ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்கும் கல்வி என்பது இன்றியமையாதது மட்டும் அல்ல, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் மிக அவசியமானது. மனித வளர்ச்சியின் ஒவ்வொரு படிநிலையிலும், மனிதன் தன்னையும் தான் சார்ந்த சமூகத்தின் கட்டமைப்பையும், சமூகத்தின் பன்முகத் தேவையை கருத்தில்கொண்டு சமூகத்தில் கிடைக்கக்கூடிய வளத்திற்கு ஏற்ப, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி நவநாகரிகமான சமூகத்தை கட்டமைப்பதற்கு கல்வி மிகமிக அவசியமாகிறது. அதன் அடிப்படையில் நிகழ்கால சமூகத்தில், சமூகத்திற்குத் தேவையான புதிய கண்டுபிடிப்புகளை ஆய்ந்து அறிவதற்காகத்தான் அடிப்படை கல்வியில் இருந்து முன்னேறி உயர்கல்வி என்ற ஒன்று உருவாக்கப்பட்டு இயங்கிக்கொண்டிருக்கிறது. இவ்வாறாக, இயங்கிக்கொண்டிருக்கும் உயர்கல்வியான முதுநிலைக் கல்வி, முனைவர் பட்டத்திற்கான கல்வி என்பதும், அவர்கள் மேற்கொள்ளும் ஆய்வு என்பதும் சமூகத்திற்கு எந்த விதத்தில் உபயோகமாக இருக்கிறது என்பதில் இருந்துதான் இன்றைய உயர்கல்வியின் தரம் கானல் நீராய் போகிறது என்பதை உணர முடிகிறது.

students convocation 600

உலக அளவில் தலைசிறந்த 200 பல்கலைகழகங்களின் பட்டியலில், இந்தியாவில் இருந்து ஒன்று கூட இடம்பெறமுடியவில்லை. இதில், இந்தியாவின் அதிஉயர் கல்வி நிறுவனங்கள் எனப்படும் ஐஐடி, ஐஐஎம் கூட இடம்பெறமுடியவில்லை. உலக மக்கள்தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நாடு, வல்லரசு கனவு காணும் ஒரு நாட்டில் இருந்து உலகின் தலைசிறந்த முதல் பல்கலைகழகமாக இல்லையெனிலும் குறைந்தபட்சம் 200 பல்கலைகழக‌ங்களின் வரிசையில்கூட இடம்பெறமுடியவில்லை எனில் நம் நாட்டின் உயர்கல்வியின் தரத்தை அனுமானித்துக் கொள்ளலாம். இந்தியாவில் கல்வி என்பது ஆரம்பப் பள்ளிகூடம் என்ற புள்ளியில் இருந்துதான் தொடங்கி வைக்கப்படுகிறது. அப்படித் தொடங்கும் ஆரம்பக் கல்வியில் 100 பேர் படிக்கும் ஒரு வகுப்பில் இருந்து உயர்கல்விக்கு எத்தனை மாணவர்கள் செல்கிறார்கள் என்றால் ஒன்றிரண்டு பேர் என்பதே அதிகம்.

பெரும்பாலும், ஒரு சராசரி மனிதன் தன் பொருளாதார நிலையில் இருந்து தன்னைச் சார்ந்த தன் குடும்பத்தின் வறுமையைப் போக்கி வாழ்வது என்பதே பெரிய நிகழ்வு. ஆனால், அதிலிருந்து வெளியேறி அல்லது சகித்துக்கொண்டு தன் பிள்ளைகளை படிக்கவைத்தல் என்பது மிகக் கடினமான ஒன்று. இத்தகைய சமூக, பொருளாதார சூழ்நிலையில் இருந்துவரும் ஒரு மாணவரை, தன் படிப்பின் மூலம் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களின் நிலையையும் மாற்றிக்கொண்டும் சமூகத்தின் நிலையையும் மாற்றிக் கட்டமைக்க தனது பங்கை செலுத்தும் வகையில் ஒரு மாணவரை உருவாக்குவது என்பது அரசாங்கத்தின் கடமையாகும். ஆனால், அடிப்படையில் இந்தக் கடமையை சரிவர செய்வதில்லை என்பதோடு இல்லாமல், கல்வியை வியாபாரமாக்கிவிட்டது. அதனால், ஒரு மாணவனுக்கு அவன் திறமையைக் கண்டுபிடித்து அல்லது திறமையை சொல்லிக்கொடுத்து அவனை மிகச் சரியாக வார்த்து உருவாக்காமல், ஒரு மாணவனை உனக்குத் திறமைகள் இல்லை; உனக்கு திறமைகள் வராது என்று அவனை கழித்துவிடுவதிலேயே கவனத்தை செலுத்தும் காரணத்தால்தான் ஆரம்பப் பள்ளிகூடத்தில் படித்த மாணவர்கள் உயர்கல்வி என்று வரும்போது மிக சொற்ப‌மாக வருகின்றனர்.

