விருதுநகர் ஆண்டு விழா
தலைவரவர்களே! வாலிப தோழர்களே! மற்றும் பல சங்கத்தினர்களே! இன்று இந்த ஆண்டு விழாவுக்காக வந்த எனக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கும், என்னிடம் காட்டிய அன்புக்கும் ஆர்வத்திற்கும் நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன். இந்த ஆடம்பர வரவேற்பும் உபசாரப் பத்திரங்களும் எவ்வளவு உணர்ச்சியுடையதானாலும் கிளாச்சியாய் இருந்தாலும் ஏதோ ஒரு அளவுக்கு இயக்க பிரசாரத்திற்கும் வளர்ச்சிக்கும் ஊக்கமூட்டுவதற்கும் மக்கள் கவனத்தை இழுப்பதற்கும் பயன்படுகின்றது என்று சொல்லப்படுவதாய் இருந்தாலும் இப்போது வரவர எனக்கு இவைகள் ஒரு சடங்கு முறை போலவே தோன்றுகின்றன. இந்தப்படி வாயில் சொல்லிக் கொண்டே நானும் இந்த காரியங்களுக்கு உடன்பட்டுக் கொண்டே வருகின்றேன் என்றும் இவை அனாவசியம் என்றோ தவறு என்றோ பட்டவுடன் நிறுத்திவிட வேண்டியதே கிரமமாகும் என்றும் சொல்வதில் குறை இருப்பதாக நினைக்கவில்லை.
ஆனால் இப்போது நிறுத்தப்படுவது சிலருக்கு அதிருப்தியாகவும், சிலருக்கு விஷமம் செய்ய இடம் கொடுப்பதாகவும் இருக்கக்கூடும் என்றும் ஒரு சமயம் இயக்கத்தைப் பாதிக்கக் கூடியதாகும் என்றும், சில நண்பர்கள் சொல்வதால் நானும் நீங்களும் வெகு ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதும் சமீபத்தில் நடக்கப் போவதுமான மாகாண மகாநாட்டில் ஊர்வலம் உபசாரப்பத்திரம் மலர் மாலை ஆகிய ஆடம்பரங்களை நிறுத்துவது என்பதை ஒரு தீர்மானமாக நிறைவேற்றிவிட்டு இவைகளை நிறுத்தப்பட வேண்டுமென்று கருதி இருக்கிறேன்.
தோழர்களே! இதுபோலவே இனியும் அனேக விஷயங்கள் சடங்குகள் போல் சு.ம. இயக்கத்திலும், நடைபெற்று வருகின்ற விஷயம் எனக்குத் தெரியும். அவைகளையெல்லாம் சிறிது சிறிதாக குறைத்து வந்து முடிவில் அடியோடு எடுத்து விட முயற்சித்து வருகிறேன். இப்படிப்பட்ட பல காரணங்களால் தான் சு-ம இயக்கம் புரட்சி இயக்கமென்று சொல்லப் படுகின்றது.
ஒரு ஏழைக்கும், செல்வவானுக்கும், ஒரு முதலாளிக்கும் அவனது காரியஸ்தர்களுக்கும், ஒரு எஜமானுக்கும், அவனது அடிமைக்கும், இருந்து வரும் வித்தியாசங்களும் நடப்புகளும், வெறும் சடங்குமுறை போலவும் பழக்க வழக்கம் என்பதை ஆதாரமாய்க் கொண்டும் நடந்து வருகின்றனவே ஒழிய அதில் ஏதாவது நியாயமோ அறிவுக்குப் பொருத்தமான காரணங்களோ இருக்கின்றனவா என்று பாருங்கள். முதலாளி சுகப்படுவது, தொழிலாளி கஷ்டப்படுவது என்பது எதை ஆதாரமாய்க் கொண்டது என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.
