புத்தரின் துறவும் விழைவும் - 3

கபிலவஸ்துவின் எல்லை நதியான “அனோமா” ஆற்றைக் கடந்து, மகதப் பேரரசின் தலைநகர் இராஜகிருகத்திற்குப் போய்ச் சேருகிறார் சித்தார்த்த புத்தர் - துறவியாக. அப்பொழுது அவருக்கு வயது 29.

புத்தரின் துறவுக்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று கதை, மற்றொன்று வரலாறு. இரண்டையும் பவுத்த நூல்களே சொல்கின்றன.

budhha_395ஒரு நோயாளி, வயது முதிர்ந்த ஒரு கிழவர், இறந்து போன ஒருவரின் உடல் இவைகளை முதன் முதலாகப் பார்த்த புத்தர், உலக வாழ்க்கையைத் துறந்து துறவியாகிவிட்டார் என்பது மரபு ரீதியாகச் சொல்லப்படும் கதை.

“இந்த மூன்று காட்சிகளின் விளைவாக புத்தர் துறவறம் ஏற்றாரென்றால், இதற்கு முன் இந்தக் காட்சிகளை அவர் பார்க்கவில்லை என்பது எப்படிப் பொருந்தும்? இவைகள் நூற்றுக் கணக்கில் பொதுவாய் நிகழும் காட்சிகள். இவற்றை இதற்கு முன் புத்தர் காணாதிருந்திருக்கவே முடியாது. முதல் முறையாக அப்போதுதான் இவற்றைப் புத்தர் கண்டால் என்று கூறும் மரபு ரீதியான விளக்கத்தை ஒப்புக் கொள்ளவே முடியாது. இந்த விளக்கம் ஏற்புடையதன்று, அறிவுக்குப் பொருந்துவதன்று” - என்று இந்தக் கதையைத் தூக்கி எறிந்து விடுகிறார் டாக்டர் அம்பேத்கர்.

பகுத்தறிவுப் பார்வையில் டாக்டர் அம்பேத்கரின் கருத்து மிகவும் சரி. எனவே இது குறித்து விரிவாகப் பேசுவதை இங்கு தவிர்த்திடுவோம்.

அப்படியானால் புத்தரின் துறவுக்கு உண்மையான காரணம் என்ன?

சரியாகச் சொன்னால் இந்தியாவின் முதல் புரட்சிக்கு வித்திட்ட இடமும், பண்டைய இந்தியாவின் வரலாற்றைத் திருப்பிப் போட்ட இடமும், புத்தரின் துறவில் ஒன்றுபடுகின்றன.

இதனை மிகச் சரியாகப் பார்த்தவர்கள் இருவர். ஒருவர் கோசாம்பி, மற்றொருவர் தேவிபிரசாத் சட்டோபாததியாயா.

சாக்கியர்கள் வாழ்ந்த கபிலவஸ்துவுக்கும், கோலியர்கள் வாழ்ந்த ராம்காமுக்கும் எல்லை ஆறாக அமைந்திருந்தது “ரோகினி” ஆறு. இன்று அது கொஹனா என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆற்று நீரால் சாக்கியர்களுக்கும், கோலியர்களுக்கும் சச்சரவு ஏற்பட்டது. சச்சரவுக்குக் காரணம் (கவனிக்கவும்) நதிநீர்ப் பங்கீடு அல்ல ; மாறாக, யார் முதலில் நீரைப் பயன்படுத்துவது என்பது குறித்துத்தான்.

சாக்கியர்களுக்கும் கோலியர்களுக்கும் இது ஒரு கவுரவப் பிரச்சனை.

அன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு இனத்திற்கும், இனக்குழுவுக்கும் அவைகளின் நலம் பேணத் தனித்தனியாகச் சங்கங்கள் இருந்தன. ஒவ்வொரு சங்கமும் சன்ஸ்தகார் என்று அழைக்கப்பட்டது.

ரோகினி நதிநீர்ப் பயன்பாடு குறித்துப்பேச, சாக்கியர்கள் தங்களின் சன்ஸ்தகார் சங்கத்தைக் கூட்டினார்கள். பேசினார்கள். விவாதித்தார்கள். முடிவும் எடுத்தார்கள்.

நதிநீர்ப் பயன்பாட்டில் முரண்டு பிடிக்கும் கோலியர்கள் மீது தாக்குதல் தொடுக்க வேண்டும் - என்பதுதான் சங்கத்தின் பெரும்பான்மை முடிவாக இருந்தது. சங்கத்தின் உறுப்பினரான சித்தார்த்த புத்தர், இதனைக் கடுமையாக எதிர்த்தார். கோலியர்கள் மீது தாக்குதல் தொடுக்கக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார்.

