கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

anti reservation agitation

இந்தியாவில் இட ஒதுக்கீடு முறைக்கு எதிராகப் பேசுபவர்களை மூன்றாக பிரிக்க இயலும்.

Group A. இவர்கள் 'இட ஒதுக்கீட்டை' மட்டும் (மட்டும் என்பது இருமுறை ஒலிக்கின்றது) எப்படியாவது ஒழித்துவிட வேண்டுமென நினைப்பவர்கள். உண்மையில் ஜாதியை ஒழிக்க விருப்பம் இல்லாதவர்கள். இட ஒதுக்கீட்டை ஒழித்தால் ஜாதி ஒழிந்துவிடுமென பொய்ப் பிரச்சாரம் செய்பவர்கள்.

Group B. மேற்கண்ட முதல் குரூப்பின் பொய்ப் பிரச்சாரத்திற்கு பலியாகி இட ஒதுக்கீட்டை ஒழித்தால் ஜாதி ஒழிந்துவிடுமென நினைப்பவர்கள்.

Group C. இவர்கள் பட்டியல் ஜாதி இட ஒதுக்கீட்டை மட்டும் எப்படியாவது காலி செய்துவிட வேண்டுமென நினைப்பவர்கள்.

ஒவ்வொன்றாக தற்போது காண்போம்.

Group A:

இந்த முதல் வகை மனிதர்கள் நேர்மையற்ற இந்துக்கள். பெரும்பாலும் அறிவுஜீவிகளாக தங்களை காட்டிக் கொள்பவர்கள். பத்திரிக்கை, சினிமா போன்ற துறைகளிலும் இருப்பார்கள். மேலும் தங்களை மிகுந்த நல்லவர்கள் போலவும், தேசபக்தி மிகுந்தவர்கள் போலவும் காட்டிக் கொள்வார்கள். அநீதிகளைக் கண்டு கொதிக்கும் மனிதர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் (நடிகர் விசு போல) . பெரும்பாலும் பார்ப்பனர்களாகவும் அல்லது பார்ப்பனர்களை அண்டிப் பிழைக்கும் ஜெயமோகன் போன்றவர்களாகவும் இருப்பர்.

எடுத்துக்காட்டாக இயக்குனர் சங்கர், இயக்குனர் முருகதாஸ், மறைந்த எழுத்தாளர் சுஜாதா , கிழக்கு பதிப்பகம், தினமணி மற்றும் தினமலர் போன்றவற்றில் கட்டுரைகள் எழுதும் பூணூல் அணியும் இந்துக்களும் இந்த வகை என கூறலாம்.

இவர்கள் யாரும் ஜாதியை ஒழிக்க விருப்பம் இல்லாதவர்கள். சரியாக சொல்வோமேயானால் தங்கள் ஜாதி மூலம் சுய பெருமைகளை தேடிக்கொள்பவர்கள். ஜாதிய அடையாளங்களை விரும்பி சுமந்து கொண்டு திரிபவர்கள். அதுவே இந்தியப் பண்பாடு என்றும், அதனை கேள்விக்கு உள்ளாக்குவது 'தேசவிரோதம்' என்றும் சொல்லும் போலி தேசபக்தர்கள். நெற்றியிலும், நடுமண்டை வரையிலும் கலர் கலராக கோடு போட்டுக்கொண்டு, நேர்மை இல்லாமல் பூணூல் அணிந்து கொண்டு சமத்துவம் பேசுபவர்கள்.

இவர்களின் உண்மையான விருப்பம் ஜாதியை ஒழிப்பதல்ல. மாறாக சூத்திரன் மற்றும் ஆதி பௌத்தர்களான பட்டியல் பிரிவு மக்களுக்கு கல்வியைக் கொடுக்கும் இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகளை மட்டும் எப்படியாவது கி.பி 2050 க்குள்ளாவது ஒழித்துவிட வேண்டுமென நினைப்பவர்கள்.

இதற்காக சினிமா உள்ளிட்ட ஊடகங்கள் மூலம் பொய்ப் பிரச்சாரங்களை கிளப்பிவிடுபவர்கள். இவர்களின் பொய் பிரச்சாரங்களின் படி இட ஒதுக்கீட்டை ஒழித்தால் ஜாதி ஒழிந்து விடும்(!?)

