கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

மோடி தலைமையிலான இந்து - பார்ப்பன அரசு புதிய தேசியக் கல்விக்கொள்கை என்ற பெயரில், மீண்டும் குலக்கல்வித் திட்டத்தைத் திணிக்கப்போகிறது. அநேகமாக பணமதிப்பிழக்க நடவடிக்கை போல அதிரடியாக இக்கொள்கை விரைவில் திணிக்கப்படலாம். டி,எஸ்.ஆர். சுப்பிரமணியன் என்ற தமிழ்நாட்டுப் பார்ப்பனர் தலைமையில் உருவாக்கப்பட்ட இக்குழுவின் அறிக்கை விவாதத்திற்காக வெளியிடப்பட்ட நாள் முதல் தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கங்களும், தலித் அமைப்புகளும், கம்யூனிச இயக்கங்களும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.

இக் காவிக்கல்விக்கொள்கையை எதிர்ப்பதை முழுநேரப் பணியாகவே மேற்கொண்டு வருகிறார் தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபு. சி.பி.எம்., சி.பி.அய் கட்சிகளும் தீவிரமான எதிர்ப்பைக் காட்டி வருகின்றன.

புதிய தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துக்கள்

  • 2009 ஆம் ஆண்டிற்குப் பிறகு எட்டாம் வகுப்புவரை மாணவர்களுக்கு தேர்வில் ஃபெயில் என்பது கிடையாது. ஆனால் இனி, 4 வகுப்பிலேயே பாஸ் அல்லது ஃபெயில் என்று அறிவிக்கும் வடிகட்டும் முறை தொடங்கப்பட உள்ளது.

  • அனைத்துப்பள்ளிகளிலும் மூன்றாவது மொழியாக சமஸ்கிருதம் இணைக்கப்பட்டு, ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு சமஸ்கிருத ஆசிரியர் நியமிக்கப்படுவார்.

  • 8 ஆம் வகுப்புக்கு மேல் மாணவர்களுக்கு அவரவர் குலத்தொழிலுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு, அதற்குரிய கல்வி மட்டும் வழங்கப்படும்.

  • பள்ளிகள் அருகிலிருக்கும் ஆசிரமங்களிலிருந்து வழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

  • பாடத்திட்டங்கள், பாடங்கள் அனைத்தும் என்.சி.இ.ஆர்.டி என்ற மத்திய அரசின் நிறுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும்.

  • கல்வி என்ற துறை முழுமையாக மத்திய அரசின் பட்டியலுக்குள் நிரந்தரமாகச் சென்றுவிடும்.

  • ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போல இனி ஐ.இ.எஸ் (இந்தியக் கல்விப் பணி) என்ற அதிகார மய்யம் உருவாக்கப்படும்.

கல்விப்புரட்சியின் தலைவன் மெக்காலே

இதுபோன்ற பல அபாயங்கள் இந்தப் பார்ப்பனக் கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வரும்வரை நமக்குக் கல்வியே கிடையாது. இராமாயணமும், மகாபாரதமும், வேதங்களும், சாஸ்திரங்களும் தான் இந்தியாவில் பாடங்கள். அதுவும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே அவை கிடைக்கும். பார்ப்பனர் அல்லாத மற்ற ஜாதியினர் அனைவருக்கும் அதுவும் இல்லை. எழுத்தறிவு பெற்றிடக் கூட நமக்கு உரிமை இல்லை. எனவேதான் நமது முன்னோர்கள் கைநாட்டுகளாக இருந்தார்கள்.

பாண்டிய, சேர, சோழ, தெலுங்கு, கன்னட, மராட்டிய மற்றும் வடநாடுகளின் அரசுகளிலும் இதேநிலைதான். அனைத்து நாடுகளிலும் வாழ்ந்த பார்ப்பனர்கள் மட்டுமே கல்வி கற்று வந்தனர். அந்நிலையை அடியோடி அழித்து, பார்ப்பனர் அல்லாதார் அனைவருக்கும் கல்வியைத் திறந்து விட்டவர் ஆங்கிலேயர் தாமஸ் பேபிங்டன் மெக்காலே. 1835 ல் மெக்காலே அறிமுகப்படுத்திய கல்விமுறையைத் தான் சில சில மாற்றங்களுடன் இன்னும் நாம் தொடர்ந்து வருகிறோம்.

