியிலிருந்து 40,000 கோடி வரை முதலீடாக கொண்டு செயல்படவுள்ளது. திட்ட காலம் முழுமைக்கும் மொத்தம் 7 லட்சம் கோடி வரை முதலீடு செய்யப்பட உள்ளது. இப்பெரு முதலீடு தனியார் மற்றும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளிடமிருந்து திரட்டப்படுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
• இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் 110 பில்லியன் ரூபாய் (1 பில்லியன் ™= 100 கோடி ரூபாய் ) அளவுக்கு வரும் 2020 ற்குள் சரக்கு ஏற்றுமதியாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
• முதலில் 20 ஆண்டுகளில் முடிப்பது எனத் திட்டமிடப்பட்டு அது 10 ஆண்டுகளாக குறைக்கப்பட்டு இறுதியில் 5 ஆண்டுகளில் முடிக்கப்பட வேண்டும் என்று கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்காரியினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
• இத்திட்டத்தின் மூலம் 1 கோடி பேருக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
• இத்திட்டத்தை சிறப்பாக அமல்படுத்திட ஒரு வலிமையான அமைப்பு உருவாக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக இத்திட்டத்தை அமல்படுத்திடும் தலைமை அமைப்பாக கடந்த 2015 ல் தேசிய சாகர் மாலா உச்சநிலை கமிட்டி (Sagar Mala Apex Committee) அமைக்கப்பட்டுளளது, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்கள் இக்கமிட்டியின் தலைவர்களாக இருப்பார்கள். இதன் கீழ் சாகர் மாலா வளர்ச்சிக் கம்பெனியாக இந்தியக் கம்பெனிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ரயில்வே போக்குவரத்துடன் இணைப்பு
• கம்பெனி சட்டத்தின் கீழ் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் இந்தியன் துறைமுக ரயில் கார்ப்பரேசன் லிமிடெட் (Indian Port Rail Corporation Limited–IPRC) உருவாக்கப்பட்டு அதன் மூலம் ரயில் போக்குவரத்துடன் பெரிய மற்றும் முக்கிய துறைமுகங்கள் இணைக்கப்பட உள்ளன. இத்துறைமுக ரயில் கார்ப்பரேசனின் தொடக்க முதலீடாக 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 11 துறைமுகங்களின் பங்குகளுடன் இக்கார்ப்பரேசன் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ல் கார்ப்பரேசன் துறைமுகங்களுடன் தொடர்பு கொண்ட 23 திட்டங்கள் செயல்படுத்தப்படத் தொடங்கின.
• 29,500 கோடி முதலீட்டில் 26 ரயில் பாதைகள் போடப்பட்டு அவை துறைமுகங்களுடன் இணைக்கப்படுகின்றன.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வுகள் உள்பட எந்த ஆய்வுகளுமின்றி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது
• சாகர் மாலா அமல்படுத்தப்பட்டவுடன் 7,000 கோடிக்கு நிலக்கரி சரக்கு போக்குவரத்து கையாளப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
• சாகர் மாலா குறித்து தேசிய கண்ணோட்டத் திட்டத்தின் ஆவணம் கடந்த ஏப்ரலில் வெளியிடப்பட்டுள்ளது.
• சாகர் மாலா கம்பெனி, திட்டத்திற்கான நிதியை திரட்டும் முக்கியமாக அரசிடமிருந்தும் பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்தும் நிதியை திரட்டும்.
• மாநில அளவில் முதல்வர்களின் தலைமையில் சாகர் மாலா கமிட்டிகள் அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளின்அதிகாரிகளின் ஒத்துழைப்பு மற்றும் கூட்டுறவுடன் இயங்கும்.
• தனித்திட்டங்களுக்காக சிறப்பு நோக்கு அமைப்புகள் (Special Purpose vehicles –SPV) உருவாக்கப்பட்டு திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உதவும்.
