மத்திய அரசு தன்னுடைய அரசு ஊழியர்களுக்கான விடுமுறைப் பட்டியலில் இருந்து பொங்கல் திருநாளை நீக்கி விட்டதாகக் கூறி தமிழ்நாட்டு ஊடகங்களும், தேர்தல் கட்சிகளும், தேசியவாதிகளும், பிற்போக்கு கும்பல்களும் பரப்பி வருகின்றனர். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்று கூறி ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என இந்த கும்பல்கள் களம் கண்டு வருகின்றனர். பழைய நிலப்பிரபுத்துவ பண்பாட்டின் ஒரு கூறான ஜல்லிக்கட்டானது, குறிப்பிட்ட பகுதி சார்ந்த, குறிப்பிட்ட சாதியின் ஆதிக்கத்திற்கான பண்பாடாக இருந்து வந்தது. இன்று சுற்றுலா காட்சிப்பொருளாகவும், விளம்பரங்களுக்காகவும், காளை வணிகம் மற்றும் ஊடகங்களின் நேரலை போன்ற முதலாளித்துவ இலாப நோக்கில் ஜல்லிக்கட்டு பணமுதலைகளுக்குப் பயன்படுகிறது.
மக்களின் உண்மையான பிரச்சினைகளை திசை திருப்ப முயலும் ஆளும் வர்க்கத்திற்கு இத்தகைய கும்பல்கள் ‘பண்பாட்டு சிக்கல்கள்’ என்ற பெயரில் உதவி புரிந்து வருகின்றனர். விவசாயிகளின் மரணம் தமிழ் நாட்டை உலுக்கி வரும் நிலையில் அதனை எளிதாக திசை திருப்ப மேலும் ஒரு பிரச்சினையை இவர்கள் கையிலெடுத்துள்ளனர். அதுதான் பொங்கல் திருநாளிற்கான விடுமுறையை இந்திய அரசு கட்டுப்படுத்த முனைவதாகக் கூறி வருகின்றனர். ஆனால் உண்மை நிலை என்பது அதுவல்ல.
இந்திய அரசானது இரண்டு விதமான விடுமுறை நாட்களை நடைமுறையில் கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் கட்டாயப் பொது விடுமுறை என்று பதினான்கு நாட்களைத் தருகிறது. இதனோடு இணைத்து மூன்று கூடுதல் விடுமுறைகளை கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறை நாட்கள் என்ற வகையில் வழங்கி வருகிறது. பகுதி சார்ந்த, பிரதேசம் சார்ந்த பண்டிகைகளை கொண்டாடும் பொருட்டு இந்த மூன்று கூடுதல் நாட்களைத் தருகிறது. இந்த மூன்று நாட்களை மத்திய அரசு வழங்கியுள்ள கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறை நாட்களின் பட்டியலிலிருந்து மட்டுமே தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.. இந்தத் தேர்வை சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் கூட்டமைப்பு முடிவு செய்து கொள்ளலாம்.
இந்த அடிப்படையில் தான் பொங்கல் பண்டிகைக்கான விடுமுறையை தமிழ்நாட்டைச் சார்ந்த மத்திய அரசு ஊழியர்களின் தலைமை முடிவு செய்து மூன்று கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறை நாட்களில் ஒன்றாக அறிவிக்கிறது. இது காலம் காலமாக நடைப்பெற்று வரும் நிகழ்வாக உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு மட்டுமல்லாமல், ஓணம், மகாசிவராத்திரி, விநாயக சதுர்த்தி, மகர சங்கராந்தி உள்ளிட்ட 12 பண்டிகைகளை குறிப்பிட்ட பிரதேசம் சார்ந்த அதாவது அந்தந்த மாநிலங்களைச் சார்ந்த மத்திய அரசு ஊழியர்கள் தேர்ந்தெடுத்து (மூன்று நாட்கள் மட்டும்) கொண்டாடிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு நடைமுறை படுத்தி வருகிறது..
