கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

Valantine என்ற பெயர் வந்ததற்குச் சுமாராக ஏழு கதைகள் உள்ளன. பின்னாளில் இந்த ஏழு கதைகள் அல்லது சம்பவங்கள் ஒரு கதையாக உள்வாங்கப்பட்டிருக் கலாம். புனித வலன்டைன் என்கின்ற கிறிஸ்தவ பாதிரியார் செய்து வந்த பிரசாரம் காரணமாக, மக்கள் இராணுவத்தில் சேரவேயில்லை என்றும், இதனால் கோபமுற்ற சக்கரவர்த்தி கிளோடியஸ் வலன்டைன் பாதிரியாரை சிறையில் அடைத்ததன் விளைவாக, சிறையில் வலன்டைன் பாதிரியார் இறந்தார் என்றும் அறியப்படுகின்றது. பாதிரியார் இறந்த விதம் குறித்தும் பல உப கதைகள் உண்டு. வலன்டைன் பாதிரியார் பல காதலர்களுக்கு துணை நின்று அவர்களுடைய காதலை நிறைவேற்றி வைத்தபடியால், அவர் காதலர்களின் அன்புக்குரிய பாதிரியாராக அறியப்பட்டார். பின்னாளில் புனித வலன்டைன் தினம் காதல் தினமாக அறியப்பட்டது.

தமிழர் வாழ்வில் ‘காதலர் தினம்’ என்ற ஒன்று தேவையா? அல்லது தமிழர் வாழ்வில் காதல் என்ற ஒன்று இல்லையா? என்று விதவிதமாகக் கேட்போரையும் சற்றுக் கவனிப்போம்.

புலம் பெயர்ந்த தமிழர்கள் பலர் காதலர் தினத்தைப் பழித்தும், இகழ்ந்தும் பேசி வருவதோடு, அது வெள்ளைக்காரனின் பண்பாடு என்று ஒதுக்கித் தள்ளுவதையும் இன்று நாம் பார்க்கின்றோம். காதலர் தினம் உண்மையில் மேல்நாட்டுப் பண்பாடா? தமிழன் எப்போதும் பேசித்தான் திருமணம் செய்தானா? தமிழனுக்கும் காதலுக்கும் காத தூரமா? என்றெல்லாம் கேள்விகள் எம்மவர் மனதில் எழுந்து கொண்டுதான் உள்ளன.

உண்மையைச் சொல்லப் போனால், காதல் விடயத்தில், காதலர் தின விடயத்தில் மேல்நாட்டவனுக்கு தமிழன் அப்பனல்ல, பாட்டனுமாவான்! அந்த அளவிற்குக் காதல் விடயத்தில் புகுந்து விளையாடியவன் தொல்தமிழன்! சங்ககால இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் ஏன் தொல்காப்பியத்திலும் காதலும் காதல் மணமும் எடுத்தாளப்பட்டுள்ளன. இந்தக் காதலர் தினத்தை ஒரு சாட்டாக வைத்து எம் பழம் தமிழர் மரபை நாமும் திரும்பிப் பார்ப்போம்!

தொல்காப்பியத்தில் வருகின்ற கற்பு என்கின்ற இடங்களை ஆராய்ந்தால் அது இல்லறம் என்கின்ற பொருளையே குறிக்கின்றது என ஆய்வாளர்கள் கூறுவார்கள். பத்துவிதமான திருமணங்கள் சங்க காலத்தில் நடந்ததாக நாம் அறியக்கூடியதாக உள்ளது.

1. களவுமணம்

2. தொன்றியல் மரபின் மன்றல்

3. பரிசல் கொடுத்து மணத்தல்

4. சேவை மணம்

5. திணைக் கலப்பு மணம்

6. ஏறு தழுவி மணமுடித்தல்

7. மடலேறி மணமுடித்தல்

8. போர் நிகழ்த்தி மணமுடித்தல்

9. துணல்கையாடி மணத்தல்

10. பலதார மணம்

இதில் களவு மணம் குறித்துச் சற்றுக் கவனிப்போம்.

