தமிழ்நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாவற்றையும் பார்க்கும்போது ரஜினி அரசியலுக்கு வருவதுதான் மிகச்சிறந்த வழி என்று தோன்றுகின்றது. எப்ப பார்த்தாலும் வருமானவரி சோதனை, சி.பி.ஐ சோதனை, டாஸ்மாக் கடை சூறையாடப்பட்டது, மக்கள் தண்ணீர் குடத்துடன் சாலை மறியல் என செய்திகளைப் பார்த்துப் பார்த்து சமூக ஆர்வலர்கள் எல்லாம் சோர்ந்துபோய் உட்கார்ந்து இருக்கின்றார்கள். தமிழகமே ஒரே போராட்டக்களமாக மாறியிருக்கின்றது. ஒரு என்டர்டெயின்மென்ட் என்பதே இல்லாமல் போய்விட்டது. முற்போக்குவாதிகளுக்கு எச்சிக்கலை ராஜா, பொன்னார், தமிழிசை, மோடி, அமித்ஷா என தேசபக்தர்களை சுற்றியே பேசுவதும், எழுதுவதும் செய்து செய்து தமிழில் உள்ள கெட்ட வார்த்தைகள் எல்லாம் தீர்ந்துபோய் புதிதாக மாற்றுமொழிகளில் இருந்து சிறந்த கெட்ட வார்த்தைகளை மொழிபெயர்ப்பு செய்து கொண்டு இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மக்களுக்கும் அவர்களுக்காக வேலைவெட்டி இல்லாமல் போராடிக்கொண்டிருக்கும் ஜோக்கர்களுக்கும் ஒரு நல்ல பொழுதுபோக்காக ரஜினியின் அரசியல் பிரவேசம் இருக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம். ஏன் என்றால் ரஜினி மட்டுமே தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் இந்திய அளவில் பாபாஜி என்ற அம்மணகுண்டி சாமியாரிடம் ஆசிபெற்ற ஒரே நடிகர்.

rajinikanth

ரஜினிக்கு எப்போதுமே ஆண்டவனின் அருள் இருந்துகொண்டே இருக்கின்றது. அவர் தன்னுடைய ஒவ்வொரு முடிவையும் ஆண்டவனின் ஆலோசனையின் பேரிலேயே எடுக்கின்றார். இப்போதும் அவர் “ஆண்டவன் கட்டளையிட்டால் தான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்” என்று கூறியிருக்கின்றார். நம் மக்களுக்கு ஒரே குழப்பம் எப்படி ரஜினியிடம் மட்டும் கடவுள் பேசுவார் என்று.  ரஜினி சொல்வது உண்மைதான். அவர் அடிக்கடி கடவுளிடம் பேசுவார்.  கடவுள் என்ன சொல்கின்றாரோ அதை மட்டும் தான் செய்வார். கடவுள் சொல்லாத எதையும் அவர் எப்போதும் செய்தது கிடையாது. ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்திப்பதற்கு முன்னால் கூட அவர் ஆண்டவனிடம் பேசிவிட்டுதான் வந்தார்.

அப்படி அவர் ஆண்டவனிடம் தன் அரசியல் பிரவேசத்தைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போது........ கடவுள் அவர் மண்டைக்குள் இறங்கி “மகனே! சிவாஜி ராவ் கைக்வாட் உனது அவசரம் எனக்குப் புரிகின்றது. ஆனால் நீ மற்றவர்களைப் போல சாதாரண மனிதனல்ல. ஆண்டவனின் அருள் அனைவருக்கும் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. ஆனால் உனக்கு அது கிடைத்திருக்கின்றது. நன்றாக யோசித்துப்பார். உனக்கு நினைவிருக்கும். திரைப்படத்தில் எத்தனை பெண்களுடன் நீ குத்தாட்டம் போட்டிருப்பாய், நிஜவாழ்க்கையில் கூட நீ கிருஷ்ண பரமாத்மாவே வெட்கப்படும் அளவுக்குத்தானே வாழ்ந்தாய். உன் மண்டையில் மயிறு உதிர்ந்து நீ சொட்டையாகி கட்டையில் போகும் நாள் கண்ணுக்குத் தெரிந்த பின்பும் கூட எத்தனை கவர்ச்சி நடிகைகளுடன் குத்தாட்டம் போட்டாய். அது மட்டுமா... உன் பேத்தி வயது உடைய பெண்களுடன் காதல் டூயட் பாடி அதை கலை என்று களிப்புற்றாயே... அதை எல்லாம் இந்த அவசர தருணத்தில் மறந்துவிட்டாயா. நீ அப்படியெல்லாம் ஒருவேளை வாழாமல் இருந்திருந்தால் உனக்கு பாபாஜி, ஸ்ரீராகவேந்திரர், உடுமலைப் பேட்டை உலகானந்தா, பாவாடை சாமியார் போன்றவர்களின் ஆசி கிடைத்திருக்குமா? நான் சொல்வதை இன்னும் கொஞ்சம் பொறுமையாகக் கேள்……

