புரட்சிகரக் கட்சிகள் இருக்கின்றன. ஆனால் புரட்சிகர திட்டம் இல்லை எனில் அக்கட்சி எங்கும் முன்னேறிவிட முடியாது. திட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட நாட்டையும் அதன் அரசாட்சி முறையையும் அந்த அரசின் வர்க்கத்தன்மையையும் துல்லியமாக புரிந்து கொள்வதாகும். சிலர் திட்டம் என்பது ஒரு வரலாற்றுப் புதினம் போல புரிந்து கொள்கிறார்கள், அது எழுதி முடிந்த கதை, அதுபாட்டில் அது இருக்கும், நாம் நமது செயலுத்திச் சிக்கல்களைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தினால் போதும், புரட்சிகர இலக்கை அடைந்துவிடமுடியும் என நம்புகின்றனர். காட்டைப்பற்றிய வர்ணனை கூறுவதுபோல் நாட்டைப் பற்றிய வர்ணனை கூறும ஒரு கையேடாக, திட்டத்தைக் கருதுகிற போக்காகத்தான் நடப்பு இருக்கிறது. ஆனால் திட்டத்தைப் பற்றிய இந்த நுலகர் மனநிலை, ஒரு புரட்சியாளனுக்கு உதவாது. திட்டம் அன்றாட அரசியல் நடவடிக்கைகள் என்ற கணு முடிச்சுகளால் கட்டப்பட்ட ஒரு நீண்ட வடம், திட்டத்தின் அச்சிலிருந்து கட்சியின் ஒரு உறுப்பினர் கூட விலக முடியாது, அனைத்து அரசியல் போராட்டங்களும் திட்டம் என்ற வடக்கயிற்றின் முடிச்சாக்கப்பட வேண்டும். அதன் மறுமுனையைத் தொடும் வரை அச்சிலிருந்து விலகக் கூடாது.

திட்டம் என்பது என்ன?  

ஒரு வர்க்க சமுதாயத்தின் வரலாற்று வளர்ச்சி நிலையை சரியாக மதிப்பிட்டு அதை அடுத்த கட்டத்திற்கு உந்தித் தள்ளுகிற புரட்சிகர நடைமுறைக்கான வழிகாட்டும் பாடமே திட்டமாகும்.

 • இதில் புரட்சியின் கட்டம் (stage of revolution)
 • அரசின் வர்க்கத் தன்மை (character of the state)
 • புரட்சியின் தலைமை, புரட்சியின் நண்பர்கள் மற்றும் எதிரிகள் ளவசயவநபல)
 • சொந்த வரலாற்று நிலையிலிருந்து மக்களை அணிதிரட்டி வெல்வதற்கான அமைப்பு மற்றும் போராட்ட – மூல உத்தி மற்றும் செயல் உத்திகள்..(strategy and tactics) ஆகியன பற்றிய வரையறுப்புகளும் அவசியமாகிறது.

இந்த வரையறுப்புகளைச் செய்வதற்கு நமக்கு தரவுகள் வேண்டும். ஆனால் தரவுகள் போதுமா? தரவுகள் உண்மையில் அறிவு அல்ல, தரவு மயக்கம் நம்மை எங்கு வேண்டுமானாலும் நடத்திச் செல்லும். தரவுகளை அலசிட நமக்குத் தேவை முதலில் தத்துவார்த்தக் கண்ணோட்டம். இந்த தத்துவார்த்தக் கண்ணோட்டம் மார்க்சியக் கண்ணோட்டம்,

                       தத்துவார்த்தக் கண்ணோட்டம்

ஒரு பொருள் மாறியிருக்கிறது… மாறியிருக்கிறது.. ஆமாம் மாறியிருக்கிறது, ஆனால் அது பழையதே என்ற இயங்காவியல் சிந்தனை முறை நமது தோழர்களிடம் திட்ட விவாதங்களில் சாரமாக ஒலிக்கிறது, ஒரு பொருள் ஒவ்வொரு அணுப்பொழுதும் மாறிக்கொண்டிருக்கிறது. சென்ற நொடியின் பொருள் இந்த நொடியின் பொருள் அல்ல. அது மாறியிருக்கிறது.. நாம் எது ஒன்றையும் மாறாநிலைவாத கண்ணோட்டத்தில் அணுக முடியாது. மாற்றத்தில் நிகழ்ந்துள்ள வேறுபாட்டின் தன்மையை அதன் சாரப்பொருளில் துல்லியமாகப் பேசியாக வேண்டும், நாம் ஒரு பொருளைப் பற்றிப் பேசுகையில் அதன் சாரத்தைப்பற்றியே பேசுகிறோம்,

நமது தோழர்கள் இந்தியாவில் நிலவுடைமையே முதன்மை முரண்பாடாக நிலவுகிறது என்று சொல்லி 48 வருடங்கள் ஆகின்றன. இந்த 47 வருடங்களாக நிலவுடைமை முதன்மை முரண்பாடாக நீடிப்பதாகச் சொல்லி வருகின்றனர். அதில் என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்று கேட்டால் அது மாறியிருக்கிறது.. ஆனால் அப்படியே நீடித்து வருகின்றது என்கின்றனர். சரி மாற்றம் பற்றி என்ன கூறுகிறீர்கள் என்று கேட்டால் அது அளவுமாற்றம் அல்லது பொலிவு மாற்றம் (cosmetic change) என்கின்றனர்.

இந்தியாவெங்கும் கிட்டத்தட்ட மக்கள் தொகையில் பாதிப்பேர் கிராமப்புறங்களை விட்டு வெளியேறியது பற்றி நமது தோழர்கள் ஆச்சர்யப்பட்டுப் பேசுகின்றனர். ரிலையன்ஸ் மற்றும் வால்மார்ட்டின் கையில் இந்திய வேளாண்மை போகப்போவது பற்றி எச்சரிக்கின்றனர், எண்ணெய் விலையேற்றம் விவசாயிகளை பாதிக்கும் என்கின்றனர். விளைபொருளுக்கு உரிய விலை வேண்டும் என்கின்றனர். அரசியல் துறையில் பாசிசம் வந்துவிட்டது என்கின்றனர். இத்தகு கோரிக்கைகளை முன்வைக்கும் நமக்கு இவை நிலவுடைமைப் பண்புக் கூறுகளா? அல்லது முதலாளித்துவப் பண்புக் கூறுகளா என்று வரையறுப்பதில் குழப்பம் நிலவுகிறது.

உண்மையில் விவாதத்தின் மையம் இதுதான். நமது தோழர்கள், பண்பு மாற்றம் ஒன்று நடக்கவில்லை என்று சாதிக்கின்றனர். இந்த சாதிப்பில் பல உள்ளீடற்ற கேள்விக்கணைகளை வீசுகின்றனர். அவற்றை பின்வருமாறு மொத்தப்படுத்தலாம்.

 • கிராமப்புறங்களில் இன்னும் நிலக்குவிப்பு இருக்கிறது.
 • பெரும் எண்ணிக்கையிலான உழவர்கள் அதில் கட்டுண்டு கிடக்கின்றனர்.
 • கிராமப்புறங்களில் சாதிய ஒடுக்குமுறை இருக்கிறது

கட்சி, காவல்நிலையங்களில் நிலவுடைமைச்சக்திகள் செல்வாக்கு செலுத்துகின்றனர்.

 • தொழில், வணிகம் சேவை போன்ற துறைகளில் முதலாளிகள் பின்தங்கிய நிலக்கிழாரிய உறவுகளை பயன்படுத்துகிறார்கள், என்பவையே அவை,,

இந்தியாவில் நிலவுடைமைச் சமுதாயத்தில் பண்பு மாற்றம் நடந்துள்ளதா இல்லையா என்ற கேள்விக்கு விடை தேடும் முன் நிலவுடைமைச் சமுதாயத்தின் பண்புகள் மற்றும் முதலாளித்துவ சமுதாயத்தின் பண்புகள் என்ன? அவற்றுக்கிடையிலான உறவும் முரணும் என்ன? என்ற பார்வைஅவசியம்.