இன்னொரு காரணம், பள்ளி கல்விக்குப் பிறகு கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு போதிய பொருளாதாரம் இல்லாதது மிக முக்கிய காரணம். மேலும், ஏறக்குறைய பள்ளிக்கல்வியை வெற்றிகரமாக முடித்தவர்கள் அல்லது தோல்வியடைந்தவர்களில் ஆண்களில் பெரும்பாலும், கல்வியைத் தொடர முயற்சி செய்கின்றனர். மிகச் சிறிதளவே தங்களின் தற்காலிக குடும்பப் பொருளாதாரத்தை பாதுகாத்துக்கொள்ள கல்வியை கைவிட்டுவிட்டு வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். பெண்கள்தான் மிக அதிக அளவில், அதாவது பள்ளிக் கல்வியை தோல்வியுடன் முடித்தவர்கள் பெரும்பாலும், கல்வியைவிட்டு திருமணம் செய்துகொள்கின்றனர். வெற்றி பெற்றவர்களுக்கும் ஏறக்குறைய இதே நிலைமைதான். அதிலும், பெரும்பாலும் திருமணத்திற்கான பொருளாதாரம் இல்லாத காரணத்தால்தான் சிலபேராவது படிக்கப் போகின்றனர். இந்த நிகழ்வில், நன்கு படிக்கும் பெண்களுக்கும் திருமணம்தான் அவசியம் என்ற கருத்துதான் பள்ளிகளிலும்கூட போதிக்கப்படுகிறது. ஏனெனில் இந்த தரத்தில்தான் கல்வியாளர்களும் இருக்கின்றனர். அவர்களும் மாணவர்களை இந்த தரத்தில்தான் உருவாக்குகின்றனர். மேலும் இத்தகைய பள்ளிக் கல்விக்குப் பிறகு பலதடைகளைத் தாண்டி மாணவர்கள் சென்றாலும் அவர்களின் நிலை, கல்லூரியை விட்டு ஏறக்குறைய வெற்றிபெற்றாலும் அல்லது தோல்வியடைந்தாலும் பள்ளிக் கல்விக்கு பிறகு ஏற்பட்ட அதே நிகழ்வுதான் நடக்கிறது. மேலும், பட்டப்படிப்பை முடித்த மாணவர்களும், தன் குடும்பத்தின் பொருளாதார நிலையை சிறிதளவேனும் தற்காத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவதால் முதுநிலைபடிப்பை கைவிட்டுவிடுகின்றனர். இந்த விசயத்தில் கல்வி போதித்ததும், மாணவர்கள் கற்றுக்கொண்டதும் என்னவெனில் படிப்பு, திருமணத்திற்கு மிக முக்கியமான தகுதியாக சமூகத்தால் முன்னிறுத்தப்படுவதுதான். அதிலும் மிக பாதிப்புக்கு உள்ளாவது பெண்கள்தான். மிக அதிகமாக படித்ததால் அதற்கு இணையான மாப்பிள்ளை பார்க்கவேண்டும். அப்படி பார்த்தால் அதிகமாக வரதட்சணை கொடுக்கவேண்டும் என்ற பிரச்சனை சமூகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

இதையெல்லாம் பொருட்படுத்தாமல் உயர்கல்விதான் அவசியம் என்ற எண்ணத்தை கல்வி உருவாக்கி கொடுப்பதில்லை. மேலும், மிக நன்றாகப் படித்த மாணவர்கள் படிக்கும் கல்வியைப் பொருத்து உயர்கல்வியை கைவிட்டுவிட்டு வேலைக்குப் போய்விடுகின்றனர்.
பல மாணவர்கள் அதாவது சராசரியாக படிக்கும் மாணவர்கள்தான் வேலை என்ற வாய்ப்பு கிடைக்காததால் வேறு வழி இல்லாமல் உயர்கல்வியைத் தொடருகின்றன்றர்.