இவர்களின் சுயஜாதி அடையாளங்களை கொஞ்சம் கூட மாற்றிக் கொள்ள விரும்பாமல் , பூணூல் உள்ளிட்ட தங்கள் சுய ஜாதி அடையாளங்களை தங்கள் உரிமையாகக் கருதும் கீழ்த்தரமானவர்கள்.

உண்மையில் ஜாதி எவ்வாறு தொடர்கிறது ? அல்லது ஜாதி இத்தனை ஆண்டுகளாக எவ்வாறு தொடர்ந்து வந்துள்ளது?

ஜாதி இட ஒதுக்கீட்டின் காரணமாகவா தொடர்ந்து வந்தது ? ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை ஜாதிச் சான்றிதழ் இருந்ததா? அல்லது பல நூற்றாண்டுகளாக இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் ஏதும் இருந்ததா?

இல்லை.

ஆக, பல்லாயிரம் வருடங்களாக இட ஒதுக்கீடு இல்லை , சாதிச் சான்றிதழ் இல்லை, சலுகைகளும் இல்லை. பின்பு எப்படி ஜாதி தொடர்ந்து வந்துள்ளது?

இதனையே வேறுவிதமாக கேட்போமேயானால் ஜாதியக் கொடுமைகள் எதனால் நடக்கின்றது? கோட்டா முறைகளுக்கும் வன்கொடுமைகளுக்கும் எதாவது சம்பந்தம் உள்ளதா?

*சேலத்தில் உள்ள சிவன் கோவிலுக்குள் தலித் மக்கள் நுழையக் கூடாதென சூத்திர சாதி மக்கள் தடுக்கக் காரணம் கோட்டாவா?

*சங்கர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணம் இட ஒதுக்கீடா?

*தின்னியத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவரின் வாயில் மலத்தைத் திணித்தார்களே... அதற்குக் காரணம் இட ஒதுக்கீடா?

*இட ஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால் பூணூல் அணிவது இழிவானது என்று உணர்ந்து பாரப்பனர்கள் பூணூலைத் துறப்பார்களா?

*இட ஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால் இந்துக்கள் தீண்டாமையை கைவிடுவார்களா?

*இட ஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால் சங்கராச்சாரி அனைவரையும் தொடுவாரா? இந்துக்கள் அனைவரும் சமம் என சங்கர மடம் சமமாக உட்கார வைத்து ஒப்புக்கொள்ளுமா ??

*இந்தியாவில் இட ஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால் அனைத்து சாதிக் கூட்டமைப்பின் தலைமையில் காதல் திருமணங்கள் நடக்குமா??

*வெகு சிலர் மட்டுமே பயன் பெறும் இட ஒதுக்கீட்டை நீக்கிவிட்டால் மயிலாப்பூர் கபாலி கோவிலுக்கு, 'ஆகமம் 'பயின்ற முக்குலத்தோர் ஜாதியைச் சேர்ந்த யாரையாவது அர்ச்சகராக்க விடுவார்களா ?

*இட ஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்திற்கு உச்சிக் குடுமி மன்றம் அனுமதி தான் வழங்குமா??

இப்படி பல கேள்விகளை கேட்டுக்கொண்டே போகலாம். இதற்கான பதில் ஒன்றே ஒன்று தான் ' இட ஒதுக்கீட்டுக்கும் , சாதி தொடர்வதற்கும் (persistence of caste) எந்த சம்பந்தமும் இல்லை, இல்லை, இல்லை.

இட ஒதுக்கீடு சாதியின் அடிப்படையில் வழங்கப்படுகின்றது. ஆனால் சாதி தொடர இட ஒதுக்கீடு காரணம் அல்ல.

உண்மையில் இந்து சமூகத்தின் அகமண முறையின் வழியே அதாவது , ஒரே சாதிக்குள்ளே மட்டும் திருமணம் செய்வதால் அல்லது சாதி மாறி திருமணம் நடந்தால் ஊரைக் கொளுத்துவதால், கொலை செய்வதால் மட்டுமே சாதி தொடர்கிறது.