நிலவுடைமைச் சமுதாயத்தின் பண்புகள்

 • சுயதேவைப் பொருளாதாரம் ( தேவைக்கான உற்பத்தி)
 • கட்டுண்ட உழைப்பை அடிப்படையாகக் கொண்ட நிலவுடைமை,
 • நிலக்கிழாரிய வர்க்கத்தின் ஆட்சியதிகாரம், அதாவது எதேச்சதிகாரம், பரம்பரை அதிகாரம் (படை/நிதி/நீதி/நிர்வாக அதிகாரம்)
 • உள்ளூர் தேவைக்கான உற்பத்தி முதன்மையாகவும் விற்பனைக்கான பண்ட உற்பத்தி குறைவாகவும் இருத்தல்.
 • வாழ்வின் அனைத்துப் பண்பாடுகளையும் கட்டுப்படுத்துதல்
 • தனிமைப்பட்ட சிறு பொருளாதார அலகுகளாக இருத்தல்
 • பின்தங்கிய உற்பத்தி சக்திகளின் காரணமாக தகவல் தொடர்பு போக்குவரத்து, பரிவர்த்தனை உறவு பின்தங்கியிருத்தல்

முதலாளித்துவச் சமுதாயத்தின் பண்புகள்

 • சந்தைப் பொருளாதாரம் (சந்தைக்கான உற்பத்தி)
 • சுதந்திர உழைப்பு (உழைப்பை எங்கு வேண்டுமானாலும் விற்கும் சுதந்திரம்)
 • முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியதிகாரம் (பெரும்பாலும் ஜனநாயக ஆட்சி வடிவில் (படை/நிதி/நீதி/நிர்வாக அதிகாரம். தேர்ந்தெடுக்கப்படும் மக்களவை)
 • விற்பனைக்கான பண்ட உற்பத்தி முதன்மையாகவும் தேவைக்கான உற்பத்தி சுருங்கியும் இருத்தல்
 • வாழ்வின் அனைத்துப் பண்பாடுகளையும் கட்டுப்படுத்தல்
 • உலகளாவிய பொருளாதார பிணைப்புகளைக் கொண்டிருத்தல்
 • முன்னேறிய உற்பத்தி சக்திகளின் காரணமாக தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து பரிவர்த்தனை உறவில் பெருத்த மாற்றம்

நிலக்கிழாரிய ஆட்சியதிகாரத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் ஒரு பார்வை

நிலக்கிழாரியம் என்று சொல்லும் போது அதன் அரசியல் அதிகாரத்தையும் பிரிக்கமுடியாதவகையில் மார்க்ஸியர்களாகிய நாம் பொருள்படுத்துகிறோம். இவற்றை அரசியல் அதிகாரத்திலிருந்து பிரித்துப் பேசுவது ஒரு குறுக்கல்வாதமாகும்(Reductionism). வர்க்கச் சமூகக்கட்டங்கள் பற்றிப் பேசும் போது நாம பிரிக்கமுடியாதவாறு அரசியலதிகாரத்தையே முதன்மையாக பொருள் கொள்கிறோம். நிலவுடைமை (landholding) என்பது வேறு நிலப்பிரபுத்துவம் (landlordism) என்பது வேறு,,

இந்திய துணைக்கண்டத்தில் முகலாயர் ஆட்சியும் பல சமஸ்தானங்களும் பிரிடடிஷார் வருகைக்கு முன்பு தமது சொந்த ஆட்சியதிகாரத்தைக் கொண்டிருந்தன. பிரிடடிஷ் ஏகாதிபத்தியம் தலையிட்டு படிப்படியாக அவர்களின் ஆட்சி அதிகாரத்தைப் பறித்தது. கிழக்கிந்தியக் கம்பெனி தொடங்கிய போரை பிரிட்டிஷ் அரசு தலையிட்டு நிறைவு செய்தது. 1857ல் கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து அதிகாரம் மாற்றப்பட்டு நேரடியாக ராணி விக்டோரியாவின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட பின் நிலவுடைமை அரசுகளின் அதிகாரங்கள் பிடுங்கப்பட்டன.. தங்களின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட ஆர்க்காட்டு நவாப், தொண்டைமான், ஹைதராபாத் நிஜாம் போன்ற எடுபிடிகளைத் தவிர மற்றவர்களின் அதிகாரம் பறிக்கப்பட்டு காலனிய முதலாளித்துவ அரசு எந்திரத்தின் அதிகாரம் நிறுவப்பட்டது. இத்துடன் இத்துணைக்கண்டத்தில் நிலவிய நிலக்கிழாரிய அரசியல் அனமப்பு வரலாற்றில் தோல்வியைத் தழுவியது,

1947 வரை நீடித்த பிரிட்டிசு காலனிய முதலாளித்துவ அரசு தன் சுரண்டல் நலனை முன்னிட்டு பல பொருளியல் அரசியல் மாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் செய்தது. கச்சாப்பொருள்களையும் பண்டங்களையும் இயற்கை வளங்களையும் அள்ளிச் சென்ற அதே வேலை தமது ஏகாதிபத்திய அரசியல் ராஜதத்திரத்தின் பகுதியாக 3 வகை அணுகுமுறைகளை ஆங்கிலேயர்கள் கையாண்டனர். ஒன்று எதிர்ப்போரை அழிப்பது, இரண்டு சரணடைந்தோரை தனது அதிகாரத்தின் கீழ் செயல்பட அனுமதிப்பது. மூன்று உடனடியாக சுரண்டலுக்கு உடனடியாக தேவைப்படாத பகுதிகளை விட்டுவைப்பது என்ற மூன்று வகை அணுகுமுறைகளைக் கடைப்பிடித்தனர். இதில் உடனடி நேரடித்தாக்குதல் பகுதிகள் முதலாளித்துவ உற்பத்திக்குள் வேகமாக இழுக்கப்பட்டன. பிரிட்டிஷ் எடுபிடிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை கச்சாப்பொருள் சுரப்பிகளாக மாற்றினர். உடனடியாக தேவைப்படாமல் விட்டுவைக்கப்பட்ட பகுதிகளில் பழைய உற்பத்தி உறவுநிலையின் எஞ்சிய உறவுகள் தொடர்ந்தன, இப்படி பழைய உற்பத்தி உறவு தொடர்ந்த பகுதி அன்றைய சூழ்நலையில் இயற்கையில் பின்தங்கியதாகவும் பெரும் லாபம் தராத பகுதிகளாகவும் இருந்தன என்பது கவனிக்கத்தக்கது.

 இந்த மூன்று பகுதிகளில் முதலிரண்டு நடவடிக்கை அன்றைய காலனிய அரசால் நாட்டில் பெரும்பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.

காலனிய/ தரகு முதலாளிய / அரை நிலப்பிரபுத்துவ இந்திய அரசியல் அதிகார அமைப்பு ,, முதலாளிய சமுக அமைப்பாக நிறுவப்படல்,

பிரிட்டிசு காலனியவாதிகளின் தரகர்களாக நுற்றாண்டாக நீடித்துவந்தனர், பிரிட்டிஷை அண்டியே மென்மேலும் தரகுமுதலாளித்துவ சக்திகள் மென்மேலும் தம்மை வளர்த்துக் கொண்டனர், தரகர்களாக இருந்து வந்த இந்த அரைநிலப்பிரபுத்துவ / வணிகவர்க்கங்கள் முதல் உலகப்போர் காலகட்டத்தில் உற்பத்தியில் நேரடியாக அனுமதிக்கப்பட்டனர், இது அவர்களின் தனித்த முதலாளிய வர்க்க நலனை வளர்ப்பதில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியது, இது அவர்களின் சுய தன்மையை வளர்க்கத்தொடங்கியது, இந்த வளர்ச்சிப்போக்கும் இரண்டாம் உலகப்போரின் காலகட்டத்தில் போரில் பிரிட்டிஷின் பின்னடைவும் இந்திய முதலாளித்துவ வர்க்கத்துக்கு தமது தலைமையில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நம்பிக்கையை விசிறிவிட்டது, அன்றைய ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி சோவியத் ஆதரவின் பேரில் பிரிட்டிஷை போரில் ஆதரிப்பது என்ற நிலை எடுத்த தவறான அரசியல் நிலைபாடு,, இந்திய முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் தலைமைக்கனவை உறுதிசெய்த்து,

1947ல் இத்துணைக்கண்டம் முழுவதுமான மக்களின் அடக்கமுடியா பேரெழுச்சி உருவெடுத்த்து, இரண்டாம் உலகப்போரில் நேர்ந்த நெருக்கடியால் பிரிட்டன் பலவீனமடைந்தது, இந்தச் சூழல் இந்தியா அரசியல் சுதந்திரமடைய பொருத்தமான சூழலானது, இந்தியா ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை என்ற ஜனநாயகப் புரட்சியின் மற்றொரு கட்டத்தையும் நிறைவுசெய்தது,

விடுதலைக்கு முன்பு பிரிட்டிஷின் ஆதிக்கத்தின் கீழ் 565 சமஸ்தானங்கள் நிலவியநிலைமையில் காலனிய/ அரைநிலப்பிரபுத்துவ சமுகமாக நீடித்த இந்தியா முதலாளித்துவ அரசின் தலைமையின் கீழ் பெருமுதலாளிய/அரைநிலப்பிரபுத்துவ அதிகார அமைப்பு கொண்ட சமுகமாக மாற்றப்பட்டது,