இத்தகைய, சமூக மற்றும் பொருளாதார நிலைகளை எல்லாம் கடந்துதான் ஒரு மாணவரால் உயர்கல்வியில் அடியெடுத்து வைக்கமுடிகிறது. இதிலும், தன் சமூக பொருளாதார நிலைகளை எப்படியாவது மாற்றிக் கொள்ளவேண்டும் என அதற்கு ஒரு தகுதியாக நினைத்து படிக்க வருப‌வர்கள் பலபேர். சில மாணவர்களே, சமூக, பொருளாதார நிலையை எல்லாம் பொருட்படுத்தாமல் பல தியாகங்களைச் செய்து தான் எதையாவது சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மிகமிக அரிதிலும் அரிதாக வருபவர்கள். ஒரு மாணவன் ஆரம்பக் கல்வியிலிருந்து உயர்கல்வி என கருதப்படும் ஆராய்ச்சிப் படிப்பில் படிக்க வரும்வரை இத்தகைய தடை, சோதனை, போராட்டம் என்ற எண்ணற்ற மாற்றங்களைத் தாண்டிதான் வரவேண்டியிருக்கிறது.

இத்தகைய பல தடைகளை எல்லாம் கடந்துவரும் மாணவர்களின் ஆராய்ச்சி என்பது எப்படி ஆரம்பிக்கிறது என்பதிலிருந்துதான் ஆராய்ச்சிப் படிப்பின் தரமும், ஆராய்ச்சியின் தரமும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆராய்ச்சியின் முதல்படி, ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியை நியமிப்பது. பெரும்பாலும் வழிகாட்டி நியமிக்கப்படுவதில் சாதி என்பது மிக முக்கிய அளவுகோலாக கடைபிடிக்கப்படுகிறது. இதில் பெரும்பாலும், வேறு வழியில்லாமல் மாற்றுசாதி மாணவனுக்கு வழிகாட்டியாக இருக்க நேரும்பட்சத்தில் மற்றொரு ஆதிக்கசாதி மாணவனாக இருக்கும்பட்சத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை, ஆனால், ஒடுக்கபட்ட சமூக மாணவர்கள் மாட்டிக் கொள்ள நேரும்பட்சத்தில்தான் ஆராய்ச்சியில் சாதி விளையாடுகிறது. இன்னும் சில நேர்வுகளில் மாணவரே, தனக்கு வழிகாட்டியாக ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் வழிகாட்டியாக வருவதை விரும்புவதில்லை, இதில் பெண்களும் விதிவிலக்கல்ல.

