காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் திருவாளர் தமிழருவி மணியன் அவர்கள் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து இனி உயிர் இருக்கும் வரை அரசியலில் ஈடுபடமாட்டேன் என அறிவித்துள்ளார். மணியன் அவர்களின் அரசியல் பாரம்பரியம் மிக நெடியது. காங்கிரஸ் கட்சியின் நேர்மையையும், உண்மையையும் பார்த்து அதில் ஆரம்பத்தில் இருந்த மணியன் அவர்கள் பின்னால் காங்கிரஸ் கட்சியில் நேர்மையும், உண்மையும் குறைந்த போது ஜனதா தளத்திற்கு மாறினார். பின்னர் ஜனதா தளத்திலும் அவர் எதிர்ப்பார்த்த நேர்மையும் உண்மையும் சற்று குறைந்த போது தன்னுடைய அரசியல் நேர்மையயையும், உண்மையும் காப்பாற்றிக்கொள்ள ஜனதா தளத்தில் இருந்து பிரிந்து லோக்சக்தி என்ற கட்சியை ஆரம்பித்த இராமகிருட்டிண கேக்டே அவர்களின் கட்சியில் தமிழ்நாட்டு தலைவராக பொறுப்போற்றார். பின்னால் அந்தக் கட்சியிலும் நேர்மையும் உண்மையும் குறைந்த போது திரும்ப அந்தச் சமயத்தில் தன்னுடைய பழைய நேர்மையும், உண்மையும் மீட்டெடுத்த காங்கிரசில் மறுபடியும் சேர்ந்தார். பின்னர் 2008 ஈழப்போர் நடந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் உண்மையும், நேர்மையும் குறைந்த போது திருவாளர் மணியம் அவர்கள் வேறு எந்தக் கட்சியிலும் சேராமல் காந்திய மக்கள் இயக்கத்தை ஆரம்பித்தார்.

  tamilaruvi manian 300படிக்கும் போதே ஒரே குழப்பமாக இருப்பதுபோல தோன்றுகின்றதா? கண்டிப்பாக தோன்றும். படிக்கும் உங்களுகே குழப்புகின்றது என்றால் கசமுசா கசமுசா என்று கட்சிமாறிய மணியன் அவர்களுக்கு எவ்வளவு குழப்பமாக இருக்கும். அந்தக் குழப்பத்தின் உச்சமாகத்தான் காந்தியை கொன்ற கோட்சேவின் கட்சிக்கே தரகு வேலை அதாவது மாமா வேலை பார்த்தார். அவரது அரசியல் நேர்மையை வார்த்தைகளால் நாம் மதிப்பிட்டுவிட முடியாது. அவரை பொருத்தவரை ராமராஜியம் தான் அவரது கனவு. அதை காந்தி கொண்டு வந்தாலும் சரி, கோட்சே கொண்டுவந்தாலும் சரி அவர்களுக்கு தனது விசுவாசத்தை நன்றியுடன் காட்டுவார்.

 ஏதோ பொதுவாழ்வில் உத்தமர் போல நடந்துகொண்டது போன்று தனது அரசியல் வாழ்வை துறக்கும் அறிக்கையை வெளியிட்டு உள்ளார். என்ன உங்களது நேர்மை? என்று யாரும் கேட்க மாட்டார்கள் என்ற தைரியம். அவர் கொடுத்துள்ள அறிக்கையில்

 “……. பொய்யை விலை பேசி விற்பவருக்குத்தான் பதவியும் அதிகாரமும் வந்துசேரும். நேர்மையுடன் செயல்படுவதால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. இவற்றை தெளிவாக உணர்ந்த பிறகு அரசியல் உலகத்தில் நீடிப்பது என்பது அர்த்தமற்றது.

“ மது போதையில் இருப்போரிடம் காந்திய கொள்கைகளுக்குப் பாராட்டு விழா நடக்காது. எல்லாமே இலவசமாய் பெறுபவனிடம் உழைப்பின் பெருமையை பேசினால் எடுபடாது. எனவே 48 ஆண்டு காலப் பொதுவாழ்விலிருந்து முற்றாக விலகிக் கொள்கின்றேன்” என்று உள்ளது.