அதிகாரத்தைக் கைப்பற்றிய இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் தலைமை தன் மூலதன நலன்களுக்கு, அதன் தர்க்கப் பூர்வ வர்க்க நலனுக்கு ஒட்டுமொத்த அரசு எந்திரத்தையும் முடுக்கிவிட்டது, பிரிட்டிஷிடமிருந்து சுதந்திரம் பெற்ற 565 சமஸ்தானங்களும் இந்தியாவுடன் இணைய மறுத்தன, அன்றைய நேரு தலைமையிலான முதலாளித்துவ ஆளும்வர்க்கம் 565 சமஸ்தானங்களயும் வலுக்கட்டாயமாக இணைத்த்து, இந்தியா தனது முதலாளித்துவப் புரட்சியின் வரலாற்று வெற்றியை நிறைவுசெய்த்து, முதலாளித்துவ அரைநிலப்பிரபுத்துவ இந்தியா முதலாளித்துவ இந்தியாவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது,

 பிரிட்டிசின் அதே அணுகுமுறையும் கட்டமைப்பும் அடுத்துவந்த உள்நாட்டு முதலாளித்துவ வர்க்கத்துக்கு சாதகமாக இருந்ததால் அதே போக்கு தொடர்ந்து வளர்த்தெடுக்கப்பட்டது. ஆனால் அதன் அதிகாரம் அரசியல் தன்மையில் வரலாற்றுரீதியாக மாற்றியமைக்கப்பட்டது, இந்திய துணைக்கண்ட அரசில் இந்தியப் பெருமுதலாளித்துவத் தலைமை நிறுவப்பட்டது,

 சுதந்திரப் போராட்டத்தின் பயனாகவும் சோவியத் யூனியனின் சோசலிசத்தாக்கத்தாலும் உரக்க ஒலிக்கப்பட்ட வர்க்கக் கோரிக்கைகள் பலவற்றை அரசு நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. பொதுத்துறைகளை வளர்த்தெடுத்தது. தனியார் தொழில்களையும் ஊக்குவித்தது. மன்னர் மானிய ஒழிப்பு, நிலச்சீர்திருத்தச்சட்டங்கள் போன்ற நடவடிக்கைகளை எடுத்தது. இந்தியாவில் நிலக்கிழாரிய ஒடுக்குமுறைக்கு எதிரான புரட்சிகர மற்றும் ஜனநாயக சக்திகளின் போராட்டங்கள் இப்போக்கைத் துரிதப்படுத்தின.

 70களில் பசுமைப்புரட்சி என்ற பெயரில் புகுத்தப்பட்ட வேளாண்முதலாளித்துவமயமாக்கல் தீவிரமாக்கப்ப்பட்டது, சந்தைவியாபாரத்தில் லாபம் ஈட்டுவதே வேளாண்மையின் இறுதி நோக்கமாக்கப்பட்டது, முழுக்க முதலாளித்துவ உற்பத்தியுடன் இறுக்கிக் கட்டப்பட்டது.

பல பாய்ச்சலான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன, பம்புசெட்டு புகுத்தப்பட்டதுடன் வேளாண்மையின் பருவகாலம் மாற்றப்பட்டது. வேதி உரங்கள் பயன்படுத்தப்பட்டன. டிராக்டர்கள் மற்றும் வேளாண் தொழிற்கருவிகள் புகுத்தப்பட்டன. இப்படிப் புகுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் விவசாயத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தின. பெரும் அணைகள் கட்டப்பட்டன, காடுகள் வரைமுறையின்றி அழிக்கப்பட்டு விவசாய நிலங்கள் அதிகரிக்கப்பட்டன. அணைகள் கட்டப்பட்டன, பாசனப்பரப்பு அதிகரித்ததன் விளைவாக விவசாய உற்பத்தி அதிகர்க்கப்பட்டது. இது வேளாண்மை முதலாளித்துவமயமாக்குகிற ஒரு பெரும் முன்னெடுப்பாகும் இதன் தாக்கம் அதிகரித்து 1990 வரை தொடர்ந்தது. இதில் ஏற்றத்தாழ்வான அராஜக வளர்ச்சியே முதலாளித்துவத்தின் விதி என்பதை இந்தியா சமச்சீரான வளர்ச்சியை ஏன் எட்டவில்லை என்பதற்கான விடை கிடைக்கும்,,

 90க்குப் பின்னான உலகமயமாக்கலுக்குப் பிறகு இந்த மாற்றம் வெறும் தனித்தனி நாடுகள் தழுவியதாக மட்டும் இல்லை. அது உலகு தழுவிய ஒன்றாக மாறிவிட்டது. இந்தியாவைப் பொருத்தவரை கடந்த 20 ஆண்டுகளில் ஒரு பெரும் வரலாற்றுத்திருப்பத்தை எட்டியுள்ளது. நிலவுடைமை மீத மிச்சங்கள் வேகமாக இழுத்துவரப்படுகின்றன. இன்று மிக வெளிப்படையாக முதலாளித்துவ ஆட்சியதிகாரத்தின் கோர வடிவமாக பாசிசம் தலைதூக்கி வருகிறது.

 இது இன்றைய உற்பத்தி முறையின் பண்பளவிலான மாற்றத்தைக் குறிக்கிறது அவற்றை இன்னும் விரிவாகக் காண்போம்.

 • 1.   சுயதேவைப் பொருளாதாரம் (எதிர்) சந்தைப்பொருளாதாரம்

எந்தவொரு பொருளாதாரமும் அதன் வரலாற்று வளர்ச்சி நிலைமையின் நிர்பந்தங்களால் தீர்மாகிக்கப்படுகின்றன, ஒரு சமூகத்தில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி நிலை அச்சமுதாயத்தின் உற்பத்தி உறவைத் தீர்மானிக்கிறது. இந்த உற்பத்தி உறவு மனித உறவு அனைத்தையும் தீர்மானிக்கிறது. செல்வாக்கு செலுத்துகிறது, உற்பத்தியால் விளையும் செல்வத்தைப் பங்கிட்டுக்கொள்ளும் ஏற்பாடே அரசியல் பண்பாட்டு உறவாக திகழ்கிறது.

ஒற்றைகலப்பையும் வானம் பார்த்த பூமியாக வேளாண்மை நீடித்த பல நூற்றாண்டுகள் மனிதர்கள் உணவுக்காகவும் உணவளிக்கும் செழிப்பான ஆற்றங்கரைகளைக் கைப்பற்றவும் பலநூறு யுத்தங்கள் நடத்தினர். அங்கேயே அரசமைத்து அதன் மீதான உரிமையைக் காப்பாற்றிக் கொள்ளவும் முயன்றார்கள். இயற்கைப் பொருளாதாரம் என்று சொல்லப்படும் நிலவுடைமை உற்பத்தியில் தேவைக்கான உற்பத்தியே முதன்மையாக நிலவியது. அதாவது தேவையைத் தீர்த்துக் கொள்வதற்கே படாதபாடு படவேண்டி இருந்தது. அரிசிச்சோறு ஒரு 40 ஆண்டுகளுக்கு முன்பு ஆடம்பர உணவு. நிலவுடைமை யுத்தங்கள் அனைத்தும் ஆநிறை கவர்தலும். ஆடுகளவாடலும் தானியக்கொள்ளையும். செழிப்பான நிலங்களைக் கைப்பற்றவும் நடத்தப்பட்ட யுத்தங்கள் தான். சங்க இலக்கியங்களில் நிறைந்து கிடக்கும் வீரயுகம் எனும் போர்க்காலம் முழுக்க அடிப்படைத் தேவைகளை தீர்த்துக் கொள்வதற்கான போர்களே, கரிகாலன் காவிரிக்காக போர் தொடுத்ததை இதே வகையில் வைத்துப் பார்க்க வேண்டும். ஏனெனில் பின்தங்கிய உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி காரணமாக அச்சமுதாயங்கள தமது தேவையைத் தீர்த்துக்கொள்வதற்காக போராட வேண்டி இருந்தது, அதாவது உழைப்பிலிருந்து பெறப்படும் உபரி மிகக்குறைவாக இருந்தது மிக அடிப்படைக் காரணமாகும். அவ்வாறு பெறப்பட்ட உபரியும் ஆளும் வர்க்கத்தின் சொகுசான இருப்புக்கே போதுமானதாக இருந்தன,

 உற்பத்தி நிலைமைகளின் நிர்பந்தங்களால் வர்க்க சமூகம் மட்டுமல்ல வர்க்கமற்ற சமூகங்களும் நிலவியதை புராதன சமூகத்தின் வரலாற்றில் பார்க்கிறோம். இன்னமும் அந்தமான் தீவுகளில் வசிக்கக் கூடிய ஜாரவாஸ் இனமக்கள் ஒரு சின்ன சிகப்புத்துணியை கொடுத்த போது அதை நூற்றுக்கணக்கான துண்டுகளாக்கி தமது குழுவிலுள்ள அனைவருக்கும் பகிர்ந்தளிக்கும் செயலை அவர்களோடு உறவாடிய ஒருவர் பதிவு செய்கிறார். இதன் மூலம் அவர்கள உலகின் தலைசிறந்த சமத்துவக்காரர்களாக இருக்கிறார்கள். காரணம் அவர்களின் பணபாட்டில் உற்பத்திநிலைமை வெளிப்படுகிறது. அவர்கள் வேளாண்மையில் ஈடுபடவில்லை. எனவே காட்டில் சேகரிக்கும் பழங்கள் இறைச்சியைக் கொண்டு வாழவேண்டும். தினமும் எல்லோருக்கும் உணவு கிட்டாது. எனவே கிடைப்பதை சரிசமமாகப் பகிர்ந்துண்டு அந்தக் கூட்டம் உயிர் பிழைத்திருக்கிறது. அது எது கிடைத்தாலும் அதை சம்மாக பகிர்ந்துகொள்வது என்ற பண்பாட்டை உருவாக்கியுள்ளது.