கைநாட்டுச் சமுதாயத்தை - ஏடிறியாத - எழுத்தறியாக சமுதாயத்தைப் படிக்க வைத்து, குறைந்த பட்சம் படிப்பாளர்களாக, அலுவலர்களாக, அதிகாரிகளாக மாற்றி - அரசு நிர்வாகங்களில் பார்ப்பனருக்கு எதிராகப் போட்டியிடும் நிலைக்கு உயர்த்தியது மெக்காலேயின் கல்விமுறைதான். வகுப்புரிமை, இடஒதுக்கீடு என்றெல்லாம் நாம் போராடிப் பெற்ற அனைத்து உரிமைகளுக்கும் மிகவும் அடிப்படையாக அமைந்தது அந்தக் கல்வி முறைதான்.  

அந்த மெக்காலே முறை ஆரியப் பார்ப்பன - இந்து மத ஆதிக்கவாதிகளுக்கு எப்போதும் நஞ்சாகவே இருந்தது. ஆனால், பாட்டாளி மக்களுக்காக உழைப்பதாகக் கூறிக்கொள்ளும் சில கம்யூனிஸ்ட்டுகளுக்கும் நஞ்சாக இருப்பது அவர்கள் பூணுாலிஸ்ட்டுகள் என்பதை உறுதிப்படுத்துகிறது.ஸ்

அந்த மெக்காலே முறையில் இந்தக் காலத்திற்கேற்ப நிறைய மாறுதல்கள் அவசியம் தேவை. பின்லாந்தைப் போல, க்யூபாவைப்போல, முன்னேறிய ஐரோப்பியக் கல்வி முறைகளைப் போல நமது கல்விமுறை தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பிரேசில் நாட்டுக் கல்வியாளர் பாவ்லோ ஃபிரையர் அறிவுறுத்தும் ஜனநாயக வகுப்பறைகள் போல இந்திய வகுப்பறைகள் மாற வேண்டும் என்பதுதான் நமது கனவும். மாற்றம் என்பது சமுதாயத்தை வளர்ச்சிப்போக்கில் மாற்றுவதாக இருக்கவேண்டும். மீண்டும் 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைக்குச் சமுதாயத்தை இழுத்துவிடுவதற்குப் பெயர் மாற்றம் இல்லை.

இந்து - பார்ப்பனக் குரலில் ஒரு கம்யூனிஸ்ட்

சாகித்ய அகாடமி விருது பெற்ற இலக்கியவாதியும், சிறந்தகல்வியாளரும், பொதுவுடைமைவாதியு மான ஆயிஷா இரா.நடராசன் என்பவர்  ‘காந்தியக் கல்வியும் மெக்காலேவாதிகளும்’ என்ற தலைப்பில், 27.07.2017 ல் இந்து ஏட்டில் எழுதியள்ள கட்டுரையில், மெக்காலே பற்றிய பார்ப்பனவாதக் கோபத்தை அப்படியே வெளிப்படுத்தியுள்ளார். பிறப்பால் அவர் பார்ப்பனர் அல்லாதவராகவும் இருக்கலாம். மெக்காலே பற்றிய அவரது பார்வை, பார்ப்பன ஆதிக்கப் பார்வையாகவே உள்ளது. அது கம்யூனிச இயக்கங்களின் பார்வைதான் என்று யாராவது கூறினால், அந்த இயக்கங்கள் பார்ப்பன ஆதிக்கத்திற்கு உழைப்பவை என்பதற்கு இதுவும் ஒரு சான்று என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது.