  திருவாளர் மணியன் அவர்களுக்குத் தேர்தலில் தோற்று மண்ணைக் கவ்விய பிறகுதான் ஞனோதயம் வந்திருக்கின்றது. தேர்தல் அரசியலில் வெற்றி பெற பொய்யை விலைபேசி விற்க வேண்டும் என்பதும், மது போதையில் இருப்போரிடம் காந்திய கொள்கைகள் எடுபடாது என்பதும், எல்லாமே இலவசமாய் பெறுபவனிடம் உழைப்பின் பெருமையை பேசமுடியாது என்பதும். இந்த அறிய உண்மைகளை புரிந்து கொள்ள மணியன் அவர்களுக்கு 48 ஆண்டுகள் பிடித்திருக்கின்றது என்றால் மணியன் அவர்களின் அரசியல் அறிவை நாம் மெச்சாமல் இருக்கமுடியாது.

  ஆரம்பத்தில் இருந்தே தேர்தல் அரசியலில் பங்கெடுக்கும் கட்சிகளிலேயே தனது காலத்தைத் தள்ளிய மணியன் அவர்களால் தேர்தல் அரசியலின் வெற்றி தோல்வி எதைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படுகின்றது என தெரிந்துகொள்ளாமல் போனது தற்செயலான ஒன்றல்ல!

  காந்திய மக்கள் இயக்கத்தை , காந்திய மக்கள் கட்சியாக மாற்றிய போது, 2016 சட்டமன்ற தேர்தலை தமிழகத்தில் பா.ஜ.க மற்றும் மதிமுக வுடன் இணைந்து காந்திய மக்கள் கட்சி போட்டியிடும் என்று அறிவித்தார். மோடியையும், பாஜகவையும் வானளவாக புகழ்ந்தார். இலங்கைத் தமிழர்களுக்கு மோடியால்தான் விடிவுகாலம் பிறக்கப் போகின்றது என்று பிதற்றினார். பின்னர் அதே வாயால் பாஜகவை தூற்றினார்.  அப்புறம் காந்திய மக்கள் இயக்கம் தேர்தலில் தனித்து போட்டியிடும் என்றார். அதன் பின்னர் வைகோவை  முதல்வர் ஆக்காமல் விடமாட்டேன் என சபதம் எடுத்தார். பின்னர் வைகோ மக்கள் நலக்கூட்டணில் இணைந்தபோது முதலில் ஆதரிப்பேன் என்றால் பின்னால் ஆதரிக்க முடியாது என்றார். அப்புறம் மறுபடியும் ஆதரிப்பேன் என்றார். கடைசியாக தமிழர்களின் நலன் காக்க அணு உலை பெசலிஸ்ட் பொன்ராஜ் ஆரம்பித்த அப்துல் கலாம் லட்சிய இந்தியக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்டார்.

  இதற்கு மேல் ஒரு குழப்பவாதியை நீங்கள் அரசியலில் பார்க்கவே முடியாது. தமிழருவி மணியனின் 48 ஆண்டுகால அரசியல் வாழ்வையும் யாராவது வரலாறாக தொகுத்தார்கள் என்றால் நம்ம ஊரில் சொல்வார்களே பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி என்று அதை விட மோசமாக இருக்கும். இப்படிப்பட்ட நாத்தமெடுக்கும் சிந்தனைக்குச் சொந்தக்காரரான மணியனுக்கு தொகுதிக்கு 2000 பேர் ஓட்டு வேறு போட வேண்டுமாம்!.

  48 ஆண்டுகால தூய்மையான அரசியலுக்குச் சொந்தக்காரன் என தன்னைப்பற்றி போகும் இடமெல்லாம் பிதற்றிக்கொள்ளும் திருவாளர் மணியன் தனது நேர்மையும், உண்மையும் பார்த்து கேவலம் 2000 ஓட்டுக்களை இந்த மக்கள் போடவில்லையே என்று மனவருத்தப் படலாமா? ஆனால் பட்டுவிட்டார்.