 இது போல நிலவுடைமைச் சமூகத்தில் மிக மோசமான நிலை நிலவாவிட்டாலும் அச்சமூகத்தில் வேளாண்மை முதன்மைத்

தொழிலாக மாறிய பிறகு தானிய உற்பத்தி அதிகரித்தாலும் அது விற்பனைக்கான உபரியாக அதிகரிக்க வில்லை. ஆதலால் நுகர்வே முதன்மையாக இருந்தது. இதனால் தான் நிலவுடைமைப் பொருளாதார அமைப்பு தனித்த துண்டு துண்டான அலகுகளாக வட்டாரங்களாக பல நூறாண்டுகள் நீடித்து வந்தன.

 ஏனெனில் விற்பனைக்கான பொருள்கள் அதிகரிக்கும் போதுதான் இடப்பெயர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. எல்லை தாண்டிய நில/அரசு/சாதி/மத /வட்டார எல்லைகளைக் கடந்த சமூக பொருளாதார பண்பாட்டு பரிமாற்றம் தொடங்குகிறது. அதாவது பரிமாற்றம் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிலவிய பழைய நிலவுடைமை அமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டு பரிமாற்றமே அதாவது பண்டவிற்பனையே முதன்மை பொருளாதார நடவடிக்கையாக மாறுகிறது. இதுவே முதலாளித்துவ பொருளாதாரமாக சந்தைப் பொருளாதாரமாக உருவெடுக்கிறது. விற்பனைக்கான பண்ட உற்பத்தி முதன்மை பெறும்போது அது தேவைக்கான உற்பத்தியை முதன்மையாகக் கொண்ட நிலவுடைமைச் சமூக அமைப்பிலிருந்து முறிந்த பண்பளவில் வேறுபட்ட முதலாளித்துவ அமைப்பாகும்.

 • 2.   கட்டுண்ட உழைப்பை அடிப்படையாகக் கொண்ட நிலவுடைமை. (எதிர்) முதலாளித்துவ சுதந்திர உழைப்பு (Bonded Labour system vs labour system)

 இன்று தமிழகம் மற்றும் இந்தியாவின் நாலாதிசைகளிலும் முக்கிய விவசாய நெருக்கடிகளில் ஒன்று விவசாயக் கூலிக்கு ஆட்கள் பற்றாக்குறை என்பதுதான். இது விவசாயத்தில் மிகப்பரவலாகக் கூலிமுறை வந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்று கிராமப்புறத்தில் கூலி விகிதம் ஒப்பீட்டளவில் உயர்ந்துள்ளது. அந்தக் கூலியை விவசாயிகளால் கொடுக்கமுடியவில்லை என்பது அவர்களின் குற்றச்சாட்டு, எப்படி உயர்ந்தது இந்த கூலி விகிதம். உலகமயப்பின்னணியில் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தம்மால் சீனா, தென்கொரியா போன்ற நாடுகளின் மலிவு உற்பத்திப் போட்டியை சமாளிக்க முடியாமல் இந்தியா மற்றும் தெற்கு – தென்கிழக்காசியா போன்ற பகுதிகளிலிருந்து மலிவுலைப்பைத் தேடி இடம்பெயர்ந்தது, மிக முக்கியமாக கட்டுமானம். சாலைப்பணி, உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளில் கூலி விகிதத்தை உயர்த்தியது. இதைத்தொடர்ந்து நாலாதிசைகளிலிருந்தும் விவசாயத்தொழிலாளர்கள் நகர்ப்புற கூலி உழைப்பை நோக்கி கிராமங்களை விட்டு நகரங்களுக்கு பெயர்ந்தனர்.

 நகரங்களில் ஒப்பீட்டளவில் அதிகமான கூலிவிகிதத்தைப் பெற்றனர். இதன் தாக்கம் கிராமப்புற உழைப்புச் சந்தையில் எதிரொளித்தது. கிராமத்து விவசாயக் கூலிகள் நகரம் நோக்கி புலம் பெயர்ந்தனர், முன்புபோல் மலிவுழைப்புக்கு கிராமத்தில் ஆள் கிடைக்கவில்லை. தவிர விவசாயத்தொழிலாளர்களும் தமது வாய்ப்பைக் கொண்டு தமது பேர ஆற்றலை வளர்த்துக்கொண்டனர். தினக்கூலி பேசும் நடுத்தர பணக்கார விவசாயிகளிடம் ஒப்பந்தமுறை கூலியை வற்புறுத்துகின்றனர். அதாவது களையேடுப்பதோ, நடுவதோ, கதிர் அறுப்பதோ ஒரு சதுரத்திரற்கு என்று மொத்தமாகப் பேசி பிரித்துக்கொள்கின்றனர். அது அவர்களின் தினக்கூலியை விட லாபம் தரக்கூடியது. இந்த பேர ஆற்றல் அவர்களின் சுதந்திரத்தைப் பறைசாற்றுகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும்பாலும் இன்று கிராமங்களில் கூலிவேலை செய்யாமல் நகரங்களுக்கு செல்வது சாதிஇழிவுக்கு எதிரான எதிர்வினையாகவும் அதிகரித்த கூலிக்காகவும் இருக்கிறது. மிகவும் கடைக்கோடித் தொழிலாளர்களான அவர்களும் இன்று சுதந்திரக்கூலிகளாகத் திகழ்வது மிக தெளிவாக நிலைமையை உரைப்பதாகும்.

 கட்டுண்ட உழைப்பு சுதந்திர உழைப்பாவது பல பண்பளவிலான மாற்றங்களைத் தம்மளவில் குறிக்கின்றன. அடிமை உழைப்பு சுதந்திர உழைப்பாகி உள்ளது. எஜமான்கள் விதித்த கூலிக்கு மாறாக தாம் தமது கூலியை நிர்ணயிக்க பேரம் பேசுகிறார்கள். விரைவான இடம்பெயர்வது சாத்தியமாகியுள்ளதால் கிராமத்தின் அரசியல் தனிமைப்படுத்தலுக்கு மாறாக தமது அரசியல் களத்தைத் தேர்வுசெய்கிறார்கள். பல சமூகப் பாட்டாளிப் பட்டாளங்களுடன் பரவிக்கலக்கிறார்கள்.

 இந்தப் பரவல் முதலாளித்துவப் பொருளியல் அமைப்பின் பல்வேறு கண்ணிகளுக்கு எதிரான வாழ்க்கையில் சுரண்டலுக்கு எதிரான களத்தில் நம்பிக்கையுடன் ஒன்றுபடும் எதிர்காலத்தில் அவர்கள் அடியெடுத்து வைக்கிறார்கள்,

நிலக்கிழாரிய அமைப்பின் இருப்புக்கு அடிப்படை அளவுகோல் நிலக்குவிப்பா? அரசியல் அதிகாரமா?

 பொதுவாக நிலக்கிழாரியம் என்றாலே அதன் நிலக்குவிப்பை அளவீடாகக் கொள்ளும் அணுகுமுறை நம்மிடையே நிலவுகிறது. உண்மையில் நிலக்கிழாரியம் என்றோ முதலாளித்துவம் என்றோ குறிப்பிடும் போது அவற்றின் அரசியல் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டே வரையறுக்க வேண்டும். நிலக்கிழாரிய வர்க்கத்தின் நிலையை, இன்றைய அரசியல் அதிகாரத்தில் அதன் நிலையை அடிப்படையாகக் கொண்டே வரையறுக்க வேண்டும். தவிர அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவேதே புரட்சியின் மையக்கடமை எனும் போது அனைத்துவர்க்கங்களின் அரசியல் அதிகாரப்போக்கை அளவீடாகக் கொண்டே அவ்வர்க்கங்களின் பாத்திரம் பற்றிய ஆராய்ச்சிக்கு செல்ல வேண்டும்.

