ஆதிகாலத்தில் திருமணங்கள்
நமது சமூக அமைப்பில் தற்போது இருக்கிற திருமண அமைப்பும், சாதிய கட்டமைப்பும் பழந்தமிழ் சமூகத்தில் இல்லை. ஆரியர் வருகைக்குப் பின்னர்தான் இந்த கட்டமைப்பு இந்த துணைக்கண்டம் முழுவதும் பரவியது. தமிழ் சமூகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் திருமணம் என்கிற அமைப்பு ஆணாதிக்க சமூகத்தை நிலைநிறுத்தும் வடிவமே. விவசாயத்தை இழி தொழிலாகக் கருதும் ஆரிய நாடோடிகளின் படையெடுப்பு வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. தந்தை வழி சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட ஆரியர்கள், தாய்வழி சமூகத்தை பின்பற்றிக்கொண்டிருந்த தமிழ் பழங்குடிகளின் பண்பாட்டில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். பெண்ணை ஆணின் உடைமையாகக் கருதும் ஆரிய நாடோடிகளின வருகை தமிழ் மண்ணில் திருமணம், கற்பு போன்ற ஆணாதிக்க கருத்தியலை நிறுவுகிறது. ஒரு ஆணின் வாரிசை சுமக்கும் கருவி என்பதைத் தவிர பெண்ணிற்கு வேறு எந்த குறிப்பிடத்தக்க முக்கியத்துவமும் ஆரிய சமூகத்தில் அளிக்கப்படவில்லை. (மகாபாரதத்தில் சூரிய வம்சம் உருவாக்கப்பட்ட வரலாறு, கர்ணன் கதை மிகச்சிறந்த உதாரணம்) தொல் தமிழ்சமூகத்தின் தாய்வழி சமூகமும் தாயுரிமை நடைமுறையும் முழுமையாக அழித்தொழிக்கப்பட்டது.
ஆணாதிக்கத்தை நிலைநிறுத்தும் பொருட்டு திருமணம் என்கிற வடிவமும், குடும்பம் என்கிற அமைப்பும் தொடர்ந்து வருகிறது. உலகின் பெரும்பாலான தேசிய இனங்கள் தந்தை வழி சமூகத்தையும், குடும்பம் என்கிற நிறுவனத்தையும் ஏற்றுக்கொள்கின்றன. இருப்பினும், இந்திய துணைக்கண்டத்தில் பெண் அடிமையான வரலாற்றைத் தெரிந்து கொள்ள சாதிய கட்டமைப்பு இறுக்கமான காலகட்டத்தோடு தொடர்புபடுத்திதான் புரிந்து கொள்ள வேண்டும்.
மற்ற நாடுகளில் பெண் விடுதலையை தந்தை வழி ஆதிக்க தகர்ப்பில் இருந்து அணுகினால் போதும். ஆனால் அந்த ஒற்றை நடைமுறை இங்கு பயனளிக்காது. இந்துத்துவ அமைப்பில் சாதிய கட்டுமானத்தையும், ஆண் தலைமையையும் பாதுகாக்கிற அமைப்பாகவே குடும்பம் என்கிற நிறுவனம் செயல்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆரியர்கள் ஆரம்பகாலத்தில் வகைப்படுத்தியிருந்த திருமணங்களை பார்க்கலாம்
1. பிராம்ம்-பிரம்மச்சாரியே வலிய அழைத்து பெண்ணை தானம் செய்தல்
2. தெய்வம்-புராகிதருக்கு பெண் கொடுத்தல்
3. ஆருசம்-பெண்ணிற்கு பரிசம் வாங்கி திருமணம் செய்தல்
4. பிரஜாபாத்யம்-பிரமச்சாரிக்குத் திருமணம் செய்து வைத்தல்
5. ஆசுரம்-பெற்றவன் குறிக்கும் பொருளைக் கொடுத்துப் பெண்ணை வாங்கி மணத்தல்
6. காந்தர்வம்-ஆணும் பெண்ணும் விரும்பி இணைதல்
7. இராட்ச்சம்-பெண்களின் உறவினர்களை அழித்து அவளை அழித்தல்
8. பைசாசம்-தூக்கம், குடிவெறி ஆகியவற்றில் பித்தம் கொண்டு மயங்கிய நிலையிலிருக்கும் பெண்மை உறவு கொள்ளல்
மேற்கண்டவற்றில் காந்தர்வ திருமணத்தைத் தவிர மற்ற முறைகள் அனைத்திலும் பெண்ணின் உரிமைகள் மதிக்கப்படுவதில்லை. காந்தர்வ திருமணம் மட்டுமே இரு பாலரின் உணர்வுகளை மதித்து நடைபெறுகிறது. ஆனால் அந்த வகை திருமணம் புரிவோருக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்று மனுதர்மம் எச்சரிக்கிறது. ஏனென்றால் அத்தைகய திருமண முறையைத் தான் பழந்தமிழர் பின்பற்றி வந்தனர். ஆனால் இன்று தமிழர் பண்பாடு என்று தனித்து ஒன்று இல்லாத அளவிற்கு அனைத்திலும் ஆரியப் பண்பாடு கோலோச்சுகிறது. ஆகவே இன்றைய திருமண அமைப்புகள் அனைத்திலும் பார்ப்பனியம் விரவி இருக்கிறது.