 தேர்தல் அரசியலுக்கு வெளியே எவ்வளவோ பேர் இந்த சமூகத்தை மாற்றியமைக்க வேண்டும் என போராடிக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் எல்லாம் இந்த மக்கள் நாளை நம்மை கொண்டாடுவார்கள் என்றோ, தனக்கு சிலைவைப்பார்கள் என்றோ போராடவில்லை.  அதை ஒரு சமூக கடமையாக நினைத்துச் செய்கின்றார்கள். தாங்கள் வாழும் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக போராடுகின்றார்கள். பல புரட்சிகர கட்சிகளில் உள்ள பல முழுநேர ஊழியர்கள் பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டு, மனைவியால் புறக்கணிக்கப்பட்டு, பெற்ற பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, அரசியல் களத்தில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து மக்களிடம் எந்த வித ஆதாயத்தையும் எதிர்ப்பார்க்காமல் அவர்களது மேம்பாட்டுக்காக தங்களது மகிழ்ச்சியான வாழ்கையே தியாகம் செய்திருக்கின்றார்கள்.

   இவர்கள் எல்லாம் எந்தச் சூழ்நிலையிலும் மக்கள் தன்னை மதிக்கவில்லையே, தங்களது அரசியலை ஏற்கவில்லையே என அரசியல் களத்தில் இருந்து ஓடி ஒளிந்தது கிடையாது. இதுதான் காந்தியை போன்ற அடிவருடி அரசியலை ஏற்றுக்கொண்டவர்களுக்கும், போராட்டமே மகிழ்ச்சி என்ற மார்க்கிய அரசியலை ஏற்றுக்கொண்டவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

  தமிழருவி மணியன் அவர்கள் இவ்வளவு கேவலமான தோல்வியைச் சந்தித்ததற்குக் காரணம் அவரது பெயரே பெரும்பாலான மக்களுக்கு தெரியாது என்பதுதான். டிராபிக் ராமசமியை தெரிந்த அளவிற்குக்கூட இந்த மணியன் அவர்களை யாருக்கும் தெரியாது. அதற்கான காரணம் மிகத் தெளிவானது. மணியன் எப்போதுமே சாமானிய மக்களின் பிரச்சினைகளுக்காக அவர்களுடன் இணைந்து போராடியது கிடையாது. ஒரு மேட்டுக்குடி வர்க்க சோம்பேறி அரசியலுக்கு சொந்தக்காரராகவே தன்னை எப்போதும் காட்டிக்கொண்டவர்.

  சீமான் மைக்கை பிடித்துப் பேச ஆரம்பித்தால் எப்படி மக்கள் ஒரு பொழுதுபோக்காக பார்த்துவிட்டு ‘ஐயோ பாவம் யார் பெத்த பிள்ளையோ இப்படி தொண்டைகிழிய கத்துகின்றதே’ என்று பரிதாபப்பட்டு கைதட்டிவிட்டு போகின்றார்களோ அப்படித்தான் மணியன் அவர்களின் பேச்சையும் இந்த மக்கள் கேட்டார்கள். சீமான், மணியன், வைகோ போன்றவர்கள் பேசினால் மக்கள் நல்லா பேசுறாங்களே என கேட்பார்கள். ஆனால் ஓட்டெல்லாம் போடமாட்டார்கள். இந்த உண்மையை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். இல்லை என்றால் இப்படித்தான் அவமானப்பட்டு நிற்கவேண்டும்.

  தேர்தல் அரசியல் என்பது பிழைப்புவாதிகளின் கடைசி புகலிடம். அதனால் தான் பெரியார் அதை நிராகரித்தார். நாமும் நிராகரிக்கின்றோம். ஆனால் மணியன் போன்றவர்கள் மாற்று அரசியலை முன்வைக்கின்றேன் என்று மாமா வேலை பார்ப்பதையே ஒரு அரசியல் நடவடிக்கையாக செய்தவர்கள். மாமா வேலை பார்ப்பவர்களுக்கு என்ன  நேரும் என்று நாம் பல தமிழ் சினிமாக்களில் பார்த்திருக்கின்றோம். அதே தான் அவருக்கும் நடந்திருக்கின்றது. புதிதாக இதில் நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

- செ.கார்கி

Pin It