இதனையடுத்து வழிகாட்டி எல்லாம் நியமிக்கப்பட்டு ஆராய்ச்சிக்கான தலைப்பை முடிவுசெய்வதில் மிகப் பெரிய சூதாட்டமே நடக்கிறது. அதாவது, மாணவருக்கு வழிகாட்டுவது மட்டும்தான் வழிகாட்டி ஆசிரியர்களின் வேலை. ஆனால், இந்த நிகழ்வில் இரண்டுவிதமான நேர்வுகள் நடக்கிறது. முதல் நேர்வு, ஆசிரியரின் விருப்பத்தின் படி அவர் கொடுக்கும் தலைப்பில் ஆய்வுசெய்தல். இதில், பெரும்பாலும், ஆசிரியரின் ஆதிக்கமே நிலை நாட்டப்படுகிறது. அப்படி வழிகாட்டியின் ஆதிக்கம் நிலை நாட்ட இரண்டு காரணங்கள் இருக்கின்றன‌. ஒன்று, வழிகாட்டிக்கு ஏதாவது ஆய்வுத்திட்டம் இருந்தால் அதற்கு கீழ், மாணவருக்கு உதவித்தொகை பெற்றுக்கொண்டு மாணவர் வழிகாட்டியின் ஆய்வையே தனது ஆராய்ச்சியின் தலைப்பாக எடுத்துக் கொள்வது. இன்னொன்று, மாணவன் புதியதாக ஏதாவது ஆய்வை மேற்கொள்ள நினைத்தால், அந்த ஆய்விக்கு வழிகாட்டுமளவிற்கு வழிகாட்டி திறமையானவராக இருப்பதில்லை என்ற காரணத்தாலும் மாணவனை, ஆசிரியரின் விருப்பம்போல் இன்னும் விரிவாக சொல்வதெனில் தனக்குத் தெரிந்த துறையில் தலைப்பைக் கொடுத்து ஆய்வை மேற்கொள்ள வைத்துவிடுகின்றனர். இந்தத் நேர்வில், ஏதாவது ஆய்வு செய்து முனைவர் பட்டம் கிடைத்தால் போதும் என நினைக்கும் மாணவருக்கும் ஆசிரியருக்கும் எந்தவித முரண்பாடுகளும் எழுவதில்லை. ஆனால், தனது ஆராய்ச்சியின் மூலம் புதியதாக ஏதாவது கண்டுபிடித்து சாதிக்கவேண்டும் என நினைக்கும் மாணவருக்கு, அவரின் வழிகாட்டி கொடுக்கும் தலைப்பு தற்செயலாக மாணவரின் விருப்பத்திற்கு ஏற்ப இருந்துவிட்டால் பிரச்சனை கிடையாது. ஆனால், துர்வாய்ப்பாக பெரும்பாலும் மாணவர்களுக்கு அப்படி அமைவதில்லை. அதில் இருந்துதான் ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையிலான முரண்பாடுகள் ஆரம்பிக்கின்றன‌. அப்படிபட்ட முரண்பாடுகளின் காரணமாக பெரும்பாலும் வழிகாட்டி ஆசிரியரின் ஆதிக்கமே நிலைநாட்டப்பட்டு முடிவில் மாணவன் தனது அறிவை எல்லாம் முடமாக்கிவிட்டு வழிகாட்டியின் விருப்பப்படி ஆய்வை மேற்கொள்ள நிர்பந்தித்துவிடுகின்றனர். மாறாக, ஆசிரியர்களின் ஆதிக்கத்தையும் பொருட்படுத்தாமல் தான் விருப்பப்பட்ட ஆய்வை எடுத்து மேற்கொண்டான் எனில் அவன் பல்வேறு அடக்குமுறைக்கு ஆளாக்கி, ஆய்வை மேற்கொள்வதையே கேள்விக்குறியாக்கி வருகின்றனர் அல்லது அந்த மாணவனை அலையவிட்டு மூன்று வருடப் படிப்பை பல வருடங்களுக்கு இழுத்தடித்து விடுகின்றனர்.

இரண்டாவது நேர்வு, ஆசிரியர் மாணவரின் விருப்பத்திற்கு ஏற்ப வழிகாட்டுவது. அதாவது, ஒரு மாணவர் தனக்குப் பிடித்த தான் ஆர்வமாக இருக்கும் ஆய்வின் தலைப்பை தேர்ந்தெடுத்துக் கொள்ள அனுமதித்து அதற்கான வழிகாட்டுதலைத் தருவது. இத்தகைய ஆய்வில் பெரும்பாலும், ஏதாவது ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றால் போதும் என்ற மன நிலையில் உள்ள மாணவர்களே அமைந்துவிடுகின்றனர். அதில் பெரும்பாலும் புதியதாக ஏதாவது கண்டுபிடிக்கவேண்டும் என நினைக்கும் மாணவர்கள் மிக அரிதிலும் அரிதாகத் தான் இருக்கின்றனர். மேலும், இவை அனைத்தையும் கடந்து ஆய்வை மேற்கொள்ளும்போது தலைப்பை முடிவு செய்வதில் பல காரணிகளை ஆராய வேண்டும். குறிப்பாக, ஒரு மாணவன் எந்த விதமான தலைப்பையும் எடுக்கலாம். ஆனால், அந்தத் தலைப்பில் ஆய்வு செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புவசதி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஆனால், உண்மையில் நம் நாட்டைப் பொருத்தவரை நடுத்தரமான ஆய்வை செய்வதற்கு கூட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இருப்பதில்லை. அதனால், மிக உயர்தரமான ஆராய்ச்சியில் ஈடுபட முடிவதில்லை. அதேபோல், ஆய்வானது மக்களுக்கு எந்த விதத்தில் உபயேகமாக இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். ஆனால், இந்தியாவில் நடக்கும் ஆய்வில் பெரும்பாலான ஆய்வுகளைப் பொருத்தவரை மக்களுக்கு எந்தவிதத்திலும் உபயோகமாக இருப்பதில்லை. அதாவது எப்படி எனில், ஒரு சாதாரண மனிதனின் தேவைக்கு ஏற்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதில்லை. ஆனால், மிக ஆடம்பரமாக ஒரு மனிதன் வாழ்வது எப்படி என்றுதான் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