மெக்காலே காலத்துக்கு முந்தைய பார்ப்பன - குருகுல - குலக்கல்வி முறையைத்தான் அந்தப் பொதுவுடைமைவாதி விரும்புகிறார். எனவேதான் மெக்காலே முறையை எதிர்க்கிறார். இதோ அவரே இந்து ஏட்டின் கட்டுரையில் வெளிப்படையாக அறிவித்துக்கொள்கிறார்.

“புதிய பாடத்திட்டத்தை முன்மொழிய கல்விக் குழுக்கள் அமைக்கப்பட்டு வல்லுநர்களின் கருத்துகளுக்காக தமிழ்நாடே காத்திருக்கிறது. இன்றைய சூழலில் முற்றிலும் மறக்கப்பட்டுவிட்ட காந்தி முன்மொழிந்த சர்வோதய சமுதாயக் கல்வி குறித்த ஆழமான அலசல் தேவை என்று தோன்றுகிறது. நம் கல்வி குறித்த விவாதங்கள் திரும்பத் திரும்ப அயல்நாட்டு நடைமுறைகளையே சுற்றி வருவதைவிட, நம்மிடமே இருக்கும் மாற்றுக்கல்வி நடைமுறைகளைப் பரிசீலிக்க இது உதவும்..

...1937 - ல் ‘ஹரிஜன்’ இதழில் நாட்டின் கல்வி குறித்து விரிவான ஒரு கட்டுரையை காந்தி எழுதினார். அதில் கல்விமுறையின் 10 பலவீனங்களைப் பட்டியலிட்டிருந்தார். (அதில் முதல் பலவீனம் என்று காந்தி கூறியது) நமது மரபுக்கும் பண்பாட்டுக்கும் முரண்பட்டதாக இந்த மெக்காலே குமாஸ்தா கல்வி உள்ளது.”

...இதற்கு மாற்றாக காந்தி முன்வைத்தது தனது சொந்த அனுபவங்களின் வழியே அவர் அடைந்த ஒரு கல்விமுறை. அதை ‘சர்வோதயக் கல்வி’ என்று அழைத்தார் காந்தி.… 1937-ல் வார்தாவில் காங்கிரஸின் கல்வி மாநாட்டை அக்டோபர் 22 மற்றும் 23-ம் தேதிகளில் கூட்டினார் காந்தி. அது இந்தியத் தேசியக் கல்வி மாநாடு என்று அழைக்கப்படுகிறது. கல்வியாளர் டாக்டர் ஜாகிர் ஹுசைன் (பின்னாட்களில் இந்திய குடியரசுத் தலைவர் ஆனவர்) தலைமையில் இந்தியக் கல்வி குறித்து முடிவுசெய்ய ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. ‘வார்தா கல்வித் திட்டம்’ அல்லது ‘ஆதாரக் கல்விக் கொள்கை’ அந்த கல்விக் குழுவால் பரிசீலித்து முன்மொழியப்பட்டது.

...காந்தியின் பெருமுயற்சியால் வார்தாவிலும் செகாவோனிலும் சர்வோதய மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. என்றாலும், விரைவில் அவை தோல்வியே கண்டன. மதபோதனை இல்லாத கல்வி என்பதால், இஸ்லாமிய மதரஸா கல்வியாளர்களும், சாதி பார்க்காத கல்வி என்பதால் இந்துத்துவவாதிகளும் காந்தியக் கல்வியை எதிர்த்தார்கள். ஆரம்பத்தில், காந்தியின் கொள்கைப் பிடிப்போடு செயல்படுவதுபோல ஈடுபாடு காட்டிய மெக்காலேவாதிகள் சர்வோதயப் பள்ளித் திட்டத்தைப் பகிரங்கமாகவே எதிர்த்தார்கள். வார்தா கல்விப் பிரகடனத்தைப் பரிசீலிப்போம்

...மாணவர்களை மாண்புமிக்கவர்களாக உருவாக்க முயன்ற வார்தா கல்விப் பிரகடனத்தையும் நம் தமிழகக் கல்விக் குழுக்கள் மனதில் கொள்ள வேண்டும்.”