• இறுதியாக சாகர் மாலா திட்டத்தின் கீழ் வரும் 150 திட்டங்களுக்கும் அதி விரைவான சுற்றுச்சூழல் அனுமதிஅளிக்கப்படும். அதாவது சாகர் மாலா கம்பெனின் திட்டங்களுக்கு அனுமதி வேண்டிய மனுக்கள் பெறப்பட்டவுடன் உடனடியாக அனுமதி அளிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக கப்பல் போக்குவரத்து துறை ,சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகங்கள் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
• இதுவரை சாகர் மாலாவின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள 6 துறைமுகங்கள் பின்வருமாறு கேரளாவில் விழிஞ்சம் (அதானிக்கு அளிக்கப்பட உள்ளது) தமிழகத்தில் குளச்சல் துறைமுகம், மஹாராஸ்டிரத்தில் வதவான் துறைமுகம், கர்நாடகத்தில் தடாடி துறைமுகம், ஆந்திராவில் மச்சிலிப்பட்டிணம் துறைமுகம் மற்றும் மேற்கு வங்கத்தில் சாகர் துறைமுகம் ஆகியன.
சாகர் மாலாவினால் யார் பயனடைவார்கள்?
• மோடி அரசினால் உருவாக்கப்படும் சாகர் மாலா திட்டம் உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும், அவர்கள் பாஷையில் கூறவேண்டுமானால் மோடி கார்ப்பரேட்டுகளுக்கு அளித்த பெருங்கொடையாகும். கார்ப்பரேட்டுகளின் பெருங்கனவு இதன்மூலம் நிறைவேறப்போகிறது. சுருக்கமாகக் கூறினால் என்ன நோக்கத்திற்காக மோடியின் ஆட்சியை கார்ப்பரேட்டுகள் கொண்டு வந்தார்களோ? அது நிறைவேறப்போகிறது.
• மோடியின் நெருங்கிய நண்பர் அதானியின் கார்ப்பரேட் குழுமம் குஜராத்தில் 6456 ஏக்கர் நிலத்தை கொண்ட கடற்கரை சிறப்பு மண்டலத்தை கொண்டுள்ளது, இந்நிலத்தை தனது அரசியல் செல்வாக்கினை கொண்டு ஏக்கர் ஒன்றுக்கு 1 ரூபாய் என்ற வீதத்தில் பெற்றார் என்பதை இங்கு நினைவுப்படுத்திக் கொள்ளவும். அதே அதானிக்கென சாகர் மாலா திட்டம் கொண்டு வரப்படுகிறது. ஏற்கனவே சில தீவுகளையும் ஆஸ்திரேலியாவில் சில சுரங்கங்களையும் கொண்டுள்ள அதானி தற்போது இந்தியாவின் கடற்கரை நிலங்களில் பெரும்பகுதியை கைப்பற்றப்போகிறார் என்பது உறுதியான விசயம். அதானியின் கார்ப்பரேட் குழுமம் கடந்த ஆண்டை விட 5 விழுக்காடு அதிகமான அளவில் அதாவது 151.5 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டது. இக்கம்பெனியின் துறைமுகங்கள் தாம்ரா மற்றும் விசாகப்பட்டினம் மற்றும் காட்டுபள்ளி ஆகிய கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இதன் அமைவிடத்தினால் அதே கால கட்டத்தில் 23 விழுக்காடு சரக்கு போக்குவரத்து அதிகரித்துகொண்டது.
• அதானி குழுமம் 2015-16ல் 7255 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. இச்சூழலில் சாகர் மாலா திட்டம் அதானிக்கு மேலும் கொள்ளை லாபம் ஈட்டவும் வழி வகுக்கும்.
• அடுத்ததாக மோடியின் இன்னொரு நெருங்கிய நண்பரும் கார்ப்பரேட் போலி சாமியாருமான ராம்தேவ். சாதாரண யோகா ஆசிரியராக சைக்கிளில் வாழ்க்கையைத் தொடங்கிய ராம்தேவ் இன்று இந்திய உணவுபொருள் சந்தையின் மூன்றில் ஒரு பகுதியை பதஞ்சலி கார்ப்பரேட் மூலம் தனது கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். சில தீவுகளையே வாங்கியுள்ள ராம்தேவ்வை இனி சாகர்மாலா திட்டம் உலக கார்ப்பரேட்டாக மாற்றப்போகிறது. இது எல்லாம் மோடியின் நெருகிய நண்பர் என்பதால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது என்பதை இங்கு சொல்லவும் வேண்டுமோ?
• இதனைத் தொடர்ந்து சரக்கு போக்குவரத்தில் கட்டுமாணத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் லார்சன் மற்றும் டர்போ கம்பெனி மற்றும் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வரும் எர்த் மூவர்ஸ் ஆகிய கம்பெனிகள் பெரும் லாபம் ஈட்டவும் சாகர்மாலா கைகொடுக்கும்.
• இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள தனியார் துறைமுகங்கள் நிலக்கரி ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை பெரும் லாபம் ஈட்ட வழி வகுக்கும்.
மீனவர்களுக்கும் கடற்கரை மற்றும் உள்நாட்டு நீர் நிலைகளுக்கும் மீள முடியாத பேரழிவு
திட்டத்தின் முதன்மை நோக்கமே கடற்கரைகளையும் உள்நாட்டு நீர் நிலைகளையும் சரக்கு போக்குவரத்திற்கானதாக மாற்றுவது ஆகும். முதன்மை நோக்கமே நிகழப்போகும் பேரழிவை உறுதிப்படுத்துகிறது, திட்டத்தில் கடல் சூழல், கடற்கரைச்சூழல் மற்றும் உள்நாட்டு நீர் நிலைகள் சூழல் அமைப்புகள் குறித்து ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லை என்பது மிகவும் அதிர்ச்சியான விசயம். இதன் உள்ளடக்கமே திட்டவட்டமான அழிவுப்பூர்வமான வளர்ச்சி பாதையாகும்.
தங்க முலாம் பூசிய உயிர் பறிக்கும் குத்தீட்டி
சாகர்மாலா திட்டத்தின் பாதிப்புகள் குறித்து வேறு எங்கும் தேட வேண்டாம். மத்திய அரசின் கப்பல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சாகர்மாலா குறித்த தேசிய கண்ணோட்டம் திட்ட ஆவணத்தில் (Sagarmala / National perspective plan, Apr 2016) அவர்களே கூறுகின்றனர். கடற்கரை சமூகத்தினரின் வளர்ச்சி என்ற தலைப்பில் இறுதி அத்தியாயத்தை (ஆவணம் பக்கம் 23-283 வரை) இணைத்துள்ளனர். இதில் சாகர்மாலா திட்டத்தினால் பாதிக்கப்படுவார்கள் என்பதை வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்டுள்ளது. திட்டத்தினால் ஏற்படும் பாதிப்பிற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மறுவாழ்வு அழிப்பதற்கு நிதி அமைப்பு ஒன்றை ஏற்படுத்திப்போவதாக அறிவித்துள்ள திட்டத்தை தவிர ஆவணத்தில் வேறு எதுவும் இல்லை.
சாகர்மாலா தேசிய கண்ணோட்டம் திட்ட ஆவணத்தில் துறைமுகத்தை நவீனப்படுத்துவது துறைமுகத்தை சார்ந்த தொழிற் வளர்ச்சி, சாலை மற்றும் ரயில் போக்குவரத்துடன் இணைப்பு என திட்டங்கள் ஒவ்வொரு அத்தியாயமாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் இறுதி அத்தியாயமாக தவிர்க்க முடியாத நிலையிலும் பெயரளவிலும் கடற்கரை சமூகத்தினரின் வளர்ச்சி இணைக்கப்பட்டுள்ளது. கடற்கரை சமூகத்தினரின் வளர்ச்சி என்ற பெயரில் உள்ள அத்தியாயத்திலும் முன்னால் கூறப்பட்டுள்ள 3 திட்டங்களின் ( துறைமுகம் நவீனப்படுத்துதல் துறைமுகம் சார்ந்த தொழில் வளர்ச்சி மற்றும் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து இணைப்பு) ஏற்படவுள்ள பயன்களே மீண்டும் கூறப்பட்டுள்ளன என்பது மிகவும் ஏமாற்றமளிப்பாக உள்ளது.
இறுதி அத்தியாயத்தில் என்னதான் கூறப்பட்டுள்ளது? முதலாவதாக தேசிய அளவில் மீனவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் சமூக பொருளாதார நிலையை புள்ளி விபரங்களுடன் கூறுகிறது. அந்த அத்தியாயத்தில் கூறுவதாவது;
நாட்டின் 72 கடற்கரை மாவட்டங்களில் 18 விழுக்காடு மக்கள் கடற்கரைகளில் வசிக்கின்றனர். 2010 கடற்கரை மீனவர்கள் கணக்கெடுப்பின் 61 விழுக்காடு கடற்கரை மீனவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கடன்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்கடன்களை திரும்பச் செலுத்த முடியாமல் மீண்டும் மீண்டும் கடன்களை வாங்கி மீள முடியாத கடன் வலைகளில் மூழ்கியுள்ளனர். பெரும்பாலான மீனவர்களின் குடும்பத்தினருக்கு அடிப்படை சுகாதார வசதிகள் கிடையாது. அவர்கள் தொடர்ந்து கல்வி கற்க முடியாதபடி இடை நிற்பவர்களாக உள்ளனர். 88 விழுக்காட்டினருக்குத்தான் மின்வசதி உள்ளது, 27 விழுக்காட்டினருக்குத்தான் சுகாதார வசதிகள் உள்ளன. 58 விழுக்காட்டினருக்கு பஸ் வசதிகள் உள்ளன.