இன்னொரு மிக முக்கியமான காரணி ஆராய்ச்சியில் எந்தவித அரசியல் குறுக்கீடும் இருக்கக்கூடாது. ஆராய்ச்சி மிக சுதந்திரமாக நிகழ வேண்டும். ஆனால், நடைமுறையில் அப்படி நிகழ்வதில்லை. அப்படிப்பட்ட ஆய்வை அரசியல்வாதிகள் செய்யவிடாதது ஒருபுறம் இருந்தாலும், கல்லூரிகள் மற்றும் வழிகாட்டிகளே அனுமதிப்பதில்லை. இந்த நிலையில்தான் நம்நாட்டு ஆராய்ச்சியின் சுதந்திரம் இருக்கிறது. உதாரணத்திற்கு, மதிய உணவுத் திட்டத்தையோ, பொது வினியோகத் திட்டத்தையோ ஆராய முடியுமா என்றால் கண்டிப்பாக முடியாது. அப்படியே பல தடைகளைத் தாண்டி செய்தாலும், ஆராய்ச்சி இருட்டடிப்பு செய்யப்படும்; இல்லையெனில் ஏற்றுக்கொள்ளப்படாது.

இதையெல்லாம் கடந்து ஆராய்ச்சி எப்படி மேற்கொள்ளப்படுகிறது எனில், பல்வேறு ஆய்வுகளைப் படித்து ஆராய்ந்து அந்த ஆராய்ச்சி எல்லாம் எதை எதை செய்திருக்கிறதோ அதை எல்லாம் சற்று மாற்றியமைத்து அவர்கள் இப்படி செய்துள்ளனர், அவர்கள் செய்ததிலிருந்து நான் சற்று மாறுபட்டு செய்கிறேன் என்று சொல்லித்தான் ஆராய்ச்சிக்கான தலைப்பே தேர்ந்தெடுக்கப்படுகிறது. மாறாக, ஒரு நல்ல தலைப்பை தேர்ந்தெடுத்துவிட்டு அதில் என்னனென்ன ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் எந்த விதமான ஆய்வுகள் மேற்கொள்ளவில்லை எனவும் எதைச் செய்தால் சிறந்ததாக இருக்கும் எனவும் முடிவு செய்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதில்லை. மேலும், காலம்காலமாக பண்பாட்டு ரீதியில் கடைபிடித்துவரும் சில விசயங்களை, நாங்கள் புதியதாக ஆராய்ச்சி செய்கிறோம் என ஆராய்வது. உதாரணத்திற்கு 2000 வருடத்திற்கு மேலாக விவசாயம் செய்துவரும் வேளையில் அதில் தேவையில்லாத ஆராய்ச்சியை கடமைக்காக செய்வது. அதாவது, பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை நாங்கள் புதியதாக செய்கிறோம் என, பயிறுக்கு விதவிதமான அளவில் நீர்பாய்த்து ஆய்வு செய்வது.

