தாங்களே விருப்பப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கும் தேவதாசி முறைக்கும் மிகப் பெரிய - மிக அடிப்படையான வேறுபாடு இருக்கிறது. பெண்களை சாதிப் பிறப்பின் அடிப்படையில் வலுக்கட்டாயமாக - அவர்களின் விருப்பத்திற்கு மாறாக பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கியது தேவதாசி முறை. ஆகவே, தாமாகவே விருப்பப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களையும் தேவதாசிகளையும் ஒப்பிட முடியாது. மேலும், இந்தியாவில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, மற்றும் பல வட இந்திய மாநிலங்களில் "தேவதாசி" முறை பல்வேறு வடிவங்களில் இன்னும் இருந்து வருகிறது. பெண் சிறார்களை - பெண் குழந்தைகளை பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கும் வகையில் சிறுமிகளாக இருக்கும் போதே பெண் குழந்தைகளுக்கு "பொட்டுக் கட்டி" தேவதாசிகளாக்கும் முறை இன்னும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகிறது. இவ்வாறு, பலியாக்காப்படும் சிறுமிகளில் - பெண்களில் ஏறக்குறைய அனைவரும் தாழ்த்தப்பட்ட பின்னணியைச் சார்ந்த பெண்களே!
இந்து மத அடிப்படையில் - சாதி அடிப்படையில் தேவதாசிகளை பாலியல் ரீதியாக சுரண்டிய - சுரண்டி வரும் சமூகக் கனவான்கள், ஆதிக்க சாதி ஆண்கள், பார்ப்பனர்கள் முதலானோர் தேவதாசிகளுக்கு பொருளியல் ஈடு கூட செய்ததில்லை - செய்ய வேண்டியதில்லை. தாமாக விரும்பி பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்குக் கிடைக்கும் பொருளியல் ஈடு கூட - ஆதிக்க சாதி ஆண்களின் பாலியல் அரிப்பை "இலவசமாக" தீர்ப்பதற்கு சாதி அடிப்படையில் - மத அடிப்படையில் நிர்ப்பந்திக்கப்பட்ட - வற்புறுத்தப்படும் தேவதாசிகளுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை.
தானாக விரும்பி பாலியல் தொழில் செய்பவர்களுக்கு அத்தொழிலில் இருந்து விலகுவதற்கு உரிமை இருக்கிறது; விருப்பப்பட்ட பணத்தைக் கேட்பதற்கு உரிமை இருக்கிறது. தேவதாசிகளுக்கு இந்த உரிமைகள் இல்லை. சாதி அடிப்படையில் "குலத் தொழிலாக" பாலியல் சுரண்டலுக்கு பலியாகும் வகையில் பாலியல் அவலத்திற்குள் தங்கள் விருப்பத்திற்கு எதிராக திணிக்கப்படும் தேவதாசிப் பெண்களுக்கு அந்த துன்ப வலையில் இருந்து விடுதலை பெறக் கூடிய நிலை, தந்தை பெரியார் மூலமாகவும் - அன்னை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மூலமாகவும் தமிழ் நாட்டில் மட்டுமே வாய்த்திருக்கிறது! இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இந்து மதம் - சாதி அமைப்பு ஆகியவற்றால் "ஜோகினி" "எல்லம்மா" என்ற பல பெயர்களில் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களை கோவில்களில் பாலியல் சுரண்டலுக்குள் வலுக்கட்டாயமாக திணிக்கும் தேவதாசி முறை தொடர்கிறது!
ஆகவே, வயது முதிர்ந்த பெண்கள் தாமாகவே - விருப்பப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுவதை காரணமாக வைத்து - சாதி அடிப்படையில் - இந்து மத அடிப்படையில் ஒடுக்கப்பட்ட சாதிப் பின்னணியைச் சார்ந்த பெண்களை மற்றும் சிறுமிகளை - அவர்கள் விருப்பத்திற்கு எதிராக "தேவதாசி" என்ற பெயரில் பாலியல் சுரண்டலுக்கு -பாலியல் சித்திரவதைக்கு கட்டாயப்படுத்தி உள்ளாக்குவதை - உள்ளாக்கியதை நியாயப்படுத்த முடியாது.
வயது முதிர்ந்த பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை சில மேலை நாடுகளில் உள்ளது போல் சட்ட பூர்வமாக்கி - அவர்களுக்கு பாலியல் நோய் வராமல் தடுக்க வாரந்தோறும் மருத்துவ பரிசோதனை - மருத்துவ சிகிச்சை - செய்வதை சட்ட ரீதியாக கட்டாயமாக்கி, அவர்களுக்கு சரியான பொருளியல் ஈடு கிடைக்கவும் வழி வகை செய்ய வேண்டும். ஆனால், அதே சமயத்தில் - சாதி அடிப்படையில் - மத அடிப்படையில் - ஒரு ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்து விட்ட காரணத்திற்காக - பெண்களின் - விருப்பத்திற்கு எதிராக - பெண்களை - சிறுமிகளை பாலியல் சுரண்டலுக்குள் - பாலியல் சித்திரவதைக்குள் கட்டாயப்படுத்தி திணிக்கும் தேவதாசி முறையை முற்றிலும் இந்திய நாடு முழுதும் சட்ட ரீதியாக ஒழித்தாக வேண்டிய தேவை இன்றும் இருக்கிறது.
தேவதாசி முறையை ஒழிப்பது சாதி அமைப்பின் மிக அவலமான ஒரு ஆணாதிக்க - பார்ப்பன ஆதிக்க பாலியல் சுரண்டலை ஒழிக்கும்.
தேவதாசி முறை - இந்து மத சாதி அமைப்பின் - சாதி ஒடுக்கு முறையின் மிக மோசமான வெளிப்பாடு. தாமாக விருப்பப்பட்டு பாலியல் தொழில் செய்யும் பெண்களோடு - தேவதாசி என்ற சாதி ஒடுக்குமுறையை சிலர் ஒப்பிடுவது அவர்களின் அறியாமையை காட்டுகிறது.