இனப் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தையில் முஸ்லிம்கள் எதற்கு பங்கு பெற வேண்டும்? முஸ்லிம்கள் எங்களோடு போரிட்டார்களா? அதிகாரத்தில் அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? என்பது போன்ற விமர்சனங் கள் பரவலாக முன் வைக்கப்படுகின்றன.
இதுபோன்ற வாதங்கள் இனப்பிரச்சினையிலும் மேலெழுந்த வாரியாக - ஒரு சார்பு சிந்தனை கொண்டவர்களால் எழுப்பப்படுகிறது.
இதுபோன்ற வாதங்களும் - விமர்சனங்களும் நியாய உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு முன் வைக்கப்படுகின்றது. இலங்கை வடகிழக்குப் பிரதேசங்களைப் பொறுத்தவரை கிழக்கில் முஸ்லிம்கள் பெரும்எண்ணிக்கையாலும் வடக்கில் கணிசமாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
துவக்க கால புலிகளின் விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்களும் பங்களித்தனர். பிரபாகரனின் நேரடிக் கட்டுப்பாட்டில் முஸ்லிம்களைக் கொண்ட இம்ரான் படை இயங்கி வந்தது.
90களில் யாரோ சிலர் புலிகள் அமைப்பைக் காட்டிக் கொடுத்தார்கள் என்ற காரணத்தால் கோபம் கொண்ட புலிகள் காத்தான்குடியில் பள்ளிவாசல்களில் தொழு கையில் ஈடுபட்டிருந்த 144 முஸ்லிம்களைப் படுகொலை செய்தனர். இனப் படு கொலை என்பது வழக்கமாக இன்னொரு இனத்தின் மீது நிகழ்த்தப்படுகின்ற இன வெறி தாக்குதலை விட - பயங்கரமானதாகப் பார்க்கப்பட்டது. தொழுகையில் ஈடுபட்டிருந்த நிலையில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டது, கொடூரமான, மனிதாபிமானமற்ற புலிகளின் தாக்குதலாகவே முஸ்லிம் சமூகத்தால் புரிந்து கொள்ளப்பட்டது.
இந்தத் தாக்குதலின் விளைவு புலிகள் முஸ்லிம் சமூகத்தின் எதிரிகள் என்கிற கற்பிதத்தை உண்டு பண்ணியது. வட கிழக்கு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலகட்டங்களில் புலிகளின் பல்வேறு விதமான தாக்குதலுக்கு முஸ்லிம் சமூகம் இலக்கானது. மூதுர், கின்னியா போன்ற வட பகுதிகளிலும் புலிகளின் தாக்குதலும் முஸ்லிம்களை ஊரை விட்டு விரட்டும் சம்பவங்களும் நிகழ்ந்தன.
யாழ்பானத்திலிருந்தும், முல்லைத் தீவிலிருந்தும் ஒரே இரவில் அவகாசம் அளித்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டது. முஸ்லிம்களை இன்னும் ரணப்படுத்தியது.
யாழ்பாணத்திலிருந்து விரட்டப்பட்டு புத்தளத்தில் உள்நாட்டு அகதிகளாக குடியே றிய முஸ்லிம்கள் இன்றுவரை அரசின் சலுகைகளோ, திட்டங்களோ கிடைக்காமல் புறக்கணிக்கப்படுகின்றனர். இலங்கை அரசு அவர்களை குடிமக்களாக அங்கீகரிக்கவில்லை என்று சொல்லுமளவுக்கு அந்த அகதி முஸ்லிம்களுக்கு வாக்குரிமை கூட மறுக்கப்பட்டிருக்கிறது.
புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த முஸ்லிம்களின் காணி நிலங்கள் முழுவதிலும் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டு இன்றுவரை அவர்கள் விவசாயம் பார்க்க முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
கிளிநொச்சியிலிருந்த புலிகளின் தலைமையகத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீமும் புலிகளின் தலைவர் பிரபாகரனும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்போது, முஸ்லிம்களிடம் வரி வசூல் செய்ய மாட்டோம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.
ஆயினும் அதன் பின்னரும் கிழக்கின் அப்போதைய தளபதியாக இருந்த கருணாவின் தலைமையிலான படையினர் வரி வசூல் செய்ததை ஆதாரத்துடன் அண்டன் பாலசிங்கத்திடம் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் முறையிட்டனர்.
வன்னியில் சர்வதேச ஊடகவியலாளர்களை பிரபாகரன் சந்தித்தபோது வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள் மீள்குடியமர்த்தப்படுவார்கள் என்று அவர் வாக்குறுதி அளித்தார். இந்த நிகழ்வுக்குப் பின்னரும் வடகிழக்கில் நீண்ட காலம் புலிகளின் ஆட்சி தொடர்ந்திருந்தது. நீண்ட காலம் நிலவிய யுத்த நிறுத்தத்தின்போதும் கொடுத்த வாக்குறுதி களை புலிகளின் தலைமை நிறைவேற்றவில்லை. ஒரு புறம் புலிகளின் தாக்குதல், இன்னொருபுறம் சிங்கள அரசின் தாக்குதல் என மத்தளம் போன்ற நிலைமைக்கு முஸ்லிம் சமூகம் ஆளானது.
