periyar with dogஎங்கு பார்த்த போதிலும் பார்ப்பன உபாத்தியாயர்களின் கொடுமையானது சகிக்க முடியாத அளவில் பெருகிக் கொண்டே வருவதாக தினமும் நமக்குச் சங்கதிகள் எட்டிக் கொண்டே வருகின்றன. அவற்றுள் அநேகம் வெளியிடவே மனம் கூசுகின்றது. அரசாங்கக் கல்வி இலாகா மந்திரி ஒரு பார்ப்பனரல்லாதாராயிருந்தும், ஸ்தல ஸ்தாபனங்களின் தலைவர்களும், மற்றும் தனிப்பட்ட பள்ளிக் கூடங்களின் நிர்வாகஸ்தர்களும் பார்ப்பன ரல்லாதாரராகவே இருந்தும், பார்ப்பனரல்லாத பிள்ளைகளின் கஷ்டம் சற்றாவது நிவர்த்தியானதாகக் காண்பதற்கில்லை. இனி சீக்கிரத்தில் நிவர்த்தி யாவதற்கு மார்க்கம் ஏற்படும் என்றும் கருதுவதற்கில்லை.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்று பார்ப்போமானால் அநேகமாய் கல்வி இலாகா உத்தியோகங்களில் பெரிதும் பார்ப்பனர்களே அதிகாரிகளால் இருந்து வருவதும், பரீட்சை அதிகாரிகளும் பார்ப்பனர்களாகவே இருந்து வருவதும், அவர்களது சலுகைக்குப் பாத்திரமான உபாத்தியாயர்களும் தலைமை உபாத்தியாயர்களும் பார்ப்பனர்களாகவே இருந்து வருவதும் தவிர வேறு காரணம் சொல்வதற்கில்லை என்றே சொல்லுவோம். யோக்கியமாகவும், நியாயமாகவும் பேசுவோமேயானால் கல்வி இலாகாவில் பார்ப்பனர்கள் என்பவர்கள் கண்டிப்பாய், அதிகாரியாகவோ உபாத்தியாயர்களாகவோ இருக்கக் கூடாதென்றே சொல்லுவோம்.

பார்ப்பனர்கள் மூலம் மக்களுக்குக் கல்வி போதிக்க எண்ணுவதை விட கல்விச் சாலைகளை அடைத்துவிடுவது மேலென்று கூடச் சொல்லத் துணிவோம். ஏனெனில் முதலாவதாக இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பார்ப்பனனும் தன்னை உயர்ந்த சாதி என்றும், அதாவது வருணாச்சிரமப்படி தாம் ‘பிராமண’ரென்றும், மற்றவர் ‘சூத்திர’ரென்றும் எண்ணிக் கொண்டிருப்பவர்கள். எந்த கொள்கைப்படி தன்னை ‘பிராமணரென்றும்’, மற்றவனை ‘சூத்திர’ரென்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றார்களோ, அதே கொள்கையின்படி பிராமணன் ‘சூத்திரனை’ப் படிக்க வைக்கக் கூடாதென்றும், ‘சூத்திரன்’ படித்தால் வருண தர்மம் கெட்டுப் போகுமென்றும், பிராமணனுக்கு ஆபத்தாய் முடியுமென்றும், ‘சூத்திரனை’ப் படிக்க வைத்தப் பிராமணர் ‘நரகத்தை அடைவார்’ என்றும் கருத்துப்பட ஆதாரங்கள் இருக்கின்றன.

இந்தக் கொள்கையை மனப்பூர்வமாக நம்பின பார்ப்பனர்கள் உபாத்தியாயராயிருந்தால் பார்ப்பனரல்லாத பிள்ளைகளை அவர்கள் படிக்க விடுவார்களா? படித்தாலும் பாசாக சம்மதிப்பார்களா? என்பதை வாசகர்களே யோசித்து முடிவு கட்டிக் கொள்ள விரும்புகின்றோம்.

