தொடர்புடைய படைப்புகள்

இந்தியாவில் உழைப்பாளி - சுகபோகி என்கிற இரண்டு வகுப்புகள் இருக்கின்றன. இந்த இரண்டு வகுப்புகளுமே பெரிதும் ஏழை என்பதாகவும், பணக்காரன் என்பதாகவும் சமுதாயப் பிரிவுகளைப் பரிணமிக்கச் செய்கின்றன.

எனவே, உண்மையான சமதர்மம் இந்தியாவில் நிலைநாட்டப்பட வேண்டும் என்று விரும்புகின்றவன் மேற்கூறப்பட்ட நிலைமையை மறக்காமல் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது.

ஒருவன் சமதர்மத்துக்கு உழைப்பதானால் அவன் முதலில் ஒரு உண்மையை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.உழைப்பதற்கென்றே பிறந்திருக்கும் வகுப்பு ஒன்று, இவர்களது உழைப்பின் பயனை அனுபவித்துக் கொண்டு சுகபோகியாய் வாழ்வதற்கென்றே பிறந்திருக்கும் வகுப்பு ஒன்று என்று இருப்பதை ஒழிக்க வேண்டும் - கிள்ளி எறிய வேண்டும் என்பதே அந்த அடிப்படை நிலை. இதைச் செய்யாத வரையில் எந்தவிதப் பொருளாதார சமதர்மத் திட்டமும் இந்த நாட்டில் அரை வினாடி நேரமும் நிலைத்து நிற்காது என்பதைச் சமதர்மம் பற்றிப் பேசுவோர் ­நினைப்போர்- ஆசைப்படுவோர் மனதில் கொள்ள வேண்டும்.

நம் நாட்டின் சமூக - பொருளாதார நிலையை நன்றாக அறிந்தபின்னும் பணக்காரனை மட்டுமே குறைகூறும் சமதர்மம் வெறும் பொறாமைச் சமதர்மமேயாகும். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், இந்த நாட்டின் சமுதாய அமைப்பானது, பிறவியின் காரணமாகவே, ஏழையையும் பணக்காரனையும் அதாவது, உழைப்பாளியையும் சுகபோகியையும் உண்டாக்கியிருக்கிறது. உதாரணமாக, இன்றைய சுகபோகிகள் பெரும்பாலும் மேல்சாதிக்காரர்களாகவும், பாட்டாளிகள் அல்லது உழைப்பாளிகள் அனைவரும் கீழ் சாதிக்காரர்களாகவும் இருப்பதைக் காணலாம்.

இன்றைய தினம் ஏதோ ஒரு புரட்சி மூலமோ ஒரு சர்வாதிகாரி மூலமோ இந்த நாட்டில் பொருளாதார சமதர்மப் பிரகடனம் ஏற்பட்டு விட்டதாகவே வைத்துக் கொள்வோம்; அந்தப் பிரகடனத்தின்படி, இந்த நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் இந்த நாட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் பங்கிட்டுக் கொடுத்து விட்டதாகவே வைத்துக் கொள்வோம்.

பிறகு நடப்பது என்ன என்பதை யோசித்துப் பார்த்தால் என்ன விளங்கும்? மறுபடியும் பழைய நிலையே ஏற்படுவதற்கான காரியங்கள் நிகழ்ந்து கொண்டே போய், ஒரு சில வருடங்களுக்குள் பொருளாதார உயர்வு-தாழ்வுகள் தாமாகவே பழையபடி ஏற்பட்டு விடும் என்பதில் சிறிதும் ஆட்சேபணை இருக்காது.

ஏனெனில், பிரகடனத்தில் பொருளாதார சமதர்மம் தான் ஏற்படுமே ஒழிய அதுவும் தற்கால சாந்தியாய் அல்லாமல், சமூக- சமுதாய- சமதர்மம் ஏற்பட இடமில்லை . அது பிறவியின் பேராலேயே தங்கிவிடும்; அது தனது காரியத்தை எப்படிப்பட்ட பொருளாதார சமதர்மத்திலும் செய்துகொண்டுதான் இருக்கும்.

அதுவும் மதத்துக்கும், சாதிக்கும் பெயர்போன இந்த நாட்டு மக்களுக்குள்- கல்வி அறிவற்று மூடநம்பிக்கையில் ஆழ்த்தி வைக்கப்பட்டிருக்கும் இந்த நாட்டுப் பாமர மக்களுக்குள் பிறவிபேதம் நீக்கப்படாதவரை எப்படிப்பட்ட பொருளாதார சமதர்மமும் கடுகளவு மாற்றத்தையும் உண்டாக்கி விடாது. மற்றும், பார்ப்பனரல்லாத சமூகத்தில் கீழ்சாதிக்காரர்கள் என்பவர்கள் எவ்வளவு செல்வம் தேடிய போதிலும் சாதி- மத சம்பிரதாயம் காரணமாக அடிக்கடி சறுக்கி விழுந்து கொண்டு தான் இருக்கிறார்கள்; அவ்வளவோடு மாத்திரமல்லாமல்,சமூகத்தில் தாழ்ந்த நிலையில்தான் இருக்கிறார்கள். ஒரு சிலர் செல்வவான்களாய், கோடீஸ்வரர்களாய் இருந்தாலும்கூட,அவர்கள் சமூகத்தில் கீழ்சாதிக்காரர்களாய்த்தான் இருந்து வருகிறார்கள்.