களவியல் குறித்த பொருள் விளக்கச் சிந்தனை ஒரு நீண்ட பரிணாம வளர்ச்சியின் ஊடாகவே நிகழ்ந்துள்ளது. தமிழ் இலக்கண வரலாற்றில் தொல்காப்பியம் தொடங்கிச் சோழர் கால உரையாசிரியர் வரை இந்த சிந்தனைப் போக்கின் பரிணாமத்தை அறிந்து கொள்ள முடியும்.

தொல்காப்பியர் தமது நூற்பா ஆக்கத்தினை இரண்டு வழிகளில் மேற்கொண்டுள்ளார். முதலாவது-முன்னோர் கருத்தை ஏற்று மொழிவது. இரண்டாவது தாமே படைத்து மொழிவது. களவியலைப் பொறுத்தவரையில் அதன் பொருள் விளக்கத்தை தொல்காப்பியர் தானே படைத்து மொழிந்துள்ளார். ஆகவே தொல்காப்பியர் காலத்து முந்திய களவியல் பற்றிய பொருள் விளதக்கத்தை இப்போது அறிய இயலாமல் உள்ளது.

களவுக் காதல் வாழ்வை பல துறைகளாக அமைத்துச் சுவைபட சங்கப் புலவர்கள் பாடியுள்ளார்கள். காமம் நுகர்வதற்குரிய குமர்ப் பருவமடைந்த எங்கோ பிறந்த தலைவனும் தலைவியும், எதிர்பாராத விதத்தில் ஓரிடத்தில் எதிர்ப்பட்டு, ஒருவரிடத்தில் ஒருவர் அன்பு கொண்டு காதல் கொள்வதனை, இயற்கைப் புணர்ச்சி என்று அக இலக்கணம் கூறுகின்றது. இவ்வாறு சந்தித்து மனமொன்றிய காதலர்கள், மீண்டும் சந்திக்க வேட்கை கொண்டு, முன்பு சந்தித்த இடத்தில், சந்தித்து மகிழ்ச்சி கொள்வது இடந்தலைப்பாடு என்று அழைக்கப்பட்டது. அந்தக் களவுக்கூடல் தலைவனின் தோழனின் உதவியால் நடைபெறும் என்றால் அது ‘பாங்கற் கூட்டம்’ என்றும், தலைவியின் தோழி வாயிலாக நிகழுமென்றால் அது ‘பாங்கியற் கூட்டம்’ என்றும் வழங்கப்பட்டது.

வேட்கை மிகுதியால், களவுக் காதலர்கள் இரவிலும் பகலிலும் தோழியின் துணையால் சந்தித்து, அளாவுதல் உண்டு. இவ்வாறு பகலில் நடைபெறும் காதலர் கூடல் பகற்குறி என்றும், இரவில் நடைபெறும் களவுக் கூடல் இரவுக்குறி என்றும் வழங்கப்பட்டது.

இங்கே ஒரு விடயத்தை நேயர்கள் கவனிக்க வேண்டும். சங்கக் காலத்துக் களவுக் காதல், கற்பு வாழ்விற்கு ஒரு வாயிலாக அமைந்தது. கற்பு என்பதற்கு, இல்லறம் என்ற பொருளையே தொல்காப்பியர் சொல்வது இங்கு கவனிக்கத்தக்கது. ஆகவே அக் களவுக்காதல் புனிதமானது. சங்கக் காலச் சமுதாயம் களவுக் காதலை மதித்தது. போற்றியது. கற்பு வாழ்வுக்கு அதாவது இல்லற வாழ்விற்கு வழி வகுத்துக் கொடுத்தது. சங்கக் காலக் களவுக் காதலின் நெறியைக் குறித்து --

‘களவொழுக்கம் தூயது, களவுக் காதலர் மனமாசற்றவர், மணந்து கொள்ளும் உள்ளத்தவர், களவுக்காதல் வெளிப்பட்ட பின்னரும் வாழ்பவர்’ --

என்று டாக்டர்- வ.சு.ப. மாணிக்கம் அவர்கள் கூறியதை இங்கே நினைவு கூருகின்றோம்.