 நிலக்குவிப்பு என்பது மட்டும் நிலக்கிழாரியத்தின் ஒற்றை அளவுகோல் ஆகாது. அமெரிக்கா. கனடா போன்ற நாடுகளில் 1000 ஏக்கர் வைத்திருப்பவர் சிறு விவசாயி.. எனவே நிலக்குவிப்பை நிலக்கிழாரித்தைக் குறிக்கும் ஒற்றை அளவுகோள் ஆக்கமுடியாது. நிழக்கிழாரியம் என்பது வேறு நிலவுடைமை என்பது வேறு, முதலாளித்துவ நிறுவனங்கள் சட்டப் பூர்வமாக லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை உடைமைகளாக கம்பெனிகள் ட்ரஸ்டுகள் பேரில் குவித்துவைத்திருக்கிறார்கள், லட்சக்கணக்கான அரசு மற்றும் தனியார் அலுவலர்கள் வர்த்தகர்கள் தொழிலதிபர்கள் மடங்கள் என ஊழல் மற்றும் பினாமி பெயரில் வாங்கிக் குவித்துள்ள நிலங்கள் ஆளில்லா நிலவுடைமையாக லட்சக்கணக்கான ஏக்கர்கள் குவிக்கப்பட்டுள்ளன, இவை பெரும்பாலும் வேளாண்மையை இரண்டாவது நோக்கமாக கொண்ட நிலவுடைமையாகும், பாசனப்பகுதிகளில் உள்ள நிலவுடைமையாளர்கள் பண்ட உற்பத்தியில் ஈடுபடுவதால் அவர்களில் பழைய நிலவுடைமை உறவுகள் புதியவகை உறவுகளை தோற்றுவித்துள்ளன, இவர்கள் பெரும்பாலும் வேளாண்மை பொருளாதாரம் தொடர்பான அனைத்து அலுவலக்ங்கள் கிராமப்புறக் கூட்டுறவு வங்கிகள் பஞ்சாயத்துத் தலைவர்கள் ஊரகவட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் போன்ற வேளாண் அதிகார வர்க்கத்தோடு நெருக்கமான உறவில் உள்ளனர், இவர்களோடு சேர்ந்து பல கிளை தொழிலில் ஈடுபடுவதுடன் விவசாயிகளுக்கான அரசின் ஒதுக்கீடுகளை களவாடுகின்றனர், சிறுவணிகம்

                          இந்த நிலவுடைமை எதேச்சதிகார நிலையிலிருந்து நீடிக்கவில்லை. அது முதலாளித்துவ ஊழல் முறைகளால் ஆக்கிரமிக்கப்படுகிறது. ஆனால் இந்நிலவுடைமையாளர்கள் பழைய பாணியிலான நிலவுடைமை அதிகாரத்தைச் செலுத்த முடிவதில்லை. இங்கு பண்ணையடிமை முறையையும் நடைமுறைப்படுத்த முடியாது. மேலும் அவர்களின் எதேச்சதிகாரம் சாத்தியமில்லை. எனவே ஊழல்முறையில் நிலக்குவிப்பு நடப்பது முதலாளித்துவ முறையே தவிர நிலக்கிழாரிய முறை அல்ல. உதாரணத்திற்கு இன்றும் அமேரிக்காவில் வரிய விவசாயிகளின் பட்டியலில் வந்த மானியத்தை ராக்பெல்லர் கம்பெனியின் விவசாயப் பண்ணை அதிகமாகப் பெற்றது சமீபத்தில் அம்பலப்படுத்தப்பட்டது,

 நிலக்கிழாரியத்தின் (feudalism) முதன்மைப்பண்பு என்பது அரசியல் அதிகாரத்தை கையில் கொண்டிருப்பதும் நிலக்குவிப்புடன் கட்டுண்ட உழைப்பும் நிலவுவதே அதன் மைய அம்சமாகும். நிலங்களில் பரம்பரை உழைப்பு முறை இருப்பது. கூலியின்றி உழைக்க நிர்பந்திப்பப்படுவதும் உயிர்வாழ பராமரிப்பும், திருமணம். இறப்பு போன்ற வாழ்வியல் சுமைகளுக்கு மட்டுமே பொறுப்பேற்பதும் தான் நிலவுடைமையின் பண்புகள். தமிழிகத்தில் நிலவிவந்த வெட்டி உழைப்பு முறை இதன் மிக வகைமாதிரியான வடிவமாகும். இன்று வெட்டி உழைப்பு முறை ஒழிந்து போயிருக்கிறது. நமது விவாதத்தை தமிழக அளவில் வரம்பிடுவோமானால், இன்று தமிழகமெங்கும் வெட்டி உழைப்புமுறை பொதுப்போக்காக இருக்கிறதா, இல்லை என்பதே உண்மை, அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்படும் விதிவிலக்கான உதார்ணங்களைக் கொண்டு நாம் சோர்வளிக்கும் விவாதங்களில் ஈடுபடமாட்டோம் என நம்புவோம். விதிவிலக்கு என்பது ஒரு பொருளின் பண்பாகாது.

 தேவையும் நுகர்வுமா? கூலி-விலை-லாபமா?

 சிறிய துண்டிக்கப்பட்ட தனித்த பொருளாதார அலகுகளாக நீடித்த சமுதாயங்களிலேயே தேவைக்கான உற்பத்தி நீடித்தது என்பதால் அவை இன்றைய நிலையில் அரிதாகிவிட்டது. சர்வதேச பண்டப்பரிமாற்றம், தகவல் தொடர்பு என்று வளர்ந்துவிட்ட நிலையில் இன்று உலகம் முதலாயித்துவப் பொருளியல் வலைபின்னலுக்குள்ளாக முற்றாக வந்துவிட்டது. அது விவசாயத்தை கூலி, விலை, லாபம் என்ற பொருளாதாரப் போக்குக்குள் முழுவதுமாக இழுத்துவிட்டது.

 இன்று நாலாதிசைகளிலும் விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக இருப்பது விளைச்சலுக்கு உரிய விலைவேண்டும் என்பதுதான். விலை என்ற வார்த்தை விவசாயியின் மொழிக்குள் வந்து விட்டாலே அது முதலாளித்துவப் போக்கின் அறிகுறியே. ஏனெனில் ஒரு பொருள் விற்பனைக்காக உற்பத்தி செய்யப்படும் போதே அது விலை என்ற மொழிப்பதத்திற்குள் அடிபடுகிறது. சந்தையை முன்வைத்து விற்பனைக்காக உற்பத்தி செய்ய்பப்டுவது முதலாளித்துவப்போக்கே. இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நெல்,கரும்பு, வாழை, தென்னை, மஞ்சள், இஞ்சி, மா, பலா, பருத்தி, சவுக்கு , யூகலிப்டஸ், காய்கறிகள் மற்றும் காகி, தேயிலை, மிளகு, ரப்பர் என உற்பத்தியாகும் அனைத்துப் பயிர்களும் பணப்பயிர்களே.

 விவிசாயிகளின் கோரிக்கையாக விதை, உரம், பூச்சிமருந்து. இடுபொருள் மானியக் கோரிக்கைகள் ஆகியன மூலதனம் போடுவதில் அவர்களுக்குள்ள கடினங்களை சமாளிக்க கோருவதாகும், நெல்,கரும்பு, பால், மஞ்சள், இஞ்சி ஆகிய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலைக் கோரிக்கை சந்தைப் போட்டியிலிருந்து பாதுகாப்பு கோருவதாகும், பயிர்க்காப்பீடு வெள்ள நிவாரணம் கோருதல் பட்ட கடனிலிருந்து தப்பிப்பதற்கானதாகும், இவையனைத்தும் விவசாயம் மூலதனம் இடும் தொழிலாகவும் தொழில்துறையில் தேவைப்படும் அனைத்துப் பாதுகாப்புக் கோரிக்கையும் இதில் எழுப்பப்படுவதையும் காண்கிறோம். இத்துடன் நிலமற்ற உழவர்களின் கோரிக்கை சிக்கலாகிவிட்டதைக் காண்கிறோம். பழைய பொருளாதார அமைப்பில் துண்டுநிலம் கிடைத்தால் உழவனுக்கு வருவாய் ஆதாரம் கிடைத்துவிடும். ஆனால் இன்று பயிர்க்கடன், மானியம், குறைந்தபட்ச ஆதாரவிலை, காப்பீடு இவை அனைத்தும் அளிக்கப்பட்டால் மட்டுமே அவரால் ஆண்டுநிலத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். இல்லாவிடில் மறுநாளே ஏற்கனவே பட்ட கடனுக்கும் நிற்கும் தேவைகளுக்கும் நிலத்தைக் கைமாற்றிவிட்டு வெளியேறுவார்,

சாதிய வன்முறைகள் நிலக்கிழாரிய அரசியலதிகாரத்தின் வெளிப்பாடா?

சாதிய வன்முறைகள் நிலக்கழாரிய அதிகாரம் வீழ்ந்த்தன் எதிர்வினளவே, சாதிய தாக்குதல் சம்பவங்களின் காரணங்களில் 90 சதவீதம் புதிய நிலைமையின் கீழ் தலித்துகள் பெறும் சமூகவாய்ப்ப்புகளையும் உரிமைகளையும் தடுக்கும் நடவடிக்க்களாகவே உள்ளன, அவை பின்வரும் களங்களில் நடக்கன்றன,

 • 1.   பொதுவிடங்களில் சம உரிமைக்காக

கோவில், ஊர்பொதுச்சாலை, சுடுகாடு, கடைகள், நீர் நிலைகள் போன்றன.

