பிரித்தானியருக்கு ஜெர்மானியர் எவ்வாறோ சிங்களருக்கு முஸ்லிம்கள் அவ்வாறே. முகமதியர் சிங்களவருக்கு சமயத்தாலும், இனத்தாலும், மொழியாலும் அந்நியர். – அநாகரிக தர்மபாலா

வரலாறு திரும்புகிறது என்ற சொல்ல கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் வரலாற்றின் பொற்காலங்கள் ஒரு போதும் திரும்புவதில்லை என்றாலும், மோசமான நிகழ்வுகள் அவ்வப்போது திரும்பத்தான் செய்கின்றன. அந்த வகையில் இலங்கையின் பவுத்த சிங்கள இனவெறியின் அரசியல் வரலாற்றிற்கு ஒரு தொடர்ச்சி உண்டென்றாலும், அண்மைக் கால இலங்கை இஸ்லாமியர் மீதான வன்தாக்குதல்கள் அதை மெய்ப்பிப்பதாக உள்ளன. கழிந்த திங்களில் இலங்கை தென்மேற்கு மாவட்டமான கழுத்துறையின் அழுந்தகம மற்றும் பேருவெல நகரங்களில் இஸ்லாமியர் மீது சிங்கள இனவாதிகள் நடத்திய தாக்குதல்கள் மோசமான ஓர் எதிர்கூறலுக்கான முன் தயாரிப்பாகத்தான் காணமுடிகிறது. சிங்கள தீவிர பவுத்த பிக்குகளின் அமைப்பான பொதுபலசேனா ஜுன்-15 ஆம் திகதி நடத்திய பேரணியைத் தொடர்ந்து இஸ்லாமியருக்கு எதிரான தாக்குதல்கள் திட்டமிட்டு தொடங்கி வைக்கப்பட்டன.

sri-lanka-aluthgama 600

முஸ்லிம்கள் செறிந்து வாழும் தர்கா நகரில் காடையர் கூட்டம் ஒன்று கல்வீசித் தாக்கியதை அடுத்து ஜுன்-16 ஆம் திகதி கலவரம் வெடித்துக் கிளம்பியது. இதில் முஸ்லிம்களின் இல்லங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வாகனங்கள் என அவர்களது உடைமைகள் தாக்கி எரியூட்டப்பட்டுள்ளன. இலங்கை அரசு முஸ்லிம்கள் யாவரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக் கொண்டதுடன் நிலைமை கட்டுக்கடங்காது போகவே, வன்முறை பரவிய இடங்களில் ஊரடங்கைப் பிறப்பித்துள்ளது. எனினும் பாதுகாப்பற்ற சூழலையும், முந்தைய பல நிகழ்வுகளின் கசப்பான அனுபவங்களைக் கருத்தில் கொண்டும், முஸ்லிம்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி பள்ளிவாசல்களைத் தஞ்சமடைந்துள்ளனர். முஸ்லிம்கள் பலரும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் பொலீசார் கலவரக்காரர்கள்(!) மீது நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர்வரை கொல்லப்பட்டுள்ளனர்.

கலவரத்தை அடுத்து பொலிவியா நாட்டுச் சுற்றில் இருந்த இராஜபக்சே தனிநபர்கள், சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டிருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று அறிக்கை விடுத்தார். கலவரத் தீ அடுத்ததாக கொழும்பு நகரின் தெகிவளையைப் பற்றியுள்ளது. அங்கு முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான கடை ஒன்று அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. சிங்கள பவுத்த அடாவடிகளை நேரில் படம் பிடிக்கச் சென்ற ஊடகத்தினரும் காடை கும்பல்களால் தாக்கப்பட்டுள்ளனர். வணிக முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளான பெத்தோட்டை, மத்துகம, பானந்துறை என்று இஸ்லாமியருக்கெதிரான பவுத்த கலவரங்கள் மேலும், மேலும் பரவிச் செல்லும் இடங்களாக இருக்கின்றன. எனினும் கலவரத்திற்குக் காரணமான யாதொருவரும் இதுவரை கைதுசெய்யப்படாததும், ஊரடங்கின் போதே கலவரங்கள் நிகழ்ந்தன என்பதும், கலவரத்தின் போது இஸ்லாமியரே காயங்களுக்கும், சூட்டுக்கும் இலக்காகியுள்ளனர் என்பதிலிருந்ததும், அரசின் வழமையான இனவெறிப் பங்கை நாம் புரிந்துகொள்ளலாம்.