இவ்வாறு ஆயிசா நடராசன் எழுதியுள்ளார். தமிழ் இந்து எட்டில் மட்டுமல்லாமல், தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் www.tnsf.co.in இணையதளத்திலும், மின்னம்  பலம் செய்தி இணையதளத்திலும் இதேபோல, மெக்காலேவுக்கு எதிராகவும், வார்தா கல்வித் திட்டத்தை ஆதரித்தும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இக்கருத்தை இடதுசாரிகளும் எதிர்ப்பார்கள் என்றும் கூறியுள்ளார். அப்படி வார்தா கல்வித் திட்டத்தை எதிர்க்கும் இடதுசாரிகள் இருந்தால் அவர்களை மனதாரப் பாராட்டுவோம்.

‘வார்தா கல்வித் திட்டம்’ என்பது வேறொன்றும் இல்லை. 1939 லும், பிறகு 1952 லும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இராஜாஜி பதவிக்கு வந்தபோதெல்லாம் நடைமுறைப்படுத்தித் தோல்வி கண்ட குலக்கல்வித் திட்டம் தான் அது.

1937 ல் காந்தி ‘ஹரிஜன்’ என்ற ஏட்டில் (31.07.1937) அந்த வார்தா கல்வித் திட்டம் குறித்து  விளக்கி எழுதினார். அன்றிலிருந்து அந்த வார்தாக்கல்வித்திட்டத்தைக் கடுமையாக எதிர்த்துக் களத்தில் இறங்கினார் தோழர் பெரியார். வார்தாக் கல்வித் திட்டத்தை பற்றி தோழர் பெரியார், பேசிய, எழுதியவை களைப் பார்ப்போம்.

வார்தா என்ற குலக்கல்வித் திட்டத்திற்கு எதிராகப் பெரியார்

  • “காந்தியார் விரும்பும் வார்தா கல்வித்திட்டம் அமுலுக்கு வந்து அவனவன் ஜாதித்தொழிலே அவனவனுக்கு கற்பிக்கப்படவேண்டும் என்கின்ற முறை ஆரம்பித்துவிட்டால் பதினென் குடி மக்கள் கதி அதோகதிதான் என்பதை எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. ஆகவே இந்த நிலையில் இருக்கும் இந்தியர்களில் முஸ்லீம்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இந்த பிறவியில் தீண்டாமையோ, இழிவோ ஒழிவது என்பது காந்தி ராஜ்யத்திலோ, காங்கரஸ் ராஜ்யத்திலோ சுலபத்தில் எதிர்பார்க்கக் கூடிய காரியமல்ல என்பதே நமதபிப்பிராயம்.” - தோழர் பெரியார் - குடி அரசு - 09.01.1938

  • “பழைய காலத்து அரசர்களோ ஆரிய ஆதிக்கத்திற்கே அடிமையாய் இருந்ததால் ஆரியர்கள் தவிர மற்றவர்கள் படிக்கக் கூடாது என்கிற ஆரியக் கொள்கையை அப்படியே காப்பாற்றிக் கொடுத்தவர்கள். அதனால் கல்வி பயிலுவதற்கு ஆரியர்களைத் தவிர மற்றவர்களுக்கு சிரத்தையேயில்லை. கடவுள்களே அரசாண்ட காலம் என்னும் ராமன் கிருஷ்ணன் காலத்திலும், அதன்பிறகு அரசாண்ட சேர, சோழ, பாண்டியர்கள் காலத்திலும் அதன் பிறகு பிரிந்து கிடந்த 56 தேச ஆட்சி இருந்த காலம் வரை பார்ப்பனர் தவிர மற்றவர்களுக்குக் கல்வியில்லை.

வேதத்தை உச்சரித்தால் நாக்கையறுக்க வேண்டும், கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றவேண்டும், மனதில் இருத்தினால் நெஞ்சை பிளக்க வேண்டும் என்பன போன்ற கொடிய தண்டனைகள் விதிக்கப்பட்டன....