ஒரு வழியாக எதையாவது ஆராய்ச்சி என செய்துமுடித்து, அதை கட்டுரையாக எழுதும்போதுதான் ஆராய்ச்சியின் தரமே இருக்கிறது. ஒரு விசயத்தை ஆராய்ச்சி செய்கிறோம் என்றால், அதில், வெற்றியும் வரலாம் அல்லது தோல்வியும் வரலாம். அறிவியலைப் பொருத்தவரை வெற்றி என்பதும் தோல்வி என்பதும் ஒன்றுதான். அதாவது வெற்றி வந்தால், இந்த இந்த விசயங்களை இப்படி இப்படி செய்தால் வெற்றிவரும் என கண்டுபிடிப்பதும், இந்த இந்த விசயங்களை இப்படி இப்படி செய்தால் தோல்வி வரும் என கண்டுபிடிப்பதும் ஆராய்ச்சிதான். வெற்றியில் எதை செய்தால் வெற்றி வரும் என கண்டுபிடித்துள்ளோம், தோல்வியிலும் இதைச் செய்தால் வெற்றி வராது என கண்டுபிடித்துள்ளோம். வெற்றி தோல்வி அல்ல, ஆராய்ச்சி முடிவு என்ன என்பதுதான் ஆராய்ச்சி. ஆனால், இந்தியாவில் ஆராய்ச்சியில் காணப்படும் மிகப் பெரிய குறைபாடு ஆராய்ச்சியின் முடிவு தோல்வி என வந்தாலும், புள்ளியல் ரீதியாக தரவுகளை மாற்றியமைத்து, அதாவது ஆராய்ச்சியின் முடிவு வெற்றிபெற்றது போல தரவுகளை மாற்றியமைத்து புள்ளியல் ரீதியாக வெற்றிபெற்றதாக காண்பித்தல் என்பது மிகப் பரவலாக காணப்படும் மிக சாதாரண விசயமாகிவிட்டது. அதுமட்டும் இல்லாமல் ஆய்வுக் கட்டுரையை சரிபார்ப்பவர்களும் ஆராய்ச்சி சரியாக இருந்து முடிவு தோல்வியில் இருக்கும்பட்சத்தில் பெரும்பாலும் ஏற்றுக்கொள்வதில்லை.

இந்த நிகழ்வுகள் நடக்கும் ஆராய்ச்சி காலகட்டத்தில் ஆய்வு மாணவர்கள் பல்வேறு அவமானங்களைத் தாண்டிதான் வரவேண்டி இருக்கிறது. அதில் வழிகாட்டியாக இருக்கும் ஆசிரியரின் வேலைகளை மாணவர்கள் செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர். இதில் அலுவலக வேலைகள் மட்டுமல்ல வீட்டுவேலைகளும் அடங்கும். ஒடுக்கபட்ட சமூக மாணவர்கள் இந்த காலகட்டத்தில் பலவிதமான வன்கொடுமைகளை அனுபவிக்கின்றனர். அதேபோல பெண்களும் பாலியல் ரீதியாக வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதை எல்லாம் தவிர்க்க‌ முடியாதபடி ஆராய்ச்சி என்பதை ஒரு கருவியாகப் பயன்படுத்தி நிர்பந்திக்கின்றனர். அதில், பெரும்பாலும் ஆண்கள் சகித்துக்கொண்டு போய்விடுகின்றனர். ஆனால், பெண்கள் உச்சகட்ட நிலையாக தன்னால் எதையும் சகித்துக் கொள்ளமுடியாதபோது தற்கொலையைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

இத்தனை இடர்பாடுகளையும் கடந்து ஒரு மாணவன் செய்த ஆராய்ச்சியின் அடுத்தகட்ட கொடுமைதான் ஆய்வுக் கட்டுரையை ஆய்வு இதழ்களில் வெளியிடுதல். இந்த விசயத்தில் பெரும்பாலும் அல்லது பலபேர் செய்யும் சூதாட்டம் என்னவெனில், வழிகாட்டி ஆசிரியர்கள், மூன்று வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்தில் ஆய்வு செய்த ஆராய்ச்சியை கட்டுரையாக வெளியிடும்போது மாணவனின் உழைப்பை சுரண்டி தங்கள் பெயரில் வெளியிட்டு தாங்கள் செய்ததாக போலியாக ஆய்வு இதழ்களில் வெளியிட்டுக்கொண்டு தன்னுடைய தகுதியை போலியாக உயர்த்திக் கொள்கின்றனர். அதோடு இல்லாமல், ஆய்வுக்கட்டுரையின் தரம் மோசமாக இருப்பதால் சர்வதேச ஆய்விதழ்களில் அல்லது தேசிய ஆய்விதழ்களில் பெரும்பாலும் இடம்பெறுவதில்லை. அத‌னால், ஆய்வுக் கட்டுரைக்கு பணம் கொடுத்து தங்களின் கட்டுரையை ஆய்விதழ்களில் வெளியிட்டுக் கொள்கின்றனர். இப்படி போலியாக உருவாக்கிக் கொண்ட தகுதியை வைத்துதான் ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