ஒரு குழந்தையின் சாதி அதன் (இந்து)பெற்றோர் திருமணத்தில் முடிவு செய்யப்படுகிறது. சாதி சான்றிதழ் விண்ணப்பத்தின் போது தாசில்தார் அந்தக் குழந்தையின் பெற்றோர் குறித்து விசாரித்து அதற்கு காகிதத்தால் ஆன சான்றிதழ் மட்டுமே தருகின்றார்.

ஆனால் இந்த குரூப் A, தாசில்தார் தரும் சான்றிதழை ஒழித்துவிட்டால் சாதி ஒழிந்துவிடுமென மோசடி பிராச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்தப் பிரச்சாரம் ஒரு சுய நல பிரச்சாரம் ஆகும். பல்லாயிரம் ஆண்டுகளாக பதவி, படிப்பு ஆகியவற்றை அனுபவித்து வந்த இவர்கள் இட ஒதுக்கீட்டினை ஒழித்துவிட்டு, மீண்டும் அதனை முழுவதும் அனுபவிக்க எத்தனித்து அந்த சுயநலத்தினால் செய்யும் வன்மப் பிரச்சாரமே, இட ஒதுக்கீட்டை ஒழித்தால் சாதி ஒழிந்துவிடுமென்பதாகும்.

இன்னும் தெளிவாகக் கூறுவோமேயானால், இந்தியாவில் சாதி வன்கொடுமைகளுக்கு உள்ளாகும் பலரிடம் 'ஜாதிச் சான்றிதழே இல்லை'. இட ஒதுக்கீடு என்றால் என்னவென்றே தெரியாத கோடிக்கணக்கான மக்கள் தீண்டாமைக்கு உள்ளாகின்றனர். அதே போல வன்கொடுமைகள் செய்யும் ஆதிக்க சாதியினர் பலருக்கும் இட ஒதுக்கீடு என்றால் என்னவென்றே தெரியாது. ஆகவே வன்கொடுமைகளுக்கும் , தீண்டாமைக்கும் காரணம் இந்து மதமும், அதன் கோட்பாடுகளுமே தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவன் இந்துவாக இருக்கும் வரை அவனிடம் அவன் சாதி ஒட்டிக்கொண்டு இருக்கும்.

ஆக, இவ்வாறு சம்பந்தமில்லாமல் சாதி தொடர்வதற்குக் காரணம் இட ஒதுக்கீடு தான் என்று மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் வில்லங்கமானவர்கள் இந்த குரூப் Aவைச் சார்ந்தவர்கள்.

- சாதி என்பது ஒரு தீராத நோய்
- நோய்க்கான காரணம் இந்து மதம் (pathology)
- இட ஒதுக்கீடு என்பது தற்காலிகமாக சிகிச்சை வழங்கும் இடம் (Temprorary shelter)
- சாதிச் சான்றிதழ் என்பது நோயால் பாதிக்கப்பட்டவரின் கேஸ் ஷீட் (case sheet)

ஆனால் இந்த வில்லங்கம் பிடித்தோர் நோய்க்கான காரணத்தை நீக்காமல், அல்லது நீக்க விருப்பம் இல்லாமல் மருத்துவமனைகள் இருப்பதால் தான் நோய்கள் உள்ளன; ஆகவே மருத்துவமனைகளை மூடிவிட்டு கேஸ் ஷீட்டுகளை மட்டும் கிழித்துப் போட்டுவிட்டால் நோயாளிகளே இருக்க மாட்டார்கள் என்பது போன்ற பிரச்சாரம் தான் இவர்களின் பிரச்சாரம்.

அடுத்து குரூப் B:

இவர்களைப் பற்றி பெரிதாக ஏதும் சொல்வதற்கில்லை. குரூப் Aவின் வன்மமான பிரச்சாரத்திற்கு பலியானவர்கள். உண்மையில் விடயம் புரியாதவர்கள். இயக்குனர் சங்கரின் படங்கள் அவர்களுக்கே எதிரானது என்பது தெரியாமலே அதனை ரசித்துப் பார்த்து புல்லரிப்பவர்கள்.

அந்நியன் அம்பி சூத்திரர்களை பந்தாடியபோது அவர் குடுமியுடன் அடிப்பது தங்களைத் தான் என்று புரியாமல் கைதட்டி மகிழ்ந்தவர்கள். மோடியின் ரசிகர்களில் நிறைய பேர் இந்தப் பிரிவில் வருவர்.