கல்வியில் இருக்கும் சூதுகள் அநேகமாக நம்மவர்களுக்குத் தெரியாதென்றே சொல்லலாம். உதாரணமாக பார்ப்பனரல்லாத பிள்ளைகள் பி.ஏ.பாஸ் செய்வதென்றால் பிள்ளைகளுக்கு 22, 23, 24 வருடங்களாகி விடுகின்றன. ஆனால் பார்ப்பனப் பிள்ளைகள் 18, 19, 20 வயதிற்குள் பி.ஏ.பாசு செய்து விடுகின்றன. இதற்குக் காரணம் என்ன? என்பது நம்மவர்களுக்கு தெரியுமா? யாரையாவது காரணம் கேட்டால், “அது பிராமணப் பிள்ளை,. அதற்குப் படிப்பு சீக்கிரம் வருகின்றது. நம்ம பிள்ளை ரொம்பவும் மந்தம்,. அதனால் சீக்கிரம் வருவதில்லை” என்று ஒரு வார்த்தையால் பதில் சொல்லி விடுவார்கள். ஆனால் நம் பிள்ளைகளும் ஒரு வருடமாவது தவறாமல் ஒவ்வொரு வகுப்பிலும் பாசு ஆகிக் கொண்டே போனாலும் எப்படியும் பி.ஏ. பரீட்சைக்குப் போக 22 வயதாய் விடுகின்றது. ஒன்று அல்லது இரண்டு வருடம் தவறினால் இருபத்து நான்கு வயதாய் விடுகின்றது. மூன்று வருடம் தவறினால் இருபத்தைந்தாய் விடுகின்றது. பிறகு சர்க்கார் உத்தியோகத்திற்கு லாயக்கில்லாதவர்களாகி விடுகின்றார்கள்.

ஆனால் பார்ப்பனப் பிள்ளைகளோ ஒன்று இரண்டு வருஷம் தவறினாலும் கூட 20, 21-ல் பி.ஏ. படித்து முடித்து விடுகின்றார்கள். இதன் ரகசியம் என்னவென்றால் நம் பிள்ளைகளை 7-வது வயதில் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பி அரிவரி வகுப்பில் சேர்க்கின்றோம். 7-வது வயதில் அரிவரியில் சேர்ந்தால், அவன் தவறாமல் பாசு செய்தால்கூட 22-ல்தான் பி.ஏ. பரீட்சைக்குப் போக முடியும். ஏனென்றால் அரிவரி வகுப்புக்கும் பி.ஏ. பாசு செய்யும் வகுப்புக்கும் இடையில் 15 வருஷம் வேண்டியிருக்கின்றது. அதாவது அரிவரியில் இருந்து 4-வது வகுப்புக்கு ஐந்து வருடமும், 4-வதிலிருந்து எஸ்.எஸ்.எல்.சி. அல்லது 6-வது பாரத்திற்கும் 6 வருஷம். அதிலிருந்து பி.ஏ.க்கு 4 வருஷம் ஆகவே தவறாமல் பாசு செய்தாலும் 15 வருஷ சாவகாசம் வேண்டியிருக்கின்றன.

ஆனால் பார்ப்பனர்களோ தங்கள் குழந்தைகளை 5-வது முதலே வீட்டில் கொஞ்சம் சொல்லிக் கொடுத்து ஆறாவது வயதிலோ அல்லது ஏழாவது வயதிலோ பள்ளிக் கூடத்திற்குக் கொண்டு போய் முதல் பாரத்தில் சேர்த்து விடுகின்றார்கள். தலைமை உபாத்தியாயர்கள் பார்ப்பனர்களானதால் கணக்கில் சாதாரண 2 கேள்வியும் இங்கிலீஷில் இரண்டு வார்த்தைக்கு அர்த்தத்தையும் கேட்டுவிட்டு “முதல் பாரத்திற்கு லாயக்கு” என்று சொல்லி விடுகின்றார்கள். இதில் அவர்களுக்கு ஐந்து வருடப் படிப்பும் காலமும் செலவும் மீதியாகி விடுகின்றன. 14 வயதுக்கு கீழ்பட்ட பிள்ளைகளை எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சைக்கு எடுப்பதில்லை என்கின்ற நிபந்தனையினால் பார்ப்பனர்கள் தங்கள் பிள்ளைகளை முதல் பாரத்தில் சேர்க்கின்றார்கள். அந்த நிபந்தனையும் இல்லாதிருக்குமானால் மூன்றாவது பாரத்தில் கூட சேர்த்து விடுவார்கள். தவிர 18, 19-ல் அவர்கள் பி.ஏ.பாசு செய்து விடுவதால் 25-வது வயது வரைக்கும் 5 அல்லது 6 வருட காலம் உத்தியோகம் தேட அவர்களுக்குச் சாவகாசமிருக்கின்றது. ஆகவே அவர்கள் பி.ஏ. படித்து விட்டால் எப்படியும் யாரையாவது பிடித்து என்ன செய்தாவது உத்தியோகம் சம்பாதித்துக் கொள்ள போதிய சௌகரியம் இருக்கின்றது.