முன்னதாக புத்த பிக்குகள் இருவர் சாலை போக்குவரத்தின் போது முஸ்லிம்களால் தாக்கப்பட்டதாகவும் இதனைக் கண்டித்து பொதுபல சேனா அழைப்பு விடுத்த ஊர்வலத்தினை அடுத்தே முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் தூண்டிவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உண்மையில் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான போக்குகள் அதற்கும் முன்பாவே தொடங்கிவிட்டது என்றுதான் கூற வேண்டும். சரியாகச் சொல்வதானால் தமிழ் சிறுபான்மையினரை முள்ளிவாய்க்காலில் மண்டியிட வைத்த சம காலத்திலேயே அது தொடங்குவதாக இருக்கிறது. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல, சிறுபான்மையினர் விடயத்தில் பவுத்த பேரினவாதத்தின் அடுத்த இலக்கு இலங்கை வாழ் முஸ்லிம் சிறுபான்மையினர் தான் என்பதை தொடரும் அவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் உறுதிபடுத்துவனவாய் இருக்கின்றன.

இஸ்லாமியர்கள் விற்கும் பொருட்களுக்கு இலங்கை அரசு ஹலால் விலக்கு அளிக்கக்கூடாது; அம்முறை தடை செய்யப்பட வேண்டும் என்றும், முஸ்லிம்களின் பாங்கு ஒலிப்பான்களை நிறுத்த வேண்டும் எனவும், பொதுபல சேனா போன்ற சிங்கள பேரினவாத அமைப்புகள் ஏற்கனவே கூக்குரல் எழுப்பியுள்ள நிலையில் அவர்களுக்கு எதிரான சிங்கள பவுத்த எதிர்ப்பு என்பது நாடு முழுவதும் சூடுபிடிக்கத் தொடங்கிற்று. முஸ்லிம் எதிர்ப்பை கூர்மை படுத்தும்விதமாக களனி பொல்லகலவில் நடைபெற்ற பொதுபல சேனா மாநாட்டில் பேசிய அதன் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இஸ்லாமியவாதம் நாட்டை விழுங்கக் கூடிய அச்சுறுத்தலாக மாறிக் கொண்டுள்ளதாகவும், தௌஹித் ஜமாத் அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் அது பவுத்த-சிங்கள கலாசாரத்தை, புனித சாசனங்களை அவமதித்து வருவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

ஏற்கனவே திருக்குரானை அவமதித்ததான வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வந்துள்ள ஞானசாரர் குரல் இலங்கைக்கு ஒன்றும் புதிதல்ல. அது புதிப்பிக்கப்பட்ட, அநாகரிக தர்மபாலவின் இன வன்மம் நிறைந்த, இஸ்லாமியருக்கு எதிரான பழைய குரல்தான். இலங்கையின் வளர்ந்து வந்த இன வன்முறை வரலாறு என்பது இஸ்லாமியருக்கு எதிராகத்தான் முதலில் தொடங்குவதாக இருந்தது. 1915 இல் அப்போதய காலனித்துவ வெள்ளை ஆளும் அரசுக்கு எதிராக பொங்கி எழ வேண்டிய சிங்கள பெரும்பான்மை சமூகத்தின் கோபம் அதன் முழு வலிமையையும் சமூக, பொருளாதார கலாசார தளத்தில் வசதியாக மடைமாற்றிக் கொண்டு, சிறுபான்மையினரை, இஸ்லாமியரை தமது பொது எதிரியாகக் கண்டது என்பது இலங்கை இனவாதம் காரணமாக இரத்தம் சிந்துவதான அவலத்தின் தொடக்கமாகும்.

இலங்கை இஸ்லாமியர் மீதான சிங்கள-பவுத்த காழ்ப்புணர்வு என்பது வர்த்தகப் போட்டியில் முடிந்தது. இதன் உடனடி விளைவில் பாதிக்கப்பட்டவர் இஸ்லாமியர் என்றால், இதில் சம அளவு தமிழ் வர்த்தகர் மீதும் மையம் கொண்டதன் இரத்த விளைவுகளை 1983 ஜுலைக் கலவரங்கள் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை செல்கிறது. அன்றைக்கு சிங்கள- இஸ்லாமிய தீவிர வணிகப் போட்டியின் பின்னணியில், ‘வந்தேறிகள்’ பற்றி பவுத்த மறுமலர்ச்சியின் தந்தை தர்மபால (1864-1933) முதன் முதலாகப் ‘பேச’த்தொடங்கினார்.( இந்த பவுத்த பிக்குவின் தந்தை இஸ்லாமியர் நிறைந்த வர்த்தக போட்டித் தலமான கொழும்பு புறக்கோட்டையில் ஓர் இரும்புக்கடை வைத்து நடத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.)