 டாயர் கிழிந்தால் தைத்துப் போட்டுக்கொள்ளலாம். ஆனால் ஜட்டி கிழிந்தால்…..? அதுதான் வாழ்க்கையின் தத்துவம். பாபாஜி பல ஆண்டுகளாக இமயமலையின் சந்து பொந்துகளில் கடும் குளிரில் அம்மணக்குண்டியுடன் ஆராய்ந்து கண்டுபிடித்த இந்த ஆத்ம தத்துவத்தை நீ இப்போது பயன்படுத்திக்கொள்ள வேண்டிய நேரமிது. பாபா படத்தில் மந்திரங்களை சல்லித்தனமான செயல்களுக்குப் பயன்படுத்தி வீணடித்ததுபோல இப்போதும் செய்துவிடாதே. திரைப்படத்தில் எவ்வளவோ நல்ல செய்திகளைக் குறிப்பாக சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, ஐட்டம் சாங் ஆடுவது என மக்களிடம் சொல்லி உனக்கென ஒரு நேர்மையான மக்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கின்றாய். உன்னை ஆதர்சநாயகனாக ஏற்றுக்கொண்ட இந்தக் கூட்டம் தான் உன்னை எங்கேயோ கொண்டுபோய் நிறுத்தப் போகின்றது. ஏற்கெனவே பலபேரை இந்தக் கூட்டம் எங்கேயோ கொண்டுபோய் நிறுத்தியுள்ளது…..

   நீ இந்தத் தமிழ்மக்களுக்காக எவ்வளவோ செய்திருக்கின்றாய். உன் மொக்கை திரைப்படங்களைக்கூட ஆயிரம் ரூபாய், இரண்டாயிரம் ரூபாய் கொடுத்துப் பார்க்க வீட்டில் இருந்த அண்டா, குண்டா, பொண்டாட்டி தாலி என அனைத்தையும் அடகுவைத்த ரசிகனின் வாழ்வு உயர நீ இதுவரை செய்ததை எல்லாம் பட்டியல் இட்டால் அதை எழுவதற்கே பல யுகங்கள் ஆகும். இன்னும் உனக்குக் கட் அவுட் வைக்க, பால் அபிசேகம் செய்ய, உன் பிறந்தநாளில் அன்னதானம் செய்ய என தன் சொத்தை எல்லாம் இழந்து தெருவுக்கு வந்தவனை எல்லாம் அரவணைத்து, ஆறுதல் சொல்லி ஒரு தாயைப்போல தேற்றி உன் மண்டபத்தில் வாயிலில் பிச்சை எடுக்கும் பெரும்பாக்கியத்தைக் கொடுத்தாயே. உன் மனைவி நடத்தும் பள்ளியில் தமிழக ஏழை மக்களின் குறிப்பாக உன்  ரசிகனின் பிள்ளைகளுக்கு இலவசமாக கல்வியைக் கொடுத்துக் கடை ஏழு வள்ளல்கள் மட்டுமே இருந்த தமிழ்நாட்டில் கடைசியாக உன் பெயரையும் பதிவுசெய்து கொண்டாயே... உன்னைபோல ஒரு யோக்கியனை இதுவரை தமிழ்நாடு பார்த்திருக்குமா? இல்லை கேள்விப்பட்டுதான் இருக்குமா? தமிழ்நாட்டு மக்களுக்காக ஊர் ஊராக தெருத்தெருவாக நீ நடந்து நடந்து நடத்திய போரட்டங்கள் எத்தனை என்று யாருக்காவது தெரியுமா? அப்படி தமிழ் மக்களுக்காக உழைத்த உன் பாதங்களை நக்காதவர்கள் இந்தப் பூவுலகில் யார் உள்ளார்கள்? மோடி நக்கவில்லையா? கங்கை அமரன் நக்கவில்லையா? திருநாவுகரசு நக்கவில்லையா? ஏன் அப்துல்கலாமின் அரசியல் வாரிசு லட்சிய இந்தியா இயக்கத்தின் தன்மானத்தலைவர் பொன்ராஜ் நக்கவில்லையா? இப்படி ஒரு பாக்கியம் இங்கே யாருக்குக் கிடைக்கும் சிவாஜிராவ் கைக்வாட்.