ஆனால், தமிழ் நாட்டில் உள்ள ஊடகங்கள், தேர்தல் கட்சிகள், தேசியவாதிகள், பிற்போக்கு கும்பல்கள் பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு திடீரென கட்டுப்பாடு விதித்துள்ளதாக கூறி ஆர்ப்பரிக்கின்றன. எப்பொழுதும் அடுத்த ஆண்டிற்கான விடுமுறைப் பட்டியல் குறித்த அறிவிப்பை இந்திய அரசானது ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் வெளியிடுகிறது. அதன்படி 2017 ஆம் ஆண்டிற்கான விடுமுறைப் பட்டியலை கடந்த ஜூன் 24 (2016) ஆம் தேதி அறிவிப்பை வெளியிட்டது. இந்திய அரசின் அறிவிப்பில் கடந்த ஆண்டுகளில் இருந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது, புதிய மாற்றங்கள் எதுவும் இல்லை.
பொங்கல் பண்டிகைக்கான விடுமுறையை தமிழ் நாட்டைச் சார்ந்த மத்திய அரசு ஊழியர்களின் ஒருங்கிணைப்புக் குழு தான் தீர்மானிக்கிறது. மத்தியில் உள்ள இந்திய அரசு தீர்மானிப்பதில்லை. தமிழ் நாட்டைச் சார்ந்த மத்திய அரசு ஊழியர்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் 26 நவம்பர் 2016 அறிவிப்பில் தமிழ்நாட்டைச் சார்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கான விடுமுறைப் பட்டியலில் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அளிக்கவில்லை.
2017 ஆம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை இரண்டாவது சனிக்கிழமையில் வருவதால் அதனை வார விடுமுறையாக எடுத்துக் கொண்டு கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறையான மூன்று விடுமுறை நாட்களை இதர பண்டிகைகளுக்கு அளித்துள்ளனர். ஆனால் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் சனிக்கிழமை விடுமுறை இல்லாததால், சனிக்கிழமை வேலை உள்ள மத்திய அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தனை நாட்கள் சும்மா இருந்து விட்டு நேற்று (09.01.17) முதல் திடீரென தமிழகத்தைச் சார்ந்த ஊடகங்கள் பொங்கல் விடுமுறைக்கு கட்டுப்பாடு விதித்துள்ளதாக பொய் புளுகி வருகின்றன. இந்தப் பொய்யையே மூலதனமாகக் கொண்டு இங்குள்ள அரசியல் கட்சிகளும், தேசியவாத சக்திகளும், இதர பிற்போக்கு சக்திகளும் கூச்சலிட்டு வருகின்றன. இதன் மூலம் தமிழக விவசாயிகள் தண்ணீரின்றி பயிர்கள் கருகி வருவதைக் கண்டு வேதனையடைந்து தற்கொலையும், அதிர்ச்சி மரணமும் அடைந்து வருவதை திசை திருப்பி வருகின்றன. ஆளும் வர்க்கங்கள் தங்கள் மீதான மக்களின் கோபத்தை, ஆற்றாமையை திசை திருப்ப இனவாதத்தை தூண்டி விடுவதன் மூலம் செயல்படுத்துகிறது. இதற்கு மேற்கண்ட சக்திகள் உடந்தையாக இருக்கின்றன.
மோடி அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் அனைத்து மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டு வந்துள்ள நிலையில் இன்றைய அரசாங்கத்தின் மீது ஒரு வித கசப்புணர்வை மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். வர்தா புயலால் பாதிக்கப்பட்ட கடலோர மக்களின் பாதிப்புகளை சரி செய்ய இந்திய அரசும், தமிழக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தண்ணீரின்றி பயிர்கள் கருகியதால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக விவசாயிகள் மனமுடைந்து அதிர்ச்சி மரணமும், தற்கொலை மரணமும் அடைந்து வருகின்றனர். விவசாயிகளுக்கான திட்டத்தில் இந்திய அரசு மற்றும் தமிழக அரசுகளின் தொலைநோக்குப் பார்வை இல்லாதது, ஆற்று வளங்களை சீரழித்தது, மணலைக் கொள்ளையடித்தது, ஏரிகளை ஆக்கிரமித்தது, மாநிலங்களுக்கிடையேயான நீர் பகிர்வில் சரியான தீர்வைத் தராதது குறித்து இந்த அளவிற்கு மேற்கண்ட கும்பல்கள் பொங்கி எழவில்லை
தமிழக மக்களின் இத்தகைய எந்தப் பிரச்சினையும் கவனத்தில் கொள்ளாமல் தமிழகத்தில் அதிமுக கட்சியும் அது பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழக அமைச்சரவையும் கட்சியின் தலைமை மற்றும் ஆட்சியின் தலைமையைக் கைப்பற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறது. அதிமுகவின் இந்த சூழலைப் பயன்படுத்தி அதிமுக தலைமைகளுக்கு நெருக்கடி கொடுத்ததும், பேரம் பேசியும் ஆதாயம் அடைய முயற்சி செய்கிறது பாஜக. இரண்டு கட்சிகளும் தமிழ் நாட்டு மக்களின் உயிர் நாடியான பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் ஆட்சியைப் பிடிப்பதில் முனைப்பு செய்து வருகின்றனர். எதிர்க்கட்சிகளாக இருக்கும் இதர முதலாளித்துவ கட்சிகள் இவற்றில் ஏதேனும் தமக்கு ஆதாயம் கிடைக்குமா என்றெண்ணி இலவு காத்து வருகின்றனர்.