நால் வர்ணம் நாற்பதாயிரம் சாதிகளாகப் பிரிந்த வரலாறு
“கிருஸ்ணபராமாத்மாவே, என் உறவினர்களுடன் போரிட்டால் எம் குலம் நாசமாகும், பெண்கள் அனாதைகளாக்கப்படுவர், வர்ணகலப்பு ஏற்படும். ஆகவே என் உறவினர்களுடன் போரிட மாட்டேன்.”-பகவத் கீதை (1-34)
மேற்கண்ட வாசகம் அர்ச்சுனன் கிருஸ்ணனிடம் சொல்வதாக பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டது. வர்ணத்தூய்மையை முதன்மைபடுத்தி வந்த அந்த காலத்தில், விதவை பெண்களும், அனாதைப் பெண்களும் வேறு வர்ணத்தை நாடும் சூழல் ஏற்பட்டது. விதவை மறுமணமும் மனுதர்மத்தில் தடுக்கப்பட்டுள்ளது. ஆகவே வர்ணக் கலப்பு ஏற்படாமல் தடுக்க உடன்கட்டை ஏறும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது. இந்த கொடுமையான பழக்க வழக்கங்களிலிருந்து தப்பித்து வந்த பெண்கள் சாதிக்கு பங்கம் விளைவித்ததாகக் கூறி ஒதுக்கப்பட்டனர். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் மூலம் உருவான சந்ததியினர் தனி சாதியாக உருவெடுத்தனர். அதிலும் இந்த வர்ணக் கலப்பை அனுலோமாத் திருமணம், பிராட்டிலோமா திருமணம் என இருவகைகளாக மனுதர்மவாதிகள் பிரித்தனர். அனுமலோதிருமணம் என்றால், மேல் வர்ண பெண்களை அதைவிட கீழ் நிலையிலுள்ளவர்கள் திருமணம் செய்து கொள்வது. பிராட்டிலோமத் திருமணம் என்பது, கீழ் வர்ணப் பெண்களை மேல் வர்ண ஆண்கள் மணந்து கொள்வது. இது போன்ற திருமண வகைகளால் நால் வர்ண சாதி நாற்பதாயிரம் சாதிகளாகப் பிரிந்த்து. ஆகவே பெண்ணடிமைத்தனத்திற்கும் சாதிகள் உருவானதிற்குள்ளும் தொடர்பைப் புரிந்து கொள்ள இந்த வரலாறு போதும் என்று நினைக்கிறேன். இந்த சாதிய கட்டமைப்பை எதிர்த்த சூத்திரர்களின் ஒரு பிரிவினரே பிற்காலத்தில் பஞ்சமராகவும், சண்டாளராகவாகவும் மாறினர். அவர்களை தீண்டத்தகாதவர்களாக மாற்றிய இந்துத்துவத்தின் சூழ்ச்சியைத்தான் நாம் இன்றும் கண்டு கொண்டிருக்கிறோம்.