  நீ சினிமாவில் கிழித்தது போதும். வந்துகொஞ்சம் நாட்டையும் கிழிக்கவேண்டும் என உனது ரசிககுஞ்சுகள் மட்டும் அல்லாமல், அரசியலில் கரைகண்ட சாணக்கியன்களும் உனக்காக காத்துக்கிடக்கின்றார்கள். நீ ஊம் என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும் கட்டியிருக்கும் வேட்டியை அவுத்து, அதையே உனக்குப் பொன்னாடையாக போர்த்தி உன்னை தலைவனாக ஏற்றுக்கொள்ள ஒரு பெரும் கூட்டம் உன்வீட்டு வாசலில் கட்டிய வேட்டியோடு காத்துக் கிடக்கின்றது. அதனால் இனியும் நீ தாமதிக்கக் கூடாது. பாபாஜியின் முத்திரையை உடனே பயன்படுத்து. அதற்கு முன்னால் சில செய்திகளை நீ தெரிந்துகொள், நீ ஆன்மீகவாதியாக இருக்கலாம், இமயமலைக்குப் போகலாம். ஏன் சங்கரமடத்திற்குக்கூட போய் சங்கராச்சாரியின் காலைக் கூட கழுவிவிடலாம். ஆனால் கட்சி ஆரம்பித்தால் கட்சியின் பெயருடன் திராவிடம் என்ற வார்த்தையைச் சேர்த்துக்கொள். பின்னாளில் கண்டிப்பாக உனக்கு அது உதவும். மகனே! சிவாஜிராவ் கைக்வாட் போ இருண்டுகிடக்கும் தமிழ்நாட்டிற்கு உன்னிடம் கணக்குக் காட்டாமல் வைத்திருக்கும் கோடிகளால் வெளிச்சத்தைக்கொண்டு வா….."

  ஆண்டவன் சிவாஜிராவ் கைக்வாட்டை தமிழ்மக்களாகிய உங்களை நோக்கி அனுப்பி வைத்துவிட்டார். ஏற்கெனவே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார், கருணாஸ் இன்னும் இத்தியாதி இத்தியாதி நடிகர்கள் எல்லாத்தையும் ஆதரித்து அவர்களுக்குக் கூழைக்கும்பிடு போட்டு உலகில் தலைசிறந்த அடிமைகள் தாங்கள் தான் எனக் காட்டிய  ரசிக மேதாவிகள் இப்போது ரஜினியையும் அழைக்கின்றார்கள், தலைவா வா தலைமை ஏற்க வா என்று. நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை... ரஜினி மானங்கெட்ட ஜென்மமா? இல்லை ரஜினியை கொஞ்சம் கூட சூடு சுரணையில்லாமல் பொறுக்கித் தின்பதற்காக அரசியலுக்கு அழைக்கும்  அவர்களது ரசிகர்கள் மானங்கெட்ட ஜென்மங்களா என்று. இன்னும் என்ன என்ன கருமத்தை எல்லாம் இந்தத் தமிழ்நாடு பார்க்கப் போகின்றதோ எனத் தெரியவில்லை.

- செ.கார்கி

Comments

5 comments

5
SUBASH
தோழர் அருமையாக எழுதுகிறீர்கள்., அசிங்கமான கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தாமல் இருந்தால் நிறைய பேருக்கு நீங்கள் எழுதும் கருத்து சென்று சேரும்., உளவியல் அணுகுமுறை முக்கியமானதுங்க தோழர்., உங்களுக்கு தெரியாதது அல்ல., உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்பவன் நான்.,
சிகா மகேஸ்வரன்
அய்யா தங்கள் தொடர்பு எண்ணை பகிரவும் . அத்தனை கட்டுரைகளும் அருமையாக இருக்கிறது. நிறைய விசங்களில் தங்களால் தெளிவு பெற்றுக்கொண்டு இருக்கிறேன்.
Theiventhiran Kanthia
How could a straight-thinking intellectually oriented man choose (after writing such a wonderful analysis) such an utterly trivial title. When I saw the title, my reaction was to wonder how could a progressive journal like Keetru get into publishing gutter journalism. I was doubly confused when realized who the author was! "I had to do a strong rebuttal" my mind urged. I would have to read the article if I am going to do a rebuttal.So I had to throw away my instinct to throw away the article. When I finished reading the article, my anger had totally dissipated, but now my sides were bursting with uncontrollable laughter which nevertheless was painful. I can't blame the author. He was his usual self and didn't disappoint me.
அகல்
Super!
Sivagurunathan.P
Super

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.