நம்முடைய பிள்ளைகளோ சிறு வயதில் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பினால் தலைமை உபாத்தியாயராயிருப்பவர், “இவன் ரொம்பவும் சின்னப் பையன். இன்னும் ஒன்று இரண்டு வருடம் பொறுத்து அப்புறம் கூட்டிக் கொண்டு வாருங்கள்” என்று சொல்லுவதும், “குழந்தைகள் நன்றாய் ஆடிப்பாடி விளையாடட்டுமே, நன்றாய் எட்டு வருடம் ஆன பின்பு பள்ளியில் வைத்தால் போதாதா? ஏன் இப்படிக் குழந்தைகளை வதைக்கின்றீர்கள்” என்று 'பரிதாபப் பட்டு' திருப்பி அனுப்பி விடுகின்றார்கள். தவிர, நாம் நிர்ப்பந்தப்படுத்தி சேர்த்தாலும் அவன் தகுதியைவிட ஒரு வகுப்பு கீழாகவே சேர்க்கிறார்கள். அன்றியும் பள்ளிக்கூட பரீட்சைகளில் கூடுமானவரை ஒவ்வொரு வருடமும் அழுத்தி வைக்கவே பார்க்கின்றார்கள்.

பிறகு பல வழிகளிலும் அதாவது உனக்கு படிப்பு வராது, வேறு வேலை பார்த்துக் கொள், வீணாய்ப் பணம் செலவழிக்காதே, பெஞ்சுக்கு வாடகை கொடுக்காதே என்று பேசி பிள்ளையின் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கெடுப்பதிலேயே கவலை கொள்ளுகின்றார்கள். பையன்களைச் சர்க்கார் பரீட்சைக்கு அனுப்புவதிலும் உபாத்தியாயர்களுக்கே அந்த உரிமை இருப்பதால் சட்டத்தின் மூலம் எவ்வளவோ தகராறு செய்து பார்த்தும் மீறினால் வேறு வழியில் தகராறும் சொல்லி நிறுத்திவிடவே பார்க்கின்றார்கள்.

இவ்வளவும் தாண்டிப் பரீட்சைக்கு போய் எழுதினாலும் பரீட்சை பரிசோதகர், மார்க்கு கொடுப்பவர், முடிவு சொல்வதில் முக்கியமானவர் ஆகியவர்கள் எல்லோரும் பார்ப்பனர்களே. கடைசியாக பாசானாலும் சர்க்கார் உத்தியோகத்திற்கு போவதற்கு வேண்டிய வயது தாண்டி விடுகின்றது. ஒரு சமயம் மீதி இருந்தாலும் ஒரு வருடம் அல்லது ஆறு மாதமே இருக்குமாதலால். அவசரத்தில் எங்காவது போய் குழியில் விழுவது போல் சிறிய உத்தியோகந்தான் சம்பாதிக்க முடிகின்றது. பரீட்சையில் தவறிப் போனாலோ அதோ கதிதான்.

வெளிப்படையாய் இவ்வளவு கஷ்டம் நமக்கு இருப்பதுடன் மறைமுகமாய் செய்யக் கூடிய கொடுமைகள் எவ்வளவோ இருக்கின்றன. எனவே இந்த நிலையில் நமது கல்வி சாதனம் இருந்து வருகின்றது. ஆதலால் சட்டசபையில் இந்த விஷயங்களை விளக்கி இதற்காக ஒரு கமிட்டி ஏற்பாடு செய்து இக்கஷ்டங்கள் உண்டா, இல்லையா என்று விசாரித்துப் பார்த்து உண்மை என்று பட்டால் இதற்கு ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டும் என்று ஜனப்பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ளும் சட்டசபை அங்கத்தினர்களைக் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

பார்ப்பனரல்லாத மாணவர்களும் நமக்கு எழுதிக் கொண்டிருப்பதைவிட இதற்காக ஒரு மாணவர் மாகாநாடு ஏற்பாடு செய்து தங்கள் குறைகளை அதில் விளக்கிக் காட்டி பரிகாரத்திற்குச் சில தீர்மானங்கள் செய்து அதை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று யோசனை சொல்லுகின்றோம். மற்றபடி பிள்ளைகளுக்கு தனிப்பட்ட முறையில் இருந்துவரும் கொடுமைகளை மற்றொரு சமயம் விளக்குவோம்.

(குடி அரசு - தலையங்கம் - 07.07.1929)

Pin It