கார்ப்பரேட் யுகத்தில் திருமணங்களும் சாதியும்
பிரிட்டிஸ் காலனியாதிக்கம் எங்கெல்லாம் சந்தை விரித்ததோ அங்கு எல்லாம் பழைய நிலவுடைமை சமூக நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டது . ஆனால் இந்திய துணைக்கண்டத்தில் மட்டும் சாதிய பழமைவாதம் மறையாமல் அப்படியே நின்றதுதான் வரலாறு. அறிவியல் தொழில் நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும் சாதிய கட்டுமானத்தை வலுவாக்கும் முயற்சியில் பார்ப்பனியம் வெற்றிக் கண்டு வருகிறது. தனது எதிரான அனைத்து விழுமியங்களையும் பார்ப்பனியம் உள்வாங்கி செரித்துக் கொள்வதுதான் அதன் குணமாக இருக்கிறது. இப்ப எல்லாம் யாரு சாதி பார்க்குற என்று கேட்கும் நபர்கள் இன்றைய மேட்ரிமானி சாதி சந்தையை விமர்சிக்க மறுக்கிறார்கள். பள்ளிக்கூடங்கள், அரசு அலுவலகங்களில் இடஒதுக்கீட்டிற்காக சாதி கேட்பதை கடுமையாக விமர்சிப்பவர்கள் வரன் தேடுவதில் உட்சாதி உணர்வோடு இருப்பதை நாம் பார்க்க முடிகிறது.
சாதி தடையில்லை(ஆதிதிராவிடர் தவிர)
மேட்ரிமானி.காம் மற்றும் மணமகன், மணமகள் தேவை விளம்பரங்களில், சாதி தடையில்லை என்கிற அறிவிப்போடு சில விளம்பரங்கள் வருவதைப் பார்க்கலாம். அது போன்ற அறிவிப்புகள் நமக்கு சற்று ஆறுதல் தரும். ஆனால் அடுத்த வரியில் ஆதிதிராவிடர் நீங்கலாக என்கிற வாசகம் வரும். வேறு வழியில்லாமல் கையறு நிலையில் இருக்கும் குடும்பங்கள் கூட ஆதிதிராவிடர்களைத் தவிர்க்கும் மனநிலையை என்னவென்று சொல்வது
சாதி தளர்வு எப்போதெல்லாம் நிகழ்கிறது?
சில முற்படுத்தப்பட்ட சமூகங்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருக்கின்றன. உதாரணமாக காசுக்கடைச் செட்டியார் போன்ற சமூகங்களில் பெண்ணின் படிப்பிற்கேற்ற மாப்பிள்ளை கிடைக்காத தருணத்தில் தனக்கு இணையான சைவப்பிள்ளை, சைவ முதலியார் போன்ற சமூகங்களில் வரன் தேடுகிறார்கள். இதுவும் படித்த நகர்ப்புற வர்க்கத்தில் மட்டுமே நிகழ்கிறது. காலத்தின் மாற்றத்திற்கேற்ப இது போன்ற சிறுபான்மை சாதிகள் மாறாவிட்டால் பொருத்தமான துணை கிடைக்காமல் காலத்திற்கும் தனியே இருக்க வேண்டியதுதான். ஆகவே கொள்கை அடிப்பைடயில் இல்லாமல் காலத்தின் கட்டாயத்தின்படி இப்படி சாதி மறுப்பு மணம் செய்வோர்களும் தன்னையறியாமல் சாதியை ஒழிக்கப் பணியாற்றுகின்றனர் என்றே சொல்லலாம். ஏனென்றால், இந்த மாற்றத்திற்கு வருவதற்கே அந்த சாதியிலுள்ள பழமைவாதிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பர்.
அகமணமுறையை இறுக பற்றிக் கொள்ளும் சாதிகள்
அகமணமுறையை இறுக பற்றிக்கொள்ளும் சாதிகளில் மிக இறுக்கமானவை நான்கு. பிரான்மலைக் கள்ளர், கொண்டைய கொட்ட மறவர், கொங்கு வேளாளக் கவுண்டர், நாட்டுக்கோட்டைச் செட்டியார். எல்லா சாதியிலும் கலப்புமணம் அங்கீகரிக்கப்படுவதில்லை என்றாலும் குறிப்பிட்ட இந்த நான்கு சாதியில் மட்டும் மிகவும் இறுக்கமான கட்டமைப்பு (rigid structure) காணப்படுகிறது. அதற்கான காரணங்கள் என்ன என்று அறியவேண்டுமென்றால் அந்தந்த சாதிகளின் வாழ்வியலை நாம் படிக்க வேண்டும்.