களவுக் காதலர் மணம் புரிந்து, இல்லறம் என்னும் நல்லறம் இனிது நடத்தலைப் பற்றிக் கூறுவது கற்பொழுக்கம் ஆகும். அகத்தினைக் கூறும் தூய்மையான அறங்களுள் தலையானது, களவு வழிப்பட்ட கற்பு வாழ்க்கையாகும்.

‘காதல் என்பது இன்பத்துள் பேரின்பம், உணர்ச்சியுள் பேருணர்ச்சி, ஆற்றலுள் பேராற்றல், அடிப்படையுள் பேரடிப்படை எல்லோருக்கும் உரியது. நட்பினுள் இருபாலாரையும் இணைப்பது என்பதைச் சங்கத் தமிழர்கள் அறிந்திருந்தார்கள்’ என்று ஆய்வாளர் டாக்டர் -வ சு ப மாணிக்கம் அவர்கள் குறிப்பிடுகின்றார்.

தமிழன் காதலில் திளைத்த பின்பே இல்லறத்தை நாடியவன் என்பதற்கு, காமத்துப்பால் எழுதிய திருவள்ளுவரும் சாட்சிக்கு நிற்கின்றார். அறத்துப்பாலையும், பொருட்பாலையும் விட, காமத்துப்பாலில் நளினமும் இனிமையும் கூட இருப்பதை நேயர்கள் அறிவீர்கள். நறுக்குத் தெறித்தாற்போல் காதலைப் பற்றியும், காமத்தைப் பற்றியும் வள்ளுவர் கூறினாலும், அதிலிருக்கும் பொருளோ எல்லை கடந்தாக உள்ளது.

‘யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்

தான் நோக்கி மெல்ல நகும்’ - திருக்குறள் 1094

என்ற குறளில், தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் நோக்கெதிர் நோக்குகின்றார்கள். தலைவியோ தனக்கே உரிய நாணத்தின் காரணமாக, நிலத்தை நோக்கினாள். தலைவன் பாராதவிடத்து, தலைவி அவனை நோக்கி மெல்லப் புன்முறுவல் செய்தாள். தலைவனுக்குத் தனது உள்ள-விருப்பை, தனது மலரும் முகத்தினால் வெளிப்படுத்தினாள். தலைவனும் தலைவியிடம் தோன்றிய புகுமுகம் புரிதல் மெய்ப்பாட்டால் , அவள் தன்னை மனப்பூர்வமாக விரும்புகின்றாள் என்பதனை அறிந்து கொண்டான் என்று, பார்வையினூடே காதலை படர விடுகின்றார் வள்ளுவர்.

வள்ளுவர் சுட்டிக்காட்டுகின்ற இன்னுமொரு தலைவியோ, வேறு விதப் பார்வையினால் தன் காதலை வெளிப்படுத்துகின்றாள். தலைவனை நேரடியாக நோக்காது, வேறொரு பொருளை நோக்குவதுபோல், முகம் காட்டிக் கொண்டு, ஒரு விழிப் பார்வையால், தலைவனை நோக்கித் தன்னுள்ளே மகிழ்ந்தாள் என்பதனை,

“குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒரு கண்

சிறக்கணித்தாள் போல நகும்.” – குறள் 1095

என்ற குறள் மூலம் வள்ளுவர் அழகாகச் சொல்லிக் காதல் இன்பத்தை வெளிக்கொண்டு வருகிறார்.

பண்டைத் தமிழனின் காதல் வாழ்க்கை முறை, பின்னர் ஆரியர் ஆக்கிரமிப்பின் பின்னர், மறையத் தொடங்கியது. பெண்ணடிமை மிக்க சடங்குகளும், வாழ்க்கை முறைகளும் தமிழன் வாழ்வைச் சீரழிக்க ஆரம்பித்தன. பண்டைத் தமிழர் காலத்தில், காதல் எவ்வவளவு வலுவாக இருந்தது என்பதற்கு ஒரு காரணத்தை எமது நேயர்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். தமிழர்களுக்கு எதிராக எழுதப்பட்ட இராமாயணத்தை, தெள்ளு தமிழில் தேனூறும் சொல்பரப்பி, கம்ப நாடான் மொழி பெயர்த்தான். வால்மீகி இராமாயணத்தில் இல்லாத ஒரு காட்சியை, கம்பன் தனது கம்பராமாயணத்தில் காட்டுகின்றான்.