மண்ணின் மைந்தர்களான ஏழை சிங்கள பவுத்தரின் வறுமைக்கு காரணம் நாடெங்கும், கிராமங்கள் தோறும் சிங்களரை ஏய்த்துப் பிழைக்கும் வந்தேறி இஸ்லாமியர் என்று அநாகரி தர்மபால, அவரது சீடக் குழுக்களால் தீவிரப் பிரசாரம் செய்யப்பட்டது. இஸ்லாமியரின் கடைகளில் பொருட்கள் வாங்குவதைப் புறக்கணிக்க அவை கோரின. பவுத்த பிரசார ஏடுகள் குறிப்பாக கரையோர முஸ்லிம்களிடம் கொடுக்கல் வாங்கல் கூடாதென்றன. இவ்வாறே 1915இல் போர் காரணமாக ஏற்பட்ட உணவுப் பொருட்களின் தட்டுப்பாட்டை, விலையேற்றத்தைக் கூட, இஸ்லாமியரின் ஏய்ப்புவாதமாக காட்டியபடிக்கு பலதரப்பு சிங்கள-பவுத்த மக்களின் வெறுப்புணர்வை இஸ்லாமியார் பக்கம் திருப்ப ஏதுவாயிற்று.

ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் ஏற்பட்ட இந்த கலவரத்தை படைபலம் கொண்டு அடக்கியது பிரித்தானிய அரசு. துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல சிங்கள இனவெறியர்கள் தூக்கிலேற்றப்பட்டார்கள். சுதந்திரத்திற்குப் பின்னால் முக்கியத் தலைவர்களாகவும் பிரதமர்களாகவும் பரிணமித்த டி.எஸ்.சேனநாயக, எஃப்.ஆர். சேனநாயக, எஸ்.டி. பண்டாரநாயக போன்றோர் இஸ்லாமியருக்கு எதிரான அன்றய கலவரங்களை முன்னெடுத்ததில் கணிசமான பங்கை ஆற்றியிருந்தனர். வெள்ளையர் அரசு அவர்களை கைது செய்து சிறையிலடைத்தது. எனினும், தமிழ் தலைவரான பொன்னம்பலம் இராமநாதன் அவர்களுக்காக இங்கிலாந்து சென்று வாதாடி, விடுவிக்கச் செய்தார். அந்த மகிழ்வைக் கொண்டாட கொழும்பில் திரண்ட சிங்களவர்கள், இராமநாதனை வில் வண்டி ஒன்றில் வைத்து தாமே இழுத்து வந்து பாராட்டு தெரிவித்தனர். தீவு நாட்டின் மற்றொரு சிறுபான்மையினரான தமிழர் மீதான தமது நம்பிக்கையை இஸ்லாமியர் முதன் முதலாக இழந்தனர். சிங்களவரின் விடுதலைக்கு உதவிய தமிழ் தலைவரான இராமநாதன் அதற்காக வருந்துமளவிற்கான நிகழ்வுகள் சிங்கள இனவாதிகளால் பின்னர் நடந்தேறின என்பது வேறு கதை. இலங்கைத் தீவில் சிறுபான்மை மக்களது இடம் என்ன என்பதை இஸ்லாமியரின் மீதான அந்தத் தாக்குதல் வலிந்து விளக்குவதாக இருந்தது.