இதனால் அனைத்து முதலாளித்துவ தேர்தல் கட்சிகளும் தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வித முயற்சியையும் செய்யாமல், பெயருக்கு ஏதேனும் சில போராட்டங்களை நடத்தி கண்துடைப்பு செய்து நாடகமாடி வருகின்றன.
பொங்கல் பண்டிகைக்கு மத்திய அரசு ஊழியர்களின் ஒரு பிரிவினருக்கு விடுமுறை அளிக்காதது கண்டிக்கத்தக்கது தான். இது மிகமிக சிறுபான்மையாக உள்ள ஒரு பிரிவினரை உள்ளடக்கியது. ஆனால் தனியார் நிறுவனங்களில் பண்டிகை நாட்களுக்கு கட்டாய விடுமுறை என்ற விதி எதுவும் கிடையாது, ஜனவரி 26, ஆகஸ்டு 15, அக்டோபர் 2 மட்டுமே கட்டடாய விடுமுறையாக உள்ளது. இந்த நாட்களிலும் கூட தொழிலாளர்கள் வேலைக்கு செல்வது என்பது நடந்து வருகிறது, இதற்கு ஆளும் வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளும் ஆதரவாக உள்ளது.
பெரும்பாலான சிறு, குறு தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் ஆகியன தங்களுடைய தொழிலாளர்களுக்கு எந்த பண்டிகைக்கும் விடுமுறை அளிக்காமல் கட்டாய வேலை வாங்கி வருகிறது. பெரும்பாலான வணிக நிறுவனங்கள் பொங்கல் விற்பனைக்காக தங்கள் தொழிலாளர்களை கட்டாய கூடுதல் வேலை நேரத்திற்கு பணிபுரியுமாறு வற்புறுத்துகிறது. அவர்களுக்கு ஒய்வு நேரம் என்பதே கிடையாது. வணிக நிறுவனங்கள் மட்டுமல்ல, உற்பத்திப் பிரிவைச் சார்ந்த சிறு, குறு தொழிற்சாலைகளிலும் இதே நிலை தான் நீடிக்கிறது. பெரும்பான்மையான தொழிலாளர் வர்க்கத்தின் நிலை இவ்வாறு இருக்க இது குறித்து இன்று கூச்சலிடும் சக்திகள் எதுவும் வாய் திறப்பதில்லை.
பண்பாட்டு விழாவான பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை தர வேண்டும் என்று கோரும் முதலாளித்துவ கட்சிகள், தேசியவாதிகள், இதர முற்போக்கு அமைப்புகள் தொழிலாளர்களின் தினமான மே தினத்திற்கு இதுவரை விடுமுறை அளிக்காமல் இருக்கும் இந்திய அரசைக் கண்டித்து எதுவும் செய்யவில்லை. ஏனெனில் மே தினத்திற்கு விடுமுறை கேட்டு போராட்டம் நடத்தினால் அதன் மூலம் எந்த வித ஆதாயமும் அடைய முடியாது. மே தினத்தை கொண்டாட்ட நாளாக மாற்றினால் அது ஆளும் வர்க்கத்திற்கு எதிரான பாட்டாளிகளின் அணிதிரட்டலை தந்து விடும் என்பதால் தான் இந்த கும்பல்கள் மே தினத்திற்கு விடுமுறை வேண்டும் என்று கேட்பதில்லை. தமிழகத்தில் மட்டும் விதிவிலக்காக மே தினத்தன்று விடுமுறை அளிக்கப்படுகிறது.