விதிவிலக்காக ஒருசில ஆய்வுகளே உலகத்தரத்தில் செய்யப்பட்டு, வெளியிடப்படுகின்றன. ஆனால், அப்படி செய்யப்படும் ஆய்வின் பலனானது சமூகத்தை சென்றடைகின்றதா என்றால் கிடையாது எனலாம். மக்களின் பணத்தில் படித்து ஆய்வு செய்து அதன் பலனை மக்களுக்காக கொண்டுசேர்ப்பதில்லை. மாறாக, ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர் மட்டுமே பலனடைகின்றனர் அல்லது மக்களுக்கு பயன்படும் வகையில் உருப்படியாக செய்யப்பட்ட ஒன்றிரண்டு ஆய்வுகளும் ஏதாவது பெட்டிக்குள் தூங்குகின்றன. ஆய்வு செய்தவர் அதை மக்களிடம் கொண்டுசேர்க்கும் பணியில் ஈடுபடுவதில்லை. இதையெல்லாம் கடந்து ஏதாவது அரிதிலும் அரிதாக ஒன்றிரண்டு ஆய்வுகள்தான் உண்மையாக மக்களிடம் சென்றடைந்து பலனளிக்கின்றன. அதை வைத்துதான் இந்த அளவிலாவது சமூகம் உயிர்ப்புடன் இருக்கிறது.

இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களில் இந்தத் தரத்தில்தான் ஆராய்ச்சியானது நடந்துகொண்டிருக்கிறது. பின்பு எப்படி உலக அளவில் போட்டிபோடக்கூடிய ஆய்வுகள் செய்ய முடியும் அல்லது போட்டி போட முடியும்? மேலும், இப்படி உருவாக்கப்படும் மாணவர்கள்தான் எதிர்காலத்தில் ஆசிரியர்களாக பணியாற்றப் போகிறார்கள். இந்த சுழற்சியானது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இதனால் தான் இந்தியாவில் ஆராய்ச்சி மாணவர்களின் தரமும் அவர்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சியின் தரமும் மிகக் கேவலமாக இருக்கிறது. ஒரு நாட்டின் முதுகெலும்பே கிராமம்தான். அதுபோல, ஒரு சமூகத்தின் இதயமே நல்ல கல்வி மற்றும் உயர்தரமான ஆராய்ச்சிகள்தான். உயர்தரமான ஆராய்ச்சிகள் மூலம் சர்வதேச அளவில் போட்டிபோடுகிறோமோ இல்லையோ, ஆனால், அதிசிறந்த சமூகத்தை கட்டமைக்க முடியும். சமூக அவலங்களையும் சீர்திருத்தி நல்லதொரு கட்டமைப்பை செய்ய அரசியல்வாதிகளோ அல்லது நல்ல தலைவர்களோ தேவைப்படும் அதேவேளையில் உயர்தரமான கல்வியும், ஆராய்ச்சியும் கண்டிப்பாக தேவைப்படுகிறது. அதிலும், மக்களுக்கான கல்வியாகவும், ஆராய்ச்சியாகவும் இருக்க வேண்டும்.

உலகின் இரண்டாவது பெரிய மனித வளத்தை வைத்துக்கொண்டு எந்தவிதமான கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தாமல், மற்ற நாடுகளின் கண்டுபிடிப்பையே இன்னும் எத்தனை நாட்கள்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கப் போகிறோம்? அதுமட்டும் இல்லாமல், புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கவில்லை என்றாலும், மற்ற நாட்டு கண்டுபிடிப்பின் விளைவுகளில் வந்த பொருள்களை எல்லாம் தரம் குறைவாக இருக்கிறது என குறை சொல்லிக் கொண்டுதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நாளைய சமுதாயத்திற்கு நல்ல கண்டுபிடிப்புகளை கொடுத்துவிட்டுப் போகவில்லை என்றாலும் அதற்கான அடிப்படை முயற்சியான நல்ல கல்வியை மட்டுமாவது கொடுத்துவிட்டு செல்லவேண்டியது நமது கடமை. ஏனெனில், கல்விதான் சமூகத்தின் வரலாறை முடிவுசெய்கிறது. வரலாறுதான் சமூகத்தை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டுசெல்லும். வரலாறு தெரியாமல் வரலாறு படைக்கமுடியாது.

- மகா.தங்கா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It