தமிழ் சிறுபான்மையினர் போன்றே தங்களுக்கென தனித்துவமான இலங்கை வாழ் இஸ்லாமியர் பேசும் மொழியாலும், கலாசாரத்தாலும் சிங்கள இனவாதத்திற்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. தமக்கான உரிமைகளைப் பேணுவதில் தமிழரைப் போன்றே பல இடர்பாடுகளை அவர்களும் சந்தித்துக் கொண்டுள்ளனர். இலங்கை இனவாத வரலாற்றில் பல்வேறு கால கட்டங்களில் அவர்களும் குருதி சிந்த வேண்டி வந்தது. 1958 இல் தமிழருக்கெதிராக நடந்த கலவரத்தில் தமிழ்பேசும் காரணத்திற்காகவே படுகொலைகளுக்கு ஆளாயினர். 1976 ஆம் ஆண்டு புத்தளத்தில் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர் மீது படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி 7 பேரைக் கொன்றதோடு, பலரும் படுகாயமடைய நேரிட்டது. இஸ்லாமியர் கடைகளும், இல்லங்களும் எரித்தழிக்கப்பட்டன; மசூதியும் தாக்கி உடைக்கப்பட்டது.

இலங்கை வாழ் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்குவதான சோல்பரி கமிசனின் சட்டப்பிரிவுகள் நீக்கப் பெற்று பவுத்த மதமும், மொழியும் முதன்மையாக்கப்பட்ட அரசியல் யாப்பின் பின்னதாக தமிழ் பேசும் இஸ்லாமிய கீழ்வர்க்கப் பிரிவினரின் நிலைமை படிப்படியாக கீழிறங்குவதாயிற்று. இதை எந்த சிங்கள அரசும் கண்டு கொள்வதாயில்லை. தமிழரோடு, இனக் கலவரங்கள் கிழக்கின் இஸ்லாமியரையும் மொழி அடிப்படையில், வர்க்க அடிப்படையில் தாக்கிக் கொன்றது. வெறுமனே சாக விரும்பாத ஏழை இஸ்லாமியர் பலர் அணி, அணியாகத் திரண்டு, தமிழ்த் தேசிய புரட்சிகர இயக்கங்களில் சேர்ந்து ஆயுதமேந்தி களப்பலியாகியதை அடுத்து, அதிர்ச்சியடைந்த சிங்கள அரசுகள், தமிழரையும் இஸ்லாமியரையும் பிரித்தாள வேண்டிய அவசர அவசியத்தை உணர்ந்தன.

தமிழ் சிறுபான்மையினருக்கும் இஸ்லாமியருக்குமிடையே பகையை மூட்டிவிட்டு சிறுபான்மை இனங்களிடையே பூசலை ஏற்படுத்தி அழியவிடும் வேலை என்பதை ஒர் அரசியல் இராஜதந்திரமாகவே சிங்கள அரசு தொடர்ந்து முன்னெடுத்தது. இதற்காக கொழும்பு மேல் வர்க்க இஸ்லாமியரை தட்டிக்கொடுத்து, பிரிந்து கிடக்கும் கிழக்கு இலங்கை வர்க்க விளிம்பு இஸ்லாமியரையும் ஒன்றிணைத்துக் கொண்டு தமிழ் தேசிய நீரோட்டத்திலிருந்து பிரித்தெடுக்கும் வேலையை கவனமாக செய்தது. 1984, 85-களில் கிழக்கிலங்கையில் இஸ்லாமியர் செறிந்து வாழுமிடங்களில் தமிழர்- இஸ்லாமியரிடையேயான அவ்வப்போதான மோதல், படுகொலைகளில் இலங்கை, இஸ்ரேல் உளவுப்பிரிவினரின் பின்னணி இருந்தது. இலங்கை படையினர் அடிக்கடி இஸ்லாமியரையோ, தமிழரையோ அவர்களது பாரம்பரிய நிலங்களிலிருந்து விரட்டிவிட்டு தமிழர் நிலத்தில் இஸ்லாமியரையும், இஸ்லாமியர் நிலத்தில் தமிழரையும் மாற்றி மாற்றி குடியேறச் செய்து வம்புகளை வளர்த்தது. இருவருக்குமிடையே மோதல் முற்றுமிடத்து அங்கே இருவரையும் விரட்டிவிட்டு, சிங்களவரை எளிதாக குடியேற்றியது இலங்கை அரசு.