வெள்ளைக்காரர்கள் ஆட்சி வந்த பிறகுதான் படிக்கக் கூடாதென்ற சமூகங்கள் படிக்க முன் வந்தது; இப்படிப் படிக்க முன் வந்ததன் பயனாக தாழ்த்தப் பட்டவர்களாக இதுவரை இருந்தவர்களும் பிற்போக்காகவும், கொடுமைப் பட்டவர்களாகவும், இருந்து வருகிறவர்களும் படிக்க முன் வந்து உத்தியோகத்துக்கு போட்டிபோட ஆரம்பித்துவிட்டார்கள். இதைப்பார்த்த காங்கரஸ்காரர்கள் இதன் தலையில் கைவைக்க யுக்தி செய்து தந்திரமாக வார்தா கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து திணிக்கப் பார்க்கிறார்கள்.” - தோழர் பெரியார், குடி அரசு -06.02.1938

  • “தகப்பன் தொழிலை மகன் செய்யும்படியான கல்வியும் (வார்தா திட்டம்) சாஸ்திரங்களும் புராணங்களும் மனதில் பதியும்படி படிக்கத் தக்க பாஷையும் (ஹிந்தி) 26 உத்தியோகங்களில் 19 உத்தியோகம் பார்ப்பனர்க்கு கொடுக்கும் (மிருக வைத்திய டாக்டர் வேலை) ‘வகுப்புவாதமற்ற’ தன்மையும் 215 மெம்பர்கள் இருக்கத்தக்க சட்ட சபையில் (சென்னை) ஒரு மனிதர் சொல்கிறபடியே எல்லோரும் தலை வணங்க வேண்டும் என்கின்ற ‘ஜனநாயக சுதந்தரமும்’ ஏற்படுத்தத் தக்க, இருக்கத்தக்க ஆட்சியை கொண்டு வரவும் நிலைக்க வைக்கவும் தேசியவாதிகள் என்பவர்கள் பாடுபடுவதும் அதற்கு எதிரிடையானவர்களை தேசத்துரோகி வகுப்பு வாதி என்பதுமான காரியம் எதுவாயிருந்தாலும் அதை ஒழிக்க பாடுபடாமலோ அத் தொண்டில் உயிர்விடும் நிலை பெறாமலோ ஒரு வினாடியும் இரோம் என்பதை கண்டிப்பாய் தெரிவித்துவிட ஆசைப்படுகிறோம்.”-தோழர் பெரியார்,குடி அரசு - 20.02.1938

  • “பிரிட்டிஷ் அரசாங்கத்தால் உங்களுக்கு ஏற்பட்ட நன்மையும் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தால் ஏற்பட்ட நன்மையும் அடியோடு ஒழிந்து போகும்போல் இருக்கிறது. புதிய அரசியல் உங்கள் சமூகத்துக்கு எமனாய்த் தோன்றி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். உங்கள் கல்வி ஒழிந்தது என்று வைத்துக்கொள்ளுங்கள். வார்தா கல்வித் திட்டப்படி இனி உங்கள் ஜாதித் தொழில்கள் என்பவை புதிப்பிக்கப்படப் போகின்றன. அப்படியானால் உங்கள் தொழில் என்ன?” - தோழர் பெரியார், குடி அரசு -23.10.1938

  • “ஏதோ சில பார்ப்பனரல்லாத ஆசிரியர்களின் தன் மதிப்போடு விளங்கும் ஆசிரியர்களின் - பார்ப்பனரல்லாதார் உணர்ச்சியின் காரணமாய் சில பார்ப்பனரல்லாத பிள்ளைகள் கல்வி கற்று முன்னுக்கு வர மார்க்கம் இருந்து வருகிறது. இதை ஒழிக்கத்தான் இன்று “மகாத்மா” பட்டத்தை வேண்டாம் என்று கூறிக்கொள்ளும் பார்ப்பன தாசறாகிய தோழர் காந்தியார் வினோத திட்டமாகிய வார்தா திட்டத்தை உண்டு பண்ணியிருக்கிறார்.

வார்தா திட்டம் பார்ப்பனரல்லாத மக்களின் கல்வியின்மையை நிலைக்கச் செய்யவே அவனவன் தன்தன் குலத்தொழிலை செய்து பார்ப்பனர்களுக்கு உழைத்துப் போடவேண்டும். பார்ப்பனர்கள் மட்டும் பார்ப்பனரல்லாதார் உழைப்பில் கொழுக்க வேண்டும் என்று செய்யப்படும் சூழ்ச்சிதான் யென்று நாம் பன்முறை விளக்கியிருக்கிறோம்.” - தோழர் பெரியார்,குடி அரசு -30.10.1938

குலக்கல்வித் திட்டத்துக்கு எதிரான பெரியாரின் போராட்டங்கள்

இவையெல்லாம் வார்தா கல்வித் திட்டம் என்ற குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து, தோழர் பெரியார் பேசியவற்றில் ஒருசிலவரிகள் மட்டுமே. 1939 ல் இராஜாஜி இந்தத் திட்டத்தை அமல்படுத்திய போது கடுமையாக எதிர்த்தார் பெரியார். இராஜாஜி பதவி விலகியதைத் தொடர்ந்து அப்போதைக்கு இத்திட்டம் கைவிடப்பட்டது.

மீண்டும் 1952 ல் தமிழ்நாட்டு முதலமைச்சராக இராஜாஜி பதவியேற்றார். பதவியேற்றவுடன் கிராமப்புறங்களில் இருந்து 6000 தொடக்கப்பள்ளிகளை இழுத்துமூடினார். மீதியுள்ள பள்ளிகளில் பாதி நேரம் கல்வியும், மீதி நேரம் அவரவர் தமது ஜாதியின் குலத்தொழிலைச் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

  • “வர்ணாசிரமுறையை ஜனநாயகத்தின் பெயரால் நிலைநாட்ட முயற்சி செய்கிறார் இராஜாஜி, இதோ கடைசி சிகிச்சையாக கணபதி உருவ பொம்மையை உடைக்கும் போராட்டம்” என கணபதி உருவ பொம்மை உடைப்புப் போராட்டத்தை அறிவித்தார்.

  • 27.5.1953 ல் புத்தர் விழாவைக் கொண்டாடி அதன் இறுதியாக கணபதி உருவ பொம்மையை உடைத்து மண்ணோடு மண்ணாக்கி விடுங்கள், நானும் திருச்சியில் உடைப்பேன் என அறிவித்தார். திட்டமிட்டபடி விநாயகர் பொம்மை உடைப்புப் போராட்டம் நடைபெற்றது. சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் காவல்துறை கடுமையாக தடியடியை நடத்தியது.

  • 13.6.1953 ல் திராவிடர்கழக நிர்வாகக்குழு கூட்டியது. குலக்கல்வி எதிர்ப்புக்காக ஜுலை 14 முதல் சட்டசபை மறியல் போராட்டம் நடத்துவது என முடிவுசெய்யப்பட்டது. 20 தேதி முதல் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் மறியல் நடத்துவதென முடிவுசெய்யப்பட்டது.

  • சட்டசபை மறியல் தொடங்கிய நாளில் இருந்த அரசு போராளிகளை கடுமையாக ஒடுக்கியது. தி.மு.க வின் முக்கியத் தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்டனர். சென்னையில் மட்டும் தி.க தோழர்கள் 1700 பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி, கல்லக்குடி ஆகிய ஊர்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 தோழர்கள் வீரமரணம் அடைந்தனர். காவல்துறை தாக்குதலால் 50 தோழர்கள் படுகாயமுற்று மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டனர். 10 தோழர்கள் கை, கால்களை இழந்தனர். சென்னை நீங்கலாக தமிழ் நாட்டின் பிற பகுதிகளில் நடந்த மறியலில் 2450 திராவிடர் கழகத் தோழர்கள் சிறைப்படுத்தப்பட்டனர்.

  • ஆச்சாரியார் ஆட்சியின் துப்பாக்கிச்சூடுகளுக்கும், தாக்குதல்களுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்க 24.7.1953 ல் நாடெங்கும் கடையடைப்பும், வேலை நிறுத்தமும் நடத்தவேண்டுமென பெரியார் அறிவித்தார். திட்டமிட்டபடி போராட்டங்கள் நடைபெற்றன. முதலமைச்சர் இல்லமும் முற்றுகை இடப்பட்டது.

  • விநாயகர் உடைப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து கிருஷ்ணன் பொம்மை உடைப்புப் போராட்டத்தையும் அறிவிக்கப்போவதாக பெரியார் அறிவித்தார். ஆனால் அப்படி ஒரு போராட்டம் நடைபெறவில்லை.

  • 1953 டிசம்பர் 2 மற்றும் 3 தேதிகளில் மதுரையிலிருந்த, ஈரோட்டிலிருந்தும் குலக்கல்வி எதிர்ப்புப் பிரச்சாரப்படை கிளம்பும் என அறிவித்தார்.

  • 1954 ஜனவரி 24 இல் ஈரோட்டில் குலக்கல்வித்திட்ட எதிர்ப்பு மாநாடு கூட்டப்பட்டது. தொடர்ச்சி யாக தமிழ்நாடு முழுவதும் குலக்கல்வி எதிர்ப்பு மாநாடுகள் நடத்தப்பட்டன. பெட்ரோலும் தீப்பந்தமும் தயாராக இருக்கட்டும் என பெரியார் அறிவித்தார். கடும் போராட்டத்திற்கு மக்களைத் தயாரிக்கும் பரப்புரைகள் நாடுமுழுவதும் பரபரப்பாக வெகுவாக நடைபெற்றுவந்தன.

  • மார்ச்சில் நீடாமங்கலம் ஆறுமுகம் தலைமையில் நாகையில் இருந்து குலக்கல்வி எதிர்ப்புப் பிரச்சாரப்படை பயணத்தைத் தொடங்கியது. சென்னையை நோக்கிப் பயணம் தொடங்கியது. படை சென்னையை அடையும் முன்பே இராஜாஜி உடல்நலமில்லை எனக்கூறி பதவியிலிருந்து விலகினார். மார்ச் 30 இல் பதவிவிலகினார். ஏப்ரல் 14 இல் காமராசர் பொறுப்பேற்றார். ஏப்ரல் 18 ஆம் நாள் குலக்கல்வித்திட்டத்தை நீக்குவதாக அறிவிப்பு வெளியானது.

இப்படி தொடர்ச்சியாகக் கஉயிர்களைப் பலிகொடுத்துத்தான் குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டது. அதை புதிய தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் மீண்டும் நடைமுறைப்படுத்த  ஆர்.எஸ்.எஸ் கும்பல் முடிவெடுத்திருக்கிறது.

ஆனால், ஆர்.எஸ்.எஸ் ஸின் புதிய தேசியக்கல்விக் கொள்கைக்கு மாற்றான கல்வி முறை என்ற பெயரில் மீண்டும் அதே வார்தா - குலக்கல்வித்திட்டத்தையேக் கொண்டு வர வேண்டும் என்று ஒரு கம்யூனிசவாதியே எழுவதும், பேசுவதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி அமைப்பான தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் அதை ஆமோதித்து இணையதளத்தில் வெளியிடுவதும் மிகவும் கண்டிக்கத்தக்கது.

புதிய கல்விக்கொள்கைக்கு எதிராகக் களத்தில் நிற்கும் தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபு மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர், வார்தா – குலக்கல்வித் திட்டத்திற்கு ஆதரவான பார்ப்பனச் சார்புப் போக்கைத் தொடக்கத்திலேயே அழித்துவிட முயற்சி செய்யவேண்டும்.  இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளுக்கு மனுதர்மக் கம்யூனிஸ்ட்டுகள் என்றொரு பெயரும் உண்டு.  அதை உறுதிப்படுத்தவிடக்கூடாது எனத் தோழமையுடன் கூறுகிறோம்.