புத்தரைச் சங்கம் நிராகரித்தது. சங்கத்தைப் புத்தர் நிராகரித்தார்.

விளைவு...கபிலவஸ்துவைவிட்டுத் துறவியாக வெளியேறினார் புத்தர்.

பெளத்த நூல்கள் இத்தோடு புத்தரின் துறவை நிறைவு செய்து கொள்கின்றன. சொல்லப்போனால் இது ஒரு மேலோட்டமான செய்தி அவ்வளவுதான்.

அடிப்படையில் புத்தரின் துறவு, இனக் குழுக்களின் அழிவு, அவைகளின் மேல் எழுந்த அரசுகளின் ஆதிக்கம் இவற்றுடன் தொடர்பு கொண்டிருந்தது. இதுவே பவுத்தம் சூல் கொள்வதற்கும் காரணமாக அமைந்தது.

பவுத்த இந்தியாவில், கி.மு. 600 காலகட்டங்களில் தனித்தனிச் சமூகக் குழுக்கள் கங்கைச் சமவெளிப் பகுதிகளில் வாழ்ந்ததாகக் கோசாம்பி கூறுகிறார்.

இச்சமூகக் குழுக்களின் இன்னொரு பெயர் இனக்குழுக்கள். ஒன்றுமட்டும் தனித்திருந்தால் அது இனம். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இனங்கள் இணைந்திருந்தால் அது இனக்குழு. அன்றைய காலத்தில் பல்வேறு இனக்குழுக்கள் பரவலாக இருந்துள்ளன.

இவ்வினக் குழுக்களின் அடுத்த கட்டம் அல்லது வளர்ச்சி அரசுகள் ஆயின. இவ்வாறு தோன்றிய இருபெரும் அரசுகள் கோசலம், மகதம் ஆகியன.

தொடக்ககால இனக்குழுச் (சன்ஸ்தகார்) சங்கங்களிடம் நிர்வாக அமைப்பு முறையும், கட்டுப்பாடும், சனநாயக நடைமுறையும் சிறப்பாக இருந்தன.

இக்குழுவுக்கு ஒரு தலைவன். அவனைத் தேர்வு செய்வது சங்கம். சங்கத்தை நெறிப்படுத்தப் பேரவைக்குழு. குழு உறுப்பினர்களாக ஆண்களும் பெண்களும் சமமாக இருந்தனர். 19 வயதுக்கு மேற்பட்டோர் வாக்களிக்கலாம். மக்களில் உயர்வு தாழ்வு இல்லை. அனைவரும் சமம் என்ற சமத்துவச் சமுதாயத்தின் அடையாளமாக இனக்குழுக்கள் இருந்தன.

இவ்வினக்குழு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வீரர்கள் கூட்டமும் வைத்திருந்தது. ஒரு வகையில் இது ஒரு படைப்பிரிவு, வலிமை வாய்ந்தது.

இந்த இனக்குழுக்கள் அனைத்தும் தனித்தனிச் சுதந்திரமான இனக்குழுக்களாக இருந்தன என்பதுதான் கவனிக்கப்பட வேணடிய செய்தி.

நாளடைவில் இனக்குழுக்களுக்கிடையில் மோதல்கள் நிகழ்ந்தன. வலிமையான இனக்குழு வெற்றியில் சமத்துவம் வீழ்த்தப்பட்டுத் தனி அதிகார ஆட்சி ஏற்பட்டது. அந்த ஆட்சி அரசாக மாறியது, அதன் தலைவன் அரசன் ஆனான். சமத்துவம் அழிந்தது - முடியாட்சி தோன்றியது. கோசலமும் மகதமும் இதற்குச் சான்று.

பிற்காலத்தில் உருவான அர்த்த சாஸ்திரத்தில், “சுதந்திர இனக்குழுச் சங்கங்கள் இருக்கும்வரை அரசாட்சிகள் எழ முடியாது. இனக்குழுச் சங்கங்கள் இருப்பது முடி அரசுகளுக்கு ஆபத்தாகும். ஆகவே அரசுகள் உதிக்க, இனக்குழுக்களை அழிப்பது அவசியமாகும்” என்று கவுடில்யன் கூறுவது கருதத்தக்கது.