பிரான்மலை கள்ளர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அடர்த்தியாக உள்ள சமூகம் பிரான்மலைக்கள்ளர். இவர்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குல தெய்வம் உண்டு. இந்த குல தெய்வத்தின் அடிப்படையில்தான் மண உறவுகள் அமையும். உதாரணமாக ஒச்சாண்டம்மன் சாமி கும்பிடும் குடும்பம் கல்யாணகருப்பு கும்பிடும் குடும்பத்திற்கு மாமன் மச்சான் உறவு. ஒரே சாமி கும்பிடுகிறவர்கள் பங்காளி முறை. பிரான்மலைக் கள்ளர் சமூகத்தைப் பொருத்தவரை, ஒரே சாதியில் கூட குலதெய்வ வழிபாடு பொருத்துதான் மண உறவு அமையும். இதில் எதுவும் மாறி நிகழ்ந்தாலே கிட்டத்தட்ட சாதி துரோகம் செய்ததாக குற்றஞ் சாட்டப்படும். இந்த சூழலில் வேறு சாதியில் மணஉறவு என்பது, வெட்டுக் குத்தில்தான் முடியும். விதவை மணம், அண்ணனை இழந்த தம்பி அண்ணியை மணத்தல், தாய்மாமனை மணத்தல், தாலி அறுத்தல் போன்ற பழக்க வழக்கங்கள் மற்ற சமுகத்தை விட இங்கு அதிகம். நிலம்சார் பழங்குடிகளாக இவர்களை வகைப்படுத்துதல் சாலப் பொருத்தமாக இருக்கும்.
இவர்களிடம் இருக்கும் அகமணமுறை இறுக்கத்திற்கு இவர்களின் குல தெய்வ வழிபாடு முக்கிய காரணம். திருட்டையும், வழிப்பறியையும் பிரதான தொழிலாகக் கொண்ட இந்த சமூகம் அகமணமுறை மூலம் தன் சமூக கட்டமைப்பை இறுக பற்றிக் கொண்டது எனலாம். அதுதான் தனக்கு பாதுகாப்பு என்று அக்காலத்தில் அச்சமூகம் நினைத்திருக்கலாம். தற்போது சீர்மரபினர் என்று அரசால் அங்கீகரிக்கப்பட்டு கல்வி வேலைவாய்ப்பில் ஓரளவு முன்னேற்றம் கண்டிருந்தாலும் இன்னும் பழமையான குல தெய்வ வழிபாட்டை இறுக்கமாகப் பற்றி இருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே இன்றும் அகமணமுறை கண்டிப்புடன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சமீபகாலமாக இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஆதிக்க மனநிலையை இந்துத்துவ சக்திகள் தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருவதால், நவீன சிந்தனைகள் உட்புகா வண்ணம் சாதிய உணர்வு இவர்களிடம் தலைக்கேறிவருகிறது.
கொண்டைய கொட்ட மறவர்
இந்த சமூகத்திற்கு பிரான்மலைக்கள்ளர் சமூகத்திற்கு குறிப்பிட்ட அனைத்து குணங்களும் பொருந்தும். பிரான்மலைக் கள்ளரை விட சற்று மேம்பட்ட வாழ்வியல் முறை கொண்டிருந்தாலும், அகமணமுறை இறுக்கம் வலுவாகவே இருக்கிறது. ராமநாதபுரம், நெல்லை மாவட்டங்களில் இந்த சமூகம் அடர்த்தியாக வாழ்கின்றனர். இங்கு குலதெய்வத்திற்கு பதிலாக, கிளை முறையின் அடிப்படையில் மணஉறவு நடைபெறுகிறது. அதாவது மணப்பெண் அல்லது மணமகனின் தாயின் கிளை என்று ஒன்று இருக்கும். அதனடிப்படையில்தான் மணஉறவு அமையும். இங்கும் ஒரே சாதி என்பது மட்டும் திருமணத்திற்குப் போதாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கிளை மாறி மணம் முடிக்கும் மறவர்களை மறவர் சமூகம் சாதி மாறி திருமணம் செய்தோரைப் போன்றே இழிவு செய்கிறது.
கொங்கு வேளாளக் கவுண்டர்
கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் அடர்த்தியாக காணப்படும் சமூகம் கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகம். இந்த சாதியிலும் மண உறவு கொள்வதற்கு ஒரே சாதி என்பது மட்டும் போதாது. அந்த சாதியில் அவர்கள் என்ன கூட்டம் என்ன என்பதைப் பொறுத்தே மணஉறவு அமையும். ஆகவே இங்கும் சாதித் தூய்மை கடுமையாக பேணப்படும். மேலும், கொங்கு வேளாளர் சமூகம் நிலவுடைமை சமூகம் என்பதால் பணம் புழங்கும் சமூகமாக இருக்கிறது. ஆகவே, தனது பெண்ணின் மூலம் அடுத்த சமூகத்திற்கு சொத்து செல்வதை அவர்கள் விரும்புவதில்லை.