 • 2.   அரசியல் களத்தில் சம உரிமைக்காக

கட்சியை தேர்வுசெய்தல், ஒலிபெருக்கிவைத்தல், பிரச்சாரம் செய்தல், தேர்தலில் வாக்களித்தல், தேர்தலில் நிற்றல், கொடியேற்றுதல், பதாகை வைத்தல் போன்றன.

 • 3.   தனிநபர் உரிமைக்காக

சைக்கிள் மோட்டார்சைக்கிளில் ஏறிசெல்லும் உரிமை. திருமணத்தேர்வுரிமை, பிறர் முன்னிலையில் சத்தமாகப் பேசுதல், சிரித்தல், ஆடுதல், நாய்வளர்த்தல் அதன் இணைச்செர்க்கை உரிமை. கால்நடைகள் வளர்க்கும் உரிமை போன்றன.

 இந்த மூன்று தன்மையில் வீழ்ந்துவரும் தமது நிலக்கிழாரிய சாதியாதிக்கநிலையைத் தக்க வைத்துக் கொள்வதே இவற்றின் பொது அம்சம் ஆகும். இந்தப பிரிவினர், கிராமப்புறங்களில் உள்ள் புதுப்பணக்கார சாதியரசியல் பிழைப்புவாதிகளின் தூண்டலாலேயே பெருங்கும்பலாக அணிதிரள்கின்றனர். இத்திரட்சிக்கான எந்த பொருளியல் அடிப்படையோ நலன்களோ இல்லை. வாக்குவங்கி அரசியல் பிழைப்புவாதிகள சாதியைப் பயன்படுத்தி ஆதாயமடைய பெரும்சாதிய வன்முறையைத் தூண்டுவதும் மற்றொரு முக்கிய காரணியாகும். பொதுவிடத்தில் சுயமரியாதைக்கான கோரிக்கையும் தனிநபர் உரிமைக்கான கோரிக்கையும் சமூக சமத்துவத்துக்கான கோரிக்கைகளும் பழைய சாதிய நிலக்கிழாரிய அமைப்பின் மீதமிச்சங்களுக்கெதிரான இறுதிப் போராட்டமே.

 இந்த சாதிய இழிவுகள சமூகத்தின் பொதுப்போக்காக இருந்த நிலை மாறி இன்று சில பகுதிசார்ந்த சிக்கலாக மாறியுள்ளது. இந்நிலையில் இதுபோன்ற சாதிய இழிவுகளை வீழ்த்துவது முன்பை விட எளிதானதாகி இருக்கிறது. இதற்கு சாதிய நிலக்கிழாரிய அமைப்பில் விழுந்த சரி செய்ய முடியாத ஓட்டையே காரணம். சாதியப் படிநிலையான உற்பத்திமைப்பின் தகர்வு. மக்களின் சுதந்திரமான இடப்பெயர்ச்சி, தகவல் தொடர்பு வளர்ச்சி, கல்வி, வரலாற்றில் இல்லாத அளவுக்கு சாதிகளைத்தாண்டி உறவாடக்கூடிய அளவில் பெருநகரங்களின் பெருக்கம். இன்னும் சொன்னால் தேசங்கடந்த பாட்டாளி மக்களின் புலப்பெயர்வு என மிக விரைவான மாற்றத் திசையில் பயணித்துவருகிறது.

 தவிர தாழ்த்தப்பட்ட இளைஞர்களும் பெண்களும் சுயமரியாதை உணர்வும் அரசியல் உரிமை குறித்த விழிப்புணர்வும் கொண்டவர்களாக இந்தியாவெங்கும் வலிமை பெற்றுள்ளனர். கல்வி பொருளாதாரம் போனற் துறைகளில் தமது பங்குக்கான மோதலில் பங்கேற்கிறார்கள். இது வன்முறையால் எதிர்கொள்ளப்படுவது இநத் சம்பவங்களின் போக்காகும்.

 தவிர சாதியச் சிக்கலின் மையக்கண்ணி அதன் அகமணமுறை அமைப்பில் உள்ளது. ஒவ்வொரு சாதியும் ஒரு இனக்குழுவாக தம்மைக் கருதிக்கொள்கின்றன. தவிர ஒவ்வொன்றும் தமக்கேயான தனித்த பண்பாட்டுப் பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ளன. எனவே அகமண அமைப்பு முற்றிலுமாக வீழ்த்தப்படும் வரை இச்சிக்கல் தொடரும். அகமண அமைப்பு இன்றைய நிலையில் பல தாக்குதல்களுக்கு ஆனாலும் அதை முறிக்கும் வகையில் அரசின் பாத்திரம் இல்லை. தேர்தல் அரசியலில் சாதியப் பெரும்பான்மைவாதம் ஆதாயம் தரும் முதலீடாக இருப்பதால் சாதியம் பிரதிநிதித்துவ அரசியலில் மறுமுதலீடு செய்யப்படுகிறது. எனவே சாதியம் வேறு வகைகளில் உசுப்பேற்றப்படுகிறது. சாதிய திருமணத்தகவல் மையங்கள் இணையத்தில் இயங்குகின்றன. இவையெல்லாம் சாதியை புதிய வடிவில் தக்கவைக்க முயன்றாலும், இது முருங்கைமரத்தை விட்டு இறங்கிவிடப்பட்ட பேய் தான்.

சாதியம் நவீன வடிவல் தக்கவைக்கப்படல்?

 சாதிய அமைப்பு தகர்க்கப்படவில்லை அது நவீனவடிவத்தில் தகவமைத்துக் கொண்டுள்ளது என்பது நமது மற்றொரு மையக்கேள்வி. முதலில் எந்வொரு பழைய அமைப்பும் தனது நிலையை புதியவற்றில் உறுதிப்படுத்திக்கொள்ள போராடுவது இயல்பே, இராண்டாவது சாதியமைப்பு முதலாளித்துவ வடிமெடுப்பது சாத்தியமில்லை.

 எதொன்றும் நிலவுவதற்கு அதன் இருப்புக்கான தேவை அவசியமானது. சாதி வெட்டியுழைப்பையும் மலிவுழைப்பையும் வழங்கி வந்ததுவரை அது பாதுகாக்கப்பட்டது. அதில் நிலவுடைமையாளர்களுக்கு நேரடியான அன்றாட நலன் இருந்துவந்தது. எனவே சாதியமைப்பை நிலைநிறுத்தி வந்தது.

 முதலாளித்துவமும் வாய்ப்புள்ள இடங்களில் அதைப் பயன்படுத்திச் சுரண்டுகிறது. ஆனால் இவற்றுக்கிடையிலான பாகுபாடு என்னவெனில் சாதியடுக்கை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூக அமைப்பு முதலாளித்துவ உற்பத்தியமைப்புக்கு ஒரு தொழிற்பிரிவினையாகத் தேவை இல்லை. மேலும் தச்சர், கொல்லர், குடியானவர், என்ற கட்டாயத் தொழிற்பிரிவினை எந்திரத் தொழிற்பிரிவினையாக மாறிவிட்டதுடன் அத்தொழில் பிறப்பினடிப்படையில் ஒதுக்கப்படுவதாக இல்லை. தவிர தொழில் மாறுவதை யாரும் தடுக்கவோ கட்டாயப்படுத்தவோ முடியாது என்பது நிலக்கிழாரிய உற்பத்தி அமைப்பிலிருந்து மாறுபடும் அடிப்படை மாறுபாடாகும்.

 அதிகார முறையில் நிலவுடைமையின் எதேச்சதிகார முறையை முதலாளித்துவ அமைப்பால் நடைமுறைப்படுத்த முடியாது. ஏனெனில் உழைக்கும் மக்கள் தமது தீரமிக்க போராட்டங்களால் சுதந்திரக் கூலி என்ற நிலையை அடைந்துள்ளனர். முதலாளித்துவப் பொருளியல் தலையீடு அதைத் துரிதப்படுத்தி வைத்துள்ளது. முதலாளித்துவப் பொருளுற்பத்தியில் சாதிய உறவுகளைப் பயன்படுத்தும் முயற்சிகளை செய்கின்றனர். தொழிலாளர் ஒற்றுமையை பலவீனப்படுத்த சாதியை ஒரு வசதியாக முதலாளிகள் பயன்படுத்துகின்றனர். தமது சொந்த சாதியைச் சேர்ந்தோரை பணியில் அமர்த்துகின்றனர். ஆனால் சாதிய உறவு உழைப்புச்சந்தையில் நிலவும் போட்டிக்கு ஈடுகொடுக்கும் வரை மட்டுமே அதனால் சாதியுடன் பயணப்பட முடிகிறது. இந்தக் களத்தில் என்று அது தோல்வியைத் தழுவுகிறதோ அன்றே சாதி தொழிற்சாலையை விட்டு வெறியேற்றப்படுகிறது. தமது சொந்த சாதிக்காரர்களை விட மற்றவர்கள் மலிவான கூலிக்கு வந்துவிட்டால் சாதி உறவு அறுந்துவிழுகிறது.