மீனவர்களின் அவல வாழ்வு குறித்து இவ்வளவு துல்லியமான புள்ளிவிபரங்களைக் கூறும் சாகர்மாலா தேசிய கண்ணோட்டத் திட்டம் அவர்களை முழுமையாக அழிக்கப்படபோவது குறித்து மௌனம் சாதிக்கிறது. சாகர்மாலா திட்டத்திற்கு இடையூறாக, பெரும் தடைக்கற்களாக மீனவர்கள் உள்ளனர் என்பதை சொல்லாமல் சொல்கிறது.
இவர்கள் மோசமாக பாதிக்கப்படுவார்கள் என்பதை கிரிட்டிகல் ஸ்டேக் ஹோல்டர்கள் (critical stakeholders) என்ற நாகரீகமான வார்த்தையின் மூலம் ஆவணம் முன்வைக்கிறது. துறைமுகம் கட்டுவதினாலும் அதன் செயல்பாடுகளிலும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இதுவரை ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. துறைமுக வளர்ச்சித் திட்டங்களினால் மறைமுக பாதிப்புகள் என மக்கள் இடம் பெயருதல் , கடற்ரைகள் இழப்பு, கடலுக்கும், கடற்கரைகளுக்கும் செல்ல முடியாத நிலை மற்றும் மோசமான மறுவாழ்வு திட்டங்கள் என ஒரு சிறிய பத்தியில் போகிறபோக்கில் இத்தகைய மிகக் கடுமையான பாதிப்புகள் கூறப்பட்டுள்ளன.
கடல், கடற்கரை மற்றும் சுற்றுச்சூழல் மீதான உள்நாட்டு நீர்நிலைகளின் மீதான திட்டத்தின் சமூக பாதிப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் பரிசிலிக்கப்படுமாம். திட்டங்கள் தொடங்கப்படுவதற்கு முன்னதாக தேவையான அனுமதிகள் வழங்கப்படுமாம்.
இவ்விடத்தில் இதற்கு முரண்பாடாக சுற்றுச்சூழல் அனுமதிகள் தாமதிக்கப்படாமல் அதி விரைவாக அளிக்கப்படும் என்று நிதின் கட்காரி அறிவித்ததை நினைவு கூற வேண்டும்.
ஆவணத்தில் அதுவும் போகிற போக்கில் சாகர்மாலா திட்டம் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பாதிப்புகள் அலசி ஆராயப்பட வேண்டும், அதில் ஏற்படும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்காக எந்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் அதற்குள் திட்டத்திற்காக உச்சஅமைப்பு உருவாக்கப்பட்டு, கம்பெனியும் தொடங்கப்பட்டு, திட்டம் முடுக்கி விடப்பட்டுள்ளது.
தேசிய கண்ணோட்ட திட்ட ஆவணத்தில் தீவுகளை நவீனப்படுத்துவதற்கும் முக்கியமாக வணிகமயமாக்குவதற்கும் கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணையின் கீழுள்ள விதிமுறைகள் இடைஞ்சல்கள் உள்ளதாகவும் கூறுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது (பக்கம் 281). சாகர்மாலா திட்டம் கடல், கடற்கரைகள், கடற்கரை சமூகத்தினர், உள்நாட்டு நீர்நிலைகள் மற்றும் மீனவர்களை தேவையற்றவர்களாகவே கருதுகின்றது. இத்திட்டத்திற்காகவும் மோடியும் கார்ப்பரேட்டுகளும் காணும் பெருங்கனவுகளுக்காகவும் அவர்கள் பலி கொடுக்கப்படுவர்களாகவே உள்ளனர் என்பது ஆவணத்தை மேலோட்டமாக படித்தாலோ புரியவரும்.
