Periyar 10செங்கற்பட்டு ஜில்லா சட்டசபைப் பிரசார நோட்டீசு அதாவது “செங்கல்பட்டு ஜில்லாவிலுள்ள சட்டசபை ஓட்டர்களுக்கு ஒரு விண்ணப்பம்” என்ற தலைப்புக் கொடுத்து பிரசுரிக்கப்பட்ட நோட்டீசு ஒன்று நமது பார்வைக்கு அனுப்பப்பட்டதைப் பார்த்தோம். அதில் 7 பிரிவுகள் இருக்கின்றன. அவற்றுள் 6 பிரிவுகளுக்கு போட்டி அபேட்சகர்களையே பதில் சொல்லும்படி விட்டு விடுகின்றோம்.

அதில் உள்ள மூன்றாவது பிரிவான ஒன்று நம்மை வலுவில் சண்டைக் கிழுப்பதால் வந்த சண்டையை விட மனம் வரவில்லை. அதாவது:-

“சென்ற வருஷத்தில் செங்கற்பட்டில் நடந்த சுயமரியாதை மகாநாடு என்று ஒரு கூட்டம் நடத்தி, நம் தேவலாயங்களை அழிக்க வேண்டு மென்றும், நம் கோவில்களில் ஒரு பைசாகூடச் செலவு செய்யக் கூடாதென்றும், இராமாயணம், மகாபாரதம், தேவாரம், திருவாசகம் முதலிய நம் அரும் பெரும் நூல்களை ஒழிக்கவேண்டுமென்றும் ஆபாசத் தீர்மானங்களை அங்கீகரித்த சுயமரியாதை மகாநாட்டை நடத்தியவர்கள் திரு. ஜெயராம் நாயுடுவும், திரு. வேதாசல முதலி யாரும் என்பது நீங்கள் யாரும் அறிந்த விஷயமே.

திரு. வேதாசல முதலியார் மேற்கண்ட மகாநாட்டுக் காரியதரிசியாகவிருந்து அதை நடத்தியதையும், அவர் குடும்பத்தைச் சேர்ந்த திரு. அப்பாசாமி முதலியார் ராவ் பகதூர் பட்டம் பெற்றதையும்; திரு. ஜெயராம் நாயுடு ராவ்சாகிப் பட்டம் பெற்றதையும் நீங்கள் ஞாபகம் வைக்க வேண்டும்.

கேவலம் பட்டங்களுக்கு ஆசைப்பட்டு நம் மதத்தையும், தெய்வத்தையும் வாய்க்கு வந்தபடி தூஷிப்பவர்களுக்கு ஆதரவு அளித்த திரு. ஜெயராம் நாயுடுவுக்கும், திரு. வேதாசல முதலியாருக் கும் எதற்காக ஓட்டுக் கொடுக்க வேண்டும் என்று தெய்வ பக்தியும் உண்மைச் சுயமரியாதையுமுள்ள நீங்கள் நன்கு ஆலோசிக்க வேண்டும்” என்பதாகும்.

இந்தப்படி அவர்கள் எழுதியதற்காகவே எப்படியாவது திருவாளர் கள் ஜெயராம் நாயுடுவையும் வேதாசல முதலியார் அவர்களையும் தேர்த லில் வெற்றி பெறச் செய்ய வேண்டியது அந்த ஜில்லா சுயமரியாதை உணர்ச்சியுள்ள மக்களது கடமையாகும்.

சுயமரியாதை மகாநாடு நடத்தியதற்கு உதவி செய்ததற்காக அவ்விரு கனவான்களும் தோல்வியடைய வேண்டுமென்று அந்த நோட்டீசு போட்ட கனவான்கள் உண்மையாய்க் கருதுவார்களானால் செங்கல்பட்டுச் சுயமரியாதை மகாநாடு நடத்த ஆதி காரணமாய் இருந்து மகாநாட்டின் வரவேற்புத் தலைவராயுமிருந்த நமது நண்பர் சுயமரியாதை வீரர் திரு. திவான் பகதூர் எம். கே. ரெட்டி அவர்களை இவர்கள் என்ன செய்ய நினைத்தார்கள்? அல்லது என்ன செய்ய முடிந்தது? என்பதை யோசிக்க வேண்டியது உண்மைச் சுயமரியாதைக்காரர் கடமையாகும்.

திரு. எம். கே. ரெட்டியார் அவர்கள் போட்டியன்னியில் மறுபடியும் ஜில்லாபோர்ட்டு தலைவராய் தெரிந்தெடுக்கப் பட்டதுடன் திவான் பகதூர் பட்டமும் பெற்றார். இதற்காக அந்த ஜில்லாவில் “சுயமரியாதை உள்ள எந்த ஆஸ்திகரும்” உயிர்விட்டு விடவும் இல்லை. அல்லது திரு ரெட்டியாரை தூக்கில் போட்டு விடவு மில்லை.