சமதர்ம வாசனையே சிறிதும் இல்லாதவர்களும் சமதர்மத்துக்குப் பிறவி எதிரிகளாய் இருப்பவர்களுமான பார்ப்பனர்கள் எவ்வளவு ஏழைகளாகவும் எவ்வளவு ‘பாப்பர்'களாகவும் இருந்தாலும், எவ்வளவு சோம்பேறிகளாகவும் எவ்வளவு உழைக்காதவர்களாகவும் இருந்தாலும் மக்களின் சராசரி வாழ்க்கையைவிட மேலாகவும் மனித சமூகத்தில் மேல் நிலையை உடையவர்களாகவும் தானே இருந்து வருகிறார்கள்.

இதனால் தான், பார்ப்பனர்கள் சமுதாய சமதர்மக்காரர்களைக் கண்டால் காய்ந்து விழுவதும் சமுதாய சமதர்ம இயக்கங்களைக் கண்டால் அவற்றை ஒழிக்கச் சூழ்ச்சி செய்வதுமாய் இருப்பதோடு, பொருளாதார சமதர்மக்காரர்கள் என்பவர்களை வரவேற்பது போலவும், பொருளாதார சமதர்ம ஸ்தாபனங்களை ஆதரிப்பது போலவும் காட்டிக் கொள்கிறார்கள்.ஏனெனில், வெறும் பொருளாதார சமதர்மம் பார்ப்பனரை ஒன்றும் செய்துவிடாது. மேலும், பார்ப்பனருக்குப் பொருளாதார சமதர்மம் அனுகூலமானதேயாகும். எப்படி என்றால், இப்போது அவர்களால் பிச்சை வாங்கப்படும் நபர்கள் ஒரு பங்காய் இருந்தால் பொருளாதார சமதர்மத்தில் பார்ப்பனருக்குப் பிச்சை கொடுக்கும் நபர்கள் 10 பங்காக ஆகி விடுவார்கள். அப்போது அவர்களுக்கு (பார்ப்பனர்களுக்கு) சமதர்மத்தில் பகிர்ந்து கொடுக்கப்படும் சொத்துக்கள் தவிர, மற்றும் சாதி, மத சடங்குகள் காரணமாக அதிகப் பிச்சையும் சேர்ந்து ஒவ்வொரு பார்ப்பனரும் ஒவ்வொரு சங்கராச்சாரி, மடாதிபதியாக சுலபத்தில் மார்க்கம் ஏற்பட்டுவிடும். இந்த நிலை மறுபடியும் வெகு சீக்கிரத்தில் பழைய நிலையை அதாவது இன்றைய நிலையை உண்டாக்கி விடும்.

இந்த நாட்டில் சாதியும், மதமும், சிறப்பாகச் சாதி ஒரு கடுகளவு மீதியிருந்தாலும் எப்படிப்பட்ட சமதர்மமும் ஒரு நிமிட நேரத்தில் கவிழ்ந்து போகும் என்பதை சமதர்மிகள் என்பவர்கள் கருத்திலிருத்த வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். மற்றும், சமுதாய சமதர்மத்துக்கு, அதாவது சாதிகளை ஒழிப்பதற்கு என்றால் பணக்காரன் சேருவான். ஏனெனில், எவ்வளவு பணக்காரனாய் இருந்தாலும் 100க்கு 97 பேர் இன்றைக்குக் கீழ் சாதிக்காரர்களாகவே இருக்கிறார்கள். ஆதலால் அவர்கள் சேருவார்கள்.

ஆனால், பணக்காரனை ஒழிக்கப் பார்ப்பனர் சேர மாட்டார்கள். சேர்வதாய் இருந்தாலும் சாதி இருப்பதன் பலனாய் மீண்டும் பணக்காரனை உண்டாக்கிக் கொள்ளலாம் என்று கருதியே சூழ்ச்சித் திறமாய்ச் சேருவான். இந்த நாட்டுக்கு இந்த நாட்டு மக்களுக்கு நன்மை வேண்டும் என்று கருதுகிறவர்கள் இந்த நாட்டின் நிலை என்ன என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றபடி நடக்க வேண்டுமே ஒழிய, மேல் நாட்டைப் பற்றிப் படித்துவிட்டுப் புத்தகப் பூச்சியாய் இருப்பது வீண் பிரயாசையே ஆகும். சாதியை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, சாதி முறையின் ஆணிவேராக இருக்கும் பார்ப்பனனை ஒழிக்கும் முயற்சியே சமதர்மவாதிகளின் முதற் கடமை என்பது நமது அபிப்பிராயமாகும்.

(விடுதலை - தலையங்கம் : 4-9-1973)

- பெரியார் ஈ.வெ.ரா.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.