சாகர் மாலா திட்டம் ஒரு பேரழிவுக்கான திட்டம் என்று ஏன் கூறுகிறோம்?
1. திட்டத்தின் மைய மற்றும் முதன்மை நோக்கமே கப்பல் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்துவது மட்டும்தான். மற்ற எந்த நோக்கமும் கிடையாது. இதற்காக ரயில் மற்றும் சாலை போக்குவரத்தை துறைமுகங்களுடன் இணைப்பதாகும்.
2. கடற்கரைகள் முழுமையாக துறைமுகங்களின் கீழ் வசப்படுத்தப்பட்டு அவற்றின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும்.
3. கடற்கரைகளில் ஸ்மார்ட் நகரங்கள் மட்டும் அமைக்கப்படும்.
4. சாகர் மாலாவிற்காக லட்சக்கணக்கான கடற்கரை மற்றும் நீர் நிலைகள் மற்றும் நதிகளை ஒட்டியும் கடற்கரை நிலங்களும் விவசாய நிலங்களும் கையகப்படுத்தப்படும்.
5. கடற்கரை கிராமங்கள் மற்றும் நகரங்களில் பாரம்பரியமாக வாழும் மீனவர்கள், உள்நாட்டு நீர் வழித்திட்டங்களையொட்டியுள்ள கிராமங்களில் வாழும் விவசாயிகள் மற்றும் உள்நாட்டு மீனவர்கள் முழுமையாக விரட்டியடிக்கப்படுவார்கள்.
6. கடலிலும் கடற்கரைகளிலும் உள்நாட்டு நீர் நிலைகளிலும் உள்ள சூழல் அமைப்பு நிலக்கரி, இரும்பு உள்ளிட்ட முழுமையாக எண்ணற்ற சரக்குகளின் போக்குவரத்தினால் மீட்க முடியாதபடி நாசமடையும்.
7. இடைவிடாத சரக்கு போக்குவரத்துடன் ஏற்படுத்தும் சூழல் மாசினால் மீன் மற்றும் நீர் வாழ் உயிரினங்கள் மற்றும் தாவர இனங்கள் அழியும் அபாயம் ஏற்படும்.
8. லட்சக்கணக்கான கடற்கரை மீனவர்கள் உள்நாட்டு மீனவர்கள் மற்றும் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழப்பார்கள்.
9. நாடு முழுவதும் கடற்கரை மாநிலங்கள், நதிகள் மற்றும் நீர் நிலைகள் உள்ள மாநிலங்களின் விவசாயம் மற்றும் மீன்பிடி பொருளாதாரம் அடியோடு சீர்குலையும். லட்சக்கணக்கான மீனவர்களும் விவசாயிகளும் இடம் பெயருவதைத்தவிர வேறு வழியில்லாததால் அவர்கள் உள்நாட்டு அகதிகளாக மாறுவதை நோக்கி தள்ளப்படுவார்கள்.
10. சாகர்மாலா தனியார் மற்றும் கார்ப்பரேட்டுகளின் மூலதனத்தை சார்ந்து தொடங்கப்படுவதால் நாட்டின் கடற்கரைகள் மட்டுமின்றி, தீவுகளும் கார்பரேட்டுகளின் கட்டுபாட்டிற்குள் கொண்டு வரப்படும் அபாயம் ஏற்படும்.
11. உலக அளவில் மிகப் பெரிய சுற்றுச்சூழல் அபாயமாக உள்ள கால நிலை மாற்றம் உள்ளது. தற்போதைய துறைமுகம் சார்ந்த வளர்ச்சியினால் தட்பவெப்ப நிலையும் கடலும் மிகவும் சூடாகும். இதனைத் தொடர்ந்து கடல் அமிலமயமாவதும் தவிர்க்க இயலாமல் போகும்.
இன்னும் எத்தனையோ பாதிப்புகளுக்கும் பேரழிவுகளுக்கும் அடிப்படையாக உள்ள சாகர்மாலா திட்டம் கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே கொள்ளை லாபம் அளிக்கும் திட்டம். நமக்கோ சாகர்மாலா சாவு மணி அடிக்கும், மீள முடியாத பேரழிவுத்திட்டம். எனவே சாகர்மாலாவை இறுதி மூச்சுவரை எதிர்த்திட அணி திரள்வோம்.
- சேது ராமலிங்கம்