மேற்கண்ட மூன்று சமூகங்களிலும்(பிரான்மலைக் கள்ளர், கொண்டைய கொட்ட மறவர், கொங்கு வேளாளக் கவுண்டர்) மாற்று சாதி திருமணம் மட்டும் தடை செய்யப்படவில்லை; ஒரே சாதிக்குள்ளும் சில வரையறைக்குள்தான் மணஉறவு அனுமதிக்கப்படுகிறது. அதை மீறி திருமணம் செய்ய தடை விதிக்கப்படுகிறது என்பதை உணர வேண்டும். இந்த சாதிகளின் அகமணமுறை இறுக்கத்திற்கு இது ஒரு முக்கிய காரணம் எனலாம். அகமுடையர், கோனார், ஆசாரி, துளுவ வேளாளர், நாடார், செங்குந்த முதலியார் போன்ற சமூகங்கள் அகமணமுறையைப் பேணினாலும், ஒரே சாதிக்குள் திருமணம் செய்து கொள்ள வரையறை எதுவும் வகுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டுக்கோட்டை செட்டியார்
தமிழ்ச்சூழலில் அதிகமான உபரி ஈட்டலும், பார்ப்பன தலைமையை ஏற்றுக்கொள்ளாத் தன்மையும் கொண்ட சமூகம் நாட்டுக்கோட்டை செட்டியார். திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்கிற பழமொழிக்கேற்ப வாழ்ந்த சமூகம். பணம் பார்க்கும் வணிக சமூகம் என்பதால் தன்னை பிற சமூகத்தில் இருந்து தனித்து நிறுத்திக்கொள்வதில் அக்கறை காட்டியது. அதன் விளைவே அகமணமுறை அங்கு இறுக்கமாக காணப்படுகிறது.
பட்டியல் சமூகங்களிடையே சாதிய திருமணங்கள்
தென்மாவட்டங்களில் பரவலாக இருக்கும் தேவந்திர குலவேளாளர் சமூக மக்கள் (பள்ளர்), தங்களை பறையர், அருந்ததியரை விட மேலானவர்களாகக் கருதி கொள்கின்றனர். மறவரும் வன்னியர்களும் எவ்வாறு பறையர்களை ஒடுக்குகிறார்களோ அதைப் போல்தான் இவர்களும் பறையர்களிடம் மணமுடிக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தமிழகம் முழுவதும் விரவி இருக்கிற பறையர்கள், அருந்ததியர்களுடன் மணம் முடிக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பட்டியல் சமூகங்களுக்கிடையே சாதி மறுப்பு மணம் என்பது பெரும்பாலான இடங்களில் புரட்சிகரமான செயலாகவே இருக்கிறது. தெலுங்கைத் தாய்மொழியாக கொண்ட அருந்ததியர்களின் வாழ்நிலை மற்ற இரண்டு சமூகங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் கீழ்நிலையில் இருக்கிறது. இந்த சமூகத்தில் கலப்பு மணம் மிகவும் அரிது என்பது குறிப்பிடத்தக்கது.
சாதியை விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளாக திருமணங்கள்
திருமணப் பத்திரிக்கைகளில் தாழ்த்தப்பட்டோர் தவிர்த்து பெரும்பாலான சாதிகள் தங்கள் சாதியைத் தவறாமல் அச்சிடுகின்றனர். பெருநகர கலாச்சாரத்தில் மிகவும் ஒப்பனையுடன் எளிமையாக தன் நண்பர்களுக்கு மட்டும் அழைப்பிதழ்கள் வழங்கும் விதம் தற்போது அதிகரித்து வருகிறது. இது ஆரோக்கியமான சூழல். ஏனென்றால் இந்தப் பத்திரிக்கைகளில் சாதி குறிப்பிடப்படுவதில்லை. இருந்தாலும் இது சமூகத்தில் பரவலாக்கப்படவில்லை. வரன் தேட ஆரம்பித்த காலத்தில் துவங்கி பத்திரிக்கை அடிப்பதிலிருந்து தாலி கட்டுவது வரை சாதிக்கான பிரச்சாரத்தை திருமணம் என்கிற அமைப்பு செய்து கொண்டிருக்கிறது.