குரூப் C:

இந்தியாவில் மிக அதிக சலுகைகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு உயர் பதவிகள் மூலம் பெறுபவர்கள் உயர்சாதி பார்ப்பன மற்றும் பனியா இனத்தைச் சேர்ந்தவர்கள். வரிச்சலுகைகள் , ஊதிய சலுகைகள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்ட சலுகைகள் மூலமும் ஜாதியை ஒட்டிய சமூக மதிப்பினாலும் இவர்கள் சொகுசான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மட்டும் 26,000 கோடி ரூபாயை பணமாக மட்டும் வரிச் சலுகையாக பெற்றுள்ளனர். மேலும் பல நிறுவனங்கள் வரியை கட்ட இயலாது என்று நீதிமன்றங்கள் அல்லது சர்வதேச தீர்ப்பாயங்களை அணுகி இழுத்தடிக்கின்றன. வோடாபோன் நிறுவனம் 14,000 கோடி ரூபாய் வரியைக் கட்டாமல் பல ஆண்டுகளாக இழுத்தடித்து வருகிறது.

இவ்வாறான முறையீடுகளால் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரிப்பணம் வசூலாகாமல் உள்ளது என்று தலைமை தணிக்கை அதிகாரி தன் அறிக்கையில் 2014 ஆம் ஆண்டு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் கார்பரேட் வரியை 30% லிருந்து 25% மாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி குறைத்துள்ளது நினைவுபடுத்தத் தகுந்தது. மேலும் இலவச நிலம் , இலவச மின்சாரம், இலவச தண்ணீர் போன்றவை தனிக் கதை.

அடுத்ததாக இட ஒதுக்கீடுகள் மற்றும் சமூக நலத் திட்டங்களைப் பொருத்தவரை மிகமிக அதிக சலுகைகளை அனுபவிப்பவர்கள் இடைநிலை சாதியைச் சேர்ந்தவர்கள். பிற்படுத்தப்பட்ட (OBC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட (MBC) வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தான் இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் மூன்றாவது வகையினர்; விசித்திரமானவர்கள்.

இந்திய அளவில் 27% இட ஒதுக்கீட்டையும், தமிழக அளவில் 50% சதவீத இட ஒதுக்கீட்டையும் இந்த பிற்படுத்தப்பட்டவர்கள் பெறுகின்றனர். மேலும் சமூக நலத் திட்டங்களை எடுத்துக்கொண்டால் மிக அதிக அளவிலான சலுகைகள் இவர்களை சென்று அடைகின்றது.

தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை எடுத்துக் கொள்வோம். இதில் அதிக எண்ணிக்கையிலான கணினிகளைப் பெற்றது யார்? என்று ஆராய்ந்தால் அது பிற்படுத்தப்பட்டவர்கள் தான் என்பது தெளிவாகத் தெரியும். இதேபோலவே சைக்கிள் வழங்கும் திட்டம், ரேசன் கடைகள், அரசின் பிற மானியங்கள், மகப்பேறு உதவி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களும் இவர்களுக்கே அதிக அளவு சென்றடைகிறது. பட்ஜட்டில் ஒதுக்கப்படும் நிதியில் பெருமளவு பிற்படுத்தப்பட்டவர்களுக்கே சென்றடைகிறது.

மேலும் விவசாயத்தின் பெயரில் வழங்கப்படும் சலுகைகள் 80-90% இவர்களையே சென்று சேருகிறது. விதை மானியம் , டிராக்டர் மானியம், குறைந்த வட்டியில் விவசாயக் கடன், தள்ளுபடி செய்யபடும் கடன், அரசின் கொள்முதல் நிலையங்கள் என்பது வரை இவர்கள் பெரும் சலுகைகள் ஏராளம். ஒப்பீட்டு அளவில் இந்த சலுகைகள் இன்னும் கூடுதலாக வழங்கப்பட வேண்டும் என்பதே உண்மை.

எனினும் இவ்வளவு சலுகைகளையும் பெற்றுக்கொண்டு இதில் ஒரு சிலர் (பலர்) SC /ST இட ஒதுக்கீட்டுக்கு மட்டும் எதிராகப் பேசுகின்றனர்; எழுதுகின்றனர்.