 உதாரணத்திற்கு இன்று நாடு முழுக்க வடமாநிலங்களின் பின்தள்ளப்பட்ட மாநில மக்கள் மலிவுழைப்புத் தொழிலாளிகளாக வந்த பிறகு கவுண்டர், நாயுடு, நாடார் உட்பட அனைத்துத் தொழிலதிபர்களும் சாதி மட்டுமின்றி தேசங்கடந்தும் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்துகிறார்கள். சிறு உணவகங்களில் இருந்து பெரிய சங்கிலித்தொடர் நிறுவனங்கள் வரை இந்நிலைமையை நாம் காண்கிறோம்.

 எனவே முதலாளித்துவ உற்பத்திமுறைக்குள் சாதி நவீன முறையில் காக்கப்படுகிறது என்பது துண்டுதுண்டான சில உதாரணங்களில் புலப்படும் தோற்றப் போலிகளே, மூலதனத்தின் இயங்கியல் போக்கைத் தவிர்த்துவிட்டுப்பார்க்கிற மனம்போன தர்க்கமே, 

முதலாளித்துவ உற்பத்தி என்றால் இங்கு சிறுஉடைமைகள் ஒழிக்கப்பட்டிருக்க வேண்டும். ஜனநாயகம் மேலோங்கியிருக்க வேண்டும்?

முதலில் நிலத்தில் சிறுவுடைமை என்பதே முதலாளித்துவத் தலையீட்டின் விளைவே, தவிர முதலாளித்துவ உற்பத்தி ஆதிக்கத்திற்கு வந்துவிட்டாலே முற்ற முழுதான ஜனநாயகம் தழைத்தோங்கும் என்ற புரிதலில் எழும் கேள்விகள் முற்றிலும் மார்க்சிய விரோதமானவை. அமெரிக்கா மாபெரும் உதாரணம். இன்னும் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களுக்கு எதிரான பாகுபாடு இங்குநிலவும் சாதிய தீண்டாமை ஒதுக்கலோடு எவ்விதத்திலும குறையாதது. அது இன்னமும் நடைபெற்று வருகிறது. ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் நிலமற்றவர்களாகவும் நகர்ப்புற சேரிவாசிகளாகவும் இருக்கின்றனர். இன்னமும் வெள்ளையர்கள் அவர்களோடு திருமண உறவு வெளிப்படையாக வைத்துக்கொள்வதில்லை. 1776 முதல் 1886 வரை அமெரிக்க முதலாளித்துவம் நேரடி மனித அடிமையுழைப்பைக் கொண்டு சுரண்டியதை நினைவில் கொள்க,, எனவெ முதலாளித்துவ வளர்ச்சி சமூக நீதியைக் கொண்டுவரும் என்ற எதிர்பார்ப்பு அராஜக வளர்ச்சி கொண்ட முதலாளித்துவத்தைப் புரிந்துகொள்வதில் உள்ள அடிப்படைப் பிழையாகும்.

முதலாளித்துவம் தனது வளர்ச்சிப் பாதையை மூலதனம் என்ற சூறாவளி இழுக்கும் திசையிலேயே வகுத்துக்கொள்ளமுடியும், மூலதனம் தன் சொந்த இயங்குவிதியைக் கொண்டுள்ளது. அதன் இயக்குவிசை லாபம். மலிவுழைப்பை உறிஞ்சுவது உபரியைக் கொள்ளையிடுவது என்ற லட்சியத்தைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது,

விளையும் சமூக போக்குகள் அனைத்தும் அதன் அராஜகப் போக்கில் நடக்கும் பக்கவிளைவுகளே, முதலாளித்துவம் தன் வளர்ச்சிப் போக்கில் தீவிரமான முற்போக்கு அரசியல் தலையீடு செய்வதற்கான தொடக்க்கால சுதந்திர முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டம் முடிவுக்கு வந்துவிட்டது, ஏகாதிபத்திய சகாப்த்த்தில் மிக சீரான ஒரு திட்டமிட்ட ஒரு முற்போக்கு சமுதாயக் கட்டமைப்பு ஏன் அமைக்கப்படவில்லை என்பது போன்ற கேள்வி மிக அப்பாவித்தனமானது. அபத்தமானது.

 சிறு உடைமை ஒழிப்பு என்பது அதன் அரசியல் கடமை அல்ல. முதலாளித்துவம் தன் வழியில் தடையாக இருக்கும் அனைத்தையும் மூன்று போக்குகளில் மாற்றியமைக்கிறது. ஒன்று முதன்மைத் தேவையுள்ள பகுதிகளில் எதிரானதை அழித்தல். இரண்டு இரண்டாம் தேவையுள்ள பகுதிகளில் மாற்றியமைத்தல் மூன்று உடனடித்தேவையற்றதை விட்டுவைத்தல் என்கிற போக்கே தொடர்கிறது. இப்போக்கிலேயே அது புறவினையாற்றுகிறது. எனவே முதலாளித்துவத்தை ஒரு சமூக சீர்திருத்தவாதியாக சித்தரிப்பது ஒரு கோட்பாட்டு அபத்தம்,

பெருமுதலாளித்துவ () சார்புமுதலாளித்துவ () தரகுமுதலாளித்துவ முரண்பாடுகளை திட்டத்தில் வைத்திருக்கிற கட்சிகளின் நிலைபாடுகளை சரிதானே?

 பல்வேறு முரண்பாடுகளை அடையாளம் காண்பதோடு திட்டம் சரியான திசைவழியை அடைந்துவிடாது. முதன்மை முரண்பாட்டை அடையாளம் காண்பதே புரட்சியின் திறவுகோல், பல கட்சிகள் இத்தகைய முதலாளித்துவ முரண்பாட்டை அடையாளம் கண்டாலும் முதன்மை முரண்பாடு நிலவுடைமை முரண்பாடு என்றே தொடர்ந்து திட்டத்தில் குறித்து வருகின்றனர். எனவே முக்கிய முரண்பாடு அடிப்படை முரண்பாடு என்று முன்வைத்தாலும் முதன்மை முரண்பாட்டை அடையாளம் காணாவிட்டால் எந்த பயனும் இல்லை. மாவோ சொன்னது போல முதன்மை முரண்பாடே மற்ற முரண்பாடுகளின் இருத்தலையும் வளர்ச்சியையும் தீர்மானிக்கிறது. அம்முரண்பாட்டின் தீர்வே மற்ற முரண்பாடுகளின் தீர்வுக்கு வழிசமைக்கிறது, எனவே நாம் முதன்மை முரண்பாட்டை அடையாளம் காண வேண்டும்.

 நாம் மேற்கூறியவாறு நிலவுடைமை அதிகாரம் தகர்ந்து போயுள்ள நிலையில் இந்திய பெருமுதலாளித்துவமே முதன்மை முரண்படாகும்.

அரசின் வர்க்கத்தன்மை

 ஒரு அரசின் வர்க்கத்தன்மையை எவ்வாறு அறிந்து கொள்வது. தோழர் லெனின் சொன்னது போல் ஒரு அரசின் பத்தாண்டு பட்ஜெட்டை ஆராய்ந்தாலே அந்த அரசின் வர்க்கத்தன்மையைத் துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.

புரட்சியின் பாதை சீனப்பாதையா ரஷ்யப்பாதையா?

 இது அடிப்படையில் மிகத் தவறான ஒப்பீடாகும். மார்க்சியத்தை மதநுலாக்கும் முயற்சியாகும். மார்க்சியம் அனைத்து சமூகஅமைப்பு அரசியல் பண்பாடு எதிர்காலம் பற்றிய ஜோசிய ஏடு அல்ல. அது உண்மையில் இயற்கை சமூகம் மற்றும் வர்க்கப்போராட்டத்தின் வளர்ச்சி விதிகளைச் சொல்லித்தரும் பாடமே. எனவே ஒவ்வொரு மீச்சிறு பகுதியிலிருந்து உலகளவில் தனித்த ஆராய்ச்சி மற்றும் வேலைத்திட்டத்துடன் அணுக வேண்டும். எனவே வர்க்கப்போராட்டம் வளர்ச்சியுறாத இன்றைய நிலையில் புரட்சியின் பாதை பற்றிய முடிவுக்கு வருவது தவறான முன்கணிப்புகளுக்கும் கற்பிதங்களுக்கும் இட்டுச்செல்லும் வாய்ப்பு அதிகம்.

ஜனநாயகப் புரட்சியா சோசலிசப்புரட்சியா?