அது போலவே இலங்கைக்குள் ஓர் ஒப்பந்தத்தின் ஊடாக வந்த இந்திய அரசானது, -இலங்கை அரசுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளில், இஸ்லாமியர் நலன் பற்றி அக்கறை செலுத்தாததோடு, இலங்கையில் அமைதிப் படை இருந்த காலத்தில் இஸ்லாமியருக்கும் ஆதரவாக தாங்கள் செயல்படுவது போலக் காட்டிக் கொண்டாலும் அவர்களையும் தமிழருக்கு எதிராக பயன்படுத்தவே விரும்பினர். அமைதிப்படை கிழக்கிலிருந்து வெளியேறிபோது தமிழ்த் தேசிய இராணுவத்திற்கும், முஸ்லிம் காங்கிரசின் ஜிகாதி அமைப்பினருக்கும் ஆயுதங்களை வழங்கி இனங்களுக்கிடையே மோதலைத் தூண்டினர். ஏக காலத்தில் பிரதமராக வந்த பிரேமதாசவும் இஸ்லாமியர்-தமிழர் மோதலை ஒரு கலையாகவே செய்தார்.

அது போலவே, புலிகள்-இஸ்லாமியர் உறவு என்பது புரிந்துணர்வு நிலையில் இருந்தாலும் அது, மொகைதீன் மற்றும் பதியுதின் போன்ற அரசியல்-சமூக மட்டத்திலான தலைவர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் வழி மேலும் நெருங்கிவருவதாக இருந்தது. இது பொறுக்காத பிரேமதாச அதை நீடிக்கவிட விரும்பவில்லை. பொத்துவில் பகுதியில் தமிழ்-இஸ்லாமியர் கலகம் வெடித்தது. இருதரப்பிலும் பலர் கொல்லப்பட்டனர். அகதியாக்கப்பட்டனர். அம்பாறையில் பற்றிய தீ வடபகுதிக்கும் பரவக் கூடிய அபாயமிருந்ததால் புலிகள், யாழ் இஸ்லாமியரை உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேற்றியதாகச் சொல்லப்பட்டது. (1990-அக்டோபர்) சிறு பான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டிய புலிகள், அவர்களை நாட்டை விட்டுத் துரத்தியது உலகின் கண்டன‌த்திற்கு உள்ளானது. எனினும் இந்நிகழ்விற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பின்னர் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்டுக் கொண்டனர். அதன் தலைவர் பிரபாகரன், தமிழ் இஸ்லாமியர் தமிழ் பேசினாலும் அவர்கள் ஒரு தனித்த பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் உடையவர்கள் என்பதை ஒப்புக்கொள்ளவே செய்தார்.

கடந்த காலங்களில் அய்க்கிய தேசியக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அதுலத் முதலி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதியுதின் போன்றவர்களை அமைச்சர்களாக நியமித்ததோடு அவர்கள் வழி சிறுபான்மைத் தமிழர்களை ஒடுக்கும் சட்டங்களை கொண்டுவந்து இஸ்லாமிய சமூகத்தின் மீது தமிழர் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் தந்திரோபாயங்களை சிங்களபவுத்த பேரினவாதிகள் பின்பற்றினர். இலங்கை அரசில் பங்கு பற்றிய அஷ்ரப் போன்ற இஸ்லாமியத் தலைவர்கள் புலிகளுடன் மெய்யாகவே பேசி சிக்கல்களைத் தீர்க்க விரும்பினர். ஆனால் பவுத்த பேரினவாதிகள் அவற்றுக்கெல்லாம் முட்டுக்கட்டை போட்டவாறிருந்தனர். அஷ்ரப் இறுதியாக ஒரு விமான விபத்தில் கொல்லப்பட்டார்.

அன்றைக்கு தர்மபால தமது ‘சிங்கள பவுத்தாய’ நாளிதழில், ‘பிரித்தானிய உத்தியோகத்தர்கள் சிங்களவர்களைச் சுடலாம், தூக்கிலிடலாம், சிறை பிடிக்கலாம். ஆனால், எப்போதும் சிங்களவருக்கு முஸ்லிம் பகைவர்களே. அந்நியரால் இழைக்கப்படும் அவமானங்களை இனியும் பொறுக்க முடியாது என்பதை அமைதி மிக்க சிங்களவர் உணர்ந்து விட்டனர். முழு தேசமும் முஸ்லிம்களுக்கு எதிராக எழுச்சியுற்றுவிட்டது. இதற்கு பொருளாதாரமும், ஆன்மீகமுமே காரணங்கள்.’ என எழுதி, தமது இனவாத போக்கிற்கு வெளிப்படையான நியாயம் கற்பிக்கிறார். சிங்களர் மேலாதிக்கத்திற்கு பகையென கருதும் எதன் மீதும் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைப் படுகொலைகளை நீதி என்றே வகைப்படுத்திக் கொண்டனர் அவர்கள். சிங்கள-பவுத்தம் உயிர்ப் பலிகளை ஏற்காததும், மாமிச உணவுகளை கண்டிப்பதையும் கொண்டிருக்க, இஸ்லாமியம் வாளேந்தி போர் புரிகிறது; குர்பானிகளை கொண்டாடுகிறது. கலாசார தளத்தில் இவ்வகையான நேரெதிர் போக்குகள் அரசியலில் பகை சக்திகளாக மாறிக் கொள்வதுடன் தமது கலாசாரத் தளத்தின் கொள்கைகளை காற்றில் பறக்கவிடுகின்றன. பவுத்த அரசியல் பலியெடுக்காத உயிர்கள் ஏதும் இருக்கிறதா என்ன?