வில்லை முறித்துச் சீதையை மணப்பதற்காக ராமன் வருகின்றான். வில்லை முறிக்கின்றான். சீதையை மணக்கின்றான். இது வால்மீகி ராமாயணம். கம்பனின் இராமாயணத்திலோ, வில்லை முறிக்க வரும் இராமனை, மேல் மாடத்திலிருந்து சீதை பார்க்கின்றாள். இராமனும் அவளை நோக்குகின்றாள். இருவரது கண்களும் ஒருவரை ஒருவர், முதல் தடவையாக பார்க்கின்றன. காதல் வசப்படுகின்றன. உள்ளக் குறிப்புரைகளைக் கண்களால் பேசிக் கொள்கின்றன. ஒருவரது உள்ளத்தை, ஒருவர் உள்ளம் ஈர்க்கின்றது. இராமன் உள்ளத்தில் சீதையும், சீதை உள்ளத்தில் இராமனும் குடிபுகுந்தனர். தமிழர் காதல் பண்பாட்டின் அடிப்படையான புதுமுகம் புரிதல் மெய்ப்பாடு இங்கே கம்பனால் காட்டப்படுகின்றது. அதனைக் கம்பன் இவ்வாறு எழுதுகின்றார்.

“எண்ணரும் நலத்தினாள் இளையள் நின்றுழி

கண்ணொடு கண்ணினைக் கவ்வி ஒன்றையொன்று

உண்ணவும் நிலைபெறாமல் உணர்வும் ஒன்றிட

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.”

“பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணித்து

ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தலால்

வரிசிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்

இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினர்”- (கம்பராமாயணம் - பாலகாண்டம் செய்யுள் 590 , 592)

தமிழன் காதலிக்காமல் திருமணம் செய்வதில்லை. எனவே கம்பர் இராமயணத்தைத் தமிழாக்கி, தமிழருக்குள் கொண்டு வரும்போது, இப்படி இடையில் ஒரு காதல் காட்சியைப் புகுத்தி, இராமன் சீதைத் திருமணத்தை, ஒரு காதல் வீரத் திருமணமாகக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் அன்று அவருக்கு இருந்தது. இது தமிழரின் காதல் வாழ்விற்கு ஓர் எடுத்துக் காட்டல்லவா?

இன்று நாம் புலம் பெயர்ந்துள்ள வெளிநாடுகளில், காதல் அடையாளமாகக் கொடுக்கப்படும் மலர்கள், எம் தமிழர் வாழ்விலும் பெரும் பங்கு வகித்தன என்பதும் ஒரு வரலாற்று உண்மை! தமிழ்நாட்டில் மலர்கள் மங்கையர் கூந்தலிலும், மனங்களிலும், இல்லங்களிலும் இன்றும்கூட முக்க்ய இடத்தை வகித்து வருகின்றன.

அன்புக்குரிய நேயர்களே! தமிழனின் கடல்போன்ற காதல் வாழ்வைச் சொல்வதற்காக, முக்குளித்து ஒரு துளியை மட்டும் இன்று சொல்ல முனைந்தோம். இந்தக் கட்டுரைக்குச் சங்கக் காலப் பாடல்கள், தொல்காப்பியம், திருக்குறள், கம்பராமாயணம் போன்றவற்றோடு;, சங்க இலக்கியத்தில் காதல் மெய்ப்பாடுகள், தொல்தமிழர் சமயம், குறுந்தொகை காட்டும் காதல் வாழ்க்கை போன்ற நூல்களும் உதவின. இது உங்கள் காதல் தீயை இன்னும் கொழுந்து விட்டெரியச் செய்யும் என்று நம்புகின்றோம்.

- சபேசன்-மெல்பேர்ண்-அவுஸ்திரேலியா