முதல்நாள் எங்களுக்கு இடஒதுக்கீடு பெற்றுத் தந்தது எங்கள் தலைவர் தான் என்று பெருமை பேசுவது , பிறகு ஒரு நாள் எல்லா இட ஒதுக்கீட்டையும் எடுக்கனும் அப்ப தான் இந்த நாடே உருப்படும் என்று ஜல்லி அடிப்பது.

சலுகைகள் அனைத்தையும் அனுபவித்துக் கொண்டு, சலுகைகள் கூடுதலாக வேண்டுமென போராட்டமும் செய்து கொண்டு, கோட்டாவை எல்லாம் எடுக்க வேண்டுமென இவர்கள் கூறக் காரணம் என்ன? இவர்களுக்கு என்னதான் பிரச்சினை?

இதனை ஆராய்ந்தால் இந்து சமூகத்தில் தனக்கு கீழ் உள்ள தலித்துகளின் மீதான வன்மமே இவர்களை இப்படி நடத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஒரு மிடுக்கான உடை அணிந்த பட்டியலினத்தவரை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. உயர் அதிகாரியாக ஒரு தலித்தை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. அது அவர்களை தாழ்வு மனப்பான்மையில் தள்ளுகிறது.

தலித்துகளின் வளர்ச்சி இவர்களை மனதளவில் பாதிக்கின்றது. அந்த வளர்ச்சிக்கு காரணம் இட ஒதுக்கீடு தான் என்று இவர்கள் மனம் முடிவு செய்கிறது. ஆக தனக்கு எந்த சலுகைகளும் கிடைக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை.... தலித் மக்களுக்கு எதுவும் கிடைக்க கூடாதென முடிவு செய்கின்றனர்.

ஆனால் உண்மையில் அரசின் பல்வேறு சலுகைகளை எதிர்பார்த்து திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வரிசையில் நிற்பது இவர்கள் தான் என்ற உண்மை இவர்களுக்குப் புரிவதில்லை என்பது வேதனையான விடயமாகும்.

பாபாசாகேப் டாக்டர்.அம்பேத்கரின் பொன்மொழியை இவ்விடத்தில் குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளேன்.

Breaking up the Caste System was not to bring about inter-caste dinners and inter-caste marriages but to destroy the religious notions on which Caste was founded

(ஜாதி ஒழிப்பு என்பது சம்பந்தி விருந்து நடத்துவதோ அல்லது சாதி மறுப்புத் திருமணங்கள் புரிவதோ அல்ல. மாறாக கட்டமைக்கப்பட்டுள்ள அதன் 'மத அடிப்படைகளை' வீழ்த்துவதே ஆகும்)

ஆகவே ஜாதி ஒழிப்பு என்பது இட ஒதுக்கீடு ஒழிப்பு அல்ல என்பதும், அது சனாதன ஜாதி முறைக்கு இந்து மதம் வழங்கியுள்ள புனிதங்களை ஒழிப்பது தான் என்பதும் தெளிவு.

எனவே பொது மக்கள் இந்த மேற்கண்ட மூன்று பிரிவினரை சரியாக இனம் பிரித்து அடையாளம் கண்டு அணுகுவது நலம்.

குறிப்பாக இந்துத்துவ பார்ப்பனியத்துக்கு எதிராக தலித்-பகுஜன்(பிற்படுத்தப்பட்டோர்) மக்கள் ஓரணியாக அணி திரள வேண்டும் என்பதும், தேர்தல் அரசியலுக்காக தலித் - பகுஜன் ஒற்றுமையை குலைக்கும் நடவடிக்கைகளில் பிற்படுத்தப்பட்ட ஜாதி்த் தலைவர்கள் நடந்து கொள்ளக் கூடாது என்பதும் நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது.

இதனைப் புரிந்து கொண்டு் பட்டியலின மக்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் ஒன்று சேரவில்லை எனில் (தலித்-பகுஜன்) இட ஒதுக்கீடு நம் அனைவருக்குமே (OBC, BC, MBC, SC, ST) பறிபோய் பார்ப்பனியம் வெற்றி பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

- டாக்டர் சட்வா சாக்யா