இந்தியாவில் இந்து மறுமலர்ச்சி காலத்தில் நமது ஜனசங்கம் அல்லது ஆர்.எஸ்.எஸ். போன்றொதொரு அமைப்பாக சிங்கள பவுத்த மறுமலர்ச்சி இயக்கம் 19 ஆம் நூற்றாண்டின் நடுவாகத் தோன்றி பவுத்த புராணிக வரலாற்றுக் கதைகளால் வளர்க்கப் பெற்ற ஒரு பாசிச அமைப்பாக பெரும்பான்மை மக்களில் தங்கியது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அரசுக்கு பாதகமில்லாமில்லாமல், அதேசமயம் கிறித்துவருக்கு எதிரான கலவரங்களையும் போராட்டங்களையும் நடத்திக் கொண்டிருந்தது அது. இதே தர்மபால அப்போது இஸ்லாமியர் என்று எழுதும் இடங்களில் கிறித்துவர் என்று போட்டு தாக்கி எழுதிக் கொண்டிருந்தார். பின்னரான காலத்தில் அரசுகளை இயக்கும் இனவெறி சக்தியாக மாறிக் கொண்டதோடு, அரசியலில் தடையெனக் கருதுவோரை பலியெடுக்கும் சக்தி மிக்க பீடமாக அதன் தொடர்ச்சியான இயக்கங்கள் பல இலங்கை, சமூக அரசியல் மட்டங்களில் தோன்றி வளரக் காரணமாக இருந்தது. பொதுபலசேனா, மக்கள் விடுதலை முன்னணி, பவுத்த ஏக் சங், சிங்கள உருமய என்று சொல்லிக் கொண்டு போகலாம். இதில் காங்கிரஸ், பா.ஜ.க. போல, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அய்க்கிய தேசியக் கட்சி என்பன அவற்றின் முன்னணி கட்சிகளாக, அரசுகளாக‌ மாறி மாறி இயங்குவதே இவற்றின் பலமாக உள்ளது.

தற்போதய களுத்துறை மாவட்ட கலவரங்களுக்கு தூபமிட்டுள்ள பொதுபல சேனா, இராஜபக்சேவின் சகோதரரும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபயவின் ஆசி பெற்ற அமைப்பு என்றால், கோத்தபய அமெரிக்காவின் ஆசி பெற்றவர். அங்கு குடியுரிமை உள்ளவர். இலங்கையில் தலிபான்கள் செயல்படுவதாக சர்வதேச காவல்துறை அறிவித்ததைத் தொடர்ந்தே பவுத்த பேரினவாதிகள் இஸ்லாமியருக்கு எதிரான இந்தக் கலவரங்களை முன்னெடுத்துள்ளனர். ‘பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல’ அமெரிக்கா இஸ்லாமியரின் மீதான இந்தத் தாக்குதலை கண்டித்திருப்பது வேடிக்கையானதாகும். பயங்கரவத்திறகு எதிரான அமெரிக்கப் போர் எப்படி இலங்கையில் தமிழரை அழிப்பதற்கு உதவியதோ அதுபோல, எதிர்காலத்தில் தலிபான்கள் அல்லது அல்கெய்தாக்கள் செயல்படுவதாக அது குற்றம் சாட்டும் நாடுகளின் இஸ்லாமியர்கள் பேரினவாதிகளால் முற்றாகத் துடைத்தழிக்கப்படலாம். இலங்கைத் தீவு வழமைபோல, அவற்றிற்கு வழிகாட்டுவதாக அமையக்கூடும்.

- இரா.மோகன்ராஜன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It