 ஜனநாயகப்புரட்சியின் மையக்கடமையான நிலவுடைமை ஒழிப்பு ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது காலாவதியான முழுக்கமாகிவிட்டது. இந்த மாற்றம் எப்படி சாத்தியம் என நடக்கும் விவாதத்தில் கேட்கப்படும் மையக்கேள்வி நிலவுடைமை வர்க்கம் எப்படி தனது நலனை தானாகவே விட்டுவிடும் என்பதுதான். இது கோட்பாட்டுக் கேள்வி. 

 • 1.   முதலில் அரசியல் அதிகார அடிப்படையில் நில்வுடைமை மற்றும் ஏகாதிபத்தியத்திடமிருந்து புரட்சி நிறைவுற்றது, அதிகாரத்தைக் கைப்பற்றிய முதலாளித்துவ வர்க்கம் தனது வளர்ச்சிப் போக்கில் நிலவுடைமை எச்சங்களை ஒழித்துவருகிறது, இங்கு நிலவுடைமை என்ற உடைமை வர்க்கம் தன் உடைமை வர்க்கம் என்ற நிலையை இழந்துவிடவில்லை. மற்றோரு உடைமைவர்க்கமாக தன்னை உயர்த்திக்கொண்டுள்ளது. ஒரு நிலக்கிழார் அரவை ஆலை, சினிமா கொட்டகை, பெட்ரோல் நிலையம், பயணிகள வாகனம் மற்றும் சரக்கவாகன உடைமை. சிறு சிறு தொழிற்சாலைகள். வியாபாரத்தலங்கள் என்று தொடங்கி காப்ப்பரேட் கல்வி முதலாளிகளாகவும் கார்ப்பரேட் முதலாளிகளாகவும் மாறி இருக்கும் இன்றைய நிலை வரை அவர்கள் ஒரு உடைமை வர்க்கமாக மேல்நிலையாக்கம பெற்றுள்ளனர். இது அவர்களுக்கு அணுகூலமான மாற்றமே, மேலும் முதலாளித்துவ ஊடகங்கள் நவீன வாழ்க்கை என்ற பெயரால் நிலவுடைமைச் சமூகத்தின் பண்பாட்டின் மீது தொடுக்கும் கேலியும் அச்சமூகம் தன்னை முதலாளித்துவ மேட்டுககுடிகளாக மாற்றிக்கொள்வதில் தீவிரம் காட்டவைத்தது. பார்ப்பனர்கள் தொடங்கிவைத்த இந்த நகர்வு இன்று தாழ்த்தப்பட்டோர் வரை வந்துள்ளது.

 தவிர பிரிட்டிசார் தமது தலையீட்டில் இந்நாட்டின் நிலவுடைமையின் மைய அதிகாரத்தை ஒழித்துவிட்டு காலனிய முதலாளித்துவ அரசு எந்திரத்தை நிறுவியதிலிருந்து நிலப்பிரபுத்துவம் அடிப்படையில் தகர்க்கப்பட்டது என்பதைப் பார்க்க வேண்டும். எனவே நிலப்பிரபுத்துவ ஒழிப்பு என்பது அதன் மீத மிச்ச ஒழிப்பு என்றே இன்றைய நிலையில் பொருள்பட முடியும்.

 எனவே மீத மிச்சத்தை ஒழிப்பது என்பது ஒரு புரட்சியின் மையக்கடமை ஆக முடியாது. அது முதன்மை முரண்பாடாக இருக்க முடியாது. எனவே புரட்சியின் கட்டம் என்பது ஜனநாயகப் புரட்சி அல்ல. 

பார்ப்பனியமே இந்திய முதலாளித்துவ ஆளும் வர்க்க கருத்தியல்

பார்ப்பனியத்தின் சாதிய சமுக அமைப்பைப் பாதுகாக்கும் கருத்தியல் இன்று இந்திய ஆளும்வர்க்கத்திற்கு தேவைப்படவில்லை, எனவே பார்ப்பனியத்தில் இந்திய பெரு முலதனத்துக்கு சேவை செய்யும் இந்து / இந்தி / இந்தியா என்ற கூறுகளுக்கே இந்திய ஆளும்கும்பல் முதன்மையளித்துவருகிறது, ஏனெனில் இவை முன்றுமே இந்திய ஆளும் வர்க்கத்தின் ஒற்றைச்சந்தை பெருஞ்சந்தை என்ற கொள்ளைத் திட்டத்துக்கு சேவை செய்கிறது.

சோசலிசத் தற்சார்பே இன்றைய கட்டத்தின் மாற்றுத்திட்டம்

 தலைப்பெருத்த பெருமுதலாளிய ஏகபோக மூலதனத்தை தேசிய மூலதனமாக்குவதும் வேளாண்மையை ஒட்டுமொத்தமாக முதலாளித்துவ எற்றுமதிப் பொருளாதாரத்திலிருந்து விடுதலை செய்வதும் உடனடிக்கடமைகள், நிலத்தை தேசியமயமாக்குவதை மையக்கடமையாக்க் கொண்டு நிலஉடைமைகளை கைப்பற்றி நிலச்சீர்திருத்தம் செய்வது கூட்டுப்பண்ணையாக்குவது என சோசலிசத்திட்டத்தை நடைமுறைப் படுத்துதல் உடனடித் தேவை,

இதுவே மக்களின் துன்பங்களுக்கு விடுதலை கொடுக்கிற உயிரோட்டமான புரட்சிப் பாதையாகும்.

தற்சார்பு?

 தற்சார்பு என்ற கோட்பாடு நமது திட்டத்தின் மிக ஆழமான வலியுறுத்தப்பட வேண்டியது என்றே கருதுகிறோம். அராஜகமான முறையில் முதலாளித்துவத்தின் வரைமுறையற்ற தொழில்மயமாக்கத்தின் பின்னே வளர்ச்சி என்று சொல்லிக்கொண்டு செல்லும் இந்திய மையவாத இடதுசாரிப் போக்கிற்கு எதிராக முதலாளித்துவத் தொழில்மயமாக்கலை விமர்சனப்பூர்வமாக அணுகும் விதத்திலும் இன்று பூமியின் இருத்தலையே அச்சுறுத்தும் முதலாளித்துவ ஏற்றுமதிசார் பொருளாதாரத்திற்கு மாற்றாக சோசலிசத் தற்சார்பை முன்வைக்கிறோம். இன்னும் துல்லியமாக சொன்னால் உள்ளார்ந்த வளர்ச்சிக்கோட்பாட்டை வளர்த்தெடுப்பதும் சோசலிசம் என்பதன் அரசியல் உள்ளடக்கம் அதன் இறுதியர்த்ததில் சமத்துவமும் தற்சார்புமே என்ற உள்ளடக்கத்தில் மாற்று அரசியல் திட்டத்தை முன்வைப்பதே மிக அவசியம் எனக் கருதுகிறோம். இயற்கைவளங்களைக் கையாளுதல் வேளாண்மை-தொழிற்துறை மறுசீரமைப்பு. கல்வி, சுகாதாரம் என எல்லா களங்களிலும் சோசலிசமும் தற்சாற்புமே உள்ளடக்கமாக இருக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே

சோசலிச தற்சார்பே நமது மாற்றுத்திட்டம் 

இதுகாறும் நீடித்த தத்துவார்த்த கோட்பாட்டுப்பார்வையில் என்ன பிழை?

  வரலாற்றின் வளர்ச்சிப் போக்கை அதன் வளர்ச்சியில் வைத்துப் பார்க்கத்தவறினோம். வளர்ச்சியடைந்த உற்பத்திமுறை, வளர்ச்சியடைந்த ஆளும் வர்க்கம், வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நவீன அரசு எந்திரத்தைக் குறைத்து மதிப்பிட்டோம். வரலாற்றை அதன் வளர்ச்சிக்கட்டத்தில் புரித்தவறி அது இன்னும் வளராத நிலையில் இருப்பதாகக் கருதி வரலாற்று வளர்ச்சியைப் பற்றிய ஒரு வலதுசாரிக்கண்ணோட்டத்தை வெளிப்படுத்தினோம்.

 நடைமுறையில் முடிவில்லாமல் முதலாளித்துவ சீர்திருத்தப் போராட்டங்களுக்காய் போராடி திருத்தமுடியா சீர்திருத்தவாத நிலையில் நம்மை இருத்திக்கொண்டோம்.

 இந்த தத்துவார்த்த கோட்பாட்டு நடைமுறை திசைவிலகல்களே இன்று வரை எம்.எல் அரசியல் இயக்கப்போக்கத் தவறாக வழிநடத்துகிறது. இடது தீவிர நடைமுறை கொண்ட சீர்திருத்தவாதிகளாக நம்மை காலம் தோறும் கால்தேய ஓடிக்களைக்க வைக்கிறது.

 நிகழ்காலத்தில் ஊன்றி நின்று எதிர்காலத்தை சமைப்போம்

- தங்கப்பாண்டியன், சோசலிசமையம், தமிழ்நாடு

Pin It