ஆனால் எளிதில் பற்றிக் கொள்ளும் இனப்பிரச்சினையை கையில் எடுத்து கொண்டு, மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி, தங்களை கலாச்சார காவலனாக காட்டிக் கொள்ளும் இந்த கும்பல்கள், இந்த கலாச்சார காவலன் பட்டத்தைக் கொண்டு மீண்டும் ஆளும் வர்க்கத்தோடு பேரம் பேசி ஆதாயம் அடையத் துடிக்கிறது.
எனவே, பண்பாட்டின் பெயரில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் இத்தகைய சக்திகள், உழைக்கும் மக்களான தமிழக தொழிலாளர்களும், விவசாயிகளும் சந்தித்து வரும் சிக்கல்களை கண்டு கொள்வதில்லை என்பது நமக்கு வெட்ட வெளிச்சமாகிறது. கலாச்சார காவலர்கள் என்ற பெயரில் வளம் வரும் இத்தகைய போலிகள் உண்மையிலேயே மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு எந்த அளவுக்கு முனைப்புடன் செயல்படுகிறார்கள்(?) என்பதை மக்களிடம் தெளிவுபடுத்தி உழைக்கும் மக்களின் உயிர்நாடிப் பிரச்சனைகளை முதன்மைப்படுத்துவோம். அடிப்படை பிரச்சனைகளை திசை திருப்புவதற்காக செய்யப்படும் இத்தகைய முயற்சிகளை அம்பலப்படுத்துவோம்.
குறிப்பு:
இதற்கிடையில் மத்திய அரசு பொங்கல் விடுமுறையை கட்டாய விடுமுறை பட்டியலில் இணைத்து விட்டதாகவும் (இதுவும் பொய்!), இது தங்கள் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என்று அதிமுக சசிகலா, தமிழக முதல்வர் பன்னீர் செல்வம், திமுக உள்ளிட்ட கட்சிகளும், ஊடகங்களும், தேசியவாதிகளும், பிற்போக்கு கும்பல்களும் கூவி வருகின்றன. இல்லாத பிரச்சனையை இருப்பதாகக் கூறி ஆர்ப்பரிப்பு செய்வதும், பின்னர் அது வெற்றியடைந்து விட்டதாகவும் கூறி தமிழக மக்களை இந்தக் கும்பல்கள் ஏமாற்றி வருவது அம்பலமாகி விட்டது.
ஆனால் இந்திய அரசு பொங்கல் விடுமுறையை நீக்கவும் இல்லை, சேர்க்கவும் இல்லை. அது குறித்து எந்த அறிவிப்பு செய்யவில்லை. இந்திய அரசை ஆளும் பாஜகவைச் சேர்ந்த பொன்.ராதகிருஷ்ணன் மற்றும் தமிழிசை சவுந்தரராஜனின் பேட்டிகள் மற்றும் இந்திய அரசின் அரசாணைகள் இதனை உறுதிப்படுத்துகிறது. இதற்காக பொன்.ராதகிருஷ்ணனோ, தமிழிசை சவுந்தரராஜனோ உண்மை பேசுபவர்கள் என்பதாக அர்த்தம் இல்லை. அவர்கள் மேற்கோள் காட்டும் அனைத்து ஆதாரங்களும் இதுவரை இந்திய அரசின் அரசாணைகள் அடிப்படையில் தான் உள்ளது என்பதிலிருந்து இந்த சிக்கல் அணுகப்படுகிறது. மேலும் 2010 ஆம் ஆண்டில் தான் பொங்கல் பண்டிகை கட்டாயப் பட்டியலிலிருந்து கட்டுப்படுத்தப்பட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டதாக பாஜக கூறுவதும் தவறானது. இந்திய அரசின் அரசாணைகள் 2001 ஆம் ஆண்டிலிருந்து தான் இணையத்தில் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த ஆண்டிலிருந்து பொங்கல் விடுமுறை கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறை பட்டியலில் தான் உள்ளது. கட்டாய விடுமுறைப் பட்டியலில் இல்லை. 2001 ஆம் ஆண்டிற்கு முன்னதான இந்திய அரசின் விடுமுறைகள் குறித்தான அரசாணைகள் கிடைக்கவில்லை. அவ்வாறு கிடைக்கப் பெற்றால் பொங்கல் பண்டிகைக்கான விடுமுறையின் வரலாறு மேலும் தெளிவாகும்.
- குறிஞ்சி