உதித்தெழுந்த முடியரசுகள் இனக்குழுக்களை கடுமையாக அழித்தன.

கோசல மன்னன் பசனேதியின் மகன் விதுதபன் சாக்கிய இனக்குழுவை பூண்டோடு அழித்தான். புத்தரால் அதைத் தடுக்க முடியவில்லை. கபிலவஸ்து கோசலரின் ஆட்சியில் சேர்க்கப்பட்டது.

மகதப் பேரரசன் பிம்பிசாரன் மகன் அஜாத சத்ரு, புத்தர் காலத்திலேயே வஜ்ஜிய இனக்குழுவை நிர்மூலமாக்கினான். வைசாலி அஜாத சத்ருவின் ஆட்சிக்குட்பட்டது.

மன்னர்கள் தங்கள் நாட்டை விரிவாக்கம் செய்ய பேராசைப்பட்டார்கள். அதனால் இனக்குழுக்கள் மீது படையயடுத்து ஆண்கள், பெண்கள் என கொல்லப் பட்டவர்கள் ஏராளம். மன்னர்களின் காம வேட்கை யால் பெண்கள் சின்னாபின்னம் ஆக்கப்பட்டார்கள். அடிமைப்படுத்தப்பட்ட இனக்குழு மக்களிடம் வரி என்ற பெயரில் பொருள்கள் பிடுங்கப்பட்டன, களவாடப்பட்டன.

“அடமானம், வட்டி, கந்துவட்டி என்ற ஏற்பாடுகள் உருவாயின. இவை எல்லாம் மக்களைக் கசக்கிப் பிழிந்தன” என்கிறது அர்த்த சாஸ்திரம்.

“இனக்குழுக்களை அழித்த அன்றைய மன்னர்கள் சபலங்களுக்கும், சலனங்களுக்கும் ஆட்பட்டு வரம்பற்ற கொடுங்கோலர்களாக இருந்தார்கள். தண்டனையாலும், வரிகளாலும், சித்ரவதைகளாலும், கொள்ளையாலும் ஆலையில் கரும்பை நசுக்குவது போல மக்களை நசுக்கினார்கள். அங்கே மந்திரிகளும், பூசாரிகளும் மன்னனின் கொடுமைகளுக்குத் துணை போனார்கள்” என்று தெளிவாகச் சொல்கிறார் பிக்.

இவைகள் எல்லாம் நடந்தது புத்தரின் காலத்தில். புத்தர் இளைஞராக இருக்கும் போது இவைகளை எல்லாம் கவனித்துள்ளார்.

சுதந்திரமான இனக்குழுச் சமூக மக்கள், அரசுகளின் அதிகாரத்தில் தம் சுதந்திரத்தை இழந்து விட்டார்கள். மக்கள் கொல்லப்படு கிறார்கள், கொள்ளையடிக்கப்படுகிறார்கள், ஏமாற்றப்படுகிறார்கள், பாலியல் வன்கொடுமை களுக்குப் பெண்கள் ஆளாக்கப்படுகிறார்கள். சுதந்திர இனக்குழு மக்கள் இப்பொழுது அடிமைகள் ஆகிவிட்டார்கள்.

துன்பம் மக்களின் வாழ்வைச் சூழ்ந்து கொண்டது. அதில் இருந்து அவர்கள் விடுதலை பெற முடியாமல் வீழ்ந்து கிடக்கிறார்கள். உண்மையில் மக்கள் அறியாமைக்குள் தள்ளிவிடப்பட்டிருக்கிறார்கள் - இவைகள் எல்லாம் சித்தார்த்த புத்தரைச் சிந்திக்க வைத்தன.

வலிமை வாய்ந்த அரசனை எதிர்த்துப் போரிட முடியாது. ஆனாலும் மக்களைத் துன்பங்களில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது புத்தரின் சிந்தனையாக இருந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் சாக்கியர் - கோலியர் நதிநீர்ப் பயன்பாடு சிக்கல் சாக்கியச் சங்கத்தில் வந்தது. அதைச் சாக்காக வைத்துக் கொண்டு, ஒரு முடிவோடு கபிலவஸ்துவைவிட்டு வெளியேறுகிறார் புத்தர் துறவியாக.

புத்தரின் துறவுக்குச் சொல்லப்பட்ட கதை வேறு, காரணம் வேறு, காரணத்தின் விளைவு வேறு.

அதைத்தான் தொடர்ந்து பேசப்போகிறோம்.              

                                    - மீண்டும் சந்திப்போம்.

Pin It