திரு.ஜெயராம் நாயுடுவைப் போல் ஆயிரம் ஜெயராம் நாயுடுகள் தோற்றுப் போனாலும் திரு வேதாசலத்தைப் போல் இரண்டாயிரம் வேதா சலங்கள் தோற்றுப் போனாலும் சுயமரியாதை மகாநாட்டில் தீர்மானம் செய்த காரியங்கள் ஒரு காலமும் நடக்காமல் போகப் போவதில்லை என்பதை மிக்க உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மக்கள் மூடர்களாயிருக்கும் வரையில் தான் திரு. எம். பாலசுப்பிரமணியம் போன்ற வருணாச்சிரம அழுக்கு மூட்டைகளின் ஏமாற்றுதல்களும் ஆஸ்திகப் பிரசாரமும் பலிக்குமே ஒழிய வேறில்லை. திரு. பாலசுப்பிரமணியம் அவர்கள் வெற்றி பெற்றால் நமது மக்களை இன்னும் மூடர்களாய் இருக்கிறார்கள்.

பகுத்தறி வற்றவர்களாயிருக்கிறார்கள் என்பது தான் உறுதிப்படுமே தவிர மற்றபடி சுயமரியாதைக் கொள்கையில் ஒரு அணுவளவும் அதற்காக அசைந்து விடாது. ஜாதியையும், கடவுள்களையும், மதத்தையும், கோவில்களையும் காப்பாற்றுவதற்காக திரு. பாலசுப்பிரமணிய முதலியார் சட்டசபைக்குப் போவதும் அவரை மக்கள் அனுப்புவதும் உண்மையானால் திரு. பால சுப்பிரமணியம் ஜாதிப்படி சூத்திரராகவும், மதப்படி பார்ப்பனர் அடிமை யாகவும் தான் இருக்கத் தகுதி உடையவரே தவிர அவர் சட்டசபையில் இருந்து ராஜரீக விஷயம் கவனிக்க சிறிதும் யோக்கியதை அற்றவர் என்று நம்மால் மெய்ப்பிக்க முடியும். திரு. கள்ளிப்பட்டி கிருஷ்ணசாமி நாயக்கராவது தன்னை க்ஷத்திரியன் என்று சொல்லிக் கொள்ளுகின்றார்.

திரு. பாலசுப்ரமணிய முதலியார் தன்னை சூத்திரன் அல்லது சற்சூத்திரன் என்று தானே தேவாரம், திருவாசகம் பெரியபுராணம், இராமாயணம் முதலிய “நம் அரும் பெரும் நூல்கள்” படி சொல்லிக்கொள்ள வேண்டும்.

திரு. பாலசுப்ரமணிய முதலியாரவர்கள் திவான் பகதூர், ராவ் பகதூர், ராவ்சாகிப் முதலிய பட்டங்களை புளிக்குமென்று தள்ளிவிட்டு சற்சூத்திரப் பட்டத்தை ஒப்புக் கொள்வதாயிருந்தாலும் அவரைத் தெரிந்தெடுக்கச் செங்கல்பட்டு ஜில்லா ஓட்டர் மகாஜனங்கள் அப்பட்டத்தை ஒப்புக் கொள் ளத் தயாராயிருக்கிறார்களா என்று கேட்கின்றோம்.

ஆகவே செங்கல்பட்டு ஜில்லா பார்ப்பனரல்லாத ஓட்டர்கள் தங்களுக்கு உண்மையான சுய மரியாதை இருக்கின்றது என்பதை காட்டிக் கொள்ள வேண்டுமானால் சற் சூத்திரர்கள் போன்ற கோடரிக் காம்புகளுக்கு ஓட்டுச் செய்யாமல் பார்ப்பனரல்லாத சமூகத்திற்கே சுயமரியாதைக்காக உழைக்கும் பெரியார்களான அதாவது ஜாதி வித்தியாசத்தையும் உயர்வு தாழ்வையும் போலி மதத்தையும் பொய்ப் புராணங்களையும் பொல்லா (பணம்பிடுங்கி) தெய்வத்தை யும் ஒழித்து மக்களுக்குள் சமத்துவத்தையும் அன்பையும் இரக்கத்தையும், பரோபகாரத்தையும் சத்தியத்தையும் ஒழுக்கத்தையும் நிலைநிறுத்தி சுதந்திர மளிக்கப் பாடுபடும் சுயமரியாதை இயக்க வீரர்களுக்கே ஓட்டுக் கொடுக்க வேண்டுமென்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 17.08.1930)

Pin It