பார்ப்பான் மேல்ஜாதி, பறையன் கீழ்ஜாதி என்பதற்கு எது ஆதாரமோ அதுதான் இந்த ஏழை பணக்காரன், முதலாளி தொழிலாளி, என்கின்ற பழக்கத்திற்கும், நடப்புக்கும் ஆதாரமாய் இருக்கின்றது. பார்ப்பான், பறையன், மேல்ஜாதி, கீழ்ஜாதி ஆகியவை கூடாது என்றும் நாம் கூறும்போது நம்முடன் கூட இருந்து யார் யார் நமக்குப் பின் தாளம் போட்டார்களோ அவர்கள் எல்லாம் இப்போது முதலாளி, தொழிலாளி. ஏழை, பணக்காரன் என்கின்ற பாகுபாடும், வித்தியாசமும் ஏன் என்று கேள்க ஆரம்பித்தவுடன் நம்மைவிட்டு ஓட ஆரம்பித்து விட்டார்கள். அதுமாத்திரமல்ல நம்மை குறை கூறவும் ஆரம்பித்து விட்டார்கள். இதன் பயனாய் நமக்கு புதியபுதிய எதிரிகள் உண்டாகிக் கொண்டு வருகின்றார்கள். பணக்காரர்களைவிட சோம்பேரியாய் இருந்து இயக்கத்தின் பெயரைச் சொல்லி வயிறு வளர்த்துக் கொண்டவர்கள் எல்லாம், இப்பொழுது புதிய எதிரிகளாக வருவார்கள். இவை மாத்திரமல்ல இனியும் தாய், தகப்பன், அண்ணன், தம்பி முதலியவர்களும் எதிரியாவார்கள். மற்றும் நம்ம பின்னால் மேலுக்காய் திரிந்து கொண்டிருந்த தோழர்களைப் பற்றியோ வென்றால் சொல்ல வேண்டியதேயில்லை. இனி நாளாக நாளாக இவ்வியக்கத்திற்கு ஏழை மக்களும் பாடுபட்டு உழைத்து தங்கள் பயனை அன்னியர்கள் அனுபவிக்கவிட்டுக் கொண்டு கஷ்டப் படுகின்ற மக்களுந்தான் நமக்கு உற்ற துணைவர்கள் ஆவார்கள்.
பணக்காரர்களை நம்பி அவர்கள் தயவால் சோம்பேரியாய் இருந்து வாழ்ந்து வரும் மக்கள் ஒருநாளும் நமக்கு உதவி புரிய மாட்டார்கள். இவர்கள் சங்கதிகளே இப்படியிருக்குமானால் அரசாங்கத்தினரின் யோக்கியதையைப் பற்றி நான் சொல்ல வேண்டுமா? ஆகவே மேற்கண்ட எதிர்ப்புகளைச் சிறிதும் லட்சியம் செய்யாமல் தைரியமாய் தலை கொடுத்து அவைகளை சமாளித்தாக வேண்டும் என்பதில் குற்றமென்ன என்பதை யோசித்துப் பாருங்கள்.
நாம் யாரை விரோதித்தாலும் யாரை நேசித்தாலும் நமது கருத்து ஒன்றேயாகும். அதாவது படித்தவர்கள் என்றும், பணக்காரர்கள் என்றும், அரசாங்கத்தார் என்றும் சொல்லிக் கொண்டு ஏழைகளின் ரத்தத்தை எவரும் உரிஞ்சக்கூடாது என்பதேயாகும்.
படித்தவனும், பணக்காரனும், அரசாங்கமும் பாடுபட்டு உழைக்கும் மக்களுடைய நன்மைக்கும், அம்மக்களுடைய உழைப்பின் பயன் முழுவதும் அம்மக்களே அடையும்படியான காரியத்திற்கும் எதிரிகளாய் இருப்பவன் களேயானால் அவன்கள் எல்லோரும் உலகில் இல்லாமல் மறைய வேண்டியவர்களேயாவார்கள். இதற்காக உழைக்காத இயக்கமோ மனிதனோ உலகில் இருப்பதும், இறப்பதும் இனி ஒன்றேயாகும். மற்றும் மனித சமூகத்தினிடம் ஓய்வு சாந்தி நிலவி, பொறாமை, துவேஷம் அசூயை, ஆகியவை ஒழிய வேண்டுமானால் சமதர்மத்தைத் தவிர வேறு வழியில்லை.
(குறிப்பு: 28.02.1933 இல் நடைபெற்ற விருதுநகர் நாடார் பரிபாலன சங்க ஆறாம் ஆண்டு விழாவில் விருதுநகர் நாடார் பரிபாலன சங்கத்தார். இளைஞர் சுயமரியாதை சங்கத்தார். ஆதிதிராவிடர் சங்கத்தார். நித்தியானந்த வாசக சாலை ஆகிய நான்கு சங்கத்தாராலும் அளிக்கப்பட்ட வரவேற்புப் பத்திரத்திற்கு பதிலளித்து பேசியது.
குடி அரசு - சொற்பொழிவு - 12.03.1933