முஸ்லிம் படுகொலை நிகழும்போதெல்லாம் சிங்கள இராணுவம் புலிகளின் மீது பழியைப் போட்டு முஸ்லிம்களை புலிகளுக்கு எதிராக கொந்தளிக்க வைத்தது. மறுபுறம் சிங்கள இராணுவத்தின் மீது புலிகள் பழி போட்டனர். ஒட்டுக்குழுக்களின் வேலைதான் இது என்றும் முஸ்லிம்களின் படுகொலைகள் திசை திருப்பப்பட்டன.
இன்றுவரை முஸ்லிம் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களும், புத்த விகாரைகளும் எழுப்பப்படுகின்றன. புவியியல் ரீதியாக கிழக்கில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை குறைக்கும் வேலைகளை அதிகார வர்க்கம் கச்சிதமாக செய்து வருகிறது.
கடந்த காலங்களில் நிகழ்ந்து விட்ட இந்தச் சம்பவங்களை இங்கே சுட்டிக் காட்டுவது புலிகளின் ஆதரவாளர்களை அல்லது தமிழீழ ஆதரவாளர்களை காயப்படுத்தவோ குற்றம் சுமத்தவோ அல்ல. இந்தப் பின்னணியிலிருந்து இலங்கை முஸ்லிம்களின் நியாயங்கள் பார்க்கப்பட வேண்டும் என்பதே நமது நோக்கம்.
தீர்வு திட்டப் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்களை எதற்கு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்பவர்கள் முஸ்லிம்களுக்கு கடந்த காலங்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை உள்வாங்க வேண்டும். இனி பாதிப்பு ஏற்படாத பாதுகாப்பிற்கான உத்திரவாதத்தைத்தான் முஸ்லிம்கள் கோருகிறார்கள். தனித் தமிழீழத்தையோ - தமிழர்களுக்கான சுயாட்சி அதிகாரத்தையோ முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை. அதற்கு எதிராகவும் இல்லை.
அரசாங்கத்தோடு நாங்கள் பேசி முடித்துக் கொள்கிறோம். பின்னர் நாமிருவரும் பேசிக் கொள்வோம் எனகிற கருத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயல்படுகிறது. அப்படியானால் முஸ்லிம்கள் தனித் தரப்பாக பேச்சுவார்த்தைகளில் பங்கு கொள்வதை கூட்டமைப்பு அங்கீகரிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.
முஸ்லிம் சமூகம் எங்கள் அதிகாரத்திற்குட்பட்டிருக்க வேண்டும் என்று அது நினைப்பதாகத்தான் அர்த்தம்! இந்த அதிகாரம் நாளை தமிழ்ப் பேரினவாதமாக முஸ்லிம்களின் மீது திரும்பாது என்பதற்கோ, முஸ்லிம் பகுதிகளில் தமிழ்க் குடியேற்றங்கள் நிகழாது என்பதற்கோ உத்திரவாதம் உண்டா?
இந்நிலையில் வட கிழக்கின் அதிகாரத்தில் எங்களது அதி கார எல்லையும் தீர்மானிக்கப்பட வேண்டும்; அது எங்கள் இனத்தின் மீதான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக அமைய வேண்டும் என்று முஸ்லிம்கள் எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? இது எப்படி தமிழர்களின் அதிகாரத்தில் பங்கு கேட்பதாக அமையும்?
ஒரு சமுதாயத்தின் அனைத்து வகையிலான பாதுகாப்பு என்பது அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளினூடாகத்தான் சாத்தியமாகுமே தவிர அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தும் இன்னொரு சமூகத்துடனான பேச்சுவார்த்தைகளினூடாக சாத்தியமாகாது என்ற யதார்த்த சிந்தனையின் வெளிப்பாடகத்தான் தீர்வு திட்டப் பேச்சுவார்த்தைகளில் எம்மையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று முஸ்லிம்கள் கோருகின்றனர்.
இதை தமிழர்களின் அதிகாரத்திற்கு எதிரான கோரிக்கையாகவோ, அல்லது தமிழர்களுக்கு அதிகாரம் கிடைத்து விடக் கூடாது என்பதற்கான முயற்சியாகவோ அல்லது தமிழர் எதிர்ப்பு சிந்தனையாகவோ அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. நியாயத்தின் அடிப்படைதான் எந்த கோரிக்கைக்கும் அளவுகோல் என்ற வகையில்தான் முஸ்லிம்களின் பிரச்சினையும் அணுகப்பட வேண்டும்.
நியாயங்களை அளவு கோலாகக் கொண்டுதான் தமிழகத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட சில இஸ்லாமிய அமைப்புகள் - ஜனநாயகப் பாதையில் போராடும் நாடு கடந்த தமிழீழ அரசை வரவேற்கின்றன.
இலங்கையில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் கொடுமைகளுக்கு எதிராக தமிழகத்தில் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து கண்டனம், ஆர்ப்பாட்டம் என களமாடி வருகின்றன.
கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து இரண்டு சமூகமும் தொப்புள்கொடி உறவுகளாக உறவாட வேண்டும் என்பதே நமது விருப்பம். அதற்கு ஒருவர் மற்றொருவரின் உரிமைகளையும், நியாயங்களையும் உள்வாங்க வேண்டும். முரண்பட்டு விடக் கூடாது. முரண்பாடுகள் வளரவும் விட்டு விடக் கூடாது.