பார்ப்பனர்களும் திருமணமும்
பார்ப்பனர்களிடமும் உட்சாதி மணத்தில் கோத்திரப் பிரிவுகளின் அடிப்படையில்தான் நிகழ்கிறது. ஆனால் இடைநிலை சாதிகள் கடைபிடிக்கும் அளவிற்கு தன்னை அழித்துக் கொண்டு சாதியை காப்பாற்றும் அறிவீனம் பார்ப்பனர்களிடையே இல்லை. நல்ல படித்த பணக்கார தாழ்த்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்ட இளைஞனுடன் காதல் ஏற்படும்போது அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்களைப் பொருத்தவரை சூத்திர சாதியும் ஒன்றுதான், தாழ்த்தப்பட்ட சாதியும் ஒன்றுதான். ஆகவே வேறு சாதியில் மணம் புரிய வேண்டும் என்கிற கட்டாய நிலை வந்த பிறகு, பள்ளரும் ஒன்றுதான், கள்ளரும் ஒன்றுதான் என்பது அவர்கள் பார்வை. அவர்கள் பார்வையில் இந்த இரு சாதியும் தோற்றத்தால், இனத்தால் நம்மில் இருந்து(பார்ப்பனர்களிடமிருந்து) வேறுபட்டவர்கள் அவ்வளவுதான். அது யாராய் இருந்தா என்ன கலப்பு மணம் நடக்கிறது. ஆனால் இதற்காக பார்ப்பனர்கள் முற்போக்காளர்கள் என்று நான் சொல்லவில்லை. மேற்கூறிய உதாரணங்கள் மிகவும் சில பார்ப்பனக் குடும்பங்களால் மட்டுமே அங்கீகரிக்கப்படுகின்றன. (கே.பாலச்சந்தர் குடும்பத்தில் கந்தசாமி என்கிற ஆதிதிராவிடர் இருக்கிறார்). பெரும்பாலான பார்ப்பனியக் குடும்பங்கள் சாதிய செருக்குடனும், சூத்திர, பஞ்சம சாதிகளை இழிவுபடுத்தும் கருத்தியலையே கொண்டிருக்கின்றன என்பது கண்கூடு. சுயநலத்திற்காகவும், வேறு சில ஆதாயங்களுக்காகவும் பார்ப்பனக் குடும்பங்கள் ஏற்றுக்கொள்ளும் கலப்பு மணத்தைக் கூட முதலியார், செட்டியார் குடும்பங்கள் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை என்பதை வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டியுள்ளது.
காதல் மணங்கள் அனைத்தும் சாதி மறுப்பு மணங்களா?
இன்று நுகர்வு சந்தையில் ஆண் பெண் உறவு என்பது மிகவும் எளிமைபடுத்தப்பட்டுவிட்டது. சாதிவெறி பிடித்த கூட்டம் கிராமங்களில் இருக்கிறது என்றால் சாதி, சமூகம், மொழி இதில் எதைப் பற்றியும் தெரியாத தெரிந்து கொள்ள விரும்பாத ஒரு அரைவேக்காடு கூட்டம் சென்னை போன்ற பெருநகரங்களில் இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிகிறோம் என்கிற ஒற்றை அடையாளத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாத இளைஞர் கூட்டம். இவர்களிடம் அரும்பும் காதல் சிலசமயங்களில் திருமணங்களில் முடிகிறது(!). அவர்கள், சாதி விடுத்து மணம் புரிந்திருந்தாலும, சாதி மறுப்பாளர்கள் கிடையாது. ஏனென்றால் பள்ளிக்கூடத்தில் சாதி கேட்கிறார்கள்; அதனால்தான் சாதி இன்னும் இருக்கிறது என்று சொல்லும் அறிவுஜூவிகள் தான் இவர்கள். இருப்பினும் இவர்கள் செய்யும் காதல் மணங்களும் சாதி மறுப்பிற்கு துரும்பளவேனும் உதவக்கூடியவை என்பதை மறுப்பதற்கில்லை.
மேற்குறிப்பிட்ட தரவுகளிலிருந்து இந்த துணைக்கண்டம் முழுவதும் சாதி என்கிற அமைப்பு வலுவாக காலூன்றியிருப்பதையும், திருமணம் என்கிற வடிவமே அதற்கு வலுவான அடித்தளமாக இருப்பதையும் ஆழமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அதே சமயம் சாதியற்றவர்களுக்கான வலுவான நிறுவனமும், சாதிமறுப்பு மணம் புரிந்தவர்களுக்கான பாதுகாப்பும், வாழ்வாதார உத்திரவாதமும் இங்கு இல்லை என்பதும் புலப்படுகிறது. அந்தத் தேவையை நிவர்த்தி செய்யும் பணி முற்போக்காளர்களுக்கு இருக்கிறது என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